ஆர்யனின் அறைக்குள் நுழைந்த சஞ்சு, அவன் அமைதியாக அமர்ந்து, லேப்டாப்பில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். “மாயா வர்றதா சொல்லி உண்மையா ரஞ்சித் அண்ணா என்ன வர சொன்னாரா?” என்று ஒரு கணம் திகைத்து நின்றாள். மாயாவின் வருகையால் ஆர்யன் மோசமான மனநிலையில் இருப்பான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் கவலைப்படாமல் வேலையில் கவனம் செலுத்தினான். தன் எண்ணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சஞ்சு அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.
“ஆர்யன், என்ன நடக்குது?” என்று தலையை லேசாக சாய்த்தபடி சஞ்சு கேட்டதும், ஆர்யன் மெல்லிய புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்து, ” ஒன்னும் நடக்கல மா, உன்னோட பிசினஸ் பார்ட்னர் தான் இங்க வந்துருக்க மாதிரி தெரிஞ்சிது அதனால நான் உன்ன வர சொன்னேன் “ என்று சொல்லி வசதியாக பின்னால் சாய்ந்தான்.
சஞ்சு முகம் சுளித்து, “அவ உன்ன சந்திக்க விரும்பி இருக்கா ஆனா நீ கொஞ்சம் கூட பதற்றம் இல்லாம இருக்க ” என்று கேட்டவளின் குரலில் ஆச்சரியம் இருந்தது.
“அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று ஆர்யன் அமைதியாக பதிலளித்த போது அவனது குரல் தளரவில்லை.
சஞ்சு சற்று முன்னால் குனிந்து குரலைத் தாழ்த்தி, “நீ சொல்றதும் சரி தான். இப்போ என்ன நாடகம் போடப் போறானு தெரியல.” என்று கூறினாள். அதை கேட்ட ஆர்யன், “அவ ஒன்னும் செய்ய மாட்டா ” என்று முழு நம்பிக்கையுடன் கூறினான்.
“எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற ?” என்று கேட்டு அவள் கண்களைச் சுருக்கினாள்.
ஆர்யன் அவளை அறிந்த பார்வை பார்த்தான். “அவ அப்பாவ பத்தி எனக்கு நல்லா தெரியும் அதனால அவ எதையும் செய்ய முயற்சிக்க மாட்டா. நீ பொறுத்திருந்து பாரு” என்று சொன்னான்.
மாயா ரிசப்ஷன் ஏரியாவில் உட்கார்ந்து பொறுமையிழந்து தரையில் கால் தட்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய மொபைல் இடைவிடாமல் சிணுங்கியதும் திரையில் ராஜேஷின் பெயர் மீண்டும் மீண்டும் ஒளிர்ந்தது. ஒரு விரக்தியடைந்த பெருமூச்சுடன், அவள் இறுதியாக பதிலளித்து, “ஏன் திரும்பத் திரும்ப போன் பண்ணிட்டே இருக்க ?” என்று முனகினாள்.
“மேடம் ப்ளீஸ். சார் உங்ககிட்ட பேசணும் சொன்னாரு ” என்று பதட்டத்துடன் பதில் சொல்லிவிட்டு போனை சந்திரசேகரிடம் கொடுத்தான் ராஜேஷ்.
“அப்பா, கொஞ்ச நேரம் என்ன நிம்மதியா இருக்க விடுறீங்களா?” என்று மாயா முனகினாள். அவள் வார்த்தையை கேட்ட சந்திரசேகர், “மாயா, முட்டாள்தனமா எதுவும் செய்யாத. அங்கிருந்து கிளம்பு” என்று உறுதியான குரலில் எச்சரித்தார். ஆனால் மாயா, “இல்ல, மாட்டேன். இன்னிக்கு ஆர்யன நான் கேள்வி கேட்டே ஆகணும் ” என்று தீர்மானமாக அறிவித்தாள்.
“மாயா, நீ ஒரு பார்ட்னர்ஷிப் காண்ட்ராக்ட்ல கையெழுத்து போட்டிருக்கனு ஞாபகம் இருக்கா ?” என்று சந்திரசேகர் கேட்க, “எனக்கு ஞாபகம் இருக்கு ” என்று திமிருடன் பதில் சொன்னாள்.
” உனக்கு ஞாபகம் இருந்தா, அதுல குறிப்பிட்டு இருக்க ஒவ்வொரு உட்பிரிவையும் நான் உனக்கு ஞாபகப்படுத்தனும்னு நீ எதிர்ப்பார்க்காத “ என்று கூர்மையான குரலில் கூறினார்.
“இப்ப என்ன? சீக்கிரம் சொல்லுங்க பா” என்று மாயா சொன்னதும், சந்திரசேகர் கொஞ்சமும் தயங்கவில்லை. ““கம்பெனியில வேலை செய்ற யாராச்சும் வன்முறையில ஈடுபட்டா இல்ல தகாத முறையில் நடந்துகிட்டா அவங்களுக்கு வேலை போகும். அதுவே பார்ட்னர்ஷிப் கையெழுத்து போட்டவங்க அது மாதிரி காரயத்துல ஈடுபட்டா அப்போ பார்ட்னர்ஷிப் ரத்தாகி பாதிக்கப்பட்டவங்களுக்கு பிசினஸ் மொத்தமாக சொந்தமாகும், அதோட அவங்களுக்கு நூறு கோடி இழப்பீடும் கொடுக்கணும்னு அக்ரீமன்ட்ல தெளிவா போட்டு இருக்கு மாயா. எதுவும் பைத்தியாக்கரத்தனமா பண்ணாம முதல்ல அங்கிருந்து கிளம்பு “ என்று காண்ட்ராக் விதியை அவளுக்கு கூறினார்.
தன் தந்தை சொன்னதை கேட்டதும் மாயாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. இவ்வளவு கடினமான விதி இருக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“இத ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என்று நம்ப முடியாமல் தணிந்த குரலில் மாயா கேட்க, “பெரிய அளவுல பிசினஸ் அக்ரீமன்ட் போடும் போது இது மாதிரி உட்பிரிவு இருக்குறது ரொம்ப சாதாரணமான விஷயம். இது ஏதோ சாதாரண பார்ட்னர்ஷிப் இல்ல மாயா. இப்போ உடனே கிளம்பு, இது உன்னோட நல்லதுக்கு மட்டும் இல்ல நம்ம பிசினஸுக்கும் அது தான் நல்லது “ என்று சந்திரசேகர் வற்புறுத்தினார்.
” சரி வரேன்” என்று முணுமுணுத்தவள் அழைப்பை துண்டிக்கும் போதே ரஞ்சித் அருகில் வந்து அவள் காத்திருப்பதை பார்த்தான்.
“மாயா, போகலாமா?” என்று ரஞ்சித் கேட்டதும், சரி என்று மெல்லிய குரலில் சொன்னாள் மாயா. அவளிடம் ஏதோ வித்தியாசம் இருந்தது, அவள் அமைதியாக, அதிக நிதானத்துடன் பேசி நடந்தாள் ஆனால் ரஞ்சித் அதை பற்றி கேள்வி கேட்கவில்லை. அவன் வெறுமனே தலையசைத்து அவளை ஆர்யனின் தளத்திற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆர்யனின் அறையை அடைந்ததும், ரஞ்சித் மெதுவாக கதவைத் தட்டினான்.
உள்ளே, ஆர்யன் சஞ்சுவைப் பார்த்துவிட்டு, குரலை உயர்த்தி, “ கம் இன் “ என்று சொன்னதும் ரஞ்சித் முதலில் நுழைந்தான் அதன் பின்னர் மாயா அவனை பின்தொடர்ந்தாள்.
மாயா உள்ளே நுழைந்ததும் அவள் பார்வை அறையை ஆராய்ந்தது. ஆர்யன் தனது நாற்காலியில் நம்பிக்கையுடன் அமர்ந்திருக்க, சஞ்சனா அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தாள். மாயா மெதுவாக மூச்சை இழுத்துவிட்டு, ஆர்யனைப் பார்த்தாள், அவளுடைய விரக்தி நம்பிக்கையின் முகமூடிக்குப் பின்னால் மறைக்கப்பட்டது.
“ஹலோ ஆர்யன்” என்று மாயா நிதானமாக சொல்ல, ” ஹலோ, உட்காருங்க மிஸ் மாயா,” என்று ஆர்யன் பதிலளித்தான், அவனது தொனி குளிர்ச்சியாகவும் அதிகாரமாகவும் இருந்தது. ” என்னோட ஆபீஸ்ல யாரும் எந்தவிதமான தொழில்முறையற்ற தன்மையோட நடந்துக்குறத நான் அனுமதிக்க மாட்டேன். பிசினஸ் சம்மந்தமான விஷயமா இருந்தா நீங்க பிரதீப் கிட்ட பேசி இருக்கணும். இப்போ என்ன சந்திக்க விரும்பினது ஏன் ? எதுவா இருந்தாலும் சுருக்கமா சொல்லி முடிங்க, எனக்கு நேரம் இல்ல.” என்று ஆர்யன் உறுதியான குரலில் அதிகார தொனியில் சொன்னான்.
“ஆர்யன், நீங்க விடுமுறையில இருந்து திரும்ப வந்துட்டதா கேள்விப்பட்டேன். பிசினஸ் தான்டி நம்ம குடும்பதுக்கு நடுவுல ஒரு நட்பு இருக்கு அதனால நானும் அப்பாவும் உங்களையும் சஞ்சனாவையும் டின்னருக்கு கூப்பிடலாம்னு நினைச்சோம்” என்றவளின் குரல் தழுதழுத்தது.
” நீங்க அழைப்பு கொடுத்ததுக்கு நன்றி, மிஸ் மாயா, ஆனா நான் இப்போ தான் விடுமுறையில இருந்து திரும்பி வந்துருக்கேன் அதனால ரொம்ப பிஸியா இருக்கேன். அதோட உங்க காஸ்மெடிக் பிசினஸ் தொடங்க போகுது அதனால இப்போ சஞ்சனாவும் பிஸியா இருக்கா. நேரம் இல்ல, இருந்தாலும் நான் யோசிச்சு ரஞ்சித் மூலமா தெரியப்படுத்துறேன். உங்க அப்பாவ கேட்டதா சொல்லுங்க “ என்று ஆர்யன் கூறினான். அதற்கு மாயா உடனே, “ஹ்ம்ம் சரி ஆர்யன். சீக்கிரம் உங்கள சந்திக்க வெயிட் பண்றேன் ” என்று சொல்லி வலுக்கட்டாயமாக புன்னகைத்தாள்.
“வேற ஏதாவது சொல்லனுமா ?” என்று குறிப்பாக ஆர்யன் கேட்க, “ ஒண்ணுமில்ல “ என்று பதில் சொன்னாள் மாயா.
“அப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு “ என்று தன் நேரம் முடிந்துவிட்டது என்பதை மறைமுகமாக உணர்த்தினான் ஆர்யன்.
“நான் கிளம்பறேன். பை.” என்று சொல்லி மாயா எழுந்து நின்று சஞ்சுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள். ரஞ்சித் மௌனமாக அவளைப் பின்தொடர்ந்து, அவளை லிஃப்டுக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்குள் சஞ்சு உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள். அவளது மயக்கத்தை கவனித்த ஆர்யன் தன் விரல்களை அவள் முன் சொடுக்கினான்.
“சஞ்சு ” என்று அவன் அழைத்ததும், அவள் கண் சிமிட்டி அவனைப் பார்த்தாள். “இப்ப என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“அவ நம்ம ரெண்டு பேரையும் டின்னருக்கு கூப்பிட வந்தா “ என்று ஆர்யன் லேசாக தோள்களைக் குலுக்கியபடி சொன்னான். அதை கேட்டதும், “ஆர் யூ சீரியஸ்?” என்று சஞ்சு குழப்பத்துடன் கேட்டாள்.
“நீ கேட்டுட்டு தானே இருந்த ? “ என்று ஆர்யன் சொல்ல, ” இப்படி டின்னருக்கு கூப்பிட தான் உன்ன சந்திக்க அப்படி ஒரு டிராமா பண்ணாலா ? “ என்று நம்ப முடியாமல் கேட்டாள் சஞ்சு.
“சஞ்சு, அவ அக்ரீமன்ட்ல இருக்க விதி தெரியாம வந்துருப்பா ஆனா இங்க வந்த அப்புறம் அவ அப்பா சொல்லி இருப்பாரு அதனால அவ குரலை மாத்தி இப்படி பணிவா பேசிட்டு போறா ” என்று கூலாக பதிலளித்தான் ஆர்யன்.
“ஹ்ம்ம் ரொம்ப தந்திரசாலி” என்று முணுமுணுத்தாள் சஞ்சு.
“அவ அப்படி தான், நீ அவகிட்ட கூடுதல் எச்சரிக்கையா இருக்கனும். பிரதீப் அவள சமாளிப்பான், ஆனாலும் கவனமா இரு” என்று அறிவுரை கூறினான் ஆர்யன்.
“ஹ்ம்ம், சரி. நீ உன் வேலைய பாரு நான் இப்ப கிளம்புறேன். கீர்த்தி இன்னைக்கு வருவா. பவி வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அவள வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொல்லி ரஞ்சித் அண்ணாகிட்ட சொல்லி இருக்கேன்.” என்று சொல்லி சஞ்சு எழுந்து நின்று அவனை நோக்கி நகர்ந்து அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள். ஆர்யன் அவள் உதட்டில் மென்மையாக முத்தமிட்ட பிறகு சஞ்சு வெளியேறினாள்.
மேன்ஷனுக்கு திரும்பிய சஞ்சு புத்துணர்ச்சி பெற்று ஆடைகளை மாற்றிக்கொண்டு, கீர்த்தியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள். காவலர்களில் ஒருவர் காரை மாளிகை வளாகத்திற்குள் செலுத்தியபோது, ஹார்ன் சத்தம் கேட்டு லிவிங் அறையில் காத்திருந்த சஞ்சு, எதிர்பார்ப்பில் முகம் பிரகாசிக்க, பிரதான கதவை நோக்கி விரைந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது தோழியை பார்த்த மகிழ்ச்சியில் மூழ்கிய சஞ்சு, கீர்த்தியை இறுக அணைத்துக் கொண்டாள். இருவரின் கன்னங்களிலும் கண்ணீர் உருண்டோடி உணர்ச்சிகள் தாராளமாக கொட்டியது.
“கீர்த்தி, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் “ என்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் சஞ்சு. “நானும், உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் சஞ்சு ” என்று உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தாள் கீர்த்தி.
அவர்கள் லிவிங் அறை சோபாவில் அமர்ந்து இன்னும் தங்கள் கண்ணீரின் ஊடே புன்னகைத்தனர். அப்போது தின்பண்டங்கள் மற்றும் ஜூஸ் கொண்டு வந்த கௌசல்யா, கீர்த்தியைப் பார்த்ததும் அவரது முகம் பிரகாசித்தது.
உடனே சஞ்சு, “கீர்த்தி, இவங்க தான் கௌசல்யா மா” என்று அறிமுகப்படுத்தினாள்.
கௌசல்யா ஒரு கனிவான புன்னகையை உதிர்த்துவிட்டு, ” வா மா கீர்த்தி, ஒரு வழியா உன்ன சந்திச்சதுல சந்தோஷம் “ என்று கூறினார்.
நண்பர்கள் இருவரையும் பேச்ச விட்டு கௌசல்யா அமைதியாக சமையலறைக்குச் சென்று இரவு உணவை சமைக்க தொடங்கினார்.
சஞ்சு கீர்த்தியின் பக்கம் திரும்பி “கீர்த்தி, அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டதும், “ எல்லாரும் நல்லா இருக்கோம் சஞ்சு. நீயும், ஆர்யன் அண்ணாவும் எப்படி இருக்கீங்க ?” என்று கீர்த்தி சஞ்சுவின் கையை தடவியபடி கேட்டாள்.
“நாங்க நல்லா இருக்கோம் கீர்த்தி. வாழ்க்க ரொம்ப நல்லா போகுது, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ” என்று சொன்ன சஞ்சுவின் குரலில் திருப்தி தொனித்தது.
“உனக்காக நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சஞ்சு, ஆர்யன் அண்ணா தான் உனக்கு சரியான ஜோடினு எனக்குத் தெரியும்.” என்று கீர்த்தி சொன்னதும், “ ஏன்டி, நீ கூட என்கிட்ட எதுவுமே சொல்லாம இருந்துருக்க ? “ என்று சஞ்சு அவளை விளையாட்டாக முறைத்தாள். அதற்கு கீர்த்தி அவளிடம், “ இல்ல பா, ஆர்யன் அண்ணா தான் சொல்ல வேணாம்னு சொன்னாரு. அவரே உன்கிட் வந்து பேசி அவர பத்தி சொல்ல நெனச்சாரு ஆனா அதுக்குள்ள நிறைய நடந்துடுச்சு “ என்று வருத்தமாக சொன்னாள்.
“எனக்குப் புரியுது” என்று தலையசைத்த சஞ்சு, “ஆனா இப்போ மறுபடியும் நான் உன்கூட இருக்க போறேன்னு சந்தோஷமா இருக்கு “ என்று கூறினாள்.
” இதுக்கும் அண்ணா தான் காரணம், இனிமே நாம் ஒன்னா இருக்கணும்னு அவர் தான் விரும்பி எல்லா ஏற்பாடும் பண்ணாரு “ ” என்று கீர்த்தி மேலும் கூறினாள்.
“ஏன் அம்மா, அப்பா உன்கூட வரல?” என்று சஞ்சு கேட்டதும், “ அவங்களுக்கு அங்க செட் ஆயிடுச்சு சஞ்சு அதுவும் இல்லாம அப்பா அங்க வேலை செய்றாரு. அவருக்கு வர விருப்பம் இல்ல “ என்று கீர்த்தி மென்மையாக விளக்கினாள்.
இரண்டு பெண்களும் முடிவில்லாமல் அரட்டையடித்தனர், அவர்கள் பிரிந்திருந்த ஒரு வருடத்தில் நடந்த எல்லாவற்றையும் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். சஞ்சு இறுதியில் மாயாவைப் பற்றியும் அவள் தற்போது ஏற்படுத்தும் சிக்கலைப் பற்றியும் மனம் திறந்தாள்.
“ரஞ்சித் அண்ணா அவள பத்தி கொஞ்சம் சொன்னாரு ஆனா அவ இவ்ளோ தந்திரசாலியா இருப்பானு நான் எதிர்பார்க்கல.” என்று கீர்த்தி அதிர்ச்சியோடு சொன்னாள் அதற்கு சஞ்சு, “ எனக்குன்னே வருவாளுங்க போல “ என்று விரக்தியில் முணுமுணுத்தாள்.
” அதான் இப்போ நான் வந்துட்டேன்ல நாம ஒன்னா சேர்ந்து அவள பார்த்துக்கலாம் “ என்று நம்பிக்கையூட்டும் வகையில் புன்னகைத்தாள் கீர்த்தி.
” பவி கூட உன்ன மாதிரி உண்மையான ப்ரெண்ட, நீ இல்லாத குறைய அவ தான் போக்கினா “ என்று சஞ்சு சொன்னதை கேட்டு, “நான் அவகிட்ட ஒரு முறை பேசினேன் அதுவே எனக்குப் போதுமானதா இருந்துச்சு. “ என்று கீர்த்தியும் சொன்னாள்.
மாலை நேரம் நெருங்க நெருங்க இரவு உணவின் நறுமணம் வீடே நிரம்பி வழிந்தது, சிறிது நேரத்தில் ஆர்யன் ரஞ்சித்துடன் வந்ததும், கீர்த்தி உற்சாகமான புன்னகையுடன் எழுந்து நின்று, “ஆர்யன் அண்ணா, ரஞ்சித் அண்ணா எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“நாங்க நல்லா இருக்கோம் கீர்த்தி. எப்படி இருக்க ?” என்று இருவரும் கேட்டதும் அவளும் தனது நலனை கூறினாள்.
ஆர்யன் ஒரு கிண்டல் புன்னகையுடன் அவளைப் பார்த்து, “அப்போ ஏ.ஆர்.சி, உன் ஃப்ரெண்டு ரெண்டும் சேர தயாரா?” என்று கேட்டான். அதற்கு கீர்த்தி, “ஆமா, தூள் கிளப்ப போறோம் நாங்க “ என்று நம்பிக்கையுடன் பதிலளித்தாள்.
” பவி கிட்ட பேசிட்டேன் கீர்த்தி, நீ அவங்க கூட தங்குறதுல அவங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல சொல்லிட்டாங்க “ என்று ரஞ்சித் சொல்ல, “ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல அண்ணா “ என்றாள் கீர்த்தி.
” கீர்த்தி, நீ சாப்பிட்ட அப்புறம் நான் உன்ன பவி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் “ என்று ரஞ்சித் சொன்னதும், “ப்ளீஸ், நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று கீர்த்தி கெஞ்சினாள்.
ஆர்யன் தன் வாட்சை பார்த்துவிட்டு, ” கொஞ்சம் டைம் கொடு, வந்துடறேன்.” என்று சொல்லி ஆர்யனும் ரஞ்சித்தும் புத்துணர்ச்சி பெறச் சென்றனர், அவர்கள் திரும்பி வந்தபோது, பெண்கள் இன்னும் உரையாடலில் மூழ்கியிருப்பதைக் கண்டனர். அவர்கள் அனைவரும் டைனிங் ஹாலுக்கு சென்று சிரிப்பும், சாதாரண கேலியும் நிறைந்த கதகதப்பான, உயிரோட்டமான உரையாடலுடன் இரவு உணவை அனுபவித்தனர்.
பின்னர், ரஞ்சித் கீர்த்தியை பவியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, அவள் தனது புதிய இடத்தில் பாதுகாப்பாக குடியேறுவதை உறுதி செய்தான்.
இதற்கிடையில், DC இல்லத்தில் சந்திரசேகர் அமைதியாக மகளைப் பார்த்தபடி நின்றார். மாயா சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள், அவளுடைய முகபாவம் புயலாக இருந்தது, அவளுடைய உதடுகள் விரக்தியில் பிதுங்கியிருந்தன. வீட்டிற்கு வந்ததிலிருந்து அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நீண்ட மௌனத்துக்குப் பிறகு ஒருவழியாக மௌனத்தைக் கலைத்தார் சந்திரசேகர். ” எவ்ளோ நேரம் மௌனமா இருக்க போற ?” என்று கேட்டார்.
“வேறென்ன செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க ?” என்று மாயா கேட்டதும் சந்திரசேகர் பெருமூச்சு விட்டார். ” நான் சொல்றத கேளு மாயா. அக்ரீமன்ட்ல கையெழுத்து போட நீ கொஞ்சம் கூட யோசிக்கவும் இல்ல, என் கிட்ட அனுமதி கேட்கவும் இல்ல. இப்போ ஆர்யனும் சேர்ந்து ரெண்டு பேரும் இந்த பார்ட்னர்ஷிப்ல மாட்டிக்கிட்டோம். எனக்கு அவன பத்தி தெரியும், அவன் புத்திசாலித்தனமா வேலை செய்வான். அவ கிட்ட வேலை செய்றவங்களும் அவன மீறி எதுவும் செய்ய மாட்டாங்க அதனால அவனுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, அவன் பாதுகாப்பான பக்கத்துல இருக்கான். இதுல இருந்து மீள நான் ஏதாவது திட்டம் போடுற வர நீயும் அப்படித் தான் இருக்கனும்னு நான் எதிர்பார்க்குறேன் ” என்று சந்திரசேகர் திட்டவட்டமாக சொன்னார்.
“ ஹ்ம்ம்… சரி. ஆனா அதுக்காக நான் பல வருஷம் வெயிட் பண்ணுவேன்னு அர்த்தம் இல்ல. நீங்க சீக்கிரம் ஏதாவது செய்யணும்.” என்று சொன்ன மாயாவின் குரல் சற்றும் நிதானம் இல்லாமல் இருந்தது.
” போய்த் தூங்கு, நாளைல இருந்து உன்னோட பிசினஸ் தொடங்குது, அதுல கவனம் செலுத்து “ என்றார் சந்திரசேகர் உறுதியாக.
மாயா மெல்லிய தலையசைப்புடன் தன் அறைக்கு நடந்தாள். ஆனால் அவளுடைய தந்தை அவளுக்கு தெளிவான, நடைமுறைக்கு உகந்த அறிவுரைகளை வழங்கிய போதிலும், அவளுடைய கொந்தளித்த மனம் நிலைபெற மறுத்தது. அதற்கு பதிலாக, அவளுடைய எண்ணங்கள் ஏற்கனவே சதித்திட்டம், திட்டமிடலில் சுழன்றுகொண்டிருந்தது.
***********
முன்னோட்டம்:
நீ ரொம்ப சோர்வா இருக்க அதனால இன்னைக்கு வீட்ல இருந்து ரெஸ்ட் எடு. நீ ஆபீஸ் வர மாட்டணு பிரதீப் கிட்ட சொல்லிடுறேன். சாயங்காலம் சந்திக்கலாம் அதுவர நல்லா ரெஸ்ட் எடு.
கண்டிப்பா ஆபீஸ் போன் எதுவும் பேச கூடாது இல்ல தண்டனைக்கு ரெடியா இரு “
