Home FamilyChapter 11

Chapter 11

by Siragugal Novels
21 views

ஆர்யனுக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மானசிக்கு சுயநினைவு திரும்பி அவள் மெல்ல கண்களைத் திறந்த போது மருத்துவமனை அறையின் வெண்ணிறச் சுவர்கள் மங்கலாக தெரிந்தன. அவளுடைய வயிற்றில் அவள் உணர்ந்த ஒரு மந்தமான வலி முந்தைய நாள் என்ன நடந்தது என்பதை அவளுக்கு அப்பட்டமாக நினைவூட்டியது. சில நிமிடங்கள் அமைதியாக இருந்து தன் பார்வை சீரானதும், ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். பின்னர் அருகே இருந்த சிறு டேபிள் மேல் இருந்த தன்னுடைய மொபைலை எடுத்தாள். ஒரு நொடியும் வீணாக்காமல், அவள் உடனே டேனியலின் எண்ணை டயல் செய்தாள்.

மானசியின் பெயரை பார்த்த டேனியல் அழைப்புக்கு கிட்டத்தட்ட உடனடியாக பதில் அளித்தான்.

” மானசி, நீ எங்க இருக்க ? நான் நேத்துல இருந்து உன்ன பார்க்க தேடிட்டு இருக்கேன் “, என்று கேட்ட டேனியலின் குரலில் நிம்மதியும் அவசரமும் கலந்திருந்தன.

” நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன். எனக்கு இப்போ தான் சுயநினைவு வந்துச்சு,” என்று சொல்லி மானசி நெற்றியைத் தேய்த்தாள். பின்னர் அவனிடம், ” டேனியல்… ஆர்யன் என்ன கத்தியால குத்திட்டான். அதுக்கு காரணம் அவ தான்.” என்று மானசி சொல்லும் போது அவள் குரல் மறைக்க முடியாத கோபத்தில் நடுங்கியது.

மானசி சொன்னதை கேட்டதும் டேனியல் குழப்பத்தில் பெருமூச்சு விட்டான். ” ஏதோ சரியில்ல மானசி. ஆர்யன் ஏன் அவளுக்காக இவ்ளோ தூரம் போகணும் ? அதுவும் உன்ன கத்தியால குத்துற அளவுக்கு ?  அவ யார் மானசி ? இதுல நமக்கு தெரியாத பெரிய விஷயம் ஏதோ இருக்கு “ என்று அவன் கூறினான். 

” எனக்கும் தெரியல டேனி ” என்று ஒப்புக்கொண்ட மானசி போர்வையை இறுகப் பற்றிக் கொண்டாள். “ஆனா நான் சத்தியம் செய்றேன் டேனியல், ஆர்யன் பண்ணதுக்கு நான் அவள தண்டிக்காம விடமாட்டேன்.” என்று கொந்தளித்தாள். அதை கேட்ட டேனியல், ” இப்ப வேணாம் மானசி, அவசரப்பட்டு எதையும் செய்யாத. கொஞ்ச நாள் போகட்டும், நாம எதுவும் செய்யலனு ஆர்யன் நம்பட்டும் அதுக்கு முன்னாடி அவள பத்தி எல்லாத்தையும் நாம கண்டுபிடிப்போம் “ என்று டேனியல் உறுதியாக சொன்னான்.

மானசி அவளுக்குள் எரிந்து கொண்டிருந்த கோவத்தில் மூச்சை இழுத்து, அமைதியாக இருக்க வலுக்கட்டாயமாக தன்னை கட்டாயப்படுத்திக் கொண்டு, “ சரி டேனி, இன்னும் ரெண்டு வாரத்துல நான் வேலைக்கு வந்துடுவேன். அதுக்கு முன்னாடி அவள பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சா எனக்குத் தெரியப்படுத்து”, என்று டேனியளிடம் கூறினாள். டேனியலும் சரி என்று பதிலுக்கு முணுமுணுத்து அழைப்பை துண்டித்தான்.

மானசி முஷ்டியை மடக்கி கொண்டு, தலையணையில் சாய்ந்து படுத்திருக்க அவள் மனம் படபடவென்று ஓடியது. சஞ்சனா பற்றிய உண்மையை வெளிக்கொணரும் வரை அவள் ஓயப்போவதில்லை என்று தீர்மானம் செய்தாள்.

ARC அலுவலகத்தில் food கோர்ட்டில் ஊழியர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர், காபி மெஷினில் புதிதாக தயாரிக்கப்பட்ட காபியின் நறுமணம் காற்றை நிரப்பியது. சஞ்சனா தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்ட பவித்ரா அவளை நோக்கி கையசைத்தாள். சஞ்சனா அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள். ” பவி, என்னை ஏன் இப்போ வர சொன்ன ? இன்னும் லஞ்ச் டைம் கூட வரல, என்ன விஷயம் ? “, என்று கேட்டாள்.

” சீரியஸா விஷயம் ஒன்னும் இல்ல சஞ்சு. சும்மா .. நாம ஐஸ்கிரீம் சாப்பிடலாமானு யோசிச்சிட்டு இருந்தேன் ?” என்று சொல்லி பவித்ரா குறும்பாகச் சிரித்தாள். பவி சொன்னதை கேட்டதும் குழந்தைக்கு மிட்டாய் கொடுத்தது போல சஞ்சனாவின் கண்கள் ஒளிர்ந்தன. ” ஆஹா, நிச்சயமா, உன் கூட ஐஸ் கிரீம் சாப்பிட நான் எபப்வும் ரெடி தான்  “ என்று சொன்ன சஞ்சுவின் உற்சாகத்தை பார்த்த பவித்ரா, ” உனக்கு ஐஸ்கிரீம் அவ்ளோ பிடிக்குமா ? “ என்று கேட்டு சிரித்தாள்.

” உனக்குத் தெரியாது பவி, என்ன விட்டா எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடுவேன். ஐஸ் கிரீம்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் “ என்று சஞ்சனா கூறினாள்.

பவித்ரா பதில் சொல்வதற்குள் ரஞ்சித் அங்கு வந்து சர்வ சாதாரணமாக அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவனை அதிகம் கவனிக்காமல் பவித்ரா எழுந்து இரண்டு கிண்ணம் ஐஸ்கிரீமுடன் திரும்பி வந்தாள். சஞ்சனா சிறிதும் நேரத்தை வீணாக்கவில்லை, உடனே அதை சாப்பிட ஆரம்பித்தாள். அவள் கண்களை மூடி சுவைத்து மகிழ்வதை பார்க்கும் போது அவளின்  மகிழ்ச்சி தெரிந்தது. ஐஸ் கிரீம் முழுவதையும் சாப்பிட்ட பிறகு அவள் ஸ்பூனை சுத்தமாக லாவிய போது அவளுடைய கண்கள் மகிழ்ச்சியில் பளபளத்தன.

ஆர்யன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை இருவருமே உணரவில்லை.

ரஞ்சித்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த அவனது மொபைல் இருந்த கேமரா வழியாக ஆர்யன், சஞ்சுவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். வெகுளித்தனத்தோடும், குழந்தைத்தனமான மகிழ்ச்சியோடும் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவனுடைய இதயத்தில் ஒரு இதமான உணர்வு ஏற்பட்டது.  அவளின் அந்த முகபாவத்தை அவன் ஏற்கெனவே பார்த்திருக்கிறான். இதே போன்ற ஒரு காட்சியை அவன் இதற்கு முன் பார்த்து அதில் மயங்கி இருக்கிறான். அவன் மனம் அந்த கடந்த காலத்தை நினைவுப்படுத்தியது.

பிளாஷ்பேக்:

ஆர்யன் கடற்கரையோரமாக நடந்து கொண்டிருந்தான். அந்த மாலை நேரம் கீழ் வானம் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களால் வர்ணம் பூசப்பட்டிருந்தது. அலைகள் அவன் கால்களை முத்தமிட்டது, உப்புக் காற்று அவன் தோலில் உரசியது, ஆனால் அது எதுவும் அவன் சிந்தனையை ஆக்கிரமிக்கவில்லை. அப்போது தான் அவன் அவளை இரண்டாவது முறையாக பார்த்தான்.

சஞ்சு ஒரு ஐஸ்கிரீம் வண்டியின் அருகே நின்று தன் தோழியுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

” ஏய், எனக்கு பிளாக் கரண்ட் வேணும் ” என்று சொல்லி சஞ்சு  உற்சாகமாக சிரித்தாள். அவள் தோழி “எனக்கு சாக்லேட் வேணும்.” என்று சொன்னாள் உடனே சஞ்சனா திடீரென ” சரி, அப்போ எனக்கும்  சாக்லேட் வேணும்.” என்று கூறினாள்.

” ஏய் சஞ்சு, எவ்ளோ ஐஸ் கிரீம் சாப்ப்பிடுவ ? ” என்று அவள் தோழி அவளை மறுத்தாள். ஆனால் சஞ்சு அடம் பிடித்து, ” இல்ல, எனக்கு ரெண்டும் வேணும்” என்று கேட்ட சஞ்சனாவின் கண்கள் குறும்பால் மின்னின.

ஆர்யன் மெய்மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஐஸ்கிரீமை உலகிலேயே விலைமதிப்பற்ற பொருள் போல பிடித்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அவள் அதை லாவி சுவைத்தாள். அவ்வப்போது, தன் தோழியுடன் பேசிக் கொண்டே அவள் சிரித்தாள், அவளின் சிரிப்பொலியோடு அவளின் மகிழ்ச்சி அவள் கண்கலில் தெரிந்தது. அவளின் பிரகாசமான கண்களை அவனை அனைத்தையும் மறக்க செய்தது. 

ஆர்யனின் உதடுகளில் ஒரு விசித்திரமான, பழக்கமில்லாத புன்னகை தவழ்ந்தது. ஏனென்று அவனுக்கும் தெரியவில்லை, ஆனால் அவனால் அவளிடமிருந்து கண்களை அகற்ற முடியவில்லை.

“ரஞ்சித், அவ யாருன்னு கண்டுபிடி” என்று ரஞ்சித்திடம் சொன்னவன் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

ஆர்யனின் பார்வையில் முதல் முறையாக ஒரு வித்தியாசத்தை, ஒரு கனிவை, அவன் உதட்டில் முதல் முறை சிரிப்பை பார்த்த ரஞ்சித் உடனே அவனிடன், “ சரிங்க சார், சீக்கிரம் எல்லா தகவலும் கண்டுபுடிச்சு சொல்றேன் “ என்றான்.

அன்றிலிருந்து ஆர்யன் சஞ்சனாவைப் பற்றியும், அவளது பழக்க வழக்கங்கள், அவளது தினசரி வழக்கங்கள், அவளது சந்தோஷங்களை, துயரங்களைப் பற்றிய அனைத்தையும் அறியத் தொடங்கினான். அதன் பிறகு அவளை பார்ப்பதை அவன் நிறுத்தியதே இல்லை.   

பிளாஷ்பேக் முடிகிறது:

ஆர்யனின் கவனம் மீண்டும் திரையில் சஞ்சுவின் மேல் திரும்பியது. அவள் இன்னும் அங்கேயே இருந்தாள், இன்னும் அதே அளவு  மகிழ்ச்சியுடன் ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் போது வழக்கம் போல அவனது உதடுகள் புன்னகையில் வளைந்தன.

சஞ்சனா… அவள் எப்போதும் இப்படித் தான். அவள் எவ்வளவு ஆழமாக கவனிக்கப்பட்டிருக்கிறாள் என்பதையோ, அவளுடைய  ஒவ்வொரு அசைவையும் யாரோ ஒருவர் எவ்வளவு மனப்பாடம் செய்திருக்கிறார் என்பதையோ அவள் அறிந்திருக்கவில்லை. 

சஞ்சனா இருக்கையிலிருந்து எழுந்து நின்று, ” பவி, நான் என் ரூமுக்கு போறேன், வேலை இருக்கு “ என்று சொன்னதும் பவித்ரா அவளது மணிக்கட்டைப் பிடித்து தடுத்து,” ஏய், ஒரு நிமிஷம் நில்லு! ஆர்யன்  சார் என்ன சொன்னாருனு என்கிட்ட சொல்லு ?” என்று கேட்டாள். அதற்கு சஞ்சனா கண்களை உருட்டினாள். “பவி, உனக்கு வேற வேலையே இல்லையா? ” என்று கேட்டாள்.

” இல்ல, இது தான் இப்போதைக்கு என் முக்கியமான வேலை ” என்று சொல்லி பவித்ரா சிரித்தாள். ” நான் கிளம்பறேன் “என்று சஞ்சு முனங்கியதும், “ சரி சரி, ஆனா ஏதாவது ஆச்சுன்னா முதல்ல நீ என்கிட்ட தான் சொல்லணும், ஏன்னா நான் தான் உன்னோட பெஸ்ட் friend “ என்று பவித்ரா சொன்னாள். அதற்கு சஞ்சனா தலையை அசைத்து ” போடி “ என்று புன்னகைத்து சொல்லி கிளம்பி சென்றாள் ஆனால் பவித்ராவின் வார்த்தைகள் அவள் மனதில் நிலைத்திருந்தன.

ஆர்யனின் அறைக் கதவைத் தட்டிய சஞ்சனா, கையில் ஒரு fileவுடன் உள்ளே நுழைந்தாள். அவள் அவனது மேஜைக்கு அருகே சென்று  ஆவணங்களை அவன் முன் வைத்தாள்.

” இது என்ன டாகுமென்ட்ஸ் ?” என்று கேட்டு ஆர்யன் நிமிர்ந்து பார்த்தான். ” இது எல்லாம் புது பார்ட்னர்ஷிப் அக்ரீமென்ட், இதுல   நீங்க கையெழுத்து போடணும் ” என்றவளின் குரல் உறுதியாக இருந்தது.

மறுவார்த்தை பேசாமல் ஆர்யன் பேனாவை எடுத்து கையெழுத்திட ஆரம்பித்தான். அவனுடைய கவனம் காகிதங்களில் இருந்தது, அவனுடைய கண்கள் ஒவ்வொரு பக்கத்தையும் துல்லியமாக ஆராய்ந்தன.

சஞ்சனா அவனை இதற்கு முன் நூறு முறை அல்ல கணக்கில்லாத அளவுக்கு பார்த்திருக்கிறாள், அவனுடன் வாக்குவாதம் செய்திருக்கிறாள், அவனிடம் விரக்தியடைந்துள்ளால், அவனிடம் கத்தி இருக்கிறாள் ஆனால் ஏனோ இன்று அவள் கண்களுக்கு அவன் வேறு விதமாக தெரிந்தான்.

அவனது மென்மையான, சற்றே கலைந்திருந்த முடி அவனது நெற்றியில் விழுந்த விதம், அவனது அடர்த்தியான புருவங்களின் கூர்மையான வளைவு. நன்கு ட்ரிம் செய்யப்பட்ட அவனது தாடி எல்லாம் அவன் முகத்தை வசீகரமா காட்டியது. அவன் ப்ளேசரை கழட்டி இருந்ததால் அவனுடைய கச்சிதமான உடம்பை அவன் அணிந்திருந்த சட்டை  மறைத்திருந்தது. அவனது நீண்ட விரல்கள் பேனாவை அனாயாசமாகப் பிடித்து கையெழுத்திடும் போது நகர்ந்த விதம் என அவனை கவனித்தவளின் உடலில் ஒரு புது நடுக்கம் ஏற்பட்டது. 

“ சஞ்சனா, நீ என்ன செய்ற ? நீ ஏன் இவர இப்படி பார்க்குற ? “ என்று அவள் தன் மனதுக்குள் கேட்டதும் அவள் புத்தியும், இதயமும் ஒரு போராட்டத்தில் ஈடுப்பட்டது. 

சஞ்சனாவின் இதயம்: ஏன் பாக்குறதுல இப்போ என்ன தப்பு ? அவரும் தானே உன்ன பார்க்குறாரு ?

புத்தி: உன்ன எப்படி எரிச்சலூட்டுறதுனு மட்டும் தான் அவருக்கு தெரியும்!

இதயம்: இல்ல… அவர் உன்ன நல்லா கவனிச்சுக்குறாரு. அவருக்கு  கொஞ்சம் கோபம் சட்டுன்னு வரும் ஆனா அப்போ கூட உன் மேல இருக்க அக்கறை குறையவே இல்லையே. 

புத்தி : கோபம் வந்தா அவரு மனுஷனாவே இருக்க மாட்டாரு

இதயம் : ஓஹோ, அவர் மனுஷனே இல்ல அதனால தான் நேத்து உன்ன காப்பாத்தினாரு, அப்படி தானே ?

தன் இதயத்துக்கும், புத்திக்கும் இடையே நடந்து கொண்டிருந்த போராட்த்தின் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சஞ்சு, ஆர்யன் தன் பெயரைச் சொல்லி அழைப்பதை உணரவில்லை. அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததால், ஆர்யன் பேனாவைக் கீழே வைத்து விட்டு தலையை நிமிர்த்தினான் அப்போது தான் அவள் வெளிப்படையாக அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

முதல் முறையாக சஞ்சு அவனை பார்ப்பதை கண்டு அவன் கன்னத்தின் உட்புறத்தைக் கடித்தான், அவன் முகத்தில் பரவியிருந்த வேடிக்கையான புன்னகையை எதிர்த்துப் போராடினான். சஞ்சு அவளை மறந்து நின்று கொண்டிருந்த போது, “ சஞ்சனா” என்று அவன் மீண்டும் அழைத்ததும் அவள் யதார்த்தத்திற்கு திரும்பி, ” ஹ்ம்ம் சொல்லுங்க ஆர்யன் ?” என்று கேட்டாள் ஆனால் தன் மனதுக்குள், “ அடக் கடவுளே! இவரு என்ன கேட்டாரு ? அய்யோ ஒரே அசிங்கமா போச்சே, இப்போ என்ன பண்றது ? இது எல்லாத்துக்கு காரணம் அந்த பவி தான் “ என்று நினைத்து அமைதியாக அவனை பார்த்தாள். 

அவளது முகபாவத்தை பார்த்த ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து,” அப்படி நீ என்ன கனவு கண்டுட்டு இருக்க ? “ என்று கேட்டு சிரித்தான்.   சஞ்சனா உடனே தன் தோரணையை நிமிர்த்தி, முகத்தை நடுநிலை பாவனைக்கு வலுக்கட்டாயமாக மாற்றிக் கொண்டு, “ நான் ஒன்னும் எந்த கனவும் காணல “ என்று அவனிடம் கூறினாள்.

“ நிச்சயமா இல்லையா ? எனக்கு என்னவோ அப்படி தோணலையே “ என்று சொல்லி அவன் மேலும் சிரித்தான். அந்த அறையை விட்டு கிளம்ப வேண்டும், அந்த நிலைமையை சமாளிக்க வேண்டும் என்று நினைத்த சஞ்சு தன் தொண்டயை கனைத்துக் கொண்டு, “ நான் இந்த அக்ரீமென்ட் எல்லாத்தையும் டீலர் எல்லாருக்கும் அனுப்புறேன் “ என்று சொன்னாள். ஆர்யனும், “ ஹ்ம்ம்  சரி “ என்று சொல்லி தலையசைத்து அவற்றை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். சஞ்சு அறையை விட்டு கிளம்புவதற்குள் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

“ முதல் முறையா இவ என்ன அவள மறந்து பார்த்தா, இப்போ தான் யாரவது வந்து தொந்தரவு செய்யணுமா ? மனுஷன கொஞ்சம் சந்தோஷமா இருக்க விட மாட்டாங்க “ என்று ஆர்யன் மனதில் புலம்பினான். 

இருக்கையில் நேராக அமர்ந்து, அந்த நபரை உள்ளே வரும்படி அழைத்தவனின் குரலில் எரிச்சல் மட்டுமே இருந்தது. கதவை திறந்து உள்ளே நுழைந்த டேனியலின் பார்வை சஞ்சனாவை நோக்கி சுழன்றது.

” சார், நாம நாளைக்கு அறிமுகப்படுத்த போற புது காஸ்மெடிக் விளம்பரதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. மார்க்கெட்ல இப்போவே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கு. நம்ம புது தயாரிப்ப வாங்க ஆர்வமா இருக்காங்க. விளம்பரத்த பார்த்து நிறைய பேரு பாராட்டவும் செஞ்சிருக்காங்க  “ என்று டேனியல் சொன்னதும், ஆர்யன் சரி என்று சொல்லலி தலை அசைத்தான். 

ஆர்யன் மேற்கொண்டு எதுவும் பேசுவான் என்று எதிர்பார்த்து டேனியல் காத்திருந்தான் ஆனால் ஆர்யன் எதுவும் பேசாத போது தனக்கு சொல்லப்படாத குறிப்பை புரிந்து கொண்டு, “ சரிங்க சார். நான் இப்ப கிளம்புறேன். உங்களுக்கு இன்னும் வேற ஏதாவது தகவல் தேவைப்பட்டா சொல்லுங்க ” என்று டேனியல் சொன்னான். அதற்கு ஆர்யன் லேசாக தலையசைத்து அவனை செல்லும்படி சைகை செய்தான். 

டேனியல் அறையை விட்டு வெளியேற திரும்பினான் ஆனால் அவன் பார்வை ஒரு நொடி சஞ்சனாவின் மீதே நிலைத்திருந்து, பிறகு வெளியே சென்றான்.

“  நானும் கிளம்பலாமா ? ” என்று சஞ்சு கேட்க, ஆர்யன் தலையைச் சாய்த்து அவளை பார்த்து, “ நீ இங்கேயே இருந்தா கூட  எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல ” என்று புன்னகையோடு சொன்னான். அவனம் சொன்னதை கேட்டதும் சஞ்சுவுக்கு மூச்சு தொண்டையில் சிக்கியது போல இருந்தது ஆனால் அவள் விரைவாக தன்னை நிலைப்படுத்தி கொண்டு மறுவார்த்தை பேசாமல், அவனுடைய மேஜையில் இருந்த டாகுமென்ட் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு விவெளியேறினாள்.

சஞ்சு வெளியே சென்றதும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்த ஆர்யனின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது. முதல் முறையாக அவள் அவனை எரிச்சலுடன் அல்லாமல், கோபம் இல்லாமல் ஒரு புது வித உணர்ச்சியுடன் பார்த்ததை நினைத்து மகிழ்ந்தான். உடனே எழுந்து தனது ஓய்வு அறையை நோக்கி நடந்தவன், கண்ணாடி முன் நின்றான். தனது முகத்தை கண்ணாடியில் பார்த்தவன் தனது தாடியை மெல்ல வருடினான், உதட்டில் புன்னகை மறையவே இல்லை. அவன் முகத்தில் ஒரு வெட்கச்சாயல் தவழ்ந்தது.

“ இன்னைக்கு உனக்கு அதிர்ஷ்டமான நாள் தான் ஆர்யன் “ என்று ஆர்யன் தனக்குத்தானே பேசிக் கொண்டான்.

இதற்கிடையில் ஆர்யனின் அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற  டேனியல், தனது மொபைலை எடுத்து மானசியை அழைத்தான், அவளும் அவன் அழைப்புக்கு உடனே பதில் சொன்னாள். 

” சொல்லு டேனி, ஏதும் விஷயம் தெரிஞ்சுதா ? ” என்று மானசி உடனே அவனிடம் கேட்டாள், டேனியல் நேரத்தை வீணாக்காமல், “ஆர்யன் முதன்முதலாக வெட்கப்படுறத இப்போ தான் நான் பார்த்தேன்.” என்று அவளிடம் கூறினான். “ என்ன ? “ என்று கேட்ட மானசியின் குரலில் அதிர்ச்சி நிலவியது.

” நான் புது காஸ்மெடிக் விளம்பரத்த பத்தி பேச ஆர்யன் ரூமுக்கு போனேன். அப்போ சஞ்சனா ஏற்கனவே அங்க இருந்தா, நான் ஆர்யன பார்த்த அப்போ அவன் முகம் முழுக்க சிவந்திருந்தது.” என்று டேனியல் சொன்னதை கேட்டதும் மானசியின் கையில் இருந்த மொபைலில் அவள் பிடி இறுகியது. ” அவளுக்கு எவ்ளோ தைரியம், திமிரு இருக்கணும் ?  வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது, இப்பவே அவளோட வசீகரத்தை யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாளா ?” என்று பேசிய மானசியின் வார்த்தையில் விஷம் சொட்டியது.

டேனியல் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். மானசியின் கண்கள் வஞ்சத்தால் இருண்டன. “ஆர்யன் எனக்கு கிடைக்கலனா கூட பரவாயில்ல ஆனா அவளுக்கு கிடைக்க கூடாது. அதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் “, என்ற மானசி சொன்னதும், “ என்ன சொல்ற மானசி ?” என்று டேனியல் தயக்கத்தோடு கேட்டான்.

” சீக்கிரமே உனக்கு சொல்றேன் டேனி அதுவர நீ என் வெயிட் பண்ணு. நீ ஒருத்தர சந்திக்கணும், நான் விவரங்கள உனக்கு அப்புறம் சொல்றேன் “ என்று மானசி சொன்னாள். டேனியல் லேசாக முகம் சுளித்து, “ ஹ்ம்ம் சரி மானசி, நீ உடம்ப பாத்துக்கோ “ என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.  

டேனியளிடம் பேசிய பிறகு மானசி உடனே இன்னொரு எண்ணை டயல் செய்த போது அவள் முகத்தில் ஒரு கொடியப் புன்னகை பரவியது.

அழைப்பு இணைக்கப்பட்டதும், மறுமுனையிலிருந்து ஒரு ஆழமான குரல் பேசியது. ” எனக்கு விசுவாசமா வேலை செய்ய யார் தயாரா இருக்கா ? அவங்க மேல எனக்கு நம்பிக்க வரணும் “ என்று அந்த நபர் கூறினார்.  

“ டேனியல் உங்களுக்கு விசுவாசமா வேலை செய்வான். அவனுக்கு சஞ்சான மேல ஒரு கண்ணு இருக்கு, அவ அவனுக்கு வேணும்னு விரும்புறான் அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் செய்வான்.”, என்று மானசி சொன்னதும் மறுமுனையில் ஒரு மௌனம் நிலவியது. சில நொடிகளுக்கு பிறகு, ” சரி, டேனியல என் கிட்ட பேச சொல்லு. அவன் என்ன செய்யணும்னு நான் அவனுக்கு சொல்றேன் “ என்று அந்த நபர்அசொன்னதும், மானசி மகிழ்ச்சியாக சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.   

ஆர்யன் மேன்ஷனில் ஆர்யனும், சஞ்சனாவும் டைனிங் டேபிளில் எதிரெதிரே அமர்ந்து அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சஞ்சனாவின் மொபைலுக்கு பவித்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. உணவை சாப்பிட்டு கொண்டே சஞ்சு அழைப்புக்கு பதில் அளித்து, “ சொல்லு பவி, என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க ? “ என்று கேட்டாள்.  

” சஞ்சு, நாளைக்கு ஆபீஸ் லீவ் தானே அதனால நாம படம் பார்க்க தியேட்டருக்கு  போகலாம்.”, என்று பவித்ராவின் உற்சாகமான குரல் கேட்டதும், “ இல்ல பவி, நீ போ, நான் வரல “ என்று சஞ்சு கொஞ்சமும் யோசிக்காமல் உடனே மறுத்துவிட்டாள்.

” ஏய், சனிக்கிழமை வீட்ல இருந்து என்ன செய்வ நீ ? “ என்று கேட்டு பவி சிணுங்கினாள் ஆனாலும் சஞ்சு பெருமூச்சு விட்டு, “ ஒண்ணுமில்ல பவி, நீ மட்டும் போ ப்ளீஸ்” என்று கூறினாள். பவித்ரா மேலும் வாதிடுவதற்குள் சஞ்சனா அழைப்பை துண்டித்து விட்டு மேஜையிலிருந்து எழுந்து மறுவார்த்தை பேசாமல் தன் அறைக்கு நடந்தாள்.

சஞ்சனா, பவித்ராவுடன் பேசிக் கொண்டிருந்ததை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த ஆர்யன் தனது இரவு உணவை முடித்துவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான். அவள் படுக்கையில் அமர்ந்து ஒரு புத்தகத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டான்.

கதவுச் சட்டத்தில் சாதாரணமாக சாய்ந்தபடி, “ உனக்கு யார் போன் பண்ணது ? “ என்று கேட்டான். ” அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு ? தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க ? “ என்று கேட்ட சஞ்சனா அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. ஆர்யன் அவளது எதிர்ப்பைக் கண்டு சிரித்து தோள்களைக் குலுக்கினான். ” சரி, நான் கிளம்பறேன் ” என்று சொல்லி அவன் போகத் திரும்பிய போது சஞ்சு, “ பவி தான் போன் பண்ணா “ என்று கூறினாள்.

எப்போதும் போல அவளை பேசவைக்கும் வழி தெரிந்தவன் இப்போது வெற்றி பெற்று மேலும் அவளிடம், “ எதுக்கு ?” என்று கேட்டான்.

” நாளைக்கு என்ன அவ கூட சினிமாவுக்கு வர சொல்லி கூப்பிட்டா “ என்று சஞ்சு சொன்னாள். ஒரு கணம் அவளை ஆராய்ந்தவன், ” ஹ்ம்ம்… உனக்கு போக ஆசையா இருக்கா ?” என்று கேட்டான்.

சஞ்சு இறுதியாக புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி அவனை பார்த்து புருவத்தை உயர்த்தினாள். ” நிஜமாவே அப்படிக் கேட்குறீங்களா ? எனக்கு போக ஆசையா இருக்குனு சொன்னா, என்ன போக விடுவீங்களா ?” என்று சஞ்சு கேட்டதும் அவளது சவாலில் ஆர்யனின் உதடுகள் வளைந்தன. ” சரி, அவங்க கூட போய்ட்டு வா “ என்று ஆர்யன் கூறினான்.

ஆர்யன் அனுமதி கொடுத்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்சனா திகைத்து கண் சிமிட்டினாள். ” நீங்க நல்லா இருக்கீங்களா ?” என்று சந்தேகத்துடன் கேட்டாள். அதற்கு ஆர்யன் அவளிடம், “ ஏன் இப்படி கேட்குற ?” என்று கேட்டு சிரித்தான்.

” நான் எப்பவும் வீட்லயே இருக்கணும்னு தானே நீங்க விரும்புவீங்க ஆனா இன்னைக்கு நீங்க என்ன வெளிய அனுப்ப தயாரா இருக்கீங்க அதுவும் நீங்க என் கூட இல்லாம ? “ என்று அவள் கேள்வி கேட்க, ஒரு நொடியில், ஆர்யன் அவர்களுக்கிடையேயான தூரத்தை மூடினான். சஞ்சு தனது மூச்சைப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு மிக நெருக்கமாக அடியெடுத்து வைத்தான், அவள் விரல்கள் புத்தகத்தைச் சுற்றி இறுக்கின, அவளுடைய இதயம் வேகமாக துடித்தது.

“ டார்லிங், நீ நினைக்கிற அளவுக்கு நான் மோசமானவ இல்ல. நான் என்ன சொன்னாலும், செய்தாலும்… அது உன்னோட நல்லதுக்கு தான். இது உனக்கு சீக்கிரம் புரியும் “ என்று சொன்ன ஆர்யனின் குரல் மென்மையான, ஆழமான முணுமுணுப்பாக மாறியது.

சஞ்சனா பதிலளிக்கும் முன்னரே அவன் அவளை நெருங்கி குனிந்தான், அவனுடைய மூச்சுக்காற்று அவளுடைய தோலில் சூடாக இருந்தது. பிறகு மெல்ல அவள் காது மடலில் தன் உதடுகளை பதித்து முத்தமிட்டான். அந்த நொடியே சஞ்சனாவின் உடம்பெல்லாம் சிலிர்த்தது, அவளது கழுத்தும் கண்ணனும் சிவந்து போனது, அவள் மெல்ல ஒரு அடி பின்வாங்கினாள், அவளுடைய விரல்கள் லேசாக நடுங்கின, அவளது நெஞ்சு விம்மியது. அவனது ஸ்பரிசத்தில் அவளது எதிர்வினையைக் கண்டு ஆர்யன் புன்னகைத்தான். மறுவார்த்தை பேசாமல் திரும்பி கதவை நோக்கி நடந்தான். வெளியே செல்வதற்கு முன் திரும்பி பார்த்து, “ பவித்ராவுக்கு போன் பண்ணி நீயும் அவங்க கூட வர்றதா சொல்லு “ என்று சொல்லிவிட்டு திருப்தியான புன்னகையுடன் தன் அறைக்கு சென்றான்

ஆர்யன் சென்ற பிறகு சஞ்சனா அவளது அறையில் உறைந்து போய் நின்றாள். அவளுடைய இதயம் இயல்புக்கு திரும்பவில்லை.  அவளுடைய விரல்கள் அனிச்சையாக அவளுடைய காது மடலில் தொட்டன.

“ இப்போ என்ன நடந்துச்சு ? “ என்று தன்னைத்தானே கேட்டவள் நீண்ட நேரத்துக்கு பிறகு திகைப்பில் இருந்து மீண்டு தனது மொபைலை எடுத்து பவித்ராவை அழைத்தாள் .

பவித்ரா பதில் அளித்ததும், “ பவி நாளைக்கு நான் வரேன்” என்று  சஞ்சு சொன்னதும், “ வாவ் சூப்பர் சஞ்சு, அப்போ நாளைக்கு நாம ஷாப்பிங் போகலாம் அப்புறம் லஞ்ச் சாப்பிடலாம் அதுக்கு அப்புறம் படம் பார்க்கலாம். நாளைக்கு மாலுக்கு வந்துடு அங்க சந்திக்கலாம் “ என்று உற்சாகத்தோடு கூறினாள். சஞ்சனா தனக்குத்தானே தலையசைத்து விட்டு, ” சரி, நாளைக்கு  சந்திப்போம்” என்று சொல்லி  அழைப்பைக்கும் துண்டித்ததும் ஒரு ஆழமான மூச்சை எடுத்துக் கொண்டாள், அவள் மனம் இன்னும் ஆர்யனின் ஸ்பரிசத்தின் கதகதப்பில் சுழன்று கொண்டிருந்தது.

***************

முன்னோட்டம் :

” ஒண்ணுமில்ல ஸ்வீட் ஹார்ட், நான் இங்க இருக்கேன். இப்ப நீ பத்திரமா இருக்க, உனக்கு ஒன்னும் ஆகல “

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!