மைரா விபத்து பற்றி சொன்னதை கேட்டதும், கேஷவ் பதறிப்போனான்.
“ என்ன ஆச்சு ? நீ நல்லா இருக்கியா அம்மு ? அடி எதுவும் பட்டுச்சா ? எங்க இருக்க ? இப்போ உன் கூட யார் இருக்காங்க ? நான் உடனே வரேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ அமைதியா இருங்க கெட்சப், நான் நல்லா இருக்கேன் ஆனா உங்க கார் தான் கொஞ்சம் சேதமாயிடுச்சு “ என்று மெல்லிய குரலில் சொன்னாள் மைரா.
“ உனக்கு ட்ரைனிங் கொடுக்குறவரு உன் கூட இருக்காரா? மொபைல் கொஞ்சம் அவர்கிட்ட கொடுக்க முடியுமா? “ என்று கேஷவ் சொன்னதும் மைரா குழப்பத்தோடு மொபைலை பயிற்றுவிப்பாளரிடம் கொடுத்து, அவர் முகம் வெளிறிப் போவதைப் பார்த்தாள். சில நிமிடங்கள் கழித்து அவர் மொபைலை அவளிடம் திரும்ப கொடுத்தார்.
“ கெட்சப், நான் அதை சரி செய்றேன். ஆக்சிடென்ட் பத்தி நான் உங்களுக்கு தெரியப்படுத்த நெனச்சேன் “ என்று மைரா தயங்கியபடி சொன்னதும், “ சேதத்த பத்தி நீ கவலைப்பட வேணாம், கார் ஓட்ட கத்துக்கும் போது இதெல்லாம் நடக்க தான் செய்யும் ஆனா நீ பாதுகாப்பா இருக்கணும், எப்பவும் சீட் பெல்ட் போட்டு தான் கார் ஸ்டார்ட் பண்ணனும் “ என்று அன்பாக சொன்னான் கேஷவ்.
“ நன்றி கெட்சப், உண்மையில நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பினேன், நான் கூஉங்களுக்கு போன் கூட பண்ணேன் ஆனா உங்க மொபைல் சுவிட்ச் ஆஃப் பண்ணி இருந்துச்சு “ என்று மைரா சொன்னதும், “ நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டியதில்ல அம்மு. ஜாக்கிரதையா இரு, நான் ஆண்டு விழாவுக்கு வரேன் அதுவர பாதுகாப்பா இரு “ என்று கேஷவ் அன்பும், அக்கறையோடும் சொன்னான்.
மைரா சரி என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து, பயிற்றுவிப்பாளரின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள்.
“ கேஷவ் என்ன சொன்னாரு ? அவர் உங்களுக்கு நல்லா தெரிஞ்சவரு மாதிரி பேசிட்டு இருந்தீங்க, உங்களுக்கு அவர தெரியுமா? “ என்று மைரா கேட்டதும், “ அவர் தான் உங்களுக்குப் பயிற்சி கொடுக்க என்ன வேலைக்கு நியமனம் பண்ணாரு. அஜாக்கிரதையாக இருந்ததுக்கு என் மேல கோவமா இருக்காரு, என்ன எச்சரிக்க பண்ணாரு “ என்று பயிற்றுவிப்பாளர் சொன்னார்.
அவர் வார்த்தையை கேட்டதும், “ உங்கள வேலைக்கு நியமனம் பண்ணது ராகேஷ் சார்னு நான் நெனச்சேன் “ என்று மைரா குழப்பத்துடன் சொன்னதும், “ இல்ல, கேஷவ் சார் சொல்லி தான் நான் சென்னையில இருந்து இந்த காரை ஓட்டிட்டு வந்தேன். உங்களுக்கு ட்ரைனிங் கொடுக்க தான் அவர் என்ன இங்க அனுப்பினாரு. இப்போ நான் உங்கள வீட்ல இறக்கிவிடுறேன். சாயங்காலம் கார் சரி பண்ணிடுவேன் அதுக்கு அப்புறம் மறுபடியும் ட்ரைனிங் ஆரம்பிக்கலாம் “ என்று பயிற்றுவிப்பாளர் அனைத்து தகவலையும் சொன்னார்.
“ கடைசியா ஒரு கேள்வி. அவர் ஏன் உங்கள தேர்ந்தெடுத்தாரு ? “ என்று மைரா கேட்டதும், “ ஏன்னா, நான் ஒரு மாசத்துல கார் ஓட்ட சொல்லி கொடுக்குறதுல பிரபலம். இந்த வேலையில நீங்க என்ன எக்ஸ்பர்ட் சொல்லலாம். இப்போ கவலைப்பட வேணாம், இன்னும் மூணு வாரத்துல நான் உங்கள முழுசா கார் ஓட்ட ட்ரைனிங் கொடுத்துடுவேன் “ என்று பயிற்றுவிப்பாளர் உறுதியாக சொல்லி புன்னகைத்தார்.
மைரா அவருக்கு நன்றி கூறிவிட்டு வீட்டிற்குத் திரும்பி சமீப நாட்களில் கேஷவ் செய்த அனைத்தையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள், குறிப்பாக அவள் வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தில் இருந்த போது செய்தவை.
வழக்கமான வாழ்கையின் ஓட்டத்துடன் மூன்று வாரங்கள் கழிந்து போனது.
அர்ச்சனாவின் வீட்டில் குடியேறிய ரோஷினி, தனது புதிய வேலையில் சேர்ந்தாள். க்ரிஷ் அவளை அலுவலகத்தில் இறக்கிவிட்டு, மாலையில் அவளை மீண்டும் அழைத்துச் செல்ல தன்னால் முடிந்தவரை முயன்றான். வார இறுதி நாட்களில் ரோஷினி அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிடுவதை உறுதி செய்தாள். மேலும் அவளது முக்கிய கவனம் மைராவை அழைப்பதிலிருந்து க்ரிஷை விலக்கி வைப்பதில் இருந்து, அதில் வெற்றியும் பெற்றாள்.
அர்ச்சனாவும் மதனும் மைராவைப் பார்க்க விரும்பினர், ஆனால் ரோஷினி மற்றும் க்ரிஷ் இருக்கும் போது அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மைராவை சந்திக்க க்ரிஷுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை, எனவே அவர்கள் சந்திப்பதைத் தவிர்த்து அடிக்கடி மொபைல் அழைப்புகளில் பேசினர்.
மைராவும் நைனாவும் தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருந்தனர், இப்போது மாணவர்கள் மேடையில் பாட நன்கு பயிற்சி பெற்றிருந்தனர். ராகேஷ் கூட அவர்களின் மேடை ஒத்திகையைப் பார்த்து மைரா மற்றும் நைனாவுக்கு வாய்ப்பு வழங்கியதற்காக மகிழ்ச்சியடைந்தார்.
ஆண்டு விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மைராவும் நைனாவும் பிஸியாக இருந்தனர். மற்ற பணிகளிலும் ஆசிரியர்களுக்கு உதவியாக இருந்தார்கள். அவர்கள் மாணவர்களுக்கான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்தனர்.
ஒரு சோர்வான நாளுக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பியபோது, ஒரு ஜோடி உள்ளங்கைகள் மைராவின் கண்களைக் மூடியது. மைரா அந்த கைகளை தொட்டதும் அவளுடைய உதடுகள் புன்னகையில் வளைந்தன.
“ அர்ச்சனா அத்த நீங்க எப்போ வந்தீங்க ? “ என்று மைரா கேட்டதும் அர்ச்சனா கைகளை அகற்ற, மைரா உடனடியாக அவரை அணைத்துக் கொண்டாள். பின்னர் அருகில் மதனைப் பார்த்தவள், அடுத்து அவரை அணைத்துக் கொண்டாள்.
“ உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணேன். உங்கள பார்க்காம எப்படி ஒரு மாசம் போச்சுனு தெரியல “ என்று மைரா சொல்ல, “ உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மைரா. எங்க பொண்ணு முதல் முறையா தனியா வேலை பண்ணி இருக்கா அப்போ அத பார்க்க நாங்க இங்க இல்லாம இருக்க முடியுமா ? அதனால கிளம்பி வந்துட்டோம் “ என்று சொன்னார் அர்ச்சனா.
“ ரொம்ப நன்றி அத்த. கெட்சப் எங்க ? ஆண்டு விழாவுக்கு வர்றதா சொன்னாரு “ என்று மைரா கேட்டதும், “ அவன் இப்போ மூணு வாரமா வீட்டுக்கு வரல மைரா. நிச்சயதார்த்தம் முடிஞ்ச மறுநாள் போனவன் தான் அதுக்கு அப்புறம் நாங்க அவன பார்க்கல “ என்று அர்ச்சனா பதில் சொன்னார்.
“ அப்போ நீங்க அவர இங்க ஊட்டியில பார்க்க போறீங்க. ஆண்டு விழாவுக்கு வர்றதா என்கிட்ட சொல்லி இருக்காரு “ என்று சொல்லி மைரா புன்னகைத்தாள்.
“ ரெண்டு பேரும் உன்ன பார்க்க வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க, அதோட உனக்கு நிறைய பரிசும் வாங்கிட்டு வந்துருக்காங்க “ என்று வசுந்தரா சொன்னதும், “ நம்ம மைரா புடவையில அவ்ளோ அழகா இருந்ததால நான் என்ன செய்யணுமோ அத தான் செஞ்சேன். உனக்கும் கொஞ்சம் புடவை வாங்கிட்டு வந்துருக்கேன் மைரா, அதுல இருந்து ஒன்னு நீ ஆண்டு விழாவுக்கு கட்டு “ என்று சொன்னார் அர்ச்சனா.
மைரா உடனே உற்சாகமாக சரி என்று சொல்லி அர்ச்சனாவை இழுத்து சோபாவில் அமர வைத்து அவர் மடியில் தலை வைத்து படுத்தாள். அர்ச்சனா கண்ணீர் விட்டு அவள் தலைமுடியை கோதினார்.
“ மதன் மாமா, அப்பா உங்க கூட விளையாடுறத ரொம்ப மிஸ் பண்ணாரு அதனால அவர் கூட கொஞ்சம் விளையாடுங்க. நாளைக்கு நான் வீட்ல இருக்கேன், நாம நாள் முழுக்க ஒன்னா ஜாலியா இருக்கலாம் “ என்று சொல்லி மகிழ்ச்சியை மைரா வெளிப்படுத்தினாள்.
“ உன் வேலை என்னாச்சு? அதுவும் இன்னும் இரண்டு நாள் தானே எஞ்சியிருக்கு ? “ என்று மதன் கேட்க, “ என் வேலை முடிஞ்சிடுச்சு, அப்படியே நான் தேவைப்பட்டா அவங்க என்ன கூப்பிடுவாங்க. உங்களுக்கு தெரியுமா இங்க இருக்க ஸ்டுடென்ட்ஸ் ரொம்ப நல்லா பழுகுனாங்க அதனால எனக்கு வேலை சுலபமா இருந்துச்சு. எனக்கு இங்க வேலை செய்றது ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று மைரா சொன்னாள். அதற்கு உடனே ராஜன் அவளிடம், “ நீ இங்கேயே செட்டில் ஆகணும்னு ஆசைப்படுறியா ? “ என்று கேட்டார்.
“ இல்ல பா, ஆண்டு விழாவுக்கு மறுநாள் வீட்டுக்கு போகலாம். இத பத்தி ராகேஷ் சார் கிட்ட பேசிட்டேன் “ என்று சொன்ன மைரா, “ அத்த, மாமா உங்க ரெண்டு பேருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க சுத்தமா மறந்துட்டேன் “ என்று சொல்லி எழுந்து அவர்கள் இருவரையும் வெளியே இழுத்து சென்றாள். அவள் என்ன செய்கிறாள் என்பதை நன்றாக அறிந்திருந்த வசுந்தரா, ராஜன் மற்றும் நைனா அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
மைரா காரின் பின் கதவைத் திறந்து அர்ச்சனாவையும் மதனையும் வசுந்த்ராவுடன் அமர வைத்தாள். நைனா பயணிகள் இருக்கையில் ஏறியதும் ராஜன் ஓட்டுவார் என்று அர்ச்சனா எதிர்பார்த்த போது, மைரா ஓட்டுநர் இருக்கையில் ஏறி பெல்ட்டை மாட்டுவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியானார்கள்.
“ மைரா, நீ ஓட்ட போறியா ? ஆனா எப்படி? “ என்று அர்ச்சனா கேட்க, “ கெட்சப்-க்கு தான் நன்றி சொல்லணும். கடந்த 30 நாள்ல அவர் பல விஷயங்கள ஏற்பாடு பண்ணி கொடுத்தாரு. நீங்க அவரோட காரை அடையாளம் கண்டுபுடிக்கலையா ? “ என்று சொன்னாள் மைரா. அதன் பிறகே இருவரும் காரை கவனித்தனர்.
“ ஆமா, கேஷவ் இந்த காரை யூஸ் பண்ணிட்டு இருந்தான் “ என்று மதன் சொல்ல, “ இனி இல்ல, நாங்க இங்கு வந்த மறுநாளே அவர் இதை அனுப்பிட்டாரு. எனக்கு கார் ஓட்ட சொல்லி கொடுக்க ஒருத்தர ஏற்பாடும் பண்ணாரு. உங்க ரெண்டு பேருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சேன். “ என்று மைரா உற்சாகமாக சொன்னாள்.
மைரா மெதுவாக ஆனால் நம்பிக்கையுடன் ஓட்டத் தொடங்கினாள். மைரா முழு மனதுடன் சிரிப்பதைக் கண்டு மகிழ்ந்த அர்ச்சனாவும் மதனும் 2 ரவுண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பினர். அர்ச்சனா மைராவை கட்டிப்பிடித்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ஆசீர்வதித்தார். அன்றிரவு நெருப்பு மூட்டி மகிழ்வுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
“ அத்த, க்ரிஷும் ரோஷினியும் எப்படி இருக்காங்க? ரெண்டு நாளா நான் அவன் கூட பேசல “ என்று மைரா கேட்டதும், “ அவங்க வேலை அப்புறம் சனி, ஞாயிற்றுக்கிழமையில வெளிய போறதுல பிஸியா இருக்காங்க. அவ ஏன் கல்யாணம் இப்போ வேனாம்னு சொன்ன காரணம் எனக்கு இப்போவும் புரியல “ என்றார் அர்ச்சனா. அதற்கு மதன், “ அது நல்லதுக்குத் தான். அவங்க சண்டைய தினம் தினம் பார்க்குற தானே ? “ என்று சொன்னார்.
“ அவங்களே பேசி சரி செய்யட்டும் இல்ல தேவைப்படும் போது நாம பேசுவோம். இப்போ அவங்கள பத்தி பேச வேணாம் “ என்று அர்ச்சனா சொன்னார்.
“ மைரா, நீ வீட்டுக்கு போக தயாரா ? “ என்று ராஜன் கேட்டதும், “ நான் ஏன் தயாரா இருக்க மாட்டேன்? நாம இங்க வேலைக்காக வந்தோம், இப்போ நம்ம வீட்டுக்கு திரும்பி போகணும். அப்பாவுக்கு அங்க வேலை இருக்கு, அது தான் நம்ம வீடு “ என்று நம்பிக்கையோடு சொன்னாள் மைரா.
“ நீ நிஜமா ரெடியா? நீ தினமும் ரோஷினிய பார்க்க வேண்டி இருக்கும் “ என்று வசுந்தரா சொல்ல, “ அப்போ நான் ஒளிஞ்சுக்கணும்னு எதிர்பார்க்கிறீங்களா? நான் அவ கிட்ட இருந்து க்ரிஷ பிரிக்க போறதில்ல. அவங்க அவங்களோட வாழ்க்கைய வாழ போறாங்க, அப்புறம் நான் என் வாழ்க்கைய வாழ போறேன். அவன் என் ப்ரெண்ட, அந்த எல்லையில மட்டும் நாங்க இருப்போம் “ என்று மைரா தெள்ளத்தெளிவாக சொன்னாள்.
அவள் வார்த்தையை கேட்ட ராஜன், “ அது எங்களுக்குத் தெரியும், ஆனா நீ அவங்களை ஒன்னா பார்க்க தயாரா ? இது சரியாக இருக்குமா? “ என்று கேட்டார்.
“ ஒளிஞ்சி இருக்குறது உதவாது பா, என்ன நம்புங்க நான் நல்லா இருப்பேன். இந்த ஜென்மத்துக்குப் போதுமான ஒரு பாடம் கத்துக்கிட்டேன். நான் இனி எப்பவும் பலவீனமா இருக்க மாட்டேன். இப்போ நான் கவனம் செலுத்த ஒரு வேலை இருக்கு, அது எனக்கு நிறைய நம்பிக்க கொடுத்துருக்கு “ என்று மைரா திடமாக சொன்னதை கேட்டதும், “ இத கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, யாரையும் இப்படி உன்ன குறைச்சு மதிப்பிட விடாத “ என்றார் மதன்.
“ என் ரோஜா செடி எல்லாம் எப்படி இருக்கு ? “ என்று மைரா கேட்டதும், “ திடீர்னு ஒரு நாள் எல்லாம் காஞ்சு போச்சு மைரா. அப்புறம் கேஷவ் தான் அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு நிறைய ரோஜா செடி வாங்கிட்டு வந்தான். இப்போ அத பார்த்தா நீ ஆச்சரியப்படுவ “ என்று சொன்னார் அர்ச்சனா.
“ அது இப்போ ஒரு முழு ரோஜா தோட்டமா இருக்கு. தினமும் பூக்கள் பூத்துக் குலுங்குது. பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கு “ என்று மதன் சொன்னதை கேட்டு, “ கெட்சப் அதையும் செய்தாரா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் மைரா.
அர்ச்சனா ஆம் என்று சொல்லி தனது மொபைலில் இருந்த ரோஜா தோட்டத்தின் புகைப்படங்களை மைராவிடம் காட்டினார். மைரா அதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்து தனது வாட்ஸ்அப் புகைப்படமாக அமைத்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து ஆண்டு விழா அன்று அர்ச்சனா வாங்கித் தந்த புடவையிலிருந்து ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்து அணிந்து கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள் மைரா. லேவண்டர் ஷிஃபான் சேலையில் செர்ரி ப்ளாசம் எம்பிராய்டரி மற்றும் அதற்கு மேட்சிங் பிளவுஸ், முத்து நகை அணிந்து அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
மைரா ஹாலுக்கு வந்ததும் அர்ச்சனா திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“ என்ன ஆச்சு ? நான் அழகா இல்லையா? நான் வேற புடவை கட்டனுமா ப்ளீஸ் சொல்லுங்க அத்தை.” என்று மைரா பதற்றத்துடன் கேட்க, “ இல்ல மைரா, இந்த புடவை உனக்காகவே டிசைன் பண்ண மாதிரி இருக்கு. பிரமிப்பா இருக்கு உன்ன பார்க்க “ என்று சொன்னார் அர்ச்சனா.
“ அய்யோ கடவுளே! நீங்க என்ன பயமுறுத்திட்டீங்க அத்த “ என்று சொன்ன மைரா சோபாவில் அமர்ந்து, “ கெட்சப்புக்கு போன் பண்ணீங்களா ? பசங்க எல்லாரும் எப்படி பாடுறாங்கனு அவர் பார்த்த அப்புறம் என்னோட திறமைய பத்தி அவர் கிட்ட நான் கருத்து கேட்கணும். அவர் தான் எனக்கு இந்த வேலைய சிபாரிசு செய்தாரு “ என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள் மைரா. அப்போது அறையில் இருந்து வெளியே வந்த வசுந்தரா, “ அவன் இங்க வர்றதா இருந்தா நமக்கு போன் பண்ணி இருப்பான் ஆனா அவனுக்கு வேலை இருக்கும் அதனால தொந்தரவு செய்ய வேணாம் “ என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அர்ச்சனா, “ ஒரு நிமிஷம் இருங்க. இப்போ தான் ஞாபகம் வந்துச்சு. இந்தப் புடவை, கேஷவ் உனக்காக செலெக்ட் பண்ணான். நிச்சயதார்த்தத்துக்கு என்ன ஷாப்பிங் கூட்டிட்டு போய் எனக்கு, உனக்கு, வசுந்தராவுக்கு புடவை வாங்கிக் கொடுத்தான் அப்போ தான் நானும் உனக்கு புடவை வாங்கினேன். என் பையன் இவ்ளோ அழகா புடவை செலெக்ட் பண்ணுவான்னு எனக்கு தெரியாம போச்சு. வசு, உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி புடவை வாங்கி இருக்கான் “ என்று அர்ச்சனா சொன்னதும், “ எனக்கு இந்த புடவை ரொம்ப புடிச்சு இருக்கு. நான் அப்புறம் அவருக்கு நன்றி சொல்றேன், அப்புறம் நானும் அவருக்கும் ஒரு பரிசு வாங்கி இருக்கேன் “ என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் மைரா.
“ உனக்கு இந்த கலர் ரொம்ப பொருத்தமா இருக்கு “ என்று வசுந்தரா சொன்ன பிறகு அவர்கள் அனைவரும் பள்ளிக்கு புறப்பட்டனர்.
மைரா மாணவர்களை நலம் விசாரித்து இறுதி ஒத்திகை செய்து கொண்டிருந்த போது அவளது மொபைல் ஒலிக்கத் தொடங்கியது, கேஷவின் பெயரை பார்த்ததும் உடனடியாக அதற்கு பதிலளித்தாள்.
“ உங்க மேல நான் கோவமா இருக்கேன் அங்கிள், ஆண்டு விழாவுக்கு வரேன்னு சொன்னீங்க. பசங்க பாடுறத பார்த்துட்டு எனக்கு கருத்து சொல்ல நீங்க இங்க இருக்கணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன் “ என்று மைரா பேசும் போது கேஷவ் சிரிக்க, மைரா தன் உளறலை நிறுத்தினாள்.
“ நான் என் வார்த்தையில இருந்து பின்வாங்க மாட்டேன் அம்மு. என் அம்முவோட திறமை மேடையில பசங்க மூலமா பிரதிபலிக்குறத பார்க்க நான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் “ என்று கேஷவ் சொல்ல, “ ரொம்ப நன்றி கெட்சப், பசங்கள கொஞ்சம் உற்சாகப்படுத்திட்டு வந்து உங்கள சந்திக்குறேன் “ என்றாள் மைரா.
“ சரி அம்மு, நான் நம்ம அப்பா, அம்மா கூட இருக்கேன் “ என்றான் கேஷவ்.
*******************************************
முன்னோட்டோம்:
“ ஆண்களுக்கு வயசு அதிகம் ஆகும் போது பார்க்க ரொம்ப அழகா இருப்பாங்கனு சொல்றது சரி தான் நினைக்குறேன். நீ என்ன சொல்ற அம்மு ? “

2 comments
[…] கேஷவ் உனக்காக செலெக்ட் பண்ணான் […]
[…] 18.கேஷவ் உனக்காக செலெக்ட் பண்ணான் […]