Home FamilyChapter 49

Chapter 49

by Siragugal Novels
14 views

மாயாவையும், அவளது தோழிகளையும் லேக்காவின் வீட்டில் பாதுகாப்பாக சேர்த்த பிறகு ஒரு பாரில், விவான் மது அருந்தி கொண்டு தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

” அந்த ஆளுங்களுக்கு பணம் கொடுத்தியா ?” என்று விவான் கேட்க, “ ஹ்ம்ம், கொடுத்துட்டேன். இனி அவங்க இங்க எங்கேயும் இருக்க மாட்டாங்க “ என்றான் அவன் நண்பன்.

“அதுல ஒருத்தன் நிஜமாவே என்ன அடிச்சிட்டான் “ என்று முணுமுணுத்தபடி விவான் தன் தாடையைத் தேய்த்துக் கொண்டான்.

” ஒருவேளை அவங்களுக்கு உண்மையிலேயே மாயாவ புடிச்சு போச்சு போல “ என்று சொல்லி அவன் நண்பன் சிரித்தான். அவன் வார்த்தையை கேட்ட விவான், “ உண்மையா இருக்கலாம் ஆனா அவங்க யாரும் என் வழியிலையோ, மாயா வழியிலையோ குறுக்க வராம இருக்க சொல்லு “ என்று சொன்னான்.

” சரி, இப்போ அடுத்து என்ன செய்ய போற ? “ என்று நண்பன் கேட்க, “ இன்னும் முடிவு பண்ணல ஆனா அவள என் வலையில விழ வைக்க சரியான நேரத்துக்கு வெயிட் பண்றேன் “ என்று சொல்லி விவான், தன் கிளாஸில் இருந்த விஸ்கியை குடித்தான்.

நண்பன் புருவத்தை சுருக்கி, “ஜாக்கிரதை விவான், எது பண்ணாலும், ஆதாரம் இல்லாம பண்ணு “ என்று எச்சரித்தான். அதை கேட்டு விவான் சிரித்தான், பார் விளக்குகளின் வெளிச்சத்தில் அவன் கண்கள் பளபளத்தன.

மறுநாள் காலை மாயா வீடு திரும்பிய போது சந்திரசேகர் வணிக தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார்.

“குட் மார்னிங் மாயா. உன்னோட நாள் எப்படி இருந்துச்சு ?” என்று கேட்டார் அதற்கு மாயா, சூப்பரா இருந்துச்சு “ என்றாள்.

“பார்ட்டிக்கு டிரஸ் ரெடி பண்ணிட்டியா ?” என்று அவர் கேட்க, “ ஆமாம் பா. என் ஸ்டைலிஸ்ட் ரெடி பண்ணிட்டாங்க “ என்று பதில் சொன்னாள். அதை கேட்டு புன்னகைத்த சந்திரசேகர் ஒரு நகைப் பெட்டியை அவளிடம் கொடுத்தார்.

“இது என்ன?” என்று கேட்டவள் அதைத் திறந்து பார்த்த போது பிரத்யேகமாக வடிவமகைப்பட்ட வைர நெக்லஸ் அதில் இருந்தது.

” உன் வாழ்க்கையோட முக்கியமான நாள் நாளைக்கு அதனால இத போட்டுக்கோ. அப்பாவோட பரிசு “ என்று அவர் சொன்னதை கேட்டதும், “அப்பா, இது அழகா இருக்கு ” என்றாள் மாயா.

” நாளைக்கு இதை போடு, என் பொண்ணு நாளைக்கு ஜொலிக்கணும். எல்லாரோட கண்ணும் உன்மேல தான் இருக்கணும். மீடியா உன்ன எடுக்குற போட்டோ எல்லாம் தலைப்பு செய்தியா வரணும் “ என்று கர்வமாக சொன்னார்.   

” கண்டிப்பா நடக்கும் பா, அந்த சஞ்சனா நாளைக்கு ஒரு நல்ல  பாடம் கத்துக்குவா “ என்று மாயா சொன்னாள்.

“நீ என் இளவரசி, உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் “ என்று சந்திரசேகர் சொன்னதும், “தெரியும் அப்பா” என்று புன்னகையுடன் அவரை அணைத்துக் கொண்டாள் மாயா.

தனது அறைக்கு சென்ற மாயா கட்டிலில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்தாள்.

 “நான் ஆர்யனுக்கு பார்ட்னர் ஆனதும், சத்தியமா உன்ன அவர் வாழ்க்கையில இருந்து துரத்துவேன் சஞ்சனா. ARC டவர்ஸ்ல நான் இருக்க போற ஒவ்வொரு நொடியும் என்ன அவர் கூட நெருக்கமாக்கும். சீகிரமே ஆர்யன் உன்ன வெறுத்து தூக்கி போடுவாரு. நான் அவோட சாம்ராஜ்யத்துக்கு ராணியா இருப்பேன், அவர் என்ன வெறித்தனமா லவ் பண்ணுவாரு. உன் அத்தியாயம் முடிவுக்கு வர போகுது சஞ்சனா.” என்று மனதில் நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தாள்.

அடுத்த நாள் காலையில், சஞ்சு படுக்கையில் படுத்து சுவரை வெறித்துப் பார்த்தபடி ஆர்யனின் அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் அவனிடம் இருந்து அழைப்பு வராததால் அவளுடைய இதயம் ஏமாற்றத்தால் மூழ்கியது, கண்ணீர் அவளுடைய கன்னங்களில் வழிந்தோடியது.

அவள் கண்கள் நைட் ஸ்டாண்டில் இருந்த ஆர்யனின் புகைப்படத்தை நோக்கி இயல்பாக சென்றன. அவள் அதை மெதுவாக எடுத்து முத்தமிட்டாள். சிறிது நேரம் சோம்பேறித்தனமாக படுத்திருந்தவள் எழுந்து தன் மேஜை டிராவை நோக்கி நடந்தாள். இந்த முறை, அவள் வேறு ஒரு புகைப்படத்தை எடுத்தாள். அவளது விரல்கள் அவளது தந்தையின் புன்னகை தவழும் முகத்தை வருடியபோது, நினைவுகளின் வெள்ளம் அவளை ஆட்கொண்டது. ஒவ்வொரு ஆண்டும், அவளுடைய இந்த சிறப்பு நாளை, முந்தைய ஆண்டு வரை அவள் அவருடன் கழித்தாள். மீண்டும் கண்ணீர் பெருக, அவள் அந்த புகைப்படைத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும்  சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள்.

“குட் மார்னிங் சஞ்சு” என்று அன்பான புன்னகையுடன் வரவேற்ற ரஞ்சித், அவள் வாங்கி வர சொன்ன பொருள் அடங்கிய ஒரு பெட்டியைக் கொடுத்தான்.

சஞ்சு அதைத் திறந்து பார்த்ததும், அவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தன. அவள் உதடுகளில் இருந்து ஒரு ஆச்சரியமான பெருமூச்சு வெளிப்பட்டது.

” அண்ணா, ரொம்ப நன்றி. நான் சொன்ன மாதிரியே இருக்கு. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு “ என்று அவள் கண்களில் உற்சாகம் பொங்க சொன்னாள். அதற்கு ரஞ்சித் அவளிடம், ” எனக்கு ஏன் இவ்ளோ நன்றி சொல்ற சஞ்சு? உனக்கு இது புடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ” என்று சிரித்தான்.

” நிஜமாவே இது ரொம்ப அழகா இருக்கு “ என்று அவள் சொன்னதும், ரஞ்சித் இன்னொரு பையை அவளிடம் கொடுத்துவிட்டு, “சார் மத்தியானம் வந்துடுவாரு. அவர் ஏற்கனவே ஜெட்ல கிளம்பிட்டாரு. முடிக்க வேண்டிய வேலை நிறைய இருந்ததால நேரா கிளம்பிட்டாரு. வேல அதிகம் அதனால ரொம்ப களைப்பா இருப்பாரு “ என்று கூறினான். “ அப்புறம் எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு நான் அப்படியே ஏர்போர்ட் போய் சார கூட்டிட்டு வந்துடுவேன். நீ இப்போ காலையில சாப்பிடு. சரியா? அவர் வீட்டுக்கு வர இன்னும் நாலு மணி நேரம் ஆகும்.” என்று சொல்லி ரஞ்சித் கிண்டலாக சிரிக்க, “ சஞ்சு “ சரி அண்ணா “ என்றாள். ஆனால் சற்று தயங்கியவள், இவருக்கு கூட இன்னைக்கு என்ன நாளுன்னு ஞாபகம் இல்லையா ? “ என்று மனதில் நினைத்தபடி வருத்தம் கொண்டாள்.    

சஞ்சுவின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டு உதட்டில் புன்னகையுடன் கிளம்பினான் ரஞ்சித்.

ஆர்யனுக்காக காத்திருந்த அந்த ஐந்து நாட்கள், அவன் திரும்பி வர மீதமிருந்த நான்கு மணி நேரத்தை விட குறுகியதாக சஞ்சு உணர்ந்தாள். அவளது உணர்வுகள் அவளது காதல், ஏக்கம், அமைதியின்மை ஆகியவற்றுக்குள் சுழன்றடித்தன. நேரம் நெருங்க நெருங்க அவளுக்குப் பொறுமை குறைந்தது.

இறுதியாக, முடிவில்லாததாகத் தோன்றும் காத்திருப்பு அதன் முடிவை நெருங்கியது. சஞ்சு தன் பால்கனியில் நின்று கண்களை நுழைவாயிலில் பதித்திருந்தாள். முன்னதாக வெளியே சென்று போர்டிகோவில் அவனுக்காக காத்திருக்க நினைத்தவள், வேலைக்கார்களும், ரஞ்சித்தும் அருகில் இருக்கும் நேரம் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என்று பயந்து, தன் அறையிலேயே இருந்தாள்.

முப்பது நீண்ட நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பழக்கமான கார் ஹார்ன் அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. காரை விட்டு இறங்கிய ஆர்யனின் கண்கள் உடனே அவளைத் தேடின.

“தோட்டத்துல நடக்குற ஏற்பாடுகள நான் பார்க்க போறேன் “ என்று ரஞ்சித் சொன்னதும் ஆர்யன் சரி என்று தலை அசைத்தான். அப்போது பாலா விரைந்து வந்து ஆர்யனின் ட்ராலிகலை எடுத்தான் ஆனால் ரஞ்சித் அவனை தடுத்து, ” பாலா, சாமான் எல்லாம் சார் ரூமுக்கு வெளிய வெச்சுடு அப்புறம் ரூமுக்கு கொண்டு போகலாம் “ என்று சொன்னான்.   .

ஆர்யன் ஒரு பையோடு வேகமாக நடந்து அவர்கள் அறைக் கதவை வேகமாக திறந்தான். சஞ்சு அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஓடிச் சென்று அவன் கைகளில் தஞ்சம் புகுந்தாள். ஆர்யன் சற்றும் தயங்காமல் ஒரு கையால் அவள் இடுப்பை சுற்றி வளைத்து அவளை தூக்கி, ஒரு முறை சுழற்றி அவளை இறுக்கி அணைத்தான்.

அவள் தன் கைகளை அவனைச் சுற்றி வளைத்து, அவன் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு மெல்ல விம்மி விம்மி அழுதாள்.

“ஷ்ஷ்ஷ், அழாத ஸ்வீட் ஹார்ட். நான் திரும்பி வந்துட்டேன்” என்று ஆர்யன் கிசுகிசுத்தான்.

“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் ” என்று சொன்ன போது அவளுடைய குரல் உடைந்தது. “ ஐ லவ் யூ பேபி, நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் “ என்று என்று சொல்லி ஆர்யன்  அவளைப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தான். சஞ்சு தனது கண்ணீர் வழிந்த முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்ததும், அவன் நெற்றியில் முத்தமிட்டான். சஞ்சுவின் கரங்கள் அவன் சட்டை காலரை பிடித்துக் கொண்டன. அவள் அவன் உதடுகளில் முத்தமிட்டு, அவனது கீழுதட்டை ஆவேசத்துடன் முத்தமிட்டாள். இந்த முறை, அவள் ஆதிக்கம் செலுத்தினாள், முத்தத்தில் தனது மனதில் தேக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் அனைத்தையும் கொட்டினாள். ஆர்யன் அவளிடம் முழுமையாக சரணடைந்தான்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, அவன் பின்வாங்கி, அவளுடைய கண்ணீரைத் துடைத்து, அவளுடைய கன்னங்களில் முத்தமிட்டான். அவள் அவன் மார்பில் சாய்ந்து அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“ஏன் இன்னும் கோபம் வரல ? நம்மள பார்த்த சந்தோஷத்துல மறந்துட்டா போல. பார்ட்டி முடிஞ்ச அப்புறம் சமாதானம் பண்றேன் “ என்று மனதில் நினைத்த ஆர்யன் தான் கொண்டு வந்த பையை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதில் சாக்லேட்டுகள் நிரம்பி இருந்தன.

“இதெல்லாம் உனக்கு மட்டும்தான்.” என்று ஆர்யன் சொன்னதும், “ஹ்ம்ம்…நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் “ என்று சொல்லி மெலிதாகச் சிரித்தாள்.

“ஏன் எதுவுமே பேச மாட்டேங்குற ? “ என்று ஆர்யன் கேட்க, “ ஒன்னும் பேச வேண்டாம், இப்படியே இருக்கலாம் “ என்றாள் சஞ்சு. உடனே ஆர்யன், “ சரி, இப்படியே இருக்கலாம் வா “ என்று சொல்லி அவளை மெல்லத் தூக்கி படுக்கையில் கிடத்தினான், அவள் தலை அவன் மார்பில் சாய்ந்திருந்தது. அவன் அவளது முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்தான், ஆனால் விரைவில் தூக்கம் அவனை ஆட்கொண்டது.

அவனது மெல்லிய குறட்டை சத்தம் கேட்டு சஞ்சு தலையை நிமிர்த்தி அவனை பார்த்தாள். அவனது கண்களுக்குக் கீழே இருந்த கருவளையங்கள் அவனது சோர்வைக் காட்டிக் கொடுத்தன. அவள் ஹெட்போர்டில் சாய்ந்துகொண்டு, அவனுடைய தலைமுடியில் தன் விரல்களை அன்புடன் கோதினாள்.

சிறிது நேரம் கழித்து, அவள் வெளியே சென்ற போது கதவுக்கு அருகில் ஆர்யனின் ட்ராலிகள் இருந்தன. அவள் அதை அறைக்குள் இழுத்துச் சென்று அவனது ஆடைகளை எடுக்க தொடங்கினாள். அப்போது அவளுடைய காணாமல் போன ஊதா நிற நைட்ஷர்ட் மற்றும் அவளுடைய ஸ்வெட்ஷர்ட் அவளது கவனத்தை ஈர்த்தது.

” அடப்பாவி, நான் இங்க காணும்னு தேடிட்டு இருந்தா, திருட்டு பையா நீ எடுத்துட்டு போய் இருக்க. நான் இத காணும்னு சொல்லும்போது கூட உண்மைய சொல்லல. தூங்கி எழுந்த அப்புறம் வெச்சுக்குறேன் உன்ன “ என்று சொல்லி சிரித்தாள்.

கீழே சமையலறைக்கு சென்று கௌசல்யாவை சந்தித்து, “கௌசல்யா மா, ஆர்யனோட டிரஸ் எல்லாம் லாண்டரி பையில  வச்சிருக்கேன். அவர் இன்னும் தூங்கிட்டு இருக்காரு அதனால நீங்க சமைச்சு முடிச்சதும் ஹாட் பாக்ஸ்ல வெச்சுடுங்க. அவர் எழுந்ததும் நாங்க சாப்பிடுறோம் “ என்று சொன்னாள்.

சஞ்சுவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து, ” இப்போ தான் உன் முகத்துல சிரிப்பு வருதா ? சார் இல்லனா சிரிக்க மாட்ட அப்படி தானே ? “ என்று கௌசல்யா கிண்டல் செய்தார். அதற்கு சஞ்சு, “அம்மா, அப்படியெல்லாம் எதுவும் இல்ல “ என்று புன்னகைத்தாள்.

” எனக்குப் புரியுது டா, இப்படியே எப்பவும் சிரிச்சு சந்தோஷமா இரு “ என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ளினார்.

சஞ்சு தனது அறைக்குத் திரும்பி மாலை விருந்துக்கு எழுந்திருக்க அலாரம் வைத்து விட்டு ஆர்யனுடன் சேர்ந்து அவளும் நிம்மதியாக உறங்கினாள்.

சரியாக மாலை 4:30 மணிக்கு, அலாரம் மெதுவாக ஒலித்து, அறையின் ஆறுதலான அமைதியைக் குலைத்தது. ஆர்யன் அசைந்து கண்களைத் திறந்து சஞ்சுவை நோக்கித் திரும்பி குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டான். அவன் உதடுகளில் ஒரு மென்மையான புன்னகை விளையாடியது.

“நான் போய் குளிச்சிட்டு முதல்ல ரெடி ஆகுறேன் “ என்றபடி படுக்கையிலிருந்து எழுந்தான். “ சரி “ என்று சொன்ன சஞ்சு சட்டென, “ ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று குறும்புடன் கண்களைச் சுருக்கி அழைத்தாள்.

“ என்ன மா ? “ என்று ஆர்யன் கேட்டதும், “ காணாம போன என்னோட சட்ட கெடச்சுடுச்சு “ என்றாள் சஞ்சு. அதை கேட்டதும் முற்றிலும் தூக்கம் தெளிந்து, “ அய்யையோ! எடுத்துட்டாளா ? “ என்று மனதில் நினைத்தபடி, “ அப்படியா? எங்க இருந்துச்சு ?” என்று முற்றிலும் அறியாதது போல் பாசாங்கு செய்து கேட்டான்.

“ஒரு திருட்டு பூனை எடுத்துட்டு போய் இருந்துச்சு “ என்று சஞ்சு சஞ்சு சொன்னதும், “ எந்த திருட்டு பூனை ? “ என்று அப்பாவியாக கேட்டான் ஆர்யன்.

“ டேய் கேடி பையா, நீ தானே எடுத்துட்டு போன ? “ என்று கேட்டு சஞ்சு அவனை முறைத்ததும், “ நான் ஏன் எடுக்க போறேன் ? நீ  தானே என் லக்கேஜ் பேக்கிங் பண்ண, அப்போ நீ தான் தெரியாம வெச்சுருப்ப “ என்று சொல்லி ஆர்யன் சமாளிக்க முயற்சித்தான் ஆனால் சஞ்சு, “ பேக்கிங் பண்ண எனக்கு தெரியாதா ? ஒழுங்கா உண்மைய சொல்லு “ என்று அவனை மிரட்டினாள்.

தனது நடிப்பு தோற்று போனதை உணர்ந்து பெருமூச்சுவிட்டான் ஆர்யன். ” என்ன உண்மைய சொல்லணும் ? என்னால உன்ன விட்டு இருக்க முடியாதுனு உனக்கு புடிச்ச சட்டைய உனக்கு தெரியாம எடுத்து வெச்சத சொல்லனுமா இல்ல லண்டன்ல நைட்டு தூங்கும் போது உன் சட்டைய கட்டிபுடிச்சு தூங்குனத சொல்லனுமா ? “ என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சுவின் முகபாவம் மென்மையானது, “நீ ஏன் இவ்வளவு அழகா இருக்க ?” என்று கேட்டு அவனைச் சுற்றி தன் கைகளை அனைத்து விளையாட்டாக அவன் கன்னத்தைக் கடித்தாள்.

“அடியே எதுவும் அடையாளம் வைக்காத, நைட்டு பார்ட்டி இருக்கு “ என்று ஆர்யன் சொன்னதும், “ சரி பொழச்சு போ “ என்றாள் சஞ்சு.

‘ஆர்யன் சிரித்துக் கொண்டே, “ இப்போ நான் குளிக்க போகட்டுமா ? “ என்று கேட்டான். “ போ போ “ என்று அதற்கு பதில் சொன்ன சஞ்சு மீண்டும், “ இல்ல இல்ல ஒரு நிமிஷம் “ என்று அவனை நிறுத்தினாள்.

“ இப்போ என்னடி ? “ என்று ஆர்யன் கேட்டதும், “ ஆர்யன் நீ என் கிட்ட எதுவும் சொல்லனுமா ? “ என்று சஞ்சு கேட்ட போது அவள் குரலில் ஒரு ஏக்கம் இருந்தது.

“ ஆமா ஸ்வீட் ஹார்ட் “ என்று ஆர்யன் சொன்னதும், “ சொல்லு சொல்லு என்ன சொல்லணும் ? “ என்று உற்சாகமாக கேட்டாள் சஞ்சு.

” பார்ட்டி முடிய லேட் ஆகும் அதனால நீ நிதானமா ரெடி ஆகி பார்ட்டி தொடங்கும் போது கீழ வா “ என்று ஆர்யன் சொன்னதை கேட்ட சஞ்சு, “ இது தான் சொல்லனுமா ? “ என்று கேட்ட போது அவள் தோள்கள் தளர்ந்தன.  

அவன் ஆம் என்று தலையசைத்தான், அவன் உதடுகள் அப்பாவித்தனமான புன்னகையில் வளைந்தன. “ஹ்ம்ம் ஆமா, நீ வேற என்ன எதிர்பார்த்த ?” என்று கேட்டான். 

“ஒண்ணுமில்ல..நீ போய் ரெடியாகு “ என்று சலிப்புடன் சொன்னாள் சஞ்சு. ஆர்யன் சரி என்று சொல்லி சிரித்துக் கொண்டே விசில் அடித்து பாத்ரூமுக்குள் நுழைந்தான். சஞ்சு ஒரு பெருமூச்சுடன் படுக்கையில் சரிந்தாள், அவள் முகம் ஏமாற்றத்தில் இருண்டது.

“இன்னிக்கு மட்டும் பார்ட்டி இல்லனா உன்ன ஒரு வழி பண்ணி இருப்பேன். எப்படி மறந்தான் ? பார்ட்டி முடியட்டும் மவனே உனக்கு இருக்கு “ என்று மனதில் கொந்தளித்தாள்.

ஆரியன் குளித்து முடித்து தயாராகி வெளியே வந்து, “பேபி, நேரம் குறைவா இருக்கு. நான் இப்ப கீழ போறேன். நீ சீக்கிரம் ரெடி ஆகி கீழ வா ” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

சஞ்சு குளிக்க சென்று திரும்பி வந்தபோது அறையில் ரம்யா இருப்பதை பார்த்து அதிர்ச்சியானாள்.

“ரம்யா? நீங்க எப்படி இங்க ? “ என்று சஞ்சு கேட்டதும், “ ஆர்யன் சார் உங்கள பார்ட்டிக்கு ரெடி பண்ண என்ன வர சொன்னாரு சஞ்சனா “ என்று கூறினார் ரம்யா. சஞ்சுவின் முகம் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் பிரகாசித்தது.

” ஆர்யன் சார் உங்களுக்காக ஒரு பரிசு அனுப்பி இருக்காரு “ என்று சொல்லி ரம்யா ஒரு பையை அவளிடம் கொடுத்தார். சஞ்சு அதைத் திறந்ததும், தங்க ஜரிகை பார்டர் கொண்ட ஒரு இளஞ்சிவப்பு நிற காஞ்சிவரம் பட்டுப்புடவையும், அதோடு ஒரு நகைப் பெட்டியும் இருப்பதை பார்த்து ஆச்சரியத்தில் மூச்சிரைத்தாள்.

அவள் பெட்டியைத் திறந்தபோது ஒரு பிரமிக்க வைக்கும் நீல வைரத்துடன் பதிக்கப்பட்ட மலர் டாலர் கொண்ட நீண்ட வைர ஆரம் அதோடு பொருத்தமான காதணிகள் மற்றும் வளையல்கள் அதனுடன் இருந்தன. அந்த நகையோடு கையால் எழுதிய ஒரு குறிப்பு இருப்பதை பார்த்து, நடுங்கும் கைகளுடன் அதை பிரித்துப் பார்த்தாள்.

“ஹாய் ஸ்வீட் ஹார்ட்,

 என் பரிசு உனக்கு புடிச்சு இருக்கும்னு நம்புறேன். அந்த புடவை நான் செலெக்ட் பண்ணேன், அந்த நகை எல்லாம் என் அம்மாவோடது. என் வாழ்க்கையில வர போற பொண்ணுக்கு அத அவங்க கொடுக்க ஆசைப்பட்டாங்க. சஞ்சு, நீ என் வாழ்க்கையில மட்டும் வரல, என் மனசுலயும், உயிர்லையும் வந்து கலந்துட்ட அதனால உனக்கு சொந்தமானது உன்கிட்ட வந்து சேர்ந்துடுச்சு. உன்ன பார்க்க ரொம்ப ஆவலா வெயிட் பண்றேன் பேபி. சீக்கிரம் வா.

ஐ லவ் யூ

உன்னோட ஆர்யன்”

அதை படித்ததும் சஞ்சுவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது,அந்த குறிப்பை கவனமாக மடித்து புன்னகையுடன் ரம்யாவை நோக்கித் திரும்பினாள்.

” தயாராகலாமா?” என்று ரம்யா மெதுவாகக் கேட்டதும், ஆம் என்று மனம் நிரம்பிய சஞ்சு தலையசைத்தாள்.

*****************************************

முன்னோட்டம்:

” இன்னைக்கு சஞ்சனாவோட பிறந்தநாள். இந்த நாள அவளுக்காக ஸ்பெஷலா மாத்த விரும்பினேன். ஹேப்பி பர்த்டே சஞ்சனா “

 

 

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!