Home FamilyChapter 83

Chapter 83

by Siragugal Novels
9 views

மாயாவின் மருத்துவமனை அறைக்கு வெளியே உள்ள லாபியில் நரேன் பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் பதற்றம் படர்ந்திருந்தது. அப்போது ஆர்யனும், ரஞ்சித்தும் அங்கு வர, அவர்களைப் பார்த்ததும் நரேனின் கண்கள் வியப்பில் விரிந்தன.

” ரெண்டு பேரும் ஏன் இங்க வந்தீங்க அதுவும் இவ்ளோ காலையில ? “ என்று நரேன் வியப்புடன் கேட்டான்.

நரேனின் முகபாவத்தை ஆராய்ந்த போது ஆர்யன் கண்கள் சுருங்க அவன் முன்னால் சென்று, “முதல்ல நீ ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க சொல்லு ?” என்று கேட்டான்.

“இந்த வாரத்துக்குள் மாயாவுக்கு ஆபரேஷன் பண்ண பிளான் பண்ணது நெனச்சா தான் கவலையா இருக்கு” என்றான் நரேன் அவன் தலைமுடியை விரக்தியில் கோதியபடி. அவன் கவலையை உணர்ந்த ஆர்யன், அவள் தோளில் லேசாக தட்டி, “கவலைப்படாத நரேன், ஆப்பரேஷன் செய்ய நான் வர சொல்லி இருக்க டாகடர், லண்டன்ல இருக்க ஒரு நிபுணர். அது மட்டும் இல்ல இது மாதிரி நிறைய ஆப்பரேஷன் வெற்றிகரமா பண்ணி இருக்காரு. ஆப்பரேஷன் அப்புறம் அவ நல்லா இருப்பானு நீ உறுதியா நம்பலாம்.” என்று ஆறுதலாக நம்பிக்கை அளிக்கும் வகையில் கூறினான். 

ஆர்யனின் வார்த்தையை ஆமோதிப்பது போல தலையசைத்த நரேன்,  “நான் உன்ன நம்புறேன் “ என்று கூறினான் பின்னர் அவனிடம், “ ஆனா நீ என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே, நீங்க ரெண்ட பேரும் இங்க என்ன பண்றீங்க? “ என்று கேட்டான்.

ஆர்யன் மூச்சை இழுத்து விட்டான். “நேத்து உங்க அப்பா எனக்கு போன் பண்ணி இருந்தாரு ” என்று கூறினான். அதை கேட்டதும், “எதுக்கு?” என்று புருவங்கள் சுருங்க நரேன் கேட்டான்.

ஆர்யன் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னான் – உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையும், அவன் தந்தை செய்த சூழ்ச்சி கோரிக்கைள் உற்பட அனைத்தையும் கூறினான். அதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே நரேனின் ரத்தம் கொதித்தது. தன் தந்தை இவ்வளவு தரம் தாழ்ந்து போனதை எண்ணி அவனுக்கு அருவருப்பாக இருந்தது.

“மன்னிச்சிடு ஆர்யன், அவர் கேட்ட எதுவும் நீ செய்ய வேண்டியதில்ல. அவர நான் பார்த்துக்குறேன் ” என்று நரேன் உறுதியாக கூறினான் ஆனால் ஆர்யன், “இல்ல டா” என்று தலையை மறுத்து ஆட்டினான். “நான் சஞ்சுவோட உயிர பணயம் வைக்க விரும்பல, அதனால அவருக்கு என்ன வேணுமோ அது எல்லாத்தையும் கொடுக்க நான் தயாரா இருக்கேன் “ என்று சொன்னான்.

” வெயிட் பண்ணலாம், அவர் இப்போ வர நேரம் தான் ” என்று கடிகாரத்தைப் பார்த்தபடி நரேன் சொன்னான். அதற்கு ஆர்யனும், “ஆமா, இந்த டைம் தான் என்னையும் அவர சந்திக்க இங்க வர சொன்னாரு அதனால கண்டிப்பா வருவாரு “ என்று சொன்னான்.

திடீரென நரேனின் போன் ஒலித்தது. அவன் திரையில் தெரியாத எண்ணை பார்த்து அதற்கு பதில் அளித்து, “ஹலோ, யார் இது?” என்று கேட்டான்.

“நீங்க மிஸ்டர் நரேன் தானே ? நான் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் பேசுறேன்.” என்று மறுமுனையிலிருந்து குரல் வந்தது. “ என்ன விஷயம் ?” என்று கேட்ட போது நரேன் வயிற்றில் ஒரு இனம் புரியாத பயம் உருவானது.

” ஸாரி சார், உங்க அப்பாவோட கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு சொல்றதுக்கு தான் போன் பண்ணேன் ” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும், ” என்ன சொல்றீங்க ? இப்போ எப்படி இருக்காரு ?” என்று குரலில் பீதி பொங்க கேட்டான் நரேன்.

“அது ரொம்ப பயங்கரமான ஆக்ஸிடென்ட் சார், கார் தீப்பிடிச்சுடுச்சு. தயவு செஞ்சு நீங்க உடனே சிட்டி ஹாஸ்பிடல் வாங்க. நானும் அங்க இருப்பேன். என் டீம் ஏற்கனவே அங்க தான் இருக்காங்க “ என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்த நரேன், ஆர்யன் மற்றும் ரஞ்சித் பக்கம் திரும்பினான், அவன் முகம் முழுவதும் பீதி எழுதப்பட்டிருந்தது.

“என்ன நடந்துச்சு ? ஏன் இப்படி இருக்க ?” என்று ஆர்யன் கேட்டதும், “அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சுனு இன்ஸ்பெக்டர் என்கிட்ட பேசினாரு ” என்று மூச்சு விடாமல் பதில் சொன்னான் நரேன்.

“அவர எந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க?” என்று ஆர்யன் உடனே அவசரமாகக் கேட்டான். “சிட்டி ஹாஸ்பிடல்.” என்று நரேன் சொன்னதும், “வா போகலாம்” என்றான் ஆர்யன்.  

மூவரும் அங்கிருந்து ஓடி காரில் ஏறியதும், ரஞ்சித் காரை மருத்துவமனைக்கு ஓட்டினான். ஆர்யன் பயணம் முழுவதும் நரேனுக்கு ஆறுதலான வார்த்தைகளை பேசினான், புயலில் சிக்கி தவிப்பது போல இருந்த அவன் மனதை அமைதிப்படுத்த முயன்றான். சுமார் முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் மருத்துவமனையை அடைந்து, முழு வளாகமும் பதற்றத்தில் தில் இருப்பதைக் கண்டனர். ஊடக வேன்கள் கட்டிடத்தை சுற்றி வளைத்தன, நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை தாண்டி ரஞ்சித் காரை உள்ளே நிறுத்தினான்.

மூவரும் நுழைவாயிலுக்கு அருகில் இன்ஸ்பெக்டரை சந்தித்தனர்.

“இன்ஸ்பெக்டர், மிஸ்டர் சந்திரசேகர் எப்படி இருக்கார்?” என்று ஆர்யன் முதலில் கேட்டான்.

“என்ன மன்னிச்சிடுங்க சார்” என்று இன்ஸ்பெக்டர் வருத்தமாக சொன்னதும், “ மன்னிச்சிடுங்கனு சொன்னா என்ன அர்த்தம்? எங்க அவரு ?” என்று நரேன் முன்னால் சென்று கேட்டான்.

“தயவு செஞ்சு கொஞ்சம் அமைதியா இருங்க, நான் சொல்றத கேளுங்க. ஆக்ஸிடென்ட் ஆன உடனே கார் எரிய ஆரம்பிச்சு இருக்கு. உள்ள ரெண்டு பேரு இருந்துருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் கார் உள்ளேயே எரிஞ்சிட்டாங்க. அவங்க உடம்பு மொத்தமா  கருகி சம்பவ இடத்திலேயே இறந்துட்டாங்க “ என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

செய்தியைக் கேட்ட நரேன் அப்படியே உடைந்து போனான். ஆர்யன் உடனே அவன் தோள்களை ஆதரவாக பிடித்துக் கொண்டான்.

“ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சுதா?” என்று ரஞ்சித் அமைதியாகக் கேட்டான்.

“ஆமா, ரெண்டு உடம்பும் அதிகமா எரிஞ்சு போய் இருக்கு அதனால நீங்க வீட்டுக்கு கொண்டு போக முடியாது. உடனே இறுதிச் சடங்கு செய்யணும் ” என்றார் இன்ஸ்பெக்டர்.

“சரி, மத்த விஷயங்கள நாங்க பார்த்துக்குறோம் “ என்று ரஞ்சித் தலையசைத்தான். சரி என்று சொன்ன இன்ஸ்பெக்டர், ” மார்ச்சுரி போய் உடம்ப பார்க்கலாம் ஆனா மூணு பேரும் மாஸ்க் போடுங்க “ என்று இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார்.

ஆர்யன், நரேன், ரஞ்சித் மூவரும் மாஸ்க் அணிந்து இன்ஸ்பெக்டரை பின்தொடர்ந்து பிணவறைக்குள் நுழைந்தனர். உள்ளே இருந்த காட்சி அவர்களின் வயிற்றைக் கலக்கியது- கருகிப்போன, அடையாளம் காண முடியாத இரண்டு உடல்கள் அசையாமல் கிடந்தன. நீண்ட  நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் வேகமாக வெளியே வந்தார்கள்.

உடல்களை கொண்டு செல்ல ஏற்பாடுகளை கவனிக்க ரஞ்சித் சென்றதும் ஆர்யன் நரேனின் தோளில் கை போட்டு ஆதரவாக இருந்தான். சில நிமிடங்கள் கழித்து ரஞ்சித் சில ஆவணங்களுடன் திரும்பி வந்தான்.

“நரேன், இந்தாங்க டெத் சர்டிபிகேட். சந்திரசேகர் சார் கூட இருந்த அந்த இன்னொரு ஆள் ராஜேஷ் தான் ” என்று ரஞ்சித் தெரிவித்தான்.

” சந்திரசேகர் சார் இறந்துட்டாருனு எல்லாருக்கும் தெரியப்படுத்த அதிகரப்பூர்வமா ஒரு செய்திக்குறிப்ப தயார் பண்ணு ” என்று ஆர்யன் கூறியதும், “ இப்போ உடனே  செய்றேன் சார் “ என்றான் ரஞ்சித்.

ஆர்யன் இன்ஸ்பெக்டரை நோக்கித் திரும்பி அவருக்கு ஒரு சிறிய தலையசைப்பையும், மெல்லிய புன்னகையையும் கொடுத்துவிட்டு விலகிச் சென்றான்.

அன்றைய தினம் அவர்கள் இறுதிச் சடங்குகளை முடித்தனர். ஆர்யன் நரேன் தனியாக இருப்பதை விரும்பவில்லை, எனவே அவனை தனது மேன்ஷனுக்கு அழைத்து சென்றான்.

“ரஞ்சித், நரேனை கெஸ்ட் ரூமுக்கு கூட்டிட்டு போ, அவன்  குளிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று ஆர்யன் சொன்னதும், ரஞ்சித் அவன் சொன்னபடியே செய்தான்.

ஆர்யனும் புத்துணர்ச்சி பெற தன் அறைக்குத் திரும்பினான். உடை மாற்றிய பிறகு, அவன் தனது தொலைபேசியை எடுத்து தனது பெற்றோரை கவனித்துக் கொள்ளும் மருத்துவரை அழைத்தான்.

“ஹலோ டாக்டர். என் அப்பா அம்மா எப்படி இருக்காங்க?” என்று ஆர்யன் கேட்டான்.

” சார், அவங்க உடம்புல கலந்திருக்க மருந்தோட விளைவுகள குறைக்க நான் சில மருந்துகளை ஏற்பாடு பண்ணி இருக்கேன் ஆனா அந்த மருந்து இப்போ கொஞ்ச நாளா நம்ம நாட்டுல தடை பண்ணி இருக்காங்க அதனால நாம அதை சட்டவிரோதமா மட்டும் தான் இந்தியாவுக்கு கொண்டு வர முடியும். நான் அத ஏற்பாடு பண்ணி இருக்கேன், இன்னும் மூணு நாள்ல கிடைச்சிடும். அந்த மருந்து  கொஞ்சம் கொஞ்சமா கொடுக்க ஆரம்பிச்சதும் ரெண்டு குணமடைவாங்க “ என்று டாக்டர் சொன்னதை கேட்ட ஆர்யன், ” அந்த மருந்து முன்னாடியே கிடைக்க வழி இருக்கா?” என்று  கேட்டான்.

“இல்ல சார், ஆனா நீங்க கவலைப்படாதீங்க. நான் அவங்கள கவனிச்சுக்குறேன், ரெண்டு பேரும் சீக்கிரம் சரியாயிடுவாங்க. நான் உங்களுக்கு உறுதியா சொல்றேன் “ என்று டாக்டர் சொல்ல, “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு” என்றான் ஆர்யன.

டாக்டரிடம் பேசிவிட்டு அழைப்பை முடித்துக் கொண்டு கீழே சென்ற  ஆர்யன், லிவிங் அறையில் ரஞ்சித்தும், நரேனும் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். கௌசல்யாவை அழைத்து அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யச் சொன்னான். எப்படியோ நரேனை வற்புறுத்தி கொஞ்சம் சாப்பிட சம்மதிக்க வைத்தார்கள். பின்னர், மூவரும் மீண்டும் லிவிங் அறையில் ஒன்றாக அமர்ந்தனர்.

ஆர்யன் ரஞ்சித்துக்கு ஒரு சூட்சும சமிக்ஞை ஒன்று கொடுத்ததும்  உடனே அதைப் புரிந்துகொண்ட ரஞ்சித் தலையசைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். சிறிது நேரம் கழித்து அவன் அவசர அவசரமாக லிவிங் அறைக்கு நுழைந்தான்.

“ என்ன ஆச்சு ரஞ்சித் ? என்ன விஷயம் ? “ என்று கேட்டு ஆர்யன் நிமிர்ந்து பார்த்தான்.

“சார், சஞ்சனா இருக்குற இடம் தெரிஞ்சுடுச்சு “ என்று ரஞ்சித் சொன்னதும், “ அப்படியா ? எங்க இருக்கா ? “ என்று கேட்டபடி ஆர்யன் சட்டென்று எழுந்து நின்றான்.

“ பெங்களூருக்கு கடத்தி போய் இருக்காங்க “ என்று ரஞ்சித் பதில் சொன்னதும், நரேன் உடனடியாக ஆர்யன் பக்கம் திரும்பினான்.

“ஆர்யன், உடனே கிளம்பி போய் சஞ்சுவ காப்பாத்தி கூட்டிட்டு வா.  எப்படியும் அந்த அடியாளுங்களுக்கு ஆர்டர் கொடுக்க இப்போ அப்பாவும் இல்ல ராஜேஷும் இல்ல அதனால உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. நீ முதல்ல கிளம்பு “ என்று நரேன் அவசரமாக சொன்னதும், “ சரி, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் சீக்கிரம் சஞ்சுவோட வந்துடறேன்.” என்று சொல்லி ஆர்யன் தலையசைத்தான்.

“சார், நான் உங்க கூட வரட்டுமா ?” என்று ரஞ்சித் கேட்டதும், “இல்ல. நீ நரேன் கூட இரு. நான் நம்ம ஆளுங்க கூட போறேன் “  என்று ஆர்யன் உறுதியாகச் சொன்னான்.

ஒரு நொடியையும் வீணாக்காமல் ஆர்யன் வெளியேறி காரில் ஏறினான். காவலர்களில் ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த காரை ஓட்ட, அவர்கள் விமான நிலையத்தை நோக்கி விரைந்தனர்.

ஆர்யனின் மனதில் எண்ணங்கள் சுழன்றன, நெஞ்சில் குற்ற உணர்வு கனத்தது.

“ மன்னிச்சிடு நரேன். நான் உன் கிட்ட இருந்து பல விஷயங்கள மறைக்குறேன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா எனக்கு வேற வழி இல்ல. தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடு டா “ என்று மனதில் நினைத்தபடி அமர்ந்திருந்தான்.

தனது தனியார் ஜெட் தயாராக இருந்த விமான நிலைய பகுதியை ஆர்யன் அடைந்தான். இதற்கிடையில், அமைதியான கிராமத்து  வீட்டில், சஞ்சு பானுவுடன் ஹாலில் அமர்ந்து, பானுவின் தோளில் சாய்ந்திருந்தாள், அவள் கண்கள் ஏக்கத்துடன் கலங்கி இருந்தன.

திடீரென்று, ஒரு கார் நிற்கும் சத்தம் வாசலில் இருந்து எதிரொலித்தது. இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். சஞ்சுவின் கண்கள் விரிந்தன, பின்னர் அவள் ஆச்சரியத்தில் “ஆர்யன்” என்று கூவியபடி கதவை நோக்கி ஓடினாள்.

” பாத்து மா, பார்த்து மா, ஓடி வராத “ என்று மெல்ல எச்சரித்தபடி ஆர்யன் சொல்ல, சஞ்சு அவன் கைகளில் விரைந்தாள்.

இருவரும் சேர்ந்து உள்ளே செல்வதற்கு முன் அவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“எப்படி இருக்க பொண்டாட்டி ?” என்று ஆர்யன் புன்னகையுடன் கேட்க, “ நான் கனவு காண்றேனா, ஆர்யன்?” என்று சஞ்சு கிசுகிசுத்தாள், அவள் கண்கள் இன்னும் அவநம்பிக்கையில் விரிந்தன.

“இல்ல ஸ்வீட் ஹார்ட், உனக்காக நான் வந்துருக்கேன் ” என்று ஆர்யன் பதில் சொன்னான்.

“ஹலோ ஆர்யன்” என்று பானு வரவேற்றதும், “ ஹாய் பானு, எப்படி இருக்கீங்க? தீபா ஆன்டி எங்க?” என்று ஆர்யன் கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன்” என்று பானு சொல்லும் போது, “ இதோ வந்துட்டேன் சார் “ என்று சொல்லி ஹாலுக்கு வந்த தீபா, “ சஞ்சு, நான் தான் சொன்னேன்ல, பாரு சார் வந்துட்டாரு “ என்று சஞ்சுவிடம் கூறினார்.

சஞ்சு தீபாவை நோக்கி நகர்ந்து அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, அவரின் தோளில் முகம் புதைத்தாள்.

“சரி வீட்டுக்குப் போகலாமா?” என்று ஆர்யன் சஞ்சுவைப் பார்த்து கேட்டதும், “உண்மையாவா?” என்று அவள் கண்கள் ஒளிர கேட்டாள்.

“ஆமா, பானு, தீபா ஆண்ட்டி, ரெண்டு பேரும் ரெடியாகுங்க, நாம கிளம்புறோம் “ என்று ஆர்யன் சொல்ல, ” நான் எதுக்கு சார் ? சஞ்சுவுக்கு குழந்தை பிறக்கும் போது நான் வரேன். இப்போ நீங்க கிளம்புங்க. எனக்கு இங்க கிராமத்துல இருந்து பழகிடுச்சு “ என்று பதில் சொன்னார் தீபா.

“ஆனா நீங்க கண்டிப்பா எங்கள பார்க்க வரணும், நான் பாலா கிட்ட சொல்றேன் ” என்று ஆர்யன் புன்னகைத்தான்.

தீபா பதிலுக்கு சரி என்று சொல்ல, பானு தயாராக அவர்  அறைக்குச் சென்றார். ஆர்யனும், சஞ்சுவும் அவளது அறைக்கு  சென்றனர், அவர்கள் உள்ளே நுழைந்ததும், சஞ்சு அவன் கழுத்தை சுற்றி கைகளை வளைத்து அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

அவளின் உற்சாகத்தை கண்டு சிரித்த ஆர்யன் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி தன் உதடுகளை அவள் உதடுகளில் அழுத்தி ஆழமான உணர்ச்சி பொங்க முத்தமிட்டான். அவள் மூச்சிரைக்கும் வரை அவன் விடவில்லை.

” சரி இப்போ கிளம்பலாம், மிச்சத்த வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம் ” என்று கிசுகிசுத்தான்.

சஞ்சு உடை மாற்றும் போது ஆர்யன் அவளது பொருட்களை பேக் செய்தான். அவர்கள் வெளியே வந்த போது, பானு அவர்களுக்காகக் காத்திருந்தார். சஞ்சு கடைசியாக ஒரு முறை தீபாவை அணைத்துக் கொண்டாள்.

“தீபா மா, ரொம்ப தேங்க்ஸ். சஞ்சுவை உங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டீங்க” என்றான் ஆர்யன் உண்மையாக.

” சஞ்சு என் பொண்ணு தானே, அதனால அவள பார்த்துக்குறதுல எந்தப் பிரச்சினையும் இருக்காது.” என்று தீபா சொல்ல, “ தீபா அம்மா, தயவு செஞ்சு நீங்க சென்னைக்கு வரணும் “ என்றாள் சஞ்சு.

“நீ சொல்லவே வேணாம் சஞ்சு, நான் கண்டிப்பா வரேன்.” என்று தீப சொன்னதும், “லவ் யூ தீபா மா.” என்றாள் சஞ்சு.

“இப்ப கிளம்பலாமா?” என்று ஆர்யன் மெதுவாகக் கேட்டான்.

தீபாவின் அன்புக்கும் அக்கறைக்கும் பானு நன்றி கூறினார். ஆர்யன் முன் பயணிகள் இருக்கையில் அமர, பானு மற்றும் சஞ்சு பின் இருக்கையில் அமர்ந்தனர். அவர்கள் தீபாவிடம் கையசைத்து விடைபெற்றுக் கிளம்பினர்.

விரைவில் அவர்கள் விமான நிலையத்தை அடைந்து ஆர்யனின் தனியார் ஜெட் விமானத்தில் ஏறினார்கள். அவர்கள் விமானத்தில் ஏறியதும் ஆர்யன் சஞ்சு பக்கம் திரும்பினான்.

“சஞ்சு, இப்போ நான் உன்ன பெங்களூர்ல கடத்தல்காரங்க கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போறேன். இத தான் நீ எல்லார்கிட்டயும் சொல்லணும் “ என்று ஆர்யன் சொன்னதும் “கண்டிப்பா ஆர்யன்” என்று சஞ்சு தலையசைத்தாள்.

“நரேன் நம்ம மேன்ஷன்ல தங்கி இருக்கான் ” என்று அவன் மேலும் சொன்னதும், “ ஓ… அவர் எப்படி இருக்காரு ? அப்புறம் மாயா இப்போ எப்படி இருக்கா?” என்று சஞ்சு கவலையுடன் கேட்டாள்.

“சந்திரசேகர் இன்னிக்கு ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு “ என்று ஆர்யன் அமைதியாக கூறினான். அதை கேட்டதும், “என்ன? ஆர் யூ சீரியஸ்?” என்று சஞ்சு அதிர்ச்சியில் கேட்டாள்.

“ஹ்ம்ம், ஆமா, நரேன் ரொம்ப உடைஞ்சு போய் இருந்தான் அதனால நான் அவன நம்ம கூட தங்க சொல்லி கட்டாயப்படுத்தி வர சொன்னேன். மாயாவுக்கு இந்த வாரம் ஒரு ஆபரேஷன் நடக்க இருக்கு, சீக்கிரம் சரியாகிடும்.” என்று ஆர்யன் சொல்ல, “பாவம் நரேன் அண்ணா. அவர் ஒரே நேரத்தில் அவருக்கு எவ்ளோ கஷ்டம். “ என்று வருத்தம் கொண்ட சஞ்சு பின்னர் அவனை பார்த்து, “ஆபரேஷனுக்கு அப்புறம் மாயாவ எப்படி சமாளிக்குறது ?” என்று கவலையோடு கேட்டாள்.

“எந்த பிரச்சனையும் வராது” என்று ஆர்யன் அவளுக்கு உறுதியளித்தான்.

“அவ குழந்தையோட அப்பாவ கண்டுபுடிச்சீங்களா ? “ என்று சஞ்சு கேட்க, ” ஹ்ம்ம், ஆமா மா. காலேஜ்ல அவ கூட படிச்ச அவளோட முன்னால் லவர் தான். அவன் இன்னும் அவள லவ் பண்றான் “ என்று பதில் சொன்னான் ஆர்யன்.

” அபப்டியா ? மாயா அவன ஏத்துக்கிட்டா நல்லா இருக்கும் “ என்று சஞ்சுவின் குரலில் மெல்லிய நம்பிக்கை இருந்தது.

“கவலைப்படாத, எல்லாம் சரியாகிடும்” என்றான் ஆர்யன். பிறகு பானுவின் பக்கம் திரும்பி “பானு, உங்களுக்கு நன்றி சொல்ல என்கிட்ட வார்த்தையே இல்ல. நீங்க உங்க வேலைய எல்லாம் விட்டுட்டு எனக்கு உதவி செய்ய வந்தீங்க. ரொம்ப தேங்க்ஸ்.” என்று சொன்னான்.

“ஆர்யன், தயவு செஞ்சு எனக்கு நன்றி சொல்றத நிறுத்துங்க. உங்களுக்கு உதவ முடிஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று பானு ஒரு சிறிய புன்னகையுடன் பதிலளித்தார். சஞ்சுவும் பானுவுக்கு மனதார நன்றி சொன்னாள்.

அவர்கள் சென்னையில் தரையிறங்கியதும் சஞ்சுவும், ஆர்யனும்  விடைபெறுவதற்கு முன்பு சஞ்சு பானுவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். பானுவை பத்திரமாக இறக்கிவிட ஆர்யன் ஏற்கனவே ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தான். அவனும், சஞ்சுவும் காரில் ஏறி வீட்டை நோக்கி சென்றனர்.

சஞ்சு ஆர்யனின் தோளில் சாய்ந்தாள், அவளது விரல்கள் அவனது விரல்களுடன் பின்னிப் பிணைந்திருந்தன.

அவள் அவளுடைய வீடு, அவளுடைய ஆர்யனிடம் திரும்பிவிட்டதில் மகிழ்ச்சியடைந்தாள். ஒரு அமைதியான அமைதி அவள் மனதை ஆட்கொண்டது.

ஆர்யன் அவளை அணைத்து அவள் கூந்தலை மென்மையாக முத்தமிட்டான், மீண்டும் தன் உலகத்தை விட்டுவிடுவோமோ என்று பயந்தவன் போல அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

***************************

முன்னோட்டம்: 

” பாப்பா, நாம மறுபடியும் ஒன்னா இருக்கோம். இதுக்கு அப்புறம் நாம எப்பவும் ஒன்னா இருப்போம், உன்னையும், அம்மாவையும் விட்டு அப்பா எப்பவும் பிரிய மாட்டேன். உங்க ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்குவேன். ஐ லவ் யூ பாப்பா “

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!