அன்று முழுவதும் அனிக்கா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டே இருந்தாள். நள்ளிரவில் தன் வேலை விஷயமாக வெளியே செல்ல வேண்டும் என்று ஈஷ்வர் சொன்னது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவன் அவளுக்கு உணவு ஊட்டிவிட்டான், அவளோடு சேர்ந்து படம் பார்த்தான், விளையாடினான், அவள் கேட்ட அனைத்தையும் செய்தான். ஆனாலும், அவனைத் தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவளது பிடிவாதம் மட்டும் குறையவே இல்லை. எப்படியாவது சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன் என்று அவன் பலமுறை சத்தியம் செய்தான். கடைசியாக அவளுக்கு மருந்துகளைக் கொடுத்து, அவள் உறங்கியதை உறுதி செய்த பிறகு ஈஷ்வர் லிவிங் ரூமிற்கு வந்தான். அங்கே ஜெர்ரி, ஜேம்ஸ் மற்றும் நான்சி அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.
“ஜெர்ரி, நான்சி… அனிக்காவ பத்திரமா பார்த்துக்கோங்க. அவள உங்களால சமாளிக்க முடியலன்னா, அவளைத் தூங்க வைங்க… என்னோட ஷர்ட் (Shirt) ஒன்னு எடுத்து அவகிட்ட கொடுங்க. அதைப் பிடிச்சுக்கிட்டே அவ தானாத் தூங்கிடுவா. அவ ஐஸ்கிரீமோ இல்ல சாக்லேட்டோ கேட்டா வேண்டாம்னு சொல்லாதீங்க, சாப்பிடட்டும்,” என்றான் ஈஷ்வர் கவலையுடன்.
“அண்ணா, ரிலாக்ஸா இருங்க… நாங்க அவள பார்த்துக்கிறோம். நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அனிக்காவுக்கும் சரி, எங்களுக்கும் சரி… நீங்க எவ்வளவு முக்கியம்னு உங்களுக்குத் தெரியும். எங்க வாழ்க்கையே உங்கள நம்பித் தான் இருக்கு, அதனால எந்த முடிவு எடுத்தாலும் யோசிச்சு பண்ணுங்க. நாங்க உங்களுக்காகக் காத்திட்டு இருப்போம். அங்கிருந்து வெளியே வந்ததும் எங்களுக்கு ஒரு மெசேஜ் பண்ணிடுங்க,” என்று நான்சி உருக்கமாகச் சொன்னாள்.
“பாஸ், நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு,” என்றான் ஜெர்ரி.
“ரொம்ப நல்லது. அப்போ நாங்க கிளம்புறோம், பார்த்துக்கோங்க,” என்று சொல்லிவிட்டு ஈஸ்வரும் ஜேம்ஸும் பின்கதவு வழியாக வெளியேறினார்கள். இதையெல்லாம் சாரா அமைதியாக மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஈஷ்வரின் திட்டப்படி, அவனது கேங்கைச் சேர்ந்த 26 பேர் ஒரே மாதிரியான உடை அணிந்து கடற்கரையை அடைந்தனர். அங்கே ரகசிய குறியீடுகளை (Code) பரிமாறிக்கொண்டு தங்கள் அடையாளத்தை உறுதி செய்த பிறகு, வில்சன் ஏற்பாடு செய்திருந்த படகில் ஏறினர்.
அதே சமயம், ஈஷ்வரும் ஜேம்ஸும் கடற்கரையின் வேறொரு பகுதிக்குச் சென்று, தங்கள் ஆட்களைப் போலவே உடை அணிந்து கொண்டு ஒரு சாதாரண படகில் ஏறினார்கள். அவர்கள் அந்தத் தீவை அடைந்தபோது, அங்கே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவதைப் பார்த்தனர். அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருந்தது.
தங்கள் ஆட்கள் செல்லும் படகின் சிக்னலைக் கவனித்த ஜேம்ஸ், பாதுகாப்பான இடைவெளியில் அவர்களைப் பின்தொடர்ந்தான். 26 ஆட்களில் 24 பேர் மட்டுமே மீட்டிங் நடக்கும் இடத்திற்குள் சென்றனர், 2 பேர் ரகசியமாக அங்கிருந்து நழுவி வெளியே கண்காணிப்பில் ஈடுபட்டனர். எல்லா கேங் தலைவர்களும் உள்ளே நுழைந்ததும் சிக்னல் கொடுக்குமாறு ஈஷ்வர் தன் ஆட்களுக்கு உத்தரவிட்டிருந்தான். சிக்னல் கிடைத்ததும், ஈஷ்வரும் ஜேம்ஸும் தங்கள் கண்களைத் தவிர முகம் முழுவதையும் மறைக்கும்படி மாஸ்க் அணிந்துகொண்டு உள்ளே நுழைந்தனர்.
அது ஒரு பத்து மாடி கட்டிடம். மீட்டிங் பத்தாவது மாடியில் உள்ள ஒரு பெரிய ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே அறைகள் எதுவும் இல்லை, அது ஒரு பிரம்மாண்டமான கூடம். ஈஷ்வரும், ஜேம்ஸும் தங்கள் ஆட்களுடன் ஓரமாக நின்றபடி, அங்கே இருந்த பெரிய மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்த கேங் தலைவர்களைக் கவனித்தனர். மேஜை முழுவதும் விதவிதமான உணவுகளும் மதுபானங்களும் நிரம்பி வழிந்தன. ஒவ்வொரு கேங்கில் இருந்தும் ஐந்து பேர் மட்டுமே அந்த ஹாலுக்குள் அனுமதிக்கப்பட்டனர், மற்றவர்கள் அனைவரும் வேறு தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வில்சனின் வலது கையாள் ஸ்மித் முன்னால் வந்து, வண்ணமயமான உடையில் முகம் தெரியாமல் மாஸ்க் அணிந்து நின்றிருந்த கோஸ்ட் கேங்கைப் பார்த்தான்.
“இந்த ஹாலுக்குள்ள அஞ்சு பேருக்கு மட்டும் தான் அனுமதி. மத்தவங்க எல்லாரும் கீழ இருக்குற மாடிக்கு அனுப்பி வைக்கப்படுவாங்க. உங்க லீடர் மட்டும் முன்னாடி வந்து சீட்ல உட்காரலாம், மத்தவங்க வெளியே போகலாம். இப்போ, இதுல யாரு உங்க லீடர்… அதாவது யாரு அந்த கோஸ்ட்டுன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று ஸ்மித் கேட்டான்.
யாரும் பதில் பேசவில்லை. அவர்களில் ஒருவன் மட்டும் அமைதியாக முன்னால் வந்து, கோஸ்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான். மற்ற ஆட்கள் வெளியே செல்வதை ஸ்மித் கவனித்தான்; இப்போது ஐந்து பேர் மட்டும் அந்தத் தலைவனுக்குப் பின்னால் நின்றிருந்தனர். ஸ்மித் மேஜை அருகே சென்று மற்ற கேங் தலைவர்களை வரவேற்றான்.
“இங்க வந்திருக்கிற எல்லாருக்கும் நன்றி. இன்னும் கொஞ்ச நேரத்துல வில்சன் நம்ம கூட வந்து ஜாயின் பண்ணிப்பார்,” என்றான் ஸ்மித்.
அந்த ஹாலுக்குள் முகமூடி அணிந்த ஒருவன் கம்பீரமாக நுழைந்து அங்கிருந்த பிரதான நாற்காலியில் அமர்ந்தவன்,கோஸ்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தவனை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தான். அதன் பின்னர் தன்னைச் சுற்றி அமர்ந்திருந்த மற்ற கேங் லீடர்களை ஒருமுறை நோட்டம் விட்டான்—அவர்கள் அனைவரும் கோஸ்ட்டை போட்டுத்தள்ள சம்மதித்த துரோகிகள். பிறகு தன் பார்வையை கோஸ்ட் பக்கம் திருப்பினான்.
“இந்த மீட்டிங் எதுக்குத் தெரியுமா? நாம பிசினஸ் பண்றதுக்குன்னு சில புது ரூல்ஸை கொண்டு வரப் போறேன். முக்கியமா, அந்த ரஷ்யன் ஆர்டர நானே எடுக்கப்போறேன். என் குறுக்கே எவனாவது வந்தா அவ்ளோதான்!” என்று அதிகாரம் செய்தான் வில்சன்.
அதைக் கேட்டு கோஸ்ட் அசையவில்லை. “இங்க பாரு தம்பி… புதுசா எந்த ரூல்ஸும் இப்போதைக்கு தேவையில்ல. பழைய ரூல்ஸ் அப்படியே தான் இருக்கும். கோஸ்ட் கேங்ல கடைசி ஆள் உயிரோட இருக்கிற வரைக்கும் அலெக்சாண்டர் கோஸ்ட்டோட அதிகாரம் தான் இங்க நடக்கும். அந்த ரஷ்யன் ஆர்டர் பக்கம் எவனாவது கை வச்சா… அப்புறம் அவனுக்கு கை இருக்காது. இது வார்னிங் இல்ல, நிஜம்” என்றான் மிகத் தெளிவாக.
வில்சன் நக்கலாகச் சிரித்தான். “உலகமே அந்த அலெக்சாண்டரோட வாரிச பாக்க துடிச்சிட்டு இருக்கு. நீ என்னடான்னா இப்படி ஓப்பனா பேசாம முகமூடி போட்டு சீன் காட்டிட்டு இருக்க? தைரியம் இருந்தா உன் முகத்தைக் காட்டிட்டு பேசுடா!” என்றான்.
“ஏய்… மேட்டருக்கு வா. எதுக்கு எல்லாரையும் இங்க கூப்பிட்ட? இந்த மாதிரி மொக்க மீட்டிங்ல டைம் வேஸ்ட் பண்ற பழக்கம் எனக்கில்லை” என்று கோஸ்ட் சலித்துக் கொண்டான்.
“உனக்கு இது மொக்க மீட்டிங் தான். ஆனா எங்களுக்கு அப்படி இல்லையே… ஏதோ ஒரு தைரியத்துல உள்ள வந்துட்ட. ஆனா வெளிய நின்ன மத்த கேங் ஆளுங்க இருபது பேரை நான் ஏன் தடுத்து நிறுத்தி, அவங்ககிட்ட இருந்த ஆயுதத்தை எல்லாம் பிடுங்கி வச்சிருக்கேன்னு நினைக்கிற?” என்று வில்சன் ஏளனம் செய்தான்.
“உன்ன நீ ரொம்ப பெரிய புத்திசாலினு நினைச்சிட்டு இருக்கியோ? சரி விடு… இப்போ என் ஆளு ஒருத்தனை உள்ள கூப்பிடுறேன். தைரியம் இருந்தா உங்க ஆளுங்க எல்லாரும் சேர்ந்து அவனை அடிச்சுப் பாருங்க. அவன் ஒருத்தன நீங்க ஜெயிச்சிட்டா… நான் இப்போவே உன் கால்ல விழுந்து சரண்டர் ஆகுறேன்!” என்று கோஸ்ட் சவால் விட்டான்.
வில்சன் மற்ற கேங் லீடர்களைப் பார்த்து சைகை செய்தான். கோஸ்ட்டை முடித்துவிட்டு அந்த இடத்தைப் பிடிக்கக் காத்திருந்த ஆட்கள் வெறிகொண்டு முன்னே வந்தனர். கோஸ்ட் தன் ஆளைப் பார்க்க, அவன் முன்னே வந்து நின்றான். அவன் கண்ணில் ஒரு கொலைவெறி மின்னியது.
அவன் முன்னே வந்த முதல் ஆளின் வயிற்றில் ஒரு குத்துவிட்டான். அடி தாங்க முடியாமல் அந்த ஆள் சிறுநீர் கழிக்காத குறையாக அங்கேயே சரிந்தான். அடுத்த சில நிமிடங்கள் அந்த இடமே ரணகளமானது. தன்னைத் தாக்க வந்தவர்களைப் பந்தாடினான் அவன். ஒருகட்டத்தில் மூன்று பேர் அவனைச் சுற்றிக் கொண்டு பிடித்துக்கொள்ள, அவன் ஒரு நக்கலான சிரிப்புடன் சோம்ர்சால்ட் (Somersault) அடித்து விடுபட்டான். அவனைப் பிடித்திருந்த இருவரும் தூக்கி எறியப்பட, பின்னாலிருந்து குத்த வந்தவனை ஒரே உதையில் தெறிக்கவிட்டான்.
அங்கிருந்த கேங் லீடர்கள் மிரண்டு போய் நின்றார்கள். தரையில் விழுந்து கதறிக்கொண்டிருந்த தங்கள் ஆட்களைப் பார்த்தபோது அவர்களின் தொண்டை காய்ந்தது. கோஸ்ட் கைதட்டிப் பாராட்டினான். வில்சன் ஆத்திரத்தில் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து கோஸ்ட் நோக்கி நேராக நீட்டினான்.
ஆனால், அத்தனை பேரையும் அடித்துத் துவைத்த அந்த மர்ம மனிதன், மின்னல் வேகத்தில் தன் துப்பாக்கியை எடுத்து வில்சனின் கையை நோக்கிச் சுட்டான்.
“ஷோ எப்படி இருந்துச்சு ? சரி… அலெக்சாண்டர் கோஸ்ட்டோட வாரிச பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டியே… காட்டவா?” என்று கோஸ்ட் கேட்டான்.
அவன் மெதுவாகத் தன் முகமூடியைக் கழற்றி, ஒரு வில்லத்தனமான சிரிப்பைச் சிந்தினான். வில்சன் பல்லைக் கடிக்க ஸ்மித் பதற்றத்துடன் முன் வந்தான்.
” ஜேம்ஸ் ??? அப்போ உங்க லீடர் பெரிய கோழையா? அவன காப்பாத்திக்க ஆள அனுப்பிட்டு அவன் எங்கேயோ ஒளிஞ்சிருக்கானா?” என்று கத்தினான் வில்சன்.
நாற்காலியில் இருந்த ஜேம்ஸ் எழுந்து நின்று அவர்களின் ஆதரவு கேங் லீடர்களை அங்கிருந்து கிளம்பச் சொன்னான். அவனது ஆட்கள் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இப்போது அந்த மர்ம மனிதன் வில்சனை நோக்கி நடந்து வந்து, அவனை ஒரே உதையில் கீழே தள்ளி அவன் கழுத்தில் தன் காலை அழுத்தமாக வைத்தான்.
மெதுவாகத் தன் முகத்திலிருந்த மீதமிருந்த மறைப்பையும் விலக்கினான். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். “ஈஷ்வர் வின்சென்ட்” – என்று பலரும் முணுமுணுத்தனர்.
“நீ… நீ அனிக்காவோட புருஷன் ஈஷ்வர் வின்சென்ட் தானே? இந்தியால இருந்து வந்தவன் தானே நீ?” என்று ஸ்மித் அதிர்ச்சியில் கேட்டான்.
ஈஷ்வர் தன் துப்பாக்கியை ஸ்மித் நெற்றியில் வைத்துப் பூட்டினான். “ஈஷ்வர் வின்சென்ட் கோஸ்ட்! இப்போ சொல்லு… வில்சன் எங்க இருக்கான்?” என்று அதிகாரமாக கேட்டான் ஈஷ்வர்.
“டேய்… உன் காலுக்கு அடியில கெடக்குறானே அவன் தான் வில்சன். முதல்ல அவன் மேல இருந்து காலை எடு. இல்லன்னா கீழ இருக்கிற உன் ஆளுங்க ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டாங்க!” என்று ஸ்மித் மிரட்டினான்.
ஈஷ்வர் வின்சென்ட் அவனை ஏளனமாகப் பார்த்து புன்னகைத்து, “ட்ரை பண்ணிப் பாரேன்… ” என்றான்.
ஸ்மித் சற்றும் யோசிக்காமல் தன் ஆட்களுக்கு போன் போட்டான். “ஸ்பாட்ல இருக்கிற ஈஷ்வரோட ஆளுங்க எல்லாரையும் இப்போவே போட்டுத்தள்ளுங்கடா!” என்று உத்தரவிட்டு, காரியம் முடிந்தது என்ற போன் அழைப்பிற்காகக் காத்திருந்தான். ஆனால், அடுத்த நொடியே கதவு திறக்கப்பட, ஈஷ்வரனின் ஆட்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அனைவரும் ஈஷ்வரின் முன்னால் தலைவணங்கி நின்றனர். ஜேம்ஸ் உடனடியாகத் தன் ஆட்களுக்கு சைகை செய்ய, வில்சனுடன் சேர்ந்து சதி செய்த மத்த கேங் லீடர்கள் அனைவரும் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
“உன் முகத்த வெளிய காட்டிட்ட… இதுக்கு அப்புறம் நீ ஒரு பிசினஸ்மேனா நிம்மதியா வாழ முடியும்னு நினைக்கிறியா?” என்று ஸ்மித் எகத்தாளமாகக் கேட்டான்.
“உன் பாஸை விட உனக்கு கொஞ்சம் அறிவு ஜாஸ்திதான் போல. இங்க பாரு… இங்க ஒரு டிவி இருக்கே, அதுல ஒரு இன்ட்ரஸ்டிங்கான மேட்டர் ஓடிட்டு இருக்கு. பாக்கலாமா?” என்று ஈஷ்வர் நக்கலாகக் கேட்டான்.
ஜேம்ஸ் சிரித்துக்கொண்டே டிவியை ஆன் செய்தான். அதில் ‘விடிவி’ (VTV) சேனல் ஓடிக்கொண்டிருந்தது. லண்டனில் நடக்கும் ஜெர்ரி மற்றும் நான்சியின் திருமணம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அங்கே ஈஷ்வரம்,அனிகாவும் சிரித்தபடி மணமக்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தனர். ஜேம்ஸ் சேனல்களை மாற்றினான்; எல்லா நியூஸ் சேனல்களிலும் அதே செய்திதான் ‘லைவ்’ ஆக ஓடிக்கொண்டிருந்தது.
“வாவ்! பெரிய பிசினஸ்மேன் ஈஷ்வர் இப்போ லண்டன்ல அவர் தங்கச்சி கல்யாணத்துல பிஸியா இருக்காரு. அப்படி இருக்கும்போது, அவர் எப்படி இங்க கோர்சிகால (Corsica) உங்களோட மீட்டிங்ல இருக்க முடியும்? எனக்கு எப்பவும் சர்ப்ரைஸ் குடுக்கிறதுனா ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு என்ன கொல்லணும்னு நினைச்ச எவனுமே இந்த இடத்த விட்டு உயிரோட போகப்போறது இல்ல. அப்படி இருக்கும் போது, நான் தான் அந்த ‘கோஸ்ட்டுன்னு’ உலகத்துக்கு யாரு சொல்லப்போறா?” என்று கண்கள் சிவக்கக் கேட்டான் ஈஷ்வர்.
ஈஷ்வர் ஒரு சிக்னல் கொடுக்க, பிடிபட்டிருந்த அத்தனை கேங் லீடர்களும் அடுத்த சில வினாடிகளில் சுட்டுத் தள்ளப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தவர்களைப் பார்த்த ஸ்மித்தும், ஈஷ்வரின் காலுக்கு அடியில் கிடந்தவனும் மரண பயத்தில் நடுங்கினர்.
“இப்போ இங்க மிஞ்சியிருக்கிறது நீயும், என் காலுக்கு அடியில கெடக்கிற இந்த நாயும் தான். என் லண்டன் எஸ்டேட்டுக்கு வெளிய வில்சன் இந்த ஷோவை நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருப்பான். அவனுக்கு ஒரு சின்ன கிப்ட் அனுப்பலாமா?” என்று சொல்லிக்கொண்டே ஸ்மித்தின் தலையில் சுட்டான் ஈஷ்வர்.
பிறகு தன் காலுக்கு அடியில் இருந்தவனின் கழுத்தில் கத்தியை வீசி எறிந்து, தன் காலால் அந்த கத்தியை இன்னும் ஆழமாக அழுத்தினான். அந்த இடமே நிசப்தமானது. பிறகு ஜேம்ஸிடம், “வெளிய இருக்கிற மத்த கேங் ஆளுங்களை உள்ள வரச் சொல்லு” என்று சொல்லிவிட்டு மீண்டும் முகமூடியை அணிந்துகொண்டான்.
உள்ளே வந்த மற்ற கேங் தலைவர்கள் பிணங்களைப் பார்த்து பெரிய ஆச்சரியம் அடையவில்லை; இது நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால், அந்த கொலைகளின் கொடூரம் அவர்களைப் பயப்படுத்தியது. டேபிளுக்கு முன்னால் கைகளை பாக்கெட்டில் வைத்தபடி நின்றிருந்த அந்த முகமூடி மனிதனையும், டேபிளில் ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த கத்தியையும் துப்பாக்கியையும் அவர்கள் மிரட்சியுடன் பார்த்தனர். ஈஷ்வர் கைகாட்ட, அனைவரும் அமர்ந்தனர்.
மொராக்கோ கேங் லீடர் மெதுவாக எழுந்து ஈஷ்வர் முன்னால் வந்தான். “சீப் ( chief ) நீங்க தான் எப்பவும் எங்க கிங். நீங்க போடுற ரூல்ஸை நாங்க அப்படியே ஃபாலோ பண்ணுவோம். இந்த மெயின் சீட்ல உட்கார உங்களுக்கு மட்டும் தான் தகுதி இருக்கு. அப்படியே… உங்க முகத்தை ஒருவாட்டி காட்ட முடியுமா?” என்று வினயமாகக் கேட்டான்.
“என் முகத்தை நீ பாக்கணும்னு அவசியம் இல்லை. என் அதிகாரத்த காட்ட எனக்கு இந்த நாற்காலியும் தேவையில்லை. என் பேச்சை விட என் செயல்கள் தான் இனி அதிரடியா இருக்கும். எவனாவது என் அடையாளத்த தெரிஞ்சுக்கவோ இல்ல எனக்கு எதிரா நடக்கவோ நினைச்சா… அவனுக்குப் பரிசா கிடைக்கிறது மரணம் மட்டும்தான்!” என்று கணீர் குரலில் சொன்னான் ஈஷ்வர்.
“ஸாரி கிங்… முகம் காட்ட வேணாம். நீங்க சொல்றபடியே நாங்க நடப்போம். உங்களுக்கு எதிரா செயல்படுற எண்ணம் எங்களுக்கு எப்பவுமே இல்லை, இனிமேலும் இருக்காது” என்று மொராக்கோ லீடர் பம்மி நின்றான்.
“ரூல்ஸ்ல ஏதாவது மாற்றம் வேணுமா?” என்று ஈஷ்வர் கேட்க, அனைவரும் “வேண்டாம்” என்பது போல தலையசைத்தனர்.
“குட்… மீட்டிங் முடிஞ்சது. கிளம்பி உங்க பிசினஸ கவனிங்க. உங்க ஆட்கள வச்சு இந்த இடத்தை ஒரு தடையமும் இல்லாம கிளீன் பண்ணுங்க. இந்த பிணங்கள எல்லாம் கடல்ல வீசிடுங்க” என்று கட்டளையிட்டான்.
“பாஸ்… ஸ்மித் உடம்பையும், இந்த வில்சன் வேஷத்துல இருந்தவன் உடம்பையும் என்ன பண்ணட்டும்?” என்று ஜேம்ஸ் கேட்டான்.
“நம்ம ஆளுங்க சிலரை வச்சு, இதை அப்படியே வில்சனோட இடத்துக்கே அனுப்பி வை. அவன் இதை நல்லா ரசிச்சுப் பாக்கட்டும். சரி, கிளம்பலாம்!” என்று சொல்லிவிட்டு ஈஷ்வர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே நடக்க, அங்கிருந்த கேங் தலைவர்களும் ஆட்களும் மண்டியிட்டுத் தலைவணங்கினர். ஜேம்ஸ் தன் ஆட்களுக்கு அடுத்தடுத்து ஆர்டர்களைப் பிறப்பித்தபடி பின்னால் சென்றான்.
லண்டனில், ஈஷ்வரின் எஸ்டேட்டுக்கு வெளியே வில்சன் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் எஸ்டேட் வாசலில் ஏகப்பட்ட மீடியா வண்டிகள் நின்றிருப்பதைப் பார்த்ததும் உள்ளே நுழையாமல் ஆத்திரத்தில் ஸ்டீயரிங்கை ஓங்கி குத்தினான். ஸ்மித்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான்; ஆனால் சிக்னல் பாதியிலேயே துண்டிக்கப்பட்டது.
தன் இடத்திற்குத் திரும்பி வந்து டிவியை ஆன் செய்தான். ஈஷ்வரின் எஸ்டேட்டில் என்ன நடக்கிறது என்று நேரலையில் பார்த்தான். அங்கே ஜெர்ரி-நான்சி கல்யாணத்தில் ஈஷ்வரம், அனிக்காவும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான்.
“அவன் இங்க கல்யாணத்துல இருக்கான்னா… அப்போ அந்த கோஸ்ட் யாரு? அப்போ ஈஷ்வர் கோஸ்ட் இல்லையா? அந்தப் பரதேசி யாருன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியலையே… செம தில்லாலங்கடி ஆளா இருப்பான் போலயே!” என்று கத்தினான் வில்சன்.
உடனே சாட்டிலைட் போன் எடுத்து ஸ்மித்தை அழைத்தான் ஆனால் பதில் கிடைக்கவில்லை. கோஸ்ட்டை கொல்ல சம்மதித்த மற்ற தலைவர்களை அழைத்தான்; ஒருத்தனும் போன் எடுக்கவில்லை. கடைசியில் மொராக்கோ கேங் லீடரை அழைத்தான். அவர் உடனே பதில் சொன்னார்.
“மீட்டிங் முடிஞ்சதா? என்னாச்சு அங்க?” என்று படபடப்பாகக் கேட்டான் வில்சன்.
“நாங்க எத வார்னிங் பண்ணோமோ அதுதான் நடந்துச்சு. கோஸ்ட் அங்க வந்தாரு. அலெக்சாண்டர் ஏன் அவர வாரிசா அறிவிச்சாருனு இப்போ புரியுது. மனுஷன் மொத்த பேரையும் கையாண்ட விதம்… நிஜமாவே அவர் தான் கிங்!” என்றான் மொராக்கோ லீடர்.
” வாயை மூடுடா! ஸ்மித் எங்கன்னு சொல்லு?” என்று எகிறினான் வில்சன்.
“இனிமே ஸ்மித்துன்னு ஒருத்தன் கிடையாது. அந்தப் போலி வில்சனும் கிடையாது. உன் கூட கை கோர்த்த எல்லா கேங் தலைவர்களையும், உன் ஆட்களையும் அந்த கோஸ்ட் போட்டுத் தள்ளிட்டாரு!” என்றான் மொராக்கோ லீடர்.
“யாரு அவன்? அவன் முகத்தைப் பாத்தியா?” என்று வில்சன் உடனே கேட்டான்.
“அவர் முகத்த பார்த்த எவனுமே இப்போ உயிரோட இல்ல. நான் பாக்காததால தப்பிச்சேன். அந்த அலெக்சாண்டர விட இவன் ரொம்ப டேஞ்சர். இவன்கிட்ட வச்சுக்காத. உனக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருக்காரு… ஸ்மித் பாடி வந்துட்டு இருக்கு, வாங்கி வச்சுக்கோ. இதான் நீ எனக்கு பண்ற கடைசி போனா இருக்கட்டும். இனிமே அவருக்கு எதிரா நான் வரமாட்டேன்” என்று சொல்லி போனை கட் செய்தான் மொராக்கோ லீடர்.
வில்சன் அப்படியே சோபாவில் சரிந்தான். அவன் கண்கள் டிவியையே பார்த்துக் கொண்டிருந்தன. அங்கே ஈஷ்வர் சிரித்துக்கொண்டே, ஜெர்ரியும் நான்சியும் மோதிரம் மாற்றிக் கொள்வதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
