மைராவும், நைனாவும் பள்ளியில் இருந்து புறப்பட்டு காட்டேஜுக்கு திரும்பிய போது வசுந்தரா அர்ச்சனாவுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களோடு சிறிது நேரம் பேசி அரட்டை அடித்துவிட்டு நைனாவுடன் தன் அறைக்குத் திரும்பினாள். அப்போது அவளது மொபைலில் ஒரு அறிவிப்பு வந்ததும் அது ரோஷினியின் இன்ஸ்டாகிராம் அறிவிப்பு என்று அவள் பார்த்தாள்.
ரோஷினியும் க்ரிஷும் ஒரு உணவகத்திலிருந்து ஒன்றாக இருக்கும் படங்களை “வருங்கால கணவருடன் “ என்ற தலைப்புடன் பதிவேற்றிருந்ததை மைரா பார்த்தாள். நைனா மொபைலை பிடுங்கி ஏதோ செய்ய எத்தனிக்க, மைரா அவளை தடுத்து நிறுத்தி மொபைலை திரும்ப வாங்கிக் கொண்டாள்.
“ மைரா, நீ அவங்க ரெண்டு பேரையும் அன்ஃபாலோ (unfollow ) பண்றது தான் நல்லது. அவங்க இப்படி உன்ன வெறுப்பேதிட்டு இருக்க விடாத “ என்று நைனா சொல்ல அதற்கு மைரா அவளிடம், “ அவங்க என்ன வெறுப்பேத்துறாங்கனு நான் எப்போ சொன்னேன் ? அவங்க லவ் பண்றாங்க நைனா, நான் கஷ்டப்படுவனு அவங்கள ஒன்னும் செய்யாம, அமைதியா இருக்க நாம எதிர்ப்பார்க்க முடியாது. எல்லாருக்கும் அவங்க வாழ்க்கைய சந்தோஷமா கொண்டாட உரிமை இருக்கு, க்ரிஷும், ரோஷினியும் அத தான் செய்றாங்க அதுல எந்த தப்பும் இல்ல “ என்று கூறினாள்.
“ நீ ஒரு தெய்வமா இருந்து அவங்கள கொண்டாடு ஆனா நான் மனுஷி. எனக்கு அவங்க கழுத்த நெரிக்க தோணுது “ என்று சீறினாள் நைனா. அதற்கு மைரா அவள் கையை பிடித்து, “ அமைதியா இரு பெஸ்டி “ என்று சொல்லி அமைதிப்படுத்த முயன்றாள்.
“ நாம பக்கத்துல இருக்க இடம் எல்லாத்துக்கும் போய் நிறைய போட்டோ எடுத்து நாமும் போடுவோம். ஏற்கனவே மியூசிக் நிகழ்ச்சிக்கு போன போட்டோ இன்னும் போடல அது ஞாபகம் இருக்கட்டும் “ என்று நைனா சொன்னதை கேட்டு, “ பொறாமையால நாம எதையும் செய்ய மாட்டோம். அது நம்ம கேரக்டர் இல்ல நைனா “ என்றாள் மைரா.
“ ஓ ஹலோ மேடம், யார் முக்கியமான போட்டோ எல்லாம் சோசியல் மீடியாவுல போடாம இருப்பாங்க ? நாம அத தான் செய்ய போறோம், பொறாமையில இல்ல “ என்று நைனா கடுப்ப்புடன் சொன்னதும், மைரா தலையை அசைக்க, நைனா அவளை இழுத்து அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்து சென்றாள். இருவரும் சேர்ந்து பல போட்டோ எடுத்ததும் நைனா அதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிடத் தொடங்கி க்ரிஷ்ஷிடமிருந்து முதல் லைக் மற்றும் ஹார்ட் ஈமோஜியைப் பெற்றாள்.
“ நாம எப்போ போட்டோ போடுவோம்னு அவன் வெயிட் பண்ணிட்டு இருந்தானா ? “ என்று நைனா கேட்க, “ அவன் ஒவ்வொரு முறையும் இப்படி தான் செய்வான் நைனா. இப்போ நீ அவன வில்லனா சித்தரிக்குற அதனால அவனோட செயல் எல்லாமே உனக்கு விசித்திரமாக இருக்கு “ என்று கூறினாள் மைரா.
“ நீ அவன திட்டி, அவன் நம்பர பிளாக் பண்ணா நான் சந்தோஷப்படுவேன் ஆனால் நீ தெய்வம் ஆச்சே. உன் பெஸ்ட் ப்ரெண்ட உன்ன கத்தியால குத்த வந்தா கூட நீ அவனுக்கு சப்போர்ட் தான் பண்ணுவ “ என்று நைனா சொன்னதை கேட்டதும், “ அவன் ஒரு நாளும் அப்படிச் செய்ய மாட்டான்னு உனக்கு தெரியும் “ என்றாள் மைரா.
சில நொடிகள் அமைதியாக இருந்த நைனா, “ ஒருத்தர கத்தியால குத்துறது மட்டும் தான் கொல்றதுக்கு ஒரே வழி இல்ல. கத்தியால குத்துறத விட கடுமையான வார்த்தையும், செயல்களும் வலி அதிகமா கொடுக்கும். அவன் உனக்கு அப்படி ஒரு வலிய தான் கொடுத்தான் “ என்று சொன்னாள். அதை கேட்டதும் மைராவின் கண்களின் ஓரத்திலிருந்து கண்ணீர் உருண்டது, அவள் அதை விரைவாக துடைத்தாள்.
“ சரி அவங்கள பத்தி பேச வேணாம், நாம இங்க வந்த வேலைய பார்க்கலாம். காட்டேஜுக்கு திரும்பி போய் கொஞ்சம் ஹோம் வொர்க் செய்வோம். கெட்சப் நமக்காக இந்த வாய்ப்பு வாங்கி கொடுத்துருக்காரு. நான் அவர் வருத்தப்படுற மாதிரி நடந்துக்க விரும்பல “ என்று மைரா சொன்னதும் நைனா சரி சொல்ல இருவரும் காட்டேஜுக்கு திரும்பினர்.
அர்ச்சனாவும் மதனும் – க்ரிஷ் மற்றும் ரோஷினியைப் பற்றி பேச ரோஷினியின் அப்பாவுக்கு போன் செய்தனர். அவர் பதிலளித்ததும் அர்ச்சனா ஸ்பீக்கரை ஆன் செய்தார்.
“ அண்ணா, நீங்களும் அங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ நாங்க நல்லா இருக்கோம். ஒரு வழியா எங்களுக்கு போன் பண்ணதுக்கு சந்தோஷம் “ என்றார் ரோஷினியின் அப்பா.
“ இந்த வார இறுதியில க்ரிஷுக்கும், ரோஷினிக்கும் நிச்சயதார்த்தம் செய்யலாம், நீங்க எல்லாரும் கிளம்பி வாங்க. நிறைய பேரு இல்லாம, முக்கியமானவங்கள மட்டும் கூப்பிடுவோம் “ என்று மதன் சொல்ல, “ நீங்க கட்டாயத்தால இத செய்ய நினைக்குறீங்களா இல்ல என் மகள முழு மனசோட ஏத்துகுறீங்களா ? என்று கேட்டார் ரோஷினியின் அப்பா.
“ அவங்க ரெண்டு பேரும் நம்ம பசங்க, க்ரிஷ் எல்லாத்தையும் அவனே முடிவு பண்ணிட்டான்னு தான் எனக்கு வருத்தமா இருந்துச்சு, மத்தபடி எங்களுக்கு சந்தோஷம் தான். நிச்சயத்த எங்க நடத்த விரும்புறீங்க ? வீட்லையா இல்லையா பார்ட்டி ஹால் ஏற்பாடு பண்ணலாமா ? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ பார்ட்டி ஹால் புக் பண்ணலாம். இன்னைக்கு நைட்டு அங்க இருக்க மாதிரி நாங்க கிளம்பி வரோம், நேர்ல சந்திச்சு எல்லாத்தையும் பிளான் பண்ணுவோம் “ என்று ரோஷினியின் அப்பா சொன்னார்.
மதன் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்த போது கேஷவ் அவர்களைப் பார்த்து புன்னகைப்பதைப் பார்த்தனர்.
அதே நேரம் பெங்களூரில் ரோஷினியின் அப்பா ரோஷினியையும் க்ரிஷையும் அழைத்து, “ க்ரிஷ், உன் அம்மா, அப்பா என்கிட்ட பேசினாங்க. இந்த வார இறுதியில உங்க நிச்சயதார்த்தம் செய்ய விரும்புறாங்க. எல்லாத்தையும் பிளான் செய்ய நாம உடனே சென்னை கிளம்பனும் “ என்று சொன்னார். அவர் சொன்னதை கேட்டதும், “ உண்மையாவா? “ என்று க்ரிஷ் இன்ப அதிர்ச்சியில் கேட்டான்.
“ ஆமா, இத நான் நம்ம சொந்தகாரங்க எல்லார்கிட்டயும் சொல்லணும். ரோஷினி அதுக்குள்ள உனக்கு தேவையான எல்லாத்தையும் பேக் பண்ணு.” என்று ரோஷினியின் அப்பா சொல்லிவிட்டு சென்றதும், ரோஷினி க்ரிஷை அறைக்கு இழுத்து சென்று அவனை கட்டியணைத்துக் கொண்டாள்.
“ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு க்ரிஷ். ஒருவழியா நமக்கு நிச்சயம் ஆக போகுது “ என்று ரோஷினி மகிழ்ச்சியடைந்தாள் அதற்கு க்ரிஷ் வெறுமனே சரி என்று சொல்லி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
அர்ச்சனா- மதனையும், கேஷவையும் ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று வசுந்த்ராவுக்கு போன் செய்து எல்லா விஷயமும் சொன்னார்.
“ மைராவுக்கு தகவல் சொல்லலாமா? “ என்று வசுந்தரா கேட்டதும், “ எனக்குத் தெரியல, அவ மறுபடியும் உடைஞ்சு அழ ஆரம்பிச்சா என்ன செய்றது ? “ என்று கேட்டார் அர்ச்சனா. அதற்கு வசுந்தரா உடனே, “ ஆனா அவளுக்கு எப்படியும் தெரிய தானே போகுது ? அவகிட்ட இருந்து இத மறைக்குறதுல என்ன அர்த்தம் ? “ என்று கேட்டார்.
“ நீ சொல்றதும் சரிதான். நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவளுக்கு இத பத்தி சொல்லுவோம் “ என்று அர்ச்சனா சொன்னதும் வசுந்தரா சரி என்று முணுமுணுத்தபடி மைராவை அழைத்தார். மைரா நைனாவுடன் வந்ததும் அவர்கள் வசுந்தராவின் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து அர்ச்சனாவிடம் பேசினார்.
“ நீங்க ரெண்டு பேரும் 24 மணி நேரமும் பேசிட்டே இருக்க பிளான் பண்ணி இருக்கீங்களா ? “ என்று மைரா கேட்டதும், “ மயூ, நாங்க உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் “ என்றார் அர்ச்சனா.
“ சொல்லுங்க என்ன விஷயம் ? “ என்று மைரா கேட்க, “ க்ரிஷுக்கும், ரோஷினிக்கும் இந்த வார இறுதியில நிச்சயம் நடக்க போகுது “ என்று சொன்னார் வசுந்தரா.
மைராவின் முகத்தில் புன்னகை உடனடியாக மறைந்தது ஆனால் அதே வேகத்தில் அவள் அர்ச்சனாவை பார்த்து புன்னகைத்து, “ நான் நல்லா இருக்கேன் அத்த. இது நடக்கும்னு நான் எதிர்பார்த்தேன், அவங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணுவாங்கனு எனக்கு தெரியும்.” என்று சொன்னவள், “ நான் வந்து உங்களுக்கு வேலையில உதவி செய்யட்டுமா ? “ என்று கேட்டாள்.
“ ஒவ்வொரு முறையும் நீ அவங்கள ஒன்னா பார்க்கும் போது நீ உடைஞ்சு போறத நான் பார்க்க விரும்பல மைரா, அதனால தான் நீ இல்லாத நேரத்துல நிச்சயதார்த்தம் நடத்த பிளான் பண்ணி இருக்கோம் “ என்று அர்ச்சனா சொன்னதை கேட்டு, “ என்னால எப்பவும் ஓடி ஒளிஞ்சு இருக்க முடியாது “ என்றாள் மைரா.
“ எங்களுக்கு உன்ன தெரியும், ஆனா நீ கொஞ்சம் மனசு சரியாகி அவங்கள சந்திக்க தயாரா இருக்குற வர கொஞ்சம் நேரம் எடுத்துக்கோ. நாங்க மனசு கஷ்டப்பட மாட்டோம் “ என்று அர்ச்சனா சொல்ல, “ நிச்சயமா நான் நல்லா இருப்பேன். இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசுங்க எனக்கு வேலை இருக்கு “ என்று சொல்லிவிட்டு தன் அறைக்குத் திரும்பி தன் வேலைகளைத் தொடர்ந்தாள். இரவில் எல்லோரும் உறங்கும் போது மைரா வெளியே சென்று ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து நிலவைப் பார்த்தாள்.
“ எங்க வாழ்க்கையில ஒருத்தர விட்டு இன்னொருத்தருக்கு எதுவும் நடந்தது இல்ல, இப்போ அவனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க போகுது ஆனா நான் அங்க இருக்க மாட்டேன். நான் விரும்புன லவ் என் வாழ்க்கையில கிடைக்காம போற அளவுக்கு நான் அவ்வளவு துரதிர்ஷ்டசாலியா? உண்மையான காதல் ஒருநாளும் தோற்காதுன்னு சொல்லுவாங்க அப்போ என் காதல் உண்மை இல்லைனு அர்த்தமா ? இத்தன வேதனைய அனுபவிக்க நான் என்ன பண்ணேன் ? இது எனக்கு ரொம்ப வலிக்குது. இந்த வலியில இருந்து நான் வெளிய வர விரும்புறேன். அவன் வாழ்க்கையோட புது தொடக்கத்துல என் வலி ஒரு சாபமா இருக்க நான் விரும்பல. அவன் சந்தோஷமா இருக்கனும்னு நான் விரும்புறேன், அதுக்கு நான் சந்தோஷமா இருக்கனும். இது ரொம்ப சீக்கிரமா இருந்தாலும், நான் அவன என் வாழ்க்கையில இருந்து மொத்தமா போக விடுறேன், கடவுளே! நான் இதுல இருந்து மீள விரும்புறேன் அதுக்கு ஒரு வழி காட்டு. எனக்கு இந்த வலி வேண்டாம். தயவு செஞ்சு எனக்கு உதவு. நானும் சந்தோஷமா இருக்க விரும்புறேன். எல்லாரும் அவங்க சந்தோஷத்த என்கூட பினைச்சு இருக்காங்க அதனால அவங்களுக்காக நான் சந்தோஷமா இருக்கணும். என் வலிய நெனச்சு அவங்க அழறத என்னால பார்க்க முடியல. அர்ச்சனா அத்தையும், மதன் மாமாவும் அவங்க மகனுக்கு கல்யாணம் செய்ய நிறைய கனவு கண்டாங்க ஆனா இப்போ அது நடக்கும் போது அவங்க முழுஸா சந்தோஷமா இருக்க முடியல. நான் சீக்கிரம் இதுல இருந்து மீண்டு எல்லாரையும் சந்தோஷப்படுத்துவேன். என் வாழ்க்கையில எதுவும் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கடைசி ஆசையா கேட்குறேன், நான் அவன மறந்து இதுல இருந்து விடுபடனும் “ என்று நிலைவை பார்த்து சொல்லி அழுதாள்.
அவள் தனது ஆசையை வேண்டிய அதே நேரத்தில் ஒரு எரிநட்சத்திரத்தைப் பார்த்ததும் அவளுடைய உதடுகள் புன்னகையில் வளைந்தன. அவள் கண்களை மூடிக்கொண்டு ஊஞ்சல் சங்கிலியில் சாய்ந்து கொண்டு தனது வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பிரார்த்தனை செய்வதில் கவனம் செலுத்தினாள்.
காலையில் மைரா பள்ளிக்கு உடையணிந்து ஹாலை அடைந்த போது ஒரு பெண் டைனிங் டேபிளில் பாத்திரங்களை அடுக்குவதைப் பார்த்தாள். மைரா சிரிப்பதையும், முந்தைய இரவுடன் ஒப்பிடும்போது அவள் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதையும் கண்டு வசுந்த்ராவும் ராஜனும் மகிழ்ச்சியில் திகைத்து போனார்கள்.
“ அம்மா, என் முகத்துல அப்படி என்ன பார்க்குறீங்க ? “ என்று மைரா கேட்டதும், “ உன்ன இப்படி பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ரின்சிபால் சமையல் செய்ய ஒரு ஒருத்தர அனுப்பி இருந்தாரு, அவங்க சமைச்சு முடிச்சிட்டாங்க “ என்று வசுந்தரா கூறினார்.
“ எங்களுக்கு காலையில 2 மணி நேரமும், மதியம் 2 மணி நேரமும் தான் கிளாஸ் இருக்கு அதனால நாங்க லஞ்ச் சாப்பிட வருவோம் “ என்று நைனா சொன்ன பிறகு மைராவும் நைனாவும் பள்ளியை அடைந்து இசைக்கான வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கலை ஆசிரியர் ஒரு மாணவர் குழுவை வகுப்பிற்குள் அழைத்து வந்து மைரா மற்றும் நைனாவுக்கு அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றதும், மாணவர்கள் அமைதியாக தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
“ எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. ஸ்கூல் பசங்க எல்லாரும் ஜாலியா, ரொம்ப கலகலப்பா இருப்பாங்க, நானும் கொஞ்சம் ஜாலியா நேரத்த ஓட்டலாம்னு நெனச்சேன் ஆனா நீங்க எல்லாரும் என்ன பயமுறுத்துறீங்க “ என்று மைரா சொல்ல, “ எனக்கும் பயமா இருக்கு மைரா. இவங்க எல்லாரும் ஏதோ நம்ம ரெண்டு பேரையும் கடிச்சு தின்ன போற மாதிரி பார்க்குறாங்க. இப்போ நாம என்ன செய்றது ? “ என்று நைனாவும் கேட்டாள்.
“ வா நாம எங்கேயாச்சும் போய் ஒளிஞ்சிக்கலாம் “ என்று மைரா யோசனை சொல்ல, இருவரும் அந்த அறையில் இருந்த லாக்கருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ஒரு லேஸ் பாக்கெட்டைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தனர். ஏதோ சிரிக்கும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த போது எல்லா குழந்தைகளும் தங்களை புன்னகையுடன் பார்ப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டனர்.
“ நைனா, அவங்க நம்ம ரெண்டு பேரையும் பார்த்து சிரிக்குறாங்க அப்போ நம்மள கடிச்சு சாப்பிட மாட்டாங்க நினைக்குறேன். வா போய் அவங்கள சந்திப்போம் “ என்று மைரா சொல்ல, “ சரி ஆனா அதுக்கு முன்னாடி லேஸ் பாக்கெட் காலி பண்ணுவோம் “ என்றாள் நைனா.
“ நாம இத அவங்க கூட பகிர்ந்துக்குவோம் “ என்று மைரா சொன்னதும் இருவரும் வெளியே வந்து லேஸ் பாக்கெட்டை மாணவர்களிடம் நீட்டினார்கள். அவர்கள் ஒவ்வொருவராக முன்னால் வந்து அதிலிருந்து ஒன்றை எடுத்தார்கள். மெல்ல மெல்ல அவர்கள் அறிமுகம் செய்து கொள்ள, மைரா பெஞ்சுகளை நகர்த்தி தரையில் உட்கார்ந்தாள்.
“ எங்க பக்கத்துல உட்காருங்க அதுக்கு அப்புறம் நீங்க ஒவ்வொருத்தரா பாடுறத நாங்க கேட்போம். நீங்க பாடுறதுல என்ன திருத்தம் செய்யணும்னு குறிப்பெடுத்த அப்புறம் உங்களுக்கு ட்ரைனிங் தர நாங்க பிளான் பண்ணுவோம் “ என்று மைரா சொன்னதை கேட்டதும் குழந்தைகள் தலையை ஆட்டி மைராவுக்கும் நைனாவுக்கும் எதிரே அமர்ந்தனர்.
மைரா குழந்தைகளை ஒவ்வொருவராகப் பாட வைத்து, அவர்களின் பலம் மற்றும் பலவீனமான அம்சங்களைக் குறித்துக் கொண்டாள். இரண்டு மணி நேர முடிவில், அடுத்த நாளிலிருந்து பயிற்சியைத் தொடங்குவதாக அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பினாள்.
மாலையில் அவர்கள் காட்டேஜுக்கு திரும்பிய போது, வாயிலுக்கு முன்னால் மிகவும் பழக்கமான கார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை மைரா கண்டாள். அவள் அதை நோக்கி விரைந்த போது அவளுடைய மொபைல் ஒலிக்கத் தொடங்கி அவள் நின்று மொபைல் திரையில் இருந்த பெயரை பார்த்து உடனடியாக அதற்கு பதிலளித்தாள்.
“ ராகேஷ் சார், கேஷவ் இங்க வருவாருன்னு உங்களுக்குத் தெரியுமா? “ என்று மைரா கேட்டதும், “ இல்ல மைரா, கேஷவ் இங்க இல்ல ஆனா நீங்க இங்க தங்குற வரை பயன்ப்படுத்த அவனோட பழைய காரை உங்களுக்காக அனுப்பி இருக்கான். டிரைவர் உங்கள எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போவாரு. அப்புறம் நீங்க என்ன தப்பா நினைக்கலனா உங்களுக்கு டிரைவிங் கத்துக்கொடுக்க ஒரு பயிர்ச்சியாளர ஏற்பாடு செய்றேன். உங்களுக்கு சம்மதமா ? “ என்று கேட்டார் ராகேஷ்.
அவர் சொன்னதை கேட்டு ஆதிற்சியான மைரா, “ நான் கார் ஓட்ட கத்துக்கணுமா ? “ என்று கேட்டாள் அதற்கு ராகேஷ் அவளிடம், “ ஆமா மைரா, ரொம்ப நேரம் இல்ல, காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம். நீங்க எங்கேயாச்சும் போக நெனச்சா யாரையும் எதிர்ப்பார்த்து இருக்க வேணாம் “ என்று சொன்னார்.
அவர் வார்த்தையை கேட்டதும், “ நீங்க சொல்றது சரி தான், ஆனா “ என்று தயங்கினாள் மைரா அப்போது அவள் தோளில் கை வைத்த நைனா, “ மைரா, சம்மதம் சொல்லு. காலையில, சாயங்காலம் நமக்கு போதுமான நேரம் இருக்கும் அத உபயோகமா பயன்ப்படுத்துவோம் “ என்று சொன்னாள்.
“ சரிங்க சார். நீங்க செய்ற எல்லாத்துக்கும் நன்றி “ என்று மைரா சம்மதம் சொன்னதும், “ ப்ளீஸ் நன்றி எல்லாம் சொல்ல வேணாம். உங்க கிட்ட இன்னொரு வேண்டுகோளும் வைக்குறேன். இந்த ஞாயிற்றுக்கிழமை என் அம்மாவோட பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நீங்க குடும்பத்தோட வரணும்னு என் குடும்பத்துல இருக்க எல்லாரும் விரும்புறாங்க. என் வீட்ல அப்பா, அம்மா, மனைவி, அப்புறம் எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. நீங்க வந்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா வாங்க ப்ளீஸ் “ என்று ராகேஷ் கேட்டுக்கொண்டதும், “ கண்டிப்பா வரேன். எத்தனை மணிக்கு வரலாம்? “ என்று கேட்டாள் மைரா.
“ நைட்டு டின்னருக்கு சந்திப்போம், எல்லாரும் வரணும் “ என்று ராகேஷ் அழைப்பு விடுத்தார்.
மைரா நன்றி சொல்லி அழைப்பை துண்டித்து காரின் பானட்டைத் தொட்டாள். காருக்குள் இருந்த ஒரு போட்டோ அவள் கவனத்தை ஈர்த்ததும் அவள் பயணிகள் இருக்கையின் கதவைத் திறந்து அமர்ந்தாள். மதனின் 60வது பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட இரு குடும்பங்களின் புகைப்படத்தை அவள் பார்த்தாள். க்ரிஷுக்கும், கேஷவுக்கும் நடுவில் மைரா நின்று கொண்டிருந்தாள், க்ரிஷும், கேஷவும் அவள் தலைக்குப் பின்னால் விரல்களால் கொம்புகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். அவள் புன்னகையுடன் அதைத் தொட்டாள், அவள் விரல்கள் க்ரிஷைத் தொடுவதற்குள் அவள் கையை விலக்கிக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினாள், ஆனால் இன்னும் புன்னகை அவள் முகத்தை அலங்கரித்தது.
அவளும் நைனாவும் உள்ளே சென்று ராஜன் மற்றும் வசுந்தராவிடம் அனைத்து விவரங்களையும் கூறிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றனர்.
**************************************************
முன்னோட்டம்:
“ கேஷவ், நீ இப்ப தானே மைராவோட ரோஜா செடிக்கு தண்ணி ஊற்ற போன ஆனா அதுக்குள்ள வந்துட்ட ? செடிக்கு தண்ணி ஊற்றலையா? என்ன ஆச்சு ? “

1 comment
[…] ஒரு கடைசி ஆசை […]