சஞ்சு குளித்து முடித்து கீழே வந்து மெதுவாக டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள். காலை உணவுக்காக உட்கார்ந்த போது அவள் வெளிறிப்போய் சோர்வடைந்து காணப்பட்டாள். அவளை உடனே கவனித்த கௌசல்யா, “சஞ்சு, என்ன ஆச்சு ? ஏன் இவ்ளோ களைப்பா இருக்க ? “ என்று கவலையுடன் கேட்டார்.
“ஆபீஸ்ல நிறைய வேலை மா, ரிலாக்ஸ் பண்ண நேரம் இல்ல “ என்று சஞ்சு பலவீனமாக சொல்ல “சரி, சார் உன்ன சூப், நிறைய காய்கறி சாப்பிட சொன்னாரு அதனால சாப்பிட்டு முடிச்சிட்டு போய் தூங்கி நல்லா ரெஸ்ட் எடு “ என்று கௌசல்யா அக்கறையோடு கூறினார்.
சஞ்சு சரி என்று சொல்லி கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பி மீண்டும் உறங்கினாள்.
ஏ.ஆர்.சி அலுவலகத்தில், ஆர்யன் சில முக்கியமான அழைப்புகளை முடித்து, சில ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் ரஞ்சித்துடன் டெண்டர் மீட்டிங் நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டான். 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த திட்டத்தை வெற்றி பெறும் நம்பிக்கையுடன் பல நிறுவனங்கள் வந்திருந்தனர். அந்த வாடிக்கையாளர் மாநிலம் முழுவதும் பல கல்லூரிகளை உருவாக்க திட்டமிட்டிருந்தார், அதனால் இந்த ஒப்பந்தம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறியது.
முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஆர்யன் ஹாலுக்குள் நுழைந்த போது, ராஜேஷுடன் சந்திரசேகர் ஏற்கனவே அமர்ந்திருப்பதைக் கவனித்தான். ஆர்யன் அவர்களை பணிவுடன் வரவேற்றதும், சந்திரசேகரும் பதிலுக்கு தலையசைத்தார்.
அப்போது, மாயா நம்பிக்கையுடன் அவர்களை நோக்கி நடந்து வந்தாள். அப்பாவைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டவள், பிறகு ஆர்யனை நோக்கி ஒரு ஏளனப் புன்னகையுடன், ” மிஸ்டர் ஆர்யன், உங்க நேரத்தை ஏன் இங்க வீணடிக்குறீங்க ? இந்த ப்ராஜெக்ட் நிச்சயம் டிசி குழுமம் தான் ஜெயிக்கும் “ என்று அலட்சியமாக சொன்னாள்.
அவள் வார்த்தையை கேட்டு, “ இவ்ளோ நம்பிக்கையா இருக்கீங்களா மிஸ் மாயா?” என்று கேட்டு ஆர்யன் புருவத்தை உயர்த்தினான்.
“ஆமா, நீங்க இப்பவே கிளம்பறது நல்லது. உங்க சோகமான முகத்த நான் பார்க்க விரும்பல” என்று மாயா கைகளை கட்டிக்கொண்டு சொன்னாள். அதற்கு ஆர்யன் அமைதியாகப் புன்னகைத்து, “நீங்க கவலைப்பட வேணாம். நான் புதுசா பிசினஸ் செய்யல. ஏ.ஆர்.சி இந்த ஒரு ப்ரோஜெக்ட்ட மட்டும் நம்பி இல்ல. எப்படியோ, ஆல் தி பெஸ்ட்.” என்று அமைதியாக சொன்னான்.
” ரொம்ப நன்றி, நானும் பதிலுக்கு வாழ்த்து சொல்ல விரும்புறேன் ஆனா உங்களுக்கு ஏன் ஏமாற்றம் தரனும் ?” என்று கிண்டலாக சொன்னாள் மாயா.
“மாயா, நாம போய் உட்கார்ந்து ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணலாம்” என்று சொல்லி பேச்சை முடிக்க முயன்றார் சந்திரசேகர்.
எல்லோரும் இருக்கையில் அமர்ந்ததும் சில நிமிடங்களுக்குப் பிறகு, வாடிக்கையாளரும் அவரது குழுவினரும் மேடையை அடைந்தார்கள்.
“இங்க வந்துருக்குற உங்க எல்லாருக்கும் நன்றி, நாங்க இப்போ டெண்டர் திறக்கத் தொடங்குவோம். சொன்னது போல், குறைஞ்ச விலை இருக்க கொடேஷனுக்கு தான் இந்த ப்ராஜெக்ட் கிடைக்கும் “ என்று அறிவித்தார் வாடிக்கையாளர். அவருடைய உதவியாளர் டெண்டர் உறைகளை பிரித்து அதில் இருந்த கொடேஷன் தொகையை அறையில் இருந்தவர்களுக்கு அறிவித்தார்.
” அடுத்த கொடேஷன் டிசி குரூப்ஸ் கம்பெனியோடது, அவங்க 102.50 கோடி மேற்கோள் கொடுத்துருக்காங்க “ என்று உதவியாளர் அறிவித்தார்.
சந்திரசேகர் அதிர்ச்சியுடன் சட்டென்று ராஜேஷிடம் திரும்பி, “ ராஜேஷ், இது நான் முடிவு பண்ண தொகை இல்லையே ? இது என்ன முட்டாள்தனம்?” என்று கொந்தளித்தார் அதற்கு ராஜேஷ் அவரிடம், “ சார் மாயா மேடம் தான் தொகைய மாத்த சொன்னாங்க “ என்று பதட்டத்துடன் பதிலளித்தான்.
சந்திரசேகர் நம்பமுடியாமல் மாயாவைப் பார்த்து, “மாயா, ஏன் இப்படி பண்ண ? “ என்று கேட்க, அதற்கு அவள், “நான் என்ன செய்தேன்னு எனக்குத் தெரியும், கொஞ்சம் அமைதியா பாருங்க நாம தான் இந்த ப்ராஜெக்டை ஜெயிக்க போறோம் “ என்று மாயா நம்பிக்கையுடன் பதிலளித்தாள்.
உதவியாளர் அடுத்த உறையை திறந்து, “ இது கடைசி கொடேஷன், ஏ.ஆர்.சி. குழுமம் 101 கோடி மேற்கோள் காட்டி இருக்காங்க “ என்று அவர் அறிவித்ததும், மாயாவின் சிரிப்பு மறைந்தது. அவள் ஆர்யனை நோக்கித் திரும்பிய போது அவனது முகபாவம் அமைதியாக இருந்தது.
” வாழ்த்துக்கள் மிஸ்டர் ஆர்யன், ARC இந்த ப்ராஜெக்ட் செய்ய போறதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று வாடிக்கையாளர். சொன்னதும், ஆர்யன் எழுந்து மேடைக்குச் சென்று வாடிக்கையாளருடன் கைகுலுக்கினான். டெண்டர் ஆவணங்களில் கையெழுத்திட்ட பிறகு, சந்திரசேகர் மற்றும் மாயாவிடம் திரும்பி வந்தான்.
“வாழ்த்துக்கள் மிஸ்டர் ஆர்யன் ” என்று சந்திரசேகர் சொல்ல, ” தேங்க்யூ சார், உங்க பொண்ணுக்கு பிசினஸ் பத்தி நீங்க இன்னும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். என்னோட நெட்வொர்க்கை ஹேக் பண்ணதுக்கு என்னால டிசி குழுமத்துக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். உண்மையில், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள மீறியதுக்காக டி.சி.க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ARC காஸ்மெடிக்ஸ் சேர்வுமன் சஞ்சனா ஆர்யனையும் நான் பரிந்துரைக்க முடியும். ஆனா செய்ய மாட்டேன்.” என்றான் ஆர்யன், அவன் குரல் அமைதியாக இருந்தது ஆனால் அதில் மறைமுக எச்சரிக்கையும் இருந்தது.
மாயாவை நோக்கித் திரும்பியவன், “மிஸ் மாயா, உங்களுக்கு ஆச்சரியமா இல்லையா? இது எப்படி நடந்ததுன்னு உங்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று ஆர்யன் கேட்டதும், “என்ன சொல்ற ஆர்யன்?” என்று குழப்பத்துடன் கேட்டார் சந்திரசேகர்.
” ரொம்ப சாதாரண விஷயம் தான் சார், உங்க பொண்ணு அவங்களோட ஹேக்கர் தினேஷ் மூலமா எங்களோட கொடேஷன் விவரங்கள திருடி அதுக்கு ஏத்த மாதிரி உங்க ஏலத்தொகைய மாத்திட்டாங்க. துரதிர்ஷ்டவசமா தினேஷ் பத்தி எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அவன் எடுத்த கொடேஷன் உங்கள தவறா வழிநடத்த போலியா நான் ஏற்பாடு பண்ணது “ என்று விளக்கம் சொன்னான் ஆர்யன்.
மாயா தாடையைக் கடித்துக் கொண்டாள், கோபத்தாலும் சங்கடத்தாலும் அவள் முகம் வெளிறிப் போயிருந்தது. சந்திரசேகர் ஆழமாக மூச்சு விட்டார், அவரது முகபாவத்தில் ஏமாற்றம் தெளிவாகத் தெரிந்தது.
“ஸாரி ஆர்யன்” என்று அவர் அமைதியாக சொல்ல, “ நீங்க ஸாரி சொல்ல வேணாம் ஆனா அடுத்த முறை, நான் தொழில்முறையாவே இருப்பேன், சஞ்சனாவும் அப்படித் தான் இருப்பா. நான் இப்பவே கிளம்பறேன்.” என்று சொல்லிவிட்டு அத்துடன், அவமானப்பட்ட மாயாவையும் கோபமான சந்திரசேகரையும் விட்டுவிட்டு ஆர்யனும் ரஞ்சித்தும் அங்கிருந்து வெளியேறினர்.
“மாயா, தனிப்பட்ட பழிவாங்குற எண்ணத்த வியாபாரத்துல புகுத்தாத, இது உனக்கு எந்த வகையிலயும் உதவப் போறதில்ல. இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். நம்ம பிசினஸ் வேற உன்னோட தனிப்பட்ட வாழ்க்க வேற “ என்று சந்திரசேகர் சீறினார்.
மாயா மௌனமாக தலையசைத்துவிட்டு வெளியேறி அலுவலக செல்ல புறப்பட்டாள்.
ஏ.ஆர்.சி.யில், முழு அலுவலகமும் டெண்டர் வெற்றியால் மகிழ்ச்சியில் சலசலத்தது. ஊழியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர், காற்றில் கொண்டாட்டம் நிறைந்தது.
இதற்கிடையில், மாயா தனது அறைக்குள் நுழையும் போதே பிரதீப் அவளை அழைத்தபடி பின்தொடர்ந்தான்.
” தினேஷை வேலைய விட்டு அனுப்பு, பார்ட்னர்ஷிப் ரத்து செய்ய எங்களுக்கு எல்லா சட்ட உரிமையும் இருக்கு ஆனால் இது முதல் முறை சொல்லி சஞ்சனா உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புறா. உனக்கு புரியும்னு நம்புறேன்,. தினேஷுக்குப் பதிலா வேற யாரையாவது நீ வேலைக்கு சேர்க்கலாம் “ என்று பிரதீப் உறுதியாக சொன்னான்.
” உனக்கு ஞாபகம் இருக்கட்டும் பிரதீப், நான் என் பங்குகளை உனக்குக் கொடுத்தது எனக்காக வேலை செய்ய “ என்று மாயா எரிச்சலுடன் கூறினாள் அதற்கு பிரதீப் அவளிடம், “எனக்கு ஞாபகம் இருக்கு ஆனா நான் சொன்னத நீ மறந்துட்டனு நினைக்கிறேன். ஆர்யனுக்கும், சஞ்சனாவுக்கும் எதிரா நீ என்ன திட்டம் போட்டாலும் வெளிப்படையா என்கிட்ட சொல்லனும்னு நான் உன்கிட்ட சொல்லி இருந்தேன் அப்படியிருக்கும் போது நான் உனக்கு ஆதரவா இருக்க நீ எப்படி எதிர்பார்க்குற ?” என்று சீறினான் பிரதீப். பின்னர் குரலைத் தாழ்த்தி ஒரு அடி எடுத்து வைத்தவான், ” உண்மைய சொல்லனும்னா, சஞ்சனா உன் பார்ட்னர்ஷிப் ரத்து பண்ணி, 100 கோடி இழப்பீடு கேட்க முடியும் ஆனா நான் அவகிட்ட பேசி இந்த ஒரு முறை வேணாம்னு சொல்லி சமாதானப்படுத்தினேன் “ என்று கூறினான்.
“கெட் அவுட் பிரதீப்” என்று மாயா பற்களை கடித்து அவனை பார்த்து கர்ஜித்ததும், ” தனிப்பட்ட முறையில பழிவாங்க நீ பிசினஸ்ஸ இழக்க போற “ என்று பிரதீப் சாதாரணமா சொன்னான் ஆனால் ஏற்கனவே கோவத்தில் எரிந்து கொண்டிருந்த மாயா, “ உன் வேதாந்தத்த நிறுத்திட்டு வெளிய போ “ என்று கத்தினாள்.
மறுவார்த்தை பேசாமல் பிரதீப் வெளியேறினான். சில நிமிடங்களுக்குப் பிறகு, தினேஷுக்கு அவனது பணி நீக்கக் கடிதம் கொடுக்கப்பட்டது.
மாயா நாற்காலியில் சரிந்தாள், “நான் ஆபீஸ்ஸுக்கு வெளிய ஏதாவது பிளான் பண்ணனும் “ என்று அவள் கடுமையாக நினைத்தாள்.
டெண்டர் பற்றிய செய்தியைக் கேட்டதும், கீர்த்தி, பவித்ரா, பிரதீப் ஆகியோர் ஆர்யனின் அறைக்கு சென்றனர், அவர்களின் முகங்கள் உற்சாகத்தில் பிரகாசித்தது.
” சார், டெண்டர் ஜெயிச்சதுக்கு வாழ்த்துக்கள்!” என்று பவியோடு சேர்ந்து அனைவரும் ஆர்யனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
“சார், சஞ்சு ஏன் இன்னைக்கு ஆபீசுக்கு வரல?” என்று பவி கேட்டதும், ” நான் கூட அவளுக்கு போன் பண்ணேன் ஆனா அவ எடுக்கல “என்று கீர்த்தி கவலையுடன் கூறினாள்.
ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, ” கடந்த ரெண்டு நாளா அவ ரொம்ப சோர்வா இருக்கா. இன்னைக்கு காலையில கூட அவளுக்கு உடம்பு சரியில்ல. நான் கிளம்பும் போது நல்லா தூங்கிட்டு இருந்தா அதனால ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு வந்தேன். நான் தான் அவ மொபைல சைலன்ட் மோடுல போட்டேன் அதனால தான் அவ நீங்க போன் அப்போ பதில் சொல்லி இருக்க மாட்டா “ என்று ஆர்யன் கூறினான்.
“ என்ன ஆச்சு ? மறுபடியும் டென்ஷன் ஆகுறாளா ? “ என்று பவி கவலையோடு கேட்டதும், “அப்படியெல்லாம் இல்ல ஆனா அவ கொஞ்ச நாளாவே நிறைய வேலை செய்றா. இது வெறும் சோர்வு தான்னு நினைக்குறேன் “ என்றான் ஆர்யன்.
” இன்னைக்கு சாயங்காலம் நான் அவள பார்க்க வரட்டுமா?” என்று கீர்த்தி கேட்க, ஆர்யன் மறுத்து தலையை மெல்ல அசைத்தான். “இல்ல கீர்த்தி. இன்னைக்கு அவ ரெஸ்ட் எடுக்கட்டும். பொண்ணுங்க நீங்க எல்லாரும் ஏதாவது பிளான் பண்ணுங்க, அப்போ அவளுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். வெளிய போங்க, ரஞ்சித் கிட்ட சொன்னா, அவன் எல்லா ஏற்பாடும் செய்வான் “ என்று ஆர்யன் யோசனை சொன்னான்.
” இது சூப்பர் ஐடியா, நீ என்ன சொல்ற பவி?” என்று கீர்த்தி கேட்டதும், “ ஆமா நல்ல யோசனை தான், ஒரு நாள் நாம கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம் “ என்றாள் பவி.
“நீங்க பீச் ஹவுஸுக்குப் போகலாம், சஞ்சுவுக்கு அந்த இடம் ரொம்ப பிடிக்கும், உங்களுக்கு புடிக்கும்னு நம்புறேன் “ என்று ஆர்யன் சொல்ல, “ சரிங்க அண்ணா, நாங்க பீச் ஹவுஸ் போறோம் “ என்றாள் கீர்த்தி.
ஆர்யன் ரஞ்சித்தின் பக்கம் திரும்பி, “அவங்களுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிடு “ என்று கூறினான். அதற்கு ரஞ்சித்தும், “ “கண்டிப்பா சார்” என்று தலையசைத்தான்.
பிரதீப் கேலியாக முகத்தைச் சுளித்துக் கைகளைக் கட்டிக் கொண்டு, “ அப்போ நமக்கு ஒன்னும் இல்லையா ? பொண்ணுங்க மட்டும் வெளிய ரிலாக்ஸ் பண்ண போறாங்களா ? “ என்று கேட்டான். அதற்கு ஆர்யன் உடனே சிரித்து, “ வீட்டுக்கு வா. ஸ்னூக்கர் விளையாடலாம், நீயும் ரஞ்சித்தும் ட்ரிங்க்ஸ் குடிக்கலாம், நான் என் ஜூஸை என்ஜாய் பண்றேன்.” என்று பதில் சொன்னான்.
” பிரமாதம், அப்படியே செய்யலாம் “ என்று சொல்லி பிரதீப் புன்னகைத்தான்.
“சரி” என்று எழுந்த ஆர்யன் சாவியை எடுத்துக் கொண்டு, “நான் இப்ப வீட்டுக்கு போறேன்.” என்று சொல்லி புறப்பட்டான்.
ஆர்யன் வீட்டை அடைந்ததும் கௌசல்யாவை அழைத்து, “கௌசல்யா மா, சஞ்சு ஒழுங்கா சாப்பிட்டாளா ?” என்று கேட்டான்.
“இல்ல சார், கொஞ்சம் தான் சாப்பிட்டா. இப்போ தான் தோட்டத்துக்குப் போனா.” என்று சொன்ன கௌசல்யா குரலில் கவலை தெரிந்தது.
“சரி அவளுக்கு ஒரு மில்க் ஷேக் எடுத்துட்டு தோட்டத்துக்கு வாங்க ” என்று சொல்லிவிட்டு ஆர்யன் வெளியே நடந்தான்.
தோட்டத்தில், சஞ்சு ஒரு பெஞ்சில் அமர்ந்து, பாலாவுடன் சேர்ந்து பறவைகளுக்கு தானியங்களை தூவிக் கொண்டு பறவைகள் சிறகடித்துப் பறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சஞ்சு…” என்று ஆர்யன் மெல்ல அழைத்ததும், அவனை கவனித்த பாலா மரியாதையுடன் வணக்கம் சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.
சஞ்சு புன்னகையுடன் திரும்பி, ” ஆர்யன், டெண்டர் என்ன ஆச்சு?” என்று உடனே கேட்டாள். ” நாம ஜெயிச்சிடோம் “ என்று சொன்னபடி அவள் அருகில் சென்றான்.
“வாவ்! வாழ்த்துக்கள்!” என்று சொல்லி சஞ்சு முகம் மலர்ந்தாள்.
” சரி சொல்லு, நீ இப்ப எப்படி இருக்க?” என்று ஆர்யன் கேட்க, “ நான் நல்லா இருக்கேன். நாள் முழுக்க தூங்கிட்டு இருந்தேன் “ என்று சொல்லி கையை நீட்டி சோம்பல் முறித்தாள்.
“நீ ஏன் ஒழுங்கா சாப்பிடல?” என்று ஆர்யன் கொஞ்சம் சீரியஸாக கேட்டதும், ” நான் போதுமான அளவு சாப்பிட்டேன் ஆனா டெண்டர் ஜெயிச்சதுக்கு ட்ரீட் வேணும் “ என்றாள்.
“உனக்கு என்ன வேணும்?” என்று ஆர்யன் கேட்டதும் சற்றும் யோசிக்காமல், “பீட்சா ” என்றாள் சஞ்சு.
” சரி இன்னைக்கு டின்னருக்கு பீட்சா, சரியா ? “ என்று புன்னகையோடு ஆர்யன் சொன்ன போது, “ ஐ லவ் யூ “ என்று கிசுகிசுத்து சஞ்சு தன்னுடைய தலையை அவனுடைய தோளில் லேசாக சாய்த்தாள்.
கௌசல்யா மில்க்க்ஷேக் கொண்டு வந்ததும், “அம்மா, இத ஏன் இப்ப கொண்டு வர்றீங்க?” என்று சஞ்சு லேசான முகச்சுளிப்புடன் கேட்டாள்.
ஆர்யன் கௌசல்யாவை பார்த்து, “ நீங்க போங்க மா “ என்று சொல்லி கௌசல்யா சென்ற பின் சஞ்சுவை பார்த்து, “ நான் தான் கொண்டு வர சொன்னேன், இப்போ இத குடி “ என்று கூறினான்.
“ஆர்யன்… ப்ளீஸ்…” என்று சஞ்சு குடிக்க மறுத்து சிணுங்கினாள் ஆனால் ஆர்யன் உறுதியாக அவளிடம் கொடுத்து, “ முடியாது, நீ இத குடிச்சா தான் நைட்டு பீட்சா “ என்று திட்டவட்டமாக கூறிவிட்டான்.
ஒரு நாடகத்தனமான பெருமூச்சுடன் அவள் அதைக் குடித்தாள், விளையாட்டாக அவனை முறைத்து, “நீ ரொம்ப மோசமானவன்.” என்றாள். ஆர்யன் அவளது முகபாவத்தைக் கண்டு ஆர்யன் சிரித்தான். அவர்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டபோது, டெண்டர் சந்திப்பில் நடந்த அனைத்தும் உற்பட, தினேஷ் எவ்வாறு அவர்களின் நெட்வொர்க்கை ஹேக் செய்தான், அவன் எவ்வாறு மாயாவுக்கு ஒரு போலி மேற்கோளை வழங்கினான், இறுதியில் தினேஷ் எவ்வாறு பணியில் இருந்து நீக்கப்பட்டான் என ஆர்யன் அவளிடம் அனைத்தையும் கூறினான்.
சஞ்சுவின் முகபாவம் இருண்டது. “இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அவள சகிச்சுக்கிட்டு இருக்குறது ? அவ ரொம்ப கீழ்த்தரமா நடந்துக்குறா “ என்று எரிச்சலுடன் சொன்னாள் சஞ்சு.
“நான் அவ அப்பா கிட்ட பேசி இருக்கேன், அவர் அவள கட்டுப்படுத்தி வைப்பாருன்னு நம்புறேன் “ என்றான் ஆர்யன்.
“அவ சும்மா இருப்பானு நினைக்குறது சந்தேகம் தான்” என்று சஞ்சு முணுமுணுத்தாள்.
” சரி அத விடு. உள்ள வா, இங்க குளிரா இருக்கு” என்று சொல்லி அவளை உள்ளே அழைத்து சென்றான்.
அன்று இரவு அவர்கள் இரவு உணவிற்கு பீட்சாவைப் பகிர்ந்து கொண்ட பின் ஒருவருக்கொருவர் அரவணைத்து தூங்க சென்றனர்.
டி.சி ரெசிடென்ஸில், மாயா தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவளது கட்டாய புன்னகையையும் மீறி அவள் குரல் இறுக்கமாக இருந்தது.
“மாயா, நீ இந்த பிசினஸை ஆரம்பிச்சதுல இருந்து ரொம்ப பிஸியா இருக்க” என்று லேகா கேட்டதும், “ஆமா லேகா” என்றாள் மாயா நாற்காலியில் சாய்ந்தபடி.
“இந்த வாரம் ஒரு பார்ட்டி போலாமா ?” என்று ரியா பரிந்துரைத்ததும், “எங்க?” என்று மாயா கேட்டாள்.
“இந்த முறை வெளிய போகலாம், ஊட்டி போலாமா ? “ என்று ரியா யோசனை சொன்னாள். அதற்கு மாயா, “சரி, போகலாம்” என்று சம்மதித்தாள்.
” சரி, அப்போ வெள்ளிக்கிழமை ராத்திரி கிளம்பலாம் “ என்று ஆரம்பிக்கலாம்” என்று லேகா சொன்னாள்.
“நான் உன் வீட்டுக்கு வரேன் லேகா, நாம அங்கிருந்து போவோம்” என்று மாயா உறுதி செய்தாள்.
அழைப்புக்குப் பிறகு, மாயா ஒரு கசப்பான புன்னகையுடன் பின்னால் சாய்ந்தாள், அவளின் எண்ணங்கள் சுழன்றன.
“எனக்கு கண்டிப்பா ஒரு இடைவெளி வேணும். தெளிவாக சிந்திக்கணும். முதல்ல, இந்த பார்ட்னர்ஷிப்ல இருந்து வெளியேற நான் ஒரு வழிய கண்டுபிடிக்கணும். அதுக்கு அப்புறம் நான் சஞ்சனாவ சமாளிக்கிறேன்.” என்று நினைத்தாள்.
************
முன்னோட்டம்:
எனக்கு அந்த சஞ்சனா கிட்ட இருந்து ஆர்டர் கேட்குறது கடுப்பா இருக்கு, கொஞ்சம் கூட புடிக்கல. அக்ரீமன்ட் விதி படி ஆறு மாசத்துக்கு முன்னாடி அக்ரீமன்ட் ரத்து பண்ண முடியாது இல்லனா நூறு கோடி இழப்பீடு கொடுக்கணும் “
