Home Family13. நானும் கேஷவும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்

13. நானும் கேஷவும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்

by Siragugal Novels
32 views

க்ரிஷிடம் பேசிய பிறகு அழைப்பை துண்டித்த மைரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நைனாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். பின்னர் அவள் திரும்பி வசுந்தராவும் அர்ச்சனாவும் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

“ உன்ன நெனச்சு நாங்க பெருமைப்படுறோம் மைரா. நீ இதுல இருந்து வெளிய வருவனு எனக்குத் தெரியும். இப்போ போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு ரிலாக்ஸ் பண்ணு “ என்று வசுந்தரா கூறினார்.

“ அம்மா நாங்க இப்போ கிளம்பனும் இல்ல நாங்க லேட்டா தான் அங்க போய் சேருவோம். நான் ஒரு கார் புக் செய்றேன் “ என்று நைனா சொன்னாள் ஆனால் அர்ச்சனா அவளை தடுத்து, “ அதெல்லாம் ஒண்ணும் வேணாம். கேஷவ் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டான். உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போக சீக்கிரம் கார் வரும். நிகழ்ச்சி தொடங்குறதுக்கு முன்னாடியே பாடகர்கள நீங்க சந்திக்க ஏற்பாடு பண்ணி இருக்கான் அது மட்டும் இல்ல, நிகழ்ச்சிக்கு நடுவுல கூட நீங்க எப்போ வேணும்னாலும் வீட்டுக்கு கிளம்பி வரலாம்னு கேஷவ் சொன்னான். இப்போ உங்கள கூட்டிட்டு போக வரப் போறவரோட மொபைல் நம்பர் வாங்கி வெச்சுக்கோங்க “ என்று கேஷவ் சொன்ன அனைத்து தகவலையும் கூறினார்.

“ நீங்க எப்போ திரும்பி வருவீங்கனு எனக்கு மெசேஜ் பண்ணுங்க. அப்புறம் எல்லா பிரபலங்ககூட செல்ஃபி எடுத்துட்டு வாங்க. பக்கத்துக்கு வீட்ல எல்லார்கிட்டயும் காட்டி பெருமை பேசுவோம் “ என்று சொன்ன வசுந்த்ராவின் வார்த்தைகளைக் கேட்டு மைராவும் நைனாவும் சிரித்தனர். அப்போது கேட்டுக்கு முன்னால் டயர் கிரீச் சத்தம் கேட்டது. காரில் இருந்து ஒரு நபர் இறங்குவதைப் ராஜன் பார்த்தார். அந்த நபர் தன்னை வருண் என்று அறிமுகப்படுத்தி தனது தொடர்பு விவரங்கள் மற்றும் அடையாளச் சான்றுகளை அவர்களிடம் வழங்கினார்.

மைராவும் நைனாவும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினார்கள்.

“ நீங்க கெட்சப் கூட வேலை பண்றீங்களா.. அதாவது கேஷவ் கூட ? “ என்று மைரா கேட்டதும், “ ஆமா ஆனா இல்ல, நான் அவர் ஆபீஸ்ல பகுதிநேர வேலை செய்றேன், ஆனா இன்னைக்கு நடக்க போற இசை நிகழ்ச்சி மாதிரி பிரபலங்களுக்கு நிகழ்ச்சிகள ஏற்பாடு செய்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியில கூட நான் வேலை செய்றேன் “ என்று விளக்கம் கொடுத்தான் வருண்.

“ அப்போ நீங்க பிரபலங்கள அடிக்கடி சந்திப்பீங்க தானே ? “ என்று நைனா கேட்டதும், “ ஆமா, பெரும்பாலான கலைஞர்கள் ரொம்ப பணிவா இருப்பாங்க அதே சமயம் சிலர் சொர்க்கத்துல இருந்து வந்தவங்க மாதிரியும் அவங்கள சுத்தி இருக்க எல்லாமே அவங்களுக்குச் சொந்தமானது மாதிரியும் நடந்துக்குவாங்க. அந்த மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து நான் விலகியே இருப்பேன் “ என்று சொன்னான் வருண்.

“ இன்னைக்கு நடக்க போற நிகழ்ச்சியில கலந்துக்க போற கலைஞர் எல்லாரும் எப்படி ? அவங்க எனக்கு ரொம்ப புடிச்சவங்க, கனிவா இருப்பாங்கனு நம்புறேன் “ என்று மைரா சொன்னதம், “ அவங்க  உங்கள மரியாதையோட நடத்துவாங்க அதனால நீங்க கவலைப்பட வேண்டியதில்ல மேடம் “ என்று சொன்னான் வருண் ஆனால் மைரா உடனே, “ ப்ளீஸ், என்ன மைரா சொல்லி கூபிடுங்க “ என்றாள்.

“ என் நெறிமுறை உங்கள அப்படி பெயர் சொல்லி கூப்பிட அனுமதிக்காது “ என்று வருண் சொன்னதும், “ நெறிமுறையா ? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டாள்.

தன் புருவத்தை சொரிந்த வருண் என்ன சொல்வது என்று யோசித்த பிறகு, “ அதாவது, நான் எல்லாரையும் சார், மேடம் சொல்லி கூப்பிடுறது தான் வழக்கம், அதனால அத உடனடியா மாத்துறது ரொம்ப கஷ்டம். நீங்களும் இதை பொருட்படுத்த மாட்டீங்கன்னு  நம்புறேன் “ என்று சொல்லி சமாளித்தான்.

“ அது சரி. ஒரு இசை நிகழ்ச்சியில கலந்துக்குறது இது தான் முதல் முறை. வி.வி.ஐ.பி பாஸ் கெடச்சுதுல என்ன சிறப்பு? “ என்று மைரா கேட்க, “ நாம அங்க போனதும் உங்களுக்கு தெரியும். உண்மைய சொல்லனும்னா இத வி.வி.ஐ.பி பாஸ் சொல்றத விட ஸ்பெஷல் பாஸ் சொல்லலாம் “ என்றான் வருண்.

வருணின் வார்த்தையின் அர்த்தம் புரியாமல் நைனா மைராவைப் பார்த்தாள், அவளும் எதுவும் புரிந்து கொள்ளாமல் தோள்களைக் குலுக்கினாள். அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் வேறு நுழைவாயில் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். மைராவும் நைனாவும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு வருணைப் பின்தொடர்ந்து கதவில் பெயர்கள் எழுதப்பட்ட வரிசை அறைகளுக்குச் சென்றனர்.

“ இது எல்லாமே கிரீன் ரூம், நிகழ்ச்சி முடியுற வரை கலைஞர்கள் இங்க தான் இருப்பாங்க “ என்று வருண் சொன்னதும் கதவில் இருந்த பெயரைப் பார்த்ததும் மைரா அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் பெருமூச்சு விட்டாள்.

“ நிஜமாவே நாம் இங்க தான் இருக்கோமா வருண் ? “ என்று மைரா கேட்க, “ இந்த நிகழ்ச்சிக்கு உங்களுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் கிடைச்சு இருக்குனு நான் சொன்னது நிஜம் தான். இப்போ உங்களுக்கு புடிச்ச பிரபலங்கள சந்திக்க வேண்டிய நேரம். இந்த ரூம் உள்ள இருக்க நபர் கிட்ட இருந்து தொடங்குவோம் “ என்று வருண் கூறினான்.

எல்லாமே நிஜம் என்று உணர்ந்த மைரா, “ அய்யோ கடவுளே நைனா, என் உடம்பு நடுங்குது, எனக்கு பதட்டமா இருக்கு “ என்று உற்சாகத்தில் பல உணர்சிகளை ஒரே நேரத்தில் உணர்ந்தாள். அவளது எதிர்வினையை கண்டு வருண் சிரித்துக் கொண்டே இரண்டு முறை கதவைத் தட்டினான். அவர்கள் உத்வேகமாக கருதிய பிரபல பாடகி மற்ற தனது நிகழ்ச்சிக்கு தயாராக இருப்பதைக் கண்டு மைராவும் நைனாவும் மகிழ்ச்சியில் கத்தினர்.

“ நான் கனவு காண்றேனா ? நான் உங்க முன்னாடி நின்னுகிட்டு இருக்கேன்னு என்னால நம்பவே முடியல மேடம் “ என்று மைரா சொல்ல, “ என்னோட தீவிர ரசிகைய சந்திச்சதுல ரோமப் சந்தோஷம், எப்படி இருக்கீங்க மைரா? “ என்று கேட்டு அந்த பாடகி  மைராவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

“ என் பெயர் உங்களுக்கு தெரியுமா? “ என்று மைரா கேட்க, “ ஆமா, இந்த நிகழ்ச்சி உங்களுக்கு புடிக்கும்னு நம்புறேன் “ என்றார் அந்த பாடகி. 

“ நான் உங்கள ஒருமுறை கட்டிப்பிடிக்கலாமா? ப்ளீஸ் “ என்று மைரா கேட்டதும் அந்த பாடகி சரி என்று முணுமுணுக்க, மைரா அவரை அணைத்துக் கொண்டாள், அவளை  தொடர்ந்து நைனாவும் அவரை கட்டிப்பிடித்துக் கொண்டாள். மைரா அந்த தருணத்தில் அந்த பாடகி மீதான தனது அன்பை முழுமையாக வெளிப்படுத்தினாள். மைராவையும், நைனாவையும் வி.வி.ஐ.பி பிரிவின் முன் வரிசைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு வருண் அவரகளை மற்ற கலைஞரைச் சந்திக்க அழைத்துச் சென்று அனைவருடனும் செல்ஃபி எடுத்தான்.

“ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால நீங்க கிளம்ப முடிவு பண்ணும் போது எனக்கு போன் பண்ணுங்க “ என்று வருண் சொன்னதை கேட்டு சரி என்று சொன்னாள். வருண் சென்ற பிறகு  மைரா பெருமூச்சு விட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். கலைஞரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் முழக்கமிட்டனர்.

“ எனக்கு இப்பவும் இதெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு நைனா. எல்லாம் நிஜமா நடக்குதுன்னு சொல்லு “ என்று மைரா சொல்ல அதற்கு நைனா அவளிடம், “ எனக்கு இதெல்லாம் கனவு இல்லனு சொல்ல யாராச்சும் வேணும். அதுக்கு அப்புறம் நான் உனக்கு சொல்றேன். அந்த கேஷவ் ஹல்க் இத எப்படி ஏற்பாடு செய்தாரு ?” என்று பதிலுக்கு சொன்னாள்.

மைரா புன்னகைத்தபடி,” அவருக்கு அப்புறம் நன்றி சொல்றேன். இப்போ நிகழ்ச்சி தொடங்க போது அதனால அதுல கவனம் செலுத்துவோம். “ என்று தனது கவலையெல்லாம் மறந்து உற்சாகமாக சொன்னாள்.

கலைஞர்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்கள் கூச்சலிட்டு கைதட்டி மகிழ்ந்தனர். 11 மணியளவில் நிகழ்ச்சி முடிந்ததும், வருண் கையில் ஒரு பையுடன் அவர்களை நோக்கி விரைந்து, “ நீங்க நிகழ்ச்சிய முழுஸா ரசிச்சு இருப்பீங்கனு எனக்கு நல்லா புரியுது. நீங்க பசியோட இருப்பீங்க அதனால நான் உங்கள வீட்டுக்கு திரும்ப கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி கொஞ்சம் பீட்சா சாப்பிடுங்க “ என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்தான்.

“ ரொம்ப நன்றி. இந்த நைட்டு என்னால மறக்கவே முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரொம்ப ரசிச்சேன் “ என்று மைரா சொல்ல, வருண் அவள் வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்து அவர்களை வீட்டிற்கு அழைத்துச் விட்டுவிட்டு புறப்பட்டு சென்றான்.

மைராவால் தனக்கு பிடித்த பாடகியை சந்தித்தது பற்றி பெற்றோரிடம் புலம்புவதை நிறுத்த முடியவில்லை. அவள் எல்லா புகைப்படங்களையும் அவர்களிடம் காட்டிய பிறகு அவர்கள் தூங்கச் சென்றபோது அதிகாலையாகிவிட்டது.

மைரா ஊட்டிக்கு ஒரு மாதம் கிளம்புகிறாள் என்ற எண்ணத்தில் க்ரிஷ் விழித்துக் கொண்டிருந்தான். அதிகாலையில் அவன் தனது பொருட்களை பேக் செய்து கொண்டு சென்னை திரும்பி ஆயத்தமானான். அவன் தயாராக இருப்பதைப் பார்த்த ரோஷினி எரிச்சலுடன் ஒரு பார்வை பார்த்தாள்.

“ இவ்ளோ காலையில எங்க போற க்ரிஷ் ? “ என்று ரோஷினி கேட்டதும், “ மைரா ஊட்டி போறதுக்கு முன்னாடி நான் அவளை சந்திக்கணும். இன்னைக்கு விட்டா ஒரு மாசத்துக்கு நான் அவள சந்திக்க முடியாது “ என்றான் க்ரிஷ்.

“ உன் அண்ணன் உன்ன ரெண்டு நாள் இங்க இருக்கச் சொல்லலையா? மைரா ஊட்டிக்கு கிளம்புற வரை நீ சென்னையில இருக்குறத அவர் விரும்பலனு உனக்கு புரியலையா? கடவுளே  க்ரிஷ், கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி செய். நீ என்கூட இருக்க விரும்பலையா? இப்ப நான் உன் வருங்கால மனைவி இல்லையா? நீ என்ன லவ் பண்றியானு எனக்கு இப்போ சந்தேகமா இருக்கு “ என்று ரோஷினி சொன்னதும் க்ரிஷ் மெல்ல அவளை பார்த்து, “ ஸாரி, உனக்கு புரியும்னு நினைக்குறேன், நான் அவங்கள மிஸ் பண்றேன் “ என்று மெல்லிய குரலில் கூறினான்.

ரோஷினி அவனை கட்டிப்பிடித்ததும் க்ரிஷ் கண்களில் கண்ணீருடன் பதிலுக்கு அவளை கட்டிப்பிடித்து கொண்டான்.

மைராவின் வீட்டில், அவள் எழுந்தபோது, அவர்களின் பொருட்கள் பேக் செய்யப்பட்டிருப்பதைக் கண்டாள், வசுந்த்ராவும் அர்ச்சனாவும் சமையலறையில் சில உணவுகளை பேக் செய்வதில் மும்முரமாக இருந்தனர்.

“ மைரா, நீ எழுந்துட்டியா? சரி ரெடியாகு, இன்னும் ரெண்டு மணி நேரத்துல வீட்ல இருந்து கிளம்பனும், நைனாவையும் எழுப்பு. ரயில்வே ஸ்டேஷன் போக அப்பா கார் புக் பண்ணி இருக்காரு. கேஷவோட பிரெண்ட் நம்ம எல்லாரையும் கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கூட்டிட்டு போக ஆள் அனுப்புவாரு “ என்று வசுந்தரா சொல்லிக் கொண்டே வேலை செய்தார்.

“ கெட்சப்புக்கு நான் நன்றி சொல்லனும் மா. நான் அவர் கிட்ட பேசிட்டு வரேன் “ என்று சொல்லி மைரா தனது அறைக்குத் திரும்பி கேஷவின் எண்ணை டயல் செய்தாள், ஆனால் அது அணைக்கப்பட்டிருந்தது. எனவே அவள் அவனுக்கு நன்றி செய்தி அனுப்பி, நைனாவை எழுப்பினாள்.

இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் ரயில் நிலையத்திற்கு சென்றதும் அர்ச்சனாவும், மதனும் மைராவை கட்டிப்பிடித்து ஊட்டியில் இனிதாக வாழ வாழ்த்தி குடும்பத்தை வழியனுப்பி வைத்தனர்.

கோவை ரயில் நிலையத்திலிருந்து அவர்களை அழைத்துச் செல்ல கேஷவின் நண்பர் அனுப்பிய காரில் மைராவும் குடும்பத்தினரும் ஊட்டியை அடைந்தனர். காரில் இருந்து இறங்கிய மைரா அவர்களுக்கு முன் இருந்த காட்டேஜை பார்த்தாள். ஒரு மினி தோட்டம் மற்றும் முன்புறத்தில் ஒரு ஊஞ்சலுடன் மிகவும் அழகாக இருந்தது. டிரைவர் அவர்களின் லக்கேஜை ஹாலில் வைத்துவிட்டு சாவியை அவர்களிடம் கொடுத்தார்.

“ மேடம், நீங்க எல்லாரும் குளிச்சு ரெடியா இருங்க. நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன். அப்புறம் பிரின்சிபாலை சந்திக்க கூட்டிட்டு போறேன் “ என்று டிரைவர் சொன்னதும், “ அவர் பெயர் என்ன? “ என்று மைரா கேட்டாள்.

“ அவர் பெயர் ராகேஷ். ஸ்கூல் இங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கு. ராகேஷ் சார் வீடும் ஸ்கூல் பக்கத்துல தான் இருக்கு “ என்று டிரைவர் சொன்னதும் ராஜன் அவருக்கு நன்றி சொன்னார்.

மைராவும், நைனாவும் ஒரு அறையிலும், ராஜன், வசுந்தரா வேறு அறையிலும் தங்க முடிவு செய்து அவரவர் அறைக்கு சென்றனர். ஒரு மணி நேரத்தில் தயாராகி ஹாலுக்கு வந்த போது டிரைவர் ஏற்கனவே தட்டுகளை வைத்துக் கொண்டிருந்தார்.

“ இது வீட்ல சமைச்ச சாப்பாடு அதனால நீங்க கவலையில்லாம தைரியமா சாப்பிடலாம் “ என்று டிரைவர் சொன்னதும், “ நாங்க எதிர்பார்த்ததை விட அதிகமா செய்றீங்க, ரொம்ப நன்றி “ என்றாள் மைரா. அதற்கு அவர், “ நீங்க எங்க ப்ரின்சிபாலோட விருந்தினர் அதனால உங்களுக்காக எல்லாத்தையும் நான் கவனிச்சுக்குறேன் “ என்று சொன்னார்.

அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் மைராவும் நைனாவும் மட்டுமே ப்ரின்சிபாலை சந்திக்க முடிவு செய்து  பள்ளியை அடைந்தனர். டிரைவர் அவர்களை ஓய்வறையில் காத்திருக்குமாறு கூறிவிட்டு மைராவின் வருகையை தெரிவிக்க ப்ரின்சிபாலின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் வெளியே வந்து மைராவையும் நைனாவையும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

“ வணக்கம் சார், நான் மைரா, இவங்க என் ப்ரெண்ட நைனா “ என்று மைரா தங்களை அறிமுகம் செய்ததும், “ உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் மைரா. நான் ராகேஷ், உங்களுக்கு காட்டேஜ் புடிச்சு இருக்கா ? “ என்று கேட்டார் ராகேஷ்.

“ ரொம்ப அற்புதமான இடம், எங்க எல்லாருக்கும் ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ ரொம்ப நல்லது, நீங்க இங்க இருக்குற வரை வேலை எல்லாம் செய்ய ஒரு வேலைக்காரனையும், ஒரு சமையல்காரரையும் ஏற்பாடு பண்ணி இருக்கேன். ஸ்கூல் 9 முதல் 4 வரை. நான் உங்கள ஆர்ட்ஸ் டீச்சருக்கு அறிமுகப்படுத்துறேன். ஸ்டுடென்ட்ஸுக்கு ட்ரைனிங் கொடுக்க டைம் டேபிள் அவங்க உங்களுக்கு தருவாங்க “ என்று ராகேஷ் சொன்னார் அதற்கு மைரா அவரிடம், “ ஸ்டுடென்ட்ஸ் புதுசா ஒருத்தர் கிட்ட ட்ரைனிங் எடுத்துக்க தயாரா இருப்பாங்களா ? “ என்று கேட்டாள்.

“ பசங்களுக்கு உங்கள முறையா அறிமுகம் செய்வோம். உங்கள பத்தி கேஷவ் நிறைய சொல்லி இருக்கான். பசங்க கிட்ட நீங்க நல்லா பழகுவீங்கனு நம்புறேன். நம்பிக்கையோட வேலை செய்யுங்க “ என்று நம்பிக்கை அளித்தார் ராகேஷ்.

“ என்னோட முழு திறமையும் கொடுத்து பசங்கள ட்ரைன் பண்ணுவேன் “ என்று மைரா சொன்னதும் புன்னகைத்த ராகேஷ், “ உங்கள ஸ்கூலுக்கு பிக்-அப் பண்ணி ட்ராப் பண்ண கார் வேணுமா, ஆட்டோ வேணுமா? “ என்று கேட்டார் ஆனால் மைரா மறுத்துவிட்டு, “ இல்ல, நான் நடந்து வர விரும்புறேன் “ என்று சொன்னாள்.

“ அப்போ சரி. பியூன் கிட்ட சொல்லி உங்கள ஆர்ட்ஸ் டீச்சர் கிட்ட கூட்டிட்டு போக சொல்றேன். நாளையில இருந்து நீங்க வேலைக்கு வரலாம் “ என்று ராகேஷ் சொன்னதும், “ நீங்க கேஷவுக்கு ஸ்கூல் ஃப்ரெண்டா இல்ல காலேஜ் ஃப்ரெண்டா ? “ என்று கேட்டாள் மைரா.

“ நானும் கேஷவும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். நீங்க என்ன பார்த்துருக்க மாட்டீங்க ஆனா எனக்கு உங்கள நல்லா ஞாபகம் இருக்கு மைரா “ என்று ராகேஷ் புன்னகையோடு சொன்னதும், “ ஒஹ் அப்படியா ? ஸாரி அவர் எப்பவும் ஒதுங்கியே இருப்பாரு அதுவும் இல்லாம அவரோட ஃப்ரெண்ட்ஸ் கூட அவ்வளவா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது இல்ல “ என்றாள் மைரா.

“ பரவாயில்ல மைரா, இப்போ நீங்க டீச்சர சந்திச்சிட்டு காட்டேஜுக்கு போய் ரெஸ்ட் எடுங்க இல்ல பக்கத்துல இருக்க இடங்கள சுத்தி பாருங்க உங்களுக்கு புத்துணர்ச்சியா இருக்கும் “ என்று ராகேஷ் சொன்னதும், மைரா சரி என்று சொல்லிவிட்டு  பியூனைத் தொடர்ந்து அலுவலகத்தை விட்டு வெளியேறி சில ஆசிரியர்களின் அறிமுகம் கிடைத்து, ஒரு மாதத்திற்கான வேலைக்கான அட்டவணையைப் பெற்றாள்.

******************************************************

முன்னோட்டம்:

“ ராகேஷ் சார், கேஷவ் இங்க வருவாருன்னு உங்களுக்குத் தெரியுமா? “

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 11:57 am

[…] நானும் கேஷவும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 19, 2026 - 11:39 am

[…] 13.நானும் கேஷவும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!