மைரா தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு கேஷவின் சட்டை மற்றும் ஷார்ட்ஸை அணிந்து கொண்டு அவனது தலையணையை அணைத்தபடி படுக்கையில் படுத்தாள்.
“ ஐ லவ் யூ கெட்சப் “ என்று சொன்னவள், தனது மொபைலில் கேலரியைத் திறந்து அவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ நான் உங்க கிட்ட என் லவ் பத்தி சொல்லும் போது நீங்க எப்படி நடந்துக்குவீங்க ? “ என்று தனக்குதானே கேட்டவள் தன் மனதில் தோன்றிய பாடலை பாடினாள்.
நினைவில்லை என்பாயா…
நிஜமில்லை என்பாயா…
நீ என்ன சொல்வாய் அன்பே…
உயிர் தோழன் என்பாயா…
வழிபோக்கன் என்பாயா…
விடை என்ன சொல்வாய் அன்பே…
அவள் பாடிக் கொடிருந்த போது மர்ம பாடகரிடமிருந்து ஒரு அறிவிப்பைக் கண்டதும் அவள் பாடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக அவரது பாடலைக் கேட்க அதைத் திறந்தாள்.
உன் பேரை சொன்னாலே…
உள் நாக்கில் தித்திக்குமே…
போகாதே போகாதே…
உன்னோடு சென்றாலே…
வழியெல்லாம் பூப்பூக்குமே…
வாராயோ வாராயோ…
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்…
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே…
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்…
எங்கே நீ என் கண்ணே…
மெய் எழுத்தும் மறந்தேன்…
உயிர் எழுத்தும் மறந்தேன்…
ஊமையாய் நானும் ஆகினேன்…
கையை சுடும் என்றாலும்…
தீயை தொடும் பிள்ளை போல்…
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்…
அவரது பாடலை கேட்டதும் மைரா அதிர்ச்சியில் கையிலிருந்த மொபைலை கீழே போட்டாள்.
“ யார் நீங்க ? ஒவ்வொரு முறையும் என் உணர்வுகளோட பொருந்துறை மாதிரி பாடல்கள நீங்க எப்படி செலெக்ட் செய்ற? இப்போ நீங்களும் இதே பாட்டு பாடி இருக்கீங்க ? இல்ல, ஏற்கனவே குழப்பத்துல இருக்க மனச இன்னும் குழப்பாத மைரா, நாளைக்கு உனக்கு நிறைய வேலை இருக்கு” என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு அவள் கண்களை மூடிக்கொண்டு கேஷவின் தலையணையை அணைத்தாள், ஆனால் தூக்கம் அவளுக்கு வெகு தொலைவில் இருந்தது.
கேஷவ் படுக்கையில் படுத்து சுவரில் மாட்டியிருந்த மைராவின் புகைப்படத்தைப் பார்த்தான்.
காலையில் மைரா எழுந்து விரைவாக தயாராகி ஹாலை அடைந்ததும், மதன் தன் வேலைக்கு கிளம்ப தயாராக இருந்ததையும், அர்ச்சனாவும் தயாராகிக் கொண்டிருந்ததையும் பார்த்தாள்.
“ நான் வசு கூட கோவிலுக்குப் போறேன் மைரா, சாயங்காலம் திரும்பி வருவோம். நீ இன்னொரு சாவி எடுத்துட்டு போ “ என்று அர்ச்சனா சொன்னதும், மைரா சரி என்று முணுமுணுத்தபடி வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் அகாடமியை அடைந்த போது நைனா ஏற்கனவே அங்கு இருந்தாள்.
“ நீ ஏன் இவ்ளோ கவலையா இருக்க ? என்ன ஆச்சு ? “ என்று நைனா கேட்டதும், மைரா நைனாவின் அருகில் அமர்ந்து முந்தைய நாள் நடந்த அனைத்தையும் அவளிடம் தெரிவித்தாள்.
“ எவ்ளோ தைரியம் இருந்தா அந்த திமிரு புடிச்சவ உனக்கும், உன் புருஷனுக்கும் நடுவுல கலகம் பண்ணி இருப்பா ? நீ அவள சும்மா விட்டியா ? இப்போ என்ன முடிவு பண்ணி இருக்க ? “ என்று நைனா பொறுமை இழந்து கேட்டாள்.
“ அவர் வாழ்க்கையில என்ன நடந்துச்சுனு எனக்குத் தெரியாது, ஆனா என் மனசுல வேற ஒரு விஷயம் ஓடுது. அவர் லவ் பண்ண பொண்ணோட நினைவா அவருக்கு ஒரு வீடு இருக்குனு தெரிஞ்சதும் எனக்கு அவ்ளோ வேதனையா இருந்துச்சு அப்போ க்ரிஷ் கொடுத்த பரிசு எல்லாம் நான் வெச்சு இருக்குறது தெரிஞ்சா அவரும் தானே கஷ்டப்படுவாரு ? நான் அதையெல்லாம் வெச்சுருக்க காராணம் வேறாவா இருந்தாலும் வலி ஒன்னு தானே ? “ என்று மைரா சொன்னாள்.
அவள் வார்த்தையின் ஆழம் புரிந்து, “ நீ என்ன செய்ய பிளான் பண்ணி இருக்க ? “ என்று நைனா கேட்டாள்.
“ அந்த பரிசு பத்தி க்ரிஷ் கிட்ட ஒரு நாள் கேள்வி கேட்கனும்னு நெனச்சு இருந்தேன் ஆனா கெட்சப் பத்தின ஞாபகத்துல அந்த பரிசு பத்தி மறந்து போயிட்டேன். இப்போ அதையெல்லாம் தூக்கி எரிய வேண்டிய நேரம் வந்துடுச்சு. என் கடந்த கால நினைவுகள பார்க்குற வலிய கெட்சப் உணர நான் விரும்பல. நான் இன்னைக்கு வீட்டுக்கு போனதும் அதையெல்லாம் தூக்கி போட போறேன். இனி க்ரிஷ் கிட்ட எனக்கு எதுவும் கேட்க வேணாம் “ என்று மைரா தன் முடிவை கூறினாள்.
“ நல்லது மைரா. அவர எப்போ ப்ரொபோஸ் பண்ண போற ? “ என்று நைனா கேட்டதும், “ அதுல எந்த மாற்றமும் இல்ல, நான் அவர சந்திக்கும் போது ப்ரொபோஸ் செய்வேன் அதுல இருந்து பின்வாங்க மாட்டேன் ஆனா அத எப்படி செய்றதுனு நான் முடிவு செய்யல. ஆரம்பத்துல இது ரொம்ப ஸ்பெஷலா இருக்கணும்னு விரும்பினேன் ஆனா இப்போ அவரோட பதில் என்னவா இருக்கும்னு எனக்குத் தெரியாது, அதனால அப்படியே சொல்ல போறேன் “ என்று கூறினாள்.
“ அவருக்கும் உன் மேல லவ் இருக்கும்னு உனக்கு ஒரு முறை கூட தோணலையா ? “ என்று நைனா கேட்டதும், “ நான் அத நிறைய முறை உணர்ந்தேன், அவரோட கண்கள் நிறைய பேசி இருக்கு, அவரோட அக்கற எல்லாம் அவரும் என்ன லவ் பண்றாருனு தான் காட்டுச்சு ஆனா நான் எதையும் முடிவு பண்ண தயாரா இல்ல. நான் அவர ப்ரொபோஸ் பண்றேன், பதில் எங்க விதி முடிவு செய்யட்டும் “ என்று மைரா சொன்னாள்.
“ நீங்க ரெண்டு பேரும் நல்ல மனுஷங்க, உங்களுக்கு நல்லது தான் நடக்கும் மைரா. நேத்து நடந்தது எல்லாம் மறந்துட்டு போய் அவர பாரு மைரா “ என்று நைனா சொன்னதை கேட்டு, “ நானும் அவர சந்திக்க ரொம்ப ஆசையா இருக்கேன் ஆனா என் கடந்த காலத்த எரிச்சிட்டு தான் அத செய்வேன். அது மட்டும் இல்ல இன்னொரு விஷயமும் என் மனச போட்டு குழப்புது “ என்று மைரா மெல்ல சொல்ல, “ அது என்ன? “ என்று நைனா கேட்டாள்.
“ அந்த மர்ம பாடகர் “ என்று மைரா சொன்னதும், நைனா முகம் சுளித்தாள்.
“ மர்மப் பாடகருக்கும் உன் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? “ என்று நைனா கேட்டதும், “ இத நான் தாமதமா தான் உணர்ந்தேன். அவர் செலெக்ட் பண்ற பாட்டு எல்லாம் பெரும்பாலான நேரத்துல என் உணர்வுகளோட சரியா பொருந்தி இருக்குனு நீ கவனிச்சு இருக்கியா ? நேத்து நைட்டு அவர் பாட்டு வெளியிட்டு இருந்தாரு அதுவும் என் மனசுல நான் பாடிட்டு இருந்த அதே பாட்டு. என் உணர்வுகளோட ஒருத்தர் ஒத்திசைவா இருக்குறது எப்படி சாத்தியம்? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டாள்.
“ இப்போ நீ என்ன குழப்புற ? அது எப்படி சாத்தியம்? உனக்கு அவர தெரியாது “ என்று நைனா ஆச்சரியத்தோடு கேட்க, “ சரியா சொன்ன, அவரோட பாடல்கள தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது. அவர் மேல ஒரு ஈர்ப்பு இருந்ததுக்கு என் மேல எனக்கே கோவம் வருது. அந்த ஈர்ப்பு இருந்த காரணமா தான் அவரோட உணர்ச்சிகளோட இணைந்திருக்க மாதிரி உணர்றேன். நான் இத வெறுக்குறேன், இது என் கெட்சப்பை ஏமாத்துற மாதிரி இருக்கு “ என்று மைரா வேதனை கொண்டாள்.
“ மைரா, தேவையில்லாம யோசிச்சு உன் மனச அதிகமா அழுத்தம் கொடுக்காத. அமைதியா இரு, அந்த மர்ம பாடகர பத்தி இப்போ நினைக்குறத நிறுத்திட்டு, உன் புருஷன் கிட்ட பேசு. நீ அவர்கிட்ட பேசி அதுக்கு அப்புறம் இந்த மர்ம பாடகர் பத்தி கூட அவர்கிட்ட சொல்லு, அது உனக்கு உதவும் “ என்று நைனா யோசனை சொன்னாள்.
“ இந்த உலகத்தோட பிரச்சனை எல்லாம் மொத்தமா என் தோள் மேல இருக்க மாதிரி இருக்கு. நீ கிளாஸ் நடத்து இன்னைக்கு, மத்த வேலையெல்லாம் நான் அப்புறம் பார்க்குறேன். எனக்கு இப்போ கொஞ்சம் ரெஸ்ட் வேணும் “ என்று மைரா சொன்னதும் நைனா சரி என்று முணுமுணுத்தபடி அவர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.
மைராவிடமிருந்து அழைப்பு அல்லது செய்திக்காக கேஷவ் தனது மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தான். வருண் உள்ளே நுழைந்து சாவியை அவன் முன்னால் இருந்த டீப்பாயில் போட்டான்.
“ சாவி வாங்கிட்டு போன வேலை முடிஞ்சுதா ? “ என்று கேஷவ் கேட்க, “ இல்ல, நான் வேற இடத்துல தேடனும், அத நான் பார்த்துக்குறேன், இதுக்கு உதவி செய்ய ஒருத்தர வர சொல்லி இருக்கேன் “ என்று வருண் பதில் சொன்னான்.
“ சீக்கிரம் முடிச்சிடு. உன் அறிக்கைக்காக வெயிட் பண்றேன் வருண் “ என்று கேஷவ் கூறினான்.
“ நான் இந்த வேலைய சீக்கிரம் முடிக்க எல்லா நடவடிக்கையும் எடுத்துருக்கேன் அதனால கவலைப்பட வேண்டாம், நான் சீக்கிரம் முடிச்சிடுவேன் “ என்று சொன்ன வருண் சமையலறைக்குள் நுழைந்து கொஞ்சம் ப்ரெட் (bread ) மற்றும் ஜூஸ் கொண்டு வந்து கேஷவ் முன் வைத்தான்.
“ நேத்துல இருந்து நீங்க எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டீங்கனு எனக்குத் தெரியும். பட்டினியா இருக்குறது ஒரு தீர்வு இல்ல, மேடம் நீங்க சொல்ல போறத கேட்க வரும்போது எல்லாத்தையும் கையாள நீங்க புத்துணர்ச்சியா, தெம்பா இருக்கணும் “ என்று வருண் சொல்ல, அதை கேட்டு, “ அவ பட்டினியா கிடக்கும் போது என்னால சாப்பிட முடியாது. நான் இல்லாம அவ சாப்பிட மாட்டா வருண்.” என்று கேஷவ் பதில் சொன்னான்.
“ அவங்க உங்க மேல வருத்தமா இல்ல அதனால நீங்க அவங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணி கொடுங்க நான் அவங்களுக்கு டெலிவரி பண்றேன் ? நீங்க தயாரித்த சாப்பாடு அவங்க மறுக்க மாட்டாங்க, அவங்க பசி தீர்ந்த அப்புறம் நீங்களும் சாப்பிடலாம் “ என்று வருண் யோசனை சொன்னான்.
கேஷவ் வருணின் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு சமையலறைக்கு விரைந்தான். உடனே கொஞ்சம் தயிர் சாதம் மற்றும் போரியல் செய்து அதை பேக் செய்து வருனிடம் கொடுத்தான்.
“ மேடம் நீங்க பேக் பண்ணின சாப்பாட்டை சாப்பிட்ட்ட உடனே நான் உங்களுக்கு போன் பண்ணுவேன் அப்போ நீங்க உடனே சாப்பிடனும் “ என்று வருண் சொன்னதும், கேஷவ் சரி என்று தலையை அசைக்க, வருண் அங்கிருந்து கிளம்பினான்.
வருண் அகாடமிக்கு சென்றதும், மைரா அவனை உள்ளே வரவேற்று புன்னகைத்தாள்.
“ நான் ஒரு வேலையா போயிட்டு இருந்தேன், உங்க புருஷன் என்கிட்ட ஒரு உதவி வேணும்னு கேட்டு, உங்களுக்காக சாப்பாடு அனுப்பி இருக்காரு “ என்று வருண் கூறியதும், மைரா அவனிடமிருந்து பையை பெற்றுக்கொண்டு அவனது உதவிக்கு நன்றி தெரிவித்தாள். வருண் ஜன்னல் அருகே மைராவைப் பார்த்தபடி காத்திருந்தான்.
லஞ்ச் பாக்ஸை திறந்து மாதுளம் பழத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தயிர் சாதத்தைப் பார்த்து மைரா கண்ணீருடன் புன்னகைத்தாள்.
“ நீங்க இல்லாம நான் சாப்பிட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும் தானே ? ஐ லவ் யூ கெட்சப் “ என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினாள். வருண் அவள் சாப்பிடும் புகைப்படத்தை எடுத்து கேஷவுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து காரில் சென்றான். தான் சமைத்த உணவை மைரா சாப்பிடுவதைப் பார்த்து கேசவ் புன்னகைத்து, அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.
மாலையில் வீடு திரும்பிய மைரா இரண்டு வீடுகளும் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். அம்மா வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவள் அலமாரியைத் திறந்து அதில் இருந்த பெட்டியை வெளியே எடுத்தாள்.
அதில் அவளுடைய கடந்த காலத்தின் பரிசுகள் மற்றும் பூக்கள் அனைத்தையும் சேமித்து வைத்திருந்தாள். கேஷவ் ஒரு முறை ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததைப் பார்த்த நாள் அப்போது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
“ பல வருஷத்துக்கு முன்னாடி அவர் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அந்த பெண்ண பத்தி நான் எப்படி மறந்தேன்? அவங்க அந்த பொண்ணா இருப்பாங்களா ? இனி அத பத்தி கவலைப்பட ஒண்ணுமில்ல. நான் என் கெட்சப்ப லவ் பண்றேன் அவ்ளோ தான் “ என்று மனதில் நினைத்துக் கொண்டு அந்த பெட்டியை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று புல்தரையில் எறிந்தாள்.
“ என் கேஷவ விட வேற எதுவும் முக்கியமில்ல, அவர காயப்படுத்துற எதையும் நான் வெச்சுருக்க மாட்டேன் “ என்று தனக்குதானே சொல்லிக் கொண்டாள்.
அதே நேரம் வீடு திரும்பிய க்ரிஷ், கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான், ஆனால் மைராவின் கார் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. பைக்கில் இருந்து இறங்கி வசுவின் வீட்டின் கேட்டைத் திறந்து பார்த்த போது மைரா தரையில் குனிந்து ஏதோ செய்து கொண்டிருப்பதை பார்த்தான்.
“ மைரா, நீ இங்க என்ன செய்ற ? “ என்று க்ரிஷ் கேட்டதும், மைரா னை பார்த்து பீதியடைந்தாள், பரிசுகளை அவனிடமிருந்து மறைக்க விரும்பினாள், ஆனால் அது மிகவும் தாமதமானது. க்ரிஷ் அந்த அவற்றை பார்த்துவிட்டு அவள் அருகில் குனிந்து பரிசுப் பொருட்களைத் தொட்டான். மயில் இறகு கொண்டு செய்யப்பட்டிருந்த ஒரு பரிசை எடுத்து புன்னகையுடன் பார்த்தான்.
“ ஆஹா, இது ரொம்ப அழகா இருக்கு மைரா. இத எங்க வாங்கின ? ஒரு நிமிஷம் இரு “ என்று சொன்னவன், பின்னர் ஒரு முத்து நெக்லஸ், வாடிய பூக்கள், சாக்லேட் ரேப்பர்கள், வாழ்த்து அட்டைகளை எடுத்துக் கொண்டு, அவனது வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்த மைராவின் மீது தனது கவனத்தைத் திருப்பினான்.
“ மைரா, இதெல்லாம் என்ன? எல்லாமே பரிசு மாதிரி தெரியுது. யாராவது உனக்கு இத கொடுத்தாங்களா ? இப்ப எதுக்கு தூக்கி போடுற ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ க்ரிஷ் “ என்று மைரா அதிர்ச்சியில் அவனை அழைத்தாள்.
“ இதெல்லாம் ரொம்ப ஸ்பெஷலா மைரா? இதையெல்லாம் உனக்கு கொடுத்தது யார்? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ இந்த பரிசு பத்தி உனக்குத் தெரியாதா க்ரிஷ்? இதையெல்லாம் நீ இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா ? “ என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.
“ இல்ல “ என்று க்ரிஷ் பதில் சொன்னதும், “ க்ரிஷ் என்ன சொல்றான் ? அவனுக்கு இது பத்தி தெரியல, அதாவது எனக்கு இதையெல்லாம் கொடுத்தது க்ரிஷ் இல்ல “ என்று மனதில் உறுதிபடுத்திக் கொண்டாள்.
“ க்ரிஷ், நீ கதவை பூட்டிட்டு வீட்டுக்கு வர முடியுமா, நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் “ என்று மைரா கேட்க, க்ரிஷ் சரி என்று சொல்லி கதவைப் பூட்ட சென்றான்.
மைரா பரிசுகளை சேகரித்து பெட்டியில் மீண்டும் வைத்து வசுவின் வீட்டை விட்டு வெளியேறினாள். அவளை கிரிஷ் பின்தொடர்ந்து கதவைத் திறந்ததும் மைரா தன் அறைக்கு விரைந்து சென்று பெட்டியை கட்டிலில் வைத்துவிட்டு ஹாலுக்கு விரைந்தாள்.
*******************************************
முன்னோட்டம்:
“ என்ன விட்டுடாத மைரா, நான் இப்போ அதே க்ரிஷ் இல்லை. என் வாழ்க்கையில நான் செய்த எல்லாத்துக்கும் நான் வருந்துறேன், நான் மதிக்குற ஒரே விஷயம் உன்னோட நட்பு தான், நீ என்ன கைவிட்டா என்ன நானே வெறுப்பேன். நீ என்ன வெறுக்குறத பார்த்து வாழ்றத விட நான் செத்து போறதே மேல். என் வாழ்க்கையில நான் ரொம்ப மதிக்குறது உன்ன தான் மைரா “

2 comments
[…] அந்த மர்ம பாடகர் […]
[…] 61.அந்த மர்ம பாடகர் […]