சஞ்சனாவை உறங்க சொல்லிவிட்டு பால்கனிக்கு சென்று கதவை சாத்திக் கொண்ட ஆர்யன் ரஞ்சித்தின் நம்பருக்கு டயல் செய்தான்.
” ரஞ்சித், சஞ்சுவோட மாமாவையும் பிரதீப்பையும் செக் பண்ணியா ? அவங்க ஏதாவது பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கா ?” என்று உறுதியான குரலில் ஆர்யன் கேட்டான்.
” சார், நான் ஏற்கனவே அவங்கள செக் பண்ணிட்டேன், அவங்களுக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்ல. சஞ்சுவோட அப்பாவுக்கு சொந்தமான சொத்து மட்டும் தான் பிரதீப் விரும்பினான். அந்த சொத்துக்களையும், அதோட சேர்த்து நீங்க அவனுக்கு பணத்தையும் கொடுத்து செட்டில் பண்ண அப்புறம் அவன் திருப்தியா தான் இருக்கான், எதுவும் பிரச்சன பண்ற மாதிரி தெரியல. அது மட்டும் இல்ல, பிரதீப்போடா அப்பா அவன சஞ்சனா கிட்ட இருந்து விலகி இருக்க சொல்லி இருக்காரு. சஞ்சுவுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்க கூடாதுனு அவன எச்சரிக்க பண்ணி இருக்காரு, அதனால அவங்க பக்கம் இருந்து எதுவும் நடக்கல ” என்று ரஞ்சித் விளக்கமளித்ததும் ஆர்யனின் புருவங்கள் சுருங்கின.
ரஞ்சித் சொன்ன தகவலை யோசித்த ஆர்யன், ” நான் கொடுத்து பணம் செட்டில் பண்ண அப்புறம் நீ அவன் கிட்ட பேசினியா ?” என்று மீண்டும் சந்தேகமா கேட்டான்.
” ஆமாங்க சார். நான் சஞ்சுவோட மாமா கிட்ட பேசினேன், அவர் உண்மையானவரா, நல்லவரா தான் தெரியுறாரு. அவரால நமக்கு எந்த தொந்தரவும் வராது. பிரதீப் பொறுத்தவரை, அவனுக்கு பணம் மட்டும் தான் முக்கியம் அதுக்கு மேல அவன் ஏதாவது செய்ய முயற்சி பண்ணா, அவனோட உயிருக்கு ஆபத்து ஏற்படும்னு நான் அவனனுக்கு தெளிவா சொல்லி இருக்கேன். அவன் இப்போ அவனோட பிசினஸ்ல மட்டும் தான் கவனமா இருக்கான் வேற எதுலையும் தலையிடுறது இல்ல இருந்தாலும் நம்ம ஆளுங்க கொஞ்ச பேர் கிட்ட சொல்லி அவன் மேல ஒரு கண்ணு வைக்க சொல்லி இருக்கேன் “ என்று ரஞ்சித் சஞ்சனாவின் மாமா மற்றும் அவர் மகன் பற்றி தெளிவாக விளக்கம் அளித்தான்.
” சரி, அவங்க எந்த பிரச்சனையும் பண்ணலனா நல்லது தான் ரஞ்சித். மத்த விஷயங்கள பத்தி எனக்கு தெரியப்படுத்து “ என்று சொல்லி ஆர்யன் அழைப்பை துண்டித்தான். மீண்டும் அறைக்கு திரும்பியவன் சஞ்சு உறங்குவதை பார்த்துவிட்டு சோபாவில் படுத்து உறங்கும் வரை அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலை, சஞ்சு எழுந்து பார்த்த போது, ஆர்யன் சோபாவில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவன் ட்ரேக் பேன்ட் மற்றும் பனியன் அணிந்து குப்புறப் படுத்திருந்தான், அவனுடைய தலை முடி சற்றே கலைந்திருந்தன. அநேகமாக சோபாவில் படுத்து உறங்குவதால் ஏற்பட்ட அசௌகரியத்தின் காரணமாக அவனுடைய முகம் இறுக்கமாக இருந்தது. வழக்கமாக நன்கு சீவி சரி செய்யப்பட்டிருக்கும் அவனுடைய தலைமுடி தற்போது அவனுடைய வழக்கமான வசீகரத்திற்கு மாறாக இருந்தது.
சத்தம் போடாமல் பாத்ரூமுக்கு சென்றி குளித்து உடை அணிந்து தயாராகி திரும்பிய சஞ்சு, ஹெட்போர்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ அவளால் அவனிடம் இருந்து பார்வையை விளக்க முடியவில்லை. அப்போது, ஆர்யன் மெல்ல அசைந்து கண்களைத் திறந்து, காலைச் சூரியனை எதிர்த்து அவளை பார்த்தான்.
” இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்படி என்னையே பார்த்துட்டு இருக்கப் போற டார்லிங் ?” என்று சொல்லி ஆர்யன் கிண்டலடித்ததும் சஞ்சு உடனே வெட்கத்துடன் வேறு பக்கம் பார்த்தாள். அவன் மேலும் கிண்டல் செய்வதற்குள் அவள் எழுந்து அங்கிருந்து வெளியேற முயன்றாள், ஆனால் ஆர்யன் அவளது மணிக்கட்டைப் பிடித்து நிறுத்தினான்.
” என்ன ? நான் ஒன்னும் உங்கள பார்க்கல ” என்று சொல்லி சஞ்சு தன்னை தற்காத்துக் கொண்டாள். அவன் முகத்தை பார்க்காமல் சஞ்சு பேசிய விதம் பார்த்து, “சரி, சரி, நான் உன்ன நம்புறேன்.” என்று சொல்லி அவன் சிரித்தான்.
” நீங்க கண் முழிச்சு இருந்தா அப்போ ஏன் எழுந்துக்கல ? “ என்று சஞ்சு மெல்ல முனுமுனுத்து கேட்டாள் அதற்கு ஆர்யன் மெல்ல முனங்கினான்.
” என்னால முடியல, என் முதுகு வலியில என்ன கொல்லுது “ என்று ,” சொல்லி அவன் வலியில் லேசாக முனங்கினான். சஞ்சு அவன் பிடியில் இருந்து கையை விடுவித்து தன் நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டு, ” உங்கள யார் முதல்ல சோபாவுல படுக்கச் சொன்னது ?” என்று கேட்டு முறைத்தாள்.
” உனக்கு பாவம் பார்த்து இங்க படுத்தேன் பாரு என்ன சொல்லணும். இப்போ எனக்கு கொஞ்சம் உதவி பண்ணா நல்லா இருக்கும் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும் கண்களை உருட்டிய சஞ்சு பின்னர் தன் கைகளை நீட்டினாள். ஆர்யன் அவள் கையை பிடித்துக் கொண்டதும் அவன் மெல்ல எழுந்து உட்கார உதவினாள்.
” உங்களுக்கு வலி நிவாரணி ஸ்ப்ரே எதுவும் வேணுமா ? “ என்று சஞ்சு கேட்டதும், “ வேணும் தான், ஆனா அப்படியே நீ அத போட்டுவிட்டா எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும் “ என்று ஆர்யன் கண்களில் ஒரு குறும்பு பளபளப்புடன் பதிலளித்தான்.
சஞ்சு பெருமூச்சு விட்டாலும், தன் புன்னகையை மறைத்துக் கொண்டு மேஜையின் டிராவில் இருந்து ஸ்ப்ரேயை எடுத்தாள். அவள் திரும்பிப் பார்த்த போது ஆர்யன் தன் பனியனைக் கழற்றி, நன்கு கட்டமைக்கப்பட்ட அவனது உடம்பைக் காட்டி அமர்ந்திருந்தான். சஞ்சுவின் மூச்சு திணற, சட்டென அவனிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள்.
ஆர்யன் அவளது எதிர்வினையைக் கண்டு சிரித்தான். ” பரவாயில்ல விடு, உனக்கு அசௌகரியமா இருந்தா நானே அத பண்ணிக்குறேன் “ என்று சொல்லி கையை நீட்டி மருந்தை கொடுக்க சொல்லி கேட்டான்.
சஞ்சு தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, “ இல்ல, பரவாயில்ல, நானே போட்டு விடுறேன் “ என்று சொல்லி மெல்ல அவன் அருகில் சென்று மருந்தை அவன் முதுகில் ஸ்ப்ரே செய்தாள். அதை செய்து முடித்தவுடன் வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க பால்கனியை நோக்கி விரைந்தாள்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு வலி குறைந்தது போல உணர்ந்த ஆர்யன், பால்கனியில் சஞ்சு யோசனையில் ஆழ்ந்தபடி நிற்பதைக் கண்டான்.
சோபாவில் இருந்து இறங்கி அவளிடம் சென்று, ” சஞ்சு, இப்போ எப்படி இருக்க ?” என்று கேட்டான்.
சஞ்சு அவனை நோக்கித் திரும்பி, ” ஹ்ம்ம், நான் நல்லா இருக்கேன் ” என்று சொல்லி தலை அசைத்தாள். அவள் பதிலை கேட்ட ஆர்யன், “ நல்லது. எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு அதனால நான் போகட்டுமா ? ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன், எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுவேன் “ என்று சொன்னான்.
அவளை தனியே விட்டு செல்ல அவன் யோசிக்கும் விதம், அவளிடம் அனுமதி கேட்பது என அனைத்தும் அவனது அக்கறையை தாண்டி ஏதோ ஒன்றை அவளை உணர வைத்ததும்.” நீங்க கவலை இல்லாம போயிட்டு வாங்க, நான் நல்லா இருப்பேன்.” என்று சஞ்சு புன்னகையோடு சொன்னாள்.
அவள் பதில் திருப்தியாக இருந்தாலும் ஆர்யன் அவளை ஒரு கணம் அவள் முகத்தை படித்தான். ” நீ தவறாம காலையில ப்ரேக்பாஸ்ட் சாப்பிடனும், அதுக்கு அப்புறம் ரூமுக்கு வந்து உன்னோட மாத்திரை எல்லாம் சாப்பிடனும் அப்புறம் நல்லா ரெஸ்ட் எடுக்கணும். என்ன சரியா ? “ என்று அடுக்கடுக்காக அவள் செய்ய வேண்டியதை சொன்னதும் அதை கேட்டு சஞ்சு ” ஹ்ம்ம்.” என்று சொல்லி தலையாட்டினாள்.
ஆர்யன் பாத்ரூமுக்கு சென்று விரைவாக குளித்து அலுவலகம் செல்ல தயாரானான். கிளம்புவதற்கு முன் அவள் தலையை அன்பாக, மெதுவாகத் தட்டி புன்னகைத்து விட்டு சென்றான்.
சஞ்சு டைனிங் ஹாலுக்கு சென்று காலை உணவை சாப்பிட்டாள். அதன் பிறகு தனிமை அவளை வாட்டியது. ஆர்யன் இல்லாமல் மனம் நிம்மதி இல்லாமல் தவிப்பது போல இருந்தது. ஒரு மாறுதலுக்காக, நேரத்தை கடத்துவதற்காக அவள் தோட்டத்திற்கு சிறிது நேரம் நடக்க சென்றாள் அப்போது வீட்டின் மேனேஜர் பாலா பறவைகளுக்கு உணவளித்துக் கொண்டே அவற்றுடன் உற்சாகமாகப் பேசுவதைக் கண்டாள். அந்தக் காட்சி அவள் முகத்தில் ஒரு சிறு புன்னகையை வரவழைத்தது.
” பாலா அண்ணா .” என்று சஞ்சு அழைத்ததும் பாலா கனிவான புன்னகையுடன் திரும்பி, ” வாங்க மேடம், உங்களுக்கு ஏதாவது வேணுமா ? “ என்று கேட்டார்.
அவள் இல்லை என்று தலையை அசைத்து, ” இல்ல, நான் சும்மா வாக்கிங் தான் வந்தேன். நான் ரொம்ப நாளா கேட்கனும்னு நெனச்சேன், நீங்க எங்க தங்கி இருக்கீங்க ? “ என்று சஞ்சு கேட்டாள்.
” பக்கத்துல ஒரு ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ் இருக்கு மா. இங்க இருந்து ஒரு இரண்டு நிமிஷ ட தூரத்துல தான் இருக்கு. இங்க வேலை செய்ற எங்க எல்லாருக்கும் சார் தேவையான எல்லா வசதியும் பண்ணி கொடுத்து இருக்காரு. கௌசல்யா ஆண்ட்டி அப்புறம் ரஞ்சித் மட்டும் தான் இங்க மேன்ஷன்ல தங்கி இருக்காங்க “ என்று பாலா சொன்னதும் அதை கேட்டு சஞ்சு அதிர்ச்சியடைந்தாள்.
” ரஞ்சித் அண்ணா இங்க தங்குவாரா ? ஆனா நான் அவர இதுவர இங்க தங்கி பார்த்ததே இல்லையே ” என்று சஞ்சு கேட்க, பாலா சிரித்தான். ” அவரு அவுட் ஹவுஸ்ல தான் இருப்பாரு, ஆனா எப்பவும் சார் கூடவே இருப்பாரு. நாங்க எல்லாரும் சார் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கோம், அவர எங்களுக்கு ரொம்ப புடிக்கும். அவருக்கு ரொம்ப நல்ல மனசு, எல்லாரையும் அக்கறையா பாத்துக்குவாரு “ என்று பாலா, ஆர்யன் பற்றி சொன்னதும், அதை கேட்ட சஞ்சு அவன் வார்த்தைகளை உள்வாங்கி மௌனமாக வீட்டை நோக்கி திரும்பினாள்.
” அவர் எல்லாரையும் எவ்ளோ அக்கறையா பாத்துக்குறாரு. என் மேலையும் அவ்ளோ அக்கறையா, பாசமா தான் இருக்காரு. ஒருவேள நான் தான் ஆரம்பத்துல இருந்தே அவர தப்பா புரிஞ்சிகிட்டேன் போல. இங்க வந்த நாள்ல இருந்து நான் அவர நிறைய காயபடுத்தி இருக்கேன் ஆனாலும் அவர் என் மேல அக்கறை காட்டுறாரு, நல்லா பாத்துக்குறாரு ” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், தன் எண்ணங்களை உதறி லேசாக புன்னகைத்தாள். “சரி பாலா அண்ணா, நீங்க வேலைய பாருங்க நான் உள்ள போறேன் ” என்று அவரிடம் கூறினாள்.
” கண்டிப்பா மேடம். ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க ” என்று பாலா சொல்ல, அவள் தலையசைத்து விட்டு தன் அறைக்குத் திரும்பினாள். அவளுடைய இதயம் முன்பை விட சற்று லேசாக இருந்தது.
ஆர்யன் தன் அலுவலகத்தை அடைந்து அவனது அறைக்குள் நுழைய, ரஞ்சித் அவன் பின்னாலேயே சென்றான். கதவை சாத்திவிட்டு, அறையில் இருந்த சைலன்சரை ஆன் செய்து விட்டு ஆர்யன் ரஞ்சித்தை பார்த்து, “ ரஞ்சித், டேனியல் கிட்ட இருந்து ஏதாவது தகவல் கிடைச்சுதா ?” என்று நாற்காலியில் அமர்ந்தபடியே ஆர்யன் கேட்டான்.
” சார், நீங்க சொன்ன மாதிரி எல்லாமே பண்ணிட்டேன் ஆனாலும் அவன் திரும்பத் திரும்ப ஒரே பதில தான் சொல்றான் “ என்று பதிலளித்தான் ரஞ்சித்.
ஆர்யன் இருக்கையில் பின்னால் சாய்ந்தான், அவன் யோசித்த போது அவன் விரல்கள் மேஜையில் தட்டின. ” சஞ்சனாவ காயப்படுத்துனதுல அந்த தந்திரக்காரிக்கு ஏதாவது பங்கு இருக்கும்னு நினைக்குறியா ? ஒருவேள அவ டேனியல இப்படி செய்ய சொல்லி இருந்தா ? ” என்று ஆர்யன் கேட்டதும், ” இது வரை, எந்த ஆதாரமும் கிடைக்கல சார். டேனியல் அவன் தனியா தான் இத பண்ணதா சொல்றான் ஆனா அவன நம்ப முடியல “ என்று ரஞ்சித் சொன்னதும் ஆர்யனின் தாடை இறுகியது.
” எனக்கு இன்னும் சந்தேகமா தான் இருக்கு. நீ அவனையும் மானசியையும் கண்காணிச்சிட்டே இரு ரஞ்சித் ” என்று ஆர்யன் சொன்னதும், “ பண்றேன் சார், அப்புறம் மானசி நாளைல இருந்து மறுபடியும் ஆபீஸ் வர போறா “ என்று ரஞ்சித் அவனிடம் தெரிவித்தான்.
ஆர்யனின் கண்கள் கோவத்தில் இருண்டன. ” அப்போ அவள நேரடி கண்காணிப்புல வை. அவளுக்கு நெருக்கமா இருக்க ஒருத்தர் விடாம எல்லாரையும் கண்காணி, நிச்சயம் நமக்கு விஷயங்கள் தெரிய வரும் “ என்று ஆர்யன் கூறினான்.
ரஞ்சித் சரி என்று தலையசைத்தான் ஆனால் தயங்கியபடி, ” சார், சஞ்சு மறுபடியும் வேலைக்கு வருவா அதனால நாம ஏன் மானசியா வேலையை விட்டு அனுப்ப கூடாது ? ” என்று கேட்டான்.
ரஞ்சித்தின் கேள்வியால் ஆர்யன் சிரித்தான். ” புது எதிரிய தேடுறத விட ஏற்கனவே நமக்கு நல்லா தெரிஞ்ச எதிரிய பக்கத்துல வெச்சுக்குறது தான் நல்லது ரஞ்சித். அவ பக்கத்துலையே இருக்கும் போது நாம அவள இன்னும் நல்லா கண்காணிக்க முடியும். என்ன பொறுத்த வரைக்கும் மானசிக்கு நம்ம புது எதிரி நல்லாவே தெரியும். அவ அந்த எதிரி கூட சேர்ந்து நமக்கு எதிரா திட்டம் போடுவா அப்போ அவள பக்கத்துல வெச்சுருந்தா தான் அந்த எதிரிய கண்டுபுடிக்க முடியும். என்ன நான் சொல்றது சரி தானே ? “ என்று ஆர்யன் சொன்னதும் அவனது வியூகம் எப்போதும் போல சரியாக இருப்பதை நினைத்து புன்னகைத்தபடி, “ ரொம்ப சரியா தான் சொல்றீங்க சார். அவள நான் பார்த்துக்குறேன் ” என்றான் ரஞ்சித்.
” சரி ரஞ்சித், அப்புறம் சஞ்சு ஆபீஸ் திரும்பி வரவரைக்கும் அவளோட வேலையை நீ பாத்துக்க. வெளிநாட்டு கஸ்டமர் கூட இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அதுக்கு அப்புறம் நான் டேனியல பார்க்க வரேன் “ என்று ஆர்யன் சொல்ல, “ புரியுது சார்.” என்று சொல்லி ரஞ்சித் அறையை விட்டு வெளியேறினான்.
ஆர்யன் தனது மீட்டிங் மற்றும் கோப்புகளில் கையெழுத்திடுவதில் மும்முரமாக இருந்தான். காலியாக இருந்த சஞ்சனாவின் அறையை அவன் பார்த்த போது, பவித்ரா கவலையுடன் சஞ்சுவின் அறைக்கு வெளியே நிற்பதைக் அவன் கண்டான். சஞ்சனா மீது அவள் வைத்திருக்கும் உண்மையான அக்கறையை அவனால் பார்க்க முடிந்தது. ஒரு பெருமூச்சுடன் தன் வேலைக்குத் திரும்பி, மீட்டிங்கை முடித்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.
பின்னர், டேனியல் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய பாதாள அறைக்கு அவன் ரஞ்சித்துடன் சென்றான். கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல அந்த இடம் இருந்தது. தனது எதிரிகளை அடைத்து வைக்க விசேஷமாக ஆர்யன் அந்த இடத்தை ரகசியமாக வைத்திருந்தான். தற்போது டேனியல் மட்டுமே அந்த இடத்தில் அடைத்து வைக்கப்படிருந்தான்.
மங்கலான வெளிச்சம் சங்கிலிகளின் ஓசையுடன் அந்த இடம் எதிரொலித்தது. ஆர்யன் அறைக்கு வெளியே நின்று உள்ளே கிடந்தவனை வெறித்துப் பார்த்தான். ரஞ்சித் அந்த அறையின் இரும்பு கிரில் கதவை திறந்ததும் ஆர்யன் உள்ளே நுழைந்தான்.
ஆர்யன் நெருங்கியதும் டேனியல் கூனிக்குறுகி நின்றான். ஒரு வார்த்தையும் பேசாமல், ஆர்யன் அவனை இரக்கமின்றி அடிக்கத் தொடங்கினான். அந்த இரவு, வலியும், வேதனையும் கலந்து உடைந்து போன நிலையில் அவன் சஞ்சனாவை கண்ட காட்சிகள் அவன் மனதில் பளிச்சிட்டன, அது அவனது ஆத்திரத்தை அதிகரித்தது. டேனியல் கருணைக்காக கெஞ்சிய போது அவனுடைய வாயில் இருந்து இரத்தம் வழிந்தது.
” சார் தயவு செஞ்சு என்ன விட்டுடுங்க. சத்தியமா இனிமே உங்க முன்னாடி கூட நான் வரவே மாட்டேன் “ என்று சொல்லி டேனியல் கெஞ்சினான். ஆனால் ஆர்யனின் கோபம் தனிவதாகேவ இல்லை.
“ பாஸ்டர்ட், உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா அவள தொடுவ ? அவ என் சஞ்சனா, அவள பார்த்தா கூட கொன்னு பொதச்சிடுவேன் ஆனா நீ அவள தொட்டு இருக்க, உன்ன அவ்ளோ சுலபமா விட மாட்டேன் “ என்று கர்ஜித்த ஆர்யன் பினனர் அவனிடம், “ இப்போ மரியாதையா சொல்லு, உனக்கு அந்த போதை மருந்து எங்க இருந்து கிடைச்சுது ? “ என்று கேட்டான், அப்போது அவன் குரல் பயங்கரமான மிரட்டலாக இருந்தது.
” என் friend ஒருத்தன் pubல வேலை செய்றான். கொஞ்ச நாள் முன்னாடி அவன் தான் எனக்கு அந்த மருந்து கொடுத்தான். அத தான் நான் சஞ்சனாவுக்கு கொடுத்தேன். சத்தியா இது தான் உண்மை “ என்று டேனியல் வலியில் முனங்கினான்.
ஆர்யனின் தனது வலது காலை டேனியலின் முகத்தில் வைத்து “ ஏன்டா பரதேசி நாயே ! நீ சொல்றத நான் நம்புவேனு நெனச்சியா ? “ என்று கேட்டு அழுத்தி மிதித்தான்.
” ப்ளீஸ் சார்! நான் உண்மைய தான் சொல்றேன் ” என்று டேனியல் கதறினான்.
ஆர்யன் பெருமூச்சு விட்டு யோசித்தான் பின்னர், ” ரஞ்சித், இவன் கை விலங்க அவிழ்த்து விடு, இன்னிக்கு ராத்திரி டின்னர் கொடு. நாளைக்கு திரும்பவும் வந்து நான் இவன பாக்குறேன், இப்போ வா போகலாம்.” என்று சொன்னான். ஆர்யன் வழக்கம் போல தந்திரம் செய்கிறான் என்று புரிந்து கொண்டு ரஞ்சித் காவலர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினான் அதன் பின்னர் இருவரும் மேன்ஷனுக்கு திரும்பினர்.
வீட்டிற்கு திரும்பியதும் முதலில் சஞ்சனா சாப்பிட்டாளா என்பதை உறுதிப்படுத்த ஆர்யன் கௌசல்யாவிடம் விசாரித்தான். அதன் பிறகு அவன் அவர்களின் அறைக்குள் நுழைந்த போது, சஞ்சு உறங்கிக் கொண்டிருந்தாள். மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தான்.
மாலை வெளிச்சம் மங்கியதும், சஞ்சனா உறக்கத்தில் இருந்து அசைந்தாள், அவளது உறக்கம் நிறைந்த கண்கள் ஆர்யனின் நிலையான பார்வையைச் சந்தித்தன.
” எப்ப வந்தீங்க?” என்று கேட்ட அவளின் குரலில் இன்னும் தூக்கம் கலந்திருந்தது.
” மதியம் லஞ்ச் டைம் அப்போ வந்துட்டேன், உனக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு ? “ என்று ஆர்யன் கேட்டான், அவள் முகத்தை ஆராய்ந்தபடி.
” நான் நல்லா இருக்கேன் “ என்று அவள் முணுமுணுத்து எழுந்து அமர்ந்தாள்.
” நீ எப்போ வேலைக்குத் திரும்ப வர போறனு முடிவு பண்ணிட்டியா?” என்று ஆர்யன் கேட்டதும், “ அடுத்த வாரம் வரேன் ” என்றாள் சஞ்சு உடனடியாக.
” சரி, அதுவரைக்கும் நிறைய ரெஸ்ட் எடு. ஏன்னா நீ திரும்ப ஆபீஸ் வந்த அப்புறம் ஒரு நாள் கூட லீவு தர மாட்டேன்.” என்று சொன்ன அவனது கிண்டல் சிரிப்பு அவளை போலி எரிச்சலில் முகம் சுளிக்க வைத்தது. அவள் அப்படி செய்வதை பார்த்து ஆர்யன் சிரித்தான்.
“வா, தோட்டத்துக்கு போய் காபி குடிக்கலாம் ” என்று சொல்லி எழுந்து நின்றான். சஞ்சுவும் புத்துணர்ச்சி பெற்று அவனை பின் தொடர்ந்தாள்.
இருவரும் தோட்டத்தில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்ததும் கௌசல்யா இருவருக்கும் காபி கொடுத்தார். அவர்கள் காபியை குடித்துக் கொண்டிருந்த போது அமைதியான மாலை பொழுதின் குளிர்ந்த காற்று அவள் தலைமுடியை லேசாக அசைத்தது.
” பவித்ரா உன்னை மிஸ் பண்றாங்க போல, இன்னைக்கு உன் ரூம் முன்னாடி நின்னு பாத்துட்டு இருந்தாங்க “ என்று சாதாரணமாக ஆர்யன் சொன்னதும், சஞ்சனா ஒரு சிறு பெருமூச்சு விட்டாள். ” நான் இப்போ போன் பண்ணா, அவ என்ன நிறைய கேள்வி கேட்பா. என்னால இப்போ எந்த பதிலும் சொல்ல முடியாது அதனால நான் ஆபீஸ் வந்ததும் அவள சந்திக்குறேன் “ என்று சஞ்சு சொன்னாள்.
ஆர்யன் தலையசைத்தபடி கோப்பையைக் கீழே வைத்து விட்டு அவளிடம் தன் முழு கவனத்தையும் திருப்பி, “ இன்னைக்கு நைட்டு டின்னருக்கு ஏதாவது வித்தியாசமா வேணுமா ?” என்று கேட்டான். உடனே அவள் முகம் மலர்ந்தது. ” நான் பீட்சா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு ” என்று சொன்னாள்.
” அப்போ இன்னைக்கு நைட்டு பீட்சா சாப்பிடலாம் ” என்றான் திருப்தியாகத் தலையசைத்தபடி.
அன்றிரவு, அவளுக்குப் பிடித்த பீட்சாவை அவர்கள் பகிர்ந்து கொண்ட போது, மங்கலான விளக்குகளின் மென்மையான பளபளப்பில் அவர்களுக்கிடையேயான உணர்வும், புரிதலும் அதிகரித்தது. இருவரும் அறைக்குள் சென்றதும் சஞ்சு அவனைப் பார்த்து, “ படுக்கையில் தூங்குங்க ” என்று மறுப்புக்கு இடமில்லாமல் சொன்னாள். அதற்கு ஆர்யன், “ நிச்சயமா தான் சொல்றியா பேபி ? நான் சோபாவுல சமாளிச்சு தூங்குவேன், எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல “ என்றான்.
” காலையில முதுகு வலியோட எழுந்திருக்க ஆசையா இருந்தா சோபாவுல படுத்து தாராளமா தூங்குங்க இல்லனா இங்க வந்து கட்டில்ல படுங்க “ என்று சஞ்சு சொன்னதும், “ படுக்கைய பகிர்ந்துக்க முடிவு பண்ணதுக்கு நன்றி “ என்று சொல்லி அவன் சிரித்தபடி கட்டிலின் மறுபுறம் அமர்ந்தான், சஞ்சு சுவரை நோக்கித் திரும்பி படுத்திருந்தாள்.
“ எப்படியும் தூக்கத்துல உருண்டு வந்து என் சட்டைய புடிச்சுகிட்டு தூங்க போற அதுக்கு இப்போ இவ்ளோ பில்ட் அப் வேற “ என்று வேடிக்கையாக நினைத்து ஆர்யன் புன்னகைத்தான்.
அவன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு மொபைலில் இமெயில் பார்த்துக் கொண்டிருந்த போது ரஞ்சித்திடமிருந்து அழைப்பு வந்து அதற்கு பதில் அளித்தான்.
“ சார், டேனியல் நம்ம இடத்துல இருந்து தப்பிச்சு போயிட்டான் “ என்று ரஞ்சித் சொன்னதும், “ நல்லது. இப்போ அவன follow பண்ணு அப்படியே அந்த தந்திரக்காரி என்ன செய்றா, அவளோட ஒவ்வொரு அசைவையும் கண்காணி “ என்றான் ஆர்யன். ரஞ்சித் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
தன் வேலையை முடித்துவிட்டு ஆர்யன் மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டான். பின்னிரவில், வனது கழுத்தில் ஒரு கூச்ச உணர்வை உணர்ந்து அவன் மெல்ல அசைந்து கண்களைத் திறந்து பார்த்த போது, சஞ்சனா அவனோடு ஒட்டிக் கொண்டு உறங்குவதையும், அவளது மென்மையான கூந்தல் அவன் தோலை உரசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவள் அவனை கட்டியணைத்து உறங்குவதை பார்த்து அவன் உதடுகளில் சிறு புன்னகை தவழ்ந்தது.
ஆர்யன் மெல்ல அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். தூக்கத்தில் அதை உணர்ந்தவள் போல சஞ்சுவும் புன்னகைத்தாள்.
*********************
முன்னோட்டம்:
” என்னடா ஆர்யன் இது உனக்கு வந்த சோதன ? இவ தினமும் வந்து இப்படி நின்னா நான் என்ன செய்வேன் ? ஏற்கனவே உன் கண்ட்ரோல் ஊசலாடுது இதுல இவ வேற இப்படி வந்து நிக்குறா.ஒரே ரூம்ல வந்து இருக்க முடிவு பண்ணி தப்பு பண்ணிட்டோமோ ? அய்யையோ.. கடவுளே…உன் புள்ளைய காப்பாத்து பா “

1 comment
[…] Chapter 16 […]