Home Family77. வீடியோவ வெச்சு அவன மிரட்டி இருக்கா 

77. வீடியோவ வெச்சு அவன மிரட்டி இருக்கா 

by Siragugal Novels
15 views

கேஷவ் மைராவை வீட்டில் இறக்கிவிட்ட பிறகு தனது வேலையைக் கவனிக்கத் திரும்பி சென்றான்.

வீட்டுக்குள் சென்ற மைரா, “ அச்சு மா, மன்னிச்சிடுங்க நான் லேட்டா வந்துட்டேன். நேத்து ஷாப்பிங் எல்லாம் எப்படி இருந்துச்சு ? “ என்று அர்ச்சனாவிடம் கேட்டார்.

“ நல்லா போச்சு மைரா. என் கூட வா, நேத்து நாங்க வாங்கின  எல்லாத்தையும் உனக்கு காட்டுறேன் “ என்று அர்ச்சனா கூறினார்.

மைராவும், அர்ச்சனாவும் அவரது அறையில் இருக்க, நைனா மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாங்கிய புடவைகள், நகைகள் அனைத்தையும் அர்ச்சனா அவளிடம் காட்டினார்.

“ நைனா, உனக்காக இந்த லெஹங்காவ செலெக்ட் பண்ணி இருக்கா. நாம எல்லாரும் ஒரே கலர்ல டிரஸ் போடணும்னு அவ விரும்புறா. நான் நைனாவுக்கு புடவைய செலெக்ட் பண்ணேன், அவளுக்கு அது ரொம்ப புடிச்சு இருந்துச்சு. அவ உன்ன மாதிரி தான் இருக்கா மைரா. க்ரிஷ் அவனோட வாழ்க்கையில நடந்த இவ்ளோ கஷ்டம் பிரச்னைக்கு அப்புறம் சந்தோஷமா இருக்குறத நான் பார்க்குறேன் “ என்று அர்ச்சனா மிகவும் மகிழ்ச்சியுடன் கண்கள் கலங்க பேசினார்.

“ அவ ரொம்ப நல்லவ, தைரியமானவ. அவங்க சந்தோஷமா  இருப்பாங்க அதனால நீங்க அவங்கள பத்தி கவலைப்படுறத நிறுத்துங்க. ஏற்பாடு எல்லாம் நாம பார்க்கலாம். எனக்காக நீங்க என்ன வேலை செய்ய சொன்னாலும் அத செய்ய நான் இருக்கேன் “ என்று மைரா சொன்னதும், “ உங்க வாழ்க்கையில சந்தோஷமா இருங்க. என் பசங்க அவங்களோட வாழ்க்கையை மனநிறைவோட வாழ்றத பார்க்குறத தவிர எனக்கு வேற எதுவும் வேணாம் “ என்று அர்ச்சனா ஆனந்த கண்ணீரோடு கூறினார்.

மைரா அர்ச்சனாவை அணைத்துக் கொள்ள, வசுந்த்ரா சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தார்.

“ ஒருவழியா என் பொண்ண நான் பார்த்துட்டேன் “ என்று வசுந்தரா சொல்ல, “ அம்மா, அத நீங்க உங்க பையன் கிட்ட சொல்லி புகார் செய்யணும். நெனச்ச அப்போ எல்லாம் அவர் தான் என்ன கடத்திட்டு போறாரு “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ அப்படியா ? அப்போ தாராளமா அவன் உன்ன கடத்தட்டும், நான்  எந்தப் புகாரும் செய்ய மாட்டேன். எனக்கு வீட்ல எந்த வேலையும் இல்ல, உனக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன் “ என்று வசுந்தரா சொன்னதை கேட்டு, “ ரொம்ப சந்தோஷமா இருக்காதீங்க, ரிசப்ஷன் முடிஞ்சதும் கெட்சப்ப உங்க கூடவும், அப்பா கூடவும்  குறைஞ்சது ரெண்டு மாசம் தங்க வருவாரு. உங்க பையனுக்கு பணிவிடை செய்ய நீங்க ஓடுறத நான் பார்த்துட்டு இருப்பேன் “ என்று மைரா சொன்னாள்.

“ சந்தோஷமா வாங்க, என் பையன கவனிச்சுக்குறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். அது இருக்கட்டும், நான் இல்லாம உன் ஷாப்பிங் எப்படி இருந்துச்சு ? “ என்று அர்ச்சனாவிடம் கேட்டார்.

“ உன்னை மிஸ் பண்ணேன் ஆனா க்ரிஷும் நைனாவும் எல்லாத்தையும் முடிக்க உதவி செஞ்சாங்க. ராஜன் அண்ணா ஆபீஸ்ல நடந்த ஆண்டுவிழா கொண்டாட்டம் எப்படி இருந்துச்சு ? ரொம்ப என்ஜாய் பண்ணீங்களா ? “ என்று அர்ச்சனா பதிலுக்கு அவரிடம் கேட்டார்.

“ நீங்க எல்லாம் இல்லாம அது கொண்டாட்டமா இருக்குமா? எங்களுக்கு போரடிச்சு வீட்டுக்கு திரும்பி வர வெயிட் பண்ணிட்டு இருந்தோம் “ என்று வசுந்தரா சலித்து கொண்டார்.

அவர்கள் தொடர்ந்து அரட்டை அடித்து, முந்தைய நாள் செய்த ஷாப்பிங்கை சரிபார்க்கத் தொடங்கினர்.

க்ரிஷும், நைனாவும் காரை ஒரு மாடி வீட்டின் முன் நிறுத்த, ரோஷினியின் மூன்று நண்பர்களை சந்தித்த பிறகு விரக்தியில் இருந்த க்ரிஷின் உள்ளங்கையை நைனா ஆதரவாக அழுத்தினாள்.

“ இது தான் நாம் தேட போற கடைசி இடம், நம்ம கடைசி நம்பிக்க “ என்று க்ரிஷ் சொல்ல, “ ஒரு விஷயம் என்னனு புரிஞ்சுதா ?  ரோஷினி கிட்ட அவளோட லேப்டாப் இல்ல. இதுவர நாம சந்திச்ச மூணு பொண்ணுங்களும் உண்மையானவங்க அப்புறம் ரோஷினிய மாதிரி இல்ல அதனால அவங்க கிட்ட லேப்டாப் இல்ல. என் கேள்வி என்ன தெரியுமா ? நாம லேப்டாப் கண்டுபிடிக்க முடியாம போனா இல்ல இந்த பொண்ணு கிட்டையும் லேப்டாப் இல்லனா என்ன செய்றது ? “ என்று நைனா கேட்டாள்.

“ எனக்குப் பைத்தியம் புடிக்குற மாதிரி இருக்கு “ என்று க்ரிஷ் விரக்த்தியில் சொல்ல, “ ஒன்னு அவளோட லேப்டாப் அவ கம்பெனியில இருக்கும் இல்ல வேற யாராவது இதுல சம்மந்தப்பட்டு இருக்கணும் “ என்று நைனா சொன்னாள்.

“ ஒருவேள அப்படி இருந்தா நாம நம்ம வாழ்க்கையில நிம்மதியா இருக்கலாம். அண்ணன் அப்புறம் மைரா கிட்ட பேசலாமா ? “ என்று க்ரிஷ் கேட்டான்.

“ இந்த பொண்ணுகிட்டயோ, அவ அப்பா அம்மாகிட்டயோ பேசிட்டு அப்புறம் அவங்க கிட்ட பேசலாம் “ என்று நைனா சொல்ல, இருவரும் காரில் இருந்து இறங்கி அந்த வீட்டின் செய்வேன் கதவு மணியை அழுத்தினர். 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவைத் திறந்தார்.

“ நான் உங்க பொண்ணோட ப்ரெண்ட், எங்க கல்யாணத்துக்கு இன்விடேஷன் கொடுக்க வந்துருக்கோம் “ என்று க்ரிஷ் சொல்ல, அந்தப் பெண் அவர்களை உள்ளே அனுமதித்தார். க்ரிஷ், நைனா அவரை பின்தொடர்ந்தனர், ஆனால் ரோஷினியின் குரலைக் கேட்டதும் அவர்கள் வெளியே அப்படியே நின்றனர்.

“ எப்படியாச்சும் என் லேப்டாப்ப கண்டுபிடிக்கனும். நான் அத பெங்களூர் வீட்ல என் அலமாரியில தான் பாதுகாப்பா வெச்சேன் ஆனா இப்போ அது காணும். க்ரிஷும் அந்த திருட்டு நாயும் தான் அத திருடி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் “ என்று ரோஷினி சொன்னதை கேட்டதும், நைனா க்ரிஷை மீண்டும் காருக்கு இழுத்து, விரைவாக ஓட்டுமாறு சைகை செய்தாள்.

அவனும் காரை ஸ்டார்ட் செய்ய, அந்த பெண்மணி அவர்களை கூப்பிட கத்தினார், ஆனால் க்ரிஷ் அதை பொருட்படுத்தாமல் காரை ஓட்டிச் சென்றான். ரோஷினியும் அவளது தோழியும் வெளியே சென்று அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர்.

“ அம்மா, ஏன் கத்திட்டு இருக்க ? “ என்று ரோஷினியின் தோழி தனது அம்மாவிடம் கேட்டாள்.

“ உன் ப்ரெண்ட் அவன் கல்யாணத்துக்கு இன்விடேஷன் கொடுக்க வந்தாங்க, நான் அவங்கள உள்ள வர சொன்னேன் ஆனா என்ன ஆச்சு தெரியல, அவங்க மறுபடியும் கிளம்பி போயிட்டாங்க “ என்று அவளது அம்மா சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டு ரோஷினி தெருவுக்கு விரைந்தாள், ஆனால் எந்த காரையும் அவள் காணவில்லை. அப்போது ரோஷினியின் தோழி அவள் தோளைத் தொட்டாள்.

“ க்ரிஷும், நைனாவும் தான் இங்க வந்தாங்கனு நினைக்குறேன் ஆனா எதுக்காக ? ஒருவேள என்ன தேடுறாங்களா ? என்னால இனிமே இங்க இருக்க முடியாது. நான் ஏதாவது இடம் தேடுறேன் “ என்று சொல்லிவிட்டு ரோஷினி தன் தோழியிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். காரை நிறுத்திய க்ரிஷ்  ஸ்டீயரிங்கில் முஷ்டியால் அடித்தான்.

“ நான் சொன்னது சரி தான், அவகிட்ட லேப்டாப் இல்ல, ஆனா அத யார் திருடியிருக்க முடியும்? “ என்று நைனா குழப்பத்துடன் சொல்ல, “ அண்ணன் கிட்டயும், மைரா கிட்டயும் பேசி எல்லாத்தையும் தெளிவுபடுத்துவோம். அவங்க என் மேல கோவப்படுவாங்க ஆனா நான் எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லி இத சரி பண்ண நினைக்குறேன் “ என்று க்ரிஷ் கூறினான்.

அவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்த போது மைரா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள், அர்ச்சனா, வசுந்த்ரா லுடோ விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“ அத்த, நாங்க எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுத்துட்டோம். நான் செய்ய வேண்டியது வேற ஏதாவது இருக்கா ? “ என்று நைனா கேட்க, “ நீ இப்ப தான் வீட்டுக்கு வந்துருக்க, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு “ என்று சொன்ன வசுந்தரா பின்னர் மைராவை பார்த்து, மைரா  மதியம் நாம செஞ்ச ஸ்வீட் கொண்டு வந்து ரெண்டு பேருக்கும் கொடு “ என்றார்.

மைரா கிட்சனுக்கு சென்று இரண்டு கிண்ணங்களில் ஸ்வீட் கொண்டு வந்து நைனாவிடம் கொடுத்தாள். நைனா ஒரு கிண்ணத்தை க்ரிஷிடம் கொடுத்து பொறுமையாக இருக்கும்படி அவனுக்கு உறுதியளித்து மைராவின் அருகில் அமர்ந்தாள்.

“ மைரா, இன்னைக்கு நைட்டு இல்ல நாளைக்கு மதியம் நாம  ஐஸ்கிரீம் பார்லருக்குப் போகலாமா ? “ என்று நைனா மைராவிடம் கேட்ட போது குறுக்கிட்ட அர்ச்சனா, “ நைனா, நீயும் க்ரிஷும்  கல்யாண மண்டபத்துக்குப் போய் கேஷவ் செலக்ட் பண்ணி இருக்க அலங்காரங்கள கன்ஃபார்ம் பண்ணிடுங்க. மைராவ கூட்டிட்டு போங்க அப்படியே நீங்க எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம் “ என்று யோசனை சொன்னார்.

“ அண்ணா செலெக்ட் பண்ணா நல்லா தான் இருக்கும் மா அதனால நாம எதையும் சரி பார்க்க வேணாம். நாளைக்கு லஞ்சுக்கு வெளியே போவோம். நான் அண்ணன் கிட்ட பேசுறேன் “ என்றான் க்ரிஷ்.

“ கெட்சப் அவரோட வேலையில கொஞ்சம் பிஸியா இருக்காரு அதனால போறது கஷ்டம் தான். இன்னொரு நாள் போகலாம். நான் என் ரூம்ல டிரஸ் அடுக்க போறேன். நைட்டு சமைக்க கீழ வரேன் “ என்று சொல்லிவிட்டு மைரா எழுந்தாள்.

“ நான் உனக்கு உதவி செய்றேன் மைரா. உன் கிட்ட நான் நிறைய பேசணும் “ என்று சொல்லி நைனாவும் எழுந்தாள். அர்ச்சனா மற்றும் வசுந்த்ராவின் கண்கள் தன் மீது இருப்பதைக் கண்ட மைரா புன்னகையுடன் நைனாவை தன்னைப் பின்தொடர அழைத்துச் சென்றாள். அவர்கள் அறைக்குள் நுழைந்ததும், மைரா படுக்கையில் உட்கார்ந்தாள், நைனா அறை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதைக் கண்டாள்.

“ நீ என்ன தவிர்க்க தானே பொய் சொல்லி ரூமுக்கு வந்த ? மைரா உனக்கு என் மேல நம்பிக்க இல்லையா ? “ என்று நைனா கேட்டதும், “ நீ என்ன நம்பினியா நைனா ? “ என்று மைரா பதிலுக்கு அவளிடம் கேட்டாள்.

“ நானும் க்ரிஷும் நாளைக்கு உன் கிட்டயும் அண்ணன் கிட்டயும் எல்லாத்தையும் சொல்றோம். வீட்ல அத பத்தி பேச முடியாது அதனால தயவு செஞ்சு அவர்கிட்ட பேசு, நாம லஞ்சுக்கு வெளியே போகலாம், நாங்க எல்லாத்தையும் சொல்றோம் “ என்று நைனா கெஞ்சி கேட்க, “ சரி, நீயும், உன் புருஷனும் நீங்க பண்ணத நியாயப்படுத்துவீங்கனு நம்புறேன். அப்புறம், உன் புருஷன் என்ன நியாயம் சொன்னாலும் அவன் எனக்குள்ள ஏற்படுத்துன காயத்தோட வடு அப்படியே தான் இருக்கும். என் வாழ்க்கையிலையும், கெட்சப் வாழ்க்கையிலையும் பண்ண சேதம் ரொம்ப பெருசு “ என்று மைரா கூறினாள்.

“ அவன மன்னிக்குறதும், மன்னிக்காம இருக்குறதும் உன்னோட  விருப்பம், தப்பு செய்றது மனுஷங்க இயல்பு, தப்பு பண்ணி மன்னிப்பு கேட்டா மன்னிக்கனும்னு நீ தானே சொல்லுவ ? அவன் பண்ண எல்லாத்துக்கும் வருத்தப்படுறான். அவன் அத பண்ணதுக்கு சில காரணம் இருந்தாலும், நான் அவன நியாயப்படுத்தல. நான் சொல்றதெல்லாம் அவன் சொல்ல போறத கேளு, அதுக்கு அப்புறம் நீ என்ன வேணும்னாலும் முடிவு செய் “ என்று சொல்லிவிட்டு நைனா அறையை விட்டு வெளியேறினாள்.

இதற்கிடையில் கேஷ்வ் தனது ஆபீஸ் ரூமில் வேலை செய்து கொண்டிருந்தான் அப்போது வருண் ஒரு நபருடன் வீட்டுக்குள்  நுழைந்தான்.

வருண் அவரை வரவேற்பறையில் உட்கார வைத்து விட்டு ஆபீஸ் ரூமுக்குள் சென்று கதவை மூடினான்.

“ வருண், யார கூட்டிட்டு வந்துருக்க ? “ என்று கேஷவ் கேட்க, “ அவர பத்தி அப்புறம் பேசுவோம், ஆனா நீங்க ரிப்போர்ட் படிக்கறதுக்கு முன்னாடி நான் காட்ட போறத பார்த்துட்டு, நான் சொல்றதைக் கேளுங்க “ என்று வருண் கூறினான்.

“ சுத்தி வளைச்சு பேசாத, நேரடியா சொல்லு “ என்று கேஷவ் சொன்னதும், வருண் ரோஷினியின் லேப்டாப்பை மேஜை மீது வைத்துவிட்டு ஒரு ஃபைலைத் திறந்து திரையை கேஷவை நோக்கித் திருப்பினான்.

அந்த புகைப்படத்தை பார்த்த கேஷவ் பலத்த சத்தத்துடன் திரையை மூடிவிட்டு கோபத்தில் அலறியபடி இருக்கையில் இருந்து எழுந்தான்.

“ என்னடா இது ? “ என்று கேட்டு கேஷவ் தன் முஷ்டியை மேஜையின் மீது ஓங்கி அறைந்து பொருட்களை தரையில் சிதறடிக்க, வருண் கோபத்தில் கர்ஜித்துக் கொண்டிருந்த கேஷவ்வை பிடிக்க விரைந்தான்.

கேஷவ் கோபத்தில் கர்ஜித்தான். விரக்தியில் பற்களைக் கடித்துக் கொண்டு மேஜை மீதிருந்த சாமான்களை அடித்து நொறுக்கினான். வருண் கேஷவை இழுத்து சோபாவில் உட்கார வைத்தான், ஆனால் அவன் இன்னும் பைத்தியமாக இருந்தான்.

“ அது போலி பாஸ் “ என்று வருண் சொல்ல, “ அது எனக்குத் தெரியும், அது போலியானதுனு எனக்குத் தெரியும். நீ தகவல் சொல்லு “ என்றான் கேஷவ்.

“ க்ரிஷுக்கு தெரிஞ்சோ, தெரியாமலையோ அவன் கூட நெருக்கமா இருக்கும் போது ரோஷினி போட்டோ, வீடியோ எடுத்து இருக்கா.. பெரும்பாலான வீடியோவுல உங்க தம்பியோட முகம் மட்டும் தெரியுற மாதிரி வீடியோ எடுத்து இருக்கா ஆனா சில வீடியோவுல மட்டும் ரெண்டு பேரோட முகமும் தெரியுது.

உங்க தம்பிக்கு அவ அனுப்பி இருந்த முதல் வீடியோவுல அவனோட முகம் மட்டும் தான் தெரியுது. அதுக்கு அப்புறம் நீங்க பாரிஸ்ல இருந்த அப்போ அவ ஒரு வீடியோவ அவனுக்கு அனுப்பி இருக்கா. அதுல அவளோட முகத்துக்கு பதிலா மேடம் முகம் இருக்க மாதிரி மார்பிங் பண்ணி இருக்கா. வீடியோ கிடைச்ச உடனேயே க்ரிஷ் அவளுக்கு போன் பண்ணி இருக்கான் “ என்று வருண் சொல்ல, “ அந்த வீடியோவ வெச்சு அவன மிரட்டி இருக்கா  “ என்று கேஷவ் சொல்லி முடித்தான்.

“ ஆமா, அவங்களுக்கு இடையில சில மெசேஜ் தவிர எந்த தகவல் பரிமாற்றமும் இல்ல. அது மட்டும் இல்ல, அவள உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி ஆர்டர் பண்ணி இருக்கா “ என்று வருண் சொன்னதை கேட்டு, கேஷவ் தரையில் கிடந்த மொபைலை எடுத்து க்ரிஷை அழைத்தான்.

க்ரிஷ் தன் அண்ணன் அழைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான், அதனால் அவன் உடனடியாக பதிலளித்தான்.

“ அண்ணா “ என்று க்ரிஷ் சொன்னதும், “ உனக்கு ஒரு அட்ரஸ் அனுப்பி இருக்கேன். நீ உடனே கிளம்பி வா. வரும் போது உன் மனைவிய கூட்டிட்டு வா. இந்த விஷயம் நம்ம வீட்ல யாருக்கும் தெரிய வேணாம், ஏதாவது சாக்கு போக்கு சொல்லு “ என்று கேஷவ் உத்தரவிட்டதும், “ என்ன ஆச்சு அண்ணா ? ஏதாவது பிரச்சனையா ? “ என்று க்ரிஷ் கேட்டான்.

“ இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள நீ என்ன சந்திக்கனும் “ என்று சொல்லி கேஷவ் அழைப்பை துண்டித்து உள்ளூர் இன்ஸ்பெக்டரின் எண்ணை டயல் செய்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.

“ இப்ப என்ன பண்றீங்க? நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு “ என்று வருண் சொன்னான்.

“ நான் எல்லாத்தையும் தெரிஞ்சிக்குறேன் ஆனா க்ரிஷ் இங்க இருக்கணும். இன்னைக்கு அவன் என்னோட கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்லணும் “ என்று கேஷவ் கூறினான்.

க்ரிஷ் சமையலறைக்குள் நுழைந்த போது நைனாவும் மைராவும் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.

“ நைனா, நைட்டு டின்னர் சாப்பிட நான் ஸ்பெஷல் ஏற்பாடு பண்ணி இருக்கேன், நீ சீக்கிரம் ரெடியாகு “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டதும், “ ஆனா வீட்ல சமைச்சு முடிச்சாச்சு க்ரிஷ் “ என்று நைனா அவனிடம் கூறினாள்.

“ அது இருக்கட்டும், நாம வெளியே போவோம். ப்ளீஸ் சீக்கிரம் வா “ என்று க்ரிஷ் சொல்ல, நைனா மைராவைப் பார்த்துவிட்டு க்ரிஷுடன் தங்கள் அறைக்குச் சென்றாள்.

“ இப்ப என்ன ஆச்சு உனக்கு ? “ என்று நைனா கேட்டதும், “ அண்ணா எனக்கு போன் பண்ணி வீட்டுல யாருக்கும் தெரியாம உடனே சந்திக்கணும்னு சொன்னாரு. அவர் ரொம்ப கோவமா பேசினாரு. ஏதோ மோசமான விஷயம் நடந்த மாதிரி தெரியுது. நீ சீக்கிரம் கிளம்பு நான் கார் வெளிய எடுக்குறேன் “ என்று சொல்லிவிட்டு க்ரிஷ் வெளியே சென்றதும், நைனா உடனடியாக சல்வாருக்கு மாறி வேலயே சென்று காரில் ஏறினாள்.

*************************************

முன்னோட்டம்:

“ உன் வாழ்க்கையில ஏதாவது பிரச்சன இருக்கானு நான் உன்கிட்ட எத்தன முறை கேட்டேன் ? அதுவும் உன்கிட்ட அவ உன்ன ப்ளாக்மெயில்  செய்றாளானு குறிப்பா கேட்டேன். அப்போ நீ ஏன் அத பத்தி என்கிட்ட சொல்லாம மறைச்ச ? அந்த பிச்சைக்கார நாய் என் மைராவ இதுல சம்பந்தப்படுத்தியிருக்கா, மைராவுக்கு ஏதாவது கெட்டது நடந்தா என்ன செய்றது ? என் மனைவிக்கும் அவளோட  கண்ணியம், மரியாதைக்கும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை எப்படி என்கிட்ட சொல்லாம இருக்க முடிஞ்சுது ? “

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:55 pm

[…] 77. வீடியோவ வெச்சு அவன மிரட்டி இருக்கா  […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!