ரியா, லேகா மற்றும் விவான் காலையில் எழுந்து ஹாலில் அமர்ந்து காபியை குடித்துக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களின் கண்கள் மாயா இன்னும் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையறையின் கதவை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அந்த மௌனம் பதட்டமான எதிர்பார்ப்புடன் கனத்திருந்தது. மாயா விழித்தவுடன் அவளது எதிர்வினை வெடிக்கும் என்று அறிந்து அவளை எதிர்கொள்ள காத்திருந்தனர்.
அவர்களின் கவலை தோய்ந்த முகங்களைக் கவனித்த விவான் அவர்களுக்கு ஆறுதல் கூற முயன்றான். “கவலைப்படாதீங்க, நாம எல்லாரும் சேர்ந்து அவள சமாளிப்போம். அமைதியா இருங்க.” என்று சொன்னான்.
ரியா முகத்தில் கவலை படர்ந்திருக்க அவன் பக்கம் திரும்பி, “மாத்திரை வாங்கிட்டு வந்தியா ?” என்று கேட்டாள். அதற்கு விவான் உடனே, ” ஹ்ம்ம், வாங்கிட்டேன். நான் அவளோட காபியில ஒன்னு கலந்துடுறேன் அப்போ அவ எதையும் சந்தேகிக்க மாட்டா.” என்று விவான் பதிலளித்தான், அவனது குரல் உறுதியாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து மாயா தூக்கத்திலிருந்து எழுந்தாள். அவளுடைய கண்கள் திறந்து, ரிசார்ட் அறையின் சுவர்களை பார்த்தாள் ஆனால் அவள் மனம் தெளிவாக இருந்தது. முந்தைய இரவின் பிம்பங்கள் அவள் முன் பளிச்சிட்டன.
“ஆர்யன்… ஆர்யன் எங்க?” என்று முணுமுணுத்தவளின் நெஞ்சில் பீதி ஏறியது.
ஒரு நொடியையும் வீணாக்காமல் போர்வையை உதறி எறிந்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். “ஆர்யன்! ஆரியன்!” என்று அவள் அலறியதும், அவள் குரல் ஹால் முழுவதும் எதிரொலித்தது,
ரியாவும், லேகாவும் உடனே எழுந்து மாயாவின் கைகளைப் பிடித்து மெதுவாக இழுத்து சோபாவில் உட்கார வைத்தனர்.
“மாயா, என்ன நடந்துச்சு?” என்று கேட்டு ரியா குரலை அடக்க முயன்று கேட்டாள்.
“ரியா, ஆர்யன் நேத்து என்கிட்ட வந்தாரு, நாங்க ஒன்னா இருந்தோம். நிரந்தரமா என்கிட்ட திரும்பி வர்றேன்னு சொன்னாரு” என்று மாயா திக்கி தடுமாறி சொல்ல, ரியாவின் கண்கள் நம்பமுடியாமல் விரிந்தன. “மாயா, அமைதியா இரு. என்ன முட்டாள்தனமா பேசுற? ஆர்யன் எப்படி இருக்க முடியும் ? “ என்று ரியா கேட்டாள்.
” நான் பார்த்தேன் ரியா, அவர் என்ன பப்புல இருக்க ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போனாரு. நாங்க ஒன்னா இருந்தோம். நான் எதையும் கற்பன செய்யல” என்று மாயா முந்தைய இரவு நடந்ததை கூறினாள்.
லேகா மறுத்து தலையை ஆட்டி, “மாயா, நீ உன் மண்டைக்குள் ஆர்யன் பத்தி அதிகம் புகுத்துற. நாம நேத்து பப்புல இருந்தோம், அப்போ நீ அதிகமா குடிச்சு இருந்த. நானும் ரியாவும் டான்ஸ் ஆடிட்டு திரும்பி வந்த அப்போ நீ பார் டேபிள் மேல தலை வெச்சு படுத்துருந்த. செம்ம போதையில இருந்த. நாங்க தான் உன்ன ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு வந்தோம் “ என்று ரியா சொன்னாள், அவளுடைய குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது.
“வாய மூடு” என்று மாயா கண்கள் கலங்க கத்தினாள். “நான் ஆர்யன சந்திச்சேன். நேத்து நைட்டு நாங்க உடலுறவு வெச்சுகிட்டோம். ப்ளீஸ் என்னை நம்புங் ” என்று கத்தினாள்.
“மாயா, தயவு செஞ்சு அமைதியா இரு. நான் என் நண்பன சந்திச்சிட்டு திரும்பி வந்த அப்போ நீ பார் கவுண்டருல படுத்திருந்த. ரியாவும், லேகாவும் உன்னை எழுப்ப முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க ஆனா நீ எழுந்துக்கவே இல்ல அதனால நாங்க உன்ன கூட்டிட்டு வந்தோம் “ என்று விவான் முன்னால் வந்து பதற்றத்தைத் தணிக்க முயன்றான்.
மாயாவின் முகம் குழப்பத்தில் சுருங்கியது. ” இது எப்படி சாத்தியம்? எனக்கு ஆர்யன் முகம் ஞாபகம் இருக்கு “ என்று மீண்டும் அவள் முனுமுனுத்தாள். அதற்கு லேக்கா, ” உனக்கு ஆர்யன் மேல ரொம்ப வெறி ஆயிடுச்சு அதனால கனவு காண ஆரம்பிச்சுட்ட” என்று சொன்னாள்.
மாயா தன் முகத்தை கைகளால் புதைத்துக் கொண்டாள், அவள் விரல்கள் அவள் தலைமுடியைப் பிடித்திருந்தன, அவள் கட்டுப்படுத்த முடியாமல் விம்மி அழுதாள். ரியாவும், லேக்காவும் அவளை கட்டிப்பிடித்து நீண்ட நேரம் ஆறுதல் சொன்னார்கள். இறுதியில், அவர்கள் அவளை குளியலறைக்கு அழைத்துச் சென்றனர். குளித்த பின்னர் அவள் மனம் அமைதியடையும் என்று நம்பினர்.
சிறிது நேரம் கழித்து, மாயா புத்துணர்ச்சியுடன் அமைதியாக ஹாலுக்கு திரும்பினாள். விவான் அவளிடம் ஒரு கப் காபியையும் ஒரு சிறிய மாத்திரையையும் கொடுத்தான்.
“இந்த மாத்திரை எதுக்கு ?” என்று மாயா அதை சந்தேகத்துடன் பார்த்தபடி கேட்டாள். அதற்கு அவன், “மாயா, உனக்கு ரெஸ்ட் வேணும். நீ அதிக மன அழுத்தத்துல இருக்க. இந்த மாத்திர அத குறைக்க உதவும்” என்று விவான் மென்மையாக சொன்னான். ரியாவும், லேக்காவும் அவன் மாத்திரையை கையில் கொடுப்பதை பார்த்து முறைத்தனர்.
மாயா ஒன்றும் பேசாமல் மாத்திரையை வாங்கி ஒரு மிடறு காபியுடன் விழுங்கினாள். ரியாவும் லேகாவும் அது கருத்தடை மாத்திரை என்று நம்பினர், ஆனால் விவான் அவளுக்கு வழக்கமான வைட்டமின்களை மட்டுமே கொடுத்திருந்தான்.
“இன்னிக்கு எங்கேயும் போக வேண்டாம், மாயா நீ நல்லா ரெஸ்ட் எடு, அப்புறம் சாயங்காலம் நாம கிளம்பலாம் ” என்று ரியா சொன்னதும், மாயா மௌனமாக தலையசைத்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினாள். அவள் படுக்கையில் படுத்திருந்த போது அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.
“ஆர்யன், நேத்து நாம சந்திச்சோம். எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு. நான் பார்ல படுத்திருந்தேன்னு அவங்க எப்படி சொல்றாங்க ? என்ன ரூமுக்கு நீ கூடிட்டு போகலையா ? என்ன ஆச்சு எனக்கு?” என்று மனதில் புலம்பியபடி படுத்திருந்தாள்.
தான் எதையும் கற்பனை செய்யவில்லை என்பதை நிரூபிக்க தீர்மானித்தவள், தனது மொபைலை எடுத்து ராஜேஷை அழைத்தாள்.
“ராஜேஷ், நேத்து ராத்திரி ஆர்யன் எங்க இருந்தாருன்னு கண்டுபுடிச்சு சொல்லு. அவர் இப்போ எங்க இருக்காருனு ட்ராக் பண்ணு, எனக்குத் தெரியனும் “ என்று சொல்லிவிட்டு மொபைலை வைத்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். கனவுகள் போல் உணராத நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டாள். அவள் உடல் உணர்ச்சி சோர்வுக்கு இணங்கி தூக்கத்தில் ஆழ்ந்தாள்.
சில மணி நேரம் கழித்து, அவளது மொபைல் ஒலித்தது, அவள் சட்டென்று பதில் சொன்னாள்.
“ராஜேஷ், நான் கேட்ட தகவல் கிடைச்சுதா ?” என்று மாயா கேட்டதும், “ஆமாங்க மேடம், நேத்து அவரோட மேன்ஷன்ல தான் இருந்திருக்காரு “ என்று ராஜேஷின் பதில் வந்தது.
” நிஜமா தான் சொல்றியா ? “ என்று மாயா குரல் நடுங்க கேட்க, “ஆமாம் மேடம். 100% உறுதியா அவர் வீட்ல தான் இருந்தாரு ” என்றான் ராஜேஷ். அவன் பதிலை கேட்டு மாயாயின் இதயம் நொறுங்கியது.
“ ஆர்யன் வீட்டில் இருந்தா, அப்போ நான் யார பார்த்தேன்? ஒரு கனவு எப்படி இவ்வளவு உண்மையா உணர முடியும்? என்று அவள் மனம் கேள்வி எழுப்பியது.
அப்போது ரியாவும் லேகாவும் அறைக்குள் நுழைந்து மாயா நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதையும், அவள் முகத்தில் குழப்பம் இருப்பதையும் பார்த்தார்கள்.
“ரியா, லேகா, நான் ராஜேஷ் கிட்ட பேசினேன். நேத்து நைட்டு ஆர்யன் எங்க இருந்தாருனு அவன் கண்டுபுடிச்சான் “ என்று மாயா மெதுவாகச் சொன்னாள். அதற்கு, “ எங்க இருந்தாரு ?” என்று ரியா கேட்டாள்.
“அவர் வீட்ல” என்றாள் மாயா, கிசுகிசுப்பான குரலில். லேகா ஒரு சிறு பெருமூச்சு விட்டாள். “பார்த்தியா? அது கனவா தான் இருக்கும்னு நாங்க சொன்னோம் மாயா.” என்று லேக்கா அமைதியாக சொன்னாள்.
“இப்ப வா, ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம் “ என்று சொல்லி அவர்கள் மாயாவை அறையிலிருந்து வெளியே இழுத்து சென்று ஒரு கிண்ணத்தில் ஐஸ்கிரீம் கொடுத்தனர். அவள் அதை வாங்கிக்கொண்டாள், ஆனால் அவளுடைய மனம் மங்க மறுத்த எண்ணங்களில் மூழ்கியது. விவான் ஒரு மூலையில் நின்று அவளது ஒவ்வொரு அசைவையும் மெளனமாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் சொன்னதை அவள் முழுமையாக நம்பவில்லை என்பதை அவள் கண்களில் அவனால் அதை பார்க்க முடிந்தது.
அவள் இன்னும் இரவின் நினைவுகளோடு ஒட்டிக்கொண்டிருக்கிறாள் என்று அவன் நினைத்தான். “ இவ, இத பத்தி ஆழமா யோயசிக்குறதுக்கு முன்னாடி இவள திசை திருப்ப நான் ஒரு வழி கண்டுபிடிக்கனும் “ என்று நினைத்து யோசிக்க ஆரம்பித்தான்.
மாயா சோபாவில் உட்கார்ந்து கண்ணாடி மேஜையில் விரல்களால் தட்டிக் கொண்டிருந்தாள். விவான் ஒரு சிரிப்புடன் அருகில் அமர்ந்து பின்னால் சாய்ந்தான்.
“மாயா, சஞ்சனாவைக் குறிவைக்க ஏதாவது யோசனை பண்ணி இருக்கியா ?” என்று விவான் கேட்டான். அதற்கு மாயா, “இன்னும் இல்ல” என்று சுருக்கமாக பதிலளித்தாள்.
விவான் வேடிக்கையுடன் தலையைச் சாய்த்தான். “ஆபீஸ்ல லேட்டஸ்ட் நியூஸ் என்னனு சொல்லு, நான் ஒரு ஐடியா சொல்றேன்.” என்று விவான் சொன்னதும், அவள் லேசாக முன்னோக்கி சாய்ந்தாள். “நாங்க தயாரிப்புகள அதிகரிக்க வேலை செய்றோம், அப்புறம் ஒரு புது காஸ்மெடிக் வெளியிட பிளான் பண்றோம் “ என்று கூறினாள்.
விவானின் ஆர்வம் அதிகரித்தது. “புது காஸ்மெடிக் வெளியிட போறீங்களா ? அத எப்போ செய்ய போறீங்க ? “ என்று அவன் கேட்க, “அநேகமாக அடுத்த மாசம் இருக்கும் ” என்றாள் மாயா.
“நல்லது. அப்போ நான் சொல்ற ஐடியா கேளு. நீங்க புது காஸ்மெடிக் வெளியிட போறதுக்கு முதல் நாள் அதுல தீங்கு விளைவிக்குற பொருட்கள் இருக்குறதா வதந்தி பரப்பி விடு அப்புறம் அத பொதுவுல சோதிக்க மக்கள தூண்டு. சஞ்சனா தலைவர் மட்டும் இல்ல ஒரு சென்டிமென்ட் முட்டாளும் கூட அதனால அந்த சோதனையா அவள செய்ய சொல்றது ரொம்ப சுலபம் “ என்று யோசனை சொன்னான் விவான்.
அவன் சொன்ன யோசனையை கேட்டதும் மாயாவின் கண்கள் லேசாக சுருங்க ஒரு குறும்புப் புன்னகை உருவானது. ” போதும், இதுக்கு அப்புறம் என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் என்றாள்.
விவான் அவள் உற்சாகத்தை கண்டு சிரித்தான். ”முதல்ல அவள ஆர்யன் முன்னாடி அசிங்கப்படுத்து. சஞ்சனாவும், பிரதீப்பும் ஒன்னா இருக்க மாதிரி போட்டோ ஏற்பாடு பண்ணி அவதூறு பரப்பு ” என்று சொன்னான். உடனே அவள் ஒரு விஷமப் புன்னகையுடன் பின்னால் சாய்ந்தாள். “ அவள ஆர்யன் கிட்ட இருந்து விரட்ட நான் எதையும் செய்வேன்.” என்று சொன்னாள்.
” நான் ஏதாவது பண்ணி உனக்கு உதவி செய்ய முடியும்னு நெனச்சா சொல்லு “ என்று விவான் சொல்ல, “ நிச்சயமா சொல்றேன். இப்போ ஐடியா சொன்னதுக்கு ரொம்ப நன்றி” என்று பதிலளித்தாள். விவான் புன்னகைத்து கொண்டே, “உனக்காக எதுவும், செய்வேன் மாயா.” என்றான்.
” சரி, சீக்கிரம் கிளம்பாலம், நான் நாளைக்கு ஆபீஸ் போகணும் “ என்று மாயா சொன்னதும், “ லஞ்ச் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பலாம் “ என்றான் லேக்கா.
திட்டமிட்டபடி மதிய உணவை முடித்துக் கொண்டு உடனடியாக சென்னை திரும்பும் பயணத்தை அவர்கள் தொடங்கினர்.
சென்னையில் உள்ள ஆர்யன் மேன்ஷனில், பவியும் கீர்த்தியும் சஞ்சுவை பார்க்க சென்றனர். அவர்கள் லிவிங் அறையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, ஆர்யன் சஞ்சுவை தூக்கிக்கொண்டு படிகளில் இறங்கி வந்தான். பெண்களும் இருவரும் தம்பதியரை சங்கடப்படுத்த விரும்பாமல், தங்கள் புன்னகையை கட்டுப்படுத்த கடுமையாக முயன்றனர்.
“மேடம், எப்படி இருக்கீங்க?” என்று பவி விளையாட்டாகக் கேட்க, “நான் நல்லா இருக்கேன் ” என்றாள் சஞ்சுவின் முகத்தில் மெல்லிய புன்னகையோடு.
” என்ன அண்ணா, சஞ்சுவ நடக்கவே விட மாட்டீங்க போல ? “ என்று கேட்டு கீர்த்தி கிண்டலாக புருவத்தை உயர்த்தினாள். அதற்கு ஆர்யன், ” சஞ்சு ரொம்ப பலவீனமா இருக்கா அதனால் இவ படி ஏறி இறங்க வேணாம்னு நானே தூக்கிட்டு வந்தேன் “ என்று சொன்னான்.
” லிப்ட் வேலை செய்யலையா?” என்று பவி சிரித்துக் கொண்டே கேட்க, “ ஹே, ஒரு மாடிக்கு யாராச்சும் லிப்ட் யூஸ் பண்ணுவாங்களா ? “ என்று கேட்டாள் சஞ்சு.
“சரி மா, நாங்க ஒன்னும் சொல்லல” என்று கிண்டலடித்தாள் கீர்த்தி.
” சரி நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க, நான் ஆபீஸ் ரூம்ல இருக்கேன் “ என்று சொல்லிவிட்டு ஆர்யன் சென்றதும், பெண்கள் சஞ்சுவின் அருகில் அமர்ந்தனர்.
“சஞ்சு, இப்போ எப்படி இருக்க?” என்று பவி உண்மையாகக் கேட்டதும், “ நான் நிஜமா நல்லா இருக்கேன் “ என்றாள் சஞ்சு.
“நேத்து நாங்க எவ்ளோ பயந்தோம் தெரியுமா? பாவம் ஆர்யன் அண்ணா, எப்படி அழுதாரு தெரியுமா ? அப்படி ஓடி வந்தாரு “ என்று கீர்த்தி சொன்னதை கேட்டு, சஞ்சு சிநேகமாகச் சிரித்தாள். “அவருக்கு என் மேல பாசம் ரொம்ப அதிகம். சின்ன விஷயமா இருந்தா கூட ரொம்ப பயந்துடுவாரு “ என்று சொன்னாள். அதற்கு, “நேத்து பார்த்தோம்” என்று தலையசைத்தாள் பவி.
” சரி, விஷயத்துக்கு வருவோம் “ என்று சொன்ன கீர்த்தி, “ டாக்டர் நீ ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்குறதா சொன்னாரு “ என்று குறும்புச் சிரிப்புடன் சொன்னாள். உடனே பவியும், “ கர்ப்பமா இருக்கும் போது ஹனிமூன் போய் இருக்கீங்க “ என்று சொன்னாள்.
“ஏய், உண்மையாவே எனக்கு தெரியல. எனக்கு பீரியட்ஸ் ஒழுங்கா வராது அதனால லேட்டா வரும்னு நெனச்சுட்டு இருந்தேன். அதுவும் இல்லாம எனக்கு எந்த அறிகுறியும் இல்ல. கொஞ்ச நாள் முன்னாடி தான் நான் சோர்வா இருந்தேன், எப்பவும் தூக்கமாவும் இருந்தேன் “ என்று சஞ்சு பதில் சொன்னாள்.
“சரி, அடுத்த ஹனிமூனை எங்க போக பிளான் பண்ணி இருக்கீங்க “ என்று கீர்த்தி கிண்டல் செய்ததும், “வாய மூடுங்க, இப்போ சொல்லுங்க, ஆபீஸ்ல வேலை இப்ப எப்படி நடக்குது?” என்று கேட்டாள்.
” நீ ஆபீஸ்ஸுக்கு வர மாட்டியா ? “ என்று பவி ஆர்வத்துடன் கேட்க, “ஹ்ம்ம்… நான் மட்டும் இல்ல. அவரும் வர மாட்டாரு. நான் போகலாம்னு சொன்னேன் ஆனா உங்க அண்ணன் ரொம்ப கண்டிப்பா முடியாதுனு சொல்லிட்டாரு “ என்றாள் சஞ்சு.
“அவர் சொல்றது சரி தான், நீ ரொம்ப பலவீனமா இருக்க. நல்லா ரெஸ்ட் எடு. ஆபீஸ் வேலை எல்லாம் ஒழுங்கா நடக்கும் அதனால கவலை இல்லாம இரு “ என்று பவி சொல்ல, “ ஆமா பிரதீப் எல்லாத்தையும் பார்த்துக்குவரு “ என்றாள் கீர்த்தி.
” ஹ்ம்ம் சரி, அவருக்கு உதவி செய்ய நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க “ என்று புன்னகையுடன் கூறினாள் சஞ்சு.
சிறிது நேரம் பேசி அரிட்டை அடித்துவிட்டு பவியும், கீர்த்தியும் கிளம்பினர்.
அன்று இரவு மாயாவும் அவளது தோழிகளும் சென்னையில் உள்ள லேகாவின் வீட்டை அடைந்தனர். அடுத்த நாள், மாயா அலுவலகம் திரும்பி வேலையில் கவனம் செலுத்தினாள். பிரதீப் பணிகளில் மூழ்கியிருப்பதைக் கவனித்தவள் சஞ்சுவுடன் ஒரு சந்திப்பைக் கோர முடிவு செய்தாள். ஆனால், அதை பிரதீப் மறுத்துவிட்டான். மாயா சற்றும் அலட்டிக் கொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தாள். இது மூன்று நாட்களாக தொடர்ந்து, சஞ்சனா அலுவலகத்திற்கு வராதது குறித்து அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவளது சந்தேகத்தை உணர்ந்த பிரதீப் ஆர்யனுக்கு போன் செய்தான்.
“ஆர்யன், சஞ்சு ஆபீஸ்ல இல்லாததால மாயாவுக்கு சந்தேகம் அதிகமாயிடுச்சு.” என்று பிரதீப் சொன்னதும், “சஞ்சுவுக்கு உடம்பு சரியில்லனு மட்டும் சொல்லு. இப்ப அவ தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்” என்று ஆர்யன் பதிலளித்தான்.
பிரதீப் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அலுவலகத்தில் சஞ்சு அல்லது ஆர்யன் பற்றிய எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு வாரம் கழிந்தது. மாயாவின் ஆர்வம் உச்சத்தை அடைந்து அவள் அதை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.
ஆஷாவை தன் அறைக்கு அழைத்து, “ஆஷா, சஞ்சு ஆபீஸ்ல இல்லைன்னு ஏதாவது கிசுகிசு வந்துச்சா ?” என்று மாயா கேட்டதும், ஆஷா யோசனையுடன், ” சஞ்சு மட்டும் இல்ல, ஆர்யன் சாரும் ஒரு வாரமா ஆபீஸ் வரல. இது தான் இன்னைக்கு கிடச்ச புது தகவல் “ என்று சொன்னாள்.
“ஆர்யனும் வரலையா? ஆனா ஏன்?” என்று மாயா குழப்பத்துடன் கேட்க, “சஞ்சுவுக்கு உடம்பு சரியில்ல போலிருக்கு. ஒருவேளை அவர் அவள கவனிச்சுக்க வீட்ல இருக்காரு போல “ என்றாள் ஆஷா.
“ அவளுக்கு என்ன ஆச்சு ?” என்று மாயா கேட்ட போது ஆஷாவிடம் அதற்கு பதில் இல்லை. விரக்தியடைந்த மாயா பிரதீப்பின் அறைக்கு சென்று, “பிரதீப், சஞ்சனா ஏன் ஆபீஸ் வரல ?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவளுக்கு உடம்பு சரியில்லன்னு கேள்விப்பட்டேன், ஆனா எனக்கும் சரியா தெரியாது” என்று அமைதியாக பதிலளித்தான்.
“ஆர்யன் ஏன் ஆபீசுக்கு வரலை?” என்று மாயா கேட்டதும், ” சஞ்சுவுக்கு முடியல அப்போ அவள பாத்துக்க வீட்ல கூட இருப்பாரு “ என்று கூறினான்.
” அப்படி என்ன ஆச்சு அவளுக்கு ? “ என்று மாயா கேட்க, “ எனக்கு சரியா தெரியாது. ” என்று பிரதீப் கூறினான்.
மாயா முகத்தைச் சுளித்தபடி அவன் அறையில் இருந்து வெளியேறினாள், அவள் மனம் படபடவென்று ஓடியது. பிரதீப்புக்கு செய்தி இல்லையென்றால், அவள் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசிக்க தொடங்கினாள். அவளுக்கு பதில்கள் தேவைப்பட்டன. அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும் போதே அவளது எண்ணங்கள் அலைபாய்ந்தன. அன்று இரவு, அவள் ராஜேஷுக்கு போன் செய்து, ” ஆர்யன் மேன்ஷனுக்கு உள்ளேயும் வெளியேயும் போய்ட்டு வர ஆளுங்கள கண்காணிக்க ஏற்பாடு பண்ணு. ஆர்யன் இல்ல சஞ்சு வெளியே போனா, அவங்களயும் கண்காணி. என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியணும்.” என்று உத்தரவிட்டாள்.
************
முன்னோட்டம்:
“ ஆமா, நீ என் பாப்பா, என் பொண்டாட்டி, என் காதலி, என் ஸ்வீட் ஹார்ட், என் தேவதை… என் செக்ஸி…”

1 comment
[…] Chapter 67 […]