Home Family81. நீ இங்க ஸ்பெஷல் நோயாளி

81. நீ இங்க ஸ்பெஷல் நோயாளி

by Siragugal Novels
12 views

க்ரிஷும் நைனாவும் தங்கள் அறையில் இருந்தார்கள், க்ரிஷ் அழைப்பில் பேசிக் கொண்டிருந்த போது நைனா அவளுக்காக க்ரிஷ்  வாங்கிய ஆடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். நைனா படுக்கையில் குப்புற விழுந்து க்ரிஷ் அழைப்பை முடிக்கும் வரை காத்திருந்தாள். புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்து மொபைலில் இருந்து மெசேஜ் காட்டினான்.

“ நம்ம கல்யாண ரிசப்ஷனுக்கு ரெண்டு நாள் கழிச்சு அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன். அவர் சிட்டியில ரொம்ப  பிரபலமான மனநல டாக்டர் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு, “ நல்லது க்ரிஷ். அப்புறம் நீ ஆபீஸ் போக ஸ்டார்ட் பண்ணு, அப்போ உன் மனசு தேவையில்லாம எதையும் யோசிக்குறத திசைத்திருப்பும். நீ இப்போ ரொம்ப நாளா வேலையில கவனம் செலுத்தாம இருக்க “ என்று நைனா கூறினாள்.

“ நம்ம ரிசப்ஷனுக்கு அப்புறம் நான் போறேன் நைனா. நான் வேலைக்கு போன அப்புறம் நீ வீட்ல சகஜமா இருக்கணும் அதனால அதுவர நான் வீட்ல இருக்கேன் “ என்று க்ரிஷ் சொல்ல, “ எனக்கு அத்தையும், மைராவும் பல வருஷமா தெரியும். நாங்க ஷாப்பிங், படம் பார்க்க ஒன்னா வெளிய போய் இருக்கோம் அதனால என்ன பத்தி கவலைப்பட வேணாம் “ என்றாள் நைனா.

அவள் சொன்னதை கேட்டு க்ரிஷ் புன்னகைக்க, இருவரும் வெளியே சென்று மதனுடனும் அர்ச்சனாவுடனும் சேர்ந்து படம் பார்த்தனர். கேஷவும், மைராவும் அறையில் இருந்தார்கள், அவள் பதட்டத்துடன் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

“ இந்தக் கையில் நீ கடிக்க நகம் எதுவும் மிச்சம் இல்லனு நினைக்கிறேன் “ என்று கேஷவ் சொல்ல, மைரா உதட்டைப் பிதுக்கி அவன் கையை விடுவித்தாள், அவன் இன்னொரு கையை நீட்டியதும், அதை அவள் மீண்டும் கடிக்க ஆரம்பித்தாள்.

“ நகம் கடிக்குறத எப்போ நிறுத்துவ அம்மு ? இங்க பாரு உன் கையில எதுவுமே மிச்சம் இல்லாம இப்போ என் நகத்தையும் கடிக்க ஆரம்பிச்சுட்ட. அப்பா, அம்மா அவங்க குழந்தைங்க நகம் கடிக்காம இருக்க போடுற நெயில் பாலிஷ் வாங்குறேன். நம்ம குழந்தைக்கு இதெல்லாம் வாங்கணும்னு நெனச்சேன் ஆனா உனக்காக  பண்ணிட்டு இருக்கேன் “ என்று கேஷவ் சொல்ல, “ மிஸ்டர் இதுல  ஏதாவது பிரச்சனை இருக்கா? “ என்று மைரா கேட்டாள்.

“ நகம் கடிக்குறது நல்லது இல்ல அம்மு “ என்று கேஷவ் சொல்ல, அதற்கு மைரா உடனே, “ நான் நகங்கள மட்டும் தான் கடிக்கிறேன், ஆனா நீங்க எதையும் கடிக்காம விடுறது இல்ல “ என்று சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டு கேஷவுக்கு புரை ஏறி அவன் அவளை கிண்டலுடன் பார்த்தாள்.

“ அழுக்கு மனுஷா, அப்படி பார்க்குறத நிறுத்துங்க. நீங்க என் கன்னம், உதடு. மூக்கையும் கடிக்குற அர்த்தத்துல சொன்னேன் “ என்று மைரா சொன்னாள் ஆனால் கேஷவ், “ என் லிஸ்ட் அவ்ளோ சின்னது இல்ல அம்மு. இன்னும் வேற என்னலாம் லிஸ்ட்ல இருக்குனு நான் சொல்லட்டுமா ? “ என்று கேட்டான்.

மைரா அவன் முகத்தை தள்ளிவிட்டு அவனது செல்போன் ஒலிக்க ஆரம்பித்ததும், அழைப்பை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்து கேஷ்வை பேசும்படி சைகை செய்தாள்.

“ சொல்லு வருண், என்ன ஆச்சு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நாங்க அவள புடிச்சிட்டோம், கஸ்டடியில இருக்கா. அவளோட கிரெடிட் கார்ட் நாங்க கண்காணிச்சோம், அவ ஒரு ஹோட்டல் ரூம் புக் பண்ணும் போது கண்டுபுடிச்சோம் “ என்று வருண் விளக்கம் சொன்னான்.

“ இப்ப அவள எங்க வெச்சு இருக்கீங்க? “ என்று கேஷவ் கேட்க, “  இன்ஸ்பெக்டர் ஆனந்த் அவள போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு இருக்காரு. உங்க ஆர்டர்காக வெயிட் பண்றோம் “ என்றான் வருண்.

“ நான் காலையில வந்துடறேன், இன்னிக்கு நீங்க செஞ்ச வேலைக்கு அப்புறம் நீங்க ரெஸ்ட் எடுங்க. நைட்டு குறைஞ்சது ரெண்டு லேடீஸ் கான்ஸ்டபிள் ஸ்டேஷன்ல இருக்க சொல்லு. என் சார்பா இன்ஸ்பெக்டருக்கு நன்றி சொல்லு, நாளைக்கு நான்  தனிப்பட்ட முறையில அவருக்கு நன்றி சொல்றேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ கண்டிப்பா பாஸ். குட நைட் “ என்று வருண் பதில் கூறினான்.

அழைப்பை துண்டித்த கேஷவ், மைரா நிம்மதி பெருமூச்சு விடுவதைப் பார்த்தான்.

“ ஏன் டென்ஷனா இருக்க ? இன்னைக்கு எப்படியும் பிடிச்சிடுவாங்கனு நான் தான் சொன்னேன்ல ? “ என்று கேஷவ் அவளை பார்த்து கேட்டான்.

“ நைனா, க்ரிஷோட ரிசப்ஷன் இருக்கு, அவ நமக்கு எதிரா பிளான் பண்றானு தெரிஞ்சு நாம எப்படி நிம்மதியா இருக்க முடியும் ? இப்போ நாம சந்தோஷமா ரிசப்ஷன் வேலைய பார்க்கலாம். ரிசப்ஷனுக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, அப்போ நான்  ஃப்ரெஷ்ஷா இருக்கனும் அதனால என்ன தொந்தரவு செய்ய வேண்டாம். என்ன தூங்க விடுங்க “ என்று சொல்லிவிட்டு மைரா அவள் பக்கமாக நகர்ந்தாள், ஆனால் கேஷவ் அவளை அள்ளி அவன் மேல் படுக்க வைத்தான்.

“ என்ன விடுங்க கெட்சப், உங்க பொண்டாட்டி ரிசப்ஷன்ல அழகா இருக்க வேண்டாமா? “ என்று மைரா கேட்க, “ நான் என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணா தான் அவ ஜொலிப்பா. நான் ரொமான்ஸ் பண்ணும் போது நீ வெட்கப்படுவ அப்போ, உன் முகம் சிவந்து போகும். மேக்கப் இல்லாம நீ அவ்ளோ அழகா இருப்ப “ என்றான் கேஷவ்.

“ இல்ல, அதெல்லாம் முடியாது. இந்த முறை நான் ரெடியாக நீங்க எனக்கு ஒரு ஸ்டைலிஸ்ட் புக் பண்ணுங்க “ என்று மைரா சொன்னாள்.

“ அது தான் உனக்கு வேணும்னா நான் சிட்டியில பெஸ்ட் ஸ்டைலிஸ்ட் புக் பண்றேன், ஆனா உன் மேல இயற்கையான பளபளப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரிசப்ஷனுக்கு நடுவுல உன்ன நான் கடத்திட்டா என்ன குறை சொல்லாத. நான் உன் மேக்கப்ப  கொஞ்சம் கலைக்கலாம், உன்னோட புது புடவ இல்ல லெஹங்கா மடிப்புகள கசக்கலாம், உன் தலைமுடி கலைஞ்சு இருக்கும், உன் கழுத்துல ஒரு காதல் கடி இருக்கலாம், யாருக்குத் தெரியும் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான மைரா, “ அப்படி ஏதாவது செய்ய நெனச்சு கூட பார்க்காதீங்க சொல்லிட்டேன். அப்புறம் ஒரு மாசத்துக்கு உங்கள என் பக்கத்துல கூட விட மாட்டேன் “ என்று மைரா மிரட்டினாள்.

“ அப்படியா? அப்போ சரி பார்க்கலாம். இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு “ என்று சொல்லி அவளை தன் அருகில் படுக்க வைத்து அவளை தொந்தரவு செய்யாமல் தூங்க விட்டான்.

காலையில் மைராவும் நைனாவும் சலூனுக்கு கிளம்ப, கேஷவ் வருணுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான். இன்ஸ்பெக்டர் ஆனந்த் அவனை வரவேற்று ரோஷினி பூட்டியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

கேஷவைப் பார்த்ததும் ரோஷினி அவனிடம் விரைந்தாள், ஆனால் ஒரு பெண் கான்ஸ்டபிள் நிறுத்தி அவளை பின்னால் இழுத்தார்.

“ கேஷவ், ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க. இவங்க எந்த காரணமும் இல்லாம என்ன இங்க அடைச்சு வெச்சுருக்காங்க. நான் ஒன்னும் செய்யல. என்ன இங்க வெச்சுருக்க காரணத்த கூட சொல்ல மாட்டேங்குறாங்க. இந்த இடத்துல அருவருப்பா இருக்கு, தயவுசெஞ்சு என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போங்க “ என்று ரோஷினி கெஞ்சினாள்.

“ நான் ஆர்டர் பண்ணி தான் உன்ன இங்க கொண்டு வந்தாங்க “ என்று கேஷவ் சொல்ல, “ கேஷ்வ், பாஸ்டர்ட் எவ்ளோ தைரியம் இருந்தா என்ன இப்படி செய்வ ? உன்ன நிம்மதியா வாழ விடமாட்டேன் “ என்று ரோஷினி கத்தினாள்.

அவள் சொன்னதை கேட்டு, பெண் கான்ஸ்டபிளைப் பார்த்து கேஷவ் தலையை ஆட்டினான், அவர் உடனடியாக ரோஷினியை ஓங்கி அறைந்து, “ அவர அவமானப்படுத்தி பேசி உன்னோட குற்றம் இன்னும் அதிகமாகுது. சார் தான் சிபிஐ கூடுதல் இயக்குனர் “ என்று சொன்னார்.

அந்த விவரத்தை கேட்டு ரோஷினி உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டு நடுநிலை முகத்துடன் நின்ற கேஷவைப் பார்த்தாள். உடனே தன் தோரணையை மாற்றிக் கொண்டு கேஷவைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ என்ன மன்னிச்சிடுங்க கேஷவ், ராத்திரி பூரா இங்க அடைஞ்சு இருந்ததால அப்படி பேசிட்டேன், என்ன மன்னிச்சிடுங்க. நீங்க ரொம்ப திறமையானவர் அப்புறம் ரொம்ப அழகான புத்திசாலி மனுஷன்னு எனக்கு தெரியும். தயவு செஞ்சு என்ன போக விடுங்க, உங்க வாழ்க்கையில எல்லாமே பெஸ்ட் தான் கிடைக்கணும். நீங்க சிபிஐயில இயக்குநரா இருக்கீங்க, அந்த மைரா உங்க முன்னாடி நிற்க கூட தகுதி இல்லாதவ. அவ உங்க உயரத்துக்கு கூட பொருந்தல கேஷவ். என்ன பாருங்க, ஒரு பொண்ணு எப்படி இருக்கணும்னு நீங்க விரும்புவீங்களோ அந்த மாதிரி நான் இருப்பேன். நீங்க விரும்புற எல்லாத்தையும் என்னால கொடுக்க முடியும், உங்க எதிர்பார்ப்பு எல்லாத்தையும் நான் பூர்த்தி செய்வேன்.  தயவு செஞ்சு என்ன வெளிய கூட்டிட்டு போங்க. நீங்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் நான் செய்றேன் “ என்று மைரா அவனிடம் கூறினாள்.

கேஷவ் பல்லைக் கடித்துக்கொண்டு அவளது கழுத்தை சுவற்றில் அழுத்தினான். ரோஷினி மூச்சுவிட முடியாமல் கால்களை தொங்கவிட்டு கண்களை உருட்டினாள். வருணும், இன்ஸ்பெக்டர் ஆனந்தும் கேஷவை பின்னுக்கு இழுக்க, ரோஷினி இருமிக் கொண்டு, மூச்சிரைக்க தரையில் விழுந்தாள், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“ மைராவுக்கு எதிரா இன்னும் ஒரு வார்த்தை சொன்னா ஆதாரம் இல்லாம உன்ன இங்கேயே அழிச்சிடுவேன். நான் உன் கிட்ட பொறுமையா இருக்கேன்னு நான் உன் மேல பரிதாபப்படுறேன்னு அர்த்தம் இல்ல. இப்போ உனக்கு ரெண்டு வழி தான் இருக்கு. ஒன்னு நான் சொல்ற ஹாஸ்பிடல் போய் உன் கோளாறுக்கு ட்ரீட்மென்ட் எடுக்குறது இல்ல மிரட்டல், பாலியல் அச்சுறுத்தல், பாலியல் துன்புறுத்தல் இந்த கேஸ் எல்லாம் உன் மேல போட்டு உன்ன நிரந்தரமா ஜெயில்ல போடுவேன். அது மட்டும் இல்ல, உன் ஆபீஸ்ல நீ பண்ண தகவல் திருட்டு கேஸ் ஞாபகம் இருக்கட்டும். ஒரு போன் பண்ணி உன் மேல புகார் கொடுக்க சொன்னா அதுக்கு அப்புறம் நீங்க வெளியில பகல், இரவு எதுவும் பார்க்க மாட்ட “ என்று கேஷவ் அவளை கடுமையாக எச்சரித்து மிரட்டினான்.

“ ஏன் என்ன இப்படி செய்ற ?” என்று ரோஷினி கேட்க அதற்கு கேஷவ் அவளிடம், “ நீ என் அம்மாவோட அண்ணன் பொண்ணு அதனால குறைஞ்ச தண்டன சொல்லி உனக்கு உதவி தான் செய்றேன் அதனால யோசிச்சு சொல்லு “ என்று சொன்னான்.

“ என்ன ஏன் ஹாஸ்பிடல் போக சொல்றீங்க? “ என்று ரோஷினி அப்பாவியாக கேட்டாள்.

“ ஏய், எங்க கிட்ட உன் வரலாறு மொத்தம் இருக்கு. உனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்காம உன்ன வெளிய விட்டது உன் அப்பா, அம்மாவோட தப்பு “ என்று வருண் எரிச்சலுடன் கூறினான்.

“ நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்குறேன் ஆனா அதுக்கு முன்னாடி என் அப்பா, அம்மாவ சந்திக்க விரும்புறேன். எனக்கு பயமா இருக்கு , அவங்க இருந்தா எனக்கு கொஞ்சம் தைரியமா, ஆறுதலா இருக்கும் “ என்று ரோஷினி மெல்ல சொன்னாள் ஆனால் கேஷவ் அதற்கு, “ குடும்பத்துல இருக்க யாரையாவது சந்திக்க அனுமதிப்பேன்னு   கனவு காண்றத நிறுத்து “ என்று முடிவாக சொல்லிவிட்டான்.

“ ப்ளீஸ், என்ன இப்படி தண்டிக்காதீங்க. அவங்கள ஒரு முறை சந்திக்கிறேன் “ என்று ரோஷினி கெஞ்சினாள்.

“ என் குடும்பத்துக்கு நீ பண்ண கொடுமைக்கு உன்ன தண்டிக்கனும்னு நான் இன்னும் யோசிக்கக்கூட ஆரம்பிக்கல. என் மைராவோட முகத்த உன் அருவருப்பான முகத்தோட  மாத்த உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ? இந்த நொடியே என்னால உன்ன கொல்ல முடியும், ஆனா என்ன நானே கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்துறேன் “ என்று கேஷவ் கொந்தளித்தான்.

“ டாக்டர கூப்பிடட்டுமா? “ என்று வருண் கேட்க, “ வர சொல்லு. அப்புறம் இன்னைக்கு நைட்டு இவள இங்க இருந்து மாத்திடு “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

“ நேத்து நைட்டு, இவள சமாளிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்போ வேற பகல் நேரம், இவ சத்தம் போட்டா மத்தவங்க கவனம் இவ மேல இருக்கும். பகல் நேரம் இவள இங்க இருந்து கூட்டிட்டு போகவும் முடியாது “ என்று இன்ஸ்பெக்டர் ஆனந்த் சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டதும், “ அப்போ அதிகாரப்பூர்வமா ஆர்டர் இல்லாம இத செய்றீங்களா? பாஸ்டர்ட் என் மேல கேஸ் போடு, நான் எதிர்த்து போராடுறேன். இப்படி ஒரு கோழை மாதிரி என்ன இங்க கொண்டு வந்து உன் அதிகாரத்த பயன்படுத்தி என்ன கடத்தி கொண்டு போகாத “ என்று ரோஷினி கத்தி கூச்சலிட ஆரம்பித்தாள்.

“ நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல அதனால உனக்கு எதிரா என்ன நடந்தாலும் அது எனக்கு கவலையில்ல. என்னால  என்ன செய்ய முடியும்னு நீ தெரிஞ்சிக்க விரும்புறியா ? “ என்று ரோஷினியிடம் கேட்ட கேஷவ் பின்னர் வருணை பார்த்து, “  வருண் இவ சப்தத்த நிறுத்து “ என்று உத்தரவிட்டான்.

வருண் வெளியே சென்று தனது காரில் இருந்து ஒரு சிறிய பையுடன் திரும்பி வந்தான். அவன் ஒரு துணியில் குளோரோஃபார்ம் தெளித்ததும், அதைப் பார்த்த ரோஷினி தப்பிக்க முயன்றாள், ஆனால் வருண் அதை அவள் மூக்கில் அழுத்தியதும் ரோஷினி மயக்கமடைந்தாள்.

“ இனி சத்தம் வராது, உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இவள டிரான்ஸ்பர் பண்ணிடுவேன். ரொம்ப நன்றி மிஸ்டர். ஆனந்த், தனிப்பட்ட முறையில என் கேஸ் கையாண்ட விதம், உங்க முயற்சி எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி “ என்று கேஷவ் கூறினான்.

“ ப்ளீஸ், நன்றி சொல்லாதீங்க. உங்களுக்கு உதவ முடிஞ்சதுல எனக்கு சந்தோஷம் “ என்று ஆனந்த் சொன்னார்.

“ வருண் உன் கார்ல இருந்து, வேலை முடிஞ்சதும் கிளம்பு “ என்று கேஷவ் சொல்ல, வருண் தலையை அசைத்துவிட்டு கேஷவைப் பின்தொடர்ந்து காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்றான். கேஷ்வ் காரில் ஏறியதும், வருண் அவன் பக்கத்தில் நின்றான்.

“ அவள் மாத்துற வரை பாதுகாப்பு தொடரட்டும், ஆனா நான் நம்ம  வேலை முடிஞ்சு திரும்பி சென்னை வரவரைக்கும் மைராவ ஒரு போலீஸ்காரர் பாதுகாக்க சொல்லு. எல்லாத்தையும் முடிச்சிட்டு ரிசப்ஷனுக்கு வா. மைரா உன்ன பார்த்து சந்தோஷப்படுவா “ என்று கேஷவ் சொன்னதும், “ சரி, நம்ம அசைன்மென்ட் அப்புறம் உங்க வேலைய பத்தி அவங்க கிட்ட சொல்லிட்டீங்களா ? “ என்று வருண் கேட்டான்.

“ ஆமா, எல்லாமே சொல்லிட்டேன், இந்த மூணு மாசம் சீக்கிரம் கடந்து போகணும் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ ஆபீஸ்ல தங்கி, அங்கேயே சாப்பிட்டு தூங்கி எழுந்த ஆபீசர் எங்க போனாரு ? “ என்று வருண் கிண்டல் செய்தான்.

“ நிறுத்து டா, சரி நான் இப்ப கிளம்பறேன். வேலை முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு “ என்று கேஷவ் சொன்னான்.

வருண் தலையை அசைக்க, கேஷவ் வீட்டிற்கு திரும்பினான்.

மைராவும், நைனாவும் சலூனில் இருந்து புறப்பட்டு ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்றனர். தங்களுக்குப் பிடித்த ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டு எதிரெதிரே அமர்ந்தனர்.

“ அப்புறம் ஹனிமூன் எங்க போக பிளான் பண்ணி இருக்கீங்க ? “ என்று மைரா கேட்டதும், நைனாவுக்கு ஐஸ்கிரீம் புரை ஏறி, மைராவின் கையை அறைந்தாள்.

“ என்ன ? எனக்கு கெட்சப் கூட கல்யாணம் ஆன அப்போ நீ என்கிட்ட இத தான் கேட்ட, அப்போ எனக்கு கெட்சப் மேல இருந்த லவ் தெரியாது ஞாபகம் இருக்கட்டும். ஆனா நீ ஏற்கனவே உன் புருஷன லவ் பண்ற அதனால என் கேள்வி கேட்டதுல என்ன தப்பு ? “ என்று மைரா புருவத்தை உயர்த்தினாள்.

“ அவன் மனநல டாக்டர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கான், அவனோட குற்ற உணர்வு, மன அழுத்தம் அப்புறம் அவன பாதிக்குற எல்லாத்துலையும் இருந்து அவன் வெளிய வருவான்னு நம்புறேன். மைரா, க்ரிஷ மன்னிச்சு அவன் கிட்ட பேசுவியா ? “ என்று நைனா நம்பிக்கையுடன் கேட்டாள்.

“ நைனா, நான் அவன மன்னிச்சிட்டேன் ஆனா காரணம் எதுவா இருந்தாலும் அத என்னால மறக்க முடியாது “ என்று மைரா பதில் சொன்னதும், பெருமூச்சு விட்ட நைனா, “ எனக்கு புரியுது, ஆனா ட்ரை பண்ண முடியுமா? எனக்காக இல்ல, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த நட்புக்காக. அவனுக்கு இருந்த பொறாமைய தாண்டி அவன் உன் மேல உண்மையா அக்கறையா தான் இருந்துருக்கான், அத நீயும் மறுக்க முடியாதுனு எனக்கு தெரியும். சரி தானே ? என்று கேட்டாள்.

“ நான் ஒத்துக்குறேன் ஆனா இத்தன வருஷமா நடந்த எல்லாத்தையும் உடனே மறக்குறது எனக்கு அவ்ளோ சுலபம் இல்ல “ என்று மைரா மெல்ல பதில் சொன்னாள்.

“ எனக்கு புரியுது, தயவு செஞ்சு முயற்சி செய் “ என்று நைனா சொன்னதை கேட்டு, மைரா தலையை அசைக்க, தன் மொபைலில் கேஷவின் பெயரை பார்த்து புன்னகைத்து அழைப்புக்கு பதில் சொன்னாள்.

“ நான் வீட்டுக்கு வந்துட்டேன் அம்மு, நீ வீட்டுக்கு வர எவ்ளோ நேரம் ஆகும் ? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.

“ நான் இன்னைக்கு லேட்டா வருவேன், நான் நைனா கூட ஷாப்பிங் போறேன் அதுக்கு அப்புறம் நாங்க ஒன்னா டின்னர் சாப்பிட பிளான் பண்ணி இருக்கோம். நாங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி அவளோட அப்பா, அம்மாவ கூட சந்திக்கலாம் இல்ல இன்னைக்கு நைட்டு அவளோட அம்மா வீட்ல தங்க கூட வாய்ப்பு இருக்கு. நைனா அவங்கள ரொம்ப மிஸ் பண்றா “ என்று மைரா சொல்ல, மைரா அழைப்பில் கேஷவை கிண்டல் செய்வதை கண்டு நைனா புன்னகைத்தாள்.

கேஷவ் அவளது திட்டங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான்.

“ ஒன்னு நீ திரும்பி வா இல்ல நான் உன்ன கடத்திட்டு வருவேன். உனக்கு ஞாபகம் இருக்கா ? நான் உன்கூட இருக்க கொஞ்ச நாள் தான் அவகாசம் இருக்கு. ஒவ்வொரு நொடியையும் நான் உன் கூட இருக்க விரும்புறேன் “ என்று கேஷவ் சொல்ல, “ யோசிக்குறேன் “ என்று சொல்லி மைரா அழைப்பை துண்டித்தாள்.

அவளும், நைனாவும் வெளியேறியதும், அவள் போலீசாரைப் பார்த்து புன்னகைத்து, அவர்களுக்காக வாங்கிய ஐஸ்கிரீம் பையை அவர்களிடம் கொடுத்தாள்.

இருவரும் வீடு திரும்பி அவள் அறைக்குள் நுழைந்தவுடன் கேஷவ் அவளை கிச்சுகிச்சு செய்ய ஆரம்பித்தான். மைரா தப்பிக்க அறையைச் சுற்றி ஓடினாள், ஆனால் அவன் அவளைத் தோளில் தூக்கி படுக்கையில் போட்டு அவள் மடியில் தலை வைத்து படுத்திருக்க, மைரா ஓடியதில் மூச்சு வாங்கினாள்.

“ நீங்க அவள என்ன பண்ணீங்க ? “ என்று மைரா கேட்டதும், “  அவள நம்ம கிட்ட இருந்து தூரத்துல ஒரு ஹாஸ்பிடல் அனுப்ப பிளான் பண்ணிட்டேன். எனக்குத் தெரியாம அவ அந்த இடத்த விட்டு வெளிய வர முடியாது அதனால நீ நிம்மதியா இருக்கலாம் “ என்று கேஷவ் கூறினான்.

“ ரொம்ப நன்றி, நான் நைனாவ நெனச்சு ரொம்ப கவலைப்பட்டேன் ஆனா இப்போ நான் நிம்மதியாக இருப்பேன் “ என்று மைரா சொன்னதும், கேஷவ் அவள் உள்ளங்கையில் முத்தமிட, மைரா தனது அன்றைய தினத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

மறுநாள் காலையில் எங்கோ தூரத்தில் ரோஷினி கண்களைத் திறந்து பார்த்த போது கிரில் கேட் கொண்ட செல்லில் தனியாக அடைக்கப்பட்டிருந்தாள். அவள் கேட்டை தட்டி உதவிக்காக கத்தத் தொடங்கினாள், அப்போது ஒரு வார்டன் தடியுடன் அவளை அணுகி கிரில் கேட்டில் அடித்து, “ கத்துறத நிறுத்து “ என்று மிரட்டினார்.

“ சார் இது என்ன இடம், என்ன ஏன் இங்க பூட்டி வச்சிருக்கீங்க ? “ என்று ரோஷினி மெல்ல கேட்டதும், “ நீ இங்க ஸ்பெஷல் நோயாளி, அதோட உன்கிட்ட நாங்க எதுவும் சொல்ல கூடாது. கொஞ்ச நேரத்துல உன்ன பரிசோதிக்க டாக்டர் இங்க வருவாரு, சரியான நேரத்துக்கு சாப்பாடு வரும். சத்தம் போட கூடாது இல்ல விளைவுகள் மோசமாக இருக்கும் “ என்று எச்சரித்துவிட்டு சென்றார்.

ரோஷினி தரையில் விழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“ நான் இப்போ எங்க இருக்கேன், இந்த இடத்த விட்டு எப்படி வெளிய போவேன் ? “ என்று மனதில் புலம்பினாள்.

****************

முன்னோட்டம்:

“ நீங்க என்ன நினைக்குறீங்க ? நான் உண்மையிலேயே கொடூரமான ஆளா இருந்திருந்தா நீங்க இன்னைக்கு இந்த இடத்துல காலடி எடுத்து வெச்சுருக்க மாட்டீங்க. என் செல்வாக்கு வெச்சு உங்க பொண்ண நிரந்தரமா சிறையில அடைச்சுருப்பேன். என் குடும்பத்த சீரழிக்க அவளுக்கு உதவியா இருந்த உங்க ரெண்டு பேரு மேலையும் கேஸ் போடா என்னால முடியும், ஆனா என் அம்மா, அப்பாவுக்காக நான் உங்கள சும்மா விடுறேன் அதனால நீங்க உங்க குரல உயர்த்தி பேசாதீங்க இல்லனா ரொம்ப வருத்தப்படுவீங்க அப்புறம் உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தத மறந்துட வேண்டியது தான் “

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 19, 2026 - 11:42 am

[…] 81. நீ இங்க ஸ்பெஷல் நோயாளி […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!