ஆர்யனும், சஞ்சுவும் சாப்பிட்டு முடித்ததும் சஞ்சு தூக்கக் கலக்கத்துடன் அறைக்குத் திரும்பி ஆர்யனின் மடியில் தலை சாய்த்தாள். ஆர்யன் மெதுவாக அவள் தலைமுடியை வருடி அவளை தூங்க வைத்தான். மணித்துளிகள் மௌனமாகவே கழிந்தன. ஒருவழியாக மூன்று மணி நேரம் கழித்து அவள் விழித்தெழுந்த போது, ஆர்யன் இன்னும் கட்டிலில் சாய்ந்திருப்பதைக் கண்டாள், அவன் கை அவள் தோளில் அவள் தூங்குவதற்கு முன்பு இருந்தது போலவே இருந்தது.
திடுக்கிட்ட சஞ்சு சட்டென எழுந்து உட்கார்ந்து, “ஆர்யன், ஏன் இவ்ளோ நேரம் இப்படியே இருந்த ? என்ன பக்கத்துல படுக்க வெச்சுருக்கலாமே ? “ என்று கேட்டாள். அதற்கு ஆர்யன் கண்களைக் கசக்கிக் கொண்டு தூக்கக் கலக்கத்துடன் அவளைப் பார்த்து, ” ஏன் ? இப்ப என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
” உனக்கு கால் வலிக்கலையா ?” என்று குரலில் கவலை ததும்ப சஞ்சு கேட்க, “இல்ல மா “ என்றான் ஆர்யன். ஆனால் சஞ்சு அவனிடம், “பொய் சொல்லாத ஆர்யன், நீ மூணு மணி நேரமா அசையாம உட்கார்ந்திருக்க அப்புறம் எப்படி உனக்கு வலிக்காம இருக்கும் ? “ என்று கேட்டு முகம் சுளித்தாள்.
“சஞ்சு மா, எனக்கு ஒன்னும் இல்ல. நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருந்தா கூட எனக்கு எந்த வலியும் இருக்காது “ என்றான் ஆர்யன் மெதுவாக. ஆனால் சஞ்சு கோவம் கொண்டு, “வாய மூடு ஆர்யன்.” என்று சொல்லி குனிந்து அவன் கால்களை அழுத்தி வலியை குறைக்க முயன்றாள்.
” பொண்டாட்டி, இப்ப எதுக்கு இதெல்லாம் பண்ற ? இங்க வா ” என்று அவளை இழுத்து அணைத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான். சில நொடிகள் மௌனமாகக் கழிந்தபின் ” நீச்சல் அடிக்கப் போகலாமா?” என்று கேட்டான்.
“எனக்கு நீச்சல் தெரியாது, ஆனா நீ நீந்துறத நான் பார்ப்பேன்.” என்று சஞ்சு முணுமுணுத்தாள்.
“சரி. வா போகலாம்” என்றான் ஆர்யன் புன்னகையுடன்.
ஆர்யன் தனது நீச்சல் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டான், சஞ்சு ஒரு ஜோடி ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப் அணிந்து கொண்டதும் இருவரும் கைகோர்த்தபடி தங்கள் படுக்கையறையை ஒட்டியிருந்த நீச்சல் குளத்தை நோக்கி நடந்தனர்.
குளிர்ந்த நீரில் கால்களை நனைத்தபடி சஞ்சு விளிம்பில் அமர்ந்திருந்தாள். ஆர்யன் குளத்தில் குதித்து அழகாக நீந்தி கடந்தான். அவனது தசைகள் அசைவதையும், அவனது அசைவுகளைத் தொடர்ந்து வரும் நீரின் சிற்றலைகளையும் கண்டு மெய்மறந்து அவள் அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் கணவனின் பார்வையில் நிலைத்திருந்தன.
அவளது பார்வையைக் கவனித்த ஆர்யன் நீந்தி அவளருகே சென்று அவளின் இருபுறமும் தன் கைகளை வைத்து, “ என்ன சைட் அடிக்குறியா ஸ்வீட் ஹார்ட் ? “ என்று கேட்டு கிண்டல் செய்தான். சஞ்சு உடனே, “ நான் ஆமாம்னு சொன்னா என்ன செய்வ ?” என்று ஒரு விளையாட்டுத்தனமான புன்னகையுடன் பதிலளித்தாள்.
“ஹ்ம்ம், நல்ல தைரியம் தான் ” என்று ஆர்யன் சொல்ல, ” என் புருஷன நான் சைட் அடிக்குறேன், உனக்கு என்ன வந்துச்சு ? “ என்று கேட்டாள்.
” பாருடா, என் பொண்டாட்டி இவ்ளோ பேசுவாளா ? “ என்று ஆர்யன் ஆச்சரியமாக கேட்க, ” இதுவும் பேசுவேன், இதுக்கு மேலையும் பேசுவேன் “ என்றாள் சஞ்சு குறும்புடன். அதற்கு ஆர்யன் மேலும் நெருங்கி, “அப்படியா? அப்போ பேசுற இந்த வாய்க்கு ஏதாச்சும் தரணுமே “ என்றான்.
” ஒன்னும் வேணாம், போய் நீச்சல் அடி” என்று சிரித்தபடி அவனை தள்ளிவிட முயன்றாள் ஆனால் ஆர்யன் அவள் கையை பிடித்துக் கொண்டு, “ ப்ளீஸ் வாடி “ என்று கண்களை சுருக்கி அவளை அழைத்தான் ஆனால் சஞ்சு மீண்டும் மறுத்துவிட்டாள். உடனே ஆர்யன், “ நீ இப்படியெல்லாம் சொன்னா கேட்க மாட்ட “ என்று சொல்லி அவள் எதிர்வினையாற்றும் முன், அவன் அவளை தண்ணீருக்குள் இழுத்தான்.
சஞ்சு அவன் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டு அவன் தோளில் முகம் தேய்த்து நீரைத் துடைத்து, “ ஏன்டா இழுத்த ?” என்று கேட்டாள்.
“ நீ டா சொல்லி பேசும் போது ஒரு மாதிரி நல்லா இருக்கு “, என்று ஆர்யன் சொல்ல, “ இருக்கும் இருக்கும், அய்யோ தண்ணி சில்லுனு இருக்கு “ என்று சஞ்சு நடுங்கினாள்.
” அப்போ சூடேத்தலாம் வா “ என்று கிசுகிசுத்த ஆர்யன் தன் கையை அவள் கழுத்துக்குப் பின்னால் நகர்த்தி அவளை மென்மையாக முத்தமிட இழுத்தான். அவன் அவளது கீழ் உதட்டைக் கடிக்க, அவள் சரணடைந்து அவனை ஆழமாக முத்தமிட்டாள். அவர்களின் நுரையீரல்கள் காற்றுக்காக கெஞ்சும் வரை அவர்களின் உதடுகள் சரியான ஒத்திசைவில் அசைந்தன. பின்னர் மெதுவாக பிரிந்து, ஒருவரையொருவர் நெருக்கமாக அணைத்துக்கொண்டனர்.
அவளது ஈரமான உடை அவளது உடலுடன் ஒட்டிக்கொண்டு, ஒவ்வொரு வளைவையும் கோடிட்டுக் காட்டியது. ஆர்யன் அவளை இரு கைகளில் அள்ளி தண்ணீருக்கு வெளியே தூக்கினான், அவன் கண்கள் அவள் உடலை மேய்ந்தன.
“ஏய், என்ன அப்படிப் பார்க்காத,” என்று சஞ்சு வெட்கப்பட்டதும், ” இவ்ளோ மாசம் ஆச்சு ஆனா இன்னும் வெட்கப்படுறடி நீ “ என்று ஆர்யன் கேட்டான். அதற்கு “ நான் என்ன பண்றது, அப்படி ஆகுது “ என்றாள் சஞ்சு.
“ஆனா எனக்கு இது புடிச்சு இருக்கு “ என்று சொல்லி ஆர்யன் குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
” எவ்ளோ நேரம் இங்க இருக்க போறோம் ? ரொம்ப குளிருது.” என்று சஞ்சு மெல்லிய குரலில் சொன்னதும், “வா போகலாம்.” என்று அவன் அவளை நீச்சல் குளத்திலிருந்து வெளியே தூக்கி மெதுவாக சன் லவுஞ்சரில் படுக்க வைத்தான். ” இங்கேயே இரு நான் திரும்பி வருவேன்.” என்று சொல்லிவிட்டு சென்றவன் சில நிமிடங்களுக்குப் பிறகு, குளியல் தொட்டியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிவிட்டு திரும்பி வந்தான். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவளைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்றான்.
” கொஞ்சம் சூடான தண்ணியில குளிப்போம்” என்று அவன் சிரித்தபடி சொன்னதும், ” பிளான் போட்டுட்ட கேடி ” என்று கேட்டாள் சஞ்சு.
“உனக்கு இது வேண்டாமா?” என்று ஆர்யன் கிசுகிசுக்க, “ வேணாம்னு நான் சொல்லலையே “ என்று பதில் அளித்தாள்.
ஆர்யன் புன்னகையுடன் அவளை தொட்டியில் படுக்க வைத்தான். ஈர ஆடைகளை களைந்துவிட்டு தொட்டியில் அவளுக்கு பின்னால் அமர்ந்து அவள் கழுத்தின் பின்புறத்தை முத்தமிட்டு, அவள் கன்னத்தை கடித்து, வெதுவெதுப்பான நீரில் அவளை மென்மையாக மசாஜ் செய்தான்.
அவர்களின் அன்னியோன்னிய கணங்கள் ஷவருக்கு கீழ் தொடர்ந்தது. இருவரும் குளித்து முடித்த பின்னர் அவளைச் சுற்றி ஒரு துண்டையும் தன்னைச் சுற்றி மற்றொரு துண்டையும் கட்டிக்கொண்டு அவளை மீண்டும் அறைக்கு தூக்கிச் சென்றான்.
” எனக்கு தூங்கனும் “ என்று சஞ்சு முணுமுணுத்ததை கேட்ட ஆர்யன், “ டின்னர் ரெடியா இருக்கும், சாப்பிட்ட அப்புறம் தூங்கலாம்.” என்று கூறினான் ஆனால் சஞ்சு. “இல்ல எனக்கு வேணாம் “ என்று மறுத்தாள்.
“நீ சாப்பிடலனா நான் உன்ன தொட மாட்டேன் சஞ்சு. நீ ஆரோக்கியமா இருக்குறது தான் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம் அதனால ஒழுங்கா சாப்பிடு “ என்று ஆர்யன் பேச ஆரம்பித்ததும் சஞ்சு அவனை தடுத்து, “ அய்யோ ஆர்யன், நான் சாப்பிடுறேன், தயவு செஞ்சு அட்வைஸ் பண்றத நிறுத்து “ என்றாள்.
“நல்ல பொண்ணு. இப்போ வா “ என்று ஆர்யன் சொன்னான் ஆனால் சஞ்சு அவனை முறைத்தாள். “என்ன?” என்று ஆர்யன் குழப்பத்துடன் கேட்க, “ இது என்ன கேள்வி ? என்ன தூக்கிட்டு போ “ என்றாள் சஞ்சு.
ஆர்யன் புன்னகையோடு இரவு உணவை சாப்பிட அவளை தூக்கி சென்றான்.
அடுத்த நாள், அவர்கள் ப்ளூ பவுல்ஸ் சர்ஃபிங் பாயிண்டைப் பார்வையிட்டனர். சஞ்சு கரையில் அமர்ந்து ஆர்யன் சாமர்த்தியமாக அலைகளின் மீது சறுக்கிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ இவருக்கு என்ன தான் தெரியாது, எல்லாமே பண்றாரு பா “ என்று பிரமித்துப் போனவள் அவனுக்கு கரையில் இருந்தபடியே அவனுக்கு திர்ஷ்டி எடுத்தாள்.
அன்றைய தினம் முழுவதும் இருவரும் அரட்டை அடித்தனர், கடற்கரையில் வாக்கிங் சென்றனர் மற்றும் கொஞ்சம் ஷாப்பிங் செய்தனர். அவர்களின் தேனிலவு நாட்கள் அன்றிரவு ரொமான்ஸ் உடன் முடிவுக்கு வந்தது. அடுத்த நாள் காலையில், இருவரும் வீட்டிற்கு திரும்பிச் செல்லத் தயாராக இருந்தனர்.
சஞ்சு எழுந்து தங்கள் சாமான்களை பேக் செய்யத் தொடங்கினாள். இருவரும் விரைந்து தயாராகி ரிசார்ட்டை விட்டு வெளியேறி, விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் காரில் ஏறினார்கள்.
இதற்கிடையில், பாலி தீவில் இருந்த ரிசார்ட்டில் ஆர்யன் மற்றும் சஞ்சுவின் இடத்தில் நடித்த தம்பதியினர், மாஸ்க் எதுவும் அணியாமல் சாதாரணமாக வெளியேறினர். ரிசார்ட் வாயிலில் நின்றிருந்த மாயாவின் ஆட்கள், அறிமுகமில்லாத ஜோடி வெளியேறுவதை அதிகம் கவனிக்கவில்லை. திருப்தியடைந்த அவர்கள், ஆர்யனும் சஞ்சுவும் இன்னும் உள்ளே இருப்பதாக நினைத்த போது அந்த தம்பதியினர் ஒரு காரில் ஏறி யாருக்கும் தெரியாமல் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஆர்யனும் சஞ்சுவும் பாலியில் உள்ள தனியார் விமான தளத்தை அடைந்து ஆர்யனின் தனியார் ஜெட் விமானத்தில் ஏறினர். சில மணி நேரம் கழித்து அவர்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அவர்களுக்காகக் ரஞ்சித் காத்திருந்தான்.
ஆர்யன் ஜெட்டில் இருந்து இறங்கியதும், ரஞ்சித்திடம் சென்று, “என் மொபைல் கொடு” என்றான். ரஞ்சித் அதை ஒப்படைக்க, ஆர்யன் அதை ஆன் செய்தான். உடனே சென்னையில் ஆர்யனின் போன் சிக்னலை மாயாவின் ஆட்கள் கண்டுபிடித்து மாயாவுக்கு போன் செய்து, “ஆர்யன் மொபைல் சிக்னல் சென்னை ஏர்போர்ட்ல இருக்கு” என்றான்.
மாயாவின் கண்கள் அதிர்ச்சியில் சுருங்கின. “கண்டிப்பா சொல்றியா ? ” என்று அவள் கேட்க, “ஆமாம் மேடம். அவர் திரும்பி வந்துட்டாரு.” என்றான் அவன்.
நேரத்தை வீணாக்காமல் மாயா ராஜேஷை அழைத்து ஆர்யன் இருக்கும் இடத்தை அறிய முயற்சி செய்ய சொன்னாள். சென்னை திரும்பிய ஆர்யனும், சஞ்சுவும் காரில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.
இதற்கிடையில், ராஜேஷ் ரஞ்சித்தை அழைத்து, “ ரஞ்சித், எங்க டீம் ஏ.ஆர்.சி.ல வேலைக்கு வர இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு. அவங்க வேலை செய்ய இடம் ரெடியா இருக்கா ? “ என்று சாதாரணமாக கேட்பது போல ஆரம்பித்தான்.
“ஆமா ராஜேஷ். எல்லாம் ரெடி” என்றான் ரஞ்சித் நிதானமாக.
” ரொம்ப நல்லது, ஆர்யன் சார் எப்போ வருவாரு ?” என்று ராஜேஷ் விசாரித்தான். அதற்கு ரஞ்சித், “ சார் வந்துட்டாரு ராஜேஷ். நாளைக்கு ஆபீஸ் வருவாரு “ என்று புன்னகையோடு பதில் சொன்னான்.
ரஞ்சித்தின் பதிலை கேட்டு ராஜேஷின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. ” ஒஹ் சரி ரஞ்சித். நன்றி.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
ரஞ்சித் தனது மொபைலை பார்த்து, “ மவனே எங்க கிட்டயேவா “ என்று மனதில் நினைத்து சிரித்தான்.
ராஜேஷ் மாயாவை அழைத்து, “ மேடம் ஆர்யன் ஏற்கனவே வீட்டுக்கு வந்துட்டாரு. நாளைக்கு ஆபீஸ் வருவாருனு ரஞ்சித் சொன்னான் “ என்று சொன்னதும், “என்னது? நான் இந்த ரிசார்ட்டுல ஒரு கைதி மாதிரி அடைஞ்சு இருந்து அவர பத்தி தகவல் தெரிஞ்சிக்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ஆனா நீ அவர் வீட்டுக்கு போயிட்டாருன்னு சொல்ற ?” என்று கத்தினாள் மாயா.
“ஆமாம் மேடம். ரஞ்சித் கிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ணேன் “ என்று ராஜேஷ் சொன்னதும் கோவத்தில் எரிந்து கொண்டிருந்த மாயா, ” நான் சென்னை திரும்பி வர இப்போ உடனே ஏற்பாடு செய் “ என்று உத்தரவிட்டாள்.
அதிகாலையில் மாயா வீடு திரும்பி ஏ.ஆர்.சி.க்கு செல்ல தயாரானாள். அவள் டைனிங் ஹாலுக்கு சென்ற போது சந்திரசேகர் ஏற்கனவே அவளுக்காக அங்கு காத்திருந்தார்.
“மாயா என்ன நடக்குது ?” என்று சந்திரசேகர் கேட்டதும், ” ஒண்ணுமில்ல பா” என்று அவர் முகத்தை கூட பார்க்காமல் பதில் சொன்னாள் மாயா. பெருமூச்சு விட்ட சந்திரசேகர், “ மாயா, நான் சொல்றத மட்டும் கேக்குறியா ? ஆர்யனுக்கு எதிரா நீ ஒரு முட்டாள்தனமான விளையாட்ட விளையாடுறனு உனக்குத் புரியலையா ?” என்று அவளிடம் கேட்டார். அதற்கு மாயா உடனே, “ “அப்பா, இப்போதைக்கு நீங்க அமைதியா இருக்குறது தான் நல்லது.” என்று தீர்மானமாக சொன்னாள்.
“உனக்காக எல்லாம் செய்ய நான் தயாரா இருக்கேன் மாயா. உனக்கு சுலபமா இருக்கணும்னு தான் நரேன இங்க இருந்து அனுப்பினேன். நீ ஏன் நான் சொல்றத கேட்க மாட்டேங்குற ?” என்று கேட்ட சந்திரசேகரின் குரல் தணிந்து இருந்தது.
“நான் ஏ.ஆர்.சிக்கு போறேன்,” என்று சொல்லிவிட்டு மாயா அங்கிருந்து எழுந்தாள். அப்போது சந்திரசேகர் அவளிடம், “ இப்ப ஏன்? நாளை மறுநாள் வரை நம்ம பிசினஸ் ஆரம்பிக்க போறதில்ல அங்க “ என்று சொன்னார்.
“எனக்குத் தெரியும். நான் ஆர்யன சந்திக்கப் போறேன்.”, என்று மாயா சொன்னதும், சந்திரசேகர் புருவத்தை உயர்த்தி, “அவன் உன்ன சந்திப்பான்னு நினைக்குறியா ?” என்று கேட்டார்.
“நான் இன்னைக்கு அவர சந்திப்பேன் ” என்று அவள் பதிலளித்து கதவை அறைந்துவிட்டு வெளியேறினாள்.
ஏ.ஆர்.சி.யில், ஆர்யனும் சஞ்சுவும் ஏற்கனவே அலுவலகத்தை அடைந்தனர். ஆர்யன் நிலுவையில் இருந்த வேலைகளின் குவியலில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான். 42-வது மாடியில் சஞ்சுவும், பிரதீப்பும் ஐடி அமைப்பை மேற்பார்வையிட்டு வந்தனர்.
மாயா ரிசப்ஷனை அடைந்ததும், “ஹலோ மேடம்,” என்று ரிசப்ஷனிஸ்ட் பணிவுடன் வரவேற்றார்.
“நான் ஆர்யன சந்திக்கனும் ” என்று மாயா நேரடியாக சொன்னதும், “ஸாரி மேடம். பாஸ்ஸை சந்திக்க ரஞ்சித் சார் மூலமா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும் ” என்று ரிசப்ஷனிஸ்ட் பணிவுடன் பதில் அளித்தார். அதை கேட்டதும் மாயாவின் தாடை இறுகியது. அவள் மொபைலை எடுத்து ரஞ்சித்தை அழைத்த போது அவன் ஆர்யனின் அறையில் இருந்தான்.
காலர் ஐடியைப் பார்த்த ரஞ்சித், “சார், மாயா போன் பண்றா ” என்று ஆர்யனிடம் தெரியப்படுத்தினான்.
” பதில் சொல்லி ஸ்பீக்கர் ஆன் பண்ணு ” என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் அப்படியே செய்து, “ஹலோ மிஸ் மாயா” என்று அமைதியாக சொன்னான்.
“ரஞ்சித், நான் உங்க ரிசப்ஷன்ல இருக்கேன். நான் ஆர்யன சந்திக்க விரும்புறேன்.” என்று அவள் சொல்ல, “ஸாரி மிஸ் மாயா. நீங்க எதுக்காக அவர சந்திக்கனும்னு நான் தெரிஞ்சிக்கலாமா “ “ என்று கேட்டான் ரஞ்சித்.
“அது உனக்கு தேவையில்லாத விஷயம், நான் அவர சந்திக்கனும். நான் அவர சந்திக்காம இங்க இருந்து போக மாட்டேன்.” என்று மாயா சொன்னதும், “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மாயா. சார் கிட்ட பேசிட்டு சொல்றேன் “ என்று சொல்லி ரஞ்சித் அழைப்பை மியூட் செய்து ஆர்யனைப் பார்த்து, “சார், அவ ஏதோ டிராமா பண்ண வந்த மாதிரி இருக்கு “ என்று கூறினான்.
ஆர்யன் இருக்கையில் பின்னால் சாய்ந்து, “அவள கூட்டிட்டு வா அப்புறம் சஞ்சனா எங்க ?” என்று கேட்டான்.
“அவ பிரதீப் கூட 42வது மாடியில இருக்கா ஆனா சீக்கிரம் திரும்பி வருவா “ என்று ரஞ்சித் பதில் சொன்னான்.
“அவள கூப்பிடு. சஞ்சு இல்லாம மாயாவ நான் சந்திக்க விரும்பல.” என்று ஆர்யன் சொன்னதும், ரஞ்சித் தலையசைத்து, சஞ்சுவுக்கு டயல் செய்து, அவளை உடனடியாக ஆர்யனின் அறைக்கு வரச் சொன்னான். அதன் பிறகு, மாயாவை மீண்டும் அழைத்து, “ மாயா, ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க உங்கள கூட்டிட்டு வர நான் வரேன் “ என்று சொன்னான்.
மாயா கைகளைக் கட்டிக்கொண்டு அவன் வருகைக்காக உறுதியாக நின்றாள்.
சில நிமிடங்கள் கழித்து ரிசப்ஷனுக்கு வந்த ரஞ்சித், அவளை பின்தொடரும்படி சைகை செய்தான். மாயா தன் ஆடையைச் சரி செய்து கொண்டு ஆர்யனை சந்திக்க ரஞ்சித்தை பின்தொடர்ந்து சென்றாள்.
***********
முன்னோட்டம்:
“கம்பெனியில வேலை செய்ற யாராச்சும் வன்முறையில ஈடுபட்டா இல்ல தகாத முறையில் நடந்துகிட்டா அவங்களுக்கு வேலை போகும். அதுவே பார்ட்னர்ஷிப் கையெழுத்து போட்டவங்க அது மாதிரி காரயத்துல ஈடுபட்டா அப்போ பார்ட்னர்ஷிப் ரத்தாகி பாதிக்கப்பட்டவங்களுக்கு பிசினஸ் மொத்தமாக சொந்தமாகும் அதோட அவங்களுக்கு நூறு கோடி இழப்பீடும் கொடுக்கணும்னு அக்ரீமன்ட்ல தெளிவா போட்டு இருக்கு மாயா. எதுவும் பைத்தியாக்கரத்தனமா பண்ணாம முதல்ல அங்கிருந்து கிளம்பு “
