அலுவலகத்தில் அனைவரும் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, மீதமுள்ள நாள் வழக்கம் போல் சென்றது. மாயா, மற்றொரு தோல்வியால் உள்ளுக்குள் கொந்தளித்தாலும், அமைதியாக இருக்க முடிவு செய்து தனது பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தினாள்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மாலையில் சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து கிளம்பிய மாயா, லக்கேஜை எடுத்துக் கொண்டு நேராக லேக்காவின் வீட்டுக்குப் போனாள். ரியாவும், லேக்காவும் ஏற்கனவே அங்கே தயாராக மாயாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். மாயா உள்ளே நுழைந்ததும், மூவரும் விரைந்து ஒன்றாக கட்டித் தழுவிக் கொண்டனர்.
“மாயா, உன்ன ரொம்ப மிஸ் பண்ணோம் “ என்று சொல்லி லேக்கா புன்னகைத்தாள். அதற்கு மாயா அவளிடம், “நானும் தான் ” என்று மெல்லிய புன்னகையுடன் சொல்லி, “சரி, கிளம்பலாமா?” என்று கேட்டாள்.
“இரு விவான் இன்னும் வரலை.” என்று ரியா சொன்னதும், மாயாவின் புருவங்கள் சுருங்கியது, “விவான் வரானா ?” என்று குழப்பத்துடன் கேட்டாள். அதற்கு லேக்கா தலையசைத்து, “ஆமா, அவனும் நம்ம கூட வரான் “ என்றாள்.
மாயா வியப்புடன் பார்த்து, “இத ஏன் முன்னாடியே சொல்லல?” என்று கேட்டதும், லேக்கா விளையாட்டாக தோள்களைக் குலுக்கி, “ஏய், நீ இப்போ அவனுக்கு ப்ரெண்ட் தானே ? அப்புறம் என்ன ? “ என்று கேட்டாள்.
“இருந்தாலும் நாம பொண்ணுங்க மட்டும் போகலாம்னு நினைச்சேன்.” என்று மாயா மெல்லிய குரலில் சொல்ல, ரியா மெதுவாக, “மாயா, அவனால எந்த பிரச்சனையும் வராது. உண்மைய சொல்ல போனா அவன் நம்ம பாதுகாப்புக்கு தான் அங்க இருப்பான். அதனால நாம் நிம்மதியா இருக்கலாம் “ என்று சொன்னாள்.
“அவன நம்ம கூட கூட்டிட்டு போறது எனக்கு நல்ல யோசனையா தோணல “, என்று மாயா வற்புறுத்தினாள். ஆனால் ரியா அவளிடம், ” பரவாயில்ல விடு மாயா, ரெண்டு நாள் தான், அவன் முழுக்க முழுக்க பாதுகாப்புக்காக மட்டும் தான் இருப்பான்” என்று சொன்னாள்.
“அவன ஒரு பாடிகார்ட்னு நெனச்சுக்கோ “ என்று லேக்கா சொல்ல, அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்த விவான், அவர்களின் உரையாடலை கேட்டுவிட்டு ஒன்றும் அறியாதவன், கேட்காதவன் போல அவர்களை புறப்பட அழைத்தான். பெண்கள் விரைவாக தங்களை சமாதானப்படுத்திக் கொண்டு மேலும் விவாதிக்காமல் அனைவரும் காரில் ஏறினார்கள். விவான் காரை ஒட்ட, நீண்ட பயணத்திற்குப் பிறகு, மறுநாள் அதிகாலையில் ஊட்டியில் உள்ள ரிசார்ட்டை அடைந்தனர். களைத்துப் போன அனைவரும் ஓய்வெடுக்க அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.
ஆர்யன் மேன்ஷனில், சஞ்சு தயாராகி பவி மற்றும் கீர்த்தியின் வருகைக்காக காத்திருந்தாள். இதற்கிடையில், ஆர்யன் ஒரு நிதானமான காலைப் பொழுதை செய்தித்தாள் படித்துக் அனுபவித்துக் கொண்டிருந்தான். அதே சமயம் அவனும் பிரதீப்புக்காக காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் பவியும், கீர்த்தியும் மேன்ஷனுக்கு வந்ததும் நால்வரும் காலை உணவுக்காக ஒன்றாக அமர்ந்தனர். சாப்பிட்ட பிறகு சஞ்சு எழுந்து நின்று, “ஆர்யன், நாங்க கிளம்பறோம்.” என்று சொன்னாள். ஆர்யன் புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தான். “சரி மா, ஜாலியா என்ஜாய் பண்ணுங்க. தண்ணியில விளையாடும் போது பாதுகாப்பா இருங்க “ என்று அக்கறையோடு சொன்னான்.
சஞ்சு சரி என்று தலையசைத்தாள்.
“உங்க எல்லாருக்கும் தேவையான எல்லாத்தையும் செய்ய பணிப்பெண்கள் இருக்காங்க. பாதுகாப்புக்காக செக்யூரிட்டி ஆளுங்களும் இருப்பாங்க. வேற ஏதாவது தேவைப்பட்டா என்ன கூப்பிடுங்க, இல்ல ரஞ்சித்த கூப்பிடுங்க.” என்று ஆர்யன் மேலும் சொல்ல, பெண்கள் சரி என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார்கள். காவலர்கள் மற்றொரு வாகனத்தில் பின்தொடர, ஓட்டுநர் அவர்களை கடற்கரை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றார்.
பவி இருக்கையில் கால் மடித்து அமர்ந்து, “இன்னைக்கு போன் பேசக் கூடாது, ஆபீஸ் டென்ஷன் இல்லாம என்ஜாய் பண்றோம்.” என்று சொன்னதை கேட்டதும் கீர்த்தி சிரித்துக் கொண்டே, “ஆமா, சஞ்சு ரொம்ப நாளைக்கு அப்புறம் நாம இப்படி ஒன்னா வெளிய போறோம் “ என்று சொன்னாள்.
சஞ்சு சிநேகமாகச் சிரித்து, “ஆமா கீர்த்தி. நாம சந்தோஷமா என்ஜாய் பண்ணலாம் “ என்றாள்.
அவர்கள் பீச் ஹவுஸை அடைந்ததும், தலைமைக் காவலர்களில் ஒருவர் முன்னால் வந்து கதவைத் திறப்பதற்காக தன்னுடைய கைரேகையை பதிவு செய்தார். கார் உள்ளே சென்ற போது, தோட்டத்தின் பூக்களின் நறுமணத்தால் அவர்கள் உடனடியாக சூழப்பட்டனர். அந்தக் காட்சி பிரமிப்பூட்டுவதாக இருந்தது – கற்பனை செய்யக்கூடிய எல்லா நிறங்களிலும் பூக்கள் காற்றில் மென்மையாக அசைந்தாடின.
கீர்த்திக்கு மூச்சு முட்டியது. “ஆஹா சஞ்சு, நான் ஊட்டியில இருக்கேனா? இது ஆச்சரியமா இருக்கு ” என்று சொன்னாள்.
பவி பிரமிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்து, “நான் இங்க செட்டில் ஆயிடுறேன். ஆர்யன் சார் இந்த இடத்த பத்தி சொல்லும் போது கூட தெரியல ஆனா இந்த இடம் அருமையா இருக்கு. கீர்த்தி சொன்ன மாதிரி, மினி ஊட்டி மாதிரி பண்ணியிருக்காரு.” என்று சொன்னாள்.
கீர்த்தி முன்னால் சுட்டிக்காட்டி “ஆமா பவி. அட இந்த நீரூற்று பார்க்கவே தனித்துவமா இருக்கு “ என்று கூறினாள்.
சஞ்சுவின் எண்ணங்கள் ஒரு கணம் அலைபாய்ந்தன. “ நான் முதல் முறை வந்த அப்போ எப்படி இருந்துச்சோ அப்படியே இப்பவும் இருக்கு. நல்லா பராமரிப்பு பண்ணி இருக்காங்க “ என்று மனதில் நினைத்தாள்.
அவர்கள் ஒவ்வொரு பூவையும் ரசிப்பதிலும், தோட்டத்தில் செல்ஃபி எடுப்பதிலும் நேரத்தை செலவிட்ட பின்னர் வீட்டுக்குள் சென்றனர். நவீன நேர்த்தியும் அரவணைப்பும் கலந்த கலவையுடன், உட்புறங்கள் சமமாக பிரமிக்க வைக்த்தன. விரைவான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, மதிய உணவுக்கு முன் ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடிவு செய்தனர்.
தியேட்டர் அறையில் சோபாவில் வசதியாக அமர்ந்து, என்ன படம் பார்ப்பது என்று ஒரு குட்டி சண்டைக்கு பிறகு இறுதியாக ஒரு படத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதற்கிடையில், பணிப்பெண்கள் அவர்களுக்கு பலவிதமான தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்.
கீர்த்தி திருப்தியுடன் பெருமூச்சு விட்டு, “ அஹா, நான் இங்கேயே நிரந்தரமாக இருக்க விரும்புறேன்.” என்று சொன்னாள். அதற்கு பவி தலையசைத்து, ” ஆமா கீர்த்தி “ என்று சொல்லிவிட்டு பின்னர் சஞ்சுவை பார்த்து, “ சஞ்சு, நீங்க எப்போ இங்க வருவீங்க ? “ என்று கேட்டாள்.
அதற்கு பதிலளித்த சஞ்சு, ” வேலை ரொம்ப அதிகமா இருக்கும் போது ரிலாக்ஸ் பண்ண வருவோம் அப்புறம் சாதாரணமா சனி, ஞாயிற்றுக்கிழமை வருவோம். உண்மைய சொல்லனும்னா எனக்கு இங்க இருக்க பீச் ரொம்ப புடிக்கும். வெளி ஆளுங்க வர அனுமதி இல்ல அதனால பயம் இல்லாம என்ஜாய் பண்ணலாம் “ என்று சொன்னாள்.
” அப்போ சாயங்காலம் பீச்சுக்குப் போகலாம்!” என்று கீர்த்தி உடனே சொன்னாள். அதன் பின்னர் அவர்கள் படம் பார்க்க தொடங்கினர்.
இதற்கிடையில், பிரதீப், ஆர்யன் மேன்ஷனுக்கு ஆர்யன் மற்றும் ரஞ்சித்துடன் பகல் பொழுதைக் கழிக்க வந்தான். மூவரும் நீச்சல் குளம் பகுதிக்குச் சென்று சன் லவுஞ்சர்களில் வசதியாக அமர்ந்தார்கள். ஆர்யன் வீட்டில் மது அருந்துவதில்லை என்பதை அறிந்த பிரதீப் தனக்கும் ரஞ்சித்துக்கும் சில பானங்களை கொண்டு வந்தான்.
ஆர்யன் அந்த பாட்டில்களை பார்த்து, ” சஞ்சு மட்டும் இத பார்த்தா அவ்ளோ தான் “ என்று கூறினான். அதற்கு பிரதீப் அவனிடம், “ அவ்ளோ பயமா ? “ என்று கேட்டு புன்னகைத்தான். ஆனால் ஆர்யன் மறுத்து தலையை ஆட்டி, ” இல்லை, இது பயம் இல்ல. அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது.” என்று சொன்னான்.
அப்போது ரஞ்சித் ஒரு கிளாஸ் ஜூஸ் கொண்டு வந்து, “ சார் கொஞ்சம் ஜூஸ் குடிங்க ” என்று சொல்லி கிளாஸை பக்கத்திலிருந்த சிறிய டேபிள் மீது வைத்தான்.
” நன்றி ரஞ்சித். நீயும், பிரதீப்பும் ட்ரிங்க்ஸ் குடிங்க ” என்று சொல்லி ஜூஸை எடுத்துக் கொண்டான் ஆர்யன்.
“ பொண்ணுங்க நல்லா சந்தோஷமா என்ஜாய் பண்ணுவாங்க தானே ? “ என்று பிரதீப் கேட்க, ஆர்யன் ஆம் என்று தலையசைத்து, “ஆமா, இப்போ தான் சஞ்சுகிட்ட இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்துச்சு. எல்லாரும் படம் பார்க்க செட்டில் ஆயிட்டாங்க போலிருக்கு.” என்று பதில் சொன்னான்.
அத்துடன், மூன்று பேரும் சாதாரண உரையாடல் மற்றும் கொஞ்சம் வணிக உரையாடலுடன் நேரத்தை கழித்தனர்.
ஊட்டி ரிசார்ட்டில், புத்துணர்ச்சியுடன் எழுந்த அனைவரும் தயாராகி காலை உணவுக்காக கூடினர்.
லேக்கா மாயாவைப் பார்த்து, ” மாயா, இப்ப என்ன பிளான் ?” என்று கேட்டாள்.
மாயா தோள்களைக் குலுக்கினாள். ” நான் எதுவும் ப்ளான் பண்ணல “ என்று சொன்னாள். அப்போது விவான் குறுக்கிட்டு, “ இங்க என் ப்ரெண்ட் ஒருத்தன் ஒரு பப் (pub ) வெச்சுருக்கான். சாயங்காலம் அங்க போகலாம், இப்போதைக்கு, படகு சவாரி போகலாம் அதுக்கு அப்புறம் மதிய லஞ்ச் சாப்பிடலாம். என்ன சரியா ? “ என்று அவர்களிடம் கேட்டான்.
அனைவரும் ஒப்புக்கொண்டதும் காலை உணவை முடித்த பிறகு, அவர்கள் ரிசார்ட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள படகு சவாரி இடத்திற்குச் சென்றனர். லேக்காவும், ரியாவும் உற்சாகமாக ஒரு படகில் ஏற, மாயாவும், விவானும் மற்றொரு படகில் ஏறினார்கள். அவர்கள் ஏறுவதற்கு முன்பு தங்கள் பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிந்துகொள்கிறார்கள்.
அமைதியான நீரில் படகு நகர தொடங்கியதும், பல ஜோடிகள் ஒன்றாக தங்கள் நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இயற்கை சூழலை சுற்றிப் பார்த்த விவான், “ மாயா, நான் ஒன்னு கேட்கட்டுமா?” என்று சொல்லி மாயாவை நோக்கித் திரும்பினான்.
மாயா தலையசைத்து, “ என்ன கேட்கணும் ? “ என்றதும், அவன் அவளை லேசான புன்னகையுடன், ” நீ ஆர்யன பார்க்காம இருந்திருந்தா, இந்நேரம் நாம ஒன்னா இருந்துருப்போம் தானே ? அதாவது, நாம கல்யாணம் பண்ணி இருக்க வாய்ப்பு இருந்துருக்கும் “ என்று சொன்னான். மாயா அதற்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. அவள் வெறுமனே தூரத்தை வெறித்துப் பார்த்தாள்.
விவான் உடனே, ” ஸாரி, நான் உன்ன புண்படுத்த நினைக்கல. சும்மா தோணுச்சு அத தான் சொன்னேன் “ என்று சொன்னான். அதற்கு மாயா, “பரவாயில்ல” என்றாள் மெல்லிய குரலில்.
விவான் மீண்டும் பேசுவதற்கு முன் ஒரு கணம் மௌனம் நிலவியது.
“மாயா, நான் எப்பவும் உனக்காக இருப்பேன், அது மட்டும் நீ எப்பவும் ஞாபகம் வெச்சுக்கோ “ என்று விவான் சொன்னதை கேட்டு, அவள் சற்றே அவனை நோக்கித் திரும்பி, “விவான், நாம் வேற ஏதாவது பேசலாமா?” என்றாள்.
“ஸாரி மாயா” என்று மன்னிப்புக் கேட்டுவிட்டு விவான் பேச்சை மாற்றி, “ சரி சொல்லு, உன் பிசினஸ் எப்படி போகுது?” என்று கேட்டான்.
” நல்லா போகுது ஆனா நான் பார்ட்னர்ஷிப்ல இருந்து வெளியேற விரும்புறேன்” என்று மாயா பதிலளித்தாள். அதை கேட்டதும், விவான் புருவத்தை உயர்த்தி, “ஏன்? என்ன ஆச்சு ?” என்று கேட்டான்.
” எனக்கு அந்த சஞ்சனா கிட்ட இருந்து ஆர்டர் கேட்குறது கடுப்பா இருக்கு, கொஞ்சம் கூட புடிக்கல. அக்ரீமன்ட் விதி படி ஆறு மாசத்துக்கு முன்னாடி அக்ரீமன்ட் ரத்து பண்ண முடியாது இல்லனா நூறு கோடி இழப்பீடு கொடுக்கணும் “ என்று பதில் சொன்ன மாயாவின் குரலில் எரிச்சல் தொனித்தது.
விவான் புரிந்துகொண்டதாகத் தலையசைத்து, ” புரியுது, பிரச்சினைய பத்தி யோசிக்காம இந்த ரெண்டு நாள் நிம்மதியா ரிலாக்ஸ் பண்ணு “ என்று சொல்லி அவளருகே சென்று அவள் கையை மென்மையாக அழுத்தி மௌனமாக ஆதரவளித்தான்.
சென்னையில் கடற்கரை வீட்டில், சஞ்சு பணிப்பெண்களை மதிய உணவு பரிமாற அழைத்தாள். சில நிமிடங்களில், டைனிங் டேபிளில் வாயில் முழுக்க உணவுகள் வரிசையாக அமைக்கப்பட்டன. அதன் நறுமணம் காற்றை நிரப்பியது, பெண்கள் மூவரின் கண்கள் ஆச்சரியத்தில் பிரகாசித்தன.
“ஏய்! எனக்குப் பிடிச்ச டிஷ் எப்படி ரெடி பண்ணாங்க ?” என்று கீர்த்தி ஆச்சரியத்துடன் கேட்க, பவி கண்களை அகல விரித்து, ” என்னோடதும் சமைச்சு இருக்காங்க ” என்றாள்.
பணிப்பெண்களில் ஒருவர் புன்னகையுடன், “ரஞ்சித் சார் ஏற்கனவே என்ன சமைக்கனும்னு மெனு கொடுத்திருந்தாரு ” என்று விளக்கினார்.
பெண்கள் மூவரும் மகிழ்ச்சி அடைந்து உற்சாகமான உரையாடல், சிரிப்புடன் அந்த அறையை நிறைத்து, சுவையான உணவை சாப்பிட்டனர். திருப்திகரமான மதிய உணவிற்குப் பிறகு, ஒரு படுக்கை அறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவுபடுத்தினர், வேடிக்கையான விஷயங்களைப் பற்றி பேசி சிரித்தனர்.
மாலை நேரமானதும் அவர்கள் கொல்லைப்புறத்தை நோக்கி நகர்ந்து கடற்கரையை அடைந்தனர். மாலை நேர வெளிச்சத்தில் பொன்னிற மணல் பளபளத்தது.
“சஞ்சு, இங்க ரொம்ப அழகா இருக்கு ” என்று பவி உற்சாகத்தில் கதறினாள். கீர்த்தியும், பவியும் உற்சாகத்தை அடக்க முடியாமல் குழந்தைகளைப் போல கரையை நோக்கி ஓடினர், அவர்களின் சிரிப்பு திறந்த வெளியில் எதிரொலித்தது. அவர்கள் அன்றைய சுதந்திரத்தை அனுபவிப்பதைப் பார்த்து புன்னகைத்தபடி சஞ்சு மெதுவாக பின்னால் சென்றாள்.
கவலையற்ற குழந்தைகளைப் போல மூவரும் ஒருவரையொருவர் கைகளை பிடித்துக் கொண்டு குளிர்ந்த நீரில் இறங்கி விளையாடினர். இறுதியில், அவர்கள் ஈரமான கரையில் அமர்ந்ததும், அலைகள் மெதுவாக அவர்களின் கால்களை உரசின. கீர்த்தியும் பவியும் மணலில் படுத்து, தண்ணீரை தங்கள் மீது உருள விட்டபடி, நனைந்த ஆடைகளையும் கலைந்த தலைமுடியையும் பார்த்து சிரித்தனர். அவர்கள் மணல் கோட்டைகளைக் கூட கட்ட முயன்றனர், ஒவ்வொரு முறையும் அலைகள் அவற்றை அடித்துச் செல்வதைக் கண்டு பலமாகச் சிரித்தார்கள், அந்தக் கணத்தில் முழுமையாக மூழ்கி ஆனந்தத்தில் திளைத்தார்கள்.
வானம் ஆரஞ்சு மற்றும் ஊதா நிறங்களின் மூச்சடைக்கக்கூடிய கலவையாக மாறியபோது, சூரியன் அடிவானத்தில் உருகியது. மணல் படிந்த கால்களுடனும் திருப்தியான இதயங்களுடனும் அவர்கள் வீட்டுக்கு திரும்பினர்.
சூடான குளியலுடன் புத்துணர்ச்சி பெற்ற பிறகு, பெண்கள் தோட்டத்தில் கூடி, இரவு வானத்தின் கீழ் அமர்ந்து காபி குடித்தனர். மலர்களின் நறுமணமும், சிட்டுக்குருவிகளின் ரீங்காரமும் அமைதியின் ஆறுதலான கூட்டாக அவர்களைச் சூழ்ந்தன.
சஞ்சு வீட்டுக்குள் இருந்து தனது மொபைலை எடுக்க எழுந்தாள், ஆனால் அவள் ஒரு அடி எடுத்து வைத்ததும் அவள் தடுமாறி புல்தரையில் சரிந்தாள்.
“சஞ்சு!” என்று பவி பீதியில் கத்தினான்.
கீர்த்தியும் பவியும் அவள் பக்கத்தில் ஓடி சென்று இருவரும் அவள் கன்னங்களை மென்மையாகத் தட்டினார்கள்.
“சஞ்சு… கண்ண திற” என்று கெஞ்சிய பவியின் குரல் நடுங்கியது ஆனால் சஞ்சுவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பீதி அதிகரித்ததும், அவர்கள் சஞ்சுவை கவனமாக லிவிங் அறைக்கு தூக்கி சென்று அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவளை எழுப்ப முயன்றனர், ஆனால் அவள் எழவில்லை.
“கீர்த்தி, எனக்கு பயமா இருக்கு, சஞ்சு மறுபடியும் மன அழுத்தம் காரணமா மயங்கி விழுந்துட்டா நினைக்கிறேன்.” என்றாள் பவியின் கைகள் நடுங்க. அதற்கு கீர்த்தி, ” சஞ்சுவுக்கு அடிக்கடி இப்படி வருமா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
“ஆர்யன் அண்ணாவை உடனே கூப்பிடலாம்” என்று போனை எடுத்தாள் பவி.
ஆர்யன் மேன்ஷனில், பிரதீப் புறப்பட்டு சென்ற பிறகு ஆர்யன் தனது அலுவலக அறையில் அமர்ந்து சில வணிக அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து கொண்டிருந்தான். அவனது மொபைல் ஒலித்ததும், பவியின் பெயரைப் பார்த்து அவன் உடனடியாக பதில் சொன்னான்.
” சொல்லுங்க பவித்ரா, உங்க கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சுதா ? சஞ்சு எங்க?” என்று சாதாரணமாகக் கேட்டான் ஆர்யன், அப்போது ” அண்ணா, சஞ்சு மயங்கி விழுந்துட்டா, உடனே டாக்டர வர சொல்லுங்க “ என்று சொன்ன போது பவியின் குரல் உடைந்தது.
ஆர்யன் நாற்காலியிலிருந்து எழுந்து வெளியேறியபடி, “அவளுக்கு என்ன ஆச்சு ?” என்று பதற்றத்துடன் கேட்டான். அதற்கு பவி, ” தெரியல” என்று கவலையுடன் பதிலளித்தாள்.
” நான் டாக்டர வர சொல்றேன். நீங்க அவ பக்கத்துல இருங்க ” என்று உத்தரவிட்ட ஆர்யன், நடுங்கும் விரல்களால் டாக்டருக்கு டயல் செய்தான். ரஞ்சித்தை அழைத்தபடி ஆர்யன் காரை நோக்கி ஓடினான். ஆர்யனின் அலறல் கேட்டு ஹாலுக்கு விரைந்த ரஞ்சித், ” சார், என்ன ஆச்சு ?” என்று கேட்டபடி அவன் பின்னாலேயே ஓடினான்.
“சஞ்சு மயங்கி விழுந்துட்டானு பவித்ரா போன் பண்ணாங்க “ என்று பதிலளித்த ஆர்யன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
“ ஆனா கொஞ்ச நாளா அவளுக்கு மன அழுத்தம் தொடர்பா எந்த பிரச்சினையும் இல்லையே சார். இது எப்படி நடந்துச்சு ?” என்று ரஞ்சித் கவலையுடன் கேட்டான்.
“எனக்குத் தெரியல ” என்று முணுமுணுத்த ஆர்யன் காரை வேகமாக ஓட்டினான். அவன் முகம் வெளிறிப் போயிருந்தது. நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன.
“அவளுக்கு ஒன்னும் ஆகாது சார் “ என்று அவனுக்கு ஆறுதல் கூறினான் ரஞ்சித்.
பவி கண்ணீரின் விளிம்பில் இருந்தாள், சஞ்சுவின் கைகளையும் கால்களையும் தேய்த்து, அவள் பெயரை மீண்டும் மீண்டும் அழைத்து, “சஞ்சு, ப்ளீஸ்… எழுந்திரு…” என்று முணுமுணுத்தாள்.
“பவி, எனக்கு பயமா இருக்கு” என்ற கீர்த்தியின் கண்கள் கவலையில் விரிந்தன.
“அவ நல்லா இருப்பா, டென்ஷன் காரணமா மயங்கி இருப்பா ” என்று சொல்லி பவி உறுதியாக இருக்க முயற்சித்தான்.
அப்போது டாக்டர் அங்கு வந்து சேர்ந்ததும் உடனடியாக தலைமை காவலர் அவரை உள்ளே அழைத்து சென்றார்.
டாக்டர் விரைந்து சென்று சஞ்சுவை விரைவாகவும், முழுமையாகவும் பரிசோதித்தார்.
“டாக்டர், என்ன ஆச்சு ? சஞ்சு ஏன் எழுந்திருக்க மாட்டேங்குறா ?” என்று பவி ஆவலுடன் கேட்டதும், ” இவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மேடம், நாம இவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம். அங்க செக் பண்ணலாம் “ என்று சொன்னார் மருத்துவர்.
“கண்டிப்பா சார்” என்று சம்மதித்த பவி, கீர்த்தி மற்றும் மருத்துவரின் உதவியுடன், மெதுவாக சஞ்சுவை காருக்கு தூக்கிச் சென்றனர். செக்யூரிட்டி ஒருவர் காரை வேகமாக மருத்துவமனைக்கு ஒட்டி சென்றார். வழியில் பவி மீண்டும் ஆர்யனை அழைத்தாள்.
“பவி, அவ எழுந்துட்டாளா ?” என்று எடுத்தவுடன் ஆர்யன் கேட்டான்.
“அண்ணா, டாக்டர் அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் சொன்னாரு, நீங்க அங்க வாங்க “ என்று பதில் சொன்னாள் பவி. அவள் வார்த்தையை கேட்டதும், “ ப… பவி… எப்படி இருக்கா ?” என்று கேட்ட போது ஆர்யனின் குரல் நடுங்கியது.
“டாக்டர் இன்னும் எதுவும் சொல்லல. நாங்க போயிட்டு இருக்கோம்” என்றவள் உடைந்து போகாமல் இருக்க முயற்சித்தாள்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆர்யனின் கண்களில் கண்ணீர் பெருகியது, அவன் பிரேக்கை அழுத்தியாதும் கார் கிரீச்சிட்டு நின்றது. அவனது கைகள் ஸ்டீயரிங்கை மிகவும் இறுக்கமாகப் பிடித்து அவனது விரல்கள் வெண்மையாக மாறியது.
உடனே காரில் இருந்து இறங்கி மறுபுறம் சென்ற ரஞ்சித், “ சார், நீங்க இறங்குங்க, நான் ஓட்டுன்” என்றான் உறுதியாக.
மரத்துப் போன ஆர்யன் இறங்கி பயனியர் இருக்கையில் அமர்ந்ததும் ரஞ்சித் ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், மருத்துவமனையை நோக்கி மின்னல் வேகத்தில் காரை ஓட்டினான்.
***************
முன்னோட்டம்:
“ஷ்ஷ்ஷ், அமைதியா இரு, உன் பையன் பிறக்கறதுக்கு முன்னாடியே உன்ன எப்படி பயமுறுத்தி இருக்கான் பாரு”
