Home FamilyChapter – 5

Chapter – 5

by Siragugal Novels
22 views

சஞ்சுவிற்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை வாங்கி வந்த ரஞ்சித், சஞ்சுவின் அறைக்கு வெளியே காத்திருந்தான். அவனிடம் இருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்கு திரும்பிய ஆர்யன் அவளிடம் மாத்திரையை கொடுத்தான். சஞ்சு அவனிடமிருந்து எரிச்சலான முகபாவத்துடன் அவற்றை வாங்குவதை பார்த்தான் ஆர்யன். அவளது சேட்டைகளைக் கண்டு அவன் உதடுகளில் சிறு புன்னகை தவழ்ந்தது.

ஆர்யன் தனது சிரிப்பை அடக்குவதை பார்த்த சஞ்சு, “ இப்போ ஏன் என்னை பார்த்து சிரிக்குறீங்க ? உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ? “ என்று கேட்டு தன் கண்களைச் சுருக்கி எச்சரித்தாள்.

உடனே தனது கைகளை உயர்த்தி சரணடைந்து, ” சரி, நான் இனி சிரிக்க மாட்டேன், இப்போ நீ முதல்ல மாத்திரைய சாப்பிடு ” என்றான் ஆர்யன் அமைதியாக.

சஞ்சனா மாத்திரையை விழுங்கிய பின்னர் தயங்கிக் கொண்டே, “ அது என்ன நல்ல நியூஸ் இப்போ சொல்லுங்க “ என்று கேட்டு   வற்புறுத்தினாள்.

ஆர்யன் சோபாவில் சௌகரியமாக சாய்ந்து உட்கார்ந்து அவளை பார்த்து, “இனிமே வீட்ல சும்மா இருக்க வேணாம்.” என்று சொன்னான் ஆனால் அதன் அர்த்தம் புரியாமல் கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்த சஞ்சு, “ சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்த சொல்லுங்க “ என்று கூறினாள். 

” சரி சொல்றேன், அதாவது, இனி நாள் முழுக்க நீ வீட்ல இருக்க வேணாம். வேலைக்கு போகலாம் “ என்றான் ஆர்யன் தோள்களைக் குலுக்கியபடி.

ஆர்யன் அப்படி ஒரு செய்தி சொல்வான் என்று சற்றும் எதிர்பார்க்காத சஞ்சுவின் கண்கள் ஆச்சரியத்தில் அல்ல அதிர்ச்சியில் விரிந்தன. ” நெஜமா தான் சொல்றீங்களா ? அப்போ நான் வெளியே போய் வேலை தேடலாமா ? “, என்று அவன் சொன்னதை உறுதிப் படுத்திக் கொள்ள கேட்டாள். ஆனால் ஆர்யன் உடனே, “ இல்ல ” என்று அப்பட்டமாக சொல்ல, அவள் விரக்தியில் முனகினாள். ” என்ன விளையாடுறீங்களா ? இல்ல என்ன பாத்தா எப்படி தெரியுது ? இப்போ தானே நான் வேலைக்குப் போகலாம்னு சொன்னீங்க “ என்று கோவமாக கேட்டாள்.

அவள் அழகாக முகம் சுளிப்பதை பார்த்து சிரித்த ஆர்யன், “ நீ வீட்ல அடைஞ்சு இருக்க வேணாம்னு தான் நான் சொன்னேன் அதுக்கு அர்த்த்ம் நீ ARCயில வேலை செய்வ. காலையில ரெடியா இரு, ரஞ்சித் உன்ன ஆபீஸ்ஸுக்கு கூட்டிட்டு வருவான் ” என்று கூறினான் ஆனால் அவன் வார்த்தையை கேட்டதும் கோபம் கொண்ட சஞ்சு அவனை முறைத்தாள். ” எனக்கு இங்க இருந்து விடுதல கொடுத்து இன்னொரு ஜெயிலுல அடைக்கப் போறீங்க, அப்படி தானே ? “ என்று கேட்டாள்.

” எப்படி உன்னால இந்த மாதிரி எல்லாம் நினைக்க முடியுது ? “ என்று கேட்டா ஆர்யன் பெருமூச்சு விட்டு, “  நீ என் ஆபீஸ்ல இருப்ப சஞ்சனா, அங்க இருக்க எல்லாரையும் தினமும் பார்க்கலாம், அவங்களோட பழகலாம், நாள் முழுக்க எதாவது வேலை செஞ்சிட்டு இருப்ப அப்புறம் எப்படி அது உனக்கு ஜெயில் மாதிரி இருக்கும்னு நினைக்குற ? “ என்று சொல்லி அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.      

அவன் சொன்னதை கேட்ட பிறகு அமைதியாக இருந்த சஞ்சு, “ இதுவும் இவரோட  இன்னொரு திட்டமா இருக்குமோ ? “ என்று மனதில் நினைத்தாள். அவள் மனதை அப்படியே படித்தவன் போல ” நான் எதுவும் பிளான் பண்ணல, உண்மையா உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன் ” என்று சொன்ன ஆர்யன் அவள் அபோதும் கூட தயங்குவதை பார்த்து, ” சரி நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். இந்த வாய்ப்பு உனக்கு நான் ஒரு முறை தான் தருவேன். நீ வேணாம்னு சொன்னா அப்புறம் எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல ஆனா இன்னொரு முறை இந்த வாய்ப்ப நீ எதிர்ப்பார்க்க கூடாது “ என்று ஆர்யன் சொல்ல சஞ்சனா விறைத்துப் போனாள். 

“ என்ன இது, நான் மனசுல தானே நெனச்சேன், இவருக்கு எப்படி கேட்டுச்சு ? “ என்று சஞ்சனா நினைத்துக் கொண்டிருந்த போது ஆர்யன் அந்த அறையை விட்டு செல்ல எழுந்து நின்று, “ அப்போ சரி, உனக்கு இதுல விருப்பம் இல்லன்னு நினைக்குறேன் அதனால நான் இப்போ உனக்கு கொடுத்த வாய்ப்ப திரும்ப எடுத்துக்குறேன் “ என்று சொன்னான்.  

அவன் அறையை விட்டு செல்ல திரும்பியது, “ ஆர்யன் … நில்லுங்க “ என்று சொல்லி சஞ்சு அவனை தடுத்து நிறுத்தினாள். ஆர்யன்  அவளை திரும்பிப் பார்த்த போது அவன் உதடுகளில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது. ” ஆர்யன்னு என்னோட பெயர் உன் குரல்ல கேட்க ரொம்ப நல்லா இருக்கு.” என்று ஆர்யன் சொல்ல அதற்கு உடனே சஞ்சு கண்களை உருட்டினாள். “அப்போ இனி நான் உங்க பெயர சொல்லவே  மாட்டேன் மிஸ்டர் சைதன்யா.” என்று கடுப்புடன் சொன்னாள் சஞ்சு.

” கவலைப்படாத, இனிமே நீ எப்பவும் என்னை ஆர்யன்னு கூப்பிடுற மாதிரி நான் பாத்துக்குறேன் .” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னவன், “ அது இருக்கட்டும் இப்போ சொல்லுங்க, என்னை ஏன் கூப்பிட்ட ?” என்று கேட்டான்.

பெருமூச்சுடன் அவன் பக்கம் இருந்து முகத்தை திருப்பி கொண்டு ” நான் அந்த வாய்ப்ப ஏத்துகுறேன் “, என்று சஞ்சு மெல்லிய குரலில் ஒப்புதல் சொன்னாள்.

அவள் சம்மதம் சொன்னதும் மகிழ்ச்சியடைந்த ஆர்யன் அதை வெளிக்காட்டாமல், ” நல்ல பொண்ணு, ஏற்கனவே சொன்னது தான்.  நாளைக்கு காலையில ரெடியா இரு. ரஞ்சித் உன்னை ஆபீசுக்கு கூட்டிட்டு வருவான் ” , என்று சொல்லிவிட்டு ஆர்யன் அங்கிருந்து நகர்ந்தான் ஆனாலும் அவன் அறையின் வாசலில் நின்று, ” குட் நைட் ஸ்வீட்ஹார்ட் ” என்று சொன்னான்.

அவன் ஸ்வீட்ஹார்ட் என்று அவளை சொன்னதும், “ மூஞ்சிய பாரு, சரியான காட்டுவாசி “ என்று சொல்லி சஞ்சனா அவனை ஏளனம் செய்தாள். ” நல்லாவே கேட்டுச்சு “ என்று சொல்லி ஆர்யன் சிரித்துக் கொண்டே அவன் அறைக்கு சென்றான்.

மறுநாள் காலை, மேன்ஷனை விட்டு வெளியே போகும் உற்சாகத்தில்  எழுந்த சஞ்சு குளித்து முடித்து ஒரு எளிய குர்தி மற்றும் லெக்கிங்ஸ் அணிந்து, தனது தலைமுடியை விரித்து விட்டு, கீழே லிவிங் அறைக்கு விரைந்தாள்.

” கௌசல்யா மா” என்று சஞ்சு அழைக்கு குரல் கேட்டு சமையலறையை விட்டு வெளியே வந்த கௌசல்யா சஞ்சுவை பார்த்து, “ சொல்லு சஞ்சு ? “, என்றார்.

கௌசல்யா பல முறை அவளை சஞ்சு அழைத்திருந்தாலும் தற்போது அவள் இருந்த உற்சாகத்தில் அந்த செல்லப் பெயரைக் கேட்டதும் சஞ்சனாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.  

“ சஞ்சு என்ன ஆச்சு, ஏன் அழற ? “ என்று கௌசல்யா பதற்றத்துடன் கேட்டதும் புன்னகைத்த சஞ்சு, “ ஒண்ணுமில்ல மா … அது .. என் அம்மாவும் அப்பாவும் இப்படி தான் என்ன சஞ்சுனு கூப்பிடுவாங்க.  இப்போ நீங்க அப்படி கூப்பிடுறத கேட்கும் போது அவங்க ஞாபகம் வந்துடுச்சு “ என்று சஞ்சு கூறினாள்.

” அப்படியா ? இது எனக்குத் தெரியாது. ஆனா உனக்குப் பிடிக்கலைன்னா இனி நான் உன்ன அப்படி கூப்பிட மாட்டேன், சஞ்சனான்னு கூப்பிடுறேன் “, என்று கௌசல்யா புன்னகையோடு சொல்ல உடனே சஞ்சு மறுத்து வேகமாக தலையை ஆட்டினாள்.   ” இல்ல மா, நீங்க என்ன சஞ்சுனு சொல்லியே கூபிடுங்க. எனக்கு அது புடிச்சு இருக்கு “ என்று சொன்னாள்.   

” சரி சஞ்சு மா, இப்போ சொல்லு  என்ன ஏன் கூப்பிட்ட ?” என்று கௌசல்யா கேட்டதும், “ அம்மா, நான் இன்னைக்கு ஆபீஸ் போறேன் “  என்றாள் சஞ்சுவின் கண்களில் உற்சாகம் ததும்ப.

சஞ்சுவின் உற்சாகத்தை பார்த்து சிரித்த கௌசல்யா, ” எனக்குத் தெரியும் சஞ்சு. ஆர்யன் சார் ஏற்கனவே சொல்லிட்டாரு. இன்னைக்கு சார் மட்டும் தனியா ஆபீஸ் போயிட்டாரு, உன்ன கூட்டிட்டு போக ரஞ்சித் காத்துட்டு இருக்கான். நீ வந்து சாபிட்டு கிளம்பு “ என்று சிரித்துக் கொண்டே கௌசல்யா சொல்லி முடித்தார்.   

சஞ்சு மேன்ஷனுக்கு வந்த நாள் முதல் தினமும் காலையில் அவளை பார்க்காமல் ஆர்யன் அலுவலகம் சென்றதே இல்லை என்பதால், “ ஆர்யன் கிளம்பிவிட்டாரா ? ” என்று சஞ்சு குழப்பத்துடன் கேட்டாள்.

” ஆமா, இன்னைக்கு நீ எழுந்துக்குறதுகுள்ள சீக்கிரமே  கிளம்பி போயிட்டாரு அது மட்டும் இல்ல, நீ சாப்பிட்ட அப்புறம் தான் மேன்ஷன விட்டு கிளம்பனும்னு கண்டிப்பா உத்தரவு போட்டு இருக்காரு, இல்ல ரஞ்சித் உன்ன கூட்டிட்டு போக மாட்டான் “, என்று கௌசல்யா சொன்னதை கேட்டு சஞ்சனா பெருமூச்சு விட்டாலும் அவன் போட்ட உத்தரவுக்கு கீழ்ப்படிந்தாள். கௌசல்யா உணவு பரிமாறியதும் அவள் வேகமாக சாப்பிட்டு முடித்து வெளியே சென்ற போது ரஞ்சித் கார் அருகே அவளுக்கு  காத்திருந்தான்.

” அண்ணா நான் ரெடி, கிளம்பலாமா ?” என்று சஞ்சு கேட்க, அவளின் உற்சாகம் ரஞ்சித்திற்கு தெரிந்தது. ” போலாம் சஞ்சனா. ஆனா சார் உனக்காக ஒரு புது கார் ஏற்பாடு பண்ணி இருக்காரு. உனக்கு தனி டிரைவர் இருக்காரு, நீ அந்த கார்ல வா, நான் உன்ன follow பண்ணி வரேன். ஆபீஸ் வந்ததும் நான் உன்ன ரிசப்ஷன்ல சந்திக்கிறேன்” என்றான்.

சஞ்சனா அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டி சரி என்று முணுமுணுத்துக் கொண்டே காரில் ஏறினாள். பல மாதங்களுக்கு பிறகு பயமின்றி அவள் வெளியே வந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்தாள். ARC டவர்ஸை அடைந்ததும், அலுவலகத்தின் பிரம்மாண்டத்தை பார்த்தபடி ரிசப்ஷனில் காத்திருந்தாள்.

” மேடம், நீங்க யாருக்காக காத்துட்டு இருக்கீங்க, நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா ? ” என்று ரிசப்ஷனிஸ்ட் பணிவுடன் கேட்டதும், “ இல்ல நான் ரஞ்சித் சாருக்காக காத்திருக்கேன், அவர் வந்து என்ன பாக்குறத சொல்லி இருக்காரு “ என்று சஞ்சு பணிவுடன் சொன்னாள்.

சிறிது நேரத்தில் உள்ளே வந்த ரஞ்சித், “ சஞ்சனா, வா. வா போகலாம் ” என்று அவளை அழைத்தான். அவர்கள் ஆர்யனின் லிப்ட்டை பயப்படுத்தி அவன் இருக்கும் தளத்தை அடைந்தார்கள். அவர்கள்  நடந்து செல்கையில், அங்கு நிலவிய விசித்திரமான அமைதியை அவள் கவனித்தாள். ” ஏன் தளத்துல யாருமே இல்லை ?” என்று சஞ்சு குழப்பத்துடன் கேட்டாள்.

” இது தான் ஆர்யன் சார் இருக்க தளம்.  நான் மட்டும் தான் இங்க வேலை செய்றேன்.” என்று ரஞ்சித் சொன்னதை கேட்டு, முகம் சுளித்த சஞ்சு, “ உங்க சார் என்ன பெரிய அப்பாட்டக்கரா இல்ல அவருக்கு என்ன ரெண்டு கொம்பு முளைச்சு இருக்கா “, என்று கேட்டு ஏளனம் செய்தாள். அவள் வார்த்தையை கேட்டு ரஞ்சித் சிரித்தான், ஆனால் எதுவும் பேசாமல் அவளை ஆர்யனின் அறைக்கு அழைத்துச் சென்றான். அவள் உள்ளே நுழைந்ததும் அவன் கதவை சாத்திவிட்டு வெளியே நின்றான்.

சஞ்சுவை பார்த்ததும் ஆர்யன் ஒரு புன்னகையுடன், ” ARC டவர்ஸுக்கு உன்ன வரவேற்கிறேன் சஞ்சனா.” என்று சொல்லி அவளை வரவேற்றான். அவன் வரவேற்பை கேட்டதும் சஞ்சு தன்  கைகளைக் கட்டிக்கொண்டு, “ சரி சரி… வந்தாச்சு வந்தாச்சு “ என்று முனுமுனுத்தாள்.

ஆர்யன் புன்னகையை அடக்கிக் கொண்டு ஒரு ஃபைலை அவளை நோக்கி நீட்டினான்.

” எனக்கு என்ன வேலை ?” என்று கேட்டபடி சஞ்சு அவன் கையில் இருந்த ஃபைலை வாங்கி கொண்டு கேட்டாள்.

” நீ எனக்கு PAவா வேலை செய்ய போற “ என்று ஆர்யன் சொன்னதும் அதிர்ச்சியில் அவள் தாடை தொங்கியது. ” என்ன, என்ன சொன்னீங்க ? “, என்று சஞ்சு கேட்க, “ ஏன் ? நான் சொன்னது உனக்குக் கேட்கலையா ?” என்றான் ஆர்யன். உடனே சஞ்சு அவனை முறைத்து, “  என்னால உங்களுக்கு PAவா வேலை செய்ய முடியாது” என்று தீர்மானமாக சொன்னாள்.

அவன் வேறு வேலை சொல்வான் என்று அவள் எதிர்பார்த்தாள் ஆனால் ஆர்யன், ” சரி, அப்போ நீ வீட்டுக்கு திரும்பி போ.” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் இருந்த லேப்டாப்பில் கவனத்தை திருப்பினான்.

சஞ்சனா பல்லைக் கடித்துக் கொண்டாள். ” ஏன் இவ்ளோ திமிரு  புடிச்ச மனுஷனா இருக்கீங்க மிஸ்டர் சைதன்யா ?”, என்று அவள் கத்தினாள் ஆனால் ஆர்யன் அவளை பார்த்து, “ நீ வீட்ல அடைஞ்சு இருக்காம, வெளிய கூட்டிட்டு வர சம்மதிச்சு, உனக்கு ஒரு வேலை கொடுக்குறேன், இதுக்கு மேல உனக்கு என்ன வேணும் ? “ என்று நிதானமுடன் கேட்டான்.   

சஞ்சு அவனை முறைத்து, ” நீங்க எதுவும் திட்டம் போடலனு நான் எப்படி உங்கள நம்புறது ? “ என்று கேட்டதும், “ இல்ல, நிச்சயமா நான் எந்த திட்டமும் போடல. நீ என்னை நம்பலாம், ஆனா இந்த வேலையில நீ சேரணும்னா சில கண்டிஷன் இருக்கு ” என்று ஆர்யன் சொல்ல, ” அதானே பார்த்தேன், எனக்குத் தெரியாத உங்கள பத்தி. சரி சொல்லுங்க. என்ன கண்டிஷன்? “, என்று கேட்டாள் சஞ்சு.

” நாம ஒரே வீட்ல இருக்கோம்னு இங்க இருக்க யாருக்கும் தெரிய கூடாது “ என்று ஆர்யன் சொல்ல, “ அப்படியே எனக்கு மட்டும்  எல்லாருக்கும் தெரியனும்னு ஆசை இருக்க மாதிரி தான் “ என்று சொல்லி அலட்சியமாக தோள்களைக் குலுக்கினாள் சஞ்சு.

” நீ நான் சொல்றத கேள்வி கேட்காம அப்படி செய்யணும் “ என்று  ஆர்யன் சொன்னதை கேட்டதும், சஞ்சு புருவத்தை நெரித்தாள், ” இது வெறும் ஆபீஸ் வேலை சம்மந்தமா மட்டும் இருக்கும்னு நம்புறேன் “ என்றாள்.  அவள் அப்படி சொன்னதும், ” நான் என் ஆபீஸ்ல, வேலை விஷயத்துல ரொம்ப கண்டிப்பா இருப்பேன் ” என்று சொல்லி ஆர்யன் தெளிவுபடுத்த அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

” நான் ஏற்பாடு பண்ற கார்ல தான் நீ ஆபீஸ் வரணும், திரும்ப வீட்டுக்கு அதுல தான் போகணும். நாம தனியா இருக்கும் போது நீ என்ன ஆர்யன்னு கூப்பிடனும் ஆனா மத்தவங்க முன்னாடி ‘சார்’னு கூப்பிடு ” என்று ஆர்யன் நிபந்தனைகளை பட்டியலிட சஞ்சு  கண்களை உருட்டினாள். ” இது என்ன முட்டாள்தனமா இருக்கு ” என்று அவள் சொல்ல, “ நிபந்தனைகள் பொருந்தும் சஞ்சனா ” என்று ஆர்யன் சொல்லி முடித்ததும் அவள் முஷ்டியை மடக்கினாள். ” உங்க பேருக்கும் நான் செய்ய போற வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?” என்று சஞ்சு கேட்டாள்.

” கண்டிஷன் மறந்துடாத சஞ்சனா, நான் சொல்றத நீ அப்படியே  செய்யணும், எந்த கேள்வியும் கேட்க கூடாது “ என்று ஆர்யன் முன்னால் சாய்ந்து மேஜை மேல முழங்கையை ஊன்றி அவளை பார்த்து சொன்னான். 

” சரி, ஆனா உங்க கண்டிஷன் எல்லாம் இங்க ஆபீஸ் நான் இருக்க வரைக்கும் தான். ஆபீஸ் நேரம் முடியும் போது உங்க கண்டிஷனும் முடியும் “ என்று சஞ்சு நிபந்தனைகளை தெளிவுபடுத்த முயன்றாள், அதற்கு ஆர்யன் சம்மதித்து தோள்களைக் குலுக்கினான்.

” எனக்கும் சில கண்டிஷன்ஸ் இருக்கு “ என்று சஞ்சு சொல்ல ஆரம்பித்ததும் ஆர்யன் அவளை தடுத்து நிறுத்தி புருவத்தை உயர்த்தினான். ” நீ என் கிட்ட வேலை செய்ய போற அதனால உன்னால எனக்கு கண்டிஷன் போட முடியாது “ என்று ஆர்யன் சொன்னதும், “ மிஸ்டர் சைதன்யா, நான் இந்த வேலைய செய்ய சம்மதிச்சு இன்னும் இந்த அக்ரீமென்ட்ல  கையெழுத்து போடல “ என்று சஞ்சு சொல்ல, அவன் சிரித்தான். “சரி சரி. நீ ஒரு கண்டிஷன் மட்டும் போடலாம். அது என்னனு நல்லா யோசிச்சு சொல்லு “ என்றான் ஆர்யன்.

அவன் திட்டம் எதிலும் சிக்க கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு யோசித்த சஞ்சு, “ நான் உங்க ரூம்ல இருந்து வேலை செய்ய மாட்டேன் ” என்று அவளது கண்டிஷனை சொன்னதும், “ அவ்ளோ தானா ? “ என்று கேட்டு சிரித்த ஆர்யன், “ சரி, உன்னோட கண்டிஷன நான் ஏத்துக்குறேன் “ என்றான்.

சஞ்சனா அவன் கொடுத்த அக்ரீமென்ட் மற்றும் அப்பாயின்ட்மென்ட் கடிதத்தில் கையெழுத்திட்டாள். அதை கையில் வாங்கியதும் அவளை பார்த்த ஆர்யன், “ என் ரூமுக்கு வெளிய இந்த தளத்துல தான் நீ வேலை செய்வ. ரஞ்சித் அதுக்கான ஏற்பாடு எல்லாம் செய்வான். இப்போ உன்ன முக்கியமான சில ஊழியர்களுக்கு மட்டும் உன்ன அறிமுகப்படுத்துவான் அதுக்கு அப்புறம் நீ வீட்டுக்கு போகலாம். நாளைல இருந்து வேலைக்கு வரலாம் “ என்று ஆர்யன் சொன்னான்.

சஞ்சு அவன் சொன்னதை கேட்டு தலை அசைத்த பின்னர் ஆர்யன் ரஞ்சித்தை அழைத்து சஞ்சுவை அழைத்து செல்லுமாறு கூறினான். சஞ்சு ரஞ்சித்தை பின் தொடர்ந்து கான்பரன்ஸ் அறைக்கு சென்றாள், அங்கு முக்கிய தலைவர்கள் மற்றும் மேனேஜர்கள் கூடியிருந்தனர்.

” லேடீஸ் அண்ட் ஜென்டில்மென், இவங்க தான் மிஸ் சஞ்சனா. இனி இவங்க பாஸ்ஸுக்கு PAவா வேலை செய்ய போறாங்க, நீங்க எல்லாரும் இவங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும்னு பாஸ் சொல்லி இருக்காரு “ என்று ரஞ்சித் அறிவித்தான்.

ரஞ்சித் அறிமுகம் செய்த பின்னர், “ரஞ்சித், அப்போ இனிமே நீங்க என்ன வேலை செய்வீங்க ? “ என்று மானசி கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டாள். 

” பாஸ் எனக்கு வேற ரோல் குடுத்திருக்காரு.” என்றான் ரஞ்சித். அதன் பிறகும் அமைதியாக இருக்க முடியாத மானசி, “ எங்க இருந்து வேலை செய்வாங்க இவங்க ? “ என்று கேட்டாள்.

“ பாஸ் இருக்க தளத்துல “ என்று ரஞ்சித் கடுப்புடன் சொன்னான். அவன் வார்த்தையை கேட்டதும், “ மத்தவங்க அவரோட தளத்துக்கு போனா விரட்டி அடிக்குற மாதிரி கத்துவான் ஆனா இப்போ இவ மட்டும் அங்க வேலை செய்வாளா ? “ என்று மனதில் நினைத்த மானசி, “ ஏன் அந்த தளத்துல ? அங்க தான் வேற யாருக்கும் அனுமதி இல்லையே ? “ என்று கேட்டாள்.  

“ அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை மிஸ் மானசி ? “ என்று கேட்ட ரஞ்சித்தின் குரல் கடுமையாக இருந்தது.

ரஞ்சித் மற்றும் மானசியின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சஞ்சு, “ இப்போவே அரசியலா ? “ என்று நினைத்து பெருமூச்சு விட்டாள். 

தனது அறையில் இருந்த பிளாஸ்மா வழியாக கான்ஃபரன்ஸ் அறையில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் பற்களைக் கடித்துக்கொண்டு அந்த அமர்வை முடிக்க முடிவு செய்தான்.  கான்ஃபரன்ஸ் ரூம் திரையில் இருந்து ஆர்யனின் குரல் ஒலித்தது. ” நான் வேலைக்கு PA நியமிச்சத பத்தி யார் கேள்வி கேட்குறது ? “ என்று அதிகார தொனியில் கேட்டதும் அந்த அறையில் மௌனம் நிலவியது. ” ரஞ்சித், எல்லாரும் தெளிவா இருக்காங்க போல. எல்லாரையும் அவங்க வேலைய பார்க்க போக சொல்லிட்டு நீ வா “ என்று சொன்னன்.

ரஞ்சித் சஞ்சனாவை வெளியே அழைத்துச் சென்றுதும், ” அண்ணா யார் அவங்க, ஏன் இவ்ளோ  கேள்வி கேட்குறாங்க ?” என்று சஞ்சனா ஆர்வத்தில் கேட்டாள்.

“அவ பெயர் மானசி, அவளை கண்டுக்காத. அவளுக்கு இந்த மாதிரி மூக்க நுழைக்குற வேலை அதிகம், போக போக நீயே புரிஞ்சிக்குவ “ என்று ரஞ்சித் அவளுக்கு புரிய வைத்தான். 

“சரி. நான் கிளம்பறேன்.”, என்று சொல்லி சஞ்சனா அங்கிருந்து புறப்பட்டாள். 

அவள் சென்றதும் ரஞ்சித் உள் அலங்கார நிபுணர்களை அழைத்து ஆர்யனின் உத்தரவுப்படி சஞ்சனாவின் புதிய பணியிடத்தை தயார் செய்தான்.

************************************

முன்னோட்டம் :

” உங்க சார் தான் பிளான் பண்ணி இப்படி பண்ணி வச்சிருக்காரு, சரி தானே ? “

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!