Home FamilyChapter 77

Chapter 77

by Siragugal Novels
10 views

அறையை விட்டு வெளியே சென்ற சஞ்சு, அந்த வீட்டைப் பார்த்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள். அவளுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது, வீட்டின் ஒவ்வொரு மூலையும் பார்த்த போது அவளுக்கு ஆர்யன் மட்டுமே நினைவிற்கு வந்தான். அந்த தருணத்தில் அவளுக்கு அவரை அணைத்து கட்டிக்கொள்ள வேண்டும், முத்தமிட வேண்டும், அவன் அணைப்பில் தன்னை மறந்து இருக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது ஆனால் அவன் அங்கு இல்லை. இருந்தாலும் அந்த இடத்தில் அவனுடைய காதலை அவள் முற்றிலும் உணர்ந்தாள்.

அவள் ஒவ்வொரு அறைக்கும் சென்று பார்த்தாள், அவளுடைய இதயம் ஏக்கத்தால் கனத்தது. படுக்கை அறைக்கு பக்கத்த்தில் ஒரு  வசதியான மல்டிமீடியா அறை இருந்தது, அதோடு அதன் அருகில், ஒரு சிறிய உடற்பயிற்சி கூடம் இருந்தது. அவள் உதடுகள் லேசாக வளைந்தன, அவள் கனவு இல்லத்தின் ஒவ்வொரு விவரத்தையும் அவன் நினைவில் கொண்டிருக்கிறான்.

சமையலறை, பிரம்மாண்டமாக இல்லாமல் அவளுக்கு பிடித்தது போல எல்லாமே நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அவள் வீட்டுக்கு வெளியே காலடி எடுத்து வைத்ததும் அந்த கல் பாதை அவளுடைய வெறுங்கால்களை அருகில் இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த ரோஜாத் தோட்டத்தைப் பார்த்ததும் அவள் ஆச்சரியத்தில் மூச்சு திணறியது, தோட்டத்தின் மையத்தில் இரண்டு ஊஞ்சல்களை, அதை சுற்றி எல்லா நிறங்களிலும் ரோஜாக்கள் பூத்திருந்தன. ஊஞ்சலை நோக்கி நடந்தவள், ஒன்றில் அமர்ந்து, கால்களை கொண்டு மெதுவாக ஊஞ்சலை தள்ளினாள். அசைவு, தென்றல், மௌனம் என எல்லாமே ஆர்யன் போல இருந்தது.

அவள் மெதுவாக கொல்லைப்புறத்திற்கு சென்று ஒரு சிறிய நீச்சல் குளத்தின் முன் நின்றாள். விளிம்பில் உட்கார்ந்து கால்களை உள்ளே நனைத்தாள். குளிர்ந்த நீருடன் அவள் கண்ணீர் கலந்தது.

” என் கனவு வீடு எப்படி இருக்கணும்னு நான் சொன்ன எல்லாத்தையும் நீ ஞாபகம் வெச்சு அதே மாதிரி கட்டி இருக்க ஆர்யன். எல்லாமே எனக்கு புடிச்ச மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்க ஆனா நீ மட்டும் இப்போ என்கூட இல்ல “ என்று சொல்லி அவள் கண்களை மூடிக்கொண்டு மனதில் இருந்த வலியைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

“ஆர்யன், உன்ன மாதிரி யாராலையும் என்ன லவ் பண்ண முடியாது ஆனா நீ எங்க இருக்கியோ அது தான் என்னோட உண்மையான வீடு. நீ இல்லாம என்னால சந்தோஷமா இருக்க முடியாது. தயவு செஞ்சு திரும்பி வந்து என்னையும் உன் கூட கூட்டிட்டு போ. உன் கூட நரகத்துக்கு போக வேண்டி இருந்தா கூட நான் சந்தோஷமா வருவேன், ப்ளீஸ் ஆர்யன், எனக்கு நீ வேணும்” என்று சஞ்சு விம்மி விம்மி அழுதாள்.

அவள் கண்ணீர் தொடர்ந்து விழ, ஒரு மென்மையான கை அவள் தோளைத் தொட்டது. திடுக்கிட்டுத் திரும்பியவள், அங்கே ஒரு வயதான பெண்மணி அன்பான புன்னகையுடன் நிற்பதைக் கண்டாள்.

“நீங்க யாரு?” சஞ்சு மெதுவாகக் கேட்டாள்.

” என் பேரு தீபா, உங்க வீட்ல வேலை செய்ற பாலாவோட அம்மா நான் ” என்று அந்தப் பெண் கனிவுடன் கூறினார். அதை கேட்டதும், “நீங்க பாலா அண்ணனோட அம்மாவா?” என்று சஞ்சு வியப்புடன் கேட்டாள்.

தீபா ஆம் என்று தலையசைத்தார். “ஆமா மா, சார் உங்கள பத்தி நிறையவே சொல்லியிருக்காரு. கவலை வேண்டாம். உன்ன என் சொந்த பொண்ணு மாதிரி பார்த்துக்குறேன். பாலா உன்ன பத்தி நிறைய சொல்லி இருக்கான். நீ அவனுக்கு தங்கச்சி மாதிரின்னு சொல்லுவான் அப்போ நீ என் பொண்ணு தானே ? எத பத்தியும் கவலைப்படாத, சார் சீக்கிரம் வந்து உன்ன கூட்டிட்டு போவாரு. இப்போ வா டா, ரொம்ப நேரமா நீ சாப்பிடாம இருக்க, வந்து சாப்பிடு மா “ என்று அன்போடு கூறினார்.

சஞ்சுவால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து நின்று தீபாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “ ரொம்ப நன்றி மா “ என்று சொல்லி மீண்டும் அழுதாள்.

தீபா அவள் கன்னத்தை துடைத்து, ” அட என்னமா நீ ? இப்படி அழலாமா ? குழந்தைக்கு நல்லது இல்ல “ என்று தீபா கூறியதை கேட்டதும், சஞ்சு முகத்தைத் துடைத்தபடி தலையசைத்தாள்.

“இந்த வீடு…?” என்று சஞ்சு கேட்டதும், “ இதுவா ? சார் ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த வீட்ட கட்டி முடிச்சிட்டாரு. அவரே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அவ்ளோ ஆசையா இத காட்டினாரு. வேலை எப்படி நடக்குதுனு தெரிஞ்சிக்க தினமும் வீடியோ பண்ணி எல்லாம் அவர் சொன்ன மாதிரி இருக்கானு செக் பண்ணுவாரு “ என்று தீபா விளக்கமாக சொன்னார்.

சஞ்சுவின் உதடுகள் துடித்தன. மீண்டும் கண்ணீர் பெருகியது.

” அய்யோ சஞ்சு மா, போதும்டா. நீ இப்படி அழுதா சாருக்கு புடிக்குமா ? கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் எல்லாமே சரி ஆகிடும் “ என்றார் தீபா மென்மையாக கூறினார்.

“ அழ மாட்டேன் “ என்று சொல்லி சஞ்சு கண்ணீரை துடைத்ததும், தீபா அவளை பார்த்து புன்னகைத்தார்.

“ பாலா எனக்கு போன் பண்ணுவான் அப்போ நீ அவர பார்க்கலாம் ஆனா பேசக் கூடாது  சரியா ? பாலா மொபைலை கூட யாரோ செக் பண்றாங்களாம் அதுனால உன்னால அவர பார்க்க முடியும். இப்போ பாலா போன் பண்ற வர வெயிட் பண்ணலாம் “ என்று தீப சொல்ல சஞ்சு சரி என்று தலை அசைத்தாள்.

சஞ்சுவின் கையைப் பிடித்து தீப உள்ளே அழைத்துச் சென்றார். டாக்டர் பானு அவர்களுக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தார், அவர்களுக்காக சத்தான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“சஞ்சு, நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் ஜெனரல் செக் அப் பண்ணுவோம், நேத்து நைட்டு ரொம்ப நேரம் பயணம் பண்ணி இருக்கீங்க அதுவும் இல்லாம ரொம்ப நேரமா எதுவும் சாப்பிடாம, சுயநினைவு இல்லாம இருந்தீங்க அதனால நீங்களும், குழந்தையும் நல்லா இருக்கீங்கலானு செக் பண்றது நல்லது “ என்று டாக்டர் பானு கூறியதை கேட்டு, “ சரி டாக்டர்” என்று சஞ்சு மெல்ல சம்மதித்தாள்.

அவள் பசியைத் தணிக்க போதுமான அளவு சாப்பிட்டாள், பின்னர், பானு ஒரு அடிப்படை பரிசோதனை செய்து அவளும், குழந்தையும் நலமாக இருப்பதை உறுதி செய்தார்.

சென்னையில் மாயா அனுமதிக்கப்படிருந்த மருத்துவமனையை அடைந்த லேகா மற்றும் ரியாவை சந்திரசேகரின் தனி அறைக்கு ராஜேஷ் அழைத்து சென்றான். சந்திரசேகர் வெறுமையான முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார்.

“ராஜேஷ், இவங்கள முதல்ல மாயாவைப் பார்க்க கூட்டிட்டுப் போ. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரையும் இங்க கூட்டிட்டு வா “ என்று சந்திரசேகர் மெல்ல சொன்னதும், ராஜேஷ் அவர்கள் இருவரையும் மாயாவின் வார்டுக்கு அழைத்துச் சென்றான். அவளது நிலையைக் கண்ட நொடியில் ரியா மற்றும் லேக்காவின் முகம் வாடியது. அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“அவளுக்கு என்ன ஆச்சு ?” என்று ரியா அதிர்ச்சியுடன் கேட்டதும், மாயாவுக்கு கருச்சிதைவு ஆனதை தவிர்த்து விபத்து பற்றி மட்டுமே ராஜேஷ் அவர்களிடம் கூறி அமைதியாக மீண்டும் அவர்களை சந்திரசேகரின் அறைக்கு அழைத்து சென்றான்.

” நீங்க ரெண்டு பேரும் தானே மாயாவுக்கு ரொம்ப நெருக்கமான ப்ரெண்ட்ஸ் ? “என்று சந்திரசேகர் கேட்டதும், இருவரும் மெல்ல ஆம் என்று தலையசைத்தனர்.

” எனக்கு சில பதில்கள் வேணும், நீங்க என்கிட்ட நேர்மையா எல்லா உண்மையும் சொல்லுவீங்கனு நம்புறேன் “ என்று சந்திரசேகர் சொன்னதும், ” உங்களுக்கு என்ன சார் தெரியனும் ?” என்று லேகா பதட்டத்துடன் கேட்டாள்.

” கனடாவுல இருந்து மாயா திரும்பி வந்த அப்புறம், அவ சந்திச்ச எல்லாரையும் பத்தி விவரங்கள சொல்லுங்க “ என்று சந்திரேசகர் கேட்க, ” மாயா எங்களையும், எங்க ஃப்ரெண்ட் விவானையும் மட்டும் தான் சந்திச்சா,  நாங்க மட்டும் தான் அவளுக்கு நெருக்கமானவங்க, அவ வேற யாரையும் சந்திக்கல ” என்று ரியா வேகமாக பதில் சொன்னாள்.

” விவான் உங்க ஃப்ரெண்டா ? “ என்று சந்திரசேகர் கேட்க, “இல்ல சார், அவனும் காலேஜ் படிக்கும் போதே மாயாவுக்கும் ஃப்ரெண்ட் தான்” என்றாள் ரியா.

“அவ கூட யாரெல்லாம் ஊட்டிக்குப் போனீங்க ? “ என்று அடுத்து சந்திரசேகர் கேட்டதும், “ மாயா, லேகா, நான் அப்புறம் விவான்” என்றாள் ரியா.

” விவான் ஏன் உங்க கூட வந்தான் ? “ என்று அவர் கேட்டதும், “அவன் நம்பிக்கையான ஆளு, நாங்க அவன எங்க பாதுக்காப்புக்கு தான் கூட்டிட்டு போனோம் “ என்று லேகா விளக்கம் சொன்னாள்.

” பாதுகாப்பா ? எதுக்காக பாதுக்காப்பு ?” என்று சந்திரசேகர் முகம் சுளித்து கேட்க, “அவன் முன்னாடி எங்களுக்கு உதவி பண்ணி இருக்கான். குறிப்பாக மாயா குடிபோதையில கட்டுப்பாட்ட இழந்த பல முறை அவள காப்பாத்தி இருக்கான் “ என்று ரியா தயங்கியபடி கூறினாள்.

” அவள அந்த அளவுக்கு ஏன் குடிக்க விட்டீங்க ? “என்று கோபமாகக் கேட்டார் சந்திரசேகர்.

” ஆர்யன் மேலையும் அவர் மனைவி சஞ்சு மேலையும் மாயாவுக்கு அடிக்கடி கோவம் வந்து டென்ஷனா இருப்பா, அப்போ எங்களால அவள கட்டுப்படுத்த முடியாம போகும் “ என்றாள் லேகா வேறு பக்கம் பார்த்தபடி சொன்னாள்.

“ஊட்டியில நீங்க ஆர்யன பார்த்தீங்களா ?” என்று அவர் கேட்டதும், “இல்ல சார், மாயா அவர பார்த்ததா சொன்னா, ஆனா நாங் யாரும் அவர பார்க்கல “ என்று ரியா பதில் சொன்னாள்.

“அங்க என்ன நடந்துச்சு ?” என்று கேட்டு சந்திரசேகர் முன்னால் குனிந்ததும், ரியாவும், லேக்காவும் பதட்டத்துடனும், அமைதியாகவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

” இப்போ மாயா இருக்க நிலைமையை பார்த்தீங்க தானே ? தயவு செஞ்சு அங்க என்ன நடந்துச்சுனு எல்லாத்தையும் சொல்லுங்க “ என்று சந்திரசேகர் கேட்டார்.

பிரச்சனையின் தீவிரம் புரிந்து லேகா தலை குனிந்து பேச ஆரம்பித்தாள். “நாங்க எல்லாரும் அங்க ஒரு பப்புக்கு போனோம்.  மாயா பார்ல குடிச்சிட்டு இருந்தா. விவான் அவனோட நண்பன் ஒருத்தர பார்க்க போனான். நானும் லேக்காவும் டேன்ஸ் ஆடி முடிச்சிட்டு வந்து பார்த்த அப்போ மாயா அங்க இல்ல. நாங்க எல்லாரும் அவள தேடினோம், கடைசியில அந்த பப்புல இருந்த ஒரு ரூம்ல ……” என்று ரியா அதற்கு சொல்ல தைரியம் இல்லாமல் தயங்கினாள், அவள் குரல் நடுங்கியது.

“ என்ன ஆச்சு சொல்லு “ என்று சொன்ன சந்திரசேகரின் முகம் இருண்டது.

“அவ ரொம்ப மோசமான நிலையில இருந்தா, யாரோ அவ கிட்ட தப்பா நடந்துகிட்ட மாதிரி.. இல்ல கற்பழிக்கப்பட்டு இருக்கலாம் ” என்று ரியா உடைந்த குரலில் சொன்னாள்.

” என்ன சொல்ற ?” என்று கேட்டு எழுந்து நின்ற சந்திரசேகரின் குரல் அறையில் இடி போல முழங்கியது. லேகாவும், ரியாவும் பயத்தில் பின்வாங்கினர். ராஜேஷ் உடனே அவர் அருகில் நின்றான்.

“அப்புறம் என்ன பண்ணீங்க ?” என்று கோபத்தை அடக்கிக் கொண்டு சந்திரசேகர் கேட்க, “ நாங்க அவள டிரஸ் பண்ணி, விவான் உதவியோட திரும்பவும் ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு போனோம். அவ ஆர்யன் மேல பைத்தியமா இருந்தா. என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நிச்சயம் உயிர விட்டு இருப்பா அதனால அவ எங்க கிட்ட கேட்ட அப்போ, அவ குடிச்சிட்டு போதையில இருந்ததா சொல்லிட்டோம் “ என்று லேக்கா சொன்னதும், ‘ அதுக்கு மாயா என்ன சொன்னா?” என்று சந்திரசேகர் கேட்டார்.

” அவ ஆர்யன சந்திச்சதாவும், அவர் மாயாவ கல்யாணம் பண்ணிக்க சத்தியம் பண்ணதாவும் சொன்னா. நாங்க அவள சமாதானப்படுத்தி, அன்னைக்கே ஊட்டிய விட்டு கிளம்பிட்டோம் ” என்று ரியா கூறினாள்.

தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள சில நொடிகள் கண்களை மூடிய சந்திரசேகர் பிறகு அவர்களை பார்த்து, “விவான் இப்ப எங்க இருக்கான்?” என்று கேட்டார்.

“அவன் அப்பா, அம்மா லண்டன்ல இருக்காங்க. அவங்கள பார்க்க ஒரு வாரத்துக்கு முன்னாடி கிளம்பி போனான் “ என்று ரியா  சொன்னதும், “பப்புல சந்தேகப்படுற மாதிரி  யாராவது இருந்தாங்களா ? இல்ல நீங்க வேற எதாச்சும் கவனிச்சீங்களா ?” என்று கேட்டார்.

“இல்ல சார். அப்படி யாரும் இல்ல, நாங்களும் எதுவும் பார்க்கல “என்றாள் லேகா.

“ராஜேஷ், இவங்கள திருப்பி அனுப்பு, தேவைப்பட்டா மறுபடியும் கூப்பிடுறேன் “ என்று உத்தரவிட்டார் சந்திரசேகர். உடனே ராஜேஷ் தலையசைத்து அவர்களை வெளியே அழைத்து செல்ல கதவைத் திறந்தான் ஆனால் ஆத்திரத்தில் கொழுந்துவிட்டு எரியும் கண்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தான் நரேனை பார்த்ததும்  உறைந்து போனான்.

” நரேன் சார்…” என்று ராஜேஷ் திக்கித் திணறினான்.

நரேனின் பெயரைக் கேட்டு சந்திரசேகர் சட்டென்று வாசலை நோக்கித் திரும்பினார். நரேன் கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றான். ஏமாற்றத்தாலும் அருவருப்பாலும் முகம் சுழிக்க அந்தப் பெண்களைப் பார்த்தான்.

” நீங்க அவளோட உண்மையா ப்ரெண்ட்ஸா இருந்திருந்தா அப்போ ஆர்யன் மேல அவளுக்கு இருந்த பைத்தியக்காரத்தனத்த தடுத்து நிறுத்தி இருக்கணும். அவ விரக்தியில இல்ல கோவத்துல இருக்கும் போது நீங்க அவள குடிக்க விட்டுருக்க கூடாது, அவள நீங்க கிளப்புகளுக்கு கூட்டிட்டு போய் இருக்க கூடாது. ஒருத்தரோட மனசுக்கு அமைதி தர எவ்வளவோ இடம் இருக்கும் போது நீங்க அவள ஊட்டியில இருக்க ஒரு பப்புக்கு கூட்டிட்டு போய் இருக்க கூடாது “ என்று நரேன் இடி போல முழங்கினான்.

“அந்த ரூம்ல நீங்க அவள எந்த நிலமையில பார்த்தீங்கனு அவ கிட்ட சொல்லி இருக்கனும் அதுக்கு பதிலா நீங்க எல்லாத்தையும் மறைச்சு இருக்கீங்க. இனி நீங்க அவளோட உண்மையான ப்ரெண்ட்ஸ்னு சொல்லாதீங்க, வெளிய போங்க “ என்று சொன்ன அவன் குரல் கடுமையாக ஒலித்தது   

வெட்கத்தில் மௌனமாக ரியாவும், லேகாவும் அறையை விட்டு வெளியேறினர்.

அவர்கள் சென்றதும் நரேன் தனது கோபத்தை தந்தை மீது திருப்பினான். முன்னெப்போதையும் விட தோற்றுப் போன சந்திரசேகர், மகனின் கண்களை பார்க்க முடியாமல் நின்றார்.

“இப்ப நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னு நம்பறேன். அவ செய்ற எல்லாத்துலையும் நீங்க சப்போர்ட் பண்றத நிறுத்துங்கனு நான் பல முறை சொன்னேன். ஒரு நாள் ஏதாவது தப்பா நடக்கும்னு  எனக்குத் தெரியும் ஆனா அவ இப்படி ஒரு உணர்ச்சி இல்லாத   நிலையில இருப்பானு ஒரு நாள் கூட நெனச்சது இல்ல. இப்ப உங்களுக்கு திருப்தியா இருக்கா?” என்று நரேன் கொந்தளித்தான்.

“வாயை மூடு, நரேன், ஆர்யன் அவள ஏத்துகிட்டு இருந்தா, இது எதுவும் நடந்திருக்காது. எல்லாம் அவனால தான் நடந்துச்சு ” என்று சந்திரசேகர் உறுமினார். அதை கேட்டு ஏளனமாய் சிரித்த நரேன், “ இப்பவும் அவன தான் குறை சொல்லுவீங்களா ? “ என்று நரேன் நம்பமுடியாமல் கேட்டான். ” அவனுக்கு புடிக்காத ஒரு பொண்ண அவன் ஏன் ஏத்துக்கணும் ? அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு உங்களுக்கு தெரியும், தெரிஞ்சும் மாயாவ இதுக்கு சப்போர்ட் பண்ணீங்க. உங்களால தான் அவ இன்னைக்கு இந்த நிலையில இருக்கா ” என்று கடுமையாக கூறினான்.

“உன் நண்பனுக்கு சப்போர்ட் பண்றத இப்போ நிறுத்து, நீ என்ன சொன்னாலும், ஆர்யன பழிவாங்குறதுல இருந்து எதுவும் என்ன தடுக்கப் போறதில்ல.” என்று சந்திரசேகர் எச்சரித்தார். 

நரேன் தன் அப்பாவை வெறுப்புடன் பார்த்தான். ” இவ்ளோ நடந்த அப்புறம் ஒருவழியா நீங்க ஒரு மனுஷனா நடந்துக்குவீங்கனு நெனச்சேன் ஆனா நான் நெனச்சது ரொம்ப பெரிய தப்பு. நீங்க ஒருநாளும் மாற மாட்டீங்க. நீங்க ஒருநாளும் மனுஷனா இருக்க மாட்டீங்க ” என்று சொல்லிவிட்டு நரேன் திரும்பி அறையை விட்டு வெளியேறினான்.

அவன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு இலக்கின்றி காரை ஒட்டி சென்ற போது அவனது மொபைல் ஒலித்தது. அதை எடுத்து திரையில் ஆர்யனின் பெயரை பார்த்து அதற்கு பதிலளித்து, “ சொல்லு ஆர்யன் “ என்று சுருக்கமாக கூறினான்.

“நரேன், நான் உன்ன சந்திக்க விரும்புறேன், நீ என் மேல கோபமா இருப்பனு எனக்குத் தெரியும். ஆனா தயவு செஞ்சு நாம பேசுவோம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்று சொன்ன ஆர்யனின் குரல் சீராக ஆனால் கனமாக வந்தது

” இன்னைக்கு வேணாம் ஆர்யன், நாம நாளைக்கு சந்திக்கலாம் “ என்று நரேன் பதிலளித்ததும், “சரி, நாம எங்க சந்திக்கனும்னு உனக்கு தெரியப்படுத்துறேன்  ” என்று ஆர்யன் சம்மதித்தான்.

நரேன் பதிலுக்கு சரி என்று முணுமுணுத்து அழைப்பை துண்டித்தான்.

தனியறைக்குத் திரும்பிய சந்திரசேகர் ராஜேஷை நோக்கித் திரும்பினார்.

“ராஜேஷ், என்ன ஆச்சு ? சஞ்சனாவ பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா ?” என்று கேட்டார். அதற்கு ராஜேஷ் அவரிடம், “இல்லை சார், அவங்க மொபைல் கடைசியாக சிக்னல் இருந்த எல்லா இடத்துலையும் நம்ம ஆளுங்க தேடிட்டு தான் இருக்காங்க “ என்று கூறினான்.

“ஆர்யன் மேன்ஷன்ல இருக்க ஒவ்வொரு நம்பரையும் ட்ராக் பண்ணு, அங்க வேலை செய்ற ஒவ்வொருத்தரையும் கவனி. ஆர்யன் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும் “ ” என்று உத்தரவிட்டார் சந்திரசேகர்.

“சார், நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் செஞ்சுட்டேன், அவரோட மேன்ஷன்ல இருக்க ஒவ்வொரு ஆளையும் கண்காணிக்கஏற்பாடு பண்ணி இருக்கேன். அவங்களோட போன் கால் எல்லாம் ட்ராக் பண்றேன். ஆர்யன் சாருக்கு நெருக்கமான ஏ.ஆர்.சி டவர்ஸ்ல இருக்கவங்க எல்லாரும் கண்காணிப்புல இருக்காங்க, சீக்கிரம் அவங்கள கண்டுபிடிச்சுடுவோம் “ என்று கூறினான்.

“ ஆர்யன் எப்படியும் அவ கிட்ட பேச போன் பண்ணுவான் அதனால மேன்ஷன்ல இருக்க எல்லாரோட மொபைலையும் ட்ராக் பண்ணு. நிச்சயம் நாம அவள கண்டுபுடிக்கலாம் “ என்று சந்திரசேகர் சொல்ல, சரி என்று சொன்னான் ராஜேஷ்.

சந்திரசேகர் கவலையுடன் தலையசைத்து, “ கண்டிப்பா அவள நம்ம கஸ்டடில வைக்கணும். எதுவா இருந்தாலும் சரி நான் பின்வாங்க மாட்டேன் ” என்று கூறினார்.

” கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி சீக்கிரம் எல்லாமே நடக்கும். நான் சீக்கிரமே அவங்கள உங்க முன்னாடி கூட்டிட்டு வரேன் “ என்று உறுதியளித்து விட்டு ராஜேஷ் வெளியேறினான்.

************************

முன்னோட்டம்:

“உன் ஆர்யனால எல்லாத்தையும் சமாளிக்க முடியும். இன்னும் கொஞ்ச நாள் தான், அப்புறம் நான் உன்ன என்கூட கூட்டிட்டு வரேன் “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!