ஆர்யன் மற்றும் சஞ்சு திடீரென அலுவலகத்திற்கு வராத காரணத்தை கண்டுபிடிக்க நினைத்த மாயா, சஞ்சுவின் உடல்நிலையை பற்றி அறிய தீர்மானித்து மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவரை விசாரிக்க ஒரு பெண்ணை நியமித்தாள்.
அந்தப் பெண் ஒரு வழக்கமான நோயாளியின் போர்வையில் மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவரை சந்தித்தாள். அவள் அதிக சோர்வை அனுபவிப்பதாகவும், ஒரு பொது பரிசோதனை தேவை என்றும் டாக்டரிடம் கூறினாள்.
சிறிது நேர பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் புன்னகையுடன், “நீங்க நல்லா இருக்கீங்க. கொஞ்சம் களைப்பு இருக்கலாம். நான் உங்களுக்கு சில வைட்டமின் மாத்திரை பரிந்துரைக்குறேன், அது உங்களுக்கு கொஞ்சம் ஆற்றல் அதிகரிக்கும் “ என்று கூறினார்.
அந்தப் பெண் தலையசைத்து, “ டாக்டர், என் ப்ரெண்ட் சஞ்சனாவுக்கு கொஞ்ச நாள் முன்னாடி இது மாதிரி அறிகுறி தான் இருந்துச்சு ” என்று அந்த பெண் சொன்னதும், டாக்டர் நிமிர்ந்து பார்த்து, “எந்த சஞ்சனா?” என்று கேட்டார்.
“சஞ்சனா ஆர்யன். அவளும் உங்க பேஷன்ட் தானே?” என்று அந்த பெண் கேட்டதும், ஆம் என்றார் டாக்டர்.
“இப்ப எப்படி இருக்கா ? உடம்பு பரவாயில்லையா ?” என்று அந்த பெண் கேட்டதும், டாக்டர் தன் கண்களை லேசாக சுருக்கி ஒரு நொடி யோசித்தார்.
” நான் கொஞ்ச நாள் முன்னாடி அவ கிட்ட பேசினேன், ஏதாவது கவலைப்படுற மதிரி பிரச்சனையானு தெரிஞ்சிக்க தான் கேட்டேன் “ என்று அந்தப் பெண் விரைவாக கூறினாள்.
” அவங்க இப்போ நல்லா இருப்பாங்களே. ஆர்யன் சார் நேத்துல இருந்து எனக்கு போன் எதுவும் பண்ணல “ என்று டாக்டர் எச்சரிக்கையுடன் கூறினார்.
” நேத்து என்ன ஆச்சு ?” என்று அந்த பெண் கேட்டதும், “ வழக்கமான விஷயம் தான். கவலைப்பட ஒண்ணுமில்ல “ என்று டாக்டர் தெளிவில்லாமல் பதிலளித்தார்.
” இல்ல டாக்டர் எனக்குப் புரியல. என்ன வழக்கமான விஷயம் ? ” என்று அந்த பெண் கேட்க, டாக்டர் இப்போது அசௌகரியமாக காணப்பட்டார். “என்ன மன்னிச்சிடுங்க. நான் நோயாளி பத்தி யார் கிட்டயும் பேசுறது இல்ல “ என்று சொல்லிவிட்டார் ஆனால் அந்த பெண் மீண்டும் அவரிடம், “பரவாயில்ல டாக்டர், நான் அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட் தான் ” என்று மீண்டும் விவரம் தெரிந்து கொள்ள முயற்சித்தாள். அதற்கு டாக்டர், ” அப்போ நீங்க அவங்ககிட்டயே இத பத்தி நேரடியா பேசலாமே ” என்று சொன்னார்.
டாக்டர் அதற்கு மேல் சொல்ல தயாராக இல்லை என்று புரிந்து கொண்டு, “ நிச்சயமா நான் அவகிட்ட பேசுறேன். நன்றி டாக்டர்.” என்று டாக்டரின் சந்தேகத்தை உணர்ந்த அந்தப் பெண், மேற்கொண்டு பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் வெளியே சென்றவுடன், டாக்டர் உடனடியாக மொபைலை எடுத்து ஆர்யனின் எண்ணை டயல் செய்தார். அவர் அழைப்புக்கு பதில் சொன்ன ஆர்யன், “ஹலோ டாக்டர். நானே உங்களுக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன்” என்றான்.
” அப்படியா ? சஞ்சனா நல்லா இருக்காங்களா ?” என்று டாக்டர் கேட்டதும், “அவ நல்லா இருக்கா, நேத்து மகப்பேறு டாக்டர் பரிந்துரை பண்ண புரத சப்ளிமெண்ட்ஸுக்கு மாற்று இருக்கானு உங்க கிட்ட கேட்க நெனச்சேன், இப்போ கொடுதுருக்க வாசன சஞ்சுவுக்கு குமட்டல் ஆகுது “ என்று சொன்னான் ஆர்யன்.
” அதுல நிறைய சுவையானது கூட இருக்கு சார், நீங்க அதுல அவங்களுக்கு புடிச்ச சுவை வாங்கி கொடுங்க “ என்று டாக்டர் சொன்னதும், “ரொம்ப நல்லது, சரி நீங்க எதுக்கு போன் பண்ணீங்க ? “ என்று கேட்டான் ஆர்யன்.
” இன்னைக்கு ஒரு நோயாளி வந்துருந்தாங்க, அவங்க சஞ்சனாவோட உடல்நிலை பத்தி அதிக ஆர்வம் காட்டி என்கிட்ட தகவல் கேட்டாங்க. அவங்களோட ப்ரெண்ட்னு சொனாங்க ஆனா எனக்கு என்னவோ அவங்க நடத்தை சந்தேகமாக இருந்துச்சு “ என்று டாக்டர் சொன்னதும், “ நீங்க அவகிட்ட ஏதாவது சொன்னீங்களா ?” என்று உடனே கேட்டான் ஆர்யன்.
” இல்லங்க சார். நோயாளி பத்தி எந்த விவரமும் தெரியாதவங்க கிட்ட நான் ஒருநாளும் வெளிப்படுத்த மாட்டேன் “ என்று டாக்டர் சொன்னார்.
” ரொம்ப நல்லது டாக்டர். மகப்பேறு டாக்டர் கிட்ட எச்சரிக்கையா இருக்க சொல்லுங்க. இந்த செய்தி இப்போதைக்கு வெளியாகுறத நாங்க விரும்பல” என்று ஆர்யன் வலியுறுத்தினான்.
“புரியுது சார். நான் பார்த்துக்குறேன் “ என்று டாக்டர் சொன்னதும் ஆர்யன் அழைப்பை துண்டித்து ரஞ்சித்தை தனது ஆபீஸ் ரூமுக்கு அழைத்தான்.
” சஞ்சுவோட உடல்நிலைய பத்தி தெரிஞ்சிக்க மாயா ரொம்ப தீவிரமா முயற்சி பண்றா ரஞ்சித். நேத்து வந்த டாக்டரோட காரை யாரோ பின் தொடர்ந்து இருக்காங்க. அதிர்ஷ்டவசமா, அது தலைமை மருத்துவரோட கார். இன்னைக்கு ஒரு பொண்ணு சஞ்சுவோட ப்ரெண்டுனு சொல்லி நடிச்சு அவர சந்திச்சு, சஞ்சு பத்தி விவரம் கேட்டு இருக்கா “ என்று ஆர்யன் சொன்னதும், ” அப்போ நம்ம மேன்ஷன ஆளுங்க கண்காணிச்சிட்டு இருக்காங்கனு அர்த்தம்” என்று முடித்தான் ரஞ்சித்.
” சரியா சொன்ன. யார் கண்காணிக்குறாங்கனு பாரு ஆனா எதுவும் நடவடிக்க எடுக்க வேணாம் “ என்று ஆர்யன் சொல்ல அதற்கு ரஞ்சித் சரி என்று கூறினான்.
அடுத்த இரண்டு நாட்களில், மாயாவின் விரக்தி அதிகரித்தது. உண்மையை வெளிக்கொணரும் அவளது திட்டங்கள் பலமுறை தோல்வியடைந்தன. மேன்ஷனை கண்காணித்துக் கொண்டிருந்த சிலரை அடையாளம் கண்ட ரஞ்சித், சத்தமில்லாமல் பாதுகாப்பை அதிகரித்து அவர்களை கண்காணித்தான்.
இதற்கிடையில், ஆர்யனும் கௌசல்யாவும் சஞ்சுவை நன்றாக கவனித்துக் கொண்டனர். குறிப்பாக, ஆர்யன் அவளது மனநிலை மாற்றங்களை நிர்வகிக்கவும், மாறும் ஏக்கங்களை பூர்த்தியும் செய்தான்.
ஒரு நாள் இரவு, சஞ்சு தூங்குவதை உறுதி செய்த பிறகு, ஆர்யன் அவளருகில் படுத்து தூங்கினான் ஆனால் சில நிமிடங்களில் சஞ்சு அவனை உலுக்கி எழுப்பினாள்.
ஆர்யன் திடுக்கிட்டு உடனே எழுந்து உட்கார்ந்தான். “சஞ்சு, ஸ்வீட் ஹார்ட், என்ன ஆச்சு ? ஏதாவது பிரச்சனையா? ஹாஸ்பிடல் போகலாமா ?” என்று அவன் பதற்றத்துடன் கேட்க, சஞ்சு அவனிடம், “ஆர்யன், எனக்கு பசிக்குது” என்று முணுமுணுத்தாள்.
ஆர்யன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி சிரித்தான். “உனக்கு என்ன வேணும்னு சொல்லு?” என்று அவன் மெல்லிய குரலில் கேட்டதும், “எனக்கு நெய் போட்டு பொடி இட்லி வேணும் “ என்று சொன்னாள் சஞ்சு.
“அவ்வளவு தானா? இரு நான் போய் கொண்டு வரேன் ” என்று ஆர்யன் சொன்னதும், “ நானும் உன்கூட வரேன் “ என்று சொன்னாள் சஞ்சு.
ஆர்யன் புன்னகையுடன் அவளைத் தூக்கி சமையலறைக்குச் சென்றான். அவளை மெதுவாக மேடை மேல் உட்கார வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜில் இருந்த இட்லி மாவை எடுத்தான். இட்லி தட்டுகளில் மாவை ஊற்றி குக்கரை வைக்கும் போது அவள் கொட்டாவி விடுவதைப் பார்த்து, சிரித்தபடி அவள் மூக்கை இழுத்தான்.
சஞ்சு அவனை அருகில் இழுத்ததும் ஆர்யன் அவளுக்கு இருபுறமும் கைகளை வைத்து அவள் கழுத்தில் முத்தமிட்டான். தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தவள், அவன் உதடுகளை முத்தமிட்ட பின் அவன் கீழுதட்டைக் கடித்ததும் அவன் வலியில் சிணுங்கினான்.
” என்ன அவ்ளோ பசியா ? “ என்று ஆர்யன் கேட்க, “ ஆமா, அப்படியே உன்ன கடிச்சு சாப்பிட போறேன் “ என்று சொன்னாள் சஞ்சு.
ஆர்யன் சிரித்தபடி அவள் கழுத்தில் இருந்த நாடித்துடிப்பை முத்தமிட்டு அவள் மார்பை நோக்கி நகர்ந்தான். இட்லி குக்கரில் இருந்து ஒரு கூர்மையான விசில் அவர்களின் ரொமான்சை கெடுத்தது.
ஆர்யன் உடனே மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய்யும் இட்லியும் சேர்த்து இட்லி போடி தூவி அதன் மேல் கறிவேப்பிலையுடன் பிரட்டி அவற்றை ஒரு தட்டில் பரிமாறி அவளிடம் கொடுத்த பொது அந்த நறுமணம் சமையலறையை நிறைத்தது.
சஞ்சு முன்னால் குனிந்து, வாசனையை உள்வாங்கி புன்னகைத்தாள். அவன் ஒரு போர்க் எடுத்து அவளுக்கு மெதுவாக ஊட்டினான். அவளும் பதிலுக்கு அவனுக்கு கொஞ்சம் ஊட்டினாள். சாப்பிட்ட பிறகு, அவளை மீண்டும் படுக்கைக்கு அழைத்துச் சென்று, அவள் தன் அணைப்பில் தூங்கியபோது அவளை அணைத்துக் கொண்டான்.
சில நாட்கள் கழித்து மாயா அலுவலகத்திலிருந்து கோபமான மனநிலையில் வீடு திரும்பி, கையில் கிடைத்ததை எல்லாம் வீசி எறிந்தாள், லிவிங் அறை முழுவதும் உடைந்த பொருட்களால் நிறைந்தது. பணிப்பெண்கள் அவளை நெருங்க பயந்து உறைந்து நின்றனர். அவர்களில் ஒருவர் ராஜேஷை அழைத்து விவரத்தை சொன்னதும், அவன் உடனடியாக சந்திரசேகருக்கு தகவல் கொடுத்தான்.
சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த சந்திரசேகர் லிவிங் அறை அலங்கோலமாக இருப்பதை பார்த்தார். அவரைக் கண்டதும், தந்தையையும் மகளையும் தனியாக விட்டுவிட்டு பணிப்பெண்கள் அங்கிருந்து ஓடினர்.
“மாயா, என்ன பிரச்சினை?” என்று கடுமையாகக் கேட்டார் சந்திரசேகர் அதற்கு அவள், “ஆர்யனும் சஞ்சனாவும் ஆபீசுக்கு வரலை.” என்று சொன்னாள்.
“அதனால என்ன இப்போ ?” என்று அவர் மீண்டும் கேட்க, “கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகுது. அவங்க ஏன் ஆபீஸ் வரலன்னு எனக்கு இன்னும் தெரியல.” என்று சீறினாள்.
“ஒரு மாசமா ?” என்று புருவத்தை உயர்த்தியவர். “சரி. நான் கண்டுபிடிக்கிறேன். இப்ப போய் ரிலாக்ஸ் பண்ணு ” என்று சொன்னதும், மாயா மௌனமாக அவளது அறைக்கு சென்றாள்.
சந்திரசேகர் ராஜேஷின் பக்கம் திரும்பி “எல்லாத்தையும் சொல்லு, மாயா என்ன பண்ணிட்டு இருக்கா ?” என்று கேட்டார்.
ராஜேஷ் தயங்கினான், பின்னர் சஞ்சுவின் மருத்துவ விவரங்களை சேகரிக்க மாயா மேற்கொண்ட முயற்சிகள் உட்பட தனக்குத் தெரிந்த அனைத்தையும் வெளிப்படுத்தினான்.
“அடுத்த முறை மாயா என்ன சொன்னாலும் எனக்குத் தெரியப்படுத்து ” என்று எச்சரித்தார் சந்திரசேகர்.
“கண்டிப்பா சார். என்னை மன்னிச்சிடுங்க.” என்று ராஜேஷ் அங்கிருந்து சென்றான்.
இரண்டு மாதங்கள் கடந்து போனது, சஞ்சு இப்போது கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் இருந்தாள். குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க மருத்துவர் ஒரு விரிவான பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்ய திட்டமிட்டார்.
தங்கள் வீடு இன்னும் கண்காணிப்பில் இருப்பதை அறிந்த ஆர்யன், யாரும் அவர்களை பின்தொடராமல் மருத்துவமனையை அடைய திட்டமிட்டான்.
அவனின் திட்டப்படி, ஆர்யனின் நேர்த்தியான கருப்பு லம்போர்கினி கார் பாலாவுடன் மேன்ஷனை விட்டு வெளியேறியது. கனமான கருப்பு வண்ண திரை இருந்ததால் உள்ளே இருப்பவரின் அடையாளம் வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. எதிர்பார்த்தது போலவே, மாயாவின் ஆட்கள் ஆர்யன் உள்ளே இருப்பதாக நினைத்து அந்த காரைப் பின்தொடர்ந்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, கார் பார்வையில் இருந்து மறைந்ததும், மாயாவின் ஆட்கள் இனி அருகில் இல்லை என்பதை ரஞ்சித் உறுதிப்படுத்திய பின்னர் ஆர்யன் சஞ்சுவை அணைத்தபடி தன் பி.எம்.டபிள்யூ காரின் பின் சீட்டில் உட்கார வைக்க, ரஞ்சித் காரை ஒட்டி நேராக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
அவர்கள் விரைவில் மருத்துவமனையை அடைந்து, முகத்தில் மாஸ்க் அணிந்து தனி நுழைவாயில் வழியாக உள்ளே சென்று டாக்டர்கள் பயன்ப்படுத்தும் பிரத்யேக லிப்ட் மூலம் நேராக மகப்பேறு மருத்துவர் இருக்கும் தளத்திற்கு சென்றனர்.
ஆர்யனும், சஞ்சுவும் டாக்டரின் அறையில் நுழைந்ததும் பெண் மருத்துவர் அவர்களை அன்புடன் வரவேற்றார். சஞ்சுவின் எடை மற்றும் உயிர் உறுப்புகளை பரிசோதித்த பிறகு, அவர் புன்னகையுடன், ” எல்லாம் நிலையா இருக்கு, இப்போ ஸ்கேன் பண்ணலாம்.” என்று சொன்னார்.
சஞ்சுவை கட்டிலில் படுத்து தன் மேலாடையை அடிவயிற்றுக்கு மேலே இழுத்துக் கொண்டாள். மருத்துவர் அவளுடைய வயிற்றில் ஒரு குளிர் ஜெல்லைப் பயன்படுத்தி, டிரான்ஸ்யூசரை மெதுவாக அவளுடைய தோல் முழுவதும் இயக்கினார். திரை ஒளிர்ந்து, அவளுக்குள் வளர்ந்து வரும் குழந்தையை வெளிப்படுத்தியது.
ஆர்யன் அவள் கையைப் பிடித்துக் கொள்ள, இருவரும் தங்கள் குழந்தை திரையில் தோன்றியதை பிரமிப்புடன் பார்த்தனர். தாங்கள் உருவாக்கிய சின்னஞ்சிறு உயிரைப் பார்த்ததும் அவர்கள் கண்களில் கண்ணீர் பெருகியது. பின்னர், டாக்டர் ஆடியோவை ஆன் செய்தார்.
“ தம்ப்-டம்ப். தம்ப்-டம்ப். “ என்று ஒரு வலுவான, தாள இதயத் துடிப்பு அமைதியான அறையை நிரப்பியது. அந்த ஒலி அவர்கள் உடலை சில்லிட வைத்தது.
” இது உங்க குழந்தையோட இதயத் துடிப்பு” என்று புன்னகையுடன் மெதுவாகச் சொன்னார் டாக்டர்.
சஞ்சுவின் விரல்கள் ஆர்யனின் கையை இறுக்கின. அவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
மருத்துவர் அவரது இருக்கைக்கு செல்வதற்கு முன்பு அனைத்து வளர்ச்சி விவரங்களையும் பதிவு செய்தார். ஆர்யன் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து சஞ்சுவின் வயிற்றில் இருந்த ஜெல்லை மெதுவாக துடைத்து, அவள் எழுந்து உட்கார்ந்து ஆடை அணிந்து கொள்ள உதவினான். தயாரானதும், அவர்கள் இருவரும் மருத்துவரின் முன் அமர்ந்தனர்.
” அம்மாவும், குழந்தையும் நல்லா இருக்காங்க, வளர்ச்சியும் சரியான அளவுல இருக்கு. உங்க குழந்தைக்கு இப்போ பதினைந்து வாரம் ஆகுது.” என்று டாக்டர் சொன்னதும் இருவரும் மகிழ்ச்சியில் புன்னகைத்தனர்.
“அடுத்த செக்கப் எப்போ வரணும்?” என்று ஆர்யன் கேட்டதும், “அடுத்த மாசம் வாங்க சார். இதுக்கு நடுவுல உடம்புக்கு முடியலனா இல்ல ஏதாவது அசௌகரியம் இருந்தா, எனக்கு போன் பண்ண தயங்க வேண்டாம். அதுவர, ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் மாத்திரைய தொடர்ந்து சாப்பிடுங்க “ என்று சொன்னார் டாக்டர்.
“தேங்க்யூ டாக்டர்.” என்று ஆர்யன் சொல்ல, சஞ்சு அவரிடம், “ நான் மறுபடியும் வேலைய பார்க்க தொடங்கலாமா?” என்று கேட்டாள்.
டாக்டர் ஒரு கணம் யோசித்த பின்பு, ” நீங்க போகலாம் ஆனா உங்க குழந்த மேல நிறைய கவனம் வேணும், கொஞ்சம் கூட மன அழுத்தம் இருக்க கூடாது. நீங்க ஏற்கனவே நாள்பட்ட மன அழுத்தத்தால பாதிக்கப்பட்டு இருந்துருக்கீங்க அது குழந்தைக்கு பாதுகாப்பா இருக்காது.” என்று டாகடர் எச்சரித்தார்.
“நாங்க பார்த்துக்குறோம் டாக்டர்” என்று ஆர்யன் அவருக்கு உறுதியளித்து, மீண்டும் நன்றி சொல்லிவிட்டு காருக்கு திரும்பினர்.
சௌகரியமாக உட்கார்ந்ததும் சஞ்சு அவன் பக்கம் திரும்பி, “ஆர்யன், வீட்ல இருக்கறது எனக்கு போரடிக்குது.” என்று கெஞ்சியபடி சொன்னாள். அதற்கு ஆர்யன் உடனே, “அப்போ ஆபீஸ் போறத தவிர வேற என்ன செய்யணும்னு சொல்லு “ என்றான்.
“நான் டென்ஷன் இல்லாம கொஞ்சமா வேலை செய்றேன், என்ன நம்பு “ என்று சஞ்சு உறுதியளித்தாள் ஆனால் ஆர்யன் அதற்கு, ” பொண்டாட்டி, டாக்டர் சொன்னது நீ கேட்ட தானே ? “ என்றான்.
“ போடா “ என்று சொல்லி சஞ்சு முகத்தை திருப்பி கொள்ள, “ மா, ப்ளீஸ் உன் ஆரோக்கியத்துல ரிஸ்க் எடுக்க முடியாது. பவி, கீர்த்தி, பிரதீப் பிசினஸ் நல்லா பார்த்துக்குறாங்க. அது மட்டும் இல்ல, இப்போ புது தயாரிப்பு வெளியீடு நிச்சயம் உனக்கு டென்ஷன் கொடுக்கும். அதனால தான் சொல்றேன் “ என்று ஆர்யன் அவளுக்கு புரிய வைக்க முயன்றான். ஆனால் சஞ்சு அப்போதும், “ போ நான் கோவமா இருக்கேன் “ என்றாள்.
ஆர்யன் அவளை ஓரக்கண்ணால் பார்த்து, ” நீ நான் சொல்றத கேட்கலானா, அப்புறம் நான் பார்ட்னர்ஷிப் ரத்து பண்ணி, பிசினஸ் மொத்தமா மூடிடுவேன் “ என்று சொன்னான். அவன் வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்சு, “ லூசா பா நீ ? “ என்று கேட்டாள்.
“என்ன? அதனால வர போற இழப்பு பத்தி நான் கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேன் உன்னையும் நம் குழந்தையையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை.” ” என்றான் சற்றும் கலங்காமல்.
அவள் உதட்டைப் பிதுக்கினாள், இன்னும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆர்யன் சிரித்துக் கொண்டே, ” சரி, ரெண்டு நாள் பீச் ஹவுஸ் போவோம். நீ அங்க ரிலாக்ஸ் பண்ணலாம் “ சம்மதமா ? “ என்று கேட்டதும், அவளும் “சரி,” என்று மென்மையாக ஒப்புக்கொண்டு, “ஆனா வீட்டுக்கு போனதும் நீ ஆபீஸ் போகணும். “ என்று சொன்னாள்.
“அத பத்தி அப்புறம் பேசிக்கலாம்” என்றான் ஆர்யன் மழுப்பலாக. ஆனால் சஞ்சு, ” முடியாது, நீ சொன்னத நான் கேட்டேன்ல அது மாதிரி இப்போ நான் சொல்றத நீ கேளு “ என்று திட்டவட்டமாக சொன்னாள். “ “ஏன் மா ?” என்று ஆர்யன் கேட்க, “ அப்போ தானே பாப்பா பிறந்த அப்புறம் நீ நிறைய நாள் என் கூட இருக்க முடியும் “ என்று புன்னகைத்து கொண்டே சொன்னாள் சஞ்சு.
“நீ சொல்றது சரிதான், ஆனா இப்போது என் பாப்பாவ நான் கவனிச்சுக்கனுமே ? “ என்று ஆர்யன் சொல்ல, ” உன் பாபாவும், நம்ம பாப்பாவும் நல்லா இருப்போம், நான் கவனமா இருப்பேன் “ என்று சஞ்சு கிண்டளாக சொன்னதும் ஆர்யன் சிரித்து, அவள் கையை முத்தமிட்டான்.
ரஞ்சித்தை கடற்கரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு சைகை செய்தான், அடுத்த இரண்டு நாட்களை அங்கு அவர்கள் ஒன்றாக இருக்க திட்டமிட்டான்.
*********************************************
முன்னோட்டம்:
” ஒவ்வொரு முறையும் உன்ன முதல் முறையா தொடுற மாதிரியே இருக்கு, என்னடி மாயம் வெச்சுருக்க?”
