Home Familyஇறுதியுரை 1

இறுதியுரை 1

by Siragugal Novels
20 views

காலைக் கதிர்களின் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் ஜன்னல் வழியாக ஊடுருவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சஞ்சுவின் முகத்தில் முத்தமிட்டன. அவள் மறுபுறம் புரண்டு தன் போர்வைக்குள் முகத்தை மறைத்துக் கொண்டாள். ஆர்யன் குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து உடை அணிந்து வெளியே வந்து அவளருகில் சென்றான்.

போர்வையை விலக்கி, “எழுந்துரு, சஞ்சு மா “ என்று சொல்லி மெதுவாக அவள் முகத்தில் இருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான். சஞ்சு சோம்பலை முறித்து எழுந்து அவனை பார்த்து புன்னகைத்தாள். அவளை தயாராக சொல்லிவிட்டு அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். 

பிரதீப், கீர்த்தி மற்றும் நரேன், பவித்ராவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இப்போது, மற்றொரு கொண்டாட்டத்திற்காக குடும்பம் முழுவதும் மீண்டும் ஒன்று கூடியது. ரஞ்சித் நிலாவின்  திருமண ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, சரண் தனது பெற்றோர் இருவரையும் தனது சிரிப்பு மற்றும் முடிவற்ற விளையாட்டால் இரவு முழுவதும் விழித்திருக்க வைத்தான். அதனால் சஞ்சு சற்று அதிக நேரம் உறங்க அனுமதித்து தேவிகா தன் பேரன் சரணை தயார் செய்ய ஏற்கனவே அழைத்துச் சென்றிருந்தார்.

அனைவரும் தயாராகி கல்யாண மண்டபத்தை அடைந்த போது அது மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. வெள்ளை நிற பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்த ரஞ்சித் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். ராயல் மெரூன் நிற பட்டுப் புடவையில் ஜொலித்த நிலா பாரம்பரிய நகைகள் அணிந்து மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். விஷ்ணு மற்றும் தேவிகாவின் ஆசீர்வாதத்துடனும், நண்பர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுடனும், ரஞ்சித் மற்றும் நிலாவின் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு, விஷ்ணுவும் தேவிகாவும் ரஞ்சித் மற்றும் நிலாவை குடும்பத்தின் மற்றவர்களுடன் மேன்ஷனில் தங்குமாறு அழைத்தனர். தம்பதிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் துணையை காதலித்து அவர்களுக்காக நேரம் கொடுத்தனர். ஆர்யன் மேன்ஷன் சிரிப்பால் நிரம்பி வழிந்தது, குட்டி இளவரசன் சரண் அனைவரின் அன்பையும் பெற்று அவர்களின் செல்லமாக இருந்தான்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு:

ரஞ்சித் இப்போது ஆர்யனின் PA அல்ல, ஏ.ஆர்.சி.யில் ஒரு முக்கிய பங்குதாரராகிவிட்டான். ஒரு நாள் மதியம், அவனும், ஆர்யனும் ஒரு மீட்டிங் நடுவில் இருந்த போது, ரஞ்சித்தின் மொபைல் ஒலித்தது. நிலாவின் பெயரை பார்த்ததும், ஏதாவது சீரியஸான விஷயம் இருந்தாலொழிய அவள் வேலை நேரத்தில் அழைக்க மாட்டாள் என்பதால் அழைப்புக்கு பதில் சொல்லி அவளிடம் பேசினான் ஆனால் உடனே அவன் முகம் இறுகியது, சில கணங்களுக்குப் பிறகு ஆர்யன் பக்கம் திரும்பி, “ நாம உடனே கிளம்பனும் “ என்று சொல்லி அவன் கையை பிடித்து இழுத்தான்.

அவர்கள் மேன்ஷனை அடைந்து லிவிங் அறைக்குள் நுழைந்த போது, விஷ்ணு, தேவிகா மற்றும் ஏழு வயது சரண் ஆகியோர் வெற்று முகபாவங்களுடன் மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டனர். அவர்களின் பார்வையை பின்தொடர்ந்தவர்கள் சஞ்சு எரிச்சலான முகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டனர்.

ரஞ்சித்தும் ஆர்யனும் ஒரு நொடியைக் கூட வீணாக்கவில்லை. அவர்கள் மாடிக்கு விரைந்து சென்று பார்த்த போது, நிலா தனது ஐந்து வயது மகன் தருணுடன் ஒரு அறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.

“எங்க?” என்று மூச்சிரைக்க கேட்டான் ரஞ்சித். அதற்கு நிலா, “ உள்ள “ என்று பதில் சொன்னாள்.

ஆர்யனும், ரஞ்சித்தும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தனர். மெல்லிய விசும்பல் சத்தம் அவர்களை படுக்கைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் மண்டியிட்டு படுக்கைக்கு அடியில் எட்டிப் பார்த்தனர். கட்டிலுக்கு அடியில் சுருண்டு, தனது சிறிய முகத்தை உள்ளங்கைகளில் புதைத்தபடி, ஆர்யன் மற்றும் சஞ்சுவின் குட்டி இளவரசி ஐந்து வயது சாரா அழுது கொண்டிருந்தாள். இருவரும் உருண்டு சென்று அவளுக்கு இருபுறமும் படுத்தனர்.

” ப்ரின்சஸ், செல்லக்குட்டி ” என்று ஆர்யன் மெல்ல அழைத்தான். பதில் வராததால், “ தங்கப் பாப்பா, ஏன் அழறீங்க ? “ என்று கேட்ட ரஞ்சித்தின் குரலில் கவலை தொனித்தது.

“அப்பா, மாமா இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” என்று சாரா மூக்கை உறிஞ்சினாள்.

“என்ன நடந்துச்சு ப்ரின்சஸ் ?” என்று ஆர்யன் மெதுவாகக் கேட்டான்.

சாரா கண்ணீர் வடிந்த கன்னங்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்து,  “அப்பா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் கிட்டயும் செல்லப் பிராணி இருக்கு… எனக்கு மட்டும் தான் இல்ல “ என்று விம்மி கொண்டே சொன்னாள்.

ரஞ்சித் மெல்லப் புன்னகைத்தான். ” என் தங்க பாப்பாவுக்கு என்ன செல்லப்பிராணி வேணும் ?” என்று கேட்டான். ” மாமா எனக்கு ஒரு பூனைக்குட்டி வேணும்…” என்று உடனே சாரா முணுமுணுத்தாள்.

அதை கேட்டதும் ஆர்யன் சிரித்தான், ” என் செல்லக்குட்டிக்கு பூனைக்குட்டி வேணுமா ? சரி… ஆனா நம்ம சாரா அழறதுல அப்பாவும் மாமாவும் வருத்தமா இருக்கோம் “ என்று அவளிடம் கூறினான்.

ரஞ்சித் அருகில் சாய்ந்தான். ” எங்க தங்க பாப்பா அழாம வந்தா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு “ என்று மெல்ல கூறினான்.

“என்ன சர்ப்ரைஸ் மாமா?” என்று கேட்டு சாரா அழகாக கண் சிமிட்டினாள்

“நீ வெளியே வந்தா நீயே அத பார்க்கலாம் ” என்று சொல்லி ஆர்யன் புன்னகைத்தான்.

சாரா கைகளை நீட்ட, ஆர்யன் அவளை உடனே அணைத்துக் கொண்டு வெளியே சென்றான். அங்கு காத்துக் கொண்டிருந்த தன் மகன் தருணை தூக்கிக் கொண்டு ரஞ்சித் பின்தொடர்ந்தான். அவர்கள் அனைவரும் லிவிங் அறையை அடைந்தனர்.

” அண்ணா, அப்பாவும், மாமாவும் சர்ப்ரைஸ் ஏற்பாடு பண்ணி இருக்காங்க “ என்று சொல்லி சாரா மகிழ்ச்சியில் சிரித்தாள்.

“அப்பா, என்ன அது ?” என்று சரண் உற்சாகமாக கேட்டுவிட்டு ஆர்யன் மீது தாவினான். ஆர்யன் தன் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டான்.

“அப்பா, அப்போ எனக்கு ?” என்று கேட்டு தருண் உதட்டைப் பிதுக்கினான். அதை பார்த்து புன்னகைத்த ஆர்யன், ” தருண் குட்டி இந்த சர்ப்ரைஸ் உங்க எல்லாருக்கும் தான் “ என்று கூறினான்.

“நீங்க அவள கெடுக்கிறீங்க. நல்லா நாடகம் ஆடுறா. உங்கள பத்தி நல்லா தெரிஞ்சி வெச்சுருக்கா “ என்று சொல்லி சஞ்சு புருவத்தை உயர்த்தினாள்.

” விடு மா, அவ இன்னும் சின்ன குழந்த தானே ” என்றான் ஆர்யன் புன்னகையுடன்.

“சரி வாங்க சர்ப்ரைஸைப் பார்க்கப் போகலாம்” என்று ரஞ்சித் சொன்னதும் அவர்கள் அனைவரும் தோட்டத்திற்கு நடந்து சென்றனர். அங்கு பறவைகளின் கூண்டிற்கு அருகில் துணியால் மூடப்பட்ட இன்னொரு கூண்டு இருந்தது.

ரஞ்சித் அதை சுட்டிக் காட்டி, ” சாரா, தருண், சரண் மூணு பேரும் போய் அந்த துணிய எடுங்க ” என்று கூறினான்.

குழந்தைகள் ஓடிப்போய் கூண்டின் மேலிருந்து துணியை இழுத்தனர். அடுத்த கணம் அவர்களின் கண்கள் தூய மகிழ்ச்சியில் ஒளிர்ந்தன. உள்ளே கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிற அபிமான பூனைக்குட்டிகள் இருந்தன. குழந்தைகள் உற்சாகத்தில்  ஓடி சென்று ஆர்யனையும் ரஞ்சித்தையும் ஒன்றாக அணைத்துக் கொண்டனர்.

” நாம எப்பவும் இவங்க டீம்ல இருக்க மாட்டோம் “ என்று நிலா பெருமூச்சு விட்டாள். அதற்கு சஞ்சு உடனே, “ அவங்க நல்லா டீம் உருவாக்கிட்டாங்க “ என்று சஞ்சு ஒரு புன்னகையுடன் கூறினாள்.

அந்த நேரத்தில், மாயாவும் பவியும் சாராவின் வயதையொத்த அவர்களின் மகள்கள் விஷாலி மற்றும் மித்ராவுடன் வந்தனர். அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்தனர். மூன்று பெண் குழந்தைகளும் ஒரே வகுப்பில் இருந்தனர். கீர்த்தி மற்றும் பிரதீப்பின் ஆறு வயது மகன் கரண் மற்ற குழந்தைகளுடன் ஒரே பள்ளியில் படித்தான்.

பவியும் மாயாவும் இன்னொரு கூண்டைத் தூக்கிக் கொண்டு வந்தனர். அதை பார்த்ததும், “ இதோ வந்துட்டாங்க பாரு, அடுத்த டீம், கர்த்தரே “ என்று சொல்லி சஞ்சு வானத்தை பார்த்தாள்.

“ஏய் வாய மூடு. சாரா செல்லப்பிராணிக்காக அழுததா மித்ராவும் விஷாலியும் சொன்னாங்க, அதனால இந்த பூனைக்குட்டிங்கள நாங்க வாங்கிட்டு வந்தோம் “ என்று பவி கூறினாள்.

“ தெய்வங்களா, போங்க போய் டீம்ல சேருங்க “ என்று சொல்லி   சஞ்சு விளையாட்டாக கண்களை உருட்டினாள்.

“ அப்போ நீங்க எந்த டீம் ? வாங்க வாங்க ரொம்ப நடிக்காதீங்க. எப்படியும் நாங்க எல்லாரும் செய்வோம்னு தெரிஞ்சு தானே நீ செய்யாம விட்ட. இப்போ எங்க மேல பழி போடுறியா ? “ என்று மாயா கிண்டலடித்தாள்.

“ கண்டு புடிச்சிட்டாங்களோ ? “ என்று நிலா ரகசியமாக கேட்க, “ கண்டுக்காத விடு. நம்மளாச்சும் கொஞ்சம் கண்டிப்பா இருக்க மாதிரி நடிப்போம் “ என்று சஞ்சு பதில் சொன்னாள்.

“சரி தான் ஆனா அந்த பூனைக்குட்டி எல்லாம் ரொம்ப அழகா இருக்கு அதனால் போய் அத பார்த்துட்டு அப்புறம் கண்டிப்பா இருப்போம் “ என்று நிலா சொல்ல, ” ஆமா வா போலாம் “ என்று சஞ்சு சிரித்தாள்.

“நான் கீர்த்திக்கு போன் பண்ணேன், அவ இன்னும் கொஞ்ச நேரத்துல கரண் கூட வந்துடுவா. குழந்தைங்க எல்லாரும் கொஞ்ச நேரம் விளையாடட்டும் “ என்று மாயா கூறினாள்.

விரைவில் கீர்த்தி அங்கு வந்ததும் குழந்தைகள் பூனைக்குட்டிகளுடன் விளையாடினர். பெரியவர்கள் தோட்டத்து இருக்கைகளில் அமர்ந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை கண்டனர்.

கௌசல்யா அனைவருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்துவிட்டு, சிற்றுண்டி சாப்பிட குழந்தைகளை உள்ளே அழைத்துச் சென்றார்.

விஷ்ணு ஆர்யன் பக்கம் திரும்பி, “ஆர்யன், நீயும் சஞ்சுவும் எப்போ கிளம்பப் போறீங்க?” என்று கேட்டதும், “ நாளைக்கு மதியம் கிளம்ப போறோம் பா ” என்றான் ஆர்யன்.

“எங்க போறீங்க?” என்று மாயா கேட்டதும், “ சஞ்சுவுக்கு இது சர்ப்ரைஸ். அதனால இது எல்லாருக்கும் ரகசியா இருக்கும் “ என்று சொல்லி ரஞ்சித் புன்னகைத்தான்.

” நமக்கு ஒரு பார்ட்டி இருக்குன்னு ஞாபகம் வெச்சுக்கோங்க,  நேரத்துக்கு வந்துடுங்க.” என்று பவி சொன்னதும், ஆர்யன் சரி என்று தலையசைத்து, ” நிச்சயமா நாங்க நேரத்துக்கு வந்துடுவோம்.” என்று உறுதியளித்தான். 

” அப்போ சரண், சாரா, தருண் இவங்கள நாங்க கூட்டிட்டு போறோம் “ என்று மாயா சொன்னதும், “ ஆமா ஆமா நாங்க கூட்டிட்டு போறோம் “ என்று பவியும் சொன்னாள்.

“நரேனும் விவானும் போன் பண்ணாங்களா ? பிசினஸ் ட்ரிப் முடிஞ்சு எப்ப திரும்புவாங்க?” என்று தேவிகா மாயாவிடம் கேட்டார். அதற்கு மாயா உடனே, “அம்மா, அவங்க பார்ட்டிக்கு வந்துடுவாங்க.” என்று சொல்லி புன்னகைத்தாள்.

அனைத்து விவாதங்களையும் கேட்ட விஷ்ணு தலையசைத்து, “ நல்லது. ஏற்பாடுங்க சுமூகமாக நடக்குதானு பாருங்க “ என்று கூறினார். உடனே கீர்த்தி குறுக்கிட்டு, “கவலைப்படாதீங்க பா, பார்ட்டி ஏற்பாடு எல்லாத்தையும் ரஞ்சித் அண்ணாவும், பிரதீப்பும் பார்த்துக்குவாங்க “ என்றாள்.

அவள் வார்த்தையை கேட்டதும், “நீங்கள் எல்லோரும் இருக்கும் போது நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.” என்று சொல்லி விஷ்ணு முக மலர்ச்சியோடு சிரித்தார்.

அன்று இரவு உணவிற்குப் பிறகு, மாயாவும் பவியும் எல்லா குழந்தைகளுடனும் மேன்ஷனை விட்டு புறப்பட்டனர். அதன் பின்னர் ஆர்யனும் சஞ்சுவும் தங்கள் அறைக்குத் திரும்பினர்.

” ஆர்யன், கண்டிப்பா நாம போகனுமா ? “ என்று ஆர்யனின் அருகில் சுருண்டு படுத்தபடி சஞ்சு கேட்டாள். அதற்கு ஆர்யன் உடனே, “ ஆமா ஸ்வீட் ஹார்ட், இது நம்ம பத்தாவது கல்யாண நாள். உன்ன சுவிட்சர்லாந்துக்கு கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன் ஆனா எல்லோரும் பார்ட்டி ஏற்பாடு பண்ணி ஒன்னா கொண்டாட விரும்புனதால நம்ம நாட்டுக்குள்ளேயே உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன் “ என்று கூறினான்.

” சரி, நாம எங்க போறோம்?” என்று அவள் ஆர்வத்துடன் கேட்க, “அத என்னால இப்போ சொல்ல முடியாது மா. இது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் “ என்று பதில் சொன்னாள் ஆர்யன். 

வழக்கம் போல அவன் சொன்னதை கேட்டு சஞ்சு கண்களை உருட்டினாள். ” நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகுது. என்னவோ நாம இப்போ தான் முதல் முறை ஹனிமூன் போக போற மாதிரி நடிக்குறீங்க “ என்று அவன் ஐ கிண்டல் செய்தாள். ஆனால் ஆர்யன் அதற்கு சிரித்தான், “நீ சம்மதிச்சா ஒவ்வொரு மாசமும் உன்ன நான் ஹனிமூனுக்கு கூட்டிட்டு போறேன்.” என்று சொல்லி கண்ணடித்தான்.

“வாய மூடு அழுக்கு மனுஷா “ என்று சிரித்தபடி சஞ்சு அவன் கையை லேசாக தட்டினாள்.

ஆர்யன் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான். “நல்லா தூங்கு. நாளைக்கு உனக்கு எனர்ஜி வேணும்.” என்று கூறி அவளை தொந்தரவு செய்யாமல் தூங்க விட்டான்.

***************************************************

முன்னோட்டம்:

“ சஞ்சு, என் ஆச பொண்டாட்டி, நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன்னு உனக்குத் தெரியும். அப்புறம் எனக்கு இது பத்து வருஷம் இல்ல, உன்ன முதன்முதலா பார்த்து கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு.”

அடுத்த அத்தியாயம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!