Home Family17. கெட்சப், என்ன மன்னிச்சிடுங்க

17. கெட்சப், என்ன மன்னிச்சிடுங்க

by Siragugal Novels
25 views

க்ரிஷ்  ரோஷினியை ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட அழைத்து சென்றான். அவர்கள் உணவகத்தை அடையும் வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் உணவகத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்ததும் ரோஷினி அவனைப் பார்த்து புன்னகைத்தபடி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“ என் மேல உனக்கு வருத்தமா? “ என்று ரோஷினி கேட்க, “ இருக்கக் கூடாதா? உனக்கு சென்னையில வேலை கிடைச்சது, இங்கேயே தங்குற திட்டம் இத பத்தி எதுவுமே நீ என்கிட்ட சொல்லல “ என்று சொன்னான் க்ரிஷ். அதற்கு ரோஷினி உடனே, “ வேலை கெடச்சது பத்தி சொல்லலனு கோவமா இல்ல நான் சென்னையில உங்க வீட்ல தங்குறதுக்கு கோவமா ? “ என்று கேட்டாள் ரோஷினி.

“ அதுவும் உன் வீடு தான் ரோஷினி. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எல்லாத்தையும் வெளிப்படையா பேசுவோம்னு நான்  நினைச்சேன், அப்புறம் ஏன் உன் ப்ளான் எல்லாம் சொல்லல? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ நீ சொன்ன எல்லாத்துக்கும் நான் ஒத்துக்கிட்டேன் க்ரிஷ் அதனால என்னோட ஒரு வேண்டுகோளுக்கு நீ ஏன் சம்மதிக்க மாட்டேங்குற ? நான் உன்ன சர்ப்ரைஸ் பண்ண தான் சொல்லாம இருந்தேன் ஆனா மாமா அத பத்தி பேசும் போது எனக்கு வேற வழி இல்லாம சொல்ல வேண்டியதா போச்சு. இனி மாசம் ஒரு முறையோ, ரெண்டு முறையோ ரகசியமா சந்திக்க வேண்டிய அவசியம் இல்ல, நாம ஒன்னா இருப்போம் இதுல உனக்கு சந்தோஷம் இல்லையா? “ என்று உருக்கமாக பேசினாள்.

“ நான் சந்தோஷமா தான் இருக்கேன் ஆனா ஏதோ சரி இல்லாத மாதிரி தோணுது “ என்று க்ரிஷ் சொன்னதும், “ஏன்னா, நீ மைராவ ரொம்ப நாளா சந்திக்காம இருக்குறது இது தான் முதல் முறை, ஆனா இதுக்கு பழகிடு. அவ ரொம்ப பிஸியா இருக்கா, நேத்து டின்னர் பார்ட்டிக்கு போன அவளோட போடோஸ் பார்த்து இருப்பனு நினைக்குறேன். குறைந்த பட்சம் போன் பண்ணியாச்சும் நமக்கு வாழ்த்து சொல்லி இருக்கலாம் “ என்று ரோஷினி முகத்தை சுளித்தாள்.

சரியாக அப்போது க்ரிஷின் மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. திரையில் மைராவின் பெயரை பார்த்ததும் புன்னகையுடன் முதல் ரிங்கிலேயே பதிலளித்தான் க்ரிஷ்.

“ மைரா, எப்படி இருக்க ? உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மயூ “ என்று க்ரிஷ் உணர்ச்சி பொங்க சொன்னான் அதற்கு மைரா அவனிடம், “ நானும் உன்ன மிஸ் பண்றேன் க்ரிஷ். உனக்கும், ரோஷினிக்கும் வாழ்த்துக்கள், நீங்க ரெண்டு பேரும் ஒன்னா அழகா இருக்கீங்க. காலையிலேயே போன் பண்ணி இருப்பேன் ஆனா நீங்க நைட்டு வீட்டுக்கு லேட்டா வந்து தூங்கிட்டு இருப்பீங்க தொந்தரவு செய்ய வேணாம்னு தான் இப்போ போன் பண்ணேன். இப்போ கல்யாணம் ஆக போகுது, எப்படி ஃபீல் பண்ற ? “ என்று கேட்டாள்.

“ எனக்குத் தெரியல, பதட்டமா, சந்தோஷமா, உற்சாகமா அப்புறம் பயமாவும் இருக்கு. நீ இங்க இருந்திருந்தா நான் நிம்மதியா உணர்ந்திருப்பேன் “ என்று க்ரிஷ் பதில் சொன்னாள் ஆனால் உடனே மைரா, ” வாய மூடு முட்டாள். உனக்கு நிம்மதி தரக்கூடிய ஆளு இப்போ உன்னோட மோதிரத்த அவ விரலுல போட்டு இருக்கா. நீ அந்த பொண்ண லவ் பண்ணுவ, அவளுக்கு நல்ல துணையா இருப்பனு நான் சொன்னது ஞாபகம் இருக்கா ? “ என்று கேட்டாள்.

“ ஆமா, ஞாபகம் இருக்கு “ என்று க்ரிஷ் பதில் சொன்னதும், “ நல்லது, அவளுக்கு எல்லா அன்பையும் கொடுத்து அவள நல்லா கவனிச்சிக்கோ “ என்று சொன்னாள் மைரா. அதற்கு க்ரிஷ் அவளிடம் சரி என்று சொல்லிவிட்டு, “ எப்போ திரும்பி வருவ ? “ என்று கேட்டான்.

“ இன்னும் ரெண்டு இல்ல மூணு வாரத்துல வருவேன். அது இருக்கட்டும் கல்யாணம் எப்போ ? “ என்று மைற கேட்க, ரோஷினியின் திட்டத்தைப் பற்றி க்ரிஷ் எல்லாவற்றையும் விளக்கினான், அவன் சொன்னதைக் கேட்டு, “ பரவாயில்ல க்ரிஷ் , அவளோட முடிவுக்கு மதிப்பு கொடு, இப்போ அவள சந்திக்க நீ ஆபீஸ் சம்மந்தமா போறனு பொய் சொல்ல வேண்டியதில்ல “ என்று சொல்லி புன்னகைத்தாள்.

“ மைரா “ என்று க்ரிஷ் குற்றவுணர்ச்சியில் அழைத்ததும், “ சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். சரி எனக்கு கிளாஸ் இருக்கு நான் போகணும். ரோஷினிக்கு என் வாழ்த்துக்கள சொல்லிடு. சென்னை வந்ததும் சந்திப்போம் “ என்று சொன்னாள்.

“ டேக் கேர் மைரா. உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் “ என்று க்ரிஷ் சொல்ல, அவன் வார்த்தைகளை கேட்ட ரோஷினி கண்களை உருட்டி அவன் அழைப்பை துண்டித்தபோது முள்கரண்டியை கீழே போட்டாள். சில உணவுகள் வைக்கப்பட்டிருப்பதையும், ரோஷினி சாப்பிட ஆரம்பித்து இருப்பதையும் பார்த்தான் க்ரிஷ்.

“ நீ ஆர்டர் பண்ணிட்டியா ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ ஆமா, எனக்கு செம்ம பசி, நீ இப்போதைக்கு பேசி முடிக்க மாட்டணு எனக்குத் தெரியும் “ என்று சொன்ன ரோஷினி, “ அவ ரொம்ப குழைஞ்சு பேசுறானு உனக்கு தோணலையா ? “ என்று அருவருப்பான முகத்துடன் கேட்டாள். அதை கேட்டதும் க்ரிஷுக்கு கோவம் தலைக்கேறியது ஆனால் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான். 

“ ரோஷினி, உன்ன கெஞ்சி கேட்குறேன், நான் நல்ல மனநிலையில இருக்கேன், அத கெடுக்காத. அவ நான் சந்தோஷமா இருக்க மட்டும் தான் விரும்புவா, இப்போ கூட நமக்கு வாழ்த்து சொல்ல தான் போன் பண்ணா. நீ அவள ஒருநாளும் புரிஞ்சிக்க மாட்ட “ என்று க்ரிஷ் சொன்னான். அதற்கு ரோஷினி அவனிடம், “ அவள பத்தி பேசுறத நிறுத்திட்டு நம்ம ரெண்டு பேர பத்தி பேசுவோம் “ என்றாள்.

க்ரிஷ் தலையசைத்து புன்னகைத்ததும், ரோஷினியின் புதிய அலுவலகத்தைப் பற்றி இருவரும் ஒன்றாக பேசினர்.

ஊட்டியில் நைனா மைராவைப் பார்த்தாள், அவள் முகத்தில் ஒரு நடுநிலை பாவனையை வைத்திருந்தாள்.

“ இப்ப என்ன ஃபீல் பண்ற ? உன் முகத்துல இருந்து என்னால எதையும் புரிஞ்சுக்க முடியல. நீ சோகமா இருக்கியா இல்ல சந்தோஷமா இருக்கியா, உன் மனசுல என்ன யோசிக்குற ? “ என்று நைனா கேட்டாள்.

“ எனக்குத் தெரியல, அவன் சந்தோஷமா இருக்கணும்னு தான்  நான் விரும்புறேன். நான் அவன மொத்தமா இழந்துட்டேன்னு அழுதா அப்போ அவனோட சந்தோஷத்த நெனச்சு அழறதா அர்த்தம் ஆயிடும் அதனால நான் அத செய்ய விரும்பல. அவனுக்காக, என் அப்பா, அம்மாவுக்காக, மாமாவுக்காக, அத்தைக்காக இதுல இருந்து மீள விரும்புறேன். நான் ரொம்ப கஷ்டப்பட்டு முயற்சி செய்றேன் நைனா, ஆனா நாம வீட்டுக்கு திரும்பி போனதும் என்னால இந்த அளவுக்கு தைரியமா இருக்க முடியுமானு எனக்குத் தெரியல” என்று சொல்லி மைரா பெருமூச்சு விட்டாள்.

“ உன்னால முடியும் மைரா. நீ இப்போ மாதிரி எப்பவும் வேலையில கவனம் வெச்சு பிஸியா இரு. அவங்க பக்கத்துக்கு வீட்லையே  ஒன்னா வாழும் போது இது சுலபம் இல்லனு எனக்குத் தெரியும், ஆனா நீ இத உனக்காக மட்டும் இல்ல எல்லாருக்காகவும் செய்யணும் “ என்று நைனா அவளுக்கு தைரியம் சொல்ல மைரா சரி என்று தலையை அசைத்தாள். மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைவதைப் பார்த்து அவர்கள் தங்கள் வேலைக்குத் திரும்பினர்.

மாணவர்கள் மைரா மற்றும் நைனாவுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டனர், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தனர். மைராவும் நைனாவும் மாறி மாறி மாணவர்களுக்கு மேடை ஒத்திகை மூலம் பயிற்சி அளித்தனர்.

அன்றிரவு மைரா ஊஞ்சலில் அமர்ந்து க்ரிஷ்  மற்றும் ரோஷினியின் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது நைனா அவளைத் தேடி வந்து அவள் அருகில் அமர்ந்தாள்.

“ அவங்க போடோவ பார்க்குறத நிறுத்து மைரா. உன்ன நீயே எவ்ளோ காயப்படுத்துவ ? “ என்று நைனா கேட்க, “ நான் முயற்சி செய்றேன் நைனா. நீ நம்ப மாட்ட, ஆனா நான் என்ன திசைதிருப்ப எல்லா வழிலையும் முயற்சி செய்றேன். அவங்களோட போடோவ பார்த்து என்ன தயார்படுத்திக்கிறேன். வீடு திரும்பி போன அப்புறம் அவங்க முன்னாடி வாழ நான் தயாராகுறேன் “ என்று கூறினாள் மைரா.

“ எங்க எல்லாருக்கும் உன்ன பத்தி தெரியும் மைரா, உன்ன நெனச்சு நாங்க பெருமைப்படுறோம். இப்போ ஒரு தடவை நான் சொல்றதைக் கேட்குறியா ? “ என்று நைனா கேட்டதும் மைரா தலையை அசைக்க, நைனா மைராவின் கையைப் பிடித்து, “ இப்போ கண்ண மூடி நான் சொல்றத அப்படியே சொல்லு, ‘ க்ரிஷ், நீ என் ப்ரெண்ட மட்டும் தான், ஆமா நீ என் ப்ரெண்ட தவிர வேற ஒண்ணுமில்ல. நான் என் வாழ்க்கையில உன்ன கடந்து போறேன்’ “ என்று நைனா சொன்னதும், “ ‘ க்ரிஷ், நீ என் ப்ரெண்ட மட்டும் தான், ஆமா நீ என் ப்ரெண்ட தவிர வேற ஒண்ணுமில்ல. நான் என் வாழ்க்கையில உன்ன கடந்து போறேன்’ “ என்று மைரா அப்படியே மீண்டும் சொன்னாள்.

“ இத ஏதோ மந்திரம்னு நெனச்சு தூங்க போறதுக்கு முன்னாடியும், காலையில தூங்கி எழுந்த அப்றமும் சொல்லு. அவங்கள பார்த்து எப்போ உன்னால எந்த வலியும் இல்லாம சிரிக்க முடியுதோ அப்போ சொல்றத நிறுத்து “ என்று சொல்லிட்டு நைனா அறைக்குத் திரும்பினாள். மைரா அதே வரிகளை உச்சரித்தாள். கண்களை மூடிக்கொண்டு, இருண்ட வானத்தைப் பார்த்தபடியும் அதன் பின்னர்  கண்களைத் திறந்து அதே வரிகளைத் திரும்பத் திரும்பச் சொன்னாள்.

மறுநாள் காலை ஓட்டுநர் வகுப்புக்கு உற்சாகமாக தயாராகி பயிற்றுவிப்பாளரின் வருகைக்காக மைரா காத்திருந்தாள்.

“ ஊட்டிய விட்டுப் போறதுக்கு முன்னாடி கத்துக்குவியா ?” என்று ராஜான் கேட்டதும், “ கவலைப்படாதீங்க, நானே சென்னைக்கு காரை ஓட்டி வரேன். நான் ஏற்கனவே சூப்பரா ஓட்டுறேன். உங்க பொண்ணு ரொம்ப திறமைசாலி “ என்று சொன்ன மைரா, காபியை உறிஞ்சியபடி தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நைனாவை பார்த்தாள்.

“ உன் கண்களால என்ன எரிக்காத. எனக்கு ஒரு உதவி செய், எனக்கு ட்ரைன் டிக்கெட் முன்பதிவு பண்ணிடு “ என்று நைனா சொன்னதை கேட்டதும், “ அப்போ நான் இல்லாம நீ மட்டும்  வாழ்க்கைய வாழ விரும்புறியா ?” என்று கேட்டாள் மைரா.

“ நான் அப்படி சொல்லல ஆனா உன்னோட டிரைவிங் பெருமைய பத்தி நீயே தான் இப்போ சர்டிபிகேட் கொடுத்துருக்க “ என்று சொல்லி நைனா சிரித்ததும் மைரா முகம் சுளித்தாள். அப்போது  பைக் சத்தம் கேட்டதும் மைரா வெளியே ஓடி சென்று  பயிற்றுவிப்பாளரை வரவேற்றாள்.

“ ஆரம்பிக்கலாமா மேடம் “ என்று பயிற்றுவிப்பாளர் கேட்க, “ நிச்சயமா சார், நான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நான் நல்லா ஓட்டுறேன்னு நினைக்குறீங்களா ?” என்று மைரா கேட்டாள்.

“ நீங்க சீக்கிரம் கத்துக்குறீங்க மேடம், இன்னும் கொஞ்சம் நாள் தான், அதுக்கு அப்புறம் நீங்க முழுசா தயாரா இருப்பீங்க “ என்று சொன்னார் பயிற்றுவிப்பாளர். அவர் வார்த்தையை கேட்டதும் உற்சாகம் அடைந்த மைரா, “ நான் ரொம்ப திறமையானவனு எனக்குத் தெரியும், அதனால நீங்க கவலைப்பட வேணாம். நான் உங்க வேலைய சுலபமாக்குறேன். ஊட்டியில இன்னும் மூணு வாரம் நான் தங்கி இருப்பேன். அதுவே நான் முழுசா ட்ரைன் ஆக போதுமானதா இருக்கும் “ என்று கூறினாள்.

மைரா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஆன் செய்வதற்கு முன் பிரார்த்தனை செய்தாள். பயிற்றுவிப்பாளர் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு முன்பு மைரா ஆக்ஸிலரேட்டரை அழுத்தினாள், ஒரு நாய்க்குட்டி சாலையைக் கடப்பதைக் கண்டதும், அதன் மீது மோதுவதற்கு பயந்து திசையைத் திருப்பி துரதிர்ஷ்டவசமாக ஒரு விளக்குக் கம்பத்தில் மோதினாள்.

அது ஒரு சிறிய விபத்து என்பதால் மைராவுக்கும், பயிற்றுவிப்பாளருக்கும் எதுவும் ஆகவில்லை. இருவரும் கீழே இறங்கி முன்னால் விரைந்து சென்று நசுங்கிய பானட் மற்றும் உடைந்த பம்பர்ரை பார்த்தனர்.

சேதத்தைப் பார்த்து மைரா மூச்சிரைத்து, தலையைச் சொறிந்து கொண்டிருந்த பயிற்றுவிப்பாளரைப் பார்த்தாள்.

“ இது என் தப்பு இல்ல சார், நாய்க்குட்டி திடீர்னு குறுக்க வந்துடுச்சு அதனால நான் பயந்துட்டேன் “ என்று மைரா சொன்னதும், “ அதனால தான் உங்களுக்கு இன்னும் அதிக பயிற்சி வேணும். நாம கார் ஓட்டும் போது ரோடு காலியா ஆள் யாரும் இல்லாம இருக்க எதிர்பார்க்க முடியாது, யாராவது எதிர்பாராத விதமா ரோடு கிராஸ் பண்ணுவாங்க. நீங்க சுதாரிச்சு ப்ரேக் புடிக்க கத்துக்கணும் “ என்று பயிற்றுவிப்பாளர் கூறினார்.

“ நீங்க சொல்றது சரி தான். நான் இத நல்லா ஞாபகம் வெச்சு நீங்க சொன்ன மாதிரி ரூல்ஸ் எல்லாம் follow பண்றேன் ஆனா இப்போ  என்னால ஆனா இந்த சேதத்த நாம சரிசெய்யனும் “ என்று வருத்தத்துடன் சொன்னாள் மைரா.

“ நான் ஒரு மெக்கானிக்க கூட்டிட்டு வரேன் “ என்று பயிற்றுவிப்பாளர் சொன்னதும் மைரா சரி என்று சொல்லிவிட்டு, காருக்கு ஏற்பட்ட சேதத்தைப் பற்றி தெரிவிக்க கேஷவை அழைத்தாள். கேஷவ் வழக்கம் போல் முதல் ரிங்கிலேயே அழைப்புக்கு பதில் சொன்னான்.

“ எப்படி இருக்க அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ கெட்சப், என்ன மன்னிச்சிடுங்க, நான் உங்க கார ஆக்சிடன்ட் பண்ணிட்டேன் “ என்று மைரா வருத்தத்துடன் சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டதும், “ என்ன ஆச்சு ? நீ நல்லா இருக்கியா அம்மு ? அடி எதுவும் பட்டுச்சா ? எங்க இருக்க ? இப்போ உன் கூட யார் இருக்காங்க ? நான் உடனே வரேன் “ என்று சொல்லி கேஷவ் பதறிப்போனான்.

*****************************

 

முன்னோட்டம்:

“ நான் என் வார்த்தையில இருந்து பின்வாங்க மாட்டேன் அம்மு.  என் அம்முவோட திறமை மேடையில பசங்க மூலமா பிரதிபலிக்குறத பார்க்க நான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 12:08 pm

[…] கெட்சப், என்ன மன்னிச்சிடுங்க […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:51 pm

[…] 17.கெட்சப், என்ன மன்னிச்சிடுங்க […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!