Home FamilyChapter 33

Chapter 33

by Siragugal Novels
20 views

ஆர்யன் ஒரு மென்மையான கருப்பு சட்டை அணிந்திருந்தான் மற்றும் அதே நிறத்தில் அவன் சட்டையில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது, அவன் கைகள் நேர்த்தியாக மடிக்கப்பட்டிருந்தது, அதோடு சாம்பல் நிறத்தில் பேன்ட் அணிந்து பார்க்க மிகவும் வசீகராமாக இருந்தான். அவன் கண்ணாடி முன் நின்று கொண்டு தன் தலைமுடியையும், தாடியையும் கவனமாக சரி செய்து கொண்டிருந்தான்.

சஞ்சு அலமாரி அறைக்குள் உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.

” சஞ்சு, நான் கீழே வெயிட் பண்றேன், நீ ரெடியாகி வா ” என்று ஆர்யன் சொல்ல, “சரி சரி” என்றாள் சஞ்சு உள்ளே இருந்து கொண்டு. ஆர்யன் அறையை விட்டு வெளியேறி லிவிங் அறையில் அவளுக்காக காத்திருந்தான்.

சஞ்சு இடுப்பு வரை எம்பிராய்டரி செய்யப்பட்ட ஊதா நிற, முழங்கால் நீள கவுனில் தயாராகி அறைக்கு திரும்பினாள். அவளது  தலைமுடி தளர்வான சுருட்டைகளில் ஸ்டைலாக இருந்தது, கொஞ்சமாக மேக்கப் போட்டு கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ரசித்துக் கொண்டாள்.

” வாவ்… எனக்கு இந்த டிரஸ் ரொம்ப பிடிச்சிருக்கு, ஆர்யன். இது ரொம்ப அழகா இருக்கு, உனக்கும் இது பிடிக்கும்னு நம்புறேன் ” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டவள், கீழே செல்வதற்கு முன் சிரித்தாள்.

ஆர்யன் அலுவலக மின்னஞ்சல்களை மொபைலில் பார்த்துக்  கொண்டிருந்தான். சஞ்சு படிகளில் இறங்கி வந்து அவன் சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, “ஆர்யன்” என்று அழைத்தாள்.

ஆர்யன் நிமிர்ந்து பார்த்ததும் அவனால் கண்களை சிமிட்ட முடியவில்லை. சஞ்சு பார்க்க மிகவும் பிரமிப்பாக இருந்தாள், அவள் அழகில் உறைந்து நின்றவனின் உதடுகள் லேசாக பிரிந்தன, சஞ்சு விளையாட்டாக அவன் தாடையை மேலே தள்ளி வாயை மூடினாள்.

” ஏன் என்ன இப்படிப பார்க்குற ?” என்று சஞ்சு புன்னகையுடன் கேட்டதும், “ நீ இவ்ளோ அழகா என் முன்னாடி வந்து நின்னா நான் என்ன செய்வேன் ? “ என்று அவன் பதிலளித்தான்.

“அப்படியா ? ரொம்ப நன்றி. இப்ப கிளம்பலாமா?” என்று சஞ்சு கேட்க, அதற்கு ஆர்யன் அவளிடம், ” உன்ன இப்படி பார்த்த அப்புறம் எனக்கு இப்போ போக மனசே இல்ல பேபி. நான் வேணும்னா பிளான் கேன்சல் பண்ணட்டுமா ? “ என்று கேட்டான்.

” கேன்சல் பண்ணிட்டு என்ன பண்ணனும் ? “ என்று சஞ்சு கேட்டாள் அதற்கு ஆர்யன், ” நாம வீட்டுலயே இருக்கலாம். நீ வேற என்ன ரொம்ப கொல்ற “ என்று ஹஸ்கி குரலில் சொல்லி அவளை நெருங்க முயன்றான். ஆனால் சஞ்சு அவனை தடுத்து, ” வாயை மூடு, இப்போ வா கிளம்பலாம்” என்று சொல்லி சிரித்தாள்.

ஆர்யன் அவள் இடுப்பை பிடித்து இழுத்து அவள் எதிர்வினையாற்றுவதற்கு முன் அவள் உதட்டில் முத்தம் கொடுத்து, அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டு நடக்க ஆரம்பித்தான். சஞ்சு புன்னகையை அடக்கி கொண்டு அவனை பின்தொடர்ந்தாள். இருவரும் ரஞ்சித்துடன் காரில் ஏறி ARC ஹோட்டலுக்கு புறப்பட்டனர்.

இதற்கிடையில், கார் பயணத்தின் போது, மாயாவின் மொபைல் ஒலிக்க தொடங்கியது. திரையில் மானசியின் பெயரைப் பார்த்ததும் நிதானமான குரலில் மாயா பதில் சொன்னாள்.

“ஹலோ மேடம்” என்று மறுமுனையில் இருந்து மானசி பேசியதும், ” ஹ்ம்ம் சொல்லு என்ன விஷயம் ” என்று மாயா  சாதாரணமாக கேட்டாள்.

” மேடம் ஆர்யன் சார் இன்னைக்கு ஆபீஸ் வரல” என்று மானசி சொன்னதை கேட்டதும் மாயா லேசாகச் சிரித்தாள். ” எனக்குத் தெரியும். நான் அவர சந்திக்க தான் போறேன்.” என்று கூறினாள்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு மானசி தயக்கத்துடன், “அப்புறம்… சஞ்சனாவும் ஆபீஸ் வரல ” என்று சொன்னாள். உடனே மாயாவின் புருவங்கள் சுருங்கின. “அப்படியா? காரணம் தெரியுமா ? “ என்று மாயா கேட்டாள்.

” எனக்கு உறுதியா தெரியல ஆனா ஆர்யன் சார் லீவு எடுக்கும் போதெல்லாம் சஞ்சனாவும் ஆபீஸ் வர்றதில்ல “ என்று மானசி கவனமாக பதிலளித்தாள்.

மானசியின் வார்த்தைகள் கேட்டதும் மாயாவின் முகபாவம் இறுகியது, அவள் சிந்தனையில் ஆழ்ந்த போது அவளது புன்னகை மறைந்தது. ” ஹ்ம்ம் சரி. நான் அப்புறம் பேசறேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவளின் மனம் எண்ணங்களால் அலைக்கழிக்கத் தொடங்கியது.

ஆர்யனும் சஞ்சுவும் சீக்கிரமே ARC ஹோட்டலை அடைந்து விஐபி கேபினில் நரேனுக்காக காத்திருந்தனர். ரஞ்சித் நரேனை வரவேற்க ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்தான். எதிர்பார்த்தது போலவே மாயாவுடன் நரேன் அங்கு வந்தான்.

” வெல்கம் நரேன், வெல்கம் மாயா ” என்று இருவரையும் வரவேற்றான்  ரஞ்சித். மாயா  அவனை அலட்சியப்படுத்தி முகத்தைத் திருப்பிக் கொள்ள, நரேன் பணிவான புன்னகையுடன், ” ஆர்யன் ஏற்கனவே வந்துட்டானா ? ” என்று கேட்டான்.

“ஆமா, உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு, வா போகலாம்.” என்று சொல்லி ரஞ்சித் அவர்களை விஐபி கேபினுக்கு அழைத்துச் சென்றான். ஆர்யனை பார்த்ததும், “ டேய்! மாப்ள ” என்று நரேன் உற்சாகத்தில் கத்தினான். உடனே ஆர்யன் எழுந்து நின்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான், அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது. ஆர்யன் தன்னைத் தவிர வேறு ஒருவருடன் இவ்வளவு உற்சாகமாக இருப்பதைக் கண்டு சஞ்சு மௌனமாக அந்த அபூர்வமான சந்திப்பைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

” எப்படிடா இருக்க ?” என்று நரேன் கேட்டதும், “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க மச்சான் ?” என்று கேட்டான் ஆர்யன்.

” நான் சூப்பரா இருக்கேன்டா மாப்ள. அப்புறம் நிறைய சாதிச்சு இருக்கனு கேள்விப்பட்டேன், ரொம்ப சந்தோஷமா இருக்குடா. உனக்கு என்னோட வாழ்த்துக்கள் “ என்று நரேன் உண்மையான புன்னகையோடு வாழ்த்தினான். அதற்கு ஆர்யன் அவனுக்கு நன்றி கூறினான்.

அங்கு நின்று கொண்டிருந்த மாயா, ஆர்யன் அவள் இருப்பதை கொஞ்சமும் கவனிக்காமல் புறக்கணிப்பது போல இருப்பதை பார்த்து தன் எரிச்சல் அதிகரிப்பதை உணர்ந்தாள். ஆர்யனையும் நரேனையும் பார்த்து புன்னகைத்து அவர்களின் மகிழ்ச்சியில் திளைத்தது இருந்த சஞ்சுவை பார்த்து மாயாவுக்கு அருவருப்பாக இருந்தது. அதற்கு மேல் தாங்க முடியாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவள் இருப்பை தெரியப்படுத்தினாள்.

அவளைப் பார்த்த நொடியில் ஆர்யனின் முகபாவம் சட்டென மாறியது. சஞ்சு மாற்றத்தை கவனித்து, பதற்றத்தை உணர்ந்து, ஏதாவது தவறு நடக்கக்கூடும் என்று கவலைப்பட்டாள்.

” ஹாய் ஆர்யன்…” என்று சொல்லி மாயா ஒரு கனிவான புன்னகையுடன் முன்னால் சென்று அவனை அணைத்துக் கொள்ள முயன்றாள். ஆனால் ஆர்யன் இயல்பாகவே ஒரு அடி பின்வாங்கினான், அவனது முகபாவம் படிக்க முடியாததாக இருந்தது. அவர் வெறுமனே ஆமோதிப்பது போல அவளை பார்த்து  தலையசைத்தான்.

” நீங்க பார்க்க ஹாட்டா, அழகா இருக்கீங்க ” என்று தன்னுடைய தொனியை லேசாக வைத்துக்கொள்ள முயற்சித்தபடி மாயா  சொன்னாள். அதற்கு ஆர்யன், “பாராட்டுக்கு நன்றி” என்று வெறுமையாக பதிலளித்தான்.

மாயா  தன் தலையைச் சாய்த்து. ” நான் பார்க்க எப்படி இருக்கேன்னு சொல்ல மாட்டீங்களா ? உங்களுக்கா ரொம்ப நேரம் எடுத்து தயாராகி வந்துருக்கேன் “ என்று மாயா கேட்டதும், ஆர்யன் அவள் கண்களைச் சந்தித்தான். ” நீ எப்படி இருக்கியோ அது உனக்கு மட்டும் புடிச்சு இருந்தா போதும்னு நினைக்குறேன், மத்தபடி என்னோட கருத்து எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது “ என்று கூறினான்.

” இத்தன வருஷம் கழிச்சு உங்க கிட்ட ஒரு மாற்றம் வரும்னு நினைச்சேன்.” என்று மாயா  சொன்ன போது அவள் புன்னகை லேசாக தடுமாறியது.

“என் குணமும், என்னோட  அணுகுமுறையும் எல்லார் கிட்டயும் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கும், மாறாது “  என்று ஆர்யன் சொன்னதும், ” நானும் மாறல ஆர்யன்.” என்றாள் மாயா. அவள் வார்த்தையை கேட்ட ஆர்யன், “ நீ மாறி இருந்தா நிச்சயம் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் “ என்று  தயக்கமின்றி பதிலளித்தான்.

அப்போது தங்களைச் சுற்றி பதற்றம் அதிகரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த நரேன், “ மாப்ள, எனக்கு பசிக்குதுடா “ என்று சிரித்தபடி  லேசான குரலில் சொல்லி நிலைமையைத் தணிக்க முயன்றான்.

ஆர்யன் ஒரு சிறு சிரிப்பை உதிர்த்து, “ சாப்பிடலாம் ஆனா அதுக்கு முன்னாடி, ஒருத்தர அறிமுகப்படுத்தனும். இவ தான் சஞ்சனா.. என்னோட… “ என்று ஆர்யன் சொல்ல ஆரம்பித்தான் ஆனால் அவன் முடிப்பதற்குள், “உங்க PA தானே?” என்று மாயா குறுக்கிட்டாள்.

” ஆமா PA தான் ” என்று சஞ்சுவும் அமைதியாக பதிலளித்தாள். ” ஹலோ சஞ்சனா” என்று நரேன் அவளை பார்த்து புன்னகைத்ததும், “வணக்கம் அண்ணா” என்றாள் சஞ்சு மெல்லிய புன்னகையுடன்.

நரேன் ஆர்யனைப் பார்த்து விளையாட்டாக புருவத்தை உயர்த்தி ” எனக்கு தங்கிச்சியா மாப்ள ? “ என்று கேட்டான்.

ஆர்யன் மென்மையான புன்னகையுடன் தலையசைத்து, “ஆமாடா  உன் தங்கச்சி தான் ” என்றான். தன் நண்பனின் முகபாவத்துக்குப் பின்னால் இருந்த உணர்ச்சியை நரேன் உடனே புரிந்துகொண்டான். ஆர்யனுக்கும், சஞ்சுவுக்கும் இடையே சொல்லப்படாத பந்தம் பகல் போல் தெளிவாக நரேனுக்கு புரிந்து.

“அட கடவுளே! தங்கச்சி எப்படிமா இருக்க ? “ என்று உண்மையான உற்சாகத்துடன் கேட்டான் நரேன். அதற்கு சஞ்சுவும் புன்னகையோடு, “ நான் நல்லா இருக்கேன் அண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க  “ என்று கேட்டாள். “ நான் நல்லா இருக்கேன் மா. எப்பவும் சந்தோஷமா இரு “ என்று நரேன் முழுமனதுடன் அவளை வாழ்த்தினான். 

இதற்கிடையில், மாயா மூவருக்கும் இடையிலான பிணைப்பு விரிவதைப் பார்த்து கோவத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள். சஞ்சுவின் அமைதியான நடத்தை, ஆர்யனின் அருகில் அவளது இடம் மற்றும் நரேனின் ‘சகோதரி’ என்ற புதிய அடையாளம் ஆகியவை மாயாவின் இரத்தத்தை கொதிக்க வைத்தன.

” இப்போ உட்காரலாம்” என்று ஆர்யன் சொன்னதும், “ வா மாப்ள நாம ரெண்டு பேரும் ஒன்னா உட்காரலாம் “ என்றான் நரேன்.

ஆர்யனும் நரேனும் டேபிள் அருகே சென்று அருகருகே அமர்ந்தனர். சஞ்சு அவர்களுக்கு எதிரே தன் இருக்கையில் அமர எத்தனிக்கையில், மாயா அவளை நோக்கி கூர்மையாக திரும்பினாள்.

” ஹலோ, நீ ஒரு PA தானே ?” என்று கேட்ட மாயா வின் குரலில் விஷம் தொனித்தது. ” இது எங்க பர்சனல் சந்திப்பு, அதனால நீ வெளியே போய் ரஞ்சித் கூட லஞ்ச் சாப்பிடு. நாங்க இங்க இருந்து கிளம்புற வர அவன் கூட இரு “ என்று கடுமையான வார்த்தைகளை கூறினாள்.

மாயாவின் வார்த்தைகள் சஞ்சுவை அறைந்தது போல் தாக்கியது. அவளுடைய முகபாவம் தடுமாறவில்லை, ஆனால் அவளுடைய இதயம் வருத்தத்தில் மூழ்கியது. ஒரு வார்த்தை கூடப் பேசாமல், யாருடைய கண்களையும் சந்திக்காமல், அவள் அமைதியாகத் திரும்பி நடந்து சென்றாள், அவளுடைய மௌனம் எந்த எதிர்ப்பையும் விட சத்தமாக இருந்தது.

அவள் திரும்பி நடந்த போது, “சஞ்சனா…” என்று ஆர்யனின் குரல் அமைதியாகவும், அதே சமயம் கட்டளையிடுவதாகவும் அவளை நிறுத்தியது. மெல்லத் திரும்பியவள் அவன் பார்வையைச் சந்தித்தாள். அவன் ஏற்கனவே அவளை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

“நரேன், ஸாரிடா, நான் கொஞ்ச நேரத்துல வரேன் “ என்று நரேனிடம் கூறிவிட்டு  மறுவார்த்தை பேசாமல் மெதுவாக சஞ்சுவின் கையைப் பிடித்து அறையில் இருந்து வெளியேறி ஒதுக்குப்புறமான மூலைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

“என்ன பண்ற சஞ்சு?” என்று கண்களில் விரக்தியும் கவலையும் மின்ன ஆர்யன் கேட்டதும், சஞ்சு வேறு பக்கம் பார்த்தபடி, “ஆர்யன், நான் வந்திருக்கக் கூடாதுனு நினைக்கிறேன். நான் உங்க நாள கெடுக்க விரும்பல. ரொம்ப வருஷம் அப்புறம் நீங்க அவர சந்திக்க வந்துருக்கீங்க. தயவு செஞ்சு திரும்பி போங்க. வீட்டுக்குப் போறதுல எனக்கு ஆட்சேபணை இல்ல.” என்று கூறினாள்.

“சஞ்சு, சுனிதாவால நடந்த சம்பவத்துக்கு அப்புறம் நான் உன்கிட்ட என்ன கேட்டேன்னு ஞாபகம் இருக்கா ?” என்று கேட்ட ஆர்யனின் குரல் தாழ்ந்தது. சஞ்சு தயங்கியபடி தலை அசைத்தாள்.

“அப்போ நீ நான் சொன்னத கேட்க போறதில்ல அப்படி தானே ? அடுத்தவங்க சொல்ற வார்த்தைக்காக என்ன விட்டுப் போய்டுவியா? “ என்று மெல்லிய குரலில் கேட்ட ஆர்யன், “ என்ன ஆனாலும் நீ என் பக்கத்துல இருப்பனு நினைச்சேன்.” என்று வருத்தத்துடன் சொன்னான்.

அவனின் வார்த்தையை கேட்ட சஞ்சு, “ஆர்யன், நான் உன்ன விட்டுப் போக நினைக்கல. நான் உனக்கு கொஞ்சம் தனிமையை கொடுக்க மட்டும் தான் நெனச்சேன் அதுவும் உங்க friend கூட இருக்க தான்”, என்று அவள் மென்மையாக விளக்கினாள்.

” என் friend கூட தனியா நேரம் தேவைனு நான் நெனச்சு இருந்தா உன்ன கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன். அவ இன்னைக்கு வருவானு  எனக்குத் தெரியும். நீ அவள பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்… அது மட்டும் இல்ல, அவளோட நோக்கம் என்னனு நீயே உன் கண்ணால பார்க்கனும்னு நெனச்சேன் சஞ்சு. அவ தான் சுனிதாவுக்கு பணம் கொடுத்தா ” என்று ஆர்யன் சொல்லி முடித்ததும் சஞ்சுவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “என்ன???” என்று அதே அதிர்ச்சியில் கேட்டாள்.

“ஆமா, அவளோட நோக்கம் எல்லாத்தையும் நீ நேரடியா பார்க்கனும்னு நான் விரும்பினேன். அதனால தான் அவள பத்தி நான் இதுவர எதுவும் சொல்லாம இருந்தேன். “ என்று சொன்ன ஆர்யன், பெருமூச்சு விட்டு, “ இப்போ  இது உன் விருப்பம் சஞ்சு, ஒன்னு நீ என் கூட இங்க இருக்கலாம் இல்ல நான் ரஞ்சித் கிட்ட சொல்லி உன்ன வீட்டில் இறக்கிவிடச் சொல்வேன். ஆனா ஒன்னு நல்லா ஞாபகம் இருக்கட்டும், ஒரு முறை ஒதுங்கி போறதும் கூட  வாழ்க்க முழுக்க பயந்து ஓட தயாரா இருக்க மாதிரி தான் “ என்று உறுதியாக சொன்னான்.  

சஞ்சு மென்று விழுங்கியபடி மறுத்து தலையசைத்து, ” இல்ல நான் போகல, இங்க உன் கூட இருக்கேன் “ என்றாள்.

சஞ்சுவின் பதிலை கேட்டு நிம்மதியை உணர்ந்த ஆர்யன், ” சரி,  ஆனா அவ பயங்கரமான விஷம். என்னால இப்போ அவள நிறுத்தவோ இல்ல அவளுக்கு எதிரா செயல்படவோ முடியாது. நாம வீட்டுக்கு போன அப்புறம் அதுக்கான காரணம் சொல்றேன், ஆனா இப்போதைக்கு, நீ என் கூட இருக்கனும். அவ இருக்குறத நீ கண்டுக்காத “ என்று அவளிடம் கூறினான்.

” கண்டிப்பா ஆர்யன், என்ன மன்னிச்சிடு” என்று மெல்லிய குரலில் சஞ்சு சொன்னதும், ஆர்யன் மென்மையாக புன்னகைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, ” வா, உள்ள போகலாம்.” என்று அவளை அழைத்தான்.

அவர்கள் அறைக்குள் திரும்பியதும் நரேன் நிமிர்ந்து பார்த்து பெரிதாகச் சிரிக்க, மாயாவின் முகபாவம் வலுக்கட்டாயமான, பாவம் கலந்த புன்னகையாக மாறி, ” இவ ஏன் திரும்பி வந்தா ?” என்று கேட்டாள் .

” சஞ்சு என் PA மட்டும் இல்ல, அவ என் கூட லஞ்ச் சாப்பிடுவா” என்று கூலாக பதிலளித்தான் ஆர்யன். அவன் வார்த்தையை கேட்டதும், ” PA  மட்டும் இல்லனா என்ன அர்த்தம் ?” என்று மாயா கடுப்புடன் கேட்டாள்.

ஆர்யன் பதில் சொல்வதற்குள், “மாயா, தயவு செஞ்சு அமைதியா இருக்க முடியுமா? நான் இப்போ செம்ம பசியில இருக்கேன், முதல்ல சாப்பிடலாம் “ என்று சொல்லி நரேன் நிலைமையை சமாளித்தான். அவள் சஞ்சுவை பற்றி தெரிந்து கொள்ள இருந்த நேரம் உரையாடலை திசை திருப்பியதற்காக மாயா அவனை முறைத்தாள்.

“ஆர்யன் வாங்க, நீங்க என் கூட உட்காருங்க” என்றவள் பக்கத்தில் இருந்த இருக்கையைத் தட்டிக் கொடுத்தாள். ஆனால் நரேன், ” டேய், மாப்ள, நான் என் தங்கச்சி கூட உட்காருவேன். தயவு செஞ்சு எங்கள பிரிச்சிடாத “ என்று ஒரு நாடகமாடினான்.

ஆர்யன் புன்னகைத்து, ” நான் சஞ்சனா கூட உட்கார்ந்துக்கறேன், நீ உன் தங்கச்சி கூட  உட்காரு ” என்று சொல்லி அவனுக்கு மனதில் நன்றி சொன்னான்.

ஆர்யனும் சஞ்சுவும், நரேன் மற்றும் மாயாவுக்கு எதிரே தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். விரைவில், மேனேஜர் உணவுடன் உள்ளே வந்தார்.

” எனக்கு ரொம்ப பிடிச்ச பிரியாணி ஏற்பாடு பண்ணி இருக்கடா “ என்று நரேன் சொல்ல, ” உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாதா “ என்றான் ஆர்யன் சிரித்து கொண்டே.

” அப்போ எனக்கு பிடிச்ச சாப்பாடு ? “ என்று மாயா  கேட்க, “ நீ எங்க கூட லஞ்ச் சாப்பிட வருவனு எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா ரஞ்சித் கிட்ட  சொல்லி உனக்கு என்ன புடிக்கும்னு கேட்டு ஏற்பாடு செய்ய சொல்லி இருப்பேன் ” என்றான் ஆர்யன் முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல்.

” ஏன் உனக்குத் தெரியாதா ஆர்யன்?” என்று கேட்ட மாயாவின் குரல் கூர்மையாக மாறியது. அதற்கு ஆர்யன் உடனே, “எனக்கு எப்படித் தெரியும்?” என்றான் கூலாக.

அதற்கு மேல் மாயா  எதுவும் பேசவில்லை. அவர்கள் உணவை சாப்பிட்டு முடிப்பதற்குள் மேனேஜர் திரும்பி வந்து, ” சார், ஸ்வீட்ஸ் கொண்டு வரட்டுமா ? “ என்று ஆர்யனிடம் கேட்டார்.

“ஆமா கொண்டு வாங்க, முதல்ல க்ரீம் ப்ரூலிய எடுத்துட்டு வாங்க” என்று ஆர்யன் சொல்ல, உடனே அனைவருக்கும் அதை கொண்டு வந்து பரிமாறினார்.

அதை சுவைத்த நரேன், “ஆஹா, இது செம்ம டேஸ்ட் மாப்ள “ என்றான். அதை கேட்டு புன்னகைத்த சஞ்சு முதல் முறையாக, ” இது எனக்கு புடிச்சது அண்ணா “, என்றாள் சிரித்தபடி.

“அப்படியா தங்கச்சி ? நல்லா இருக்கு மா. அப்புறம் இப்போ நீ சாப்பிட்ட பாஸ்தா ? “ என்று நரேன் கேட்டதும், “அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சது அண்ணா ” என்றாள் உற்சாகமாக.

சஞ்சுவின் வார்த்தையை கேட்டதும் மாயாவின் முகம் இருண்டது. சஞ்சுவுக்கு பிடித்தது ஆர்யனுக்குத் தெரியும் என்ற அறிவு ஆழமாக ஊடுருவியது.

” எனக்கு இது பிடிக்கல. வேற ஸ்வீட் கொண்டு வாங்க “ என்று மாயா  சொன்னதும் அருகில் நின்று கொண்டிருந்த மேனேஜர், “ மேடம், குலாப்ஜாமூன் கொண்டு வரட்டுமா ?  சார், மேடம் ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்ச ஸ்வீட் அதனால இன்னைக்கு அது விசேஷமா பண்ணி இருக்கோம் “ என்று கூறினார்.

ஏற்கனவே ஸ்வீட் சாபிட்டு கொண்டிருந்த ஆர்யனும், சஞ்சுவும் அவரின் வார்த்தையை கேட்டதும் இருவருக்கும் புரை ஏறியது. இருவரும் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நரேன் அவர்களை குழப்பத்துடன் பார்க்க, மாயா  சந்தேகத்துடன் புருவத்தை உயர்த்தினாள்.

“ஆமா, கொண்டு வாங்க ” என்று ஆர்யன் உடனே சொன்னதும் டேபிளுக்கு அடியில் சஞ்சு ஆர்யனின் தொடையை கிள்ளினான். “ ஆஹ்ஹ்ஹ் “ என்று ஆர்யன் வலியில் துடித்ததும், ” என்ன ஆச்சு மாப்ள ? “ என்று கேட்டான்  நரேன்.

“ஒண்ணுமில்லையே .. ஒண்ணுமில்லையே “ என்ற சொல்லி ஆர்யன் சமாளித்து லேசாக இருமினான். அப்போது ஆர்யனை பார்த்த சஞ்சு, ” என்ன ஆச்சு சார்?” என்று அப்பாவித்தனமாக இனிமையாகக் கேட்டாள்.

ஆர்யன் உடனடியாக தனது மொபைலை எடுத்து மேனேஜருக்கு ஒரு செய்தியை அனுப்பினான். சில நிமிடங்கள் கழித்து, மேனேஜர் ஒரு தட்டுடன் திரும்பி வந்தார். அவர் ஜாமூன்களின் கிண்ணங்களை முதலில் ஆர்யன் மற்றும் சஞ்சுவின் முன் வைத்தார், பின்னர் மாயா  மற்றும் நரேனுக்கு கொடுத்தார். நரேனும், சஞ்சுவும் உடனே குலாப்ஜாமூனை சாப்பிட ஆரம்பித்தனர்.  

” எனக்கு இது வேண்டாம். திருப்பி எடுத்துட்டு போங்க “ என்று சொல்லி மாயா  கிண்ணத்தை ஒதுக்கி வைத்தாள். அப்போது, ” சரிங்க  மேடம். நான் உங்களுக்கு ஐஸ்கிரீம் கொண்டு வரேன், உங்களுக்கு என்ன ஐஸ் கிரீம் வேணும் சொல்லுங்க ? “ என்று கேட்டார்.

” எனக்கு ப்ளாக் கரன்ட் கொண்டு வாங்க,  அது எனக்கும் ஆர்யனுக்கும் பிடிச்சது ” என்று மாயா  குறிப்பாக சொல்ல, “கண்டிப்பா மேடம்.” என்று சொல்லி மேனேஜர் ஜாமூன் கிண்ணத்தை எடுத்தார். அப்போது தவறி கிண்ணம் கவிழ்ந்தது, அதில் இருந்த சர்க்கரை சிரப் ஜாமூன்கள் மாயா  மற்றும் நரேன் மீது சிதறின.

************************************
முன்னோட்டம்:
” மாப்ள என்னடா சொல்ற ? குலாப்ஜாமூன் சாப்டியா ? ஆனா உன் கிண்ணத்துல ஸ்வீட் அப்படியே இருக்கேன் ? “

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!