Home FamilyChapter 88

Chapter 88

by Siragugal Novels
5 views

ஒரு பொருளின் மதிப்பு பெரும்பாலும் அதை இழந்த பின்னரே ஒருவர் உணருகிறார். ஆனால் இழந்த பொருள் ஒருமுறை மீண்டும் கிடைத்துவிட்டால் அது புனிதமான ஒன்றாக மாறுகிறது. அதன் உரிமையாளர் அதை பொக்கிஷமாக கருதுவார். அதே போல தான் ஒரு மனிதனின் மதிப்பும் உணரப்படுகிறது. ஆர்யனின் குடுமபத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் அதை போல தான் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு முறை தங்கள் மகிழ்ச்சியை இழந்து பெரும் துயரத்தை அனுபவித்தனர் ஆனால் இனி ஒரு போதும் அப்படி ஒரு துயரத்தை உணர முடியாது, அப்படி சூழ்நிலை உருவாகவும் கூடாது என்று நினைத்தார்கள். வாழ்க்கை அவர்களுக்கு கொடுத்த இரண்டாவது வாய்ப்பை மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் அன்பாக அரவணைத்தனர். இந்த முறை, அவர்கள் அனைவரும் அந்த வாய்ப்பை கவனமாகவும் அன்புடனும் பிடித்துக் கொண்டனர், அதை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

விஷ்ணுவும், தேவிகாவும் லிவிங் அறையில் வெளியே செல்ல புறப்படத் தயாராக காத்திருந்தனர். அதே நேரத்தில் ஆர்யன் இன்னும் தன் அறையில், வழக்கத்தை விட சோர்வடைந்து இருந்த தனது மனைவியைக் கவனித்துக் கொண்டிருந்தான். சஞ்சனா கர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில் இருந்தாள்.

” சஞ்சு மா, நான் அம்மா, அப்பாகிட்ட சொல்றேன். இன்னொரு நாள் நான் அவங்கள கூட்டிட்டு போறேன். உன்ன இந்த நிலையில விட்டுட்டு என்னால போக முடியாது” என்று சொல்லி ஆர்யன் அவள் முதுகை மெல்ல தடவினான். ஆனால் சஞ்சு மறுத்து, “பரவாயில்ல ஆர்யன், நான் நல்லா இருப்பேன். நீ அவங்க கூட போ. எதுக்காகவும் அவங்கள ஏமாத்தவோ இல்ல காக்க வைக்கவே வேணாம். எப்படியும் கொஞ்ச நேரத்துல நீங்க வீட்டுக்கு வந்துடுவீங்க அதனால ஒன்னும் பிரச்சன இல்ல ” என்றாள் சஞ்சனா பலவீனமான புன்னகையுடன்.

” அப்போ அது வரைக்கும் நீ வலியில துடிச்சுட்டு இருப்பியா ? “ என்று ஆர்யன் கேட்க, ” இல்ல, எனக்கு வலி இல்ல. களைப்பா தான் இருக்கு அதனால தூங்கனும் போல இருக்கு. நான் தூங்குறேன். நீ கவலைப்படாம போயிட்டு வா. இப்போ சீக்கிரம் கிளம்பு அம்மாவும் அப்பாவும் வெயிட் பண்ணுவாங்க ” என்று சஞ்சு பதில் சொன்னாள்.

அவள் அவனுக்கு உறுதியளிக்கும் சைகையாக அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். ஆர்யன் குனிந்து அவள் உதடுகளை மென்மையாக முத்தமிட்டு, ” எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடறேன். வலி எதுவும் இருந்தா உடனே எனக்கு போன் பண்ணு “ என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சனா பதிலுக்கு சரி என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

ஆர்யன் அறையை விட்டு வெளியேறினான், ஆனால் அவன் இதயம் கனத்தது. இருப்பினும் அவளது தைரியமான வார்த்தையை நம்பினான்.

அவன் லிவிங் அறைக்கு சென்ற போது அவன் பெற்றோர் அவனுக்காக காத்திருந்தனர். விரைவில், அவர்கள் காரில் டி.சி இல்லத்திற்கு புறப்பட்டு சென்றனர். சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் டி.சி இல்லத்தை அடைந்தனர். நரேன் ஏற்கனவே லிவிங் அறையில் நடந்தபடி அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவர்களின் கார் வந்து நின்றதும், அவர் அவர்களை மனதார வரவேற்க வெளியே விரைந்தான்.

“அங்கிள், ஆன்டி, ப்ளீஸ் வாங்க. ஹாய் ஆர்யன்!” என்று அவர்களை உள்ளே வரவேற்றான்.

“ஹலோ நரேன், எப்படி இருக்க ?” என்று தேவிகா புன்னகையோடு கேட்டதும், “அவன் சூப்பரா இருக்கான், சரியா டா ? என்று விஷ்ணு, நரேனைப் பெருமிதப் பார்வை பார்த்தபடி சொன்னார்.

“ஆமா நிச்சயமா,” என்று தேவிகா அன்புடன் தலையசைத்து ஆமோதித்தார்.

அவர்கள் உள்ளே நுழைந்து லிவிங் அறையில் அமர்ந்தனர். நரேன் சட்டென மாயாவையும் விவானையும் அழைத்தான். மாயா தனது விபத்துக்குப் பிறகு ஆர்யனைப் பார்ப்பது இதுவே முதல் முறை அதனால் அவள் எதிர்வினையை நினைத்து அவன் நரம்புகளில் பதட்டம் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது, ஆர்யனுக்கும் ஒரு பதட்டம் ஏற்பட்டது.

சில கணங்களுக்குப் பிறகு மாயாவும், விவானும் கைகோர்த்தபடி லிவிங் அறைக்கு வந்தனர், அவர்கள் முகத்தில் பிரகாசமான புன்னகை ஒளிர்ந்தது.

” அங்கிள், ஆன்டி எப்படி இருக்கீங்க?” என்று மாயா உற்சாகமாகக் கேட்டாள்.

” நாங்க நல்லா இருக்கோம், நீ எப்படி இருக்க?” என்று விஷ்ணு பதிலளித்தார்.

“நான் நல்லா இருக்கேன். ஹாய் ஆர்யன் அண்ணா, எப்படி இருக்கீங்க? ஸாரி, இதுக்கு முன்னாடி நாம சந்திச்சு பேசி இருக்கோமா தெரியல, ஆக்ஸிடென்ட் அப்புறம் எல்லாம் மறந்துடுச்சு “ என்று மாயா வருத்தத்துடன் கூறினாள்.

அவள் வார்த்தைகளை கேட்டதும் நரேனும், ஆர்யனும் நிம்மதி அடைந்தனர்.

“பரவாயில்ல. இப்ப எப்படி இருக்க ?” என்று ஆர்யன் பணிவாக கேட்டான்.

” நான் நல்லா இருக்கேன். விவான் என்ன நல்லா பார்த்துக்குறான் “ என்று சொல்லி மாயா விவானை பார்த்து காதலோடு புன்னகைத்தாள். 

மாயாவின் அருகில் நின்றிருந்த விவானை பார்த்த தேவிகா, “ யார் இவரு ?” என்று கேட்டார். 

” ஆன்டி, இவன் விவான், மாயாவுக்கும் இவருக்கும் தான் கல்யாணம் செய்ய பிளான் பண்றோம் ” என்றான் நரேன் பெருமையுடன் கூறினான்.

” அப்போ மாப்பிள்ளனு சொல்லு “ என்று தேவிகா புன்னகைத்தார் பின்னர் மாயாவை பார்த்து, ” இப்போ மாயாவோட உடம்பு நல்லா இருந்தா கல்யாணத்துக்கு பிளான் பண்ணலாம்.” என்றும் கூறினார் ஆனால் உடனே விவான் குறுக்கிட்டு, “இல்ல ஆன்டி அவளுக்கு நிறைய ரெஸ்ட் வேணும். இன்னும் ரெண்டு மூணு மாசம் வெயிட் பண்ணுவோம் ” என்றான் மெல்ல தலையை அசைத்தபடி சொன்னான்.

” நோ ப்ராப்ளம் விவான். நாம வெயிட் பண்ணலாம் ” என்று தேவிகா பதில் சொன்னார்.

“உங்க அப்பா அம்மாகிட்ட பேசி கல்யாணத்துக்கு நாங்க ஏற்பாடு பண்றோம். இப்போ இது எங்க பொண்ணோட கல்யாணம், அவளுக்காக நாங்க எல்லாம் செய்வோம்.” என்று விஷ்ணு சொன்னதும், மாயாவும் நரேனும் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டார்கள். இருவரும் தேவிகாவையும் விஷ்ணுவையும் கட்டித் தழுவினர், அவர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் அக்கறையால் மூழ்கினர்.

“நீங்க எங்க பசங்க தான், சந்திரா இங்க இருந்தாலும் நாங்க நிச்சயம் உங்களுக்காக இதெல்லாம் செய்வோம் ” என்றார் விஷ்ணு.

“அம்மா, அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம் பண்ணி வைக்கலாம்” என்று ஆர்யன் சொன்னதும், ” என்ன சொல்ற ஆர்யன் ?” என்று விஷ்ணு வியப்புடன் கேட்டார்.

” நரேன், சஞ்சுவோட friend பவித்ராவ லவ் பண்றான் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும், ” ஓ மை காட்,  நம்ம பிள்ளைங்க எல்லாரும் வளர்ந்துட்டாங்க! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க கல்யாணத்த பார்க்க நான் ரொம்ப ஆவலா இருக்கேன் “ என்று சொல்லி தேவிகா ஆனந்தத்தில் பெருமூச்சு விட்டார்.

அப்போது அங்கு பவித்ரா உள்ளே வர, நரேன் அவளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். ஆர்யனின் பெற்றோரை அணுகி அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றபோது அவள் வெட்கத்தோடு மகிழ்ச்சியாக இருந்தாள்.

“பவித்ரா, நீ ரொம்ப அழகா இருக்க, உனக்கு எப்பவும் எங்க ஆசீர்வாதம் இருக்கும், சந்தோஷமா இரு ” என்று தேவிகா அவளை வாழ்த்தினார்.

“தேங்க்யூ ஆன்ட்டி” என்றாள் பவித்ரா இனிமையாக.

“அப்போ மூணு கல்யாணம் நடக்க போகுது ” என்று கண்களில் உற்சாகத்துடன் அறிவித்தான் ஆர்யன்.

அதை கேட்டு, ” மூணு கல்யாணமா ? மூணாவது ஜோடி யாரு?” என்று நரேன் கேட்டான்.

“ஆமா டா, பிரதீப்பும் அவனோட அப்பாவும் எங்கள பார்க்க வந்தாங்க. அடுத்த வாரம் கீர்த்திக்கும், பிரதீப்புக்கும் நிச்சயதார்த்தமும், சஞ்சுவோட பிரசவத்துக்கு அப்புறம் கல்யாணமும் செய்ய பிளான் பண்ணி இருக்காங்க “ என்று ஆர்யன் கூறினான்.

” நீங்க ஏன் அண்ணிய உங்க கூட கூட்டிட்டு வரல ? “ என்று மாயா கேட்க, ” அவளுக்கு எட்டு மாசம் ஆகுது, சீக்கிரம் களைப்பாகுறா அதனால வெளிய எங்கேயும் கூட்டிட்டு போறதில்ல. ஆனா பிரதீப் நிச்சயதார்த்தத்துல நீ அவள சந்திக்கலாம் ” என்று ஆர்யன் பதில் சொன்னான்.

ஆர்யன் சொன்னதை கேட்டு, ” ஒஹ் அப்படியா! அவங்கள நல்லா பார்த்துக்கோங்க, அப்படியே நான் வாழ்த்து சொன்னதா சொல்லுங்க. சீக்கிரம் அவங்கள சந்திக்கிறேன் “ என்று மாயா மிகவும் அன்பாக கூறினாள்.

“நிச்சயமா “ என்று சொன்ன ஆர்யன், தன் கையில் இருந்த வாட்சை பார்த்துவிட்டு, “ அம்மா, அப்பா நாம இப்போ கிளம்பலாம். நாம கிளம்பும் போது சஞ்சு ரொம்ப சோர்வா இருந்தா அதனால நான் போய் அவள பார்க்கணும் “ என்று கூறினான்.

” அங்கிள். ஆன்டி கொஞ்ச நேரம் எங்க கூட இருக்கட்டும் ” என்று மாயா நம்பிக்கை கலந்த புன்னகையுடன் கேட்டதும், “அவங்க விரும்பினா எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல” என்றான் ஆர்யன்.

” இன்னிக்கு இங்கேயே இருந்துட்டு நாளைக்கு திரும்ப வரோம் ஆர்யன் “ என்று தேவிகா பதில் சொன்னதும், “சரி, நீங்க எல்லாரும் சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க. நான் கிளம்புறேன் “என்று ஆர்யன் தன் பெற்றோரை அன்புடன் அணைத்துக் கொண்டான்.

“நான் பார்த்துக்குறேன் ஆர்யன், நீ கவலைப்படாம போ “ என்று நரேன் அவனுக்கு தைரியம் சொன்னான்.

” சரி டா,  எல்லாருக்கும் bye ” என்று சொல்லி ஆர்யன் கிளம்பி வீடு வந்து சேர்ந்தான். அவன் அறைக்குள் நுழைந்த போது சஞ்சு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், ஆனால் அவள் முகத்தில் இருந்த முகச்சுளிப்பு அவள் இன்னும் தாங்கிக்கொண்டிருந்த வலியைக் காட்டிக் கொடுத்தது. அவன் மௌனமாக அவளருகில் சென்று, வழக்கமாக மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெயை எடுத்து அவள் முதுகில் மெதுவாக மசாஜ் செய்யத் தொடங்கினான். அவனது கைகள் அக்கறையுடனும் அன்புடனும் அசைந்து, அவளது முதுகு மற்றும் வீங்கியிருந்த கால்களிலிருந்து வந்த வலியைக் குறைத்தன.

அவனது ஸ்பரிசம் அவளை அமைதிப்படுத்த, அவள் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தாள். ஆர்யன் அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவள் அருகில் படுத்துக் கொண்டு அவள் முகத்தில் தெரிந்த மென்மையான, தாய்மையின் பிரகாசத்தை ரசித்தான்.

” ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ” என்று ஆர்யன் ஒரு மென்மையான புன்னகையுடன் கிசுகிசுத்தான். பிறகு, அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், சோபாவில் நகர்ந்து, அமைதியாக தனது லேப்டாப்பில் வேலை செய்யத் தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து, சஞ்சு ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அசைந்தாள். அவள் கண்கள் திறந்ததும், ஆர்யன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவள் அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள், அவளுடைய இதயம் அன்பால் படப்படத்தது.

“எப்ப வந்தீங்க?” என்று கேட்டு சற்றே மெதுவாக எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்.

” நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நீ தூங்கிட்டு இருந்ததால உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணல” என்றான் ஆர்யன் மென்மையாக.

” சரி, அங்க எல்லாரோடையும் சந்திப்பு எப்படி இருந்துச்சு ?” என்று சஞ்சு கேட்க, ” ஹ்ம்ம், நல்லா இருந்துச்சு. அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு ஒரு நாள் அங்கேயே தங்க விரும்பினாங்க அதனால நான் மட்டும் கிளம்பி வந்துட்டேன் “ என்று ஆர்யன் பதில் கூறினான்.

“மாயா எப்படி இருக்கா ?” என்று சஞ்சு ஆர்வத்துடன் கேட்டதும், ” நல்லா இருக்கா, உன்ன சந்திக்க விரும்புறா. அப்புறம் உனக்கு வாழ்த்து சொல்ல சொன்னா “ என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சு சத்தமாக சிரித்தாள். “ஹ்ம்ம், வாவ்… கேட்க எவ்ளோ நல்லா இருக்கு ” என்று சொன்னாள்.

ஆர்யனும் ஆம் என்று சொல்லி அவளிடம் சென்று மெதுவாக அவளை தனது கைகளில் தூக்கினான். அவன்  அவளை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றான். சஞ்சு புத்துணர்ச்சி பெற்றதும், அவள் வாக்கிங் செல்ல தயாராக உதவினான். அவள் பிரசவிக்க கடைசி மாதங்கள் என்பதால் தவறாமல் நடைபயிற்சி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். கைகோர்த்தபடி அவர்கள் குளிர்ந்த மாலையில் தோட்டத்தில் மெதுவாக நடந்து சென்றனர்.

சிறிது நேரம் கழித்து, சஞ்சு சோர்வாக உணர ஆரம்பித்தாள். அவள் ஓய்வெடுப்பதற்காக அவர்கள் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர், மேலும் சில நிமிட நடைக்குப் பிறகு, ஆர்யன் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். உள்ளே சென்றதும், அவளை லிவிங் அறையில் இருந்த சோபாவில் மெதுவாக உட்கார வைத்தான்.

“நிச்சயதார்த்தத்துக்கு கீர்த்தியோட அம்மா, அப்பா எப்போ வருவாங்க?” சஞ்சு பின்னால் சாய்ந்தபடி கேட்டாள்.

” நான் ஏற்கனவே அவங்க கிட்ட பேசிட்டேன். அவங்க  நாளைக்கு வருவாங்க. நான் அவங்கள இங்கேயே தங்கு சொல்லி கூப்பிட்டேன் ஆனா கீர்த்தி அவங்கள அவளோட தங்க ஆசைப்பட்டா. நானும் சரினு சொல்லிட்டேன் “ என்றான் ஆர்யன்.

அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பிரதீப், கீர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகியோர் ஒரு இளம் பெண்ணுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். அந்த பெண் பார்க்க மிக  தன்னம்பிக்கையாகவும், ஸ்டைலாகவும்  இருந்தாள்.

“ஆர்யன், சஞ்சு, இவ நிலா, என்னோட பெஸ்ட் friend. அது மட்டும் இல்ல, பேஷன் டிசைனர் கூட. நிச்சயதார்த்தத்துக்கு நிலா காஸ்ட்யூம் டிசைன் பண்ணா நல்லா இருக்கும்னு நான் நெனச்சேன் “ என்று சொல்லி பிரதீப் அவளை அறிமுகம் செய்தான்.

ஆர்யன் பணிவுடன், “ஹலோ மிஸ் நிலா. உங்கள சந்திச்சதுல சந்தோஷம் “ என்று வரவேற்றான்.

சஞ்சு சிநேகமாகச் சிரித்து, “ உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் அக்கா “ என்று கூறினாள்.

நிலா பதிலுக்கு புன்னகைத்து சஞ்சுவை அணைத்துக் கொண்டாள். ” ரொம்ப நன்றி, உங்க ரெண்டு பேரையும் சந்திச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம். உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா நேர்ல சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் “ என்று கூறினாள்.

“அப்போ நிலா, நீங்க பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து காஸ்ட்யூம் செலக்ட் பண்ணுங்க. உங்கள நாங்க தொந்தரவு செய்ய மாட்டோம்” என்று பிரதீப் சொன்னதும், ” ரொம்ப நன்றி பிரதீப்” என்று நிலா புன்னகையுடன் பதில் சொன்னாள்.

ஆர்யன், ரஞ்சித், பிரதீப் மூவரும் அங்கிருந்து எழுந்து  தங்கள் பிசினஸ் வேலைகளை கவனிக்க ஆபீஸ் ரூமுக்கு சென்றனர். நிலா தனது பெரிய போர்ட்ஃபோலியோவைத் திறந்து, பாரம்பரிய இந்திய நிச்சயதார்த்த ஆடைகளுக்கான அற்புதமான வடிவமைப்புகள் நிறைந்த தனது பேஷன் பட்டியல்களைக் காட்சிப்படுத்தினாள்.

அதை பார்த்த கீர்த்தி மற்றும் சஞ்சு உடனே கவரப்பட்டனர். அவர்கள் ஆடைகளை பற்றி விரிவாக விவாதித்தனர், பவித்ரா மற்றும் மாயா ஆகியோருக்கு விருப்பங்களைக் காட்ட வீடியோ அழைப்பும் கூட செய்தனர். ஒன்றாக, பெண்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் ஆண்களுக்கும் ஆடைகளை இறுதி செய்தனர்.

நிலா அவர்கள் மத்தியில் நிம்மதியா, சௌகரியமாக உணர்ந்தாள், கலகலப்பான குழுவில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆர்யன், பிரதீப் மற்றும் ரஞ்சித் ஆபீஸ் ரூமை விட்டு வெளியே வந்து பெண்களுக்கு எதிரே சோபாவில் அமர்ந்தனர். 

அவர்கள் பேசி முடிக்கும் நேரத்தில், கீர்த்தியின் தொலைபேசி ஒலித்தது. அழைப்பை பேசி முடித்தவள், “பிரதீப்” என்று அவன் பக்கம் திரும்பி, “அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே கிளம்பிட்டாங்க, இன்னும் ஒரு மணி நேரத்துல சென்னையில இருப்பாங்க. நாம அவங்கள கூட்டிட்டு வர போகணும் “ என்று சொன்னாள்.

“சரி வா போகலாம்” என்று பிரதீப் உடனே தலையசைத்தான். ஆனால் கீர்த்தி உடனே, “ ஆனா நிலா இருக்காளே, அவள திரும்ப கூட்டிட்டு போகணுமே “ என்று சொன்னாள்.

” ரிலாக்ஸ் கீர்த்தி. ரஞ்சித் அண்ணாகிட்ட சொல்லி அவங்கள கூட்டிட்டு போக சொல்றேன் “ என்று சொன்ன சஞ்சு பின்னர் நிலாவை பார்த்து, “ அதுல உங்களுக்கு சம்மதமா நிலா ? “ என்று கேட்டாள்.

” இல்ல, எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனா நீங்க சிரமப்பட வேணாம். நான் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பல, கார் புக் பண்ணி போறேன் “ என்று சொன்னாள் நிலா.

“ஒண்ணும் பிரச்சனை இல்ல, ரஞ்சித் அவங்கள கூட்டிட்டு போ ” என்றான் ஆர்யன்.

“கண்டிப்பா சார். நாம கிளம்பலாமா மிஸ் நிலா?” என்று பணிவுடன் கேட்டான் ரஞ்சித்.

” ஐயோ, ரொம்ப ஃபார்மலா இருக்காதீங்க, நிலா சொல்லி கூபிடுங்க போதும் “ என்று நிலா மெல்லிய சிரிப்புடன் சொன்னாள்.

ரஞ்சித் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு வெளியே காருக்கு அழைத்துச் சென்றான். இதையடுத்து பிரதீப்பும், கீர்த்தியும் பெற்றோரை அழைத்து வர சென்றனர்.

ஆர்யனும், சஞ்சுவும் தனிமையில் இருந்த போது, சஞ்சு ஒரு புன்னகையுடன் ஆர்யனிடம், “ஆர்யன், இப்போ ரஞ்சித் அண்ணா மட்டும் தான் தனியா இருக்காரு ” என்று கூறினாள்.

“கவலைப்படாத, அவனுக்கு சீக்கிரமே ஒரு பொண்ணு பார்க்கலாம் ” என்றான் ஆர்யன் சிரித்தபடி.

” ஹ்ம்ம் ஆமா, சீக்கிரம் பார்க்கணும். எல்லாரும் ஜோடியா இருக்கோம். அவர் மட்டும் தனியா இருக்காரு “ என்று சஞ்சு வருத்தமாக சொன்னாள்.

ஆர்யன் சரி என்று புன்னகைத்தான். “தீபா ஆண்ட்டிய வளைகாப்புக்கு கூப்பிடனும் “ என்று ஆர்யன் சொல்ல, ” அப்போ பானு ? “ என்று சஞ்சு கேட்டாள்.

” கண்டிப்பா அவங்க ரெண்டு பேரையும் கூப்பிடுவோம். நான் உனக்கு ஏதாவது பரிசு கொடுக்க விரும்புறேன்.  உனக்கு என்ன வேணும் சொல்லு ?” என்று கேட்டான்.

” யாராச்சும் கேட்டு பரிசு தருவாங்களா ? “ என்று யார் கேட்டு சஞ்சு புருவத்தை உயர்த்தினாள்.

ஆர்யன் குறும்புக் கண்களுடன் அவளிடம் குனிந்தான். ” ஒய் நீ கர்ப்பமா இல்லனா செம்ம மேட்டர் எதாச்சும் பரிசா தருவேன் ஆனா இப்போ உனக்கு என்ன வேணும்னு சொல்லு “ என்று கேட்டான்.

அவள் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள். ” அப்படியெல்லாம் மனசுல எதுவும் இல்ல. நீ தான் எனக்கு கெடச்ச பெஸ்ட் பரிசு அப்புறம் இப்போ நம்ம குழந்தை. வேறென்ன வேணும் எனக்கு?” என்று சொன்னாள்.

ஆர்யன் அவள் கையை தன் கைக்குள் பிடித்துக் கொண்டு, ” சரி பரிசு வேணாம். உனக்கு ஏதாவது ஆசை இருக்கா? கர்ப்பமா இருக்குறது தெரிஞ்சதுல இருந்து பிரச்சன மேல பிரச்சன வந்துட்டே இருந்துச்சு அதனால நாம சந்தோஷமா கொண்டாட முடியாம போச்சு. உனக்கு  ஏதாவது ஆசை இருக்கா சொல்லு ? நமக்கு இன்னும் நேரம் இருக்கு, நான் உனக்காக அத செய்ய விரும்புறேன். ” என்று ஆர்யன் அன்பாக கேட்டான். 

சஞ்சு ஒரு கணம் தயங்கினாள், பின்னர் அவன் கண்களைப் பார்த்து, “எனக்கு ஒரு ஆசை இருக்கு ஆனா உன்னால அதை செய்ய முடியுமானு எனக்குத் தெரியல.” என்று கூறினாள்.

அவள் சொன்னதை கேட்டதும், ” அது என்னனு சொல்லு. உனக்காக நான் எதையும் செய்வேன்” என்றான் ஆர்யன் உறுதியாக.

“இல்ல, வேணாம் விடுங்க. அது எனக்கு ஒரு வரமா  இருக்கலாம் ஆனா உனக்கு ஒரு சாபமா இருக்க வாய்ப்பு இருக்கு “ என்று கூறினாள்.

“சாபமா ??” என்று ஆர்யன் முகம் சுளித்து குழப்பத்துடன் கேட்டான்.

******************************

முன்னோட்டம்: 
“பைத்தியக்கார கிழவா, இன்னும் நான் உன்ன விட அனுபவத்துல குறைஞ்சவனா இருப்பேன்னு நெனச்சியா ? உன் பொண்ணு இப்போ என்ன அண்ணான்னு கூப்பிடறா. உன்னால அத நம்ப முடியுதா ? “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!