Home FamilyChapter 50

Chapter 50

by Siragugal Novels
14 views

DC இல்லத்தில், சந்திரசேகரும், நரேனும் நேர்த்தியான சூட் அணிந்து ஆர்யன் மேன்ஷனில் நடக்கவிருக்கும் பார்ட்டிக்கு தயாராக நின்றிருந்தனர். லிவிங் அறையில் பொறுமையாகக் காத்திருந்த இருவரின் அவ்வப்போது பார்வை படிக்கட்டுகளை நோக்கி சென்றது.

சில கணங்களுக்குப் பிறகு, மாயா கீழே படிகளில் இறங்கினாள். கிரிஸ்டல் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட நீல நிற லெஹங்காவுடன், பச்சை நிற மேலாடையை அவள் அணிந்திருந்தாள். அவளது துப்பட்டா மிகவும் நுட்பமாக லேசான பளபளப்புடன் இருந்தது. அவளுடைய கழுத்தைச் சுற்றி அவள் தந்தை பரிசளித்த வைர நெக்லஸ் பளபளத்தது.

அவளைப் பார்த்ததும் நரேன் முகம் சுளித்து, “பிசினஸ் பார்ட்டிக்கு தானே போறோம் ? ஏன் இப்படி டிரஸ் பண்ணி இருக்க?” என்று அப்பட்டமாகக் கேட்டான். அதற்கு மாயா எரிச்சலடைந்து, “ இதுல உனக்கு என்ன பிரச்சன ? எனக்கு இது தான் புடிச்சு இருக்கு அதனால போட்டு இருக்கேன் “ என்று சொன்னாள்.

இருவரும் ஏதோ திட்டத்துடன் இருப்பதை நன்கு உணர்ந்த நரேன், “ இன்னும் என்னலாம் பண்ண போறீங்களோ தெரியல “ என்று முணுமுணுத்தான்.

அவளை நெருங்கிய சந்திரசேகர் முகம் மலர்ந்து புன்னகைத்தபடி, “நீ அழக இருக்க டா, வா போகலாம்.” என்று சொன்னதும் மாயா தலை அசைத்தாள்.

“ஆர்யன், நான் இதெல்லாம் உனக்காகத் தான் செய்றேன். இன்னைக்கு நடக்க போற பார்ட்டிக்கு அப்புறம் நம்ம பார்ட்னர்ஷிப் கூட சேர்ந்து எல்லாம் மாறும்னு நம்புறேன் “ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே தந்தையைப் பின்தொடர்ந்தாள் மாயா.

சந்திரசேகரும் மாயாவும் ஒரு காரில் ஏற, நரேன் தனியாக அவனது காரில் ஏறி ஆர்யன் மேன்ஷனை நோக்கிச் சென்றனர்.

ஆர்யன் மேன்ஷன் முழுவதும் பொன்னொளியில் குளித்தது. பரந்து விரிந்த தோட்டம் அரிய பூக்களால் வடிவமைக்கப்பட்ட மலர் அலங்காரங்களால் பளபளத்தது. அங்கிருந்த மரங்களின் கிளைகளில் அலங்கார விளக்குகள் மின்னின. தோட்டத்தின் நுழைவாயிலிலிருந்து செல்லும் பாதையில் தொங்கும் விளக்குகள் வரிசையாக அணிவகுத்து மாலைக் காற்றில் மெல்ல அசைந்தன. ஒவ்வொரு விவரமும் வரவிருக்கும் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலித்தது.

உள்ளே, ரஞ்சித் கச்சிதமாக உடை அணிந்து, விருந்தினர்களை வசீகரமாக வரவேற்றான். ARC.யிலிருந்து நிர்வாகிகளும், ஒவ்வொரு துறை மேனேஜர்களும் வரத் தொடங்கினர். அவர்களில் மானசியும் ஒருவர். காரை விட்டு இறங்கி அந்த மேன்ஷனை பார்த்ததும் அவள் தாடை சுருங்கியது.

இது ஒரு அரண்மனை மாதிரி இருக்கு “ என்று  நினைத்துக்கொண்ட அவளுடைய கண்கள் பிரம்மாண்டத்தை ஊடுருவின. அவள் வெளியே நின்றுகொண்டு, உள்ளே நுழையத் தயங்கினாள். அந்த இடம் முழுவதும் அவளுடைய கற்பனைக்கு தீனி போடப் போதுமானதாக இருந்தது.

 “கடவுளே, இவ்ளோ பெரிய இடம், இந்த ராயல் வாழ்க்க அனுபவிக்க முடியாதது என்னோட துரதிர்ஷ்டம். ஆனா ஒரு ஆபீஸ் சம்மந்தமான பார்ட்டிக்கு ஏன் இவ்ளோ பிரம்மாண்டம் ? “ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் சிந்தனை பவித்ரா வருவதைக் கண்டதும் கலைந்தன. மெல்லிய முத்து நகைகளால் அலங்கரிக்கப்பட்ட நேர்த்தியான கவுன் அணிந்து, பவித்ரா பிரகாசமாக இருந்தாள். அவள் நேராக ரஞ்சித்தின் அருகில் சென்று அவனிடம் பேச ஆரம்பித்தாள். மானசிக்கு அவர்களின் உரையாடல் காதில் விழவில்லை என்றாலும், ரஞ்சித் பவித்ராவை மேன்ஷனின் வாசலை நோக்கி பணிவுடன் அழைத்துச் செல்வதைக் கண்டாள்.

” இவ மட்டும் ஏன் உள்ள போறா ? நம்மளும் போகலாமா ? இதுல என்ன தப்பு இருக்கு, போவோம் “ என்று சொல்லிக் கொண்டு, ஆர்வமும் சற்றே பொறாமையும் நிரம்பிய மனதுடன் அவர்களின் உரையாடலைக் கேட்கும் அளவுக்கு நெருங்கி சென்று கதவருகே ஒளிந்து கொண்டாள்.

“நான் லிவிங் ரூம்ல இருக்கேன் ரஞ்சித் “ என்று பவித்ரா மெதுவாகச் சொன்னாள். அதற்கு ரஞ்சித் அவளிடம், “ஒரு நிமிஷம் பவித்ரா, உங்கள மாடிக்கு அனுப்பறதுக்கு முன்னாடி நான் அனுமதி வாங்குறேன் “ என்று கூறினான்.

அப்போது ஆர்யன் தன் ஆபீஸ் ரூமில் இருந்து வெளியே வந்தான். அவன் ஒரு கருப்பு நிற கோட் சூட் மற்றும் நேர்த்தியான கருப்பு ஆர்மானி காலணி அணிந்து, பார்க்க வசீகரமாக அதே சமயம் கம்பீரமாக தோற்றமளித்தான். பவித்ரா உடனடியாக அவனை பார்த்து வணக்கம் தெரிவித்தாள்.

“ஹலோ பவித்ரா. உட்காருங்க, ஏன் நின்னுட்டு இருக்கீங்க ? “ என்று ஆர்யன் கேட்டதும், ரஞ்சித் அவனிடம், “சார், அவங்க சஞ்சனாவ சந்திக்க விரும்புறாங்க, உங்க பெர்மிஷன் வாங்குற வரைக்கும் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன்.” என்று விளக்கம் அளித்தான்.

” சார், நான் சஞ்சுவ பார்த்து ரொம்ப நாள் ஆகுது அதனால அவள சந்திக்க நெனச்சேன் “ என்று பவித்ராவும் சொல்ல, ஆர்யன் உடனே ரஞ்சித்தை பார்த்து, “ரஞ்சித், பவித்ரா எப்போ வேணும்னாலும் நம்ம மேன்ஷனுக்கு வரலாம், அவங்களுக்கு அனுமதி வாங்க வேண்டியதில்ல “ என்று சொல்லிவிட்டு பின்னர் பவித்ராவை பார்த்து, “ இது உங்க வீடு மாதிரி நெனச்சு இருங்க பவித்ரா, மாடிக்குப் போய் சஞ்சுவ பாருங்க, அவ பார்ட்டிக்கு ரெடியாகிட்டு இருப்பா “ என்று கூறினான்.

” ரொம்ப நன்றி சார்” என்றாள் பவித்ரா புன்னகையுடன். ஆனால் அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த மானசியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “ சஞ்சு… இங்க தான் இருக்காளா ? “ என்று திகைத்தாள். ஒரு நொடி கூட தாமதிக்காமல், அவள் மனம் படபடக்க பார்ட்டி பகுதியை நோக்கி நழுவினாள்.

இதற்கிடையில், பவித்ரா முதல் மாடிக்கு சென்று மூடியிருந்த படுக்கையறை கதவைத் தட்டினாள். கதவு திறந்து சஞ்சு வெளிய வந்ததும் பவித்ராவை பார்த்து மகிழ்ச்சியில் கத்தினாள்.

“பவி! எப்படி இருக்க?” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

“நான் நல்லா இருக்கேன். நீ ரொம்ப அழகா இருக்க ” என்று பவித்ரா வியப்புடன் பதில் சொன்னாள். அதற்கு சஞ்சு, “நீயும் ரொம்ப அழகா இருக்க, இன்னும் கொஞ்ச நேரம் தான், நான் ரெடி ஆயிடுவேன் “ என்று கூறினாள். பவித்ரா சரி என்று சொல்லி அருகிலேயே அமர்ந்து, சஞ்சு மேக்கப்பை முடிக்கும் வரை இருவரும் தங்கள் உற்சாகமான வேடிக்கையைத் தொடர்ந்தனர்.

DC குழுமங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அவர்களின் அழைப்புகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதி வழங்கப்பட்டனர். விருந்தினர்கள் பெரும்பாலும் வந்து மேஜைகளில் அமர்ந்து  பானங்கள் மற்றும் பசியைத் தூண்டும் உணவுகளை அனுபவித்தனர்.

மாலை விருந்து தொடங்கும் தறுவாயில், சந்திரசேகரும், மாயாவும் ஆர்யன் மேன்ஷனுக்கு வந்து சேர்ந்தனர். ரஞ்சித் அவர்களை மரியாதை கலந்த புன்னகையுடன் வரவேற்று, லாந்தர் வெளிச்சம் நிறைந்த பாதையின் வழியாக தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

அவர்களைக் கண்ட ஆர்யன் புன்னகையுடன் முன்னால் சென்று சந்திரசேகரை அன்புடன் அணைத்துக் கொண்டு, “வெல்கம், சார், நீங்க இங்க என்னோட மேன்ஷனுக்கு வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று கூறினான்.

” தேங்க்யூ ஜென்டில்மேன்” என்று உறுதியாகத் தலையசைத்தார் சந்திரசேகர்.

ஆர்யன் மாயாவை பார்த்து, “வெல்கம் மிஸ் மாயா.” என்று சொல்ல, “நன்றி, ஆர்யன்,” என்று பதில் சொன்னாள், அப்போது அவளுடைய குரல் வழக்கத்தை விட இனிமையாக இருந்தது. அப்போது அங்கு வந்த நரேன் ஆர்யனை லேசாக அணைத்துக் கொண்டான்.

” வாடா, நீ சீக்கிரம் வந்துருக்க வேண்டியது தானே ? “ என்று ஆர்யன் கேட்க, “ ஏன்டா, அவன் அவன் இருக்க டென்ஷன்ல நீ வேற ஏன்டா “ என்று சலித்து கொண்டான் நரேன். அவன் பதிலை கேட்டு சிரித்த ஆர்யன், “ ஏன்டா, நானே டென்ஷன் இல்லாம இருக்கேன் உனக்கு என்னடா ? விடு பாத்துக்கலாம் “ என்று சொல்லி அவன் முதுகை தட்டினான்.  

“பார்ட்டி முடிஞ்சதும் நான் கனடா கிளம்பறேன். விடிய காலையில என்னோட பிளைட் “ என்று நரேன் சொன்னதும், “ என்ன ஆச்சு “ என்று ஆர்யன் கவலையுடன் கேட்டான்.

“ அங்க இருக்க பிசினஸ் பாத்துக்கணும்ல அதுக்கு தான் “ என்று நரேன் பொறுமையாக சொல்ல, சரி என்று ஆர்யன் தலையசைத்தான். அவர்களை கவனித்துக் கொண்டிருந்த மாயா உடனே அவர்களிடம் சென்று, “ நீங்க ரெண்டு பேரும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க ? “ என்று கேட்டாள்.

ஆர்யன் அமைதியாக இருக்க, நரேன் அவளை பார்த்து, “ ஒண்ணுமில்ல, நாங்க friends எப்பவும் போல பேசிட்டு இருந்தோம் “ என்று கூறினான்.   

வி.ஐ.பி விருந்தினர்களுக்காக ஆடம்பரமான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த தோட்டத்தின் முன் பகுதிக்கு ஆர்யன் அவர்களை அழைத்துச் சென்றான். இதற்கிடையில் ரஞ்சித்துக்கு போன் வந்து, பார்ட்டி வந்திருந்த சுரேந்தரையும், பிரதீப்பையும் வரவேற்று மேன்ஷனுகுள் அழைத்து சென்றான்.

“ஏன் இங்க ? நாம பார்ட்டி நடக்க போற இடத்துக்கு போகலாமே ? “ என்று சுரேந்தர் சொன்னதும், “ இல்ல, ஆர்யன் சார் உங்கள ஸ்பெஷலா வரவேற்க சொல்லி இருக்காரு. பார்ட்டி தொடங்கும் போது நீங்க தோட்டத்துக்கு வந்தா போதும், பிரதீப், பதற்றம் இல்லாம இரு “என்று ரஞ்சித் அவர்களிடம் மிக்க மரியாதையுடன் பேசியதும், “தேங்க்யூ ரஞ்சித்” என்றான் பிரதீப் உருக்கமாக.

தோட்டத்தில் சூழ்நிலை மிகவும் துடிப்பாக இருந்தது. இசை காற்றில் மிதந்தது, விருந்தினர்கள் சிரிப்பிலும் உரையாடலிலும் மூழ்கினர். சந்திரசேகர் ஆர்யனுக்கு கை காட்டி, ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சைகை காட்டினார். ஆர்யன் தலையசைத்துவிட்டு ரஞ்சித்தை நோக்கித் திரும்பி, “சஞ்சுவைக் கூப்பிடு” என்றான் அமைதியாக.

ரஞ்சித் அவளுக்கு போன் செய்து சஞ்சுவை கீழே வரச் சொன்னான். சில நிமிடங்களுக்குப் பிறகு, சஞ்சுவும் பவித்ராவும் தோட்டத்தை அடைந்து விஐபி பகுதியை நோக்கிச் சென்றனர்.

ஆர்யன் அவளை பார்த்து உறைந்து போனான். மென்மையான பிங்க் நிற புடவையில் சஞ்சு நளினமாக நடந்து வந்தாள். ஆர்யனின் மறைந்த தாயின் வைர நகைகள் அவளது கழுத்து மற்றும் காதுகளில் பளபளத்தன. அலையலையாகச் அவளது கூந்தல் தோள்களில் படர்ந்திருந்தது. ஒரு கையில் முந்தானையின் விளிம்பை லேசாகப் பிடித்துக் கொண்டு ஒரு ராணியைப் போல – தன்னம்பிக்கையோடும், நிதானத்தோடும், தெய்வீகத்தன்மையோடும் நடந்தாள்.

அங்கிருந்த அனைவரின் கண்களும் அவளை நோக்கி திரும்பியது. அவளை பார்த்த உடனே அவர்களின் உரையாடல்கள் இடைநிறுத்தப்பட்டன. அங்கு ஒலித்த இசை கூட மங்குவது போலிருந்தது.

ஆர்யனின் பார்வை அவளை விட்டு அகலவேயில்லை, அவன் உதடுகள் புன்னகையாக வளைந்தன. சஞ்சு அவன் கண்களைப் பார்த்து ஒரு முறை கண் சிமிட்டிவிட்டு பவித்ராவின் அருகில் அமர்ந்தாள்.

சில இருக்கைகளுக்கு அப்பால் இருந்து மாயாவின் தாடை இறுகியது. சஞ்சு சாதாரண உடையில், எளிமையான தோற்றத்தில் வருவாள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் சஞ்சுவின் நளினமும் கம்பீரமும் அவளுக்குள் எரிந்து கொண்டிருந்த பொறாமைக்கு எண்ணெய் ஊற்றின.

ஊடகத்தை சேர்ந்தவர்கள் தனியாக அமர்ந்து, ஆர்யனின் அதிகாரப்பூர்வ உரைக்காக காத்திருந்தனர். இதற்கிடையில், ARC மற்றும் DC இரண்டின் சட்டக் குழுக்களும் அவர்களின் இருக்கையில் அமர்ந்தனர்.

தோட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் நின்ற ஆர்யன் அனைவரிடமும் பேச தயாராக இருந்தான்.

“குட் ஈவினிங், லேடீஸ் அண்ட் ஜென்டில்மென், உங்க எல்லாரையும் இந்த பார்ட்டிக்கு வரவேற்குறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். உங்க நேரத்த ஒதுக்கி இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி “ என்று தெளிவாக, நிதானமாக தனது உரையை தொடங்கினான்.  

” இன்னைக்கு இந்த பார்ட்டி ஏற்பாடு பண்ணதுக்கு மூணு காரணம் இருக்கு. அத உங்களுக்கு தெரியப்படுத்துறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன் “ என்று ஆர்யன் சொல்லும் போது அவன் கண்கள் சஞ்சுவின் கண்களை சந்தித்தன. அவன் வார்த்தையை கேட்டதும் சஞ்சுவின் கண்கள் வியப்பில் விரிந்தன. விருந்தினர்களிடையே ஆர்வத்தின் அலை எழுந்தது.

ஆர்யன் புன்னகையுடன், “முதல் காரணம், இங்க இருக்க நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். ARC குழுமமும், DC குழுமமும் ஒன்னா சேர்ந்து பார்ட்னர்ஷிப்ல பிசினஸ் பண்ண போறோம். DC குழுமத்தோட சேர்மன் மிஸ்டர் சந்திரசேகர் அவர்களுக்கு என்னோட நன்றி சொல்ல விரும்புறேன். நம்ம நிறுவனங்களுக்கு இடையே வெற்றிகரமான, ஒரு நட்புரீதியான கூட்டணிய நான் எதிர்பார்க்குறேன் சார்.” என்று ஆர்யன் சொன்னதும், அனைவரும்  கைதட்ட ஆரம்பித்தனர் ஆனால் ஆர்யன் லேசான புன்னகையுடன் கையை உயர்த்தி அவர்களை அமைதிப்படுத்தினான்.

” நாங்க அக்ரீமென்ட் கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி  ரெண்டாவது முக்கியமான காரணம் சொல்ல விரும்புறேன் “ என்று சொன்னவன் அருகில் நின்று கொண்டிருந்த ரஞ்சித்தை பார்த்து, “ ரஞ்சித், அத கொண்டு வா “ என்று சொன்னான்.

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்க ரஞ்சித் ஒரு உணவு ட்ராலி தள்ளிக் கொண்டு வந்தான். அதன் மேல் அழகாக அலங்கரிக்கப்பட்ட கேக் இருந்தது.

ஆர்யன், சஞ்சனாவை நோக்கித் திரும்பி, அவளை பார்த்துக் கொண்டே, ” இன்னைக்கு சஞ்சனாவோட பிறந்தநாள். இந்த நாள் அவளுக்காக ஸ்பெஷலா மாத்த விரும்பினேன். இது தான் இன்னைக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணதுக்கு ரெண்டாவது காரணம் “ என்று சொல்லிவிட்டு, “ பிறந்தநாள் வாழ்த்துக்கள், சஞ்சனா “ என்று அவளை பார்த்து சொன்னான்.

சஞ்சனா திகைத்து, வாயடைத்துப் போய் நின்றபோது விருந்தினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சஞ்சு தன் இருக்கையில் இருந்து எழுந்து ஆர்யன் அருகில் சென்றாள்.

“ பாவி பயலே, இப்படி எல்லார் முன்னாடியும் வாழ்த்து சொன்னா நான் என்ன பண்றது ? என்னால உன்னை கட்டிப்பிடிக்க கூட முடியாது “ என்று மனதில் நினைத்துக் கொண்டே அவனை பார்த்து புன்னகைத்து நன்றி சொன்னாள்.

ஆர்யன் அவளை லேசாக பக்கவாட்டில் அணைத்துக் கொண்ட பிறகு கேக் வெட்டும்படி சைகை செய்தான்.

சஞ்சு கன்னத்தில் ஒரு வெட்கத்துடன் கேக் வெட்டினாள். ஆர்யன் அவளுக்கு முதலில் ஒரு துண்டு ஊட்டினான், அவனை தொடர்ந்து  பவித்ரா மற்றும் ரஞ்சித் அவளுக்கு ஊட்டினார்கள். அதன் பின்னர் சஞ்சு ஒரு சிறிய துண்டு கேக் எடுத்து ஆர்யனுக்கு ஊட்டினாள், பின்னர் பவி மற்றும் ரஞ்சித்துக்கு ஊட்டினாள். நரேன் அருகில் சென்று அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினான்.

இதற்கிடையில் சந்திரசேகரின் புருவங்கள் சுருங்க, தன் உதவியாளரை அழைத்து அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். அதற்கு உதவியாளர் தலையசைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து நழுவி சென்றார். மறுபுறம் நடப்பதை எல்லாம் பார்த்து கொந்தளித்துக் கொண்டிருந்த மாயா, “மூணாவது காரணம் என்ன?” என்று எரிச்சலை மறைக்க முடியாமல் கேட்டாள்.

ஆர்யன் லேசாகச் சிரித்து, ” மூணாவது காரணம் ரொம்ப ஸ்பெஷல். ஆனா நாம அக்ரீமன்ட் கையெழுத்து போட்ட அப்புறம் அத சொல்றேன் “ என்று சொல்லிவிட்டு கையெழுத்திடுவதற்காக போடப்பட்டிருந்த மேஜையை நோக்கித் திரும்பி, “ சந்திரசேகர் சார், முன்னாடி வந்து இந்த டாகுமென்ட்ல கையெழுத்து போடுங்க “ என்று கூறினான்.

சந்திரசேகர் எழுந்து நின்று மாயாவின் கையைப் பிடித்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து மேஜை அருகே சென்று ஆர்யனுக்கு அருகில் நின்றனர்.

“நன்றி ஆர்யன்” என்று சொன்ன சந்திரசேகர் பின்னர் விருந்தினரை பார்த்து, “ DC குழுமத்தோட தலைமை நிர்வாக அதிகாரியா என்னோட மகள் மிஸ் மாயா சந்திரசேகர அறிவிக்குறதுல நான் ரொம்ப பெருமைப்படுறேன். DC குழுமத்தோட CEOவா அதிகாராப்பூர்வமா மாயா அக்ரீமன்ட்ல கையெழுத்து போடுவாங்க “ என்று அவர் அறிவித்ததும், விருந்தினர் இடையே அதிர்ச்சி அலை வீசியது. சஞ்சனாவுக்கும் புருவங்கள் உயர்ந்து ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் மனம் தளராமல் அமைதியாக இருந்த ஆர்யன், “வாழ்த்துக்கள் மிஸ் மாயா சந்திரசேகர்” என்று பணிவுடன் தலையசைத்தான்.

“தேங்க்யூ மிஸ்டர் ஆர்யன் சைதன்யா” என்றாள் மாயா கள்ளப் புன்னகையுடன்.

ஆர்யனின் முகபாவம் லேசாக மாறி, அவன் கண்களில் ஒரு பளபளப்பு மின்னியது.

“ இப்போ, ARC காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தொட புதிய தலைமை நிர்வாக அதிகாரி மிஸ்டர் பிரதீப் சுரேந்தர் அவர்களை  உங்களுக்கு அறிமுகம் செய்றதுல நான் பெருமைப்படுறேன் “ என்று ஆர்யன் கூறியதும், பிரதீப் தனது தந்தை சுரேந்தருடன் நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்த போது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிரதீப் ஆர்யனை நெருங்கி நட்புடன் கட்டிப்பிடிக்க சஞ்சனா கண்களை அகல விரித்து நின்றாள்.

மாயாவால் கோவம் அடக்க முடியாமல், “ஆர்யன், நீ ரொம்ப தந்திரசாலி. இவர எப்படி நீ தலைமை நிர்வாக அதிகாரியா நியமிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினாள்.

ஆர்யன் அமைதியாகவும் கவலையற்றவனாகவும் அவளை நோக்கி, ” மிஸ் மாயா, பிரதீப் என்னோட நல்ல friend, என்னோட சகோதரன் மாதிரி. இவர் ஏற்கனவே வெற்றிகரமா ஒரு கம்பெனி நடத்திட்டு இருக்காரு அதனால இந்த பிசினஸ் இவர் தலைமையில நல்லா நடக்கும்னு எனக்கு நம்பிக்க இருக்கு “ என்று கூறினான்.

” என்ன சொன்னீங்க ? இவர் உங்களுக்கு சகோதரன் மாதிரியா ? சமீபத்துல இவர தத்தெடுத்தீங்களா?” என்று கேட்டு மாயா ஏளனம் செய்தாள்.

அப்போது சந்திரசேகரின் பி.ஏ திரும்பி வந்து அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். சந்திரசேகரின் முகம் கவலை மற்றும் பீதியில் சூழ்ந்தது. உடனே அவர் மாயாவை அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு ஆர்யனை பார்த்து, “ஆர்யன், இந்த பார்ட்னர்ஷிப் பத்தி நாம இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமா ? “ என்று கேட்டார்.

அவரின் இந்த பதிலை ஏற்கனவே எதிர்பார்த்த ஆர்யன், லேசாக தோள்களைக் குலுக்கி, “எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்ல சார். நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம் “ என்று சொன்னான்.

சந்திரசேகர் உடனே விருந்தினரை பார்த்து, “ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், இந்த பார்ட்னர்ஷிப் பத்தி நாங்க இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு அதனால எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுது “ என்று கூறினார்.

சந்திரசேகர் மேலும் பேசுவதற்குள் ஆர்யன் மீண்டும் முன்னால் வந்து, “ ரொம்ப நன்றி சார் “ என்று சந்திரசேகரை பார்த்து கூறிவிட்டு பின்னர் விருந்தினரை பார்த்து, “ இப்போ இந்த பார்ட்டி ஏற்பாடு பண்ண முக்கியமான காரணத்த சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு “ என்று சொல்லி ரஞ்சித்தை பார்த்து, “ ரஞ்சித், மீடியா ஆளுங்க எல்லாரையும் வர சொல்லு “ என்றான்.

சில நிமிடங்களில் செய்தியாளர்கள் தனித்தனியாக அமர்ந்து அறிவிப்பை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தனர்.

” இவ்ளோ பொறுமையா இருந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ARC காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தோட புது தலைமை நிர்வாக அதிகாரியாக பிரதீப் சுரேந்தரை அதிகாரப்பூர்வமா அறிவிக்குறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். அது மட்டும் இல்ல, ARCயோட 50% பங்குகள் இனி மிசஸ் சஞ்சனா ஆர்யன் சைதன்யாவுக்கு சொந்தமாகும்.” என்று ஆர்யன் சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியில் பெருமூச்சு விட்டனர். சந்திரசேகர் பதறிப் போனார். மாயா அவநம்பிக்கையில் உறைந்து போனாள். ஆர்யனின் அறிவிப்பை சற்றும் அதிர்பார்க்காத சஞ்சனா ஆர்யனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

” இன்னைக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான நாள், இன்னைக்கு எங்களோட முதல் திருமண நாள். என் மனைவி, என் லவர், என் வாழ்க்கை, என் இதயம், என் உயிர் எல்லாமே என் சஞ்சனா தான். அவங்கள உங்க எல்லாருக்கும் அறிமுகம் செய்றதுல நான் ரொம்ப பெருமைப்படுறேன், சந்தோஷப்படுறேன் “ என்று சொல்லி சஞ்சுவை நோக்கி பார்த்த ஆர்யன், “ஐ லவ் யூ சஞ்சனா “ என்று காதலோடு சொன்னான்.

சஞ்சனா கண்களில் கண்ணீர் வழிய அசையாமல் நின்றாள்.  விருந்தினர்கள் பிரமிப்புடனும் அவநம்பிக்கையுடனும் பார்த்துக் கொண்டிருக்க, உண்மை இறுதியாக வெளிச்சத்திற்கு வந்தது.

******************************************

முன்னோட்டம்:

“உண்மைய சொல்லனும்னா எனக்கு ரொம்ப நாளாவே உன்ன பொண்டாட்டி சொல்லி கூப்பிடனும்னு ஆசை ஆனா நீ என் மனைவினு எல்லாருக்கும் சொல்றவர கூப்பிட கூடாதுனு முடிவோட இருந்தேன். இப்போ எல்லாருக்கும் நம்ம ரெண்டு பேர பத்தி தெரியும் அதனால இப்போ உன்ன பொண்டாட்டி சொல்லி கூப்பிட எனக்கு உரிமை இருக்கு “

 

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!