Home Family10. நீ  ரொம்ப தைரியசாலி  அம்மு

10. நீ  ரொம்ப தைரியசாலி  அம்மு

by Siragugal Novels
41 views

வசுந்தராவும் ராஜனும் மைராவின் இருபுறமும் அமர்ந்து அவள் கையைப் பிடித்து ஆறுதல் சொன்னார்கள். கேஷவ் சென்ற மறுகணம் வந்த நைனா ஆத்திரத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தாள். வசுந்த்ரா அவளது கோபத்தை அடக்க விளக்கியதால், அவள் க்ரிஷை அடிப்பதிலிருந்து தனது உள் மிருகத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவளது தோழி மட்டுமே அவளுக்கு முக்கியமாக, அவளுக்கு ஆதரவாக இருந்தாள்.

“ மைரா, ஷாப்பிங் போய் உனக்குப் பிடிச்ச ஏதாவது வாங்கலாம். நான் சொல்றது கேட்குதா? உனக்கு புடிச்ச மாதிரி வாங்குவோம், தயவுசெஞ்சு உன் அலமாரியில இருக்க டிரஸ் எல்லாத்தையும் தூக்கி போடு. இனிமே உனக்கு புடிச்ச மாதிரி டிரஸ் வாங்கு. உனக்கு அழகான, எளிமையான டிரஸ் போட புடிச்சு இருந்தா நாம அது மாதிரி வாங்கலாம். இன்னைக்கே நிறைய அழகான சல்வார்,  புடவை எல்லாம் வாங்குவோம் “ என்று நைனா கூறியதும் மைரா தலையை அசைக்க, நைனா க்ரிஷை மனதிற்குள் சபித்தாள். ஒவ்வொரு முறையும் மைரா ஒரு சேலை, லெஹங்கா அல்லது சல்வாரைத் தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் க்ரிஷ் அவளைத் தடுத்து நிறுத்தி, அவனுக்கு விருப்பமான ஆடைகளை அவள் மீது திணிப்பான். பல ஆண்டுகளாக மைராவின் அலமாரி அவள் வெறுத்த ஆடைகளால் மட்டுமே நிரம்பியது.

“ நான் உங்க கூட வர்றேன், நாம ஷாப்பிங் பண்ணிட்டு வெளிய லஞ்ச், ஐஸ் கிரீம் சாப்பிடலாம் “ என்று வசுந்தரா சொன்னதும், “ நைட்டு டின்னர் வீட்ல, உங்களுக்கு புடிச்சது எல்லாம் நான் சமைச்சு வைக்குறேன் “ என்றார் ராஜன்.

அப்போது மைராவின் மொபைலுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது, அது கேஷவின் நண்பரிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று யூகித்து அவள் பதிலளித்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு அழைப்பை துண்டித்து நைனாவின் அருகில் அமர்ந்தாள்.

“ பிரின்சிபால் கிட்ட இருந்து தான் போன் வந்துச்சு. நாளைக்கு மறுநாள் நம்மள அங்க வர சொன்னாரு, அதுக்கு டிக்கெட் அனுப்புரதாவும் சொன்னாரு. நாம அங்க தங்க ஸ்கூல் பக்கத்துலையே ஒரு காட்டேஜ் புக் பண்ணி இருக்காரு அதனால நாம குடும்பமா வந்தாலும் பிரச்சன இல்லனு சொன்னாரு “ என்று மைரா சொன்னதும், “ ரொம்ப நல்லதா போச்சு. நாம எல்லாரும் ஒரு மாசம் அங்க போலாம். நான் லீவு அப்ளை பண்ணிடறேன் “ என்றார் ராஜன். 

“ அப்பா வேணாம், உங்க வேலைய பணயம் வைக்க வேணாம். இத்தனை வருஷத்துல நீங்க ரெண்டு நாளைக்கு மேல லீவு கேட்டதே இல்லை “ என்று மைரா சொல்ல, “ என் மகள விட என் வேலையோ இல்ல வேற எதுவும் எனக்கு முக்கியமில்லை. நமக்கு நேரமில்ல அதனால பேக்கிங் செய்வோம். கேஷவுக்கு தான் நன்றி சொல்லணும். அடுத்த ஒரு மாசத்துக்கு நம்ம பிஸியா இருக்க போறோம் “ என்றார் ராஜன்.

கேஷவ் தன் வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு வினோதமான மௌனம் அவனை வரவேற்றது. அவன் தன் பெற்றோரின் அறைக் கதவைத் தட்டியதும், க்ரிஷாக இருக்கும் என்று எதிர்பார்த்து முகத்தைச் சுளித்தபடி அர்ச்சனா கதவை திறந்தார் ஆனால் கேஷவைப் பார்த்ததும் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

“ ஒரு வழியா உனக்கு குடும்பம் இருக்குனு ஞாபகம் வந்துடுச்சா ? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ என்னை மன்னிச்சிடுங்க மா. கடைசி நேரத்துல ஒரு மீட்டிங் வந்துடுச்சு. நான் அதுல கலந்துக்கிட்டது நல்லதா போச்சு. ஒரு இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் கிடைச்சுது. மைராவுக்கு பாட்டும் இசை நிகழ்ச்சியும் ரொம்ப பிடிக்குனு நான் அத அவகிட்ட கொடுத்துட்டேன் ஆனா எல்லாரும் ஒருமாதிரி கவலையா இருந்த மாதிரி தெரிஞ்சுது “ என்று கூறினான் கேஷவ்.

“ உன் தம்பி கொடுத்த அதிர்ச்சியில இருந்து நாங்க இன்னும் மீளாம இருக்கோம் “ என்று அர்ச்சனா சொல்ல, “ என்ன ஆச்சு ? “ என்று கேட்டான் கேஷவ்.

“ நாங்க அவனோட பிறந்தநாளுக்கு பிளான் பண்ணோம் ஆனா அவன் ரோஷினிய கல்யாணதுக்கு ப்ரொபோஸ் பண்ணி எங்கள ஆச்சரியப்படுத்திட்டான், அவளும் சம்மதம் சொல்லிட்டா. அவங்க ரெண்டு வருஷமா லவ் பண்றாங்கன்னு இப்போ தான் தெரியுது. உன்னோட அத்த, மாமாவுக்கு ஏற்கனவே எல்லாம் தெரிஞ்சி இருக்கு “ என்று அர்ச்சனா நடந்ததை கூறியதும், “ அதுல ஏதாவது பிரச்சனையா ? அதாவது, அவன் நம்ம எல்லார்கிட்டயும் இருந்து மறைச்சத தவிர வேற பிரச்சன இருக்கா ? “ என்று கேட்டான் கேஷவ்.

“ மைரா யார்கிட்டையும் சொல்லத் தயாரா இல்லை அதனால இத உன்கிட்ட இருந்து மறைக்குறதுக்கு என்ன மன்னிச்சிடு கேஷவ் “ என்று மனதில் நினைத்துக்கொண்ட அர்ச்சனா, கேஷவை பார்த்து, “ வேற பிரச்சன இல்ல கேஷவ், அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு நினைச்சேன். நாங்க அவனுக்கு பிரெண்ட் மாதிரி தான் இருந்தோம், எங்கள விட அவன் அத மைராகிட்ட இருந்தும் மறைச்சிட்டான். ரெண்டு பேரும் ஒன்னா இருந்தாங்க.. நான் என்ன சொல்ல.. உடனே இத பத்தி முடிவு பண்றது கொஞ்சம் கஷ்டம் “ என்று சொன்னார்.

“ எனக்கு புரியுது மா, ஆனா அவன் ரோஷினிய கல்யாணம் பண்ணிக்க விரும்பினா நாம அத செய்யணும். உடனே இல்லனா கூட உங்க சம்மதத்த சொல்லுங்க. கொஞ்சம் மாசம் போன அப்புறம் கல்யாணம் செய்து வைக்கலாம் அதுவும் அவன் முடிவுல உறுதியா இருந்தா மட்டும் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு அர்ச்சனா தலையை ஆட்ட, கேஷவ் க்ரிஷின் அறைக் கதவைத் தட்டினான்.

க்ரிஷ் பதற்றத்துடன் கதவைத் திறந்து, கேஷவைப் பார்த்ததும் உடனடியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தனர், க்ரிஷ் நீண்ட காலமாக விரும்பிய ஒரு வாட்சை கேஷவ் அவனுக்கு பரிசளித்தான்.

“ க்ரிஷ், நான் அம்மாகிட்ட பேசிட்டேன். உன் முடிவுல நீ உறுதியா இருக்கியா ? வாழ்க்க சில விஷயத்துல ரெண்டவாது வாய்ப்பு கொடுக்காது அதனால ரோஷினி தான் உனக்கானவனு உறுதியா நம்புறியா ? “ என்று கேஷவ் கேட்டதும் க்ரிஷ் சற்றும் யோசிக்காமல், “ ஆமா அண்ணா, நான் உறுதியா இருக்கேன் “ என்று பதில் சொன்னான்.

சரி என்று தலை அசைத்த கேஷவ், “ வீட்ல என்ன நடக்குதுன்னு அடிக்கடி போன் செய்வ, உனக்கு ஏதாவது தேவைப்படும் போதும் போன் பண்ணுவ அப்போ ரோஷினிய லவ் பண்றனு ஏன் என் என்கிட்ட சொல்லல? நீ என்கிட்ட சொல்லி இருந்தா யாருக்கும் வருத்தம் இருந்துருக்காது. விஷயம் வேற மாதிரி நடந்திருக்கும் “ என்று சொன்ன கேஷவ், “ இப்போ என்ன செய்ய போற ? “ என்று அவனிடம் கேட்டான்.

“ அம்மாவும் அப்பாவும் என்ன கொஞ்ச நாள் இங்க இருந்து போக சொல்லி இருக்காங்க அதனால நான் பெங்களூர் போலாம்னு இருக்கேன். அங்க இருந்து வேலை செய்றேன் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டதும் யோசித்த கேஷவ், “ அதெல்லாம் வேணாம்,  இந்த நேரத்துல நீ போனா அப்புறம் உனக்கும் அப்பா, அம்மாவுக்கும் நடுவுல விருசல் வர வாய்ப்பு இருக்கு அதனால இங்கேயே அவங்க கூட இரு. நீ விரும்பியபடி எல்லாம் நடக்கும். புரிஞ்சுதா? “ என்று அறிவுரை சொன்னான்.

“ சரிங்க அண்ணா, என்ன மன்னிச்சிடுங்க. “ என்று க்ரிஷ் வருந்தியதும், “ நீ மன்னிப்பு கேட்க வேண்டிய ஆள் நான் இல்ல க்ரிஷ். சில நேரம் நாம கேட்குற மன்னிப்பு கூட நம்மள உண்மையா நேசிக்குற மனுஷங்களோட மனச உடைச்சதுக்கு எந்த ஆறுதலும் தராது, அது ரொம்ப சாதாரணமான வார்த்தையா இருக்கும் “ என்று வருத்தத்துடன் சொன்னான் கேஷவ். அப்போது அவன் வார்த்தையை கேட்ட க்ரிஷ், “ அம்மா என்ன மன்னிச்சிட்டதா சொன்னங்க அண்ணா. எல்லாத்தையும் மறக்க அவங்களுக்கு நேரம் வேணும் சொன்னாங்க “ என்றான்.

“ உனக்கு புரியாது க்ரிஷ். இப்போ ரெடியாகி பெங்களூர் போய்  ரோஷினிய சந்திச்சு எல்லாம் சரியாயிடும்னு ஆறுதல் சொல்லிட்டு ரெண்டு நாள் கழிச்சு வந்துடு “ என்று கேஷவ் சொன்னான் அதற்கு சரி என்று தலை அசைத்த க்ரிஷ், “ நீங்க எவ்ளோ நாள் இங்க இருப்பீங்க அண்ணா ? “ என்று கேட்டான். 

“ நான் சாயங்காலம் கிளம்பறேன் “ என்று கேஷவ் பதில் சொல்லிவிட்டு தன் அறைக்குத் திரும்பினான்.

மைராவின் வீட்டில் அவளும் நைனாவும் அவளுடைய அறையில் இருந்தார்கள். மைரா நைனாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள்.

“ நான் என்ன செய்வேன் நைனா? அவங்க கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணா அதுக்கு அப்புறம் நான் அவங்கள எப்பவும் பார்க்க வேண்டி இருக்கும். என் கண்ணு முன்னாடி அவங்க ரொமான்ஸ் பண்றத பார்க்க எனக்கு தைரியம் இல்ல. இன்னைக்கு காலையில க்ரிஷ் அவள கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணத நான் பார்த்தேன். அவன் ஏன் என்னோட காதலா உணரல? “ என்று மைரா வேதனையுடன் கேட்டாள். 

மைராவின் தலை முடியை கோதிக் கொண்டிருந்த நைனா, “ மைரா இப்படி சொல்றதுக்கு என்ன மன்னிச்சிடு. அவன் உன்ன பிரெண்டா கூட நடத்தலனு நான் நினைக்குறேன். நீ ஆயிரம் முறை அவன உன்னோட பெஸ்ட் பிரெண்ட் அப்படினு சொல்றதால அவனும் உன்ன அப்படி நடத்தினதா அர்த்தம் இல்ல. நண்பர்கள் எதையும் மறைக்க மாட்டாங்க. குடும்பத்துல இருக்கவங்க கிட்ட சொல்ல முடியாத விஷயம் கூட பிரெண்ட் கிட்ட சொல்லுவாங். உனக்கு ரோஷினிய புடிக்காதுன்னு அவனுக்குத் தெரியும், ஆனாலும் அவன் அவள லவ் பண்ணி இருக்கான். சரி அது கூட பரவாயில்ல, குறைந்த பட்சம் உன்கிட்ட அத சொல்லி இருக்கணும் “ என்று கடுப்புடன் சொன்னாள்.

“ நீ ஒரு விஷயத்துல சரியா சொன்ன நைனா. நீ சொன்ன மாதிரி நான் என் காதலை சீக்கிரம் அவன்கிட்ட சொல்லி இருக்கணும் “ என்று மைரா சொல்ல, “ நீ அவன லவ் பண்றது எல்லாருக்கும் தெரியும் போது அவன் உணர்ந்திருக்க மாட்டான்னு நினைக்குறியா ? “ என்று கேட்டாள் நைனா.

“ எனக்குப் பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு, எல்லாத்தையும் இழந்துட்ட மாதிரி தோணுது “ என்று அழுதாள் மைரா.

“ இல்ல, நாங்க உனக்கு இருக்கோம். அது மட்டும் இல்ல இந்த நேரத்துல உன் மனசுக்கு ஆறுதல் தரக்கூடிய எல்லாத்தையும் கேஷவ் ஏற்பாடு பண்ணி இருக்காரு. நீ அவர லவ் பண்ணாம ஏன் க்ரிஷ லவ் பண்ணணு எனக்கு புரியல “ என்று நைனா சொன்னதும், “  நைனா, தயவு செஞ்சு அமைதியா இரு “ என்று மைரா கெஞ்சினாள். அதற்கு அவள் உடனே, “ சரி ரெடியாகு, நாம ஷாப்பிங் போகலாம் “ என்று பதில் கூறினாள்.

மைரா ஜன்னலருகே சென்று க்ரிஷ் தன் பைக்கில் செல்வதைப் பார்த்ததும் அர்ச்சனாவின் வீட்டிற்கு விரைந்தாள். மைராவின் குரல் கேட்டு அர்ச்சனா அவளை இறுக அணைத்துக் கொண்டார்.

“ என்ன மன்னிச்சிடு மைரா. எனக்கு என்ன செய்றதுனு தெரியல, ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு “ என்று அர்ச்சனா கண்ணீர் வடித்தார்.

“ அத்த, தயவு செஞ்சு இப்படியெல்லாம் பேசாதீங்க. இதுல உங்க யாரோட தப்பும் இல்ல. நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன். சீக்கிரம் ரெடியாகுங்க, நாம ஷாப்பிங் போறோம் “ என்று மைரா சொல்ல, “ அப்படியா? நீங்க எல்லாரும் என்னையும் மதனையும் வெறுத்து இருப்பீங்கனு நெனச்சேன் “ என்று விம்மி அழுதார் அர்ச்சனா.

மைராவைத் தொடர்ந்து வந்த வசுந்த்ரா, அர்ச்சனாவின் முதுகில் மென்மையாகத் தட்டிக் கொடுத்து, “ நீங்க மைராவ உங்க சொந்த மகளா நடத்தினீங்க, நம்ம நட்பு உண்ம, எதுவும் நம்மள பிரிக்காது. இப்ப சீக்கிரம் ரெடியாகு. மதன் அண்ணா கிட்ட நாம நைட்டு டின்னருக்கு வருவோம்னு சொல்லிடு. அவர் ராஜன் கூட சேர்ந்து நைட்டு சமைக்கட்டும் “ என்று சொன்னார். 

அர்ச்சனா மைரா மற்றும் வசுந்த்ரா இருவரையும் கட்டிப்பிடித்ததும்,  கேஷவ் செய்த அனைத்தையும் விளக்கினார் வசுந்தரா. தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்டு அவர்கள் அணைப்பில் இருந்து பிரிந்து கேஷவ் கைகளை மார்பில் கட்டியபடி சுவரில் சாய்ந்து நிற்பதை கண்டனர்.

“ அப்படி என்ன எனக்கு தெரியாத விசேஷம் ? நீங்க மூணு பேரும் இவ்ளோ அன்பு மழைய பொழிஞ்சிட்டு இருக்கீங்க. அது என்னன்னு சொல்லுங்க “ என்று கேஷவ் கேட்க, “ வசுந்தரா நீ எனக்கு எதிரியா மாறிட்டனு சொல்லிட்டு இருந்தா. நீ மொத்த குடும்பத்தையும் ஒரு மாசம் ஊட்டிக்கு அனுப்பி வைக்குறதா சொன்னா. மைராவையும் வசுவையும் ரெண்டு நாளுக்கு மேல பார்க்காம நான் வாழ்ந்ததில்ல “ என்று அர்ச்சனா சொன்னார்.

“ இவ்ளோ தான் பிரச்சனையா ? நீங்க சனி, ஞாயிற்றுக்கிழமை ஊட்டிக்கு போய் அவங்கள பாருங்க. நான் உங்களுக்கும், அப்பாவுக்கும் டிக்கெட் புக் பண்றேன் “ என்று கேஷவ் கூறினான். அதற்கு அர்ச்சனா உடனே, “ இல்ல, கொஞ்ச நாள் மைரா  வேலையில கவனம் செலுத்தட்டும். நான் தினமும் வீடியோ கால் பண்ணி பேசுறேன் “ என்று கூறினார். அப்போது அர்ச்சனாவின் கன்னத்தை கிள்ளிய மைரா, “ நீங்க ஒரு நாள் பேசத் தவறினாலும் நான் உங்க கூட சண்ட போடுவேன் “ என்று சொன்னாள்.

மைராவின் நெற்றியில் முத்தமிட்ட அர்ச்சனா, “ நீ என் குழந்த மைரா “ என்று அன்பாக சொல்லி அழ எத்தனிக்க, மைரா அவர்  கையை அழுத்தி கேஷவ் இருப்பதை சைகை செய்தாள், அவன் இன்னும் தன் இடத்தில் வேரூன்றி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ சரி ரெடியா இருங்க நான் போய் என் வேலையை பார்த்துக்கறதுக்கு முன்னாடி உங்கள எங்க வேணும்னாலும் டிராப் பண்றேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ வேணாம் அங்கிள், நாங்க கார் புக் பண்ணி போறோம் “ என்று சொன்னாள் மைரா. உடனே கேஷவ், “ அப்போ என்ன டிரைவர்னு நெனச்சுக்கோ. உனக்கு நேரம் கிடைக்கும் போது எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடு பதிலுக்கு. இப்போ ரெடியாகுங்க “ என்று சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குத் திரும்பியதும் பெண்கள் கிளம்பி ஆயத்தமானார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து கேஷவ் ஒரு மாலுக்கு முன்னால் காரை நிறுத்த, மைரா பயணியர் இருக்கையில் இருந்தும், வசுந்த்ரா, அர்ச்சனா, நைனா ஆகியோர் பின் இருக்கையிலிருந்தும் இறங்கினர். அவர்கள் கிளம்பத் தயாரானபோது கேஷவ் மைராவை அழைத்தான்.

 “ நீ நல்லா இருக்கியா அம்மு ? நாம வீட்ல இருந்து கிளம்புனதுல இருந்து நீ ஒரு வார்த்தை கூட பேசல, இது எனக்கு தெரிஞ்ச மைரா இல்ல “ என்று மெல்ல நிதானமாக கேட்டதும், “ புது வேலை செய்ய போற டெண்ஷன் தான். நான் நல்லா இருப்பேன், நீங்க கேட்டதுக்கு நன்றி கெட்சப் “ என்று பதில் சொன்னாள் மைரா. 

“ நீ  ரொம்ப தைரியசாலி  அம்மு. எதுக்காகவும், யாருக்காகவும் உன்னோட அடையாளத்தை  மறந்துடாத. நான் இன்னைக்கு கிளம்புறேன் ஆனா உனக்கு என்ன வேணும்னாலும் எனக்கு போன் பண்ணு “ என்று கேஷவ் சொன்னதும், “ நன்றி கெட்சப் “ என்றாள் மைரா. 

*****************

முன்னோட்டம்:

“ மைராவோட வேலையை டிஸ்டர்ப் பண்ணாதீங்க பா. இது நிச்சயதார்த்தம் மட்டும் தான், அவங்க இல்லாம இத நாம செய்யலாம். இதை நாம அவசரமா செய்ய வேண்டியிருந்துச்சுனு சொன்னா ராஜன் மாமா புரிஞ்சிக்குவாரு. அவங்கள கல்யாணத்துக்கு கூப்பிடுவோம் “

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 11:48 am

[…] நீ  ரொம்ப தைரியசாலி  அம்மு […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:51 am

[…] 10.நீ  ரொம்ப தைரியசாலி  அம்மு […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!