Home Family97. பெண் குழந்த பிறந்துருக்கு

97. பெண் குழந்த பிறந்துருக்கு

by Siragugal Novels
10 views

இரண்டு மாதங்கள் கழிந்து போனது மைரா தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தாள். நைனாவின் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டி ஹாலின் முன் வரிசையில் கேஷவ் மற்றும் மைரா அமர்ந்திருந்தனர். பெண்கள் நைனா மற்றும் க்ரிஷுக்காக சடங்கு செய்வதை மைரா பார்த்தாள்.

வசுந்த்ரா மைராவை அழைத்ததும் அவள் நைனாவுக்கான சடங்கைச் செய்ய மேடைக்கு செல்ல கேஷவ் உதவினான். விழா முடிந்ததும் கேஷவும் மைராவும் வீடு திரும்பினர்.

“ கெட்சப், என் கால் ரெண்டும் வீங்கி இருக்கு, என் முதுகு வலிக்குது “ என்று சொல்லி மைரா தன் கண்ணீரைத் துடைக்க, கேஷவ் அவள் முதுகில் ஒரு தலையணையை வைத்து விட்டு  அவள் கால்களை மசாஜ் செய்ய ஆரம்பித்தான்.

“ அழாத அம்மு, கொஞ்ச நேரம் தான். மசாஜ் பண்ணா வலி குறையும். உன்னால அகாடமி போய் வேலை செய்ய முடியுமா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நைனா அவளோட பிரசவ தேதிய நெருங்கிட்டா, அவளால இப்போ வேலைய செய்ய முடியாது, அதனால நான் இன்னும் ஒரு மாசம் வேலை செய்றேன் “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ அப்போ நீ இல்லாத நேரத்துல அகாடமிய நடத்த நாம வேலைக்கு ஆள் வைப்போம். நாளைக்கு நியூஸ்பேப்பர்ல விளம்பரம் வெளியிட ஏற்பாடு செய்றேன் “ என்று சொல்லிவிட்டு அவளுக்கு எதிரே அமர்ந்து அவளை மெல்ல இழுத்து தன் தோளில் சாய்ந்து அவள் முதுகு மற்றும் இடுப்பை தடவி மசாஜ் செய்தான். அவள் மெல்ல குறட்டை விடுவதைக் கேட்டு புன்னகைத்தவன் அவளை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்து அவள் அருகில் படுத்து அவளை முதுகுக்கு ஆதரவாக அணைத்தான்.

மேலும் ஒரு மாதம் கடந்து போனது. கேஷவ் மற்றும் மைரா ஆகியோர் குடும்பத்துடன் பிரசவ அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர், நைனா வலியால் அலறுவதைக் கேட்டு அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

“ மைரா, குழந்தை பிறக்குற வரை கார்ல இல்ல வெய்டிங் ரூம்ல போய் இருக்கலாம் வா “ என்று கேஷவ் அவளை அழைத்தான்.

மைரா சரி என்று தலையை ஆட்ட, அவன் அவள் கையைப் பிடித்து காத்திருப்பு அறைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் அருகருகே அமர்ந்திருக்க, மைரா அவன் தோளில் சாய்ந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

“ அவ பயங்கரமான வலியில் இருக்கா, நான் அதை அனுபவிக்க போற நாள நெனச்சா எனக்கு பயமா இருக்கு “ என்று மைரா மெல்ல சொல்ல, “ ஷ்ஷ்ஷ், அத பத்தி நினைக்க இது சரியான நேரம் இல்ல. நான் உன் கைய பிடிச்சிட்டு ரூம்ல உன் கூட இருப்பேன்.  நம்ம குழந்த உனக்கு எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டா. இப்போ அமைதியா ரிலாக்ஸ் பண்ணு, யோசிச்சு டென்ஷன் ஆகாத இல்ல இப்போவே உன்ன நான் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன் “ என்று கேஷவ் சொன்னான்.

மைரா சரி என்று தலையை ஆட்டினாள், அவன் மெதுவாக அவளது வயிற்றை வருட, குழந்தை விளையாடுவதையும் உதைப்பதையும் உணர்ந்தான், அது அவர்களின் உதடுகளில் ஒரு புன்னகையை வரவழைத்தது.

இரண்டு மணி நேரம் கழித்து கேஷவுக்கு ராஜனிடமிருந்து வார்டுக்கு வரும்படி அழைப்பு வந்தது. கேஷவும் மைராவும் வார்டுக்குள் நுழைந்து நைனா தூங்குவதையும், அர்ச்சனாவின் கையில் ஆண் குழந்தை இருப்பதையும் பார்த்தனர். க்ரிஷ் நைனாவின் கையைப் பிடித்துக் கொண்டு நைனாவின் பக்கத்தில் இருந்தான்.

மைரா குழந்தையைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குழந்தை அழகாக கொட்டாவி விடுவதைப் பார்த்தாள். குழந்தையைப் பார்த்ததும் அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்தது.

“ எவ்ளோ வலி இருந்தாலும் இந்த அழக பார்த்த அப்புறம் அது எல்லாம் ஒண்ணுமே இல்லனு தோணும் “ என்று மைரா மெல்ல சொன்னாள்.

கேஷவ் தனது ஆள்காட்டி விரலால் குழந்தையின் கன்னத்தைத் மெல்ல தொட்டான். நைனா எழுந்திருக்கும் வரை அவர்கள் காத்திருந்தனர். கேஷவ் மைராவுடன் கிளம்புவதற்கு முன்பு குழந்தைக்கு நிறைய ஆடைகள், பொம்மைகளை வாங்கினான்.

மைரா ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த போது, மைரா தன் வயிற்றை பிடித்துக்கொண்டு நடப்பதைப் பார்த்து அவன் கலவரமும் கலக்கமும் அடைந்தான். அவன் தைரியமாக இருப்பது போல முகத்தை வைத்து கொண்டு வீட்டில் அவள் நடந்து சென்ற இடமெல்லாம் அவளுடன் சென்றான். கர்ப்பத்தின் கடைசி சில வாரங்களில் வசுந்த்ராவை தங்களுடன் தங்குமாறு அவன்  அழைத்திருந்தான்.

மைராவின் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வளைகாப்புக்கு மைராவை தயார் செய்த பின்னர் ஒப்பனையாளர் அறையை விட்டு வெளியேறியவுடன் கேஷவ் மைராவுக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் கொடுத்தான். கேஷவ் மென்மையான அதிக எடையில்லாத பட்டுப் புடவையை வாங்கி மெல்லிய நகைகளை அவளுக்காக தேர்ந்தெடுத்திருந்தான். அவளுடைய தலைமுடி பிரஞ்சு பாணியில் பின்னப்பட்டு மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

“ நீ ஏற்கனவே சோர்வா இருக்க, அவங்க என்ன சடங்கு பண்ணாலும் அதையெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல நான் அனுமதிக்க மாட்டேன். ஒரு மணி நேரம் 30 நிமிஷம் கழிச்சு நாம வீட்டுக்கு போறோம் “ என்று கேஷவ் உறுதியாக சொன்னான்.

கேஷவ் அவள் கையையும் இடுப்பையும் பிடித்துக் கொண்டு மேடையை நோக்கி நடந்தான். இருவரையும் அருகருகே அமர வைத்து ஒவ்வொருவராக ஆசீர்வதிக்க ஆரம்பித்தனர். மைரா தன் கையிலிருந்த வளையல்களைப் பார்த்து புன்னகைத்தாள், இறுதியாக கேஷவ் எழுந்து அவள் கன்னத்தில் சந்தனத்தை தடவினான், அவன் பாக்கெட்டிலிருந்து தங்க வளையல்களை எடுத்து அவள் கைகளில் அணிவித்தான்.

இறுதியாக அவர்கள் சடங்கு முடிந்து வீடு திரும்பியதும் அவன் அவளுக்கு சூடான குளியல் கொடுத்தான். மைரா படுக்கையில் படுக்க, வசுந்த்ரா பால் டம்ளருடன் அறைக்குள் நுழைந்தார்.

“ மைரா, உனக்கு ஏதாவது அசௌகரியமா இருந்தா உடனே என்ன கூப்பிடு. டாக்டர் சொன்ன தேதியில தான் பிரசவ வலி வரும்னு சொல்ல முடியாது. இது சீக்கிரமாவோ இல்ல தாமதமாவோ கூட இருக்கலாம் அதனால எப்போது வேணும்னாலும் என்ன கூப்பிடு “  என்று வசுந்தரா சொல்ல, மைரா புன்னகைத்து சரி என்று சொன்னதும் வசுந்தரா அறையை விட்டு வெளியேறினார்.

மறுநாள் அர்ச்சனாவும் மைராவுடன் தங்க அவர்களின் வீட்டுக்கு சென்றார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு மைரா நள்ளிரவில் வலியை உணர்ந்து எழுந்தாள். அவளது அசைவை உணர்ந்த கேஷவ் சட்டென கண் விழித்து அவள் இடுப்பை பிடித்து முனகுவதை கண்டு, “ மைரா “ என்று மெல்ல அழைத்தான்.

அவள் முகத்தைப் பார்த்ததுமே அவள் வலியில் துடிப்பது அவனுக்குத் தெரிந்தது. செக்யூரிட்டியை அழைத்து காரை வெளியே எடுக்கச் சொல்லிவிட்டு, அர்ச்சனா மற்றும் வசுந்தராவை அழைத்தான். அவர்கள் முன்பே பேக் செய்த பைகளை எடுத்தனர். கேஷவ் மைராவை காருக்கு அழைத்துச் சென்று பயணிகள் இருக்கையில் அமர வைத்து அவளுக்காக இருக்கையை வசதியாக சாய்த்து வைத்தான். அர்ச்சனாவும், வசுந்த்ராவும் பின் சீட்டில் அமர்ந்த பிறகு மருத்துவமனை நோக்கி காரை ஓட்ட ஆரம்பித்தான். அதோடு வழியில் டாக்டரை அழைத்து மைராவின் வலி குறித்து தெரிவித்தான்.

அவர்கள் மருத்துவமனையை அடைந்தவுடன், மைராவை பரிசோதனைக்காக அறைக்கு அழைத்துச் சென்றனர், மேலும் அவளுக்கு பிரசவ வலி இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்தினார். மைராவுக்கு ஊசி போடப்பட்டதும், கேஷசவ் மைராவின் கையைப் பிடித்துக் கொண்டு அறைக்குள் சென்றாள். அவ்வப்போது மைரா சுவரில் சாய்ந்தும், கேஷவ் மீது சாய்ந்தும் வலி தூண்டுவதை உணர்ந்தாள்.

நைனாவைத் தவிர குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்தனர். கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு மைரா பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் கேஷவ் அவளுடன் சென்றான். அவள் பக்கத்தில் நின்றவன் அவள் கையை பிடித்து மறு கையால் அவள் தலை முடியை கோதினான்.

மைரா வலியில் அலறிக் கொண்டிருந்தாள், அவள் இந்த நிலையில் இருப்பதைக் கண்டு அவன் இதயம் நொறுங்கியது. தன் கண்ணீரைத் தன் சட்டைக் கைகளால் துடைத்துக் கொண்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“ ‘எவ்ளோ வலி இருந்தாலும் குழந்தையோட அழக பார்த்த அப்புறம் அது எல்லாம் ஒண்ணுமே இல்லனு தோணும்னு’ நீ தானே சொன்ன ? இன்னும் கொஞ்சம் அம்மு, நம்ம குழந்த நம்ம கையில இருக்கும் “ என்று கேஷவ் அவளுக்கு தைரியம் சொன்னான்.

டாக்டர் அவளை வழிநடத்த மைரா டாக்டரின் வார்த்தைகளைப் பின்பற்றி வலியில் அழுதாள். கேஷவ் தன் விரல் உடையும் விளிம்பில் இருப்பதை உணர்ந்தான், ஆனால் அந்த நேரத்தில் அவனுக்கு தன் அம்முவை தவிர வேறு எதுவும் முக்கியமாக தோணவில்லை. கடைசியில் குழந்தையின் அழுகுரல் கேட்டதும், மைராவின் அழுகுரல் அடங்கியது. கேஷவ் அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட, அவன் கண்ணீர் அவள் கன்னத்தில் படுவதை மைரா உணர்ந்தாள்.

“ வாழ்த்துக்கள், உங்களுக்கு பெண் குழந்த பிறந்துருக்கு “ என்று டாக்டர் சொன்னதும், கேஷவ், “ லயா “ என்று புன்னகையோடு சொன்னான்.

அத்தனை களைப்பிலிருந்தும் தூக்கத்தில் அழ்வதற்கு முன் மைரா புன்னகைத்தாள். அவள் இமைகள் மூடுவதை பார்த்து கேஷவ் ஒரு கணம் பயந்தான், ஆனால் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவர் அவனுக்கு தெளிவுபடுத்தினார். குழந்தையைத் தன் கையில் ஏந்தியவன், அவர்கள் அன்பால் உருவாக்கிய ரத்தத்தையும் சதையையும் பார்த்து மேலும் கண்ணீர் சிந்தினான்.

“ எங்க சின்ன உலகத்துக்கு உன்ன வரவேற்குறோம் ப்ரின்சஸ் “ என்று சொன்ன கேஷவ் மைரா உறங்கிக் கொண்டிருந்த  நிலையிலும் குழந்தையை அவள் மார்பில் வைத்தான்.

“ உங்க அம்மாவ பாரு ப்ரின்சஸ். அப்பாவும் அம்மாவும் உன்ன அவ்ளோ நேசிப்போம். நீ தான் எங்களுக்கு உலகம்.” என்று கேஷவ் சொன்னான்.

டாக்டர் குழந்தையை பரிசோதனைக்காக தூக்கிச் சென்ற பிறகு கேஷவ் அறையை விட்டு வெளியேறி குடும்பத்தினரிடம் தங்கள் இளவரசியைப் பற்றி தெரிவித்தான்.

ஒரு மணி நேரம் கழித்து மைரா மற்றும் குழந்தை தனியார் வார்டுக்கு மாற்றப்பட்டனர், குழந்தையில் கேஷவ் மற்றும் மைராவின் மினி பதிப்பைக் கண்டு குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். கேஷவ் மைராவின் அருகில் அமர்ந்ததும்  அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ நம்ம பொண்ணு உன்ன மாதிரி ரொம்ப அழகா இருக்கா. நம்ம ரெண்டு பேரையும் நிச்சயம் அவ சுண்டு விரலால ஆட்டி வைக்க போறா. ஐ லவ் யூ அம்மு. நீ நம்ம வாழ்க்கைய ரொம்ப அழகா மாத்தி இருக்க “ என்று கேஷவ் உணர்வுப்பூர்வமாக சொன்னதும், “ ஐ லவ் யூ “ என்று மட்டுமே மைரா பதில சொன்னாள்.

குழந்தை அழும் சத்தம் கேட்டதும் கேஷவ் குழந்தையை  மைராவிடம் தூக்கி கொடுத்தான். குடும்பத்தினர் அறையை விட்டு வெளியேறியதும் குழந்தைக்கு பாலூட்ட டாக்டர் மைராவுக்கு வழிகாட்டினார். பின்னர் டாக்டர் அறையை விட்டு சென்றதும் கேஷவ் மைராவின் அருகில் அமர்ந்ததும் மைரா அவன் மீது சாய்ந்தாள். கேஷவ் ஒரு கையால் மைராவை பிடித்துக் கொண்டும், மற்றொரு கையில் மகளின் பிஞ்சு விரல்களைப் பிடித்துக் கொண்டும் தன் மனைவியையும் மகளையும் மன நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மைரா குழந்தையை கேஷவிடம் கொடுத்ததும் அவன் குழந்தையை மெல்ல தாலாட்ட குழந்தை உடனே தூங்கிவிட்டாள். தன் ஆள்காட்டி விரலை முஷ்டியில் பிடித்திருந்த தன் குட்டி மகளை பார்த்ததும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ உன்னையும், என் அம்முவையும் என் வாழ்நாள் முழுக்க லவ் பண்ணுவேன். இந்த உலகத்த உங்க காலடியில கொண்டு வருவேன் “ என்று சொல்லி கேஷவ் தன் மகளின் நெற்றியில் புன்னகையுடன் முத்தமிட்டான்.

*********************************

முன்னோட்டம்:

“ லயா பாப்பாவுக்கு சிக்கன் புடிக்கலையா ? கவலைப்பட வேண்டாம் அப்பா உனக்கு நிறைய வெஜிட்டேரியன் சாப்பாடு சமைச்சு கொடுக்குறேன் “

 

                      அடுத்த அத்தியாயம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!