ஆர்யன் மேன்ஷனுக்கு திரும்பியதும் சட்டென தனது அறைக்கு சென்று புத்துணர்ச்சி பெற்று சஞ்சுவை பார்க்க டைனிங் ஹாலுக்கு விரைந்தான். சஞ்சு அங்கு வந்ததும் சமீப நாட்களை போல அவனுக்கு நேர் எதிராக அமர்ந்தாள். கௌசல்யா இருவருக்கும் உணவை பரிமாறியதும் அவள் ஆர்யனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
அலுவலகத்தில் அவர்களின் உரையாடலுக்குப் பிறகு, சஞ்சு இயல்பு நிலைக்குத் திரும்பி இருப்பாள், அவனுடன் பேசுவாள் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தான் ஆர்யன் ஆனால் அவளுடைய முகபாவம் அவனுக்கு வேறுவிதமாகச் சொன்னது. என்ன செய்வது என்று நினைத்து அவன் உள்ளுக்குள் பெருமூச்சு விட்டான். அவர்களுக்கு இடையே எதுவும் மாறவில்லை என்பதை உணர்ந்தான் ஆனால் அதை சரி செய்ய தீர்மானமாக இருந்தான்.
அவன் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்த சஞ்சு அவனை பொருட்படுத்தாமல் மௌனமாக இரவு உணவை முடித்துவிட்டு அவனுக்காக காத்திருக்காமல் தன் அறைக்கு சென்றாள்.
அவளை பார்க்காமல், அவளிடம் பேசாமல் தூங்க போவதில்லை என்ற முடிவோடு இருந்தான் ஆர்யன். அது மட்டும் இல்லாமல் அவள் உடல் நிலை இன்னும் சரி ஆகவில்லை என்பதால் அவள் உணவு சரியாக சாப்பிடுவதை உறுதி செய்வது போல மாத்திரை சாப்பிடுவதையும் உறுதி செய்ய நினைத்தான். சஞ்சு தனது அறைக்கு சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு ஆர்யன் அவளது அறைக்குள் நுழைந்து அவளது மேஜையில் தொடப்படாத மாத்திரைகளைக் கவனித்தான். அவற்றை எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றிக் கொண்டு அவளை நோக்கி நடந்தான்.
அவன் உள்ளே நுழைந்ததில் இருந்து அவன் செய்வதை பார்த்து, “ நீங்க இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்ல, என்னால என்ன பாத்துக்க முடியும் மிஸ்டர் சைதன்யா ” என்று சொன்ன சஞ்சனாவின் குரலில் எதிர்ப்பு இருந்தது.
ஆர்யனின் பார்வை அவள் கண்களை சந்தித்ததும், ” என்ன பார்க்குறீங்க ? உங்க ரூல்ஸ் எல்லாம் ஆபீஸ்ல மட்டும் தான் பொருந்தும் ” என்று சவால் விடுவது போல சஞ்சு பேசினாள்.
ஒரு வழியாக அவள் பேசுவதை கேட்ட ஆர்யனுக்கு உதட்டில் புன்னகை தவழ்ந்தது. ” எனக்குத் தெரியும் ஸ்வீட் ஹார்ட் , இருந்தாலும் நானே உனக்கு கொடுக்குறேன். நீ மாத்திர சாப்பிட்ட அப்புறம் நான் என் ரூமுக்கு திரும்பி போறேன் “ என்று ஆர்யன் சொல்ல அவள் தயக்கத்துடன் அவனிடம் இருந்து மாத்திரையை வாங்கிக் கொண்டாள். ஆர்யன் தன் உதட்டில் ஒரு குறும்புச் சிரிப்புடன் அவள் அறையை விட்டு வெளியேறினான்.
மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து தயாரான சஞ்சு, ஆர்யன் அலுவலகம் புறப்படும் முன் அவள் வீட்டில் இருந்து கிளம்பி சென்றாள். அலுவலகம் அடைந்த சஞ்சனா லிப்டுக்காக காத்திருந்தாள் அப்போது, “ மிஸ் சஞ்சனா “ என்று ஒரு குரல் அவளை அழைத்தது.
சஞ்சனா திரும்பிப் பார்த்த முந்தைய நாள் ரஞ்சித்திடம் நிறைய கேள்விகளை கேட்ட அதே பெண் தன்னை நோக்கி வருவதைக் கண்டாள். ” மிஸ் சஞ்சனா நான் மானசி, நான் ஃபைனான்ஸ் ஹெட், 35வது மாடியில வேலை செய்றேன்.”, என்று மானசி தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
மரியாதை நிமித்தமாக இருக்க நினைத்த சஞ்சு, ” ஒஹ்ஹ அப்படியா, உங்கள பார்த்ததுல சந்தோஷம் மிஸ் மானசி.” என்று அவளிடம் கூறினாள்.
” என்ன மானசி சொல்லி கூப்பிடுங்க போதும் ” என்று மானசி சொல்ல சஞ்சு சரி என்று தலையை ஆட்டினாள்.
மானசியின் கண்கள் சஞ்சு அணிந்திருந்த ஆடையை ஆராய்ந்தன. ” நீங்க ஏன் குர்தி போட்டு வந்துருக்கீங்க சஞ்சனா ? நீங்க ஆர்யனோட PA அதனால ஃபார்மல் டிரஸ் தானே போடணும் ? “ என்று கேட்டாள். அதற்கு சஞ்சு உடனே, “ அப்படியா ? இந்த டிரஸ் தான் போடணும்னு எனக்கு எந்த தகவலும் யாரும் சொல்லலையே. அது இருக்கட்டும் நீங்க என்ன அவர பெயர் சொல்லி பேசுறீங்க ? “ என்று கேட்டாள்.
சஞ்சுவின் வார்த்தைக்கு மானசி தோள்களைக் குலுக்கி சிரித்தாள், “ இதுல என்ன இருக்கு சஞ்சனா. நாம என்ன அவர் முன்னாடியா பேசிட்டு இருக்கோம் ? தனியா தானே பேசுறோம் “ என்று சொன்னவள், “ உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? அவர் எப்பவும் கொஞ்சம் சிடுசிடுன்னு தான் இருப்பாரு “ என்று கூறியதும், “ அவர பத்தி எனக்கு தெரியாதா என்ன, சரியான சிடுமூஞ்சி “ என்று சஞ்சுவும் தன் மனதில் நினைத்துக் கொண்டாள் ஆனால் மானசியிடம் எதுவும் பேசவில்லை.
“ஆனா அவர் என் கிட்ட மட்டும் ரொம்ப நல்ல விதமா நடந்துக்குவாரு ” என்று மானசி உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையுடன் சொன்னாள். சஞ்சு எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அமைதியாக இருந்தாள் ஆனால் மானசி அமைதியாக இருக்க போவதில்லை என்று முடிவோடு வந்திருப்பது போல, “ அவர் இருக்க தளத்துக்கு போக கொஞ்ச பேருக்கு மட்டும் தான் அனுமதி இருக்கு அதுல நானும் ஒருத்தி “ என்று கூறினாள்.
மானசியின் வார்த்தையை கேட்டு எரிச்சல் அடைந்த சஞ்சு அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், ” ஒஹ்ஹ்ஹ அப்படியா ? சரி ” என்று வேண்டாவெறுப்பாக பதில் சொன்னாள்.
“ அந்த மனுஷன் இவ கிட்ட நல்லவரா நடந்துகிட்டா, அதை பத்தி ஏன் என்கிட்ட வந்து பெரும பேசிட்டு இருக்கா இவ “ என்று சஞ்சு மனதில் மானசியை திட்டிக் கொண்டிருந்தாள்.
” கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க சஞ்சனா. அவருக்கு சட்டுனு கோபம் வந்துடும், திட்ட ஆரம்பிச்சுடுவாரு. உங்களுக்கு பயமா இருந்தா சொல்லுங்க. நான் உங்களுக்கு உதவி செய்றேன்” என்று மீண்டும் மானச சொல்ல, ” கவலைப்படாதீங்க மானசி, நான் பார்த்துக்குறேன் “, என்று சொல்லி சஞ்சனா பணிவுடன் புன்னகைத்தாள்.
சஞ்சு தன்னம்பிக்கையோடு சொல்வதை கேட்டதும், ” அவர் கிட்ட இருந்து கொஞ்சம் விலகி இருங்க சஞ்சனா. பொண்ணுங்க அவர் கிட்ட தேவையில்லாம பேசுறது அவருக்கு பிடிக்காது.” என்று மானசி சொல்லும் போதே, அவளை மேலும் பேசவிடாமல் சஞ்சு தடுத்து நிறுத்தி பெருமூச்சு விட்டாள். ” மானசி, நான் இங்க வேலை செய்ய வந்துருக்கேன். அவரோட தனிப்பட்ட விருப்பங்கள பத்தி எல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்ல “ என்று நிறுத்தி நிதானமாக சொன்னாள் அதே நேரம் லிப்ட் கதவு திறந்தது. ” என்னோட தளம் வந்துடுச்சு சஞ்சனா நாம அப்புறம் பார்க்கலாம் “, என்று சஞ்சனாவிடம் சொல்லிவிட்டு மானசி வெளியே சென்றாள்.
சஞ்சனா தன் தளத்தை அடைந்து, அணுகல் அட்டையை ஸ்வைப் செய்துவிட்டு கண்ணாடி கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். ஆனால் அவளை ஆச்சரியப்படுத்தும் விதமாக , ஆர்யனின் அறைக்கு அருகே இன்னொரு அறையும் அதன் கதவில் அவள் பெயரும் இருந்தது. அணுகல் அட்டையை பயனப்படுத்தி உள்ளே நுழைந்தவள் அந்த அறை மிகவும் ஆடம்பரமாக இருப்பதை பார்த்தாள். வீட்டில் அவள் புத்தகம் படிக்க அமர பயன்ப்படுத்தும் வசதியான நாற்காலி போலவே ஒரு நாற்காலி, அறையின் ஒரு மூலையில் ஒரு சோபா, அந்த அறையுடன் இணைந்த பாத்ரூம், மேஜை மேல ஏற்கனவே லேப்டாப் மற்றும் ஐபேட் தயாராக இருந்தது. அனைத்தையும் பார்த்து சஞ்சு அதிர்ச்சியில் நின்றாள்.
அறையின் ஒரு பக்கத்தில் மட்டும் திரைச்சீலைகள் இருப்பதை பார்த்ததும் ஆர்வத்துடன் அதை இழுத்தவள், ஆர்யன் அவன் அறையில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் உறைந்து போனாள். அவர்களின் அறைகள் திரைச்சீலைகளுடன் கூடிய கண்ணாடிச் சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டன. சங்கடத்துடன் சட்டென்று மீண்டும் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு தன் இருக்கைக்குத் திரும்பினாள்.
“ ராஸ்கல், வேணும்னே இத பிளான் போட்டு பண்ணி இருக்காரு, சரியான போக்கிரி போல “ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே கொந்தளித்தாள்.
ரஞ்சித் புன்னகையுடன் அவள் அறைக்குள் நுழைந்து, “சஞ்சனா, எல்லாம் சரியா இருக்கா ? உனக்கு வேற ஏதாவது தேவையா ?” என்று கேட்டான். உடனே சஞ்சு தன் கண்களைச் சுருக்கி அவனை பார்த்தாள். “உங்க சார் தான் பிளான் பண்ணி இப்படி பண்ணி வச்சிருக்காரு, சரி தானே ? “, என்று அவள் கேட்டதும் ரஞ்சித் சிரித்துக் கொண்டே, “ ஆமா மேடம்.”, என்று பதில் சொன்னான்.
” கடவுளே, அவர நான் என்ன தான் செய்றது தெரியல ” என்று அவள் முணுமுணுத்தாள்.
” உன் ரூம் உள்ள நீ, ஆர்யன் சார் அப்புறம் நான் மட்டும் தான் வர முடியும். அணுகல் அட்டை இல்லாம வேற யாரும் உன் ரூம் உள்ள நுழைய முடியாது ” என்று அவளிடம் தெரிவித்த ரஞ்சித், ” உனக்கு வேற ஏதாவது வேணும்னா என்ன கூப்பிடு ” என்று சொன்னதும்,” கண்டிப்பா சொல்றேன் அண்ணா ” என்று சஞ்சு தலையசைத்தபடி சொன்னாள்.
“ அவருக்கு இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் இருக்கு, யார் கூட ஏலம் மீட்டிங் இருக்கு இப்படி எல்லா விவரமும் ஐபேடுல பதிவேற்றம் பண்ணி இருக்கேன். இனி எல்லாத்தையும் நீயே பாத்துக்கலாம் ” என்று சொல்லி ரஞ்சித் ஐபேடை அவளிடம் கொடுத்து அவன் சொன்ன தகவலை எல்லாம் காட்டினான். அப்போது அவள் மேஜையில் இருந்த இண்டர்காம் ஒலிக்க அப்போது தான் மேஜை மேல இரண்டு இண்டர்காம் இருப்பதை பார்த்தாள் சஞ்சு.
” சார் தான் கூப்பிடறாரு” என்று சொன்ன ரஞ்சித். ” இந்த இண்டர்காமுல ஆர்யன் சார் மட்டும் தான் போன் பண்ணுவாரு. அந்த இன்னொரு இன்டர்காமுல ஆபீஸ்ல வேலை செய்ற மத்தவங்க கிட்ட நீ பேசலாம், அவங்களும் உன்கிட்ட அது வழியா தான் பேசுவாங்க. இப்போ சார் கிட்ட போய் எதுக்கு கூபிட்டாருனு கேளு, சீக்கிரம் போ “ என்று ரஞ்சித் சொன்னான்.
சஞ்சனா சரி என்று சொல்லிவிட்டு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறி அவன் அறை கதவை லேசாக தட்டினாள்.
” கம் இன் “, என்று ஆர்யனின் ஆழ்ந்த குரல் வந்ததும் சஞ்சு கதவை திறந்து உள்ளே சென்று, “ சார், நீங்க போன் பண்ணீங்களா, நான் என்ன வேலை செய்யணும் ? “ என்று கேட்டாள்.
ஆர்யன் தனது இருக்கையில் பின்னால் சாய்ந்து அவளை பார்த்து, ” சஞ்சனா, கண்டிஷன்ஸ் எல்லாம் மறந்து போச்சா என்ன ? எனக்கு ஒரு விஷயத்த திரும்பத் திரும்பச் சொல்றது பிடிக்காது “ என்று சொன்னான்.
தலையை குனிந்து நெற்றியை தேய்த்தவள், “ என் தலை எழுத்து உங்க பேசச் கேட்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன் “ என்று மனதில் நினைத்தாள் பின்னர் அவனை பார்த்து, ” சொல்லுங்க ஆர்யன். நான் உங்களுக்கு இப்போ என்ன வேலை செய்யணும் ? ” என்று கேட்டாள்.
” இப்போ கேட்க எவ்ளோ நல்லா இருக்கு பாரு ” என்று ஆர்யன் புன்னகையுடன் சொன்னான், உடனே சஞ்சு அவனை முறைத்து, ” என்ன ? ” என்று கேட்டு முகத்தைச் சுளித்தாள்.
” ஒன்னும் இல்ல ” என்று சொல்லி சிரித்த ஆர்யன், ” இன்னைக்கு என்னோட ஷெட்யூலை படி ” என்று கூறினான்.
” ஹ்ம்ம் சரி, நான் போய் ஐபேட் எடுத்துட்டு வரேன் ” என்று சொல்லிவிட்டு கிளம்ப திரும்பிய சஞ்சுவை அவன் தடுத்து நிறுத்தினான்.
“அடுத்த முறை நீ எப்போ என் ரூமுக்கு வந்தாலும் கையில ஐ-பேட் கொண்டு வர மறக்காத “ என்று அவன் கட்டளையிட, அதற்கு சஞ்சு ” ஹ்ம்ம், சரி ” என்று முணுமுணுத்து விட்டு வெளியே சென்றாள்.
“ முதல் நாளே அவள பயமுறுத்தாதடா ஆர்யன். கொஞ்சம் பொறுமையா அவள கையாளு, திரும்பவும் எதாவது பண்ணி எல்லாத்தையும் கெடுத்துடாத “ என்று ஆர்யன் தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொண்டான்.
சஞ்சு கையில் ஐபேடுடன் திரும்பி வந்து அவனுடைய மீட்டிங் பற்றிய விவரங்களை பட்டியலிட்டாள்.
” சரி ” என்று சொன்ன ஆர்யன் தன் மேஜை மேல் இருந்த fileகளை காட்டி, “ இது எல்லாத்தையும் கொண்டு போய் மீட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி தேவையான முக்கியமான குறிப்பு எல்லாம் தயார் பண்ணு “, என்று சொன்னான்.
” சரிங்க சார்ர்ர்ர் ” என்று அவள் கொஞ்சம் ராகமாக இழுத்ததும், ” சஞ்சனா, இது தான் கண்டிஷன்ஸ் பத்தி உனக்கு நான் ஞாபகப்படுத்துற கடைசி முறையா இருக்கும். அடுத்த முறை நான் வேற மாதிரி நடந்துக்குவேன் “ என்று ஆர்யன கண்டிப்பான குரலில் அவளிடம் கூறினான். உடனே, “ஸாரி ஆர்யன் “, என்று சொல்லிவிட்டு சஞ்சு அவன் அறையை விட்டு வெளியேறினாள்.
தனது அறைக்கு திரும்பிய சஞ்சனா அவளுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மூழ்கினாள். மதிய நேரம் ஆனதும் அவள் வயிறு பசியால் உறும ஆரம்பித்தது. காலையில் அலுவலகம் வந்ததும் தரைத்தளத்தில் இருந்த வரவேற்பாளரிடம் புட் கோர்ட் (food court ) எங்கு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டதை நினைவில் வைத்துக் கொண்டு அவள் 30 வது மாடிக்குச் சென்றாள். அங்கு ஊழியர்கள் பலர் உணவருந்திக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தயிர் சாதம் மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியான ஒரு மூலையைக் கண்டுபிடித்து அமர்ந்தாள் ஆனால் அவளை நிம்மதியாக விடுவதில்லை என்று சபதம் எடுத்தவள் போல மானசி தனது நண்பர்களுடன் அங்கு வந்து, “ ” ஹாய் சஞ்சனா ” என்று சொல்லி அவள் முன் அமர்ந்தாள்.
” ஹாய், மானசி ” என்று சஞ்சு சொன்னதும், மானசி தனக்கு அருகில் இருந்தவர்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள்.
” சஞ்சனா, இவ என்னோட அசிஸ்டன்ட் பவித்ரா “ என்று தனக்கு அருகில் இருந்த பெண்ணையும் பின்னர் அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆண்கள் இருவரை, “ இவரு மார்க்கெட்டிங் ஹெட் டேனியல், அப்புறம் HR வினய் “ என்று சொல்லி அறிமுகம் செய்தாள்.
” ஹாய் ” என்று அவர்கள் அனைவரும் சொல்ல, டேனியல் மட்டும் சஞ்சுவைப் பார்த்து, “ ஆஹா, நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க சஞ்சனா ” என்று சொல்லி புன்னகைத்தான். அவன் சட்டென சொன்னதை கேட்டு சங்கடமாக உணர்ந்த சஞ்சு, “ ரொம்ப நன்றி ” என்று முணுமுணுத்தபடி ஒரு அடி பின்வாங்கினாள்.
“ நீங்க அதிகம் பேச மாட்டீங்களா ? கூச்ச சுபாவம் இருக்க ஆளா ? “ என்று வினய் கேட்க, “ அப்படி பொதுவா சொல்ல முடியாது ஆனா புது ஆளுங்க கிட்ட பேச நேரம் எடுக்கும் “ என்றாள் சஞ்சனா.
“ நீ உடனே கடல போடா ஆரம்பிக்காத டேனியல் “ என்று பவித்ரா சொல்ல அதை கேட்ட டேனியல், “ ஹே, நான் ஒன்னும் கடல போடல, உண்மையா அவங்க அழகா இருக்காங்க அத தான் சொன்னேன் “ என்று சொன்னான்.
வினய் தனது பிசினஸ் கார்டை சஞ்சனாவிடம் கொடுத்து, “ இதுல என்னோட நம்பர் இருக்கு, உங்களுக்கு எப்போ எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை கூப்பிடலாம் ” என்று சொன்னான். வினயின் தோளில் கையை போட்டு நின்ற டேனியல், “ அது மட்டும் இல்ல சஞ்சனா, நாங்க தினமும் சாயங்காலம் நாலு மணிக்கு டீ குடிக்க இல்ல ஸ்நேக்ஸ் சாப்பிட இங்க வருவோம், அப்போ நீங்களும் இங்க வரலாம். நாம அப்போ சந்திக்கலாம் “ என்று கூறினான்.
” கண்டிப்பா சொல்ல முடியாது ஆனா முயற்சி செய்றேன் “ என்ற சொன்ன சஞ்சு, அவள் பாதி சாப்பிட்ட உணவை ஒதுக்கி விட்டு, “ சரி எனக்கு வேலை இருக்கு, நான் கிளம்புறேன் ” என்று சொல்லி நாற்காலியின் இருந்து எழுந்தாள்.
“ இன்னைக்கு தான் நீங்க வந்தீங்க அதுக்குள்ள உங்களுக்கு வேலை சொல்லி டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டாரா அவரு ” என்று சொல்லி மானசி சிரிக்க, சஞ்சுவுக்கு கடுப்பாக இருந்தது. “ ஏன் அப்படி சொல்றீங்க மானசி, நீங்க சொல்ற மாதிரி எதுவும் இல்ல. அவர் பாஸ், நான் அவர் கிட்ட வேலை செய்றேன் அப்போ அவர் சொல்ற வேலைய செய்றது தானே என் வேலை ” என்று சொல்லி சஞ்சு தற்காத்துக் கொள்ள முயன்றாள்.
” பரவாயில்ல சஞ்சு, நீங்க எங்க கிட்ட எதுவும் மறைக்க வேணாம். எதுவா இருந்தாலும், வெளிப்படையா பேசலாம், நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம். எல்லாத்துக்கும் மேல, நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம். ஆர்யன் ரொம்ப நல்லவரு தான் ஆனா பொண்ணுங்க அவர் சுத்தி இருக்குறத தான் விரும்ப மாட்டாரு “ என்று மானசி சொன்னதும், டேனியல் உடனே, “ ஆனா மானசி மட்டும் அதுல விதிவிலக்கு, என்ன சரி தானே மானசி ? ” என்று சொல்லி சிரித்தான். மானசியும் உடனே, “ நிச்சயமா டேனியல் “ என்று சொல்லி வெட்கப் புன்னகை உதிர்த்தாள்.
அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு சஞ்சுவிற்கு எரிச்சலாகவும், கோவமாகவும் இருந்தது. சஞ்சனா வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதிர்த்து ” சரி நீங்க எல்லாரும் பேசுங்க, எனக்கு வேலை இருக்கு, அப்புறம் பார்க்கலாம்.” என்று சொன்னாள் உடனே டேனியல் அவளை பார்த்து, “ “சரிங்க சஞ்சனா அப்புறம் பார்க்கலாம் ” என்று சொல்லி கண்ணடித்தான். அவன் சரி இல்லை என்று சஞ்சுவின் மனதுக்கு தோன்றி உடனே அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.
லிப்டின் அருகே சஞ்சனா நின்று கொண்டிருந்த போது பவித்ரா அவள் அருகில் சென்று, “ சஞ்சனா, நானும் உங்க கூட வரேன் “ என்று சொல்லி புன்னகைத்தாள். மானசி மற்றும் டேனியலின் பேச்சை கேட்டு எரிச்சலில் இருந்த சஞ்சு அமைதியாக இருந்தாள்.
லிப்டின் உள்ளே நுழைந்ததும் பவித்ரா, சஞ்சுவின் கவனத்தை ஈர்த்தாள். ” சஞ்சு, அவங்க சொன்ன எதையும் கேட்டு நீங்க பயப்பட வேணாம். உண்மைய சொல்ல போனா ஆர்யன் சார் ரொம்ப நல்லவர். பொண்ணுங்க கிட்ட இருந்து விலகியே இருப்பாரு அது மானசி உட்பட. அவ எப்பவும் அவர் கிட்ட நெருங்கிப் பழக முயற்சி செய்வா ஆனா அது ஒரு நாள் கூட நடக்கல. அவர் வேலையில மட்டும் தான் கவனமா இருப்பாரு. இப்போ நீங்க அவர் PAவா வேலை செய்ய போறதால உங்கள அவர் கிட்ட இருந்து விலக்கி வைக்க விரும்புறா அதனால தான் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கா. அவ சொன்னதை எல்லாம் மறந்துட்டு நீங்க நிம்மதியா வேலை செய்யுங்க. சார் ரொம்ப நல்லவரு “ என்று பவித்ரா சொன்னதை கேட்டதும் சஞ்சுவுக்கு நிம்மதி ஏற்பட்டு, ” ரொம்ப நன்றி பவித்ரா.” என்று சொன்னாள்.
” நீ என்ன பவி ன்னு கூப்பிடலாம். “, என்று பவித்ரா சொல்ல, மானசி போல பவித்ரா அல்ல என்று சஞ்சுவிற்கு புரிந்தது. அவளிடம் பேசும் போது இயற்கையாக அவள் மனதில் தோன்றும் பயம் இல்லாமல், “ நீயும் என்ன சஞ்சு சொல்லி கூப்பிடு “ என்றாள் சஞ்சனா.
பின்னர் பவித்ரா அவளது தளத்தை அடைந்ததும் சஞ்சுவை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள். சஞ்சனா தனது அறைக்குத் திரும்பிய போது, ஆர்யன் அவளுக்காகக் காத்திருப்பதைக் கண்டாள்.
அவளை பார்த்ததும், ” நீ எங்க போயிருந்த சஞ்சனா ? ” என்று உடனே கேட்டான் ஆர்யன். அவனை கடந்து சென்று இருக்கையில் அமர்ந்தவள், “ இது என்ன கேள்வி ? இது மதிய லஞ்ச் சாப்பிடுற நேரம் தானே ? எனக்கு பசிச்சுது அதனால சாப்பிட போனேன் “ என்று சஞ்சு கூலாகச் சொன்னாள்.
ஒரு நொடி கண்களை மூடி பின்னர் திறந்த ஆர்யன், “அடுத்த முறை நீ போறதுக்கு முன்னாடி என் கிட்ட சொல்லு “ என்று உத்தரவிட்டான் பின்னர், “ நான் கொடுத்த வேலைய முடிச்சிட்டியா ?” என்று கேட்டான்.
” இன்னும் கொஞ்சம் இருக்கு “ என்று சஞ்சு சொல்ல, “ சரி, அத முடிச்சிட்டு என் ரூமுக்கு வா ” என்று ஆர்யன் சொன்னதும் அவனை பார்த்த சஞ்சு, “ உன்ன பார்த்தா எனக்கு வெறுப்பா இருக்கு, அத விட எரிச்சலா இருக்கு “ என்று தன் மனதில் நினைத்தாள்.
அவள் முகத்தை பார்த்த ஆர்யன் நிச்சயம் அவள் மனதில் தன்னை திட்டுகிறாள் என்று புரிந்து கொண்டு, ” உன் மனசுல என்ன திட்டுறத நிறுத்திட்டு உன் வேலைய பாரு ” என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவள் அறையை விட்டு வெளியேறினான்.
*****************
முன்னோட்டம் :
” சத்தியமா சொல்லு பேபி, நான் உன் கண்ணுக்கு அழகாகவும், ஹாட்டா தெரியலையா ? “

1 comment
[…] Chapter 6 […]