Home FamilyChapter 15

Chapter 15

by Siragugal Novels
22 views

நீண்ட நேர தூக்கத்திற்குப் பிறகு, ஆர்யன் அவனது மென்மையாக ஆனால் உறுதியானது குரலில் மெதுவாக சஞ்சுவை எழுப்ப முயன்றான்.

“சஞ்சு, வா கீழ போய் சாப்பிடலாம். நீ பசியில இருப்ப, ஏற்கனவே ரொம்ப பலவீனமா இருக்க “ என்று சொல்லி அவளை சாப்பிட  சமாதானப்படுத்தினான். ஆனால் சஞ்சு அசையாமல் அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு, ” இல்ல, எனக்கு எங்கேயும் போக விருப்பம் இல்ல ” என்று மறுத்து தலையை ஆட்டினாள்.

அவளது தயக்கத்தைப் புரிந்து கொண்டு ஆர்யன் பெருமூச்சு விட்டான். ” ஹ்ம்ம்… சரி நீ வெளிய வர வேண்டாம். நான் உனக்கு சாப்பாடு இங்கேயே எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி அவன் கிளம்ப நகர்ந்தான் ஆனால் சஞ்சு உடனே அவனை நகர விடாமல் அவனை இறுக்கி பிடித்துக் கொண்டு, “ போகாதீங்க ப்ளீஸ்…” என்று முணுமுணுத்தாள்.

ஆர்யன் சரி என்று சொல்லி கௌசல்யாவை அழைத்து சஞ்சுவின் அறைக்கு உணவு கொண்டு வரச் சொன்னான். அதன் பிறகு, அவன் பார்வையை நிலையாக வைத்து சஞ்சுவை நோக்கித் திரும்பினான்.

” சஞ்சு, நீ பயந்து இருக்கணு எனக்கு புரியுது ஆனா நீ தைரியமா  இருக்கனும் மா. எது நடந்தாலும் சரி, வாழ்க்கையில எந்தப் பிரச்சினை வந்தாலும் அத எதிர்த்து போராட நீ கத்துக்க வேணும் ” என்று மென்மையான குரலில் சொல்லி அவளுக்கு தைரியம் சொன்னான். 

அவன் சொன்னதை கேட்ட சஞ்சு பலவீனமாக தலையசைத்து, “ எனக்கு புரியுது…ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” என்றாள் மெல்லிய குரலில். அவள் முயற்சி செய்ய தயாராக இருப்பதை கேட்டு நிம்மதியாக உணர்ந்த ஆர்யன், “ உனக்கு தேவையான நேரத்த எடுத்துக்கோ ஆனா கவலைப்படாம இரு. உன் வாழ்க்கைல ஒவ்வொரு நல்லது கெட்டது, ஏற்றம், இறக்கம் எல்லாத்துலையும்  நான் உன் கூட  இருப்பேன்” என்று ஆர்யன் அவளுக்கு உறுதியளித்தான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு அவளை சமாதானம் செய்து விலகி சென்று கௌசல்யா உணவுடன் காத்திருப்பதை பார்த்து உணவை வாங்கிக் கொண்டு மீண்டும் கதவை சாத்திவிட்டு சஞ்சுவிடம் திரும்பி அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். சஞ்சு அவனை விட்டு அகலாமல் அவன் கையை பிடித்துக் கொண்டு அவனுடனே இருந்தாள். 

அன்று மாலை ஆர்யன் அவளிடம் பேசி சமாதானம் செய்து அவளை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு அவர்கள் ஒன்றாக அமர்ந்து இருவரும் ஒன்றாக சூரிய அஸ்தமனத்தை கண்டனர். 

சஞ்சு ஒரு வார்த்தை கூட பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள், ஆர்யன் பேசிக் கொண்டே இருந்தான், அமைதியான மாலைக்கு எதிராக அவனது குரல் ஒரு இனிமையான தாளம் போல அவள் மனதுக்கு அமைதியை கொடுத்தது. மெதுவாக, அவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டதும் ஆர்யன் தன் கையை அவளை பாதுகாப்பாக சுற்றி வளைத்து அனைத்துக் கொண்டான். சூரியனின் கதகதப்பு அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை, ஆனால் ஆர்யனின் இருப்பு, அவனது வார்த்தைகள் அவளது காயம்பட்ட இதயத்தின் வெடிப்புகளில் ஊடுருவின. அவன் அரவணைப்பு மட்டுமே அவளுக்கு ஆறுதல் கொடுத்தது.

வானில் இருள் சூழ ஆரம்பித்ததும் இருவரும் சஞ்சுவின் அறைக்கு திரும்பினார்கள் அப்போது பணிப்பெண்கள் சில பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளேயும் வெளியேயும் செல்வதை சஞ்சு கவனித்தாள். உள்ளே நுழைந்ததும் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. ஆர்யனின் அலுவலக மேஜை அவளது அறையில் வைக்கப்படிருப்பதையும், அறை முற்றிலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டதையும் அவள் கண்டாள்.

“உங்க பொருட்கள் எல்லாம் ஏன் இங்க கொண்டு வந்து வெச்சுருக்காங்க ? ” என்று சஞ்சு குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டாள். அவளது பார்வையை அமைதியாக சந்தித்த ஆர்யன்,  ” ஏன்னா இனி நாம இந்த ரூம்ல ஒன்னா தான் இருக்கப் போறோம்.” என்று கூறினான். அவன் சொன்னதை கேட்டதும் சஞ்சு அவனையே  பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் கண்களில் பல கேள்விகள் சுழன்றன.

அவளது மௌனத்தைப் படித்த ஆர்யன் மீண்டும் பேசினான். ” கவலைப்படாத சஞ்சு, உன்னோட சூழ்நிலைய நான் எனக்கு சாதகமா  நிச்சயமா பயன்படுத்திக்க மாட்டேன். நீ இப்போ ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்க, மனசு ஒரு நிலையா இல்ல அதனால இப்போ உனக்கு ஒரு ஆதரவு வேணும். உனக்கு தைரியம் சொல்ல ஒருத்தர் கூடவே இருக்கணும், அது நானா இருக்க முடிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா ஒருவேள உனக்கு இதுல இருப்பம் இல்லனா அப்பவும் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு மணி நேரத்துல உன் ரூம் எப்படி இருந்துச்சோ அதே மாதிரி மறுபடியும் மாத்த சொல்றேன். என் பொருள் எல்லாத்தையும் திரும்ப வெளிய கொண்டு போக சொல்றேன் “ என்று சஞ்சுவுக்கு நீண்ட விளக்கம் கொடுத்த ஆர்யன், “ எல்லாத்தையும் திரும்ப எடுக்க சொல்லட்டுமா ? “ என்று அவளிடம் கேட்டான். 

ஆர்யன் அவளை அக்கறையோடு பார்த்துக் கொண்ட அனைத்து வழிகளையும் சஞ்சு நினைத்துப் பார்த்தாள் – அவள் மிகவும் பலவீனமாக இருந்த போதும் கூட எந்த எல்லை மீறாமல் அவளை பாதுகாத்த விதம், அவனது அரவணைப்பும், அவளை பொறுமையாக கையாண்ட விதம், அவனின் அசைக்க முடியாத ஆதரவும் அவளுக்குள் ஏதோ ஒன்றை உருக்கியது. இப்போதைக்கு, அவள் அவனது அரவணைப்பில் இருக்க வேண்டும், அவன் முன்னிலையில் பாதுகாப்பாக உணர வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை அதனால் அவன் கண்களை பார்த்து, “ வேணாம், இங்க இருங்க “ என்று மெல்ல கிசுகிசுத்தாள்.

அவள் பதிலை கேட்டு ஆர்யன் தலையசைத்தாலும், “ஆனா நீ இப்படியே இருக்க முடியாது சஞ்சு.  உனக்கு ஒரு மாற்றம் வேணும் ஸ்வீட் ஹார்ட். நீ இப்படி பயந்து இருக்காம, தைரியமா இருக்கணும்னு நான் விரும்புறேன். என் மேல நம்பிக்கை வை, நான் உன்ன பாத்துக்குறேன் “ என்று ஆர்யன் சொல்ல, அதை கேட்டு மனதில் ஒரு புது நம்பிக்கையை சஞ்சு உணர்ந்தாள். 

” ஹ்ம்ம்..சரி ” என்று சஞ்சு ஆழமாக மூச்சை இழுத்து விட்டு சொன்னதும் புன்னகைத்த ஆர்யன், “ ரொம்ப நல்லது. இப்போ நான் சொல்றத கேளு. நீ ஒரு வாரம் வீட்ல இருந்து நல்லா ரெஸ்ட் எடு ஆனா அதுக்கு அப்புறம் நீ திரும்பவும் ஆபீஸ் வரணும். இந்த முறை உன்ன நான் தனியா விட மாட்டேன்” என்று சத்தியம் செய்தான்.

ஆர்யன் சொன்ன வார்த்தையை கேட்ட பின் யோசித்த சஞ்சு அவன் சொல்வது சரி என்று உணர்ந்து சரி என்று சொன்னாள் அதே சமயம் சற்று தயங்கித் தயங்கி, ” நான் ஆபீஸ் திரும்பி வர வரைக்கும் நீங்க  என் கூட வீட்டில் இருப்பீங்களா ? ” என்று கேட்டாள்.

சஞ்சுவின் கண்களை பார்த்த ஆர்யன், அவள் தனது ஆடையை கசக்கி தயங்கி நிற்பதையும் பார்த்தான். “ நான் இருக்கணும்னு நீ ஆசைப்பட்டா இருக்கேன் “ என்று ஆர்யன் சொன்னான் அப்போது அவள் முகத்தில் ஒரு நிம்மதி படர்வதையும் அவன் கவனிக்க தவறவில்லை.

“ஆனா சஞ்சு, நீ மறுபடியும் பழைய மாதிரி வரணும். நான் சொல்ல வேண்டியது இல்ல, உனக்கே நல்லா தெரியும், பெண்கள் எப்போவும் ஆண்களை விட வலிமையானவங்க, தைரியமானவங்க, அது உடம்பால மட்டும் இல்ல, மனசளவுல கூட. அப்போ நீ இந்த மாதிரி உடைஞ்சு போய் இருக்க முடியாது ஸ்வீட் ஹார்ட். இப்படி வீட்ல உட்கார்ந்து எப்போவும் அழ நீ என்ன தப்பு என்ன ? உனக்கு நிறைய திறமை இருக்கு, உன்னால நிறைய சாதிக்க முடியும், இனிமே நீ இன்னும் பெரிய சவால் எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கும். நீ தைரியமாக இருக்கணும்னு நான் விரும்புறேன். நல்லா ஞாபகம் வெச்சுக்கோ சஞ்சு, நீ முன்னோக்கி எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியிலயும், நான் உன் பின்னாடி இருப்பேன். நீ இனி எதுக்காகவும் பயப்பட வேண்டியதில்ல. உலகத்தையே எதிர்க்க கூட தயாரா இரு, ஆர்யன் உன் கூட இருக்கான் “ என்று ஆர்யன் சொல்லும் போது அவன்  குரல் மிகவும் தீர்மானமாக, சீரியஸாக இருந்தது. 

ஆர்யனின் ஒவ்வொரு வார்த்தையை கேட்டதும் அவன் அவள் மேல் கொண்டிருக்கும் அக்கறை, அவன் எந்த அளவுக்கு அவளுக்கு உறுதுணையாக இருக்கிறான் என்று சஞ்சுவுக்கு புரிந்தது. அவளின்  கண்களில் கண்ணீர் நிரம்பியது, உணர்ச்சியின் ஒரு கணத்தில், அவள் அவனை அணைத்து தன் முகத்தை அவன் மார்பில் புதைத்தாள். ஆர்யன் அவளை இறுக்கி அணைத்து அவள் தலை முடியை மெல்ல வருடி விட்டு அவள் தலையின் பக்கவாட்டில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான்.

” எப்பவும் சந்தோஷமா இரு பேபி ” என்று ஆர்யன் முணுமுணுத்ததும் சஞ்சு மெல்ல தலையை அசைத்தாள்.

அன்றிரவு ஆர்யன் அறையில் உணவு சாப்பிடுவதற்கு பதிலாக அவளை டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றான் அதோடு அவளை அருகில் அமர வைத்து, அவள் ஒழுங்காக சாப்பிடுகிறாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். அறைக்குத் திரும்பிய பிறகு, இருவரும் தங்கள் இரவு ஆடைகளை மாற்றிக் கொண்டனர். சஞ்சு படுக்கையில் படுத்ததும் ஆர்யன் போர்வையை இழுத்து அவளை போர்த்தி விட்டு எப்போதும் போல அவள் நெற்றியில் லேசாக முத்தமிட்டான்.

” குட் நைட் டார்லிங். எனக்கு முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு அதனால நீ தூங்கு” என்று ஆர்யன் சொன்னதும்,  தூக்கக் கலக்கத்துடன் அவனைப் பார்த்து “குட் நைட் ஆர்யன்.” என்று கூறினாள்.

அவன் பெயரை அவள் சொன்ன விதத்தில் ஆர்யனின் உதடுகளில் புன்னகை அரும்பியது. மகிழ்ச்சியுடன் அவன் தன் மேஜைக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து தன் வேலையில் கவனம் செலுத்தினான், ஆனால் அவ்வப்போது அவன் கண்கள் சஞ்சுவின் பக்கம் சென்றன, அவள் நிம்மதியாக தூங்குகிறாளா என்று பார்த்துக் கொண்டே இருந்தான். நீண்ட நேரத்துக்கு பிறகு வேலையை முடித்த பின் சோபாவில் களைத்துப் போய்ப் படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை, சஞ்சு எழுந்த போது ஆர்யன் இன்னும் சோபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவள் எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது புருவங்கள் லேசாக சுருங்கியிருந்தன, அவரது முகம் ஒரு நிம்மதியற்ற தூக்கத்தின் அசௌகரியத்தைக் காட்டியது. அவன் தனக்காக எவ்வளவு செய்திருக்கிறான் என்பதை உணர்ந்த போது அவள் இதயத்தில் ஒரு விசித்திரமான கதகதப்பை உணர்ந்தாள்.

ஒரு சிறிய புன்னகையுடன், அவள் எழுந்து தனது நாளைத் தொடங்கத் தயாரானாள், ஆர்யன் மீண்டும் அந்த சோபாவில் தூங்க வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த அவள் மனம் ஏற்கனவே தீர்மானித்தது.

கடுமையான சூரிய ஒளி ஜன்னல் வழியாக ஊடுருவி முகத்தைத் தாக்கிய போது ஆர்யன் முனங்கியபடி அசைந்தான். வெளிச்சத்தில் கண் சிமிட்டியபடி தலையைத் திருப்பிப் பார்த்த போது ஏற்கனவே விழித்திருந்த சஞ்சு கட்டிலில் உட்கார்ந்திருப்பதை கண்டான்.

” குட் மார்னிங் ஸ்வீட் ஹார்ட் ” என்று ஆர்யன் சொன்ன போது அவன் குரலில் இன்னும் தூக்கம் கலந்திருந்தது. கலைந்த முடியுடன் இன்னும் தூக்க கலக்கத்தில் இருந்தவனை பார்த்து புன்னகையோடு, ” குட் மார்னிங்” என்றாள் சஞ்சு மென்மையாக.

” நான் குளிச்சி ரெடியாகி வரேன் “ என்று சொல்லி ஆர்யன் எழுந்து உட்கார்ந்தான். சஞ்சு சரி என்று தலையசைத்ததும் குளியலறைக்குள் சென்ற ஆர்யன் சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு டவலை இடுப்பில் தளர்வாக கட்டியபடி வெளியே வந்தான். அவனுடைய ஈரமான தலைமுடியிலிருந்து நீர் சொட்டி, அவனுடைய கழுத்து எலும்பு வழியாக வழிந்து, அவன் அணிந்திருந்த டவளுக்குள் மறைந்தது. அவனை அந்த நிலையில் முதல் முறை பார்த்து சஞ்சு விழுங்கினாள், அவள் பார்வை ஒரு கணம் அவனை நோக்கி மின்னியது, பின்னர் அவள் சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள்.

அலட்டிக் கொள்ளாமல் ஆர்யன் அலமாரியை நோக்கி நடந்தான். அலுவலகம் செல்ல போவதில்லை என்பதால் ட்ராக் பேன்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து கொண்டு வெளியே வந்தான். 

” ப்ரேக்பாஸ்ட் சாப்பிட கீழ போகலாமா இல்ல இங்கேயே சாப்பிடலாமா ?” என்று ஆர்யன் அவளிடம் கேட்க, சஞ்சு பதில் சொல்வதற்கு முன் சிறிது நேரம் தயங்கினாள். ஆனால் அவள் மீண்டு வர அவன் எடுக்கும் முயற்சியை பார்த்த பின், ” நாம கீழ போய் சாப்பிடலாம் ” என்று பதில் சொன்னாள்.

” நல்லது, வா போகலாம் ” என்று ஆர்யன் சொல்ல, இருவரும் ஒன்றாக  கீழே சென்றார்கள். சஞ்சு டைனிங் டேபிளில் அமர்ந்ததும், ஆர்யன் லிவிங் ஏரியாவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரஞ்சித்தை நோக்கி நடந்தான். அவன் முக்கிய தகவல் சொல்ல காத்திருப்பான் என்று புரிந்து கொண்டு அவனை நெருங்கி சென்றான்.

” குட் மார்னிங் சார், நான் டேனியலோட தனிப்பட்ட அப்புறம் official  மொபைல் ரெண்டையும் செக் பண்ணிட்டேன். சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்லை. மானசி ஹாஸ்பிடல்ல சேர்த்த அன்னைக்கு ஒரு முறை மட்டும் அவ கூட பேசி இருக்கான் அப்புறம் மறுநாள் திரும்பவும் ஒரு முறை பேசி இருக்கான். அதுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரும் பேசிக்கல “ என்று ரஞ்சித் சொன்ன தகவலை கேட்டதும் ஆர்யனின் கண்கள் லேசாக இருண்டன. ” நீ அவன விசாரிச்சியா ? அவன் என்ன சொன்னான்?” என்று ஆர்யன் கேட்டான். 

“ சஞ்சனாவுக்கு அவன் தான் அந்த போதை மருந்து கொடுத்ததாவும், மானசி கூட சாதாரணமா ஆபீஸ்ல வேலை செய்ற ஒரு சக ஊழியரா மட்டும் தான் பேசினதா சொன்னான் “ என்று ரஞ்சித் சொன்னதும், ஆர்யன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, ” நமக்குத் தெரியாத ரகசிய மொபைல் இல்ல சிம் கார்டு அவன் கிட்ட இருக்க வாய்ப்பு இல்லன்னு நினைக்குறியா ? அது இருக்கட்டும், இப்போ அவனோட நிலைமை  எப்படி இருக்கு ?” என்று ஆர்யன் கேட்டான்.

ரஞ்சித்தின் முகபாவம் இறுக்கமாக மாறியது. ” போதை மருந்து பயங்கரமா வேலை செய்யுது, அவனோட  ஹார்மோன் தூண்டப்பட்ட வலியில எரியுது போல அவனுக்கு, நிதானம் இல்லாம, கத்தி கூச்சல் போடுறான், அவனோட கர்ஜனை ரூம் முழுக்க எதிரொலிக்குது ” என்று ரஞ்சித் சொன்னதும் ஆர்யனின் உதடுகள் ஒரு புன்னகையாக வளைந்தன.

“என் யூகம் சரியா இருந்தா, மானசிக்கு இதுல நிச்சயம் ஒரு பங்கு இருக்கு. நீ ஒரு காரியம் செய், இப்போ அவனுக்கு கொடுக்குற  மருந்து அளவை இரட்டிப்பாக்கி, மானசிய அவன் முன்னாடி கூட்டிட்டு போ.   அவன் கிட்ட நீ கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் கேளு அப்புறம் அப்புறம் பதில் சொல்றதைத் தவிர அவனுக்கு வேற வழியில்ல” என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் அதிர்ச்சியடைந்தான்.

அந்த மருந்தின் தாக்கத்தில் டேனியலிடம் சிக்கினால் மானசியின்  உயிரே பறிபோகும் நிலை ஏற்படும் என்பதில் துளியும் சந்தேகம் இல்ளை என்பதை உணர்ந்து ரஞ்சித் தயங்கி, “ சார் ஒருவேள மானசிக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லனா அப்போ அவள அவன் கிட்ட  ஒப்படைக்குறது ரொம்ப கொடுமையானதா  இருக்காதா ?” என்று கேட்டான்.

“ அவ இதுல சம்பந்தப்பட்டிருந்தா, அவன் அவள உயிரோட  எரிச்சா கூட நான் கவலைப்பட மாட்டேன். ஆனா நாம உண்மையா அவளை அவனுக்கு கொடுக்க போறதில்ல ரஞ்சித், சும்மா அப்படி செய்ற மாதிரி அவன நம்ப வைக்க அப்படி ஒரு ஏற்பாடு செய். அது மட்டும் இல்ல டேனியல் இப்போ இருக்க நிலை பத்தியோ இல்ல நம்ம ரகசிய இடத்த பத்தியோ அவளுக்குத் தெரிய கூடாது அதனால அவள மயக்க நிலையில அங்க கூட்டிட்டு போ “ என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் புன்னகைத்து, “ புரியுது சார்.” என்று சொன்னான்.

” அவன் உண்மைய சொன்ன அப்புறம், உண்மையான நரகம் எப்படி இருக்கும்னு நான் அவனுகு காட்டுவேன்.” என்று சொன்ன ஆர்யனின் குரல் அபாயகரமான கிசுகிசுப்பாக இருந்தது.

இதற்கிடையில் டைனிங் டேபிள் இருக்கையில் அமர்ந்திருந்த சஞ்சுவை கௌசல்யா கவலையுடன் பார்த்தார். ” சஞ்சு, இப்போ எப்படி இருக்க ?” என்று கேட்ட அவரின் குரலில் கவலை நிறைந்திருந்தது.

” நான் நல்லா இருக்கேன் மா” என்று சஞ்சு அவளுக்கு உறுதியளித்து புன்னகைத்தாள்.

” சார், அன்னைக்கு உன்ன கையில தூக்கிட்டு வர்றத பார்த்ததும் நான் ரொம்ப பயந்துட்டேன். அவர் கொஞ்சம் கூட தூங்கவே இல்ல, சாப்பிடவும் இல்ல. முழு நேரமும் உன் பக்கத்திலேயே தான் இருந்தாரு “ என்று சொல்லி கௌசல்யா பெருமூச்சு விட்டார்.

அவர் வார்த்தையை கேட்டதும் சஞ்சுவின் பார்வை ஆர்யனை நோக்கிச் சென்றது. ரஞ்சித்துடன் ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டிருந்தவன், ஏற்கனவே நன்கு சீவி சரியாக இருந்த அவனது தலைமுடியை ஒரு கையால் வருடியபடி, சிரமமில்லாத அதிகாரத்தை வெளிப்படுத்தினான்.

ரஞ்சித்திடம் பேசி முடித்து சில நொடிகள் கழித்து, டைனிங் டேபிளுக்கு திரும்பிய ஆர்யன், சஞ்சு சாப்பிடாமல் தனக்காக காத்திருப்பதை கவனித்தான்.

” ஏன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க, நீ சாப்பிட்டு இருக்க வேண்டியது தானே ?” என்று கேட்டபடி அமர்ந்தான். சஞ்சு தன்  தோள்களைக் குலுக்கி, “ சும்மா தான் வெயிட் பண்ணேன் “ என்று கூறினாள். 

ஆர்யன் ஆச்சரியத்தில் புருவத்தை வளைத்தாலும் மேற்கொண்டு அவளிடம் எதுவும் கேட்கவில்லை. இருவரும் காலை உணவை முடித்த பின்னர் அன்று நாள் முழுவதும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் பார்ப்பதில் நாள் முழுவதையும் செலவிட்டனர்.  இடையில் அவ்வப்போது, ஆர்யன் வேலை சம்மந்தமான அழைப்புகளுக்கு மட்டுமே பதில் அளித்தான். 

அன்று பொழுது கழிந்து இரவு உணவுக்கு பின் இருவரும் அவர்களின் படுக்கையறைக்குள் நுழைந்தனர். முந்தைய இரவு சோபாவில் ஆர்யன் உறங்கியதை பற்றி பேச நினைத்த சஞ்சு கட்டிலருகே தயங்கி நின்றாள்.

ஏற்கனவே சோபாவில் அமர்ந்திருந்த ஆர்யன் அவளது தயக்கத்தைக் கவனித்து, “என்ன ஆச்சு டார்லிங் ? நீ தூங்கலையா ?” என்று கேட்டான்.

” ஹ்ம்ம்…அது வந்து … நீங்க ஏன் சோபாவுல படுத்து தூங்குறீங்க ?” என்று அவள் லேசாக தடுமாறி கேட்டாள். அவள் கேள்வியை கேட்டதும், ” நான் வேற எங்க தூங்கணும்னு நீ சொல்ற ? “ என்று கேட்டு ஆர்யன் சிரித்தான்.

“முந்தின நாள் ராத்திரி நீங்க படுக்கையில தானே படுத்து தூங்குனீங்க “ என்று சொல்லி சஞ்சு படுக்கையை சுட்டிக் காட்டினாள்.  

” அன்னைக்கு நீ பயந்துட்டே இருந்த, அடிக்கடி கெட்ட கனவு கண்டு அலறிட்டே இருந்த அதனால நான் உனக்கு பக்கத்துல இருந்தா உனக்கு ஆறுதலா இருக்கும், நீ பயம் இல்லாம தூங்குவனு நெனச்சு அங்க தூங்கினேன் “ என்று ஆர்யன் சாதாரணமாக சொல்லி அவளை பார்த்தான். அவளிடம் ஏதோ மாற்றம் இருப்பதை அவன் உணர்ந்தான் இருப்பினும் அவள் இன்னும் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.  

” சோபாவுல படுத்து தூங்குறது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா ?” என்று சஞ்சு மீண்டும் தயங்கிக் கொண்டே கேட்டதும், “ அப்போ நான் உன் கூட ஒரே படுக்கையில படுத்து தூங்கனும்னு சொல்றியா ? “ என்று சட்டென கேட்டு ஆர்யன் மெல்லிய சிரிப்பை உதிர்த்தான்.

சஞ்சு பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாலும் ஆம் என்று தலையசைத்து, “ அதுல ஏதாவது பிரச்சனை இருக்கா ?” என்று கேட்டாள்.

ஆர்யன் சோபாவில் இருந்து எழுந்து அவளை நோக்கி சென்றான்.  அவனது மூச்சுக்காற்று அவளது தோலில் படுவதை அவள் உணரும் வரை இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை அவன் மூடினான். அவள் முகத்தில் இருந்த முடியை மெல்ல அவள் காதுக்குப் பின்னால் ஒதுக்கினான். அப்போது சஞ்சுவின் உடல் சிலிர்த்தது.

” நான் சூழ்நிலைய எனக்கு சாதகமா பயன்ப்படுத்தி உன்கிட்ட நெருங்கி எதாவது பண்ணிட்டா என்ன செய்றது ? “ என்று அவன் முணுமுணுத்தான், ஆனால் அவன் குரலில் கிண்டலும் இருந்தது.

சஞ்சு அவன் பார்வையை சற்றும் தயங்காமல் சந்தித்து, “ நீங்க அப்படி செய்ய மாட்டீங்க.” என்று தைரியமாக சொன்னாள். அதை கேட்டு ஆர்யனின் சிரிப்பு ஆழமானது. ” நீ என்னை அவ்ளோ நம்புறியா ” என்று அவன் கேட்டான். அதற்கு சஞ்சு உடனே ஒரு சிறு தலையசைப்பைக் கொடுத்தாள். ” ஹ்ம்ம், ஆமா நம்புறேன் ” என்று பதில் அளித்தாள்.

அவன் விரல்கள் ஒரு நொடி அவள் கன்னத்தை வருடியது. ” நான் எல்லா நேரமும் நல்லவனா இருக்க மாட்டேன் ஸ்வீட் ஹார்ட் அதனால என்ன அவ்ளோ சுலபமா நம்பாத ” என்று ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

அவன் வார்த்தைகளில் சஞ்சுவின் கண்கள் லேசாக விரிந்தன. ஆர்யன் அவளது எதிர்வினையைக் கண்டு வெறுமனே சிரித்தான்.

” போய்த் தூங்கு, எனக்கு முடிக்க வேண்டிய வேலை இருக்கு ” என்று சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்தான்.

தன்னுடைய மொபைலை எடுத்துக் கொண்டு பால்கனியை நோக்கி நடந்தவன் அவன் பேச போவதை அவள் கேட்க கூடாது என்பதில் உறுதியாக தனக்குப் பின்னால் இருந்த கதவுகளை மூடிக்கொண்டான்.

******************

முன்னோட்டம்:

“ எப்படியும் தூக்கத்துல உருண்டு வந்து என்ன கட்டிப் புடிச்சு தான் தூங்க போறா இதுல மேடம் இவ்ளோ பில்ட் அப் வேற “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!