விவானை அழைத்து வர ரஞ்சித் ஏற்பாடு செய்த ஆர்யனின் தனியார் ஜெட் விமானம் சென்னையில் தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே காத்திருந்த ரஞ்சித், மயக்க நிலையில் இருந்த விவானை தனது பாதுகாவலர்களிடம் சொல்லி விமானத்தில் இருந்து தூக்கி வர சொன்னான். ஆர்யனின் அதிகார பலத்தை கொண்டு, விவான் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக தனது சொந்த ஊருக்குத் திரும்பும் நோயாளியாக ஏற்கனவே அனைத்து சம்பிரதாயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
விமான நிலையத்தில் இருந்து ரஞ்சித் அவனை நேரடியாக ஆர்யனின் பாதாள சிறைக்கு கொண்டு சென்று ஒரு அறையில் வைத்து பூட்டினான்.
” இவனுக்கு சுயநினைவு வந்ததும் உடனே எனக்கு போன் பண்ணுங்க “ என்று கூறிவிட்டு ரஞ்சித் அங்கிருந்து சென்றான்.
இதற்கிடையில் மருத்துவமணையில் மாயாவின் அறையில் நரேன் அவள் அருகில் அமர்ந்திருந்தான். அவளது செய்கைகளையும், பிடிவாதத்தையும் அவன் ஏற்காவிட்டாலும், அவன் எப்போதும் அவளை மிகவும் நேசித்தான். அவளது உயிரணுக்களைப் பரிசோதிக்க ஒரு மருத்துவர் உள்ளே நுழைய, நரேன் தொந்தரவு செய்யாமல் அருகில் காத்திருந்தான்.
டாக்டர் பரிசோதனையை முடித்ததும், “ டாக்டர், ஏதாவது முன்னேற்றம் இருக்கா, மாயாவுக்கு சுயநினைவு வருமா ?” என்று நரேன் எதிர்பார்ப்புடன் கேட்டான்.
” மாயாவோட காயம் குணமாகுது சார் ஆனா நாங்க கொடுக்குற ட்ரீட்மென்ட் விட, அவங்களுக்கு நெருக்கமானவங்க யாராச்சும் அவங்க பக்கத்துல இருந்து அவங்களோட பேசுனா நல்லா இருக்கும். அவங்களோட பேச பேச சீக்கிரம் அவங்க இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நம்பிக்கைய தரும். அப்படி ஒருவேள அப்படியும் அவங்க சுயநினைவுக்கு வர எந்த அறிகுறியும் இல்லனா அப்போ அவங்களுக்கு இன்னொரு ஆப்பரேஷன் பண்ண வேண்டி இருக்கும் ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு “ என்று டாக்டர் பதிலளித்ததும் நரேன் உடனே அவரிடம், “ அதுல என்ன சிக்கல் இருக்கு டாக்டர் ? அவளுக்கு சுயநினைவு வர ஆப்பரேஷன் பண்ண வேண்டி இருந்தா பண்ணுங்க “ என்று கூறினான்.
“ நரேன் சார், அது சாதாரணம் இல்ல, அந்த ஆப்பரேஷன் பண்ணா, அவங்களோட நிறைய நினைவுகள இழக்க அதிக வாய்ப்பு இருக்கு, எப்பவுமே அந்த நினைவுகள் திரும்பி வராம போகலாம். இப்போ நீங்க தான் முடிவு செய்யணும் “ என்று டாக்டர் அறுவை சிகிச்சையில் இருக்கும் ஆபத்தை விளக்கினார்.
டாக்டரின் வார்த்தையை கேட்ட நரேன் அதிர்ச்சியடைந்தான். ” கண்டிப்பா நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன் டாக்டர். அப்புறம், இனி மாயா சம்மந்தமா எதுவா இருந்தாலும் என் கிட்ட மட்டும் சொல்லுங்க. என் அப்பா உங்க கிட்ட எப்போ கேட்டாலும், அவகிட்ட முன்னேற்றம் இருக்குனு மட்டும் சொல்லுங்க, வேற எதுவும் சொல்ல வேண்டாம் “ என்று வலியுறுத்தினான்.
” நீங்க சொல்ற மாதிரி செய்றேன் மிஸ்டர் நரேன்” என்று தலையசைத்துவிட்டு டாக்டர் கிளம்பினார்.
சிறிது நேரம் கழித்து ஆர்யனின் அழைப்பு வந்த போது நரேன் மாயாவின் வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
அழைப்புக்கு பதில் சொல்லி, ” ஹ்ம்ம் சொல்லு ஆர்யன்” என்று நரேன் சொல்ல, “ விவான் வந்துட்டான் நரேன். நீ உடனே கிளம்பி மேன்ஷன் வந்துடு, நாம ஒன்னா அவன சந்திக்க போகலாம் “ என்று ஆர்யன் கூறினான்.
” சரி நான் வரேன்.” என்று சொல்லி நரேன் அழைப்பை துண்டித்தான். அங்கிருந்த செவிலியரிடம் மாயாவை கவனித்துகொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
நரேன், ஆர்யன் மேன்ஷனை அடைந்ததும், ஆர்யன் மற்றும் ரஞ்சித்து அவனை தங்கள் காரில் பாதாள சிறை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் ஆர்யன் தொண்டையை கனைத்து, “நரேன், நாம இப்போ என் ரகசிய இடத்துக்கு போறோம். அந்த இடத்த பத்தி தெரிஞ்சிக்க போற முதல் ஆள் நீ தான், உன்ன நான் ரொம்ப நம்புறேன் “ என்று சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டதும், “ என்ன நம்புறதுக்கு நன்றி ஆர்யன் “ என்றான் நரேன்.
” உன் அப்பாவும் ஒரு ரகசிய இடம் வெச்சுருக்காரு, அந்த இடத்த கண்டுபுடிக்க எனக்கு உன்னோட உதவி வேணும். அவரோட எல்லா இடத்துலையும் நாங்க தேடிட்டோம், ஆனா கண்டுபுடிக்க முடியல. அந்த இடம் நிச்சயம் உங்க வீட்ல இல்ல, DC ஆபீஸ்ல இருக்கனும் “ என்று ஆர்யன் சொன்னதும், “ அவருக்கு அப்படி ஒரு இடம் இல்ல ஆர்யன்.” என்று நரேன் உடனே பதில் சொன்னான்.
ஆர்யன் மறுத்து தலை அசைத்து, “ அவர் கிட்ட அப்படி ஒரு இடம் இருக்கு நரேன், அத கண்டுபிடிக்க நீ எனக்கு உதவி பண்ணா தான் உன் அப்பா என்ன பழிவாங்குறத தடுக்க என்னால ஆதாரம் கண்டுபுடிக்க முடியும், அப்போ தான் எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் “ என்று உறுதியாக கூறினான்.
ஆர்யன் அவ்வளவு உறுதியாக சொல்வதை கேட்டு, ” எனக்கு அப்படி தோணல ஆர்யன் ஆனா அப்படி ஒரு இடம் இருந்தா நான் நிச்சயமா உனக்கு சொல்றேன் “ என்று நரேன் உறுதியளித்தான்.
ஆர்யன் அவனுக்கு நன்றி சொல்ல, மீதி இருந்த பயணம் அவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தபடி இருந்தனர். அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் நரேன் ஆச்சரியமாக அந்த இடத்தை பார்த்தான்.
விவான் நாற்காலியில் கட்டப்பட்டிருந்த அறைக்கு அவர்கள் சென்றனர். அவனை கண்டதும் நரேன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் விவானை வெறி கொண்டு அடிக்க ஆரம்பித்தான். ரஞ்சித்தும், ஆர்யனும் அவனைப் பின்னுக்கு இழுத்து, அவனை பொறுமையாக் இருக்கும்படி சொல்லி விவானுக்கு எதிரே அவர்கள் அமர்ந்தனர்.
“உனக்கும் மாயாவுக்கும் என்ன உறவு?” என்று விவானிடம் ஆர்யன் கேள்வி எழுப்பினான். அதற்கு விவான், “அவ என் ப்ரெண்ட் அவ்ளோ தான் ” என்று பதில் சொன்னான்.
” அவ இப்போ இருக்க நிலைமை தெரியுமா?” என்று ஆர்யன் கேட்டதும், “இல்ல, எனக்கு தெரியாது “ என்று விவான் குழப்பத்தோடு சொன்னான்.
படுக்கையில் சுயநினைவின்றி இருக்கும் மாயாவின் புகைப்படத்தை விவானிடம் காட்டும்படி நரேனைப் பார்த்து ஆர்யன் சொன்னதும், விவான் நடுங்கினான். மாயாவின் போட்டோவை நரேன் காண்பித்ததும், ” அவ… அவளுக்கு.. என் .. என்ன … ஆச்சு ?” என்று விவான் அதிர்ச்சியில் திக்கித் திணறினான்.
“அவளுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு, இப்போ சுயநினைவு இல்லாம கோமாவுல இருக்கா “ என்று நரேன் கூறியதை கேட்டதும் விவான் உறைந்து போனான்.
“இப்ப சொல்லு. உனக்கும், மாயாவுக்கும் என்ன உறவு?” என்று ஆர்யன் மீண்டும் கேட்டதும், “நான் தான் சொன்னேன்ல. அவ என்னோட ப்ரெண்ட் மட்டும் தான் “ என்று விவான் கத்தினான். உடனே ஆர்யன் ஆத்திரத்தில் அவன் மார்பில் உதைக்க, விவான் நாற்காலியோடு கவிழ்ந்தான். ரஞ்சித் விரைந்து விவானை தூக்கி அவனை ஓங்கி அறைந்தான்.
ஆர்யன் ரஞ்சித்துக்கு சமிக்ஞை செய்ததும், அவன் வெளியேறி சில நொடிகளில், அடையாளம் காண முடியாத அளவிற்கு கொடூரமாக தாக்கப்பட்ட ஒரு மனிதனை உள்ளே அழைத்து வந்தான். ஆனால் அவனை கண்டதும், ஊட்டியில் தனக்கு உதவிய நண்பனை விவான் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டான்.
” இப்ப உண்மைய சொல்லு” என்று ஆர்யன் மிரட்டியதும் விவான் உண்மையை சொல்ல தலை அசைத்தான்.
“நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம்” என்று நடுங்கும் குரலில் ஆரம்பித்தான் விவான். ” நாங்க லவ் பண்ணோம், அதுவும் அவ தான் என்ன ரொம்ப அதிகமா, வெறித்தனமா லவ் பண்ணா ஆனா திடீர்னு ஒரு நாள், என்கிட்ட வந்து இனி பிரிஞ்சிடலாம்னு சொன்னா. என்கிட்ட காரணம் எதுவும் சொல்லல, நான் பல முறை அவ கிட்ட பேச முயற்சி பண்ணேன் ஆனா அவ மொத்தமா என்ன புறக்கணிக்க ஆர்மபிச்சா. கொஞ்ச நாள் அப்புறம் தான் அவ உங்க மேல ரொம்ப ஆர்வமா இருக்கா, அதனால தான் என்ன விட்டுட்டு போயிட்டான்னு கேள்விப்பட்டேன்.” என்று சொன்ன விவான் ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டு மேலும் சொல்ல தன்னை தயார்ப்படுத்தினான்.
“அப்புறம் உங்களுக்காக கனடா போயிருக்கானு கேள்விப்பட்டேன். ஆனா என்னால அவள மறக்கவே முடியல. மூணு வருஷம் கழிச்சு நான் அவள மறுபடியும் பார்ல பார்த்த அப்போ அதே பழைய உணர்வுகள் எனக்கு இருந்துச்சு. அப்பவும் அவ என் கூட பேச தயாரா இல்ல ஆனா நண்பர்களா இருக்கலாம்னு நான் அவள சமாதானம் பண்ணி பழிவாங்க நெனச்சேன். நாங்க, ரியா அப்புறம் லேகா கூட அடிக்கடி வெளிய போக ஆரம்பிச்சோம். அப்போ பழிவாங்குறதுக்கு பதிலா அவ மேல எனக்கு இருந்த லவ், ஆச எல்லாமே அதிகமாச்சு. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சும், அவ உங்கள மறக்க தயாரா இல்ல, அது என் ஈகோவைத் தூண்டுச்சு, அவ எனக்கு மொத்தமா வேணும்னு நெனச்சேன் ” என்று விவான் சொல்லும் போது நரேன் பற்களை கடித்தபடி அமர்ந்திருந்தான்.
“ஒரு நாள் எப்பவும் போல நாங்க ஒரு நைட் கிளப்புக்கு போய் இருந்தோம். அங்க நான் அவளுக்கு போதை மருந்து கொடுத்து, லேகாவோட வீட்டுக்கு கூட்டிட்டு போனேன், அதுக்கு அப்புறம், நான் அவ சுயநினைவு இல்லாத நிலைய எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன். அப்புறம் மறுபடியும் நாங்க ஊட்டி போய் இருந்த அப்போ, இங்க இருக்க என் நண்பன் உங்கள மாதிரி ஒரு முகமூடிய உருவாக்கினான். நான் அத போட்டுக்கிட்டு அவள பப்புல இருந்த ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போனேன். மாயவும் என்ன நீங்கனு நெனச்சு கூடவே வந்தா. நான் அவள கல்யாணம் பண்ணிக்குறதா சத்தியம் பண்ணேன், அவளும் நம்பினா. அந்த நம்பிக்கைய நான் பயன்படுத்திக்கிட்டேன். அடுத்த நாள், அவ உங்கள பார்த்ததா சொன்னா ஆனா அது அவளோட பிரம்மை, அவ போதையில இருந்ததா சொல்லி அவள நம்ப வெச்சேன். ரியாவும், லேகாவும் அவள நம்ப வைக்க எனக்கு உதவி பண்ண சம்மதிக்க வெச்சேன்.
அதுக்கு அப்புறம் நான் அவள சந்திக்கவே இல்ல. அவ பிசினஸ் அப்புறம் உங்கள பத்தி தெரிஞ்சிக்குறதுல பிஸியா இருந்தா. நானும் என் அப்பா, அம்மாவ பார்க்க லண்டன் போயிட்டேன் “ என்று விவான் சொல்லி முடித்ததும் அதுவரை அமைதியாய் காத்திருந்த நரேன், விவானின் காலரைப் பிடித்து இழுத்து அறைந்து, அவன் கழுத்தை நெரிக்க முயன்றான்.
நரேன், அவனை கொன்று விடும் முன் ஆர்யன் அவனைப் பின்னுக்கு இழுத்தான்.
” மாயா கர்ப்பமா இருந்தா, ஆக்ஸிடென்ட் நடந்ததுல குழந்தைய இழந்துட்டா.” என்று ஆர்யன் அமைதியாக சொன்னான், அவன் குரல் தாழ்ந்தாலும் கனத்திருந்தது. அதை கேட்டதும், விவானின் முகபாவம் கலைந்தது. அவன் கண்ணீர் விட்டு அழுதான், அவனது மூச்சு உடைந்த விம்மல்களில் சிக்கிக்கொண்டது.
ஆர்யனின் பிடியில் இருந்து விலகி நரேன் அவன் அருகில் சென்றான், அவன் கண்கள் கோபத்தாலும் வலியாலும் எரிந்தன. ” நீ இன்னும் அவள லவ் பண்றியா இல்ல இதெல்லாம் பழிவாங்குற திட்டம் மட்டும் தானா ? “ என்று கேட்டு மிரட்டினான்.
விவான் நிராதரவாகத் இல்லை என்று தலையை அசைத்தான். “நான் அவள பழிவாங்க நெனச்சது உண்மை தான் ஆனா அத விட அவ மேல எனக்கு இருந்து லவ் அதிகமா இருந்துச்சு. நான் இன்னும் அவள லவ் பண்றேன் ” என்று அவன் கிசுகிசுத்த போது அவன் குரல் வேதனையில் உடைந்தது.
“ அப்போ அவள கல்யாணம் செய்ய நீ தயாரா ? “ என்று ஆர்யன் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஆர்யன் ஒரு முடிவு எடுத்தாள் அது அனைவருக்கும் நன்மை தரும்படியாக மட்டுமே இருக்கும் என்பதால் ரஞ்சித்தும், நரேனும் ஆமோதிப்பது போல அமைதியாக இருந்தனர்.
தலை குனிந்து அழுது கொண்டிருந்த விவான் நிமிர்ந்து பார்த்தான், “ அவ என்ன ஏத்துக்க மாட்டா “ என்று சொன்ன அவன் கண்களில் குற்றமும் விரக்தியும் நிறைந்திருந்தன.
“அது உன் பிரச்சனை இல்ல, கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நீங்க கல்யாணம் பண்ண தயாரா ?” என்று கேட்டு நரேன் அவனை மீண்டும் அறைந்தான்.
“நான் எப்பவும் அவ என் வாழ்க்கையில இருக்கணும்னு தான் விரும்பினேன் அதனால நிச்சயமா அவள கல்யாணம் பண்ணிக்க நான் எப்பவும் தயார் தான் ” என்று விவான் உறுதியான குரலில் சம்மதம் சொன்னான்.
ஆர்யன் நிமிர்ந்து நின்று லேசாகத் தலையசைத்தான். ” நல்லது. நாங்க இதுக்கு ஒரு வழி கண்டுபுடிக்குற வர நீ இங்கேயே இருக்கணும். “ என்று சொல்லிவிட்டு பின்னர் ரஞ்சித்தை பார்த்து, “ இவன் இங்கேயே இருக்கட்டும் ரஞ்சித், ஒன்னும் பண்ண வேணாம். அடுத்து நாம என்ன செய்ய போறோம்னு முடிவு பண்ற வர தப்பிச்சு போகாம பார்த்துக்க சொல்லு “ என்று கூறினான்.
” சரிங்க சார்” என்று சொன்ன ரஞ்சித் பின்னர் விவானின் நண்பனை சுட்டிக்காட்டி, “ இவன என்ன செய்றது சார் ? “ என்று கேட்டான்.
ஆர்யனின் கண்கள் இருண்டன. ” இவன உடனே என் முகம் மாதிரி ஒரு மாஸ்க் ரெடி பண்ண சொல்லு. அவன் ரெடி பண்ணதும் என்கிட்ட கொண்டு வா “ என்று சொன்னான். அதை கேட்டதும், ரஞ்சித் குழப்பத்துடன் தயங்கினான். “சார்..? உங்க மாஸ்க் வேணுமா ? ” என்று கேட்டான்.
” செய்ய சொல்லு ரஞ்சித் ” என்று எந்த வாதமும் செய்ய இடம் இல்லாமல் ஆர்யன் உத்தரவிட்டதும் ரஞ்சித் சரி என்று சொன்னான்.
ஆர்யனும், நரேனும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். போகும் வழியில் மாயாவின் நிலையைப் பற்றி நரேன், ஆர்யனிடம் தெரிவித்தான். நரேன் சொன்னதை எல்லாம் கேட்ட ஆர்யன் ஒரு கணம் யோசித்துவிட்டு நரேனைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்த்தான்.
” அப்போ மாயாவுக்கு இன்னொரு ஆபரேஷன் பண்ண ஏற்பாடு பண்ணிடலாம் “ என்று ஆர்யன் அமைதியான தீர்மானத்துடன் சொன்னதும், நரேன் கலக்கத்துடன் அவனை பார்த்து, “ ஆர்யன் அப்படி பண்ணா அவளோட நினைவுகள் இழந்துடுவா “ என்று சொன்ன நரேன் சட்டென நிறுத்தி ஆர்யனின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவனை கவலையுடன் பார்த்தான்.
நரேன் புரிந்து கொண்டான் என்று அறிந்து, “என்ன நம்பு நரேன், இந்த பிரச்சனைய ஒரேயடியா தீர்த்துடுவோம் ” என்று நம்பிக்கையாக சொன்னான் ஆர்யன். ஆர்யன் சொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று புரிந்து கொண்டு, நரேன் சரி என்று தலையசைத்துவிட்டு, ” அப்பா, அவர நாம சமாளிக்கணும் “ என்று கூறினான்.
“அதுக்கு நீ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் அவரோட ரகசிய இடத்த கண்டுபிடிக்கணும்” என்று ஆர்யன் உடனே கூறினான். நரேனும் அதற்கு, “சரி. நான் முயற்சி செய்றேன்.” என்றான்.
நரேன் யோசிப்பதை சில நொடிகள் கவனித்த ஆர்யன், “ஒருவேளை ராஜேஷ் உனக்கு உதவி செஞ்சா உன்னால அந்த இடத்த சீக்கிரம் கண்டுபுடிக்க முடியும் “ என்று ஆர்யன் யோசனை கூறினான். ஆனால் அதை கேட்ட நரேன், ” அவன் வேலைக்கு ஆக மாட்டான் டா, சரியான கல்நெஞ்சக்காரன் “ என்று நரேன் தலை அசைத்தான்.
” அப்போ அவன் உனக்கு உதவி செய்ய ரஞ்சித் தேவையானத செய்வான் “ என்று ஆர்யன் சொல்ல, நரேன் தயக்கத்துடன் “சரி” என்று பதிலுக்கு முணுமுணுத்தான்.
ஒரு வாரம் கடந்து போனது, சஞ்சு தனது இயல்பு நிலைக்கு திரும்ப போராடினாள். ஏக்கத்தால் கனத்த அவளது நாட்கள் நகர்ந்தன. ஆர்யனை ஒரே ஒரு முறை தான் பார்த்தாள், வெறும் சைகை மூலம் மட்டுமே அவனிடம் பேசியிருக்கிறாள். அவனை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று அவள் மனம் ஏங்கியது. சிந்தனையில் ஆழ்ந்தபடி தோட்டத்தில் அமர்ந்திருந்தவள், பானு வருவதை கூட கவனிக்கவே இல்லை.
“சஞ்சு, உங்களோட எடை குறையுது, இது குழந்தைக்கு ஆரோக்கியமானது இல்ல, இது உங்களையும், குழந்தையையும் பாதிக்கும். கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க, ஆர்யன் சார் சீக்கிரம் உங்கள சந்திக்க வருவாரு. இந்த நிலையில அவர் உங்கள பார்த்தா அவருக்கு நீங்க என்ன பதில் சொல்லுவீங்க ? அவர் ரொம்ப கவலைப்படுவாரு. நீங்க மட்டும் இல்ல, உங்க குழந்தையும் கஷ்டப்படுத்துறீங்க. இது தான் நீங்க விரும்புறீங்களா ?” என்று பானு கேட்டதும் சஞ்சு இல்லை என்று வேகமாக தலை அசைத்தாள்.
“இல்ல பானு. நான் நார்மலா இருக்க முயற்சி செய்றேன், ஆனா நான்… என்னால இயல்பு நிலைக்கு திரும்ப முடியல. இத்தன நாளா அவரோட மட்டுமே இருந்து நான் பழகிட்டேன், அவர் என்ன அவ்ளோ செல்லமா பார்த்துக்குவாரு, அதையெல்லாம் மிஸ் பண்றேன். அவர ரொம்ப மிஸ் பண்றேன். நிறைய மிஸ் பண்றேன் ” என்று சஞ்சு கூறினாள்
“அவருக்கு உங்கள நல்லாத் தெரியும்” என்று பானு அவள் தோளில் கை வைத்தார். “அவர் நிச்சயம் உங்களை சந்திக்க ஒரு வழிய கண்டுபிடிப்பாரு ஆனா இந்த முக்கியமான நேரத்துல அவருக்கு நீங்க சப்போர்ட் பண்ணி நீங்க தைரியமா, வலுவா இருக்கனும். அவர் இல்லாத அப்போ நீங்க உங்கள கவனிச்சுக்குவீங்கனு ஆர்யன் சார் உங்கள நம்புறாரு. என்னையும், தீபாவையும் உங்க கூட விட்டு போய் இருக்காருனு மறந்துடாதீங்க ” என்று சொல்லி புரிய வைக்க முயன்றார்.
“என்ன மன்னிச்சிடுங்க பானு, இனி நான் நல்லா இருப்பேன் ” என்று கிசுகிசுத்தாள் சஞ்சு.
“ ரொம்ப நல்லது சஞ்சு, இப்ப வந்து பழம் சாப்பிடுங்க ” என்று மெல்லிய புன்னகையுடன் பானு அவள் கையை பிடித்து அழைத்து சென்றார்.
இதற்கிடையில் மாயாவின் அறையில் அவளை டாக்டர் பரிசோதித்து கொண்டிருந்த போது அவள் உடல்நிலையில் இருக்கும் முன்னேற்றத்தை பற்றி அறிந்து கொள்ள சந்திரசேகர் அறைக்குள் நுழைந்தார். அப்போது நரேன் சொன்னதை அப்படியே டாக்டர் சந்திரசேகரிடம் தெரிவித்தார்.
“அப்போ ஆபரேஷனுக்கு அப்புறம் என் பொண்ணு முழுசா சரியாயிடுவாளா ?” என்று சந்திரசேகர் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கேட்டார். டாக்டர் உடனே, “ஆமாங்க சார், ஆனா அதுக்கு நாம இன்னும் பதினைந்து நாள் வெயிட் பண்ணனும் “ என்று கூறினார்.
தன் மகள் விரைந்து குணமாக வேண்டும் என்ற ஆசையில், “ ஏன் அவ்ளோ நாள் வெயிட் பண்ணனும் ?” என்று சந்திரசேகர் கேட்டார்.
” ஏற்கனவே சொன்னது தான் சார், இப்போதைக்கு அவங்க காயம் குணமடையனும் அப்போ தான் ஆப்பரேஷன் பண்ண முடியும் “ என்று டாக்டர் விளக்கம் கொடுத்தார்.
சரி என்று சொன்ன சந்திரசேகர் பின்னர் சரி என்று சொல்லி அறையில் இருந்த நரேனை பார்த்து, “நரேன், டாக்டர் கிட்ட அடுத்து எப்போ என்ன செய்யணும்னு கேட்டு எனக்கு தகவல் சொல்லு “ என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.
“சரி பா. நீங்க இப்ப வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நான் இங்க மாயா கூட இருக்கேன் “ என்று நரேன் சொன்னதும், “ஹ்ம்ம். சரி, நான் நாளைக்கு காலையில வந்துடறேன்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார் சந்திரசேகர்.
அவர் போனதும் டாக்டர் நரேன் பக்கம் திரும்பி. “சார், ஆபரேஷனுக்கு அப்புறம் விளைவுகள் பத்தி உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டாம்னு உறுதியா சொல்றீங்களா?” என்று கேட்டார்.
“கவலைப்படாதீங்க, எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். என்ன செய்யணும்னு நான் சொல்றேன் “ என்று நரேன் அமைதியாக கூறினான்.
அதே நேரம் வேறொரு இடத்தில், ரஞ்சித் ராஜேஷ் இல்லாத நேரத்தில், பயனுள்ள ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் அவனது வீட்டிற்கு சென்றான் ஆனால் அவனுக்கு ஏமாற்றம் தரும் விதமாக எதுவுமே கிடைக்க வில்லை.
“ ஏன்டா, நீ அவ்ளோ நல்லவனா டா நீ ? அப்படி இருக்க வாய்ப்பு இல்லையே. எதாச்சும் இருக்கணுமே “ என்று சொன்ன ரஞ்சித் ஒவ்வொரு மேஜையின் டிராவையும் திறந்து பார்த்தான். படுக்கையறையின் மூலை முடுக்கெல்லாம் துழாவினான் ஆனால் ராஜேஷுக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. அவன் முயற்சியை கைவிடத் தயாரான போது, வழக்கத்திற்கு மாறான ஏதோ ஒன்று அவனுடைய கவனத்தை ஈர்த்தது. ஒரு ஃபைலின் நுனி பகுதி படுக்கைக்கு அடியில் இருந்து எட்டிப் பார்த்தது.
படுக்கையைத் தூக்கி ஃபைலை வெளியே எடுத்தான் ரஞ்சித். அதில் உள்ளவற்றைப் புரட்டிய போது அவன் முகத்தில் ஒரு பிரகாசமான புன்னகை படர்ந்து, அவன் சத்தமாக சிரித்தான், அவனது உரத்த, வெறித்தனமான சிரிப்பு அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.
” அடப்பாவி, இவ்ளோ சாதாரண விஷயத்துல நீ சிக்குவனு நான் நினைக்கவே இல்லடா, சிறப்பா செஞ்சுடுறேண்டா மாப்ள “ என்று அப்போதும் சிரித்தபடியே தன்னுடைய மொபைலை எடுத்து தன்னுடைய காவலர்களுக்கு டயல் செய்தான். ” ராஜேஷ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தூக்கிட்டு வாங்க “ என்று உத்தரவிட்டான்.
ராஜேஷின் வீட்டை விட்டு புன்னகையுடன் வெளியேறினான், அவனது மனம் ஏற்கனவே அடுத்த நகர்வைத் திட்டமிட்டது.
**************
முன்னோட்டம்:
” பொண்டாட்டி, இப்போ குளிச்சிட்டு வா, இன்னைக்கு உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் நான் ஊட்டி விடுறேன் “

1 comment
[…] Chapter 79 […]