கேஷவ் காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி மைராவின் பக்கம் சென்று கதவைத் திறந்து அவளை கீழே இறங்கும்படி உள்ளங்கையை நீட்டினான். மைரா அவன் கையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் தன் கனமான புடவையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினாள்.
அருகருகே நின்று பார்த்தவர்கள் வீட்டிற்குச் செல்லும் பாதை முழுவதும் பூக்களால் நிரம்பியிருந்தது.
“ இவ்ளோ குறைஞ்ச நேரத்துல எப்படி இவ்ளோ பூ வாங்கிட்டு வந்தா? “ என்று கேட்டு வசுந்தரா சிரிக்க, மலர்களைப் பார்த்தபடி மைரா தன் செருப்பைக் கழற்ற, கேஷவும் தன் காலனியை கழட்டினான். இருவரும் வீட்டை அடைய மலர் பாதையில் நடந்து சென்றனர். அர்ச்சனா ஒரு தட்டில் ஆரத்தி ஏந்தி நின்று அவர்களை வரவேற்றார்.
அர்ச்சனா மதனை சோபாவில் இருந்து இழுத்துவிட்டு மைராவையும், கேஷவையும் உட்கார வைத்ததும் தன் அப்பாவைப் பார்த்து கேஷவ் சிரித்தான்.
“ வசுந்தரா, என்ன பார்த்துட்டு இருக்க ? கிச்சனுக்கு வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணு “ என்று அர்ச்சனா சொல்ல, வசுந்தரா தலையை அசைத்து உத்தரவுகளைப் பின்பற்றினார். இருவரும் ஒரு தட்டில் இனிப்புத் தட்டுடன் திரும்பி வந்து புதுமணத் தம்பதிகள் முன் வைத்தனர். அவர்களின் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தைக் குறிக்க ஒருவருக்கொருவர் இனிப்பை ஊட்டிவிடும்படி அர்ச்சனா அவர்களிடம் தெரிவித்தார். கேஷவ் ஒரு இனிப்பை எடுத்து ஒவ்வொரு முறையும் செய்வது போல முழு துண்டையும் அவள் வாயில் திணித்தான். மைரா அதை மென்று விழுங்க ஒரு நிமிடம் ஆனது.
“ உங்களுக்கு ஸ்வீட் கிடையாது அங்கிள் “ என்று சொல்லி மைரா முறைத்தாள் ஆனால் திருமணத்திற்குப் பிறகும் கேஷவை அங்கிள் என்று அவள் அழைப்பதைக் கேட்டு அர்ச்சனாவும் வசுந்தராவும் பெருமூச்சு விட, வசுந்தரா மைராவின் காதைப் பிடித்தார்.
“ உனக்கு மூளை இருக்கா ? அவன் இப்போ உன் புருஷன், இனி அங்கிள் சொல்லி கூப்பிடுறத நிறுத்து “ என்று கண்டித்த வசுந்தரா பின்னர் கேஷவை பார்த்து, “ கேஷவ் இதுவரை இருந்ததை விட இவ கிட்ட கண்டிப்பா இரு “ என்று சொன்னார்.
மைரா சோகமும் அப்பாவித்தனமும் நிறைந்த முகத்துடன் கேஷவை பார்த்ததும், எல்லோரும் சத்தமாக சிரித்தனர்.
“ இந்த முகம் எல்லாம் நடிப்புன்னு எங்களுக்குத் தெரியும், அதனால நிறுத்து. கேஷவ் உனக்கு எதிரா எதுவும் செய்ய மாட்டான். உனக்கு புடிச்சது எல்லாம் அவன் செய்வான், யாரும் அவன தடுக்க முடியாது, நான் மட்டும் இல்ல, உன் அம்மா, ஏன் அவனாலையே உனக்கு எதுவும் செய்யாம இருக்க முடியாது “ என்று சொல்லி புன்னகைத்தார் அர்ச்சனா.
“ சரி ஆனா இந்த மாலை, நகை, புடவை எல்லாம் எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு, நான் மாத்திக்கட்டுமா ? “ என்று மைரா கேட்க, “ கண்டிப்பா ஆனா முதல்ல பூஜை ரூம்ல தீபம் ஏத்திட்டு உன் அம்மா வீட்டுக்கு போகணும். அதுக்கு அப்புறம் நீ மாத்தலாம்” என்று அர்ச்சனா கூறினார்.
“ மைராவோட லக்கேஜ் கொண்டு வந்துட்டேன், அத கேஷவ் ரூம்ல வைக்குறேன் “ என்று ராஜன் சொன்னதும், கேஷவ் எழுந்து மைராவின் லக்கேஜை தன் அறைக்கு இழுக்க, மைரா எல்லாவற்றையும் வித்தியாசமாகப் பார்த்தாள். அவள் கனவு காண்கிறாளா என்று தன்னைத்தானே கிள்ளிக் கொண்டாள், ஆனால் வலி எல்லாம் நிச்சயமாக அவள் இப்போது கேஷவை திருமணம் செய்து கொண்டாள் என்ற நிஜம் உணர்த்தியது,
மைராவும், கேஷவும் பூஜை அறைக்குள் நுழைந்ததும் அவள் தீபத்தை ஏற்றினாள், இருவரும் முதல் முறையாக ஒன்றாக பிரார்த்தனை செய்தனர். மைரா புன்னகையுடன் கேஷவ் பக்கம் திரும்பினாள், ஆனால் அவன் அணிந்திருந்த சட்டையை வெறித்துப் பார்த்தாள்.
“ கெட்சப், இந்த சட்டை? நான் உங்களுக்கு முதல் முறையா வாங்கின சட்டை தானே ? அதுக்கு அப்புறம் நான் நிறைய சட்டை வாங்கிக் கொடுக்கல தான் ஆனா இது அது தானே ? “ என்று மைரா கேட்டதும், “ ஆமா அம்மு, நான் நேத்து அவசரா டிரஸ் பேக் பண்ணும் போது இது தான் மேலையே இருந்துச்சு அதனால பேக் பண்ணிட்டேன். இப்போ நீ சொன்ன அப்புறம் தான் நானும் கவனிக்குறேன் “ என்றான் கேஷவ்.
மைரா புன்னகைக்க, வசுந்தராவும் ராஜனும் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அதே நடைமுறையைப் பின்பற்றினர். நைனா மைராவை அவளது அறைக்கு அழைத்துச் சென்றதும், கேஷவ் ஹாலில் அமர்ந்திருந்தான். மைரா கண்ணாடி முன் நின்று , முதல் முறையாக அவள் தன்னைப் பார்த்தாள். தாலி மற்றும் அவளுடைய உச்சிவகுட்டில் இருந்த குங்குமத்தைத் தொட்டபோது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது,
“ நைனா, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு “ என்று மைரா மெல்லிய குரலில் சொல்ல, “ ஆமா, அழகான ஹங்க் கூட, அய்யோ! இல்ல இல்ல மன்னிச்சிடு, உனக்கும் என் அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மைரா. நீ நல்ல முடிவு எடுத்துருக்க, அவர் இப்போ உன்ன நல்லா பாத்துக்க மட்டும் செய்றாரு ஆனா எதிர்காலத்துல அவர் உன்ன நிச்சயம் லவ் பண்ணுவாரு “ என்றாள் நைனா.
“ நைனா..” என்று மைரா அழுத்தமாக அழைத்ததும், “ நீ உடனே தயாரா இல்லனு எனக்குத் தெரியும், ஆனா பொறுமையா எல்லாம் நடக்க விடு. கல்யாணத்தோட அழகே, அது அந்த ஆணையும், பெண்ணையும் லவ் பண்ண வைக்குறது தான். நீங்களும் லவ் பண்ணனும் நான் விரும்புறேன். நீ விட்டுக்கொடுக்காம, உன் வாழ்க்கையில சந்தோஷத்துக்கு கதவு திறக்கும் போது அதுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பனு எனக்கு சத்தியம் பண்ணு “ என்று கேட்டாள் நைனா.
மைரா, நைனாவைக் கட்டிப்பிடித்து “ ப்ராமிஸ் “ என்று முணுமுணுத்தாள், அது நைனாவை நிம்மதியாக உணர வைத்தது.
“ இப்போ நான் ஒரு புடவைய செலெக்ட் பண்றேன், உன் புருஷன் உன்ன பார்த்து மயங்கி விழறத நான் பார்க்கணும் “ என்று நைனா சொன்னதும், “ வாய மூடு நைனா, அவர் என்ன அப்படி பார்த்ததே இல்ல, அதனால அவர சங்கடப்படுத்தாத. நானே ஒன்னு செலக்ட் பண்றேன் “ என்று கூறினாள் மைரா.
மைரா, நைனாவை அலமாரியிலிருந்து தள்ளிவிட்டு, ஒரு எளிய லினன் சேலையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் நைனாவின் உதவியுடன் நகைகள், ஹேர் பின்கள் மற்றும் பூக்களை அகற்றிவிட்டு புடவையை மாற்றினாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் ஹாலுக்கு திரும்பி வந்து பார்த்தபோது கேஷவ் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான்.
மைராவும் நைனாவும் ஒன்றாக அமர்ந்திருக்க, நைனா மைராவின் காதில் சாய்ந்து, “ என்னடி உன் புருஷன் உன்ன பார்த்து எந்த ரியாக்ஷனும் காட்டல? “ என்று கேட்டாள். அதற்கு மைரா அவளிடம், “ அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம், நாங்க ஒன்னா இருக்குறதுல நான் சந்தோஷமா இருக்கேன் அது போதும் “ என்று சொன்னாள்.
நைனா முகத்தைச் சுளித்தாள், அப்போது ராஜனும், மதனும் உணவுப் பைகளுடன் உள்ளே வருவதைக் கண்டனர், அவர்களை தொடர்ந்து அர்ச்சனா, க்ரிஷ் மற்றும் ரோஷினி ஆகியோர் வந்தனர்.
அவர்கள் மதிய உணவை பரிமாற ஆரம்பித்தனர், அதே நேரத்தில் ரோஷினி பல்லைக் கடித்துக்கொண்டு மைராவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மறுபுறம் க்ரிஷ் மைராவையும், கேஷவையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். க்ரிஷ் மிக கொஞ்சமே சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பினான், ரோஷினி இன்னும் அவனுடன் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள், ஆனால் அவன் அவளை அவனிடமிருந்து விலகி இருக்க உறுதி செய்தான்.
மைரா மிகவும் சோர்வாக இருப்பதைக் கண்ட கேஷவ், அவளை அவளுடைய அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்க தனது வீட்டிற்குத் திரும்பினான். படுக்கையில் படுத்து உறங்க எத்தனித்தவன், கையில் சில பைகளுடன் அர்ச்சனா அறைக்குள் நுழைவதைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தான்.
“ இதெல்லாம் என்ன பை ? “ என்று கேஷவ் கேட்க, “ இப்போ மைராவுக்கு இந்த ரூம்ல சம உரிம இருக்கு அதனால் நான் அவளுக்கு புடிச்ச மாதிரி திரைச்சீலை, விரிப்பு, தலையணை உறை எல்லாத்தையும் மாத்த போறேன், நீ தள்ளி போ, என்ன தொந்தரவு செய்யாத.” என்று சொல்லி தனது வேலையில் மூழ்கினார் அர்ச்சனா.
கேஷவ் புன்னகையுடன் எல்லாவற்றையும் மாற்ற அம்மாவுக்கு உதவினான், அர்ச்சனா மைராவின் ஆடைகளை நிரப்ப அவனது அலமாரியை சுத்தம் செய்ய இருந்தார், ஆனால் கேஷவ் அவரை தடுத்து, “ அம்மா, நான் அவளுக்கு ஒரு புது அலமாரி வாங்குறேன், அதனால் என் டிரஸ் எல்லாம் அப்படியே விடுங்க “ என்று சொன்னான்.
“ தாராளமா ஒரு புது அலமாரி வாங்கு, நீங்க ரெண்டு பேரும் அலமாரிகள பகிர்ந்துக்கணும். எல்லாத்துலையும் பகிர்ந்துக்க தெரியனும் அப்படித் தான் புருஷன் பொண்டாட்டி வாழ ஆரம்பிக்கணும். நீ இத்தன வருஷமா தனியா இருந்த அதனால என் வார்த்தைய கேட்டு, உன் பொண்டாட்டிய நல்லா பார்த்துக்க கத்துக்கோ. அவளுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க முயற்சி செய் “ என்று அர்ச்சனா சொன்னதை கேட்டதும் கேஷவ் நெற்றியைச் சொறிந்து கொண்டே அம்மாவின் வார்த்தைகளுக்கு சரி என்றான்.
அர்ச்சனா சுற்றும் முற்றும் சுவரைப் பார்ப்பதைப் பார்த்த கேஷவ், “ இப்ப என்ன தேடுறீங்க? “ என்று கேட்டான்.
“ உங்க கல்யாண போட்டோவ எங்க மாட்டலாம்னு பார்க்குறேன் “ என்று அர்ச்சனா சொன்னதும், “ நீங்களே எல்லாத்தையும் செய்தா அப்புறம் உங்க மருமக அவ புருஷனுக்கு எதுவும் செய்ய விருப்பம் இல்லனு நினைபா அதனால கவலைப்படுறத நிறுத்திங்க, எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் “ என்று சொன்னான்.
அவன் குரலில் இருந்த நம்பிக்கையை உணர்ந்த அர்ச்சனா புன்னைகையுடன் அறையை விட்டு வெளியேறினார். அதன் பின் கேஷவ் தன் அலமாரியில் பாதி இடத்தை மைராவின் ஆடைகளுக்கு சுத்தம் செய்தான்,.
மாலையில் வசுந்த்ராவின் வீட்டிற்குள் நுழைந்த கேஷவ், மைரா ராஜனின் தோளில் சாய்ந்து ஒரு இசை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு எதிரே அவன் அமர்ந்ததும் வசுந்த்ரா அவனுக்கு காபி கொடுத்தார்.
“ மைரா, போய் ரெடியாகு. கேஷவ் உன்ன கூட்டிட்டு போக வந்துருக்கான் “ என்று வசுந்தரா சொன்னதும், “ என்னவோ அவர் மணிக் கணக்குல பயணம் பண்ணி என்ன கூட்டிட்டு போக வந்த மாதிரி சொல்றீங்க. நானே சுவர் ஏறிக் குதிச்சு அங்க போய் இருப்பேன் “ என்றாள் மைரா. அதற்கு கேஷவ் உடனே, “ அப்படியா ? சரி நான் திரும்பி போறேன், நீ சுவர் ஏறி குதிச்சு வா “ என்றான்.
மைரா நேராக அமர்ந்து, “ நான் சுவர் ஏறிக் குதிச்சு வர்றது உங்களுக்கு சம்மதமா அங்கிள் ? என் எலும்பு உடைஞ்சா என்ன செய்றது ? “ என்று மைரா கேட்டதும், “ நீ கண்டிப்பா சுவர் ஏறி வர போறதுல உறுதியா இருந்தா நான் அந்த பக்கம் ரெடியா இருக்கேன். நீ குதிக்கும் போது தரையில விழாம நான் புடிச்சுக்குறேன். அப்பா உங்க எல்லாரையும் ஏதோ பேச கூப்பிட்டிருக்காங்க. நாம கிளம்பலாமா இல்ல சுவர் ஏறி குதிக்க போறியா ? “ என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான் கேஷவ்.
அவன் வார்த்தையை கேட்டதும் தன் கன்னங்கள் சிவந்து மூச்சிரைப்பதை உணர்ந்த மைரா தன் அறைக்கு விரைந்தாள். அவள் ஒரு சாதாரண சேலை அணிந்து திரும்பி வந்ததும் அவர்கள் அனைவரும் கேஷவின் வீட்டிற்கு சென்றனர்.
“ நாம பிளான் பண்ணியிருந்த ரிசப்ஷன் பத்தி பேசணும்னு நினைச்சேன். நீங்க ரெண்டு பேரும் ரிசப்ஷன் வேணும்னு ஆசைப்படுறீங்களா ?” என்று மதன் கேட்டதும், “ ஏன் வேணாமா ? ரிசப்ஷன் பிளான் பண்ண மாதிரி நடக்கட்டும். உனக்கு வேற ஆசை இருக்கா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா இல்லை என்று தலையை அசைத்தாள், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்.
அர்ச்சனா மைராவை கேஷவின் அறைக்கு அழைத்துச் செல்ல, மைரா அறையைச் சுற்றிப் பார்த்தாள். கேஷவ் கதவில் சாய்ந்து கொண்டு அவள் தன் அறையை பார்ப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ அலமாரியில உன் டிரஸ் வைக்க இடம் விட்டுருக்கேன் “ என்று கேஷவின் குரல் கேட்டு அர்ச்சனா அவர்களை விட்டு வெளியேற, கேஷவ் அறைக்குள் சென்று சோபாவில் அமர்ந்தான், மைரா பதட்டமாக உணர்ந்து உதட்டைக் கடிக்க ஆரம்பித்தாள்.
“ உன் டிரஸ் அடுக்க உனக்கு நான் உதவி செய்றேன் “ என்று கேஷவ் சொல்ல, மைரா தலையை ஆட்டினாள். அவன் அலமாரியில் அவளுடைய சில ஆடைகளை வைக்க உதவினான். கேஷவ் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இல்லாத காரணத்தால் அவனுக்கு டிரஸ்ஸிங் டேபிள் தேவைப்படவில்லை ஆனால் இப்போது மைராவின் அழகு சாதணங்கள் வைக்க இடம் இல்லை என்று கேஷவ் உணர்ந்தான்.
“ நாளைக்கு ஷாப்பிங் போவோம், ரூம்ல என்ன வேணும்னாலும் வாங்கலாம். இப்போ நைட் டிரஸ் மாத்திக்கோ, நான் போன் பேச வெளிய போறேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் வெளியே சென்றதும் மைரா கதவைப் பூட்டிவிட்டு கட்டிலில் உட்கார்ந்தாள்.
“ கடவுளே, ஒரே ரூம்ல அவர் கூட இருக்குறது ரொம்ப வித்தியாசமா இருக்கு, இப்போ நாங்க புருஷன், பொண்டாட்டியா இத கையாள எனக்கு கொஞ்சம் தைரியம் கொடு கடவுளே “ என்று பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு சல்வாரை எடுத்து அதை அணிந்தாள்.
அவள் வெளியே சென்றதும் ரோஷினியும் அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். மைரா அவளை புறக்கணிக்க முயன்றாள், ஆனால் ரோஷினி அவளுக்கு முன்னால் சென்று நிறுத்தினாள்.
******************************************
முன்னோட்டம்:
“இந்த மாதிரி நினைவுகள போட்டோ எடுத்து பதிவு பண்ணாம விட்டுட்டோம்னு எதிர்காலத்துல வருத்தப்பட்டா என்ன செய்றது ? அதனால இது மாதிரி நிறைய போட்டோ எடுக்கலாம் அப்புறம் பின்னாடி இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுவோம் “
