தன் மகளை பற்றிய கவலையில் சந்திரசேகர் மருத்துவமனையின் தனி அறையில் தன்னந்தனியாக அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி சிகரெட் புகை காற்றில் சூழ்ந்து கொண்டிருந்தது. மாயாவுடன் ஒரு காலத்தில் அவர் பகிர்ந்து கொண்ட ஆனந்தமான நினைவுகளை அவர் மனம் மீண்டும் மீண்டும் அசைபோட்டது. அவளுடைய சிரிப்பு, வேடிக்கையான கேலிகள், அவளுடைய கனவுகள் எல்லாமே இப்போது மௌனமாகிவிட்டன. யதார்த்தத்தின் கனம் பாறாங்கல் போல அவர் மனதை அழுத்தியது.
கதவு தட்டப்படும் சத்தம் அவர் சிந்தனையை தடுத்தது. அறைக்குள் நுழைந்த ராஜேஷ், காற்றில் கலந்திருந்த புகையை கவனித்து நின்றான்.
“என்ன ஆச்சு ? அவள கடத்தியாச்சா ?” என்று பொறுமையிழந்த குரலில் கேட்டார் சந்திரசேகர்.
” சார், நான் ஆளுங்கள அனுப்பி இருக்கேன், சீக்கிரம் தகவல் கிடைக்கும்” என்று ராஜேஷ் நிதானமாக பதிலளித்தான். அதற்கு சந்திரசேகர் உடனே அவனை நோக்கி திரும்பி, “சீக்கிரம் பண்ணு, அவள நம்ம இடத்துக்கு கொண்டு வர என்ன வேணும்னாலும் செய். அப்புறம் மாயாவோட நண்பர்கள வர சொல்லு. நான் அவங்கள சந்திக்க விரும்புறேன். ஊட்டியில மாயா போன அந்த பப் பத்தி எல்லா விவரமும் கண்டுபுடி “ என்று உத்தரவிட்டார்.
“நான் பாத்துக்கறேன் சார்” என்று உறுதியளித்த ராஜேஷ், வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.
இதற்கிடையில், ஆர்யன் முழுமையாக அமைதியடைந்து, ரஞ்சித்துடன் மேன்ஷனை விட்டு வெளியேறினான். அவர்கள் சென்றவுடன் ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் சஞ்சுவை கடத்த மேன்ஷனுக்குள் புகுந்தது. கௌசல்யாவும், பணிப்பெண்களும் பயத்தில் அலறினர், அந்த ஆட்கள் மேன்ஷனின் ஒவ்வொரு மூலையிலும் புகுந்து, தளபாடங்களைக் கவிழ்த்து, இரக்கமற்ற அவசரத்துடன் சஞ்சுவை தேடினர். ஆனால் அவள் அங்கு இல்லாததால் ராஜேஷை அழைத்தனர்.
“சார், அவங்க இங்க இல்ல. ஆர்யன், சஞ்சு ரெண்டு பேருமே இங்க இல்ல ” என்று ஒருவன் தெரிவித்தான்.
ராஜேஷ் போனை வைத்துவிட்டு மருத்துவமனையில் உள்ள தனது தற்காலிக அறைக்குத் திரும்பி உடனடியாக தனது தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குழுவை அழைத்து, ஆர்யன், சஞ்சனா மற்றும் மேன்ஷனில் தொடர்புடைய ஒவ்வொரு தொழில்நுட்ப சாதனத்தையும் ட்ராக் செய்ய உத்தரவிட்டான். தனது ஆட்கள் மூலம், வீட்டின் முக்கிய பகுதிகளில் ரகசிய மைக்ரோபோன்களை பொருத்தினான்.
விரைவிலேயே, அவனுடைய கணினியில் உள்வரும் கண்காணிப்பு தரவுகளால் ரீங்காரமிட்டது. ராஜேஷ் அறிக்கையை ஸ்கேன் செய்துவிட்டு நேராக சந்திரசேகரின் அறைக்குச் சென்றான்.
“வேலை முடிஞ்சுதா?” என்று சந்திரசேகர் அவனைப் பார்க்காமலேயே கேட்டார்.
“இல்ல சார், ஆர்யன், சஞ்சனா, ரஞ்சித் மூணு பேருமே மேன்ஷன்ல இல்ல. அவங்க செக்யூரிட்டி ஆளுங்க கூட வழக்கம் போல இல்ல. நேத்து நைட்டு அவங்க எல்லாரும் அங்கிருந்து கிளம்பி போய் இருக்காங்க. கடைசியா வாங்க மொபைல் சிக்னல் திருச்சியில இருந்துருக்கு. அதுக்கு அப்புறம் ஆர்யனும், ரஞ்சித்தும் மட்டும் மேனஷனுக்கு திரும்பி போய் இருக்காங்க, அதுல இருந்து அவங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணி இருக்கு. ஆர்யனுக்கு நம்ம ப்ளான் தெரிஞ்சிருக்கும் போல ” என்று ராஜேஷ் அனைத்து தகவலையும் கூறினான்.
“என்னடா ஆச்சு?” என்று மேஜையில் கையை ஓங்கி அறைந்தார் சந்திரசேகர். “எனக்கு நொண்டிச் சாக்கு சொல்லாத, எத்தன ஆளுங்க வேணும்னாலும் அனுப்பு ஆனா அவள கொண்டு வா. நான் அவள என் இடத்துல வெச்சு நரகம் எப்படி இருக்கும்னு அந்த ஆர்யனுக்குக் காட்ட விரும்புறேன்.” என்று கர்ஜித்தார்.
“ சார், நான் எல்லா வகையிலையும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன், நம்ம ஆளுங்க நிறைய பேர அனுப்பி தேட சொல்லி இருக்கேன், சீக்கிரம் கண்டுபுடிச்சிடலாம் “ என்று ராஜேஷ் அவரை சமாதானம் செய்ய முயன்றான்.
சந்திரசேகர் சில கணங்களுக்குப் பிறகு தனது அறையை விட்டு வெளியே வந்த போது, அவரது பார்வை மாயாவின் வார்டுக்கு அருகில் லாபியில் நின்று கொண்டிருந்த ஆர்யன் மற்றும் ரஞ்சித் மீது விழுந்தது. அவருக்குள் ஆத்திரத்தின் எரிமலை போல வெடித்தது, அவர் அவர்களை நோக்கி பாய்ந்தார். சந்திரசேகர் எதுவும் செய்யும் முன் ரஞ்சித் ஆர்யனின் முன்னால் நின்று அவரை வழி மறித்தான்.
” இங்க எதுக்கு வந்தீங்க? உயிரைக் காப்பாத்திக்க பயந்து உயிர் பிச்ச கேட்க வந்தியா ?” என்று சந்திரசேகர் கத்தினார். ” நீ என் வாழ்க்கைய நரகமாக்கிட்ட ஆர்யன். அதை பார்க்க நீயும் தயாரா இரு. உன்ன ஒரு நொடி கூட சந்தோஷமா இருக்க விட மாட்டேன்.” என்று சீறினார்.
” என்ன மன்னிச்சிடுங்க மிஸ்டர் சந்திரசேகர், உங்க பொண்ணு இந்த நிலைமையில இருக்குறது எனக்கு ரொம்ப வருத்தமா தான் இருக்கு, ஆனா நல்லா ஞாபகம் இருக்கட்டும், இதெல்லாம் நீங்க அவ மேல வெச்சுருந்த கண்மூடித்தனமான பாசம் காரணமா தான் நடந்துச்சு. நீங்க கொடுத்த ஆதரவு அவள எல்லா அசிங்கத்தையும் செய்ய ஊக்குவிச்சுது. அப்புறம் நான் இங்க என் உயிருக்காக கவலைப்பட்டு இங்க வரல, அதுக்கு எனக்கு எந்த அவசியமும் இல்ல. உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்ல தான் வந்தேன் “ என்று ஆர்யன் குரல் உறுதியாக சொல்லி, ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தான்.
“எனக்கும், என் மனைவிக்கும் பிரச்சன செய்ய நினைக்காதீங்க. அத விட உங்க பொண்ணு இழந்த குழந்தையோட அப்பா யாருனு கண்டுபுடிக்குற வழிய பாருங்க. நாட்டுல எந்தப் பகுதியில இருந்து உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் நான் ஏற்பாடு செய்றேன். குறைந்தபட்சமா கடைசியா ஒரு அட்வைஸ் பண்றேன், “ என் வாழ்க்கையில இருந்து விலகி இருங்க “ என்று ஆர்யன் உறுதியாக எச்சரித்தான்.
ஆர்யனின் வார்த்தையை கேட்டதும், “அது நடக்காது, என் பொண்ணு இந்த நிலமையில இருக்குறதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் “ என்று சந்திரசேகர் சொல்ல, “அவளோட இந்த நிலமைக்கு நானோ, என் மனைவியோ எந்த வகையிலையும் பொறுப்பு இல்ல, ஒரு முறையாவது நிதானமா, நல்லா நேரான எண்ணத்தோட சிந்தியுங்க “ என்று ஆர்யன் கடுமையாகச் சொன்னான்.
“உன் அட்வைஸ் எல்லாம் உன் பாக்கெட்ல வச்சுக்கோ, உன் பொண்டாட்டிய என்கிட்ட இருந்து காப்பாத்த உன்னால முடிஞ்ச வர முயற்சி செய், ஆனா நிச்சயம் உன்னால அது முடியாது ” என்று உறுமினார் சந்திரசேகர்.
ஆர்யன் அவரை இன்னும் நெருங்கி, அவர் கண்களை நேருக்கு நேராக சந்தித்தான், “நான் எதைப் பத்தியும், யார பத்தியும் கவலைப்பட மாட்டேன். என் மனைவிக்காக எந்த எல்லைக்கும் போய், எதையும் செய்யத் துணிவேன் “ என்று சொன்ன போது அவன் குரல் தாழ்ந்து, அமைதியாக ஆனால் கடுமையான எச்சரிக்கை போல இருந்தது. “ உங்க பொண்ணு சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்குக் காத்திராமல் ஆர்யன் திரும்பி ரஞ்சித்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
இருவரும் மேன்ஷனை அடைந்ததும், சந்திரசேகரின் ஆட்கள் மேன்ஷனில் ஏற்படுத்தி இருந்த நாசவேலை அவர்களை வரவேற்றது. சிதறிக் கிடந்த மரச்சாமான்கள், உடைந்த ஜாடிகள், சிதறிக் கிடந்த உடமைகள் என்று சுற்றும் முற்றும் பார்த்தான் ஆர்யன்.
“ரஞ்சித், எல்லா ஆதாரத்தையும் முழுசா சேகரிச்சு ரெகார்ட் பண்ணு, ஒன்னு விடாம ஆதாராம் தயார் பண்ணு. சிசிடிவி காட்சி எல்லாத்தையும் ராஜேஷுக்கு அனுப்பு ” என்று ஆர்யன் அறிவுறுத்தினான்.
“சரி சார். கௌசல்யா அம்மா கிட்ட சொல்லி உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று ரஞ்சித் கேட்டதும், “இல்ல, எனக்குப் பசி இல்லை. அப்புறம் ஏதாவது சாப்பிடறேன்.” என்றான் ஆர்யன்.
ஆர்யனின் நிலையை புரிந்து கொண்ட ரஞ்சித் சில நொடிகள் அவனையே பார்த்தான். “சார், நாம உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவா, ஆரோக்கியமா இருக்கனும். சஞ்சுவுக்காக உங்கள நீங்களே கவனிச்சுக்கணும். அவ திரும்பி வந்து உங்கள நான் பார்த்துக்கலன்னு கேள்வி கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது.” என்று ரஞ்சித் மென்மையாகச் சொன்னான்.
“நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன் ” என்று ஆர்யன் முணுமுணுத்துவிட்டு, மெல்ல தன் அறைக்கு சென்றான். வெளியே நிலவிய குழப்பத்தை விட அங்கே அறைக்குள் நிலவிய நிசப்தம் கனமாக இருந்தது. நைட்ஸ்டாண்டில், அவர்களின் புகைப்படத்தின் கண்ணாடி சற்று தூசி படிந்திருந்தது, ஆனால் அதில் இருந்த சஞ்சுவின் முகத்தில் புன்னகை இன்னும் பிரகாசித்தது.
ஆர்யன் படுக்கையின் விளிம்பில் அமர்ந்திருந்தான், கண்கள் படத்தின் மீது பதிந்திருந்தன, குற்ற உணர்வு, காதல் மற்றும் உறுதியின் புயல் அவனுக்குள் சுழன்றடித்தது.
எங்கோ ஒரு தொலைதூர கிராமத்தில், சஞ்சு மெதுவாக கண்களைத் திறந்து, கண்களை கசக்கினாள். அவள் பார்வை பரிச்சயமில்லாத அறையைச் சுற்றிச் சுற்றி வந்தது, அவள் முகத்தில் குழப்பம் படர்ந்தது. இது அவள் வீடு இல்லை… அவளுக்கு அடையாளம் தெரிந்த இடமும் இல்லை என்று உணர்ந்தாள். ரஞ்சித் தங்கள் அறைக்குள் நுழைந்த முந்தைய இரவு, மாயாவின் விபத்து மற்றும் கருச்சிதைவு பற்றிய செய்தி அவள் மனதில் பளிச்சிட்டது. ஆனால் அதற்குப் பிறகு எல்லாமே வெற்றிடமாகத்தான் இருந்தது.
ஆர்யன் தன்னருகில் இல்லை என்பதை உணர்ந்ததும் அவளுக்குள் பீதி எழுந்தது.
“ஆர்யன்?” என்று அவள் குரல் நடுங்க அழைத்தாள்.
சில கணங்களுக்குப் பிறகு, ஒரு பெண் அறைக்குள் விரைந்தார். அவரை பார்த்ததும், ” யார் நீங்க ? ஆர்யன் எங்க? இது எந்த இடம்? நான் எப்படி இங்க வந்தேன் ? ” என்று சஞ்சு குரல் நடுங்க கேட்டாள்.
“ஹலோ சஞ்சு, நான் டாக்டர் பானு, உங்கள பார்த்துக்க ஆர்யன் சார் என்ன இங்க அனுப்பி இருக்காரு ” என்று பானு மென்மையான குரலில் சொன்னதும், “ஆர்யன் எங்க?” என்று சஞ்சு மீண்டும் அவரிடம் கேட்டாள்.
“சார் இங்க இல்ல. நீங்களும், நானும் மட்டும் தான் இங்க இருக்கோம். நமக்கு உதவி செய்ய இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க ” என்று பானு சொன்னதும், “இது எந்த இடம்?” என்று சஞ்சு கேட்டாள்.
“நாம சென்னையில இருந்து ரொம்ப தொலைவுல இருக்கோம் சஞ்சு. உங்க பாதுகாப்புக்காக அவர் உங்கள இங்கு அனுப்பி இருக்காரு ” என்று பானு கூறினார்.
சஞ்சுவின் கண்கள் அவளது உடமைகளைத் தேடின. “என் போன் எங்க? நான் அவர்கிட்ட பேசணும்.” என்று சஞ்சு சொல்ல, “என்ன மன்னிச்சிடுங்க சஞ்சு. நீங்க இப்போ அவர்கிட்ட பேச முடியாது. அவர் மட்டும் தான் போன் பண்ண முடியும். நிலைமை சரியா இருக்கும் போது ஆர்யன் சார் கூப்பிடுவாரு. அதுவர நீங்க வெயிட் பண்ணனும் ஆனா உங்களுக்காக ஒரு லெட்டர் கொடுத்திருக்காரு ” என்று சொல்லி டாக்டர் பானு மடித்து வைத்திருந்த ஒரு கவரை அக்கறையுடன் சஞ்சுவிடம் கொடுத்தார்.
” லெட்டர் படிச்சிட்டு ரெடியாகி சாப்பிட வாங்க. நீங்க ரொம்ப நேரமா எதுவும் சாப்பிடாம இருக்கீங்க. உங்க டிரஸ் எல்லாம் ஏற்கனவே அலமாரியில இருக்கு. ரிலாக்ஸ், நீங்க இங்க என்கூட பாதுகாப்பா இருப்பீங்க ” என்று சொல்லிவிட்டு வெளியேறிய பானு. கதவருகே நின்று திரும்பி சஞ்சுவை பார்த்து, “நீங்க என்ன நம்பலாம். ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க.” என்று சொல்லிவிட்டு, கதவை மெதுவாக மூடினார்.
கவரைப் பிரித்தபோது சஞ்சுவின் கைகள் நடுங்கின. ஆர்யனின் பழக்கமான கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதத்தைப் பிரித்தபோது அவள் இதயம் இறுகியது.
“ சஞ்சு ஸ்வீட் ஹார்ட் ,
ஐ லவ் யூ டி, உன் சம்மதம் இல்லாம உன்ன அனுப்பினதுக்கு என்ன மன்னிச்சிடு, ஆனா நீ சுயநினைவோட இருந்திருந்தா நிச்சயமா போக சம்மதிச்சு இருக்க மாட்ட அதனால நீ தூங்கும் போது உன்ன அனுப்புறத தவிர எனக்கு வேற வழியில்ல.
என்னால் நீ நிறைய கஷ்டப்பட்டு இருக்க, அதுக்கு ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு, நம்ம ரெண்டு பேரையும் சுத்தி இருக்க பிரச்சன, ஆபத்து எல்லாத்தையும் நான் சரி பண்ணுவேன். சீக்கிரம் நாம ஒன்னு சேருவோம், ப்ளீஸ் என் மேல கோவப்படாத. நீ என்ன மிஸ் பண்ணுவனு னக்குத் தெரியும், நானும் உன்ன மிஸ் பண்றேன். நீ என் பக்கத்துல இல்லாம நான் ஒண்ணுமே இல்ல ஆனா இது கொஞ்ச நாள் தான், எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்.
நான் இப்போ உன் உயிரையும், நம்ம குழந்தையோட உயிரையும் பணயம் வைக்க விரும்பல அதனால தயவு செஞ்சு இப்போதைக்கு அந்த இடத்துல இரு. நிறைய பேரு நம்மள கண்காணிக்குறாங்க அதனால மொபைல் மட்டும் இல்ல எந்த தொழில்நுட்பம் பயன்ப்படுத்தியும் நாம பேச முடியாது. என் பொண்டாட்டி ரொம்ப தைரியசாலினு எனக்குத் தெரியும், எனக்காக உன்னையும், நம்ம குழந்தையையும் பார்த்துக்கோ. சீக்கிரம் நாம சந்திப்போம் எனக்காக வெயிட் பண்ணு.
டாக்டர் பானு, என்னோட நம்பிக்கையான நபர், அவங்க உன் ஆரோக்கியத்த பார்த்துக்குவாங்க. நீ அவங்கள நம்பலாம்.
ஐ லவ் யூ சஞ்சு பேபி. இப்போ குளிச்சிட்டு அலமாரிய திறந்து பாரு. உனக்கு புடிச்ச டிரஸ் எல்லாம் கொடுத்துருக்கேன். உனக்கு ரொம்ப புரிச்ச என்னோட ஊதா கலர் ஹூடி போடு, நான் உன்கூட இருக்குறத நீ உணருவ. கவனமாக இரு.
லவ் யூ,
உன் ஆர்யன் “
கடிதத்தை படித்ததும் சஞ்சுவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது, அவள் மெதுவாக அவளது வயிற்றை வருடியபடி மெதுவாக விம்மி அழுதாள். அவளுக்குள் வளரும் அவர்களின் குழந்தைக்காக அவள் வலுவாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் அவள் வயிறு பசியில் உறுமியது.
கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து அலமாரியை நோக்கி நடந்தாள். அவளுக்குப் பிடித்த கவுன்கள், மென்மையான பருத்தி குர்திகள், ஆர்யனின் சட்டைகள் மற்றும் டீஷர்களை கண்டு அவள் இதயம் உருகியது. அவள் ஒரு மென்மையான டிராக் பேண்ட்டைத் தேர்ந்தெடுத்து, ஆர்யன் குறிப்பிட்ட ஊதா நிற ஹூடியை அணிந்தாள்.
அவள் தன் கூந்தலை கொண்டையாகக் கட்டிக்கொண்டு, கண்ணாடி முன் நின்று, ஹூடியின் மீது விரல்களை வருடி, அதன் வாசனையை உள்வாங்கினாள்.
” ஐ லவ் யூ ஆர்யன். ஐ மிஸ் யூ. தயவு செஞ்சு திரும்பி வா… என்னையும் உன் கூட கூட்டிட்டு போ “ என்று உடைந்த குரலில் கிசுகிசுத்தாள்.
அவள் பார்வை அருகிலிருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த போட்டோ ஃப்ரேமில் விழுந்தது. அவள் அதை எடுத்தாள், அது அவர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகும். ஆர்யனின் உருவத்தை மென்மையாக முத்தமிட்டாள்.
அவள் தன்னுடைய கைகளை ஹூடியின் பாக்கெட்டில் நுழைத்த போது அவளுடைய விரல்கள் எதையோ உரசின. அவள் அதை வெளியே எடுத்தாள், நேர்த்தியாக மடிக்கப்பட்ட மற்றொரு கடிதத்தைக் கண்டாள்.
“ ஐ லவ் யூ பொண்டாட்டி,
என் பொண்டாட்டி என்ன மிஸ் பண்ணுவானு எனக்குத் தெரியும், அதனால உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்.
இப்போ நீ இருக்குற இடம் நம்ம வீடு. சுத்தி பாரு, எல்லா இடத்துலையும் நான் இருக்குறத நீ உணருவ. நான் உடல் ரீதியாக இல்லாம இருக்கலாம், ஆனா என் உயிரும், மனசும் உன்கூட தான் இருக்கு. உன்ன பார்த்துக்க ஒரு ஸ்பெஷலான ஆள் அங்க இருக்காங்க.
முழு இடத்தையும் பார்த்த அப்புறம் ப்ளீஸ் அழாத
லவ் யூ சஞ்சு பேபி. கவனமாக இரு.”
சஞ்சு அந்த கடிதத்தை தன் மார்பில் வைத்து முத்தமிட்டு மெதுவாக மீண்டும் தன் ஹூடி பாக்கெட்டில் வைத்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஆர்யன் தனக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தை சுற்றி பார்க்க வெளியே சென்றாள்.
அவள் வீட்டைச் சுற்றி நடக்கும் போது, அவளுடைய கண்கள் கண்ணீரால் நிரம்பின. ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு சிறிய விவரமும் ஆர்யனின் இருப்பை முணுமுணுத்தது. அவனது காதலின் கதகதப்பு சுவர்களில் ஊறிப்போனது. அவனது அக்கறையால் அவள் வாயடைத்துப் போனாள்.
அவள் இதயம் ஏக்கத்தால் வலிக்க, கண்ணீர் கன்னங்களில் முடிவில்லாமல் உருண்டோடியது.
“ஐ மிஸ் யூ ஆர்யன், நீங்க இங்க இருந்தா நல்லா இருக்கும்… உன்ன இறுக்கமா கட்டிப்பிடிச்சு மூச்சு விடாம கிஸ் பண்ணி இருப்பேன் “ அவள் கிசுகிசுத்தாள்.
****************************************
முன்னோட்டம்:
” சார் ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த வீட்ட கட்டி முடிச்சிட்டாரு. அவரே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அவ்ளோ ஆசையா இத காட்டினாரு. வேலை எப்படி நடக்குதுனு தெரிஞ்சிக்க தினமும் வீடியோ பண்ணி எல்லாம் அவர் சொன்ன மாதிரி இருக்கானு செக் பண்ணுவாரு “
