பிரதீப் இருக்கையிலிருந்து எழுந்து மாயாவை நோக்கி நடந்து அவள் பார்வையை சந்திக்க லேசாக குனிந்தான், அவனது முகபாவம் படிக்க முடியாததாக இருந்தது.
“என்ன?” என்று மாயா புருவத்தை உயர்த்தி திடுக்கிட்டு கேட்டாள்.
” நீ வேணும்னு சொல்லலாமா ?” என்று பிரதீப் கேட்டதும், “முட்டாள். வார்த்தைய அளந்து பேசு “என்று எரிச்சலுடன் பின்வாங்கினாள் மாயா.
” கோவப்படாத மாயா, சரி இப்போ சீரியஸா கேட்குறேன், உன்னோட 40% ஷேர்ஸ் என் பெயருக்கு எழுதி தர முடியுமா ? “ என்று பிரதீப் கேட்டான் அதற்கு மாயா சற்றும் யோசிக்காமல், “ தரேன் “ என்று தயக்கமின்றி சம்மதித்தாள்.
” உனக்கு தேவையான தகவல் சொல்றேன் ஆனா அதுக்கு மேல என்ன செய்யணுமோ அத நீ தான் செய்யணும், நான் தலையிட மாட்டேன் “ என்று பிரதீப் சொன்னதும், மாயா அதற்கும் சம்மதம் சொன்னாள்.
“சரி, எனக்கு எப்போ பேப்பர் வரும்?” என்று பிரதீப் கேட்க, ” நீ முதல்ல தகவல் சொல்லு அதுக்கு அப்புறம் நீ கேட்டது கிடைக்கும் “ என்றாள் மாயா. சிலநொடிகள் யோசித்த பிரதீப், “ ஆர்யனும் சஞ்சுவும் ஹனிமூன் போறாங்க “ என்ற தகவலை சொன்னான். அதை கேட்டதும், “ எப்போ போறாங்க, எங்க போறாங்க ? “ என்று கேட்ட மாயாவின் கண்கள் சுருங்கின.
“ஏற்கனவே ஒரு தகவல் கொடுத்துட்டேன், பேப்பர் கிடைச்ச அப்புறம் அடுத்த தகவல் கிடைக்கும் “ என்று பிரதீப் சிரித்தபடி சொன்னான். எரிச்சல் அடைந்த மாயா, “அடுத்த ரெண்டு மணி நேரத்துல உன் கைக்கு பேப்பர் வந்து சேரும், இப்ப பதில் சொல்லு “ என்று கடுப்புடன் கேட்டாள்.
” ரெண்டு நாள்ல பாலி தீவுக்கு போறாங்க, அவங்க தங்க போற விவரம் எல்லாம் ரகசியமா வெச்சுருக்காங்க, அது ரஞ்சித்துக்கு மட்டும் தான் தெரியும்.” என்று பிரதீப் சொன்னதும், “ நல்லது. தேங்க்ஸ்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு மறுவார்த்தை பேசாமல் அறையை விட்டு வெளியேறினாள் மாயா.
மாயா சென்ற பிறகு, பிரதீப் தனது மொபைலை எடுத்து ஆர்யனை அழைத்து, “ஆர்யன், எல்லாத்தையும் கேட்டீங்களா ?” என்று கேட்டான் அதற்கு ஆர்யன், “ ஆமா கேட்டேன் பிரதீப், இப்படியே அவ வழியில போ பார்த்துக்கலாம் “ என்று பதில் சொன்னான்.
“சரி பேப்பர் வந்ததும் நாளைக்கே ரஞ்சித் கிட்ட கொடுத்துடறேன்.” என்று பிரதீப் சொல்ல, “ஹ்ம்ம் சரி. வேற ஏதாவது இருந்தா எனக்கு தகவல் சொல்லு “ என்றான் ஆர்யன் அதற்கு பிரதீப் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அன்று பிற்பகல் வீட்டில், மாயா தன் தந்தையின் ஆபீஸ் அறைக்குள் புயலாக நுழைந்து, “ அப்பா, நாளைக்கு நான் பாலிக்கு போக ஏற்பாடு பண்ணுங்க.” என்றாள்.
“ஏன்?” என்று குழப்பத்துடன் சந்திரசேகர் கேட்டதும், “ஆர்யனும் சஞ்சுவும் ஹனிமூன் போறாங்க. அவங்களுக்கு முன்னாடி நான் அங்க இருக்கணும்.” என்றாள் மாயா.
“கண்டிப்பா போக போறியா ? “ என்று சந்திரசேகர் கேட்டதும், “ஆமா, யாரையாவது ஏற்பாடு பண்ணி அவங்க இருக்க போற இடத்த எனக்கு சொல்ல சொல்லுங்க “ என்று மாயா கூறினாள்.
“ஹ்ம்ம், சரி “ என்று சொன்ன சந்திரசேகர், “ ஆனா உன்னோட பங்குகள ஏன் பிரதீப்புக்கு கொடுத்த ?” என்று கேட்டார். அதற்கு அவள், “ அவன் எனக்கு வேலை செய்றதுக்கு நான் கொடுத்த சம்பளம். ” என்று அலட்சியமாகச் சொன்னாள்.
“மாயா, அப்படி செய்றதுக்கு முன்னாடி நீ என்கிட்ட கேட்டுருக்கனும். அந்த வேலைய செய்ய பிரதீப்புக்கு பதிலா வேற யாரையாவது நாம ஏற்பாடு பண்ணி இருக்கலாம் “ என்று சந்திரசேகர் கவலையுடன் சொன்னார் ஆனால் மாயா, “ஆர்யன், சஞ்சனா கூட நெருக்கமா இருக்க ஒருத்தர் எனக்கு வேணும். பிரதீப் இந்த வேலைக்கு கச்சிதமா இருப்பான் “ என்று சொன்னாள்.
“மாயா, எதையும் செய்றதுக்கு முன்னாடி யோசிச்சு செய் “ என்று சந்திரசேகர் சொல்ல உடனே மாயா அவரை கோவத்துடன் பார்த்து, ” நிறுத்துங்க “ என்று சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறினாள். அன்று இரவு பிரதீப்பிடம் இருந்து மாயாவின் மொபைலுக்கு அழைப்பு வந்து அவள் உடனே பதில் சொன்னாள்.
“மாயா, நன்றி. பேப்பர் வந்துடுச்சு ” என்று பிரதீப் தெரிவித்ததும், “ நல்லது. வேற ஏதாவது தகவல் இருக்கா ?” என்று கேட்டாள் மாயா அதற்கு பிரதீப் உடனே, “இப்போதைக்கு இல்ல. என்ன செய்யப் போறதா உத்தேசம்?” என்று அவளை கேட்டான் ஆனால் மாயா, “அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம் “ என்று சொன்னாள்.
“மாயா, நீ சில சமயம் உண்மையிலேயே அறிவு இல்லாத மாதிரி தான் பேசுற, “ என்று அப்பட்டமாக கூறிய பிரதீப் மீண்டும் அவளிடம், “ உன் திட்டம் எனக்குத் தெரியாம உனக்கு என்ன தகவல் சொல்லனும்னு எனக்கு எப்படி தெரியும் ? உனக்கு சம்மந்தம் இல்லனு சில விஷயங்கள நான் சொல்லாம விட்டா என்ன செய்வ ? “ என்று கேட்டான்.
“சரி “ என்று பல்லை கடித்து சொன்ன மாயா, “ நான் நாளைக்கு பாலி போறேன். ஆர்யனுக்கும் சஞ்சனாவுக்கும் முன்னாடி நான் அங்க போயிடுவேன். அவங்களோட நடமாட்டத்த கண்காணிக்க ஆளுங்கள ஏற்பாடு பண்ணி இருக்கேன் ” என்று தனது திட்டத்தை சொன்னாள்.
தனக்கு வேண்டிய தகவல் கிடைத்ததும் புன்னகைத்த பிரதீப், “ஹ்ம்ம் குட் நைட். வேற தகவல் கிடைச்சா உனக்கு சொல்றேன், கவனமாக இரு. பாலி போனது நீ தங்க போற இடத்த பத்தி எனக்கு சொல்லு “ என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அடுத்த நாள் மாயா பாலியில் இறங்கி ஒரு ஆடம்பர ரிசார்ட்டில் தங்கினாள். அவள் கேட்டுக்கொண்டபடி ஆர்யனின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும், அவளைப் பாதுகாக்கவும் உள்ளூர் ஆண்களை அவளது தந்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கிடையில் பிரதீப் அழைத்த போது ஆர்யன் தனது அலுவலகத்தில் பயணத்திற்கு முந்தைய இறுதி கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆர்யன், மாயா பாலி போய் சேர்ந்துட்டா. அவளோட ஆட்கள் உங்கள கண்காணிச்சிட்டு இருக்காங்க ” என்று பிரதீப் சொன்னதை கேட்டதும், “அவ என்ன வேணும்னாலும் செய்யட்டும் பிரதீப், நம்ம பிளான் பண்ண மாதிரி நம்ம வழியில போவோம் ” என்றான் ஆர்யன் அமைதியாக.
“சரி. நீங்களும், சஞ்சுவும் உங்க மொபைலை எடுத்துட்டு போக மாட்டீங்க இல்லையா?” என்று பிரதீப் கேட்க, “இல்ல. ஏதாவது தகவல் இருந்தா நீ மெசேஜ் அனுப்பு இல்ல எனக்கு நேரம் கிடக்கும் போது நான் இன்டர்நெட் மூலமா பேசுறேன் “ என்று சொன்னான் ஆர்யன்.
“சரி ஆர்யன் ஆனா நாம ஏன் அவள எதிர்கொள்ளக் கூடாது ? அவளால் என்ன செய்ய முடியும்?” என்று பிரதீப் கேட்டதும், “இது அவளை எதிர்கொள்றதோ இல்ல அவளோட சண்ட போடுறத பத்தியோ இல்ல. மாயவோட அசிங்கமான விளையாட்டுல சஞ்சனாவ இழுக்க நான் விரும்பல. அவள நேரடியா எதிர்கொள்ளும் போது விஷயங்கள் இன்னும் பெருசாகும் அதனால சஞ்சு கஷ்டப்படுறத நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று ஆர்யன் பெருமூச்சுடன் விளக்கினான்.
” ஹ்ம்ம்… நீங்க சொல்றதும் சரி தான். எப்படியோ, சந்தோஷமா ஹனிமூன் போய்ட்டு வாங்க. மாயாவ பத்தி கவலைப்படாதீங்க. அவள நானும் ரஞ்சித்தும் பார்த்துக்குறோம் “ என்று பிரதீப் சொன்னதை கேட்டதும், ” நீங்க ரெண்டு பேரும், வேற யாரையும் விட அத நல்லா செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்று ஆர்யன் பதில் சொல்லி புன்னகைத்தான்.
ஆர்யன் வேலை முடிந்து வீடு திரும்பினான். இரவு உணவுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அறைக்குள் நுழைந்தனர்.
“ பேக்கிங் எல்லாம் முடிஞ்சுதா பொண்டாட்டி ?” என்று ஆர்யன் புன்னகையுடன் கேட்க, “ஹ்ம்ம், ஆமா எல்லாம் பண்ணிட்டேன் ” என்று அவள் பதிலுக்கு புன்னகைத்தாள்.
“காலையில ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்ட அப்புறம் நாம கிளம்பலாம் ” என்று மெதுவாகச் சொன்ன ஆர்யன் அவளை நெருங்கி வந்து அவளை அணைத்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து, “ நாளைக்கு வர வெயிட் பண்ணனும் “ என்று ஏக்கத்துடன் சொன்னான்.
சஞ்சு சிரித்தபடி, “நானும் தான், இப்போ தூங்கலாம்.” என்று சொன்னாள். அதற்கு ஆர்யன், “ஆமா இன்னைக்கு நைட்டு நல்லா தூங்கு, நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். எல்லாத்தையும் நாளைக்கு பார்த்துக்கலாம் “ என்றான் கிண்டலாக கண்ணடித்தபடி.
அடுத்த நாள் காலை, ஆர்யனும் சஞ்சுவும் நீல நிற ஜீன்ஸ் மற்றும் கருப்பு டீசர்ட் அணிந்து தங்கள் அறையை விட்டு வெளியேறினர். ஏற்கனவே காத்திருந்த பாலா அவர்களின் லக்கேஜ்களை காரில் வைத்தான். காலை உணவை முடித்துவிட்டு, ரஞ்சித் முன் இருக்கையில் அமர அவர்கள் விமான நிலையத்திற்கு புறப்பட்டனர்.
விமான நிலையத்தை அடைந்ததும், ஆர்யனும் சஞ்சுவும் ரஞ்சித்தை நோக்கித் திரும்பினர்.
“ஹேப்பி ஹாலிடே, ரெண்டு பேரும் சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க ” என்று ரஞ்சித் புன்னகையுடன் சொன்னதும் ஆர்யனும், சஞ்சுவும் அவனுக்கு நன்றி சொன்னார்கள். பின்னர் ரஞ்சித் ஆர்யனை பார்த்து, “ சார், நான் இங்க எல்லாத்தையும் பார்த்துக்குறேன், நிம்மதியா போய்ட்டு வாங்க “ என்று கூறினான்.
ஆர்யனும், சஞ்சுவும் அவர்களின் தனியார் ஜெட் விமானத்தில் புறப்பட்டதும், ரஞ்சித் அங்கிருந்து திரும்பி சென்றான்.
விமானத்தின் உள்ளே, ஆர்யன் அவளைப் பார்த்து, ” இப்போ எப்படி இருக்கு உனக்கு ?” என்று கேட்டான். சஞ்சு ஒரு சிறு புன்னகையை உதிர்த்து, “முதல் முறையா flightல பறக்குறேன்… கொஞ்சம் பதட்டமா இருக்கு.” என்று சொன்னாள். ஆர்யன் அவள் கையை பிடுத்து மென்மையாக முத்தமிட்டு, ” நான் இங்க தான் உன் கூட இருக்கேன் சஞ்சு மா, நாம பாதுகாப்பா இருக்கொம் ரிலாக்ஸ்.” என்று அவளை அனைத்துக் கொண்டான்.
8 மணி நேர விமான பயணத்திற்கு பிறகு விமானம் தரையிறங்கியதும், “மாலத்தீவு வந்துட்டோமா?” என்று சஞ்சு வெளியே பார்த்துக் கொண்டே கேட்டாள். அதற்கு ஆர்யன், “ இல்ல ஸ்வீட் ஹார்ட், நாம இப்போ பாலி வந்துருக்கோம் “ என்று ஒரு சிறிய புன்னகையுடன் பதிலளித்தான் ஆனால் சஞ்சு, “நாம மாலத்தீவு போகலையா ?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.
” நாம பாதுக்காப்பு காரணமா இங்க இருந்து மாலத்தீவு போறோம் “ என்று சொன்னான். இருவரும் ஏறக்குறைய இறங்கிய உடனேயே, அவர்களுக்காக ஏற்கனவே ஓடுபாதையில் காத்திருந்த மற்றொரு தனியார் ஜெட் விமானத்தில் ஏறினர். அதே நேரத்தில், பாலியில், ஆர்யன் மற்றும் சஞ்சுவின் உயரம் மற்றும் கட்டமைப்புடன் பொருந்திய ஒரு ஆணும் பெண்ணும் முகத்தில் மாஸ்க் அணிந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறி, ஆர்யன் மற்றும் சஞ்சுவை அழைத்துச் செல்ல முதலில் திட்டமிடப்பட்ட காரில் ஏறினார்கள். இதை அறியாத சில ஆண்கள் அந்த தம்பதியை பின் தொடர ஆரம்பித்தனர்.
கார் ஒரு ஆடம்பரமான ரிசார்ட்டை அடைந்ததும், அந்த இருவரும் உள்ளே சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் மாயாவை அழைத்து ரிசார்ட்டின் பெயரையும் இருப்பிடத்தையும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஆர்யன் மற்றும் சஞ்சு பயணத்தின் இரண்டாவது கட்டத்தை முடித்து அடுத்த ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, மாலத்தீவில் தரையிறங்கினர். ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்த ஒரு நம்பகமான நபர் பொதுமக்களின் பார்வையிலிருந்து வெகு தொலைவில் ஒரு தனிமையான, தனியார் சொகுசு ரிசார்ட்டுக்கு அவர்களை காரில் அழைத்துச் சென்றார்.
மூன்று படுக்கையறைகள், ஒரு சமையலறை, ஒரு பரந்த தோட்டம் மற்றும் வெளியாட்களுக்கு அனுமதி இல்லாத கடற்கரை ஆகியவற்றைக் கொண்ட அந்த ரிசார்ட் ஆடம்பரமாக இருந்தது. படுக்கையறைகளில் ஒன்றில் ஒரு தனியார் நீச்சல் குளம் கூட இருந்தது.
ரிசார்டை சுற்றி பார்த்ததும் லேசான இரவு உணவிற்குப் பிறகு, ஆர்யன் மற்றும் சஞ்சு இருவரும் நீண்ட பயணத்தால் சோர்வடைந்து உறங்க சென்றனர்.
பாலி தீவில், ஆர்யனும் சஞ்சுவும் தங்கி இருப்பதாக நம்பிய ரிசார்ட் பற்றிய விவரங்களை ஆழமாக விசாரித்த மாயா, அந்த இடம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இருப்பதை அறிந்து அவள் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.
மறுநாள் காலை, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் அவன் முகத்தைத் தொட ஆர்யன் விழித்தான். அவன் திரும்பி சஞ்சுவைப் பார்த்த போது அவள் கண்கள் சூரிய ஒளியில் லேசாக சுருங்கின.
புன்னகைத்தபடி அவன் அமைதியாக எழுந்து திரைச்சீலைகளை இழுத்து வெளிச்சத்தை மறைத்து, அவளை நீண்ட நேரம் தூங்க அனுமதித்தான். குளித்து முடித்து வெளியே வந்த போது அவள் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டு, “ குட் மார்னிங், நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவனு நினைச்சேன்.” என்றான்.
“நீ எழுந்ததும் நான் கண் முழிச்சிடேன், உன் அரவணைப்பு இல்லாம எனக்கு தூக்கம் வராது.” என்று கண்களைக் கசக்கிக் கொண்டே கூறினாள். ஆர்யன் புன்னகைத்தபடி அருகில் சென்று, “அப்போ கவலைப்படாத. உனக்கு எவ்ளோ நேரம் வேணுமோ அவ்ளோ நேரம் தூங்கலாம் “ என்று சொன்னான்.
“ஹ்ம்ம்… நல்ல பையன்” என்று சஞ்சு கிண்டலடித்ததும், ஆர்யன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, ” ரெடியாகு, இன்னைக்கு என்ன செய்யலாம்னு பிளான் பண்ணுவோம் “ என்றான்.
விரைவில், சஞ்சு ஒரு ஸ்கர்ட் மற்றும் க்ராப் டாப்பில் தயாராகி வெளியேறிய போது ஆர்யன் ஒரு டீ ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து தயாரானான். காலை உணவுக்குப் பிறகு, அவர்கள் மாலத்தீவின் சுற்றுலா மையங்களில் ஒன்றான மாலே அட்டோலுக்குச் சென்றனர். இந்த இடம் அதன் வளமான நீருக்கடியில் வாழும் அழகான மற்றும் துடிப்பான கடல்வாழ் உயிரினங்களுக்கு பிரசித்தி பெற்றது.
” இப்போ நாம் டைவ் அடிப்போம்” என்று ஆர்யன் உற்சாகமாக சொன்னதும், சஞ்சுவின் கண்கள் பயத்தில் விரிந்தன. “என்ன? இல்ல! நிச்சயமா இல்ல!” என்று மறுத்துவிட்டாள் ஆனால் ஆர்யன், “ நாம போறோம், இப்போ போய் டிரஸ் மாத்து “ என்று உறுதியாக சொன்னான்.
“ஆர்யன், எனக்கு பயமா இருக்கு. நாம போக வேண்டாம். வா ரிசார்ட்டுக்குத் திரும்பி போகலாம் ” என்று சஞ்சு சொன்னதும், அவன் மெதுவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டு, ” சஞ்சு, நீ என்னை நம்புரியா ?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
” உன்ன மட்டும் தான் நம்புறேன் ” என்று சஞ்சு சொல்ல, ” அப்போ நான் சொல்றத நம்பு, நீ இத சந்தோஷமா அனுபவிப்ப. இப்போ டிரஸ் மாத்து, உன்ன நான் கூட்டிட்டு போறேன்.” என்று சொன்னான்.
அப்போதும் தயங்கியபடியே டைவிங் உடையில் சஞ்சு தயாரானாள். ஆர்யனின் கையை இறுகப் பற்றிக் கொண்டவள் பதட்டத்தில் நடுங்கினாள். ஆர்யன் அவளுக்கு உறுதியளித்து அருகிலேயே இருந்தான்.
ஆர்யன் சஞ்சுவின் கையை பிடித்துக் கொண்டு நீருக்குள் குதித்ததும் சஞ்சுவின் இதயம் தொண்டை வரை தாவுவதை போல உணர்ந்தாள். ஆனால் மெல்ல மெல்ல பயத்துக்குப் பதிலாக பிரமிப்பு வரத் தொடங்கியது.
மேற்பரப்பிற்கு கீழே, துடிப்பான பவளப்பாறைகள் முடிவில்லாமல் நீண்டிருந்தன, திகைப்பூட்டும் மீன்கள் மற்றும் அழகான கடல் உயிரினங்களால் நிரம்பி வழிந்தன. நீரோட்டத்துடன் மிதவை மெதுவாக அசைந்து, அவள் கண்களை வியப்பில் விரிந்தன.
ஆர்யன் அவளை உன்னிப்பாக கவனித்தான், அவள் அழகில் மயங்கியதைக் கண்டு நிம்மதி அடைந்தான்.
அவர்கள் இறுதியில் மீண்டும் நீருக்கு மேலே தோன்றி படகுக்குத் திரும்பி அவர்களின் உடைக்கு மாறினர்.
” புடிச்சுதா ? ரசிச்சியா ?” என்று ஆர்யன் கேட்டதும், சஞ்சு அவனை அணைத்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து, “ஆர்யன், எனக்கு ரொம்ப புடிச்சுது, ரொம்ப ரசிச்சேன். முதல்ல உயிரே போற மாதிரி பயமா இருந்துச்சு ஆனா அந்த காட்சி……அது சொர்க்கமா இருந்துச்சு. ரொம்ப தேங்க்ஸ்.” என்று உற்சாகமாக சொன்னாள்.
ஆர்யன் அவளை இறுக அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, ” உனக்கு அது புடிக்கும்னு எனக்கு தெரியும்.” என்றான்.
மாலையில் ரிசார்ட்டுக்குத் திரும்பி, விரைவாக புத்துணர்ச்சி பெற்று, தாமதமாக மதிய உணவுக்கு அமர்ந்தனர்.
“சரி, அடுத்து என்ன செய்ய நினைக்குற ?” என்று ஆர்யன் கேட்டதும், ” இன்னைக்கு போதும், நாளைக்கு பிளான் பண்ணலாம் ” என்றாள் சஞ்சு.
” சரி இப்போ வாக்கிங் போகலாம், அப்புறம் டின்னருக்கு திரும்பி வரலாம்.” என்று ஆர்யன் சொன்னதும் சாதாரணமாக ஷார்ட்ஸ், டீசர்ட் அணிந்து கடற்கரைக்கு சென்றார்கள். ஆர்யன் அவள் இடுப்பைச் சுற்றி தன் கையைப் போட்டுக் கொண்டு இருவரும் ஒன்றாக நடந்தார்கள். சூரியன் மறைய தொடங்கி ஆரஞ்சு, இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிற கோடுகளால் வானத்தை வரைந்தது.
சஞ்சு ஆர்யனின் கால்களுக்கு இடையில் அமர்ந்து அவன் மார்பில் சாய்ந்திருக்க, அவன் அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.
” உன் கூட இங்க இருக்குறது ரொம்ப நல்ல இருக்கு, எனக்கு புடிச்சு இருக்கு, ரொம்ப அமைதியா இருக்கு “ என்று சஞ்சு கிசுகிசுத்தாள். அப்போது அவன் அவள் கையை எடுத்து அவள் விரல்களை மென்மையாக முத்தமிட ஆரம்பித்தான்.
“சூரிய அஸ்தமனம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு ” என்று சஞ்சு சொல்ல, “ உன்ன விட அழகு இல்ல ஸ்வீட் ஹார்ட் “ என்றான் ஆர்யன்.
“சீஸி,” என்று அவள் முணுமுணுத்தாள், ஆனால் அவளுடைய புன்னகை அவள் அதை எவ்வளவு விரும்பினாள் என்பதைக் காட்டிக் கொடுத்தது.
” உண்மைய தான் மா சொல்றேன், சரி இப்ப சொல்லு நான் லண்டன்ல இருந்து வாங்கிட்டு வந்தத போடுவியா மாட்டியா ? “ என்று ஆர்யன் கேட்டதும், “ஆர்யன், நான் அதை பேக் செய்யல” என்று கூறினாள்.
” நான் லக்கேஜ்ல வச்சிருக்கேன்” என்றவன் அவள் காதில் தன் உதடுகளை பதித்தான்.
“எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு…” என்று சஞ்சு முணுமுணுத்ததும், “நான் தானே, எனக்காக அத போட மாட்டியா?” என்று கேட்ட போது அவன் குரல் தாழ்ந்து போயிருந்தது.
“கண்டிப்பா போடணுமா ? “ என்று சஞ்சு கேட்டதும், “ இல்ல, உனக்கு சௌகரியமா இல்லனா போட வேணாம் ” என்று ஆர்யன் பதில் சொன்னாள்.
” கோவமா ? “ என்று சஞ்சு கேட்டதும், “இல்ல மா, நான் உன்ன எதுவும் செய்ய கட்டாயப்படுத்த மாட்டேன்.” என்று பதில் சொன்ன ஆர்யன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான், அலைகளின் தாளத்திலும், அந்த நொடியின் வளர்ந்து வரும் நெருக்கத்திலும் இருவரும் தொலைந்து போனார்கள்.
************
முன்னோட்டம்:
” உலகத்துல இருக்கற அத்தனை அழகையும் ஒன்னா சேர்த்தா கூட உன் முன்னாடி தோற்று போயிடும்டி. நீ அவ்ளோ அழகா இருக்க. என்ன அப்படியே கட்டி போட்டு வெச்சுருக்க “
