சாரா தன் மொபைலைத் நோண்டிக்கொண்டே, டின்னருக்கு மற்றவர்கள் எப்போது வருவார்கள் என்று டைனிங் டேபிளில் காத்துக்கொண்டிருந்தாள். அனிக்காவும் நான்சியும் கைகோர்த்தபடி நான்சியின் அறையிலிருந்து வெளியே வந்தனர். அனிக்கா ஊஞ்சல் ஆடுவது போல கைகளை முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டே வந்தாள். டைனிங் டேபிளில் சாரா உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் நான்சி அப்படியே நின்றாள். அனிக்காவை இழுத்துக்கொண்டு போய் சோபாவில் அமர்ந்த நான்சி, ஈஷ்வரும் ஜெர்ரியும் ஆபீஸ் ரூமில் இருந்து வெளியே வருவதற்காகக் காத்திருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், அனிக்காவை அழைத்துக்கொண்டு டைனிங் ஏரியாவுக்கு நடந்தாள்.
“அனு, நான் சொன்னது ஞாபகம் இருக்கா?” என்று நான்சி ரகசியமாகக் கேட்டாள்.
“ஹ்ம்ம்… ஞாபகம் இருக்கு. நான் செய்றேன், நீ கவலைப்படாத. ஆனா இதையே திரும்பத் திரும்பக் கேட்டா நான் செய்ய மாட்டேன்,” என்று செல்லமாக மிரட்டினாள் அனிக்கா.
“சரி சரி, நான் கேட்கல. வா இப்போ நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.” என்று நான்சி சொன்னதும், அனிக்கா நான்சியின் கையை விட்டுவிட்டு, விறுவிறுவெனச் சென்று அந்தத் தலைமை நாற்காலியில் கால்களை மடித்து அமர்ந்தாள். நான்சி இரண்டு நாற்காலி தள்ளி அமர்ந்துகொண்டாள். அனிக்கா தன் தட்டைச் சுற்றி விளையாடுவதையும், வேலைக்காரப் பெண்கள் அவளையே பார்த்துக் கொண்டு நிற்பதையும் சாரா கவனித்தாள்.
“இந்தச் சேர் பாஸுக்காக ஒதுக்கப்பட்டது, இதுல யாரும் உட்காரக் கூடாதுன்னு என்கிட்ட சொன்னாங்க. இப்போ உன்னோட மேனர்ஸ் எல்லாம் எங்க போச்சு? இல்லை பூனை உன் நாக்கைப் பிடிச்சு இழுத்துடுச்சா?” என்று சாரா நக்கலாகக் கேட்டாள்.
அங்கிருந்த வேலைக்காரப் பெண் குறுக்கிட்டு, “மேடம், நீங்க இங்க வந்துருக்க கெஸ்ட் ஆனா இவங்க எங்க பாஸோட மனைவி. இவங்கள தடுக்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இங்க இருக்குற எல்லாமே இவங்களுக்குச் சொந்தமானது தான்,” என்றாள் உறுதியாக.
“இருந்தாலும், பாஸ தவிர இதுவரைக்கும் யாரும் அந்த இடத்துல உட்கார்ந்ததில்லைன்னா, அந்த விதி எல்லாருக்கும் பொதுவானது தானே?” என்று சாரா விடாமல் பேசினாள்.
உடனே அனிக்கா முகம் மாறி, “நான் இந்தச் சேர்ல உட்காரக் கூடாதா? ஆனா நான் இங்க தான் உட்காருவேன், இல்லன்னா நான் சாப்பிடவே மாட்டேன். நான் என் ரூமுக்கே போறேன்,” என்று பிடிவாதமாக எழுந்தாள்.
சரியாக அந்த நேரத்தில் ஈஷ்வர் உள்ளே வர, அனிக்கா கோபமாக அங்கிருந்து செல்வதைப் பார்த்து அவள் மணிக்கட்டைப் பிடித்து நிறுத்தினான். அவள் தன் கையை உதறிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.
“என்ன ஆச்சு ஏஞ்சல் ? டின்னர் சாப்பிடாம எங்க போற?” என்று ஈஷ்வர் கனிவாகக் கேட்டான்.
” நான் ரொம்பக் கோபமா இருக்கேன், நான் சாப்பிட மாட்டேன். கையை விடுங்க, நான் ரூமுக்கு போறேன்.”
“என் செல்லத்துக்கு என்ன ஆச்சு? ஏன் சாப்பிட மாட்டேங்குற?” என்று ஈஷ்வர் கேட்டதும், நான்சி அங்கே நடந்ததை விளக்கினாள்.
ஈஷ்வர் அனிக்காவைப் பிடித்து மீண்டும் அந்த நாற்காலியிலேயே அமர வைத்தான். அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து, அவளது கைகளைப் பற்றி முஷ்டியில் முத்தமிட்டான்.
“நீ தான் இந்த இடத்தோட ராணி, இங்க என்ன உத்தரவு வேணாலும் போட முழு உரிமை இருக்குன்னு நான் சொன்னத மறந்துட்டியா அனிக்கா?” என்று ஈஷ்வர் சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு அனிக்கா இமைகளைச் சிமிட்டிப் பார்த்தாள். அவன் சொன்னது அவளுக்கு ஏற்கனவே ஞாபகம் இருப்பது போலத் தெரிந்தாலும், அவளது மனம் அதை வெளிக்காட்ட விரும்பாமல் அமைதியாக இருந்தது.
“அப்போ நான் இங்க உட்காரலாமா?” என்று கேட்டாள் அனிக்கா.
“நிச்சயமா மகாராணி, ராணி அனிக்கா எப்போ வேணாலும் எங்க வேணாலும் உட்காரலாம். யாருக்கு வேணாலும் ஆர்டர் போடலாம்.” என்று ஈஷ்வர் கூறினான்.
அனிக்கா குஷியாகித் தன் தலைமுடியைத் கோதிவிட்டு, “ரொம்ப நல்லது. இப்போ நான் தான் ராணி. மிஸ்டர் ஈஷ்வர், நீங்க எனக்குப் பரிமாறணும்னு நான் உத்தரவு போடுறேன். சீக்கிரம் செய்ங்க,” என்று அதிகாரமாகக் கூறினாள்.
ஈஷ்வர் சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டுப் பரிமாறத் தொடங்கினான். ஈஷ்வரும், அனிக்காவும் இப்படி இருப்பதைப் பார்த்து சாரா அடைந்த அதிர்ச்சியை நான்சி ரசித்துப் பார்த்தாள். வேலைக்காரப் பெண்கள் சாரா, ஜெர்ரி மற்றும் நான்சிக்கு பரிமாற அவர்கள் சாப்பிடத் தொடங்கினர்.
“உன் பிளான் சக்சஸ் போல இருக்கு?” என்று ஜெர்ரி மெதுவாகக் கேட்டான்.
“முழுசா இல்ல, இன்னும் நிறைய இருக்கு. நானும் அனிக்காவும் வாழ்க்கையில ஏற்கனவே எல்லாத்தையும் இழந்துட்டோம். இனிமே எதையும் இழக்கத் தயாரா இல்லை. எங்களோடது எதுவோ அது எங்களுக்கே தான். நான் பின்வாங்க மாட்டேன், அனிக்காவையும் விடமாட்டேன். இத இன்செக்யூரிட்டின்னு சொல்லு, அப்செஷன்னு சொல்லு… எனக்குக் கவல இல்ல. அவளுக்கு நான் இருக்கேன், எனக்கு அவ இருக்கா. எங்க வாழ்க்கைக்காக நான் இந்த வாட்டி எந்த எல்லைக்கும் போவேன்,” என்று நான்சி உறுதியாகச் சொன்னாள்.
டின்னர் முடிப்பதற்குள் ஜெர்ரிக்கு ஒரு அழைப்பு வர, அவன் சைகை காட்டவும் ஈஷ்வர் சாப்பாட்டைப் பாதியிலேயே விட்டுவிட்டு எழுந்தான்.
“அனிக்கா, டின்னர் முடிச்சுட்டு நான்சி கொடுக்கிற மாத்திரையைப் போட்டுக்கோ. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு, இதோ சீக்கிரம் வந்திடுறேன்.” என்று ஈஷ்வர் கூறினான்.
“எனக்குத் தூக்கம் வந்தா என்ன பண்றது?” என்று அனிக்கா கேட்டதும், “நீ நான்சி கூட உட்கார்ந்து கார்ட்டூன் இல்லன்னா பாட்டு பாரு. நான் வேலைய முடிச்சிட்டு உடனே உன்கூட வந்து ஜாயின் பண்ணிக்கிறேன், சரியா?” என்று சொல்லிவிட்டு ஈஷ்வர் அங்கிருந்து நகர்ந்தான்.
அனிக்கா தலையசைக்க, அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஈஷ்வர் ஆபீஸ் ரூமுக்கு சென்றான். டின்னர் முடிந்ததும் நான்சியும் அனிக்காவும் லிவிங் ரூமில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
டிவியில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஹீரோவும் ஹீரோயினும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சியைப் பார்த்ததும் அனிக்கா மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு நான்சியைப் பார்த்தாள்.
“என்ன அப்படிப் பார்க்குற? நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல… புருஷன் பொண்டாட்டி, ஏன் லவ் பண்றவங்க கூட இப்படித் தான் முத்தம் கொடுத்துப்பாங்க. இதெல்லாம் சாதாரணமா நடக்குறது தான். அது என்னவோ நீயும் ஈஷ்வரும் இதுவரை முத்தமே கொடுத்துக்காத மாதிரி ஒரு லுக் விடுற?” என்றாள் நான்சி.
“எனக்குத் தெரியல… ஆனா மாமா இப்போலாம் என் நெத்தியிலயும் கன்னத்துலயும் மட்டும் தான் முத்தம் கொடுக்குறாரு,” என்று அனிக்கா சொன்னாள்.
“அதை நீ அவருகிட்ட தான் கேட்கணும். வேலைய முடிச்சுட்டு அவர் ரூமுக்கு வரும்போது இதைப் பத்திக் கேளு. இப்போ இங்கேயே இரு, நான் போய் உன் மாத்திரைய எடுத்துட்டு வர்றேன்,” என்று நான்சி உள்ளே சென்றாள்.
நான்சி சொன்னதை அனிக்கா யோசித்துப் பார்த்தாள். அப்படியே மெல்ல எழுந்து ஈஷ்வரின் ஆபீஸ் ரூம் நோக்கி நடந்தாள். அங்கே வந்த சாரா, அனிக்கா ஈஷ்வரின் அறைக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு அவளைத் தடுக்க முயன்றாள்.
“மேடம், பாஸ் இப்போ வேலையில ரொம்ப பிஸியா இருப்பாரு. அதனால நீங்க இங்கேயே இருங்க, இல்லன்னா உங்க ரூமுக்கு போங்க. வேலை முடிஞ்சதும் அவரே வருவாரு. அவர் வேலையில இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணா அவருக்குப் பிடிக்காது,” என்றாள் சாரா.
“இல்ல, எனக்கு அவர இப்போவே பார்க்கணும். நான் எது வேணாலும் செய்யலாம்னு அவரே சொல்லிருக்காரு. அதனால நீ என்ன நிறுத்தாதே,” என்று அனிக்கா பிடிவாதமாகச் சென்றாள்.
அந்தப் பிரம்மாண்டமான கதவுகளுக்குப் பின்னால், ஒரு மனிதனின் கைகள் பின்னால் கட்டப்பட்டு ஈஷ்வர் முன்னால் மண்டியிட வைக்கப்பட்டிருந்தான். ஈஷ்வர் கையில் துப்பாக்கியை ஏந்தி அவன் நெற்றியில் குறி வைத்தபடி அமர்ந்திருந்தான்.
“பாஸ், இவன் தான் நம்ம கடைசி ஷிப்மென்ட் பத்தின தகவலை எதிரிகளுக்குக் கசியவிட்டது,” என்றான் ஜெர்ரி ஆத்திரமாக.
“பாஸ், ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க… இனிமே இப்படிச் செய்ய மாட்டேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, அந்தச் சரக்கை எப்படியாவது உங்ககிட்டயே கொண்டு வந்து சேர்த்துறேன் பாஸ்!” என்று அந்த ஆள் கெஞ்சினான்.
“என்ன ஒரு காமெடி. நான் உன்ன விட்டுட்டா, நீ திரும்பவும் என் எதிரிகளுக்கே போய் என் சரக்கை எனக்கே கொண்டு வந்து தருவியா?” என்று ஈஷ்வர் நக்கலாகக் கேட்டான்.
“நிச்சயமா பாஸ், என்னை நம்புங்க!” என்றான் அவன்.
“நான் இங்க என்ன காய்கறி பிசினஸா பண்றேன்னு நினைச்சியா? நீ பண்ண துரோகத்தால எனக்கு 400 கோடி நஷ்டம்டா பரதேசி!” என்று சொல்லி ஈஷ்வர் ஆத்திரத்தில் அவனை உதைத்து, தன் காலால் அவனது நெஞ்சை நசுக்கினான். துப்பாக்கியை அழுத்தத் தயாரான நேரத்தில், கதவு கைப்பிடி திரும்பும் சத்தம் கேட்டது. உடனடியாக அவன் கால்களை அந்த ஆளின் தொண்டை மீது வைத்து அவன் சத்தம் வராமல் அழுத்தினான். ஜெர்ரி அங்கிருந்த பெரிய மேஜையைத் தள்ளி, அந்த ஆளை மேஜைக்கு அடியில் மறைத்தான்.
கதவு திறக்கப்பட, அனிக்கா உள்ளே வந்தாள். பின்னாடியே சாராவும் வந்தாள். அனிக்கா ஈஷ்வரைப் பார்த்து ஒரு அழகான புன்னகையை வீசிவிட்டு, ஜெர்ரியைப் பார்த்து கை அசைத்தாள். ஈஷ்வரின் மடியில் அமர்ந்து, கால்களைச் சுருக்கிக்கொண்டு அவன் கழுத்தைக் கட்டியணைத்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். ஈஷ்வர் அவளது தலைமுடியை வருடி முத்தமிட்டான். ஜெர்ரியையும் சாராவையும் வெளியே போகச் சொல்லி கண் ஜாடை காட்டிவிட்டு, அனிக்காவை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“ஈஷ்வர் மாமா, உங்களுக்கு என்ன நிஜமாவே ரொம்பப் பிடிக்குமா?” என்று அனிக்கா கேட்டாள்.
“என் செல்லத்த எனக்கு உயிரையே விட அதிகமாப் பிடிக்கும். இப்போ ஏன் இந்தச் சந்தேகம் ஸ்வீட்டி ?” என்று கேட்டான் ஈஷ்வர்.
“நானு சொன்னா… ஒருத்தர ரொம்பப் பிடிச்சா உதட்டுல முத்தம் கொடுப்பாங்களாம். ஆனா நீங்க எப்பவும் என் நெத்தியில தான் ‘பச்சக் பச்சக்’னு முத்தம் கொடுக்குறீங்க… ஏன் மாமா உதட்டுல கொடுக்க மாட்டேங்குறீங்க?” என்று அனிக்கா கேட்டாள்.
ஈஷ்வர் அவளது இதழ்களில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அப்போது மேஜைக்கு அடியில் இருந்தவன் முனகும் சத்தம் கேட்கவே, ஈஷ்வர் தன் காலை அவன் தொண்டையில் வைத்து இன்னும் பலமாக அழுத்தினான்.
“நீ சமத்துப் பொண்ணா நான் சொல்றத கேட்டு நடந்தா மட்டும் தான் மாமா உனக்கு முத்தம் கொடுப்பேன். இனிமே சமத்தா இருப்பியா?” என்று ஈஷ்வர் கேட்க, “இருப்பேன் ஈஷ்வர் மாமா… ஆனா நான் பேசும்போது ஏதோ ஒரு சத்தம் கேட்டுட்டே இருக்கே, அது என்ன?” என்று அனிக்கா குழப்பத்தோடு கேட்டாள்.
“அது ஒன்னுமில்லைடா… இப்போ கண்ண மூடிக்கோ. நான் உனக்கு முத்தம் கொடுப்பேன், அந்தச் சத்தமும் நின்னுடும்,” என்றான் ஈஷ்வர் தன் கண்களில் ஒரு குரூரமான மின்னலுடன்.
அனிக்கா கண்களை மூடிக்கொள்ள, ஈஷ்வர் அவளைச் சற்றே தூக்கிப் பிடித்து, தனது மற்றொரு காலால் அந்த ஆளின் தலையில் ஓங்கி உதைத்தான். ஒரு நொடியில் அவன் கழுத்து எலும்பு முறியும் சத்தம் கேட்க, அவனது முனகல் என்றென்றைக்குமாக அடங்கிப்போனது.
ஈஷ்வர் அனிக்காவின் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டு வருடினான். அந்த அணைப்பில் அனிக்கா இதழோரம் புன்னகைத்தாள்.
“இப்போ அந்தச் சத்தம் கேக்குதாடா?” என்று ஈஷ்வர் மெதுவான குரலில் கேட்க, “இல்ல மாமா… நீங்க ரொம்ப நல்லவரு. நானும் உங்களுக்கு முத்தம் கொடுப்பேன்,” என்று சொல்லி அவன் இதழ்களில் இதழ் பதித்தாள் அனிக்கா.
அப்போது மேஜை மேலிருந்த பூ ஜாடியில் ஒரு வண்டு ஊர்ந்து கொண்டிருப்பதை அனிக்கா பார்த்தாள். அதைத் தன் விரல்களால் பிடிக்க முயன்றவளை ஈஷ்வர் தடுத்தான்.
“அதைத் தொடாத ஸ்வீட்டி, அது உன்ன கடிச்சுடும்,” என்றான்.
அவன் அந்த வண்டைக் கொன்றுவிட முயன்றபோது அனிக்கா அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள். “வேணாம் மாமா, அதுக்கும் உயிர் இருக்குல்ல? ஒரு உயிர நாம வதைக்கக் கூடாது. ஜெர்ரி அண்ணாகிட்ட சொல்லி இத தோட்டத்துல விடச் சொல்லலாம். நீங்க எந்த உயிருக்கும் தீங்கு செய்ய மாட்டீங்கனு இப்போ எனக்குச் சத்தியம் பண்ணுங்க ”
ஈஷ்வர் ஒரு கணம் திணறிப்போனான். கையை உயர்த்திச் சத்தியம் செய்ய முயன்றபோது, அனிக்கா அவன் கையைத் தட்டிவிட்டு அவன் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள். “எனக்குத் தெரியும் ஈஷ்வர் மாமா, நீங்க அப்படிச் செய்ய மாட்டீங்க… ஐ லவ் யூ.” என்றாள்.
“மாத்திரை சாப்பிட்டியா?” என்று அவன் கேட்க, அவள் ‘இல்லை’ என்று தலையசைத்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு லிவிங் ரூமிற்கு வந்தான். அங்கே மாத்திரையோடு காத்திருந்த நான்சியிடம் இருந்து வாங்கி அனிக்காவுக்குக் கொடுத்தான். அவள் விழுங்கியதும் அவளை அறைக்குத் தூக்கிச் சென்றான். ஜெர்ரி அவசரமாக ஆபீஸ் ரூமுக்கு சென்று, மேஜைக்கு அடியில் பிணமாகக் கிடந்தவனைத் தனது ஆட்கள் மூலம் ரகசிய வழி வழியாக அப்புறப்படுத்தினான்.
அனிக்காவைத் தூங்க வைக்கும்போது அவளது வார்த்தைகளே ஈஷ்வரின் மனதில் எதிரொலித்தன. அவள் அவன் மார்பில் தலை வைத்துத் தூக்கத்தில் எதையோ அரற்றிக் கொண்டிருந்தாள்.
“பாட்டி… ரத்தம்… மாமா…” எனத் தெளிவில்லாமல் அவள் சொன்ன வார்த்தைகள் ஈஷ்வரை அதிர வைத்தன. அவளது பயத்தைப் போக்கத் தலைமுடியைக் கோதிவிட்டான்; மெல்ல அவள் அமைதியாக உறங்கினாள். அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு, நான்சியையும் ஜெர்ரியையும் தன் அறைக்கு வரச் சொன்னான்.
“என்ன ஆச்சு அண்ணா? ஏன் கூப்பிட்டீங்க? அனு கூட நான் இருக்கணுமா?” என்று நான்சி கேட்டாள்.
“என்ன நடக்குது இங்க நான்சி? அவ ஏன் திடீர்னு சம்பந்தமில்லாத விஷயத்த பேசுறா?” என்று ஈஷ்வர் குழப்பத்துடன் கேட்டான்.
“அண்ணா, அவ குழந்த இல்ல ஆனா நீங்க ஏன் அவளை இன்னும் குழந்தை மாதிரியே நடத்திட்டு இருக்கீங்க?” என்று நான்சி நேரிடையாகக் கேட்டாள்.
“ஏன்னா இப்போ அவ எனக்குக் குழந்த தான். அவ நிலைமைய பாரு நான்சி, நம்ம கூட இருந்தா மட்டும் தான் அவ நிம்மதியா இருக்கா. மத்த எல்லாத்தையும் பார்த்துப் பயப்படுறா.”
“டாக்டர் சொன்னதை மறந்துட்டீங்களா? அவளுக்கு ஞாபக மறதியோ இல்ல வேற நோயோ கிடையாது. அவளுக்குத் தேவை அன்பு… ஒரு புருஷனா நீங்க கொடுக்க வேண்டிய அன்பு மட்டும் தான் அவள இந்த நிலையில இருந்து வெளியே கொண்டு வரும். நீங்க அவள இப்படிச் செல்லம் கொடுத்துக் குழந்தையாவே வச்சிருந்தா, அவ கடைசி வரைக்கும் இப்படியே தான் இருப்பா,” என்றாள் நான்சி.
“அப்போ என்ன என்ன பண்ணச் சொல்ற? அவளோட இந்த நிலையைப் பயன்படுத்தி அவகிட்ட நடந்துக்கச் சொல்றியா?” என்று ஈஷ்வர் ஆத்திரமாகக் கேட்டான்.
“அவ உங்க பொண்டாட்டி அண்ணா… உங்க பொண்டாட்டிகிட்ட நீங்க நெருக்கமா இருக்குறது ஒன்னும் தப்பான விஷயம் கிடையாது. நான் டாக்டர்கிட்ட பேசினேன். நீங்க அவகிட்ட அன்யோன்யமா இருக்குறதுல எந்தப் பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாரு. சொல்லப்போனா, அது தான் அவளோட ஆழ்மனச தட்டி எழுப்பி நிஜ உலகத்துக்குக் கொண்டு வரும். நெருக்கம்னா வெறும் உடல் உறவு மட்டும் இல்ல, அது உங்களுக்கு தெரியாதது இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் அவ கண்ணுல உங்க மேல இருந்த காதல நான் பார்த்திருக்கேன்… அத திரும்பக் கொண்டு வாங்க. அவ கண்ணுல இருக்குற பயத்தை விரட்டுங்க. எங்க அனிக்கா எங்களுக்குத் திரும்ப வேணும், அதுக்கு முதல்ல அவள குழந்தையா பார்க்கிறதை நிறுத்துங்க. அவளுக்குப் புரிய வைங்க, நானும் அவகிட்ட பேசுறேன். உங்க அனிக்கா உங்களுக்குத் திரும்ப வேணாவா?” என்று நான்சி சொன்னாள்.
ஈஷ்வரின் கண்ணோரத்தில் ஒரு துளிக் கண்ணீர் எட்டிப் பார்த்தது. நான்சி அதைத் துடைத்துவிட்டாள். “நீங்க ரெண்டு பேரும் முன்னாடி மாதிரி சந்தோஷமா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். நீங்க ரெண்டு பேரும் இப்படித் தவிச்சிட்டு இருக்கும் போது, என்னால மட்டும் நிம்மதியா இருக்க முடியாது,” என்றாள்.
“பாஸ், அவ சொல்றது தான் சரி. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இது நடக்குறது எல்லாருக்கும் நல்லது. நீங்க எங்க முன்னாடி தைரியமா இருக்குற மாதிரி காட்டிக்கிட்டாலும், உங்க மனசுல இருக்குற வலி எங்களுக்குத் தெரியுது,” என்றான் ஜெர்ரி.
“நாங்க சொன்னத யோசிச்சுப் பாருங்க. குட் நைட்,” என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் சொன்ன வார்த்தைகள் ஈஷ்வரின் மனதைக் குடையத் தொடங்கின. அனிக்காவைப் பார்த்தபடி அவன் மௌனமாக அமர்ந்திருந்தான்.
