மூன்று நாட்கள் கழித்து மைரா அகாடமிக்கு கிளம்புவதற்காக உடையணிந்து அறையை விட்டு வெளியேறினாள். ஒவ்வொரு மணி நேரமும் கேஷவ் அவளை அழைத்தாலும், அவர்களின் நீண்ட இரவு அரட்டைகளையும் மீறி அவள் கேஷவை மிகவும் மிஸ் செய்தாள். தனிப்பட்ட முறையில் அவனது பாசம், அணைப்புகள் மற்றும் அரவணைப்புகள், அவனது முத்தங்கள் ஆகியவற்றை அவள் மிகவும் மிஸ் செய்தாள். அவன் இல்லாமல் தன்னில் ஒரு பகுதியை இழந்தது போல் உணர்ந்தாள். அவள் சாப்பிட வேண்டும் என்று அவன் விரும்பியதால் அவள் சாப்பிட்டாள், வெறுமையை உணராமல் இருக்க அவள் வேலை வேண்டும் என்று அவன் செய்ய விரும்பியதால் அவள் வேலை செய்தாள், அவள் தூங்கும் வரை அவன் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததால் அவள் தூங்கினாள்.
அர்ச்சனாவும் நைனாவும் காலை உணவுக்காக அவளை இழுத்துச் செல்ல, மைரா கண்களை சந்திக்காத புன்னகையுடன் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். அவள் பாதி உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது அவர்கள் கதவு அழைப்பு மணியைக் கேட்டனர். மதன் சென்று கதவை திறந்து, “ மைரா, உன்ன பார்க்க தான் ஒருத்தர் வந்துருக்காரு “ என்று கூறினார்.
மைரா கையைக் கழுவிவிட்டு கதவின் வாசலை அடைந்தவள், கையில் ஒரு கூடையுடன் ஒருவர் இருப்பதைக் கண்டாள். கூடையையும் ஒரு கவரையும் மைராவிடம் கொடுத்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து கிளம்பினார். மைரா கூடையின் மேல் இருந்த துணியை விலக்கி ஷிஷிமாரு ஒரு பந்து போல சுருண்டு கிடப்பதைக் கண்டாள். அவள் அவனைத் தன் கைக்குள் தூக்கி அவன் ரோமங்களைத் தடவி அவனை தன் மார்பில் அனைத்துக் கொண்டாள்.
“ ஷிஷிமாரு நீ இங்க வந்துட்டியா ? யார் இவன இங்க கொண்டு வந்தாங்க ? “ என்று நைனா கேட்டதும், மைரா ஷிஷிமாருவை நைனாவிடம் கொடுத்து, ‘K’ என்று எழுதப்பட்டிருந்த உறையை பார்த்தாள். அது டெல்லியிலிருந்து வந்துள்ளது என்பைதயும் அதன் மேல் ஒரு டெல்லி தபால் தலை இருப்பதையும் அவள் கவனித்து அதை பிரித்தாள்.
“ ஹலோ அம்மு, நீ என்ன மிஸ் பண்றதால நீ சோகமா இருக்கனு எனக்குத் தெரியும். என்ன நம்பு அம்மு, நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உன் கிட்ட வந்துடறேன். எனக்காக சிரிச்சிட்டே இரு மைரா. ஷிஷிமாருவும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணான் அதனால அவன நல்லா கவனிச்சுக்கோ, நான் திரும்பி வர்ற வரைக்கும் உன் நேரத்தை அவனுக்கு கொடு. கண்ணாடி முன்னாடி நின்னு பாரு, நீ என்ன உன் பக்கத்துல பார்ப்ப. நான் உன் கூட இருக்கேன், உன்ன எப்பவும் பார்த்துட்டே தான் இருக்கேன் அம்மு. ஐ லவ் யூ, இன்னும் 2 நாள் தான்.
உன் கெட்சப் “
அவன் கடிதத்தை படித்து விட்டு மைரா புன்னகைத்தாள், ஆனால் அவளுடைய உதடுகள் துடித்து கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தோடியது. கடிதத்தை முத்தமிட்டு மீண்டும் உறைக்குள் வைத்துவிட்டு தன் அறைக்கு விரைந்தாள். கண்ணாடி முன் நின்று தன் பிரதிபலிப்பைப் பார்த்தாள் அப்போது கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கேஷவின் உருவப்படத்தைப் பார்த்து புன்னகைத்து உடனே அவனை அழைத்தாள். வழக்கம் போல கேஷவ் முதல் ரிங்கில் பதிலளித்தான்.
“ என் பொண்டாட்டி சந்தோஷமா இருக்காளா ? “ என்று கேஷவ் கேட்க, “ நான் சந்தோஷமா இருக்கேன், என் புருஷன் என்ன சிரிக்க வைக்க எல்லாத்தையும் செய்றாரு, ரெண்டு நாள் முடிய நான் காத்துட்டு இருக்கேன். ஐ லவ் யூ கேஷவ் “ என்று மைரா உற்சாகமாக பதில் சொன்னாள்.
“ ஐ லவ் யூ அம்மு எனக்கு கொஞ்ச நேரத்துல ஒரு மீட்டிங் இருக்கு அதனால நான் அத முடிச்சிட்டு உனக்கு போன் பண்றேன். நீ எப்பவும் போல வேலைய பாரு “ என்று கேஷவ் சொல்ல மைரா சரி என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். அவள் ஹாலை அடைந்து நைனாவும் மதனும் விளையாடுவதையும் ஷிஷிமாருவுக்கு உணவளிப்பதையும் கண்டாள். அவள் ஷிஷிமாருவின் அருகில் அமர்ந்ததும் அவன் அவள் மடியில் குதித்தான். மைரா மெதுவாக அவனுக்கு உணவளிக்கத் தொடங்கினாள்.
“ ஒருவழியா நீ உண்மையிலேயே சிரிக்குற. இப்போ இவன் கூட விளையாடு, நான் இன்னைக்கு அகாடமிக்கு போறேன் “ என்று நைனா சொன்னதை கேட்டு குறுக்கிட்ட மதன், “ மைரா, நான் ராஜன கூப்பிடறேன். ஷிஷிமாருவ பக்கத்துல இருக்க பார்க் கூட்டிட்டு போகலாம் “ என்று சொன்னார்.
மைரா சரி என்று சொல்ல, மூவரும் பூங்காவை அடைந்தனர். மைரா ஷிஷிமாருவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், தூரத்திலிருந்து அவளைக் கண்காணிக்கும் காவலாளியை அவள் தவறவிடவில்லை. அவளுக்காக கேஷவ் செய்த ஒவ்வொரு செயலிலும் அவனின் அன்பை உணர்ந்தாள்.
க்ரிஷும், நைனாவும் அடுத்த சந்திப்புக்காக மருத்துவமனைக்கு சென்றனர். இந்த முறை நைனா மற்றும் க்ரிஷ் இருவரையும் மருத்துவர் உள்ளே அழைத்ததும் இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
“ ஹலோ மிஸஸ் க்ரிஷ், நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க? “ என்று டாக்டர் கேட்டதும், “ நாங்க நல்லா இருக்கோம் டாக்டர். நன்றி. “ என்றாள் நைனா.
“ உங்க புருஷன் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்குறாரா ? நான் வேணும்னா அவர அட்மிட் பண்ணி, உங்க கூட வாழ தயாரானதும் திருப்பி அனுப்பட்டுமா ? “ என்று டாக்டர் வேடிக்கையாக கேட்டார்.
“ இல்ல டாக்டர், அவன் நல்லா இருக்கான். சொல்லப் போனா இந்த ஏழு நாளா அவன் ஒரு முறை கூட அவன முட்டாள்னு சொல்லிக்கவே இல்ல. எங்க குடும்பத்துக்காக நாங்க ஒன்னா சேர்ந்து மூணு வேளையும் சமைச்சோம். அவன் ஒரு முறை என்ன நைட்டு டின்னருக்கு கூட்டிட்டு போனான். முதல்ல இருந்தத விட இப்போ அப்பா, அம்மா கிட்ட நிறைய பேசினான். அவன் மறுத்தது நான் கேட்ட சாக்லேட் மட்டும் தான் “ என்று நைனா சொன்னதை கேட்டு டாக்டர் சிரிக்க, வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்த நைனாவை க்ரிஷ் பார்த்தான்.
“ கல்யாணத்துக்கு முன்னாடி உங்க மனைவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கீங்களா? “ என்று டாக்டர் கேட்க, “ வாங்கி கொடுத்துருக்கேன் டாக்டர். நானும் மைராவும் நட்பா இருந்த அப்போ, நைனா எங்க கூட எப்போவாச்சும் வருவா. அப்போ சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்கி இருக்கேன் “ என்று க்ரிஷ் சொல்ல, “ வெரி குட் “ என்றார் டாக்டர்.
அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு டாக்டர் அந்த நபரை அழைத்தார். அவரது உதவியாளர் கையில் ஒரு பெட்டியுடன் உள்ளே நுழைந்து, “ டாக்டர், இன்னைக்கு என் பிறந்தநாள். உங்களுக்கு புடிச்ச சாக்லேட் வாங்கிட்டு வந்துருக்கேன் “ என்று கூறி உதவியாளர் டாக்டரிடம் சாக்லேட் கொடுத்து விட்டு, அவர் நைனாவுக்கும் க்ரிஷுக்கும் கூட சாக்லேட் கொடுத்தார்.
நைனா உடனடியாக ஒன்றை எடுத்து கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தி கூறினாள். க்ரிஷ் தயங்கினாலும் ஒன்றை எடுத்து கொண்டு வாழ்த்து சொன்னான். உதவியாளர் அறையை விட்டு வெளியேறியதும், டாக்டர் சாக்லேட்டின் சுவைக்கு முனகுவதைப் பார்த்து, அவர் அதை முடிக்கும் வரை க்ரிஷும், நைனாவும் காத்திருந்தனர்.
“ இன்னிக்கு இது போதும்னு நினைக்குறேன். க்ரிஷ் நல்லா முன்னேறி வராரு, அடுத்த முறை வரும் போது உங்க ரெண்டு பேரு கிட்டையும் நான் பேசுறேன் “ என்று டாக்டர் கூறினார்.
டாக்டர் க்ரிஷிடம் ஒரு வார்த்தை கூட பேசாததால் க்ரிஷ் நைனாவைப் பார்த்தான்.
“ டாக்டர், நீங்க இன்னைக்கு க்ரிஷ் கிட்ட பேசவே இல்ல. நான் வேணும்னா வெளிய வெயிட் பண்ணட்டுமா ? “ என்று நைனா கேட்டாள்.
“ எதிர்பார்த்தத விட நல்லா முன்னேறியிருக்கார் மிஸஸ் க்ரிஷ். நீங்க அவர பத்தி நிறைய நேர்மறையான விஷயங்கள தான் சொல்லி இருக்கீங்க, இது ஒரு முன்னேற்றம் தானே ? அவர் சரியான பாதையில தான் போறாரு அதனால நாம அடுத்த வாரம் சந்திப்போம் “ என்று டாக்டர் சொன்னதும் க்ரிஷும் நைனாவும் டாக்டரை பார்த்து புன்னகைத்து அறையை விட்டு வெளியேற நன்றி தெரிவித்தனர், ஆனால் டாக்டர் அவர்களை சட்டென தடுத்தார்.
“ க்ரிஷ், சில சமயம் சாக்லேட் கொடுக்கவோ, இல்ல வேற ஒருத்தர் நமக்கு கொடுக்கவோ அவங்க தோழியா, காதலியா, மனைவியா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. நாம செய்ற ஒரு சின்ன விஷயம் ஒருத்தர் முகத்துல சிரிப்ப கொண்டு வரும்னா அத செய்றதுல தப்பு இல்லையே “ என்று டாக்டர் சொன்னதும் க்ரிஷ் தலையை ஆட்டினான்.
நைனா தன் விரல்களை அவனது விரல்களோடு கோர்க்க, அவர்கள் வெளியேறி காரில் ஏறினர்.
மருத்துவமனையில் ரோஷினி கட்டிலில் உட்கார்ந்து சுவரைப் பார்த்தபடி இருந்தாள். ரவுண்ட்ஸ் வந்த அஜய் உணவு தொடப்படாமல் இருப்பதைப் பார்த்தான். அவளது கவனத்தை ஈர்க்க அவன் தனது தடியை கேட்டில் அடித்தான், ஆனால் எந்த பதிலும் இல்லாதபோது அவன் கேட்டைத் திறந்து செல்லுக்குள் நுழைந்தான்.
அவள் விரலில் இருந்த மோதிரத்தை வெறித்துப் பார்ப்பதை அவன் பார்த்தான். அவன் அவளை சில முறை அழைத்தான் ஆனால் ரோஷினி பதிலளிக்கவில்லை. அவன் அவளை மெதுவாக உலுக்க, ரோஷினி திடுக்கிட்டது போல் நடித்து அஜயை பார்த்தாள்.
“ என்ன ஆச்சு ? க்ரிஷ் என்ன பார்க்க வந்துருக்கானா ? என் அப்பா, அம்மா இங்க வந்துருக்காங்களா ? “ என்று ரோஷினி பதற்றத்துடன் கேட்க, “ உனக்கு கொடுத்த சாப்பாடு அப்படியே இருக்கு. இப்போ போய் சீக்கிரம் அத சாப்பிடு, நீ உன்னோட மாத்திரைய வேற சாப்பிடனும் “ என்று அஜய் கூறினான்.
“ என்ன சந்திக்க யாரும் இல்ல. க்ரிஷுக்கு இந்நேரம் கல்யாணம் ஆகியிருக்கும். தயவு செஞ்சு குறைந்த பட்சம் சாப்பாட்டையாவது சாப்பிட சொல்லி என்ன வற்புறுத்தாதீங்க. என் க்ரிஷ பத்தி நெனச்சு அவன் ஞாபகத்துல மூழ்கி இருக்க நான் விரும்புறேன். அவன் இந்த வாழ்நாளுக்கு போதுமான அளவுக்கு எனக்கு நிறைய நினைவுகளை கொடுத்து இருக்கான். இந்த மோதிரத்த பாரு, இது ரொம்ப அழகா இருக்கு தானே ? அவன் இந்த மோதிரத்த கொடுத்து எனக்கு ப்ரொபோஸ் பண்ணான். அவன் மண்டியிட்டு இந்த மோதிரத்த என் முன்னால நீட்டினான். அந்த சிரிப்பு இன்னும் என் மனசுல அப்படியே பதிஞ்சு இருக்கு “ என்று வருத்தமாக அதே சமயம் ஒரு சோக புன்னகையுடன் சொன்னாள்.
“ உனக்கு வலிய மட்டும் கொடுத்த ஒருத்தர பத்தி நினைக்குறத நீ முதல்ல நிறுத்தனும். உன் வாழ்க்கையில கவனம் செலுத்து, ஒரு நாள் நீ இந்த இடத்த விட்டு வெளிய போய் உனக்கு ஒரு வாழ்க்கைய தேடனும் “ என்று அஜய் அவளுக்கு ஆறுதல் சொன்னான் ஆனால் ரோஷினி அவன் வார்த்தைகளுக்கு தலையை மறுத்து ஆட்டினாள்.
“ என் லவ் மேல எனக்கு இன்னும் நம்பிக்க இருக்கு. அவன் என் காதல உணர்ந்து எனக்காக வருவான். எனக்காக அவன் குடும்பத்த எதிர்த்து போராடுவான். நாங்க ஒரு நாள் ஒன்னு சேருவோம், சந்தோஷமா இருப்போம். எதிர்காலத்துல எங்க குழந்தைங்களுக்கு நாங்க பெயர் கூட செலெக்ட் பண்ணி இருக்கோம் ஆனா நான் அத உனக்கு சொல்ல மாட்டேன். அது எனக்கும் க்ரிஷுக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம் “ என்று ரோஷினி சொன்னதை கேட்டதும், “ ஒருவேள அவன் வராம போனா என்ன செய்வ ? “ என்று கேட்டான் அஜய்.
“ என் கடைசி மூச்சு இருக்க வரை நான் அவனோட நினைவுகளோட வாழ்வேன், ஆனா நான் இல்லாம அவனும், என் அப்பா, அம்மாவும் நல்லா இருக்காங்களானு தெரிஞ்சிக்க ஒரே ஒரு முறை அவங்கள சந்திக்க விரும்புறேன் “ என்று சொல்லி கண்ணீர் சிந்தினாள்.
அஜய் தரையில் கிடந்த தட்டை எடுத்து கட்டிலில் அவள் அருகில் வைத்து விட்டு குடத்தில் இருந்த டம்ளரில் தண்ணீரை ஊற்றினான்.
“ நர்ஸ் எப்ப வேணும்னாலும் வந்துடுவாங்க அதனால சாப்பிட்டு முடி “ என்று சொல்லி அஜய் கேட்டைப் பூட்டிவிட்டு சில நொடிகள் அவளைப் பார்த்தான். ரோஷினி தட்டை எடுத்து உணவை மெல்ல சாப்பிட ஆரம்பித்தாள்.
“ கேடுகெட்டவனுங்க, கொஞ்சம் நல்ல சாப்பாடு கூட கொடுக்க முடியாதா ? இது எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான். அதுக்கு அப்புறம் நான் சுதந்திரப் பறவை மாதிரி வெளிய இருப்பேன். இந்த முட்டாள் அஜய விட க்ரிஷ் எவ்வளவோ மேல், இந்த முட்டாள் என்ன சொன்னாலும் நம்புறான், இவன வழிக்கு கொண்டு வர்றது ரொம்ப சுலபம் “ என்று மனதில் நினைத்தால் ரோஷினி.
மதனின் வீட்டில், குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், மைரா விரைவாக உணவை முடித்துவிட்டு ஷிஷிமாருவிடம் விரைந்தாள். அவள் அவனைத் தன் அறையின் பால்கனிக்கு அழைத்துச் சென்று தரையில் அவனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.
“ ஷிஷிமாரு, கெட்சப் ஏன் இவ்ளோ நேரம் வேலை செய்றாரு ? மணி 9 ஆகியும் அவர் இன்னும் வீடுக்கு போகல. இப்போலாம் அவர் அவர சரியா பார்த்துக்குறதே இல்ல “ என்று மைரா சொல்ல, ஷிஷிமாரு மைராவைப் பார்த்து அவள் முகத்தை முகர்ந்து பார்த்து நக்க முயன்றான், ஆனால் மைரா தனது முகத்தை பின்னால் நகர்த்தி ஷிஷிமாருவின் முகத்தை உள்ளங்கையில் வைத்திருந்தாள்.
“ எவ்ளோ தைரியம் இருந்தா என்ன கிஸ் பண்ணுவ ? என் கெட்சப் மட்டும் தான் என்ன கிஸ் பண்ண முடியும். அவருக்கு தெரிஞ்சா உன்ன மறுபடியும் வீட்டுக்கு அனுப்பிடுவாரு, நாம மறுபடியும் தனியா இருப்போம், அதனால நீ நல்லா நடந்துக்கோ “ என்று சொல்லி சிரித்தவள் ஏக்கத்துடன் மொபலை பார்த்தாள்.
“ போன் பண்ணுங்க கெட்சப், நீங்க மீட்டிங் போய் மூணு நேரம் ஆயிடுச்சு. இவ்ளோ நேரம் என்ன தான் பேசுவீங்க ? “ என்று அவள் புலம்பி கொண்டிருந்த போது அவளது மொபைல் ஒலிக்கத் தொடங்கியது, அவள் உடனடியாக அதற்கு பதிலளித்தாள்.
“ நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன் கேஷவா “ என்று மைரா சொல்ல, அவள் அவனை அழைத்த விதத்தில் கேஷவ் சிரித்தான்.
மைரா கோவத்தில் பெருமூச்சு விட்டு அவனை மேலும் புன்னகைக்க வைத்தாள்.
“ என் அம்முவுக்கு என் மேல கோவம் வர மாதிரி நான் என்ன பண்ணேன் ? “ என்று கேஷவ் கேட்க, “ இப்ப என்ன நேரம்? நீங்க ஏன் இவ்ளோ நேரம் வேலை செய்றீங்க ? “ என்று கேட்டாள் மைரா.
“ இது டைரக்டர் அப்புறம் எல்லா கூடுதல் டைரக்டர்கள், இன்ஸ்பெக்டர் எல்லார் கூடவும் நடந்த மீடிங்க அதனால இந்த மாதிரி அதிக நேரம் எடுக்கும், நாங்க பேச வேண்டியது நிறைய இருந்துச்சு “ என்று கேஷவ் பதில் சொன்னதும், “ நீங்க எங்க இருக்கீங்க ? “ என்று கேட்டாள் மைரா.
“ பார்க்கிங் போக லிஃப்ட் ஏறி இருக்கேன். இன்னும் 20 நிமிஷத்துல வீட்டுக்கு போயிடுவேன், 10 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் பண்ணி டின்னர் சாப்பிடுவேன். சமையல்காரர் சமைச்சு வெச்சுருப்பாரு அதனால உடனே சாப்பிடுவேன். நீ சாப்பிட்டியா ? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.
“ ஹ்ம்ம் சாப்பிட்டேன், கெட்சப், ஷிஷிமாரு என்ன கிஸ் பண்ண முயற்சி பண்ணான் “ என்று மைரா சொன்னதும், “ என்னது? அவனுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ? அவன் இப்போ எங்க? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.
“ என் மடியில படுத்துருக்கான். நான் அவன் ரோமத்த வருடிட்டு இருக்கேன். அவனுக்கு அப்படியே சொர்கத்துல இருக்க மாதிரி தோணுது போல “ என்று மைரா சொல்ல, “ இது ரொம்ப மோசம், அவன் உன்ன என் கிட்ட இருந்து திருட பார்க்குறான் அம்மு. இந்த நிமிஷமே அவன கீழ விடு, இல்லாட்டி நான் அவன வீட்டுக்கு அனுப்பிடுவேன், அவன உங்க பக்கத்துல விட மாட்டேன். “ என்று கேஷவ் பொறாமையில் பேசினான்.
“ பொறாம புடிச்ச மனுஷன் நீங்க “ என்று மைரா சொல்ல, “ உன் விஷயத்துல நான் இப்படி தான். உன் கிட்ட நான் மட்டும் தான் எல்லாமே செய்ய முடியும். டிரைவர் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போக ரெடியா இருக்காரு அதனால டின்னர் சாப்பிட்டு முடிச்சிட்டு உனக்கு மறுபடியும் போன் பண்றேன். ஷிஷிமாருவ அவனோட கூடையில படுக்க வெச்சுட்டு எனக்காக பெட்ல வெயிட் பண்ணு “ என்று கேஷவ் கூறினான்.
“ அப்படியே கட்டிப்பிடிக்க இங்க இருக்க போற மாதிரி தான் “ என்று சொல்லி சிணுங்கி மைரா அழைப்பை துண்டித்தாள்.
கேஷவ் காரில் ஏறி சுவிஸில் எடுக்கப்பட்ட வால் பேப்பரில் அவர்களின் படத்தைப் பார்த்தான். வீட்டை அடைந்து விரைவாக தனது வேலைகளை முடித்துவிட்டு படுக்கையில் படுத்து மைராவை வீடியோ அழைப்பில் அழைத்தான்.
மைரா மொபைலை பேலன்ஸ் செய்ய ஹெட்போர்டில் வைத்துவிட்டு குப்புற படுத்துக் கொண்டு அழைப்புக்கு பதிலளிக்கும் போது அவளை ஒரு போர்வையால் மூடினாள்.
“ ஐ லவ் யூ கேஷவ், ஐ மிஸ் யூ.. நீங்க இல்லாம தவிக்குறேன்.. உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் “ என்று சொல்லி அவள் அவனுக்கு காற்றில் முத்தம் கொடுக்க, கேஷவ் பதிலுக்கு அவளை பார்த்து கண்ணடித்தான்.
“ ஐ லவ் யூ, நானும் உன்ன மிஸ் பண்றேன் மைரா. நீ ஏன் எடை குறைஞ்ச மாதிரி இருக்க ? “ என்று கேஷவ் கேட்க, “ என்ன கவனிச்சுக்க நீங்க இங்க இல்ல. உங்க கையாள சாப்பிடுறத மிஸ் பண்றேன். நான் எனக்காக ஸ்நாக்ஸ் ஒன்னு கூட வாங்கல, நீங்க போன அப்புறம் ஸ்நாக்ஸ் எதுவும் சாப்பிடவே இல்ல. நான் வீட்டு சாப்பாடு மட்டும் தான் சாப்பிடுறேன், உங்கள நெனச்சு என் எடை குறைஞ்சு போயிடுச்சு போல “ என்று மைரா அவனிடம் கூறினாள்.
“ ப்ளீஸ் அதிகமா எடைய குறைக்காத, உன்னோட புசுபுசனு இருக்க வயிற தொட எனக்கு ரொம்ப புடிக்கும், நீ நடக்கும் போது உன் இடுப்புல இருக்க அந்த சின்ன மடிப்பு எனக்கு அவ்ளோ புடிக்கும். நீ கொழுகொழுனு இருக்குறது எனக்கு ரொம்ப புடிக்கும் “ என்று கேஷவ் சொல்ல, “ அப்போ உங்க வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு என்கிட்ட வாங்க. எனக்கு உங்கள கட்டிப்புடிக்கணும் போல இருக்கு கேஷவ். ப்ளீஸ் எனக்கு உங்க கையாள ஊட்டி விடுங்க. ஐ மிஸ் யூ கெட்சப் “ என்று சொல்லி மைரா கண்ணீரை மறைப்பதற்காக தலையைக் குனிந்து சட்டென்று துடைத்துக் கொண்டு புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். அவள் தலையைக் குனிந்த கணத்தில் அவன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் என்பது அவளுக்குத் தெரியாது.
“ சனிக்கிழமை நான் உன்கூட அங்க இருப்பேன் மைரா. நீ கேட்ட எல்லாத்தையும் நான் செய்வேன், நீ கேட்காத விஷயங்களையும் நான் செய்வேன். இப்ப சொல்லு நீங்க என்ன டிரஸ் போட்டுருக்க? “ என்று கேஷவ் கேட்டதும், “ நான் உங்க கிட்ட சொல்ல மாட்டேன், காட்டவும் மாட்டேன் அதனால தான் என்ன சுத்தி ஒரு போர்வை போர்த்தி இருக்கேன் “ என்றாள் மைரா.
“ நீ ஒண்ணும் போடாம இருக்கலாம். நான் சொல்றது சரி தானே அம்மு ? “ என்று சொல்லி கேஷவ் கண்ணடிக்க, “ அழுக்கு மனுஷா, நான் உங்க சட்டைய போட்டு இருக்கேன் “ என்றாள் மைரா.
“ சட்டை மட்டுமா ? சனிக்கிழமை நைட்டுக்கு முன்னாடி எதுவும் பார்க்க முடியாதா ? “ என்று கேஷவ் கேட்க, “ இல்ல “ என்று மறுத்துவிட்டாள். அதை கேட்டு கேஷவ் சிரித்தான், அவள் தூங்கும் வரை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவள் தூங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த கேஷவ், நீண்ட நேரத்துக்கு பிறகு அவனும் தூங்க சென்றான்.
********************
முன்னோட்டம்:
“ நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் கெட்சப், நீங்க இல்லாம நான் ஒரு பைத்தியம் மாதிரி இருக்கேன் ஆனா கவலைப்படாதீங்க நான் சரியாயிடுவேன். இது வெறும் 13 வாரம் மட்டும் தான் அப்புறம் நீங்க நான் நல்லா இருக்கணும்னு எல்லாமே செய்றீங்க அதனால என் கோவம், புலம்பல் பத்தி கவலைப்பட வேண்டாம். என்ன நானே சமாளிச்சுக்குவேன் “

1 comment
[…] 87. ரொம்ப கோபமா இருக்கேன் கேஷவா […]