காலை வெளிச்சம் திரைச்சீலைகள் வழியாக ஒரு சூடான ஒளியை வீசியதும் ஆர்யன் முதலில் விழித்தான். சஞ்சு அவன் பக்கவாட்டில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உடலை போர்த்தி இருந்த போர்வை சற்றே கீழே நழுவி அவளுடைய வழவழப்பான வெற்று முதுகை வெளிப்படுத்தியது. அவளுடைய மென்மையான வெற்று மேனி அவனது வெற்று உடலுடன் அழுத்தி இருந்தது. அவளது ஒரு கை அவன் இடுப்பைச் சுற்றி இருக்க, அவள் முகத்தில் படர்ந்திருந்த அவளது தலைமுடியை அவள் காதுக்குப் பின்னால் மெதுவாக நகர்த்தி அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டான்.
அவளது அமைதியான முகத்தைப் பார்த்ததும் அவர்களுக்கு திருமணம் ஆன நாள் ஞாபகங்கள் அவன் மனதில் வந்தன.
பிளாஷ்பேக்:
தன் தந்தையின் மரணத்துக்கு பிறகு சஞ்சு கீர்த்தியுடன் தன் வீட்டில் தங்கியிருந்தாள். அவள் கண்களில் இருந்த உற்சாகம் மறைந்து அதற்கு பதிலாக ஒரு வெறுமை மட்டுமே இருந்தது.
ஆர்யன் ஒரு தனது அலுவலகத்தில் ஒரு மீடிங்கில் இருந்தபோது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ரஞ்சித் அவன் மொபைலை எடுத்து அதற்கு பதில் சொன்னான் ஆனால் அவசரமாக ஆர்யன் பக்கம் திரும்பி, “ சார், நீங்க தான் பேசணும் “ என்று சொல்லி மொபைலை கொடுத்தான்.
ஆர்யன் மீட்டிங் ரூமில் இருந்து வெளியே சென்று, “ ஹலோ, யார் பேசுறீங்க ?” என்று கேட்டதும் மறுபக்கத்தில் இருந்து, “நான் சுரேந்தர், சஞ்சனாவோட மாமா” பேசுறேன் என்று பதில் வந்தது.
” எனக்கு ஏன் போன் பண்ணீங்க ?” என்று ஆர்யன் கேட்டதும், “என் மகன் ஏதோ பிளான் பண்றான், அது என்னனு எனக்கு தெரியல. கிருஷ்ணன் உங்கள பத்தி என் கிட்ட சொல்லி இருக்காரு, எனக்கு உங்கள பத்தி எல்லாமே தெரியும். என் பையன் இப்போ என்ன சஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கான். நீங்க கொஞ்சம் உடனே இங்க வர முடியுமா ? ப்ளீஸ்.” என்று சுரேந்தர் கேட்டுக் கொண்டதும், “ நான் இப்போவெ அங்க வரேன் “ என்று ஆர்யன் உறுதியாக பதிலளித்து அழைப்பை துண்டித்தான். அப்போது தான் ரஞ்சித்துக்கு அழைப்பு வந்து அவன் பேசிவிட்டு உடனே ஆர்யனை பார்த்து, ” சார், பிரதீப், ஆளுங்க கூட சஞ்சுவோட வீட்டுக்கு போய் இருக்கான். நம்ம ஆளுங்க கிட்ட இருந்து தான் போன் வந்துச்சு “ என்று சொன்னான்.
“வா போகலாம்” என்று ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஆர்யன் புறப்பட்டு சென்றான்.
சஞ்சுவின் சொத்துக்களை பறிமுதல் செய்வது மட்டுமே பிரதீப்புக்கு ஒரே குறிக்கோளாக இருந்தது. அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவன் திட்டம் போட்டு தனது தந்தை மற்றும் சில ஆட்களுடன் அவளுடைய வீட்டிற்கு சென்றான். கீர்த்தி ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தாள், அவளது மொபைல் பறிக்கப்பட்டது.
“பிரதீப், ஏன் இப்படி பண்ற ?” என்று சஞ்சு குரல் நடுங்க கேட்டாள். அதற்கு அவன், “சிம்பிள் சஞ்சனா. இப்போவே என்ன கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லு இல்லனா கீர்த்தி உயிரோட இருக்க மாட்டா. உன் அப்பா இறந்த அப்புறம் உனக்கு அவ தான் கூடவே உறுதுணையா இருந்தா, அவளுக்கு நீ கடன்ப்பட்டிருக்க சஞ்சு அதனால அவள காப்பாத்த இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கோ “ என்று சொன்னான்.
சஞ்சு தன் மாமாவை பார்த்து, ” மாமா, ப்ளீஸ் அவன் கிட்ட பேசுங்க” என்று கெஞ்சினாள்.அதற்கு அவர், “சஞ்சு, நீ ஒரு நாள் கல்யாணம் பண்ணி தானே ஆகணும் அதுக்கு நீ ஏன் இப்ப பிரதீப்ப பண்ணிக்க கூடாது?” என்று அமைதியாகச் சொன்னார். தன் தந்தையின் வார்த்தையை கேட்டதும், “ இதோ பாரு என் அப்பா கூட சம்மதம் சொல்லிட்டாரு அப்புறம் என்ன ? “ என்று பிரதீப் கேட்டான்.
” மாமா, ப்ளீஸ் இத நிறுத்துங்க, இதெல்லாம் வேணாம்னு சொல்லுங்க “ என்று சஞ்சு கண்ணீருடன் கெஞ்சினாள் ஆனால் பிரதீப் குறுக்கிட்டு, “சஞ்சனா, நான் உனக்கு முப்பது நிமிஷம் டைம் தர்றேன். இப்ப போய் ரெடி ஆகு “ என்று உத்தரவிட்டான்.
சஞ்சு கண்ணீருடன் இதயம் கனக்க தன் அறைக்கு நடந்தாள். அவள் முற்றிலும் உதவியற்றவளாக உணர்ந்த போதிலும், கீர்த்தியை பாதுகாக்க வேண்டியிருந்ததால் வேறு வழி இல்லாமல் சாதாரண சேலை அணிந்து அழுது கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் சுரேந்தர் தனக்கும் பிரதீப்புக்கும் காபி தயாரித்து அவனுக்கு கொடுத்தார்.
“பிரதீப், இந்த காபி குடிச்சிட்டு வேஷ்டி கட்டி ரெடி ஆகு அப்புறம் உன் ஆளுங்கள அனுப்பி ஐயர் ஒருத்தர கூட்டிட்டு வர சொல்லு “ என்று சுரேந்தர் சொன்னதை கேட்ட பிரதீப், “ அதெல்லாம் வேணாம் அப்பா.” என்றான் ஆனால் சுரேந்தர் அவனிடம், “ டேய் சொன்னா கேளு, நீ கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்ட அப்போ அத ஒழுங்கா செய் “ என்று சொன்னார்.
பிரதீப் கண்களை உருட்டினாலும் அதற்கு இணங்கி, ஒரு ஐயரை அழைத்து வர ஆள் அனுப்பினான். உடை மாற்ற அறைக்குள் நுழைந்தவன் திடீரென மயங்கி படுக்கையில் சரிந்தான். சுரேந்தர் வேகமாக வெளியிலிருந்து கதவைப் பூட்டினார். அதே நேரம் ஆர்யனும் ரஞ்சித்தும் அங்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்த பிரதீப்பின் ஆட்களை ரஞ்சித் நொடிகளில் அடித்து துரத்தினான். அறிமுகமில்லாத முகங்களைக் கண்டு குழம்பியபடி வெளியே வந்தாள் சஞ்சு.
“ஆர்யன், நான் தான் உங்கள வர சொன்னேன், என் பையன ரூம்ல வெச்சு பூடிட்டேன் “ என்று சொன்ன சுரேந்தர், கண்களில் விரக்தி நிரம்பியிருந்த சஞ்சுவை நோக்கித் திரும்பி, “சஞ்சு, இங்க வா மா, இவர் ஆர்யன், உன் அப்பா உனக்கு பார்த்த மாப்ள இவரு தான். நீ பிரதீப் நெனச்சு பயப்பட வேணாம் “ என்று கூறிவிட்டு மீண்டும் ஆர்யனை பார்த்து, “ ஆர்யன், சஞ்சுவ கல்யாணம் பண்ணி உங்க கூட கூட்டிட்டு போங்க. இப்போ அது தான் சஞ்சுவுக்கு நல்லது “ என்று கூறினார்.
சுரேந்தரின் வார்த்தையை கேட்டு அதிர்ச்சியான சஞ்சு, “மாமா, என்ன சொல்றீங்க? யார் இவரு ? அப்பா என் கிட்ட இவர பத்தி எதுவும் சொன்னதே இல்ல “ என்று சொல்லி நடுங்கினாள்.
” அம்மாடி, நான் சொல்றத கேளுடா, இவரு ஏற்கனவே இங்க வீட்டுக்கு வந்துருக்காரு. உன் அப்பாவோட ஆசைய நிறைவேத்தி வை மா “ என்று சுரேந்தர் சொல்ல சஞ்சு பதில் சொல்வதற்குள் ஆர்யன் குறுக்கிட்டு, “மிஸ்டர் சுரேந்தர், அவங்க அப்பாவோட இழப்புல இருந்து அவங்க இன்னும் மீளவே இல்ல அதனால இத பத்தி அப்புறம் பேசலாம் “ என்று சொன்னான்.
“இல்ல பா, தயவு செஞ்சு நான் சொல்றத கேளுங்க. இத விட்ட இன்னும் நிறைய பிரச்சன வரும். என்னால எவ்ளோ நாள் சஞ்சுவ காப்பாத்த முடியும் ? நீங்க கல்யாணம் பண்ணிட்டா அவ பாதுக்காப்பா இருப்பா “ என்று சுரேந்தர் சொன்னதும், “சார், அவர் சொல்றது சரி தான். இப்ப அவங்கள தனியா விடுறது சரியா இருக்காது “ என்று ரஞ்சித்தும் கூறினான்.
” மாமா ப்ளீஸ் “ என்று சஞ்சு சொல்ல, “ உன் அப்பா சொன்னா கேட்பதானே ? இது அவரோட ஆச சஞ்சு “ என்று சொல்லிவிட்டு சமையலறை நோக்கி சென்ற சுரேந்தர் இரண்டு பைகளுடன் திரும்பி வந்து ஆர்யன் மற்றும் சஞ்சுவிடம் அதை கொடுத்தார்.
” இதெல்லாம் உன் அப்பா உங்க ரெண்டு பேருக்காகவும் வாங்கி வெச்சாரு. இப்போ போய் ரெண்டு பேரும் ரெடி ஆகி வாங்க “ என்று சுரேந்தர் சொன்னதும் சஞ்சு தயங்கினாலும், அது தனது தந்தையின் விருப்பம் என்று நம்பியபடி, பையை எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றாள்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ஐயர் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்தார். கிருஷ்ணன் தன் மகளுக்காக வாங்கி வைத்திருந்த தாலி செயினை சுரேந்தர் அவரிடம் கொடுத்தார். அதை பார்த்ததும், “இதெல்லாம் எப்படி இப்போ கெடச்சுது ? “ என்று ஆர்யன் கேட்டான்.
“நீங்க கிருஷ்ணன சந்திச்சு பேசுன அப்புறம் அவர் எப்போ எனக்கு போன் பண்ணாலும் உங்கள பத்தி தான் பேசுவாரு. இதெல்லாம் உங்களுக்காக வாங்கினதா என்கிட்ட சொன்னாரு. அது மட்டும் இல்ல சஞ்சுவோட பிறந்தநாள் அன்னைக்கு அவ கிட்ட உங்கள பத்தி சொல்லி இதெல்லாம் காட்டணும்னு பிளான் பண்ணி இருந்தாரு. இன்னைக்கு சஞ்சுவோட பிறந்த நாள்.” என்று சுரேந்தர் சொன்னதும், ஆர்யன் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஆனான்.
” ப்ளீஸ் ரொம்ப யோசிக்காதீங்க, எல்லாம் சரியா நடக்கும். சஞ்சு கொஞ்ச நாள்ல உங்கள புரிஞ்சிக்குவா, நீங்க போய் ரெடி ஆகி வாங்க “ என்று சரேந்தர் சொன்ன பிறகு ஆர்யன் வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து திரும்பி வந்தான். தந்தை பரிசளித்த ஊதா நிற பட்டுப்புடவை மற்றும் அதற்கு மேட்சிங் நகைகள் அணிந்து சஞ்சு வந்தாள். சுரேந்தர் அவள் கையைப் பிடித்து ஆர்யன் அருகில் அமர வைத்தார். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை, நிமிர்ந்தும் கூட பார்க்கவில்லை.
ஐயர் அவர்களுக்கு மாலைகளை கொடுத்ததும், சஞ்சு கண்கள் பனிக்க ஆர்யனைப் பார்த்தாள். அவள் மெதுவாக மாலையை அவன் கழுத்தில் அணிவித்தாள்.
“நான் உன் அப்பாவ சந்திச்சு இருக்கேன், நான் அவருக்கு அன்னியம் இல்ல. நான் உன்கிட்ட பேசணும்னு இருந்தேன் ஆனா அப்பா இறந்து நீ கவலையில இருந்த அதனால கொஞ்ச நாள் கழிச்சு வந்து உன்ன சந்திக்கலாம்னு இருந்தேன். ப்ளீஸ், என்ன மன்னிச்சிடு “ என்று சொல்லி மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான் ஆர்யன்.
சடங்குகள் முடியும் தருவாயில் ஐயர் ஆர்யனிடம் தாலி செயினை கொடுத்தார்.
“ஆர்யன், ப்ளீஸ் யோசிக்காதீங்க ” என்று சுரேந்தர் சொன்னதும் ஆர்யன் சஞ்சுவின் கழுத்தில் தாலி செயினை அணிவித்தான்.
ரஞ்சித்தும் சுரேந்தரும் அட்சதை தூவி அவர்களை வாழ்த்தினர்.
திருமணச் சடங்குகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்தான் ரஞ்சித். ஆர்யனும் சஞ்சுவும் எழுந்து நின்று சுரேந்தரிடம் ஆசி பெற்றனர்.
” நீங்க ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்புங்க, பிரதீப் எழுந்ததும் அவன நான் சமாளிச்சிக்குறேன் “ என்று சுரேந்தர் உறுதியாக, அதே சமயம் கனிவுடன் கூறினார்.
ஆர்யன் தலையசைத்து விட்டு ரஞ்சித்தை பார்த்து, “ரஞ்சித், இங்க எல்லாத்தையும் பார்த்துக்க, நான் சஞ்சனாவ என் கூட கூட்டிட்டு போறேன் “ என்று சொன்னான். அதற்கு அவன் ” சரிங்க சார் “ என்றான் அதன் பின்னர் புன்னகையுடன். “வாழ்த்துக்கள் சார், வாழ்த்துக்கள் மேடம் “ என்று அவர்களுக்கு வாழ்த்து சொன்னான்.
ஆர்யன் மெதுவாக சஞ்சுவின் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றான். அவள் கண்களைத் தாழ்த்தி, மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தாள். இருவரும் ஆர்யன் மேன்ஷனை அடைந்ததும், ஏற்கெனவே வாசலில் காத்திருந்த கௌசல்யா புதுமணத் தம்பதிகளுக்கு ஆர்த்தி எடுத்து அன்பான புன்னகையுடன் வரவேற்றார்.
இதற்கிடையில், ரஞ்சித் எல்லாவற்றையும் சரி செய்வதை உறுதி செய்தான். பூட்டிய அறையில் இருந்து கீர்த்தியை விடுவித்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றான். தங்களிடம் இருந்து அறிவிப்பு எதுவும் கிடைக்காமல் சஞ்சுவை தொடர்பு கொள்ளக் கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தினான்.
சுரேந்தர், பிரதீப்பின் அறையின் மூடிய கதவையே வெறித்து சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, தன் தலையைச் சுவற்றில் பலமாக மோதி, நெற்றியில் ரத்தம் சொட்டச் சொட்ட ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக் கொண்டார். அவர் சுயநினைவை இழப்பதற்கு சற்று முன்பு பிரதீப்பின் அறை கதவை திறந்தார்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்த பிரதீப் பதற்றத்துடன் வெளியே வந்து சோபாவில் காயமடைந்து கிடந்த தன் தந்தையைப் பார்த்து பெருமூச்சு விட்டான்.
“அப்பா! என்ன ஆச்சு ?” என்று கேட்டு அவரை நோக்கி விரைந்தான்.
சுரேந்தர் முனகியபடி “ ரெண்டு பேரு… இங்க வந்தாங்க, அதுல ஒருத்தன் சஞ்சுவ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிட்டான் “ என்று நாடகமாடினார்.
பிரதீப்பின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “என்ன சொல்றீங்க? நான் எப்படி சுயநினைவை இழந்தேன்?” என்று அவன் கேட்டதும், “அவங்க தான் உன் ரூம்ல ஏதோ ஸ்ப்ரே பண்ணதா சொன்னாங்க பா “ என்றார் சுரேந்தர், பலவீனமாக.
” அப்பா, யார் அவங்க ?” என்று பிரதீப் கேட்க, “ தெரியல பா “ என்றார் சுரேந்தர்.
“யாரா இருந்தாலும் சரி, நான் அவங்கள கண்டு புடிப்பேன், அவங்கள சும்மா விட மாட்டேன் ” என்று பிரதீப் உறுமினான், அவன் குரலில் கோபம் ததும்பியது,
பிளாஷ்பேக் முடிகிறது:
தன் நினைவுகளில் இருந்து மீண்ட ஆர்யன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த சஞ்சுவைப் பார்த்து புன்னகைத்தான். குனிந்து அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டு அவளை எழுப்பினான்.
அவள் கண் சிமிட்டி மெல்ல எழுந்து உட்கார்ந்து போர்வையை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.
“குட் மார்னிங் பொண்டாட்டி, நீ ரொம்ப அழகா இருக்க ஸ்வீட் ஹார்ட். ஒவ்வொரு நாளும் உன்ன இப்படிப் பார்க்க விரும்புறேன். உன் முகம் சிவந்து போய் இருக்கு “ என்று சிரித்துக் கொண்டே முணுமுணுத்தான் ஆர்யன். அதற்கு அவள், “ அதுக்கு காரணம் நீ தான், உனக்கு தான் நன்றி சொல்லணும் “ என்று கிண்டல் செய்தாள், அவளுடைய கன்னங்களில் ஒரு நாணத்தின் குறிப்பு எழுந்தது.
அவன் அவளது தலைமுடியை விரல்களால் கோதிவிட்டு, அவளது உதடுகளை ஆழமான முத்தமிட்டான்.
“உனக்காக நான் ஒண்ணு வாங்கி வச்சிருக்கேன்” என்று ஆர்யன் சொன்னதை கேட்டு, அவள் புருவத்தை உயர்த்தி ” நீ ஏற்கனவே எனக்கு நிறைய பரிசு கொடுத்துட்ட, இப்ப இன்னும் என்ன வாங்கி இருக்க ?” என்று கேட்டாள்.
” நான் வாங்கினது உனக்கு தான் ஆனா உண்மைய சொல்லனும்னா எனக்கு தான் அது பரிசு “ என்று குறும்பு பார்வை மற்றும் சிரிப்புடன் ஆர்யன் சொன்னதும், “எனக்குப் புரியல,” என்றாள் கண்களைச் சுருக்கியபடி.
“அதாவது, நான் லண்டன்ல இருந்து உனக்கு கொஞ்சம் செக்சியான உள்ளாடை செட் வாங்கிட்டு வந்துருக்கேன் “ என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு மூச்சிரைக்க அவனை விளையாட்டாக தள்ளி, “ சீ போடா “ என்றாள்.
” என்னது போடாவா ? அடுத்த வாரம் நாம ஹனிமூன் போறோம், அங்க நீ அத போடு “ என்று ஆர்யன் கூறியதும், “ஹனிமூனா? இன்னும் என்ன உனக்கு ஹனிமூன் ? “என்று கிண்டலடித்தாள்.
” நாம இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கோம் பொண்டாட்டி, எந்த தொந்தரவும் இல்லாம, யாரும் இல்லாம நம்ம ரெண்டு பேரு மட்டும் சரியா கொண்டாடனும். இந்த உலகத்துல எங்க வேணும்னாலும் சொல்லு நாம அங்க ஹனிமூன் போகலாம் “ என்று ஆர்யன் கேட்க, “ எனக்கு வெட்கமா இருக்கு போடா “ என்று சொல்லி போர்வையால் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டு பாத்ரூமுக்கு விரைந்தாள். அவள் நடந்து சென்ற போது அவளது கொலுசுகளின் மெல்லிய மணியோசையும், கால் விரலில் இருந்த மெட்டியின் ஒளியும் எதிரொலிக்க, ஆர்யன் காதல் வயப்பட்ட ஒரு இளைஞனைப் போல சிரித்தான்.
சஞ்சு குளித்து முடித்து வெளியே வந்த பிறகு, ஆர்யன் குளிக்க சென்றான். அவன் வெளியே வந்தபோது, சஞ்சுவை பார்த்து உறைந்து போனான்.
சஞ்சு கண்ணாடி முன் நின்றிருந்தாள், பிரமிக்க வைக்கும் நீல நிற சேலையை அணிந்துகொண்டு, அவன் அவளுக்கு பரிசளித்த பிளாட்டினம் செயினும், தாலியும் அவள் நெஞ்சில் பெருமையுடன் பளபளத்தது. ஒரு உச்சி வகுட்டை முதன்முறையாக குங்குமக் அலங்கரித்தது. அவள் மெதுவாக அவனை நோக்கி நடக்க அவளுடைய கொலுசுகள் ஒவ்வொரு அடிக்கும் மெதுவாக ஒலி எழுப்பின.
ஒரு கணம், அவனால் நகர முடியாமல், அவளின் அழகில் மயங்கி நின்றான்.
“ஆர்யன், நாம் ஏதாவது கோவிலுக்குப் போகலாமா?” என்று அவனது மயக்கத்தை உடைத்தபடி அவள் மெதுவாகக் கேட்டதும், “ நீ எங்க சொன்னாலும் போகலாம் “ என்று பதில் சொன்னான்.
” அப்போ சீக்கிரம் கிளம்பு “ என்று அவள் சொல்ல, அந்த நொடியில், அவளுக்காக தன்னால் எதையும் செய்ய முடியும், எங்கும் செல்ல முடியும், யாருடனும் சண்டையிட முடியும் என்ற உத்வேகத்தோடு அவளின் மந்திரத்துக்கு உட்பட்டவன் போல தலை அசைத்தான்.
************************
முன்னோட்டம்:
” களைப்பா இருந்தா, இன்னும் கொஞ்சம் அதிகம் களைப்பாயிட்டு தூங்க போலாம். என் பொண்டாட்டி இவ்ளோ அழகா டிரஸ் பண்ணி இருக்கா, இந்த அழக ரசிக்கலனா எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா ? “

1 comment
[…] Chapter 53 […]