க்ரிஷ் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது மைரா அங்கு வந்ததும், அவன் அவளுக்கு கொஞ்சம் தண்ணீரை ஊற்றினான்.
“ நீ எப்போவாச்சும் என்ன உன்னோட பெஸ்ட் பிரெண்டா நடத்தி இருக்கியா க்ரிஷ் ? “ என்று மைரா கேட்டதும், குழப்பமடைந்த க்ரிஷ், “ என்னது? மைரா, நான் ரோஷினிய செலெக்ட் பண்ணி தப்பு பண்ணிட்டேன் அதுக்காக ரொம்ப வருந்துறேன் ஆனா இது மாதிரி கேள்வி கேட்டு என்ன காயப்படுத்தாத ப்ளீஸ் “ என்று க்ரிஷ் பதில் சொன்னான்.
“ எனக்குத் தெரியாம நீ எப்போவாச்சும் எனக்காக பரிசு இல்ல சாக்லேட் வாங்கி என் வீட்ல இல்ல என் ரூம்ல வெச்சுருக்கியா ? “ என்று மைரா கேட்டாள்.
“ உனக்குத் தெரியாம நான் ஏன் செய்ய போறேன் ? சாக்லேட் அப்புறம் ஐஸ்கிரீம் வாங்க நான் எப்பவும் உன்ன என்கூட கூட்டிட்டு போவேன், நாம ஒன்னா தான் ஷாப்பிங் செய்வோம் “ என்று க்ரிஷ் பதில் சொன்னதும், “ என் பிறந்த நாள் அன்னைக்கு எனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி நான் ஹாஸ்பிடல்ல இருந்தேன். அப்போ நீ எனக்கு பூ வாங்கிட்டு வந்தியா ? “ என்று மைரா மீண்டும் கேட்க, “ இல்ல, ஆனா இதை ஏன் என்கிட்ட கேட்குற ? மைரா, என்ன ஆச்சு ? “ என்று க்ரிஷ் பேரும் குழப்பத்துடன் கேட்டான்.
மைரா கோபத்துடன் திரும்பி அவன் கழுத்தை நெரிக்கத் தயாராக அவன் காலரை பிடித்தாள்.
“ நீ எனக்கு எந்த பரிசும் வாங்கலனா என் பிறந்த நாள் அன்னைக்கு பரிசு கொடுத்ததுக்கு நான் நன்றி சொன்ன அப்போ நீ ஏன் மறுக்கல?” என்று மைரா கத்தினாள். அதற்கு க்ரிஷ், “ நான் கொடுத்த ரோஜாவுக்கும் சாக்லேட்டுக்கும் நீ நன்றி சொல்றனு நினைச்சேன் “ என்று அவளிடம் கூறினான்.
“ பொய் சொல்லாத, உனக்கு நன்றி சொன்ன அப்போ நான் கையில இருந்த வாட்ச், ஊதா கலர் புடவை இன்னும் நிறைய பொருட்கள காட்டினேன். அப்போ அதெல்லாம் நீ கொடுக்கலனு ஏன் சொல்லாம இருந்த ? “ என்று மைரா அவனிடம் கோவத்தோடு கேட்டாள்.
“ உன் பிறந்தநாளுக்கு நான் பரிசு வாங்குனது இல்ல, ஏன்னா நாம ஒன்னா தான் ஷாப்பிங் செய்வோம் அதனால அது அவசியம்னு எனக்கு தோணல. நான் உனக்காக பரிசு வாங்க மாட்டேன் அதனால அம்மாவோ அப்பாவோ என் சார்பாக உனக்கு கொடுத்துருப்பாங்க நெனச்சேன். உனக்கு அந்த பரிசு எல்லாம் ரொம்ப புடிச்சு இருந்துச்சு அதனால நான் மறுக்கல. நீ தான் என் ஒரே friend, உன் கவனம் முழுக்க என் மேல மட்டும் இருக்கணும்னு நெனச்சேன் அதனால எதையும் மறுக்கல “ என்று க்ரிஷ் கத்தினான்.
“ அப்போ அதனால தான் நீ கெட்சப் பத்தி என்கிட்ட பொய் சொல்லி இருக்க, அதனால நாங்க ஒன்னா பழகாம தடுத்து இருக்க. நீ உன் சொந்த அண்ணன் மேலையே பொறாமைப்பட்டு இருக்க, எங்கள பிரிச்சு வைக்க எல்லாமே பண்ணி இருக்க. அவர் எனக்காக என்ன செய்தாலும் அத நீ பண்ணதா சொல்லி இருக்க. என்கிட்ட வம்பு பண்ணவங்க, என்ன கிண்டல் பண்ணவங்கள அடிச்சது நீ தான்னு நெனச்சேன் ஆனா அதுவும் பொய். உனக்கு இருந்த பொறாமை உன்ன குருடாக்கிடுச்சு. இது தான் உன்னோட நட்பா ? எல்லாத்தையும் கண்மூடித்தனமா உன்ன நம்பி இருந்த என்ன ஏமாத்திட்ட “ என்று கத்தி அழுதாள்.
“ தயவு செஞ்சு அப்படிச் சொல்லாத மைரா. என் வாழ்க்கையில நான் வேணும்னு நெனச்ச ஒரே நபர் நீ மட்டும் தான். என் அண்ணனா இருந்தாலும் சரி இல்ல என் சொந்த குடும்பமாக இருந்தாலும் சரி உன்ன யார் கூடவும் பகிர்ந்துக்க நான் தயாரா இல்ல. உன் பிறந்தநாளுக்கு நான் ஒருநாளும் பரிசு கொடுத்தது இல்ல தான், நான் ஒத்துக்குறேன் ஆனா எனக்கு உன் மேல உண்மையிலேயே அக்கறை இருக்கு. என் வாழ்க்கையில மறக்கமுடியாத தருணங்கள் உன்கூட தான் இருந்துருக்கேன். நாம ஒன்னா சுத்தி திரிஞ்சோம், ஒன்னா சாப்பிட்டோம், ஒன்னா ஷாப்பிங் பண்ணோம். நீ என் வாழ்க்கையோட ஒரு பகுதியா இருந்த மைரா “ என்று சொல்லி க்ரிஷ் கண்ணீர் சிந்தினான்.
“ நீ எல்லாத்தையும் சொன்ன மாதிரி, அந்த பரிசு எல்லாம் நீ கொடுக்கலனு சொல்லி இருக்கலாம், என் வாழ்க்கையில நான் அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன் க்ரிஷ் “ என்று அவள் கத்தி கொந்தளித்தாள்.
அவளது திடீர் கொந்தளிப்பில் க்ரிஷ் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தான். மைராவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டு ரோஷினியை கவர்ந்த கணத்தில் இருந்து நடந்த அனைத்தையும் இணைத்து பார்த்தான்.
“ மைரா, நீ என்ன லவ் பண்ணியா ? “ என்று க்ரிஷ் மெல்ல கேட்டான்.
“ இல்ல, என் மேல அக்கறையா இருந்து என்கிட்ட வம்பு பண்ணி, எனக்காக சண்ட போட்டவர தான் நான் லவ் பண்ணேன். எனக்காக பூக்கள், சாக்லேட் கொடுத்தவர லவ் பண்ணேன். இந்த பரிசு எல்லாம் எனக்காக பார்த்து பார்த்து செலெக்ட் பண்ணி, கையாள செஞ்ச மனுஷன தான் நான் லவ் பண்ணேன் ஆனா இப்போ அவனையும் நான் லவ் பண்ணல. நான் என் வாழ்க்கையோட மோசமான நிலையில இருந்த அப்போ எனக்கு ஒரு வாழ்க்க கொடுத்த என் கெட்சப்ப தான் நான் லவ் பண்றேன், நான் யார்னு எனக்கு அடையாளம் காட்டின என் கெட்சப்ப நான் லவ் பண்றேன் “ என்று சொல்லி மைரா உடைந்து போனாள்.
அவள் சொன்னதையெல்லாம் கேட்ட க்ரிஷ் “ மைரா…” என்று மெல்ல அழைத்தான் ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன், “ வேணாம், போயிடு. உன்னோட பொறாமையால நான் போதுமான அளவு அனுபவிச்சிட்டேன் ஆனா இனிமே முடியாது “ என்று சீறினாள்.
மைரா சமையலறைக்குள் நுழைந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தாள். க்ரிஷ் தன்னை அறைந்து கொண்டு சமையலறைக்கு அவளைப் பின்தொடர்ந்தான்.
“ என்னை மன்னிச்சிடு மைரா, என்னால நீ கஷ்டப்பட்டது எனக்குத் தெரியாது. என்ன மன்னிச்சிடு “ என்று க்ரிஷ் கெஞ்சினான்.
“ என்ன தனியா விடு க்ரிஷ், ஏற்கனவே நான் நிறைய குழப்பத்துல இருக்கேன் இதுல உன் பேச்ச கேட்க எனக்கு நேரமில்ல “ என்று மைரா சொன்னதும், “ என்ன விட்டுடாத மைரா, நான் இப்போ அதே க்ரிஷ் இல்லை. என் வாழ்க்கையில நான் செய்த எல்லாத்துக்கும் நான் வருந்துறேன், நான் மதிக்குற ஒரே விஷயம் உன்னோட நட்பு தான், நீ என்ன கைவிட்டா என்ன நானே வெறுப்பேன். நீ என்ன வெறுக்குறத பார்த்து வாழ்றத விட நான் செத்து போறதே மேல். என் வாழ்க்கையில நான் ரொம்ப மதிக்குறது உன்ன தான் மைரா “ என்று க்ரிஷ் மன்றாடினான்.
மைரா தண்ணீரைக் குடித்துவிட்டு பற்களைக் கடித்தபடி கிட்சன் மேடை மேல் உள்ளங்கையை வைத்து நின்றாள்.
“ நான் உன்ன மன்னிக்கிறேன் க்ரிஷ், ஏன்னா என் மேலையும் தப்பு இருக்கு, எல்லாத்தையும் நானும் யோசிச்சு இருக்கணும். நான் ஒரு முட்டாளா இருக்கும் போது உன்கிட்ட வருத்தப்பட எனக்கு எந்த உரிமையும் இல்ல. இதை உணராத அளவுக்கு நான் முட்டாளா இருந்துருக்கேன் அப்படி இருக்கும் போது உன்னை தண்டிக்க நான் யார்? “ என்று மைரா சலிப்புடன் சொன்னதும், “ தயவு செஞ்சு அப்படிச் சொல்லாத மைரா. என் வாழ்க்கையில நீ வேணும் “ என்று க்ரிஷ் சொன்னான்.
“ நான் உன்னை நிறைய காயப்படுத்தி இருக்கேன் மைரா, ஆனா அது எதுவும் நான் வேணும்னு செய்யல ஆனா இன்னைக்கு நான் உன்ன வேணும்னே காயப்படுத்தப் போறேன், ஆனா இது உன் நல்லதுக்காக தான். என் அண்ணன் மேல எனக்கு இருந்த பொறாமை அவரோட வாழ்க்கையில நிறைய இழக்க வெச்சுடுச்சு அதையெல்லாம் நான் சரி செய்ய வேண்டிய நேரம் இது. நீங்க ரெண்டு பேரும் உங்க காதலுக்காக இந்த வீட்ட விட்டு போகணும், நான் மொத்தமா கெட்டவனா மாறினா மட்டும் தான் அது நடக்கும். கடைசியா ஒரு முறை என்ன மன்னிச்சிடு “ என்று மனதில் நினைத்த க்ரிஷ், அவள் மணிக்கட்டைப் பிடித்து அவனை நோக்கித் திருப்பினான்.
மைரா தன் கையை அவன் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றாள், ஆனால் அவன் விடுவதற்கு மறுத்து இறுகப் பிடித்துக் கொண்டான்.
“ என்னை விடு க்ரிஷ் “ என்று மைரா கத்தினாள், ஆனால் க்ரிஷ் அவளிடம், “ ப்ளீஸ் மைரா, என் வாழ்க்கையில நீ வேணும். நான் ரொம்ப தனிமையா உணர்றேன், என்ன பார்த்துக்க யாரும் இல்ல. நீ என் வாழ்க்கையில இருக்க தான் நான் எல்லாத்தையும் பண்ணேன் “ என்று சொல்லி அவன் அவளை வலுக்கட்டாயமாக அணைத்துக் கொள்ள, அவனது ஸ்பரிசத்தில் அதிர்ச்சியும், பயமும், அருவருப்பும் கலந்து, கன்னங்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட மைரா கத்தி கூச்சலிட்டு நெளிந்தாள்.
“ நான் உன்ன கெஞ்சிக் கேட்குறேன் க்ரிஷ், தயவு செஞ்சு என்ன விடு, எனக்கு அருவருப்பா இருக்கு, என்ன விடுடா “ என்று மைரா அலறினாள், “ இல்ல மைரா. நீ எனக்கு வேணும் “ என்று சொல்லி க்ரிஷ் அவளை விட மறுத்துவிட்டான்.
மைரா தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவனை ஓங்கி அறைந்து தன் அறைக்கு விரைந்தாள். க்ரிஷ் தரையில் சரிந்து விம்மி அழ ஆரம்பித்தான்.
“மன்னிச்சிடு மைரா, உன் உயிர காப்பாத்த எனக்கு நேரமோ வேற வழியோ இல்ல. உன் உயிர காப்பாத்த நான் எதுவும் செய்யாம போனா, நீ இப்போ இருக்குறத விட ரொம்ப உடைஞ்சு போவ, என்னால அத பார்க்க முடியாது. தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடு, ஸாரி “ என்று சொல்லி க்ரிஷ் அழுதான்.
மைரா கதவைப் பூட்டிவிட்டு தரையில் விழுந்து அழுதாள். தனது மொபைலை தேடி அவள் மனம் ஏங்கும் ஒரே எண்ணை டயல் செய்த போது அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
கேஷவ் எப்போதும் அவள் அழைப்பை முதல் ரிங்கில் பதிலளித்தான், ஆனால் அவன் கேட்டதெல்லாம் மைராவின் விம்மல் மட்டுமே.
“ அம்மு “ என்று கேஷவ் அழைத்ததும், “ கெட்சப் “ என்று மட்டும் மைரா அழைத்தாள்.
அவளது விசும்பல் சத்தம் கேட்டு கேஷவின் இதயம் நொறுங்கியது, அவன் உடனே எழுந்து கார் சாவியை எடுத்தான்.
“ அம்மு லைன்ல இரு, என்ன நடந்துச்சுனு சொல்லு ? யாராவது உன்ன காயப்படுத்தினாங்களா? “ என்று கேஷவ் கேட்க, “ சீக்கிரம் வாங்க ப்ளீஸ் “ என்று மைரா அழுதாள்.
கிசுகிசுப்பாக வெளிவந்த அவளது உடைந்த குரலைக் கேட்டு அவன் கண்களை மூடிக்கொண்டான். அடுத்த விம்மல் அவள் உதடுகளில் இருந்து வெளிவருவதற்கு முன்னரே தன் அம்முவை அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மனதில் வைத்து கார் ஆக்ஸிலியரேட்டரை அழுத்தினான், அவனுக்கு ஏதாவது மந்திரம் தெரிந்திருந்தாலோ அல்லது டெலிபோர்ட் செய்யும் சக்தி இருந்தாலோ மட்டுமே அவன் ஒரு நொடியில் அவள் முன் இருந்திருப்பான்.
மைரா ஒன்றும் பேசாமல் விம்மி அழுதாள். கேஷவ் வீட்டை அடைந்து உள்ளே ஓடினான். சோபாவில் உட்கார்ந்திருந்த க்ரிஷ், கேஷவ் புயல் போல தன்னைக் கடந்து மாடிப்படிகளைத் தாண்டி அறையை அடைவதைப் பார்த்தான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு மைரா பயத்தில அலறி மேலும் விம்மி அழுதாள்.
“ அம்மு நான், உன் கெட்சப் வந்துட்டேன், கதவைத் திற மா “ என்று கேஷவ் சொன்னதும், நடுங்கும் கைகளுடன் கதவைத் திறந்த மைரா, கேஷவ் உள்ளே நுழைந்ததும், அவன் கழுத்தைச் சுற்றி தன் கைகளை வளைத்து கொண்டு அவனை அனைத்து கொண்டாள். கேஷவ் தன் பின்னங்கால்களால் கதவை மூடிக்கொண்டு அவள் தலைமுடியை வருடியபடியும் முதுகை வருடியபடியும் நின்றான்.
“ அழாத அம்மு, நீ உடைஞ்சு போறத பார்க்குற மிகப்பெரிய தண்டனைய எனக்கு கொடுக்குற அம்மு, என்ன நடந்ததுச்சு சொல்லு “ என்று கேஷவ் கேட்டதும், மைரா மறுத்து தலையை அசைக்க அவன் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவள் முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்த பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அவளை குடிக்க செய்தான்.
“ இப்ப சொல்லு என்ன நடந்ததுச்சு ? “ என்று கேஷவ் மீண்டும் கேட்டதும் “ க்ரிஷ் “ என்று மட்டுமே மைரா கூறினாள்.
“ என்ன ஆச்சு அவனுக்கு? அவன் ஏதாவது சொன்னானா ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா தனது மணிக்கட்டைக் காட்டினாள், அது ஊதா நிறமாக மாறி இருந்தது. காயத்தைப் பார்த்ததும் கேஷவின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்தது, தன் தம்பி துரோகம் இழைத்துவிட்டதாக உணர்ந்து பற்களைக் கடித்துக் கொண்டான். அதையும் தாண்டி மைரா படும் வேதனையை அவனால் உணர முடிந்தது.
“ அவன் வீட்டுக்கு வந்தானா இல்ல அகாடமிக்கு வந்தானா ? “ என்று கேஷவ் கேட்க, “ வீடு. “ என்றாள் மைரா.
“ கொஞ்சம் இரு, நான் வரேன் “ என்று சொல்லி கேஷவ் கிளம்ப எத்தனிக்க, மைரா அவனை விட மறுத்து தலையை அசைத்தாள், ஆனால் கேஷவ் அவளை உட்கார வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறி ஹாலை அடைந்தான். கேஷவின் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்ட க்ரிஷ் எழுந்து நின்றான்.
எதுவும் பேசாமல் கேஷவ் க்ரிஷை அடித்ததும், க்ரிஷின் கன்னத்தில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டு உதடுகள் கிழிந்தன.
“ உன்னால எப்படி அவகிட்ட இப்படி நடந்துக்க முடிஞ்சுது ? அவ உன்ன உயிர் நண்பனா நடத்தினா, ஒவ்வொரு நாளும் உன் வாழ்க்கைய நெனச்சு கவலைப்பட்டா, அத தவிர அவ வேற என்ன தப்பு பண்ணா ? அவ உன்னோட பெஸ்ட் ப்ரெண்டுனு மறந்திருக்கலாம், ஆனா அவ என் மனைவினு கூட மறந்துட்டியா ? அவ எனக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா? “ என்று கேட்டா கேஷவ் விரக்தியில் க்ரிஷின் மார்பில் தன் உள்ளங்கையை வைத்து அவனை சோபாவில் தள்ளிவிட்டு அறைக்குத் திரும்பினான்.
ஒரு பெட்டியில் பரிசுப் பொருட்களைப் பார்த்த கேஷவ், அப்போதும் அழுது கொண்டிருந்த மைராவைப் பார்த்தான். பெட்டியைத் தன் அலமாரியில் வைத்துவிட்டு மைராவிடம் திரும்பி, “ வா நாம வெளியே போகலாம், நீ ஒருத்தர இன்னைக்கு சந்திக்கனும், நான் கூட்டிட்டு போறேன் “ என்று சொல்லி அவளை பாத்ரூமுக்கு அழைத்து சென்று முகம் கழுவி, அவள் மாற்ற ஒரு கவுனைத் தேர்ந்தெடுத்தான்.
இருவரும் ஹாலை அடைந்த போது, க்ரிஷைப் பார்த்ததும் மைரா கேஷவுடன் நெருங்கினாள். கேஷவ் அவள் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே சென்று அவளுக்காககார் கதவைத் திறந்தான்.
“ நீ அவர சந்திக்குறதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் லாங் டிரைவ் போகலாம். கண்ணாடிய இறக்கிவிட்டு ரிலாக்ஸ் பண்ணு இல்ல நீ என் மேல சாஞ்சுக்கோ “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, மைரா அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
**************************************
முன்னோட்டம்:
“ ஐ லவ் யூ மைரா. அப்பவும் நீ தான், இப்பவும் நீ தான், எப்பவும் நீ மட்டும் தான் இங்க இருப்ப. கொஞ்சம் கூட சோர்வடையாம உன்ன லவ் பண்ணிட்டே இருப்பேன் மைரா ஏன்னா உன்ன லவ் பண்ண மட்டும் தான் நான் வாழுறேன். காதலோட அர்த்தம் என்னனு கூட தெரியாத வயசுல இருந்து உன்ன லவ் பண்றேன்.

1 comment
[…] 62.அவ என் மனைவினு கூட மறந்துட்டியா ? […]