டேனியலின் வீட்டில் இருந்து புறப்பட்டு ஆர்யனும், ரஞ்சித்தும் அலுவலகத்தை அடைந்தனர். ஆர்யன் டையை அவிழ்த்தபடி அவன் அறைக்குள் நுழைந்து அவனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டான். ஒரு மிரட்டலை மௌனமாக்கினாலும் அவன் மனம் வேலையில் கவனம் செலுத்த மறுத்தது.
ஒவ்வொரு கணமும், அவன் எண்ணம் அவள் வெட்கப்பட்ட விதம், அவள் அவனைப் பார்த்த விதம் பற்றியே யோசிக்க வைத்தது. வேறு எந்த ஒரு விஷயமும் செய்ய முடியாத விதம் அவன் இதயத் துடிப்பை சஞ்சுவின் எண்ணங்கள் ஆட்டிப்படைத்து கொண்டே இருந்தது.
ரஞ்சித் கேபினுக்குள் நுழைந்ததும் அவனது சிந்தனை கலைந்தது.
” இன்னைக்கு முக்கியமான வேலை இல்ல மீட்டிங் எதுவும் இருக்கா சொல்லு, அப்புறம் சஞ்சனாவ வர சொல்லு “ என்று சற்றும் யோசிக்காமல் உத்தரவிட்டான் ஆர்யன். சிறிது நேரம் மௌனம் நிலவியது. அப்போது தான் அவனுக்கு அவள் அங்கு இல்லை என்ற ஞானோதயம் ஏற்பட்டது.
அவன் விரல்கள் தன் கையிலிருந்த பேனாவை இறுகப் பிடிக்க அவன் ஆழமாக மூச்சை இழுத்து பின்னால் சாய்ந்தான். ” ஒண்ணுமில்ல எனக்கு காபி கொண்டு வா “ என்று சொல்லி சமாளிக்க நினைத்தான்.
என்ன நடக்கிறது என்பதை உணர்ந்த ரஞ்சித் புன்னகையை அடக்கிக் கொண்டு, “ இப்போவே கொண்டு வரேன் சார் “ என்று சொல்லி அறையை விட்டு வெளியேறினான்.
ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு விரக்தியடைந்து கையால் தலைமுடியை வருடினான். அவன் மனம் குழம்பிப் போயிருந்தது.
” அய்யோ கடவுளே! இபப்டியா ஆகணும் என் நிலைம. அவ இல்லாம எதுவும் செய்ய முடியல, பைத்தியம் புடிச்சிடும் போல இருக்கு “ என்று புலம்பினான்.
அவனது எண்ணங்கள் சஞ்சுவின் மீதும், அவளது புன்னகையின் மீதும், அவள் அவனைப் பார்த்த விதம் மீதும் சென்றன… தான் காதல் நோயால் அவதியுற்று அவள் மீது பைத்தியமாக மாறிவிட்டதை உணர்ந்து, ” இல்ல இதுக்கு மேல என்னால முடியாது. நாளைல இருந்து அவள ஆபீஸ் வர சொல்றேன் அப்போ தான் என்னால நிம்மதியா இருக்க முடியும், வேலையும் செய்ய முடியும் “ என்று முனங்கினான்.
அந்த முடிவை எடுத்ததும், ஆர்யன் தனது லேப்டாப்பை மூடிவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டு மேன்ஷனுக்கு புறப்பட்டான்.
சஞ்சுவின் நிலைமையும் மோசமாக இருந்தது. ஆர்யன் அலுவலகம் சென்ற பிறகு, அவள் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அமைதியற்றவளாக இருந்தாள். அவள் என்ன செய்தாலும், அவளுடைய எண்ணங்கள் எப்போதும் அவனை மட்டுமே சுற்றி வட்டமிட்டன.
பெருமூச்சுடன் பால்கனியில் நின்று தோட்டத்தை வெறித்துப் பார்த்தாள். அங்கே ஆர்யன் நிற்பதைக் கண்டதும் அவள் இதயம் ஒரு துடிப்பை நிறுத்தியது.
“ஆர்யன் ?” என்று அவள் உதடுகள் முனுமுனுக்க அவள் ஆச்சரியத்தில் கண் சிமிட்டி, உற்சாகத்தால் ஆட்கொள்ளப்பட்டு அவள் கீழே ஓடினாள். ஆனால் அங்கு சென்றதும் தோட்டம் காலியாக இருப்பதைக் கண்டாள். ஏமாற்றத்துடன் முகத்தைச் சுளித்தபடி அவள் திரும்பிப் பார்த்த போது அங்கே ஆர்யன் பறவைகளுக்கு அருகில் நின்று அவற்றுக்கு உணவளித்துக் கொண்டிருந்தான்.
அவள் நிம்மதியுடன் புன்னகைத்தபடி அவனை நோக்கி விரைந்தாள், ஆனால் அவனை தொட அவள் கையை நீட்டிய போது அவன் மறுபடியும் மறைந்து போனான்.
ஏமாற்றத்தால் உதட்டைப் பிதுக்கியபடி அவள் தன்னுடைய அறைக்குத் திரும்பினாள், அப்போது அவன் சோபாவில் சாதாரணமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். அவள் இதயம் மகிழ்ச்சியில் துள்ளியது, அவள் உடனடியாக அவன் அருகில் சென்று உட்கார்ந்தாள்.
சஞ்சு அவனிடம் நெருங்க நெருங்க அவனும் அவளை நோக்கி சாய்ந்தான். அவள் மூச்சு எதிர்பார்ப்பில் சிக்கிக் கொண்டது, திடீரென்று அவள் சோபாவில் விழுந்தாள், நிமிர்ந்து பார்த்த போது அவன் மீண்டும் மறைந்தான்.
“ எங்க பார்த்தாலும் ஆர்யன் தெரியுறாரு. அய்யோ சஞ்சு ! உனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சு போல. இப்படியே போன அவ்ளோ தான். பேசமா கீழ போய் டிவி பார்க்கலாம் அப்போவாச்சு இந்த மாதிரி எண்ணம் வராம இருக்கும் “ என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டே கதவை நோக்கித் திரும்பியவள் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.
ஆர்யன் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வாசலில் சாய்ந்தபடி வேடிக்கையான புன்னகையுடன் நின்றான்.
சஞ்சு ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டு அவனை நோக்கி நடந்தாள், அவனுக்கு முன்னால் நின்று கதவின் எதிர்புறத்தில் சாய்ந்தாள்.
“ இப்படி எங்க பாத்தாலும் நீங்களே தெரிஞ்சா நான் என்ன பண்றது ? போற இடம் எல்லாம் நீங்க தான் தெரியுறீங்க. எதுக்கு இப்போ நீங்க ஆபீஸ் போனீங்க, என் கூட வீட்லயே உருக்க வேண்டியது தானே ? இப்போ பாருங்க நா லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்கேன் ஆனா நீங்க மறஞ்சு போயிடுவீங்க ” என்று சொல்லி சஞ்சு ஏக்கத்துடன் அவனை பார்த்தாள்.
ஆர்யன் சிரித்தபடி அவளை ஒரே வேகத்தில் முன்னால் இழுத்ததும் சஞ்சு தடுமாறி அவன் மார்பில் சாய்ந்தாள்.
சஞ்சு அவனைப் பார்த்து கண்களை சிமிட்டி, ” இருங்க… நீங்க ஏன் இன்னும் மறையாம இருக்கீங்க ? ” என்று கேட்டு ஆர்வத்துடன் அவன் கன்னத்தைக் கிள்ளினாள், உடனே அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “ அய்யோ கடவுளே ! இவரு உண்மையா இங்க இருக்காரு “ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து,” நீங்க நிஜமா இருக்கீங்களா ? “ என்று கேட்டாள்.
ஆர்யன் சிரித்துக் கொண்டே, “ ஹ்ம்ம் ஆமா இருக்கேன். யாரோ என்ன ரொம்ப மிஸ் பண்ணிட்டாங்க போல இருக்கு.” என்று அவளை கிண்டல் செய்தான்.
“ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல “ என்று சொல்லி சஞ்சு ஏளனம் செய்தபடி வேறு பக்கம் பார்த்தாள்.
ஆர்யன் அவள் அருகில் குனிந்து, “ பொய் சொல்றத நிறுத்து. என்ன பத்தி இவ்ளோ நேரம் நீ பேசிட்டு இருந்தத நான் கேட்டுட்டு தான் இருந்தேன். என்ன அவ்ளோ மிஸ் பண்ணியா ஸ்வீட் ஹார்ட் ?” என்று ஆர்யன் ஹஸ்கி குரலில் கேட்டான். அவன் குரலை கேட்டதும் சஞ்சுவின் கன்னங்கள் சிவக்க ஆரம்பித்தது. ” நான் சும்மா விளையாடிட்டு இருந்தேன்.” என்று சொல்லி அவள் சமாளித்தாள் ஆனால், ” நிஜமாவா?” என்று கேட்டு புருவத்தை உயர்த்திய ஆர்யன் ” ஆனா நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் பேபி “ என்று கூறினான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
ஆர்யன் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி, “ நீ இல்லாம இருக்க முடியல, ரொம்ப கஷ்டமா இருக்கு “ என்று மெல்லிய குரலில் கூறினான். அவள் பதில் சொல்வதற்குள் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவள் உதடுகளில் இருந்து ஒரு மெல்லிய பெருமூச்சு வெளிப்பட்டது, அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள், அவள் முகத்தில் வெட்கம் பரவியது.
” உன்னோட கன்னம் அப்படியே அழகான இளஞ்சிவப்பு நிறத்துல இருக்கு. நீ வெட்கப்படும் போது இன்னும் ரொம்ப அழகா இருக்க ” என்று ஆர்யன் சொன்னதை கேட்டு, “ஆர்யன்… என்ன போக விடுங்க ” என்று சொல்லி சஞ்சு நெளிந்தாள். அவள் அவனது பார்வையைத் தவிர்த்தாள், ஆனால் அவன் விடுவதாக இல்லை.
” என்ன பாரு சஞ்சு” என்றான் மென்மையாக. அவள் பிடிவாதமாகத் மறுத்து தலையை ஆட்டினாள்.
சிரித்துக் கொண்டே ஆர்யன் தன் விரலால் அவள் தாடையை உயர்த்தி அவனது தீவிரமான பார்வையை சந்திக்க வைத்தான்.
” ஒவ்வொரு நாளும் உன்ன விட்டு இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சஞ்சு, முடியலடி “ என்று முணுமுணுத்தவன் அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டான்.
சஞ்சு விழுங்கியபடி ” நீங்களும் எனக்கும் அப்படித் தான் செய்றீங்க ஆர்யன் “ என்று சொன்னாள்.
அவள் வார்த்தையை கேட்டதும், அவளது மூடிய இமைகளில் முத்தமிடுவதற்கு முன் அவன் உதடுகள் புன்னகையில் வளைந்தன. பிறகு, எந்தத் தயக்கமும் இன்றி, அவள் உதடுகளில் ஒரு மெல்லிய முத்தம் பதித்தான்.
சஞ்சுவின் மூச்சு தடைபட்டது, அவளது இதயம் காட்டுத்தனமாக துடித்தது. ஆனால் அவள் எதிர்வினையாற்றுவதற்குள், ஆர்யன் முத்தத்தை ஆழப்படுத்தி, அவளை இறுக்கமாக அணைத்தான்.
சஞ்சு அவனுக்குள் உருகினாள், அவளுடைய கைகள் இயல்பாகவே அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தன.
ஆர்யன் முத்தமிட்டு கொண்டே அவளைத் தூக்கி உள்ளே சென்று சோபாவில் உட்கார்ந்து அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு, அவளைச் சுற்றி கைகளைப் பத்திரமாக பிடித்து அனைத்துக் கொண்டான்.
ஒரு நித்தியம் போல உணர்ந்த பிறகு, அவன் விலகி, தனது நெற்றியை அவளது நெற்றியில் இனித்தான்.
” ஆபீஸ்க்கு வா, இனிமே நீ இல்லாம என்னால இருக்க முடியாது.” என்று அவன் முனுமுனுத்ததும் இன்னும் அந்த நொடியில் தொலைந்து போன சஞ்சுவால் பதிலுக்கு சரி என்று முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.
ஆர்யன் புருவத்தை உயர்த்தி ” இப்படி எப்போ பார்த்தாலும் ஹ்ம்ம் சொல்றத தவிர வேற ஏதாவது சொல்லு” என்று கூறினான். அதற்கு சஞ்சு, “ நா… நான்…வ..ன் வரேன் “ என்று சொல்லி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
” ஏன் இப்படி திக்குற ? உனக்குக் குளிரா இருந்தா சொல்லு உன்ன சூடேத்த எனக்கு ஆட்சேபனையும் இல்ல ” என்று சொல்லி ஆர்யன் சிரித்தான்.
அவன் சொன்னதை கேட்டு அவள் கண்கள் விரிந்தன. ” ஆர்யன்” என்று அதிர்ச்சியில் சொலி அவன் மார்பில் அறைந்தாள்.
அவன் சிரித்தபடி அவளைச் சுற்றி தன் பிடியை இறுக்கினான். ” இப்போ சொல்லு, ஆபீஸ் வரியா ? “ என்று அவன் கேட்க, “ நான் வரேன் “ என்று சொல்லி தலை அசைத்தாள்.
” ரொம்ப நன்றி ஸ்வீட் ஹார்ட் “ என்று சொல்லி ஆர்யன் புன்னகைத்தான்.
ஆர்யனிடம் அலுவலகம் செல்லு ஒப்புக் கொண்டதால் அடுத்த நாள் காலை, சஞ்சு சீக்கிரம் எழுந்தாள். அலுவலகத்திற்குத் திரும்புவதில் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த உணர்வை அவள் உணர்ந்தாள். நீலமும் வெள்ளையும் கலந்த சூடிதார் அணிந்து அவள் தயாரான பிறகு ஆர்யனை எழுப்ப திரும்பிய போது அவளது புன்னகை பிரகாசமாக இருந்தது.
அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு கண்களை சிமிட்டியபடி அவளைப் பார்த்தான். காலை வெளிச்சத்தில் அவள் அங்கே நின்று கொண்டிருந்த காட்சி அவனை ஒரு கணம் மற்றவற்றை மறக்கச் செய்தது. அவன் முழுமையாக மெய்மறந்து போனான்.
அவனது திகைப்பைக் கண்டு சிரித்த சஞ்சு,”குட் மார்னிங் சீக்கிரம் எழுந்து ரெடியாகுங்க ” என்று சொன்னாள். “ குட் மார்னிங் ஸ்வீட் ஹார்ட் “ என்று புன்னகையோடு சொன்ன ஆர்யனின் குரல் இன்னும் தூக்கத்திலிருந்து கரகரப்பாக இருந்தது.
சோம்பலை முறித்து, மனமில்லாமல், அவன் படுக்கையில் இருந்து எழுந்து குளித்து தயாராக சென்றதும் சஞ்சு காலை உணவுக்காக கீழே சென்றாள். ஆர்யன் தயாரானதும் அவளுடன் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட அமர்ந்தான் அப்போது மேஜை கீழே இருந்த அவள் கையை பிடித்து சாதாரணமாக அவர்களின் விரல்களை ஒன்றோடொன்று பிணைத்தான்.
கௌசல்யா சமையலறையை விட்டு வெளியே வந்து அவர்களைப் பார்த்ததும், ” சஞ்சு, நீ எங்கேயாவது வெளிய போறியா ?” என்ற கேட்டார். அதற்கு சஞ்சு உடனே, “ ஆமா மா. நான் இன்னைல இருந்து மறுபடியும் ஆபீஸ் போக போறேன் “ என்று பதில் சொன்னாள். சன்சுவின் பதிலை கேட்டதும், “ உனக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா சஞ்சு ? “ என்று கௌசல்யா கவலையுடன் கேட்டார்.
சஞ்சு ஆமோதிப்பது போல் தலையசைத்து, “ஹ்ம்ம், நான் நல்லா இருக்கேன் மா, ஒன்னும் பிரச்சன இல்ல ” என்றாள்.
காலை உணவுக்குப் பிறகு, அவர்கள் புறப்படத் தயாரானார்கள். “சரி ஆபீஸ்ல பார்க்கலாம்” என்று சஞ்சு சொன்னதும் ஆர்யன் அதை ஆமோதிப்பது போல தலை அசைத்து சரி என்று முணுமுணுத்தான்.
சஞ்சு தன் காரை நோக்கி நடந்த போது அவளது பாதுகாப்பை உறுதி செய்ய ஆர்யன் உடனே ரஞ்சித்தை அழைத்தான். “ரஞ்சித், கார்ட்ஸ் எல்லா நேரமும் சஞ்சுவ follow பண்ணனும், அத உறுதி செய் ? “ என்று சொன்னான். உடனே புன்னகைத்த ரஞ்சித், “எல்லா ஏற்பாடு பண்ணியிருக்கேன் சார், நீங்க கவலைப்படாதீங்க ” என்று சொன்னான்.
ஆர்யன் தனது காரில் ஏறி ARC டவர்ஸுக்குச் செல்வதற்கு புறப்பட்டான். இன்று முதல் எல்லா நேரமும் சஞ்சு அவனோடு இருப்பாள் என்ற எண்ணம் அவன் மனதில் ஒரு புது உற்சாகத்தை கொடுத்தது.
சஞ்சு அவளது அறைக்குள் நுழைந்ததும் உடனடியாக அவளது முதுகெலும்பில் ஒரு நடுக்கம் ஏற்படுவதை உணர்ந்தாள். அந்த திகிலூட்டும் நாளின் நினைவுகள் மீண்டும் தோன்றி அவளை சங்கடப்படுத்தின. அவள் மனம் படப்படத்தது. ஒரு கணம் கண்களை மூடியவள், ஆர்யனின் ‘ தைரியமா இரு சஞ்சு, உன் கூட நான் இருக்கேன் “ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நினைவு கூர்ந்தாள்.
அந்த மோசமான எண்ணங்களை அவள் தீர்மானமாக ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையில் கவனம் செலுத்தினாள். ஆர்யனின் அட்டவணையை சரிபார்த்து, நிலுவையில் உள்ள பணிகளைப் செய்ய தொடங்கினாள். சிறிது நேரத்துக்கு பிறகு மொபைலை எடுத்து பவிக்கு டயல் செய்தாள்.
” ஹலோ சஞ்சு, நீ எப்படி இருக்க ? திடீர்னு என்ன ஆச்சு ?” என்று கேட்ட பவியின் குரலில் கவலை தெரிந்தது. ” நான் நல்லா இருக்கேன் பவி. நான் திரும்பவும் ஆபீஸ் வந்துட்டேன். மதியம் லஞ்ச் சாப்பிடும் போது பேசலாம், சரியா?” என்று சஞ்சு அவளிடம் சொல்ல அதற்கு பவி உடனே, “ சரி சஞ்சு, உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் ” என்று சொன்னாள். அவள் வார்த்தையை கேட்ட சஞ்சு, “ நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் பவி, சீக்கிரம் உன்ன சந்திக்கிறேன் “ என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பினாள்.
இதற்கிடையில், அலுவலகத்தை அடைந்த ஆர்யன் தனது அறையில், நாற்காலியில் பின்னால் சாய்ந்திருந்தான், அவனது கண்கள் சஞ்சுவின் அறையையும் அவனது அறையையும் பிரிக்கும் மூடிய திரைச்சீலைகளில் நிலைத்திருந்தன.
” இப்போவாச்சும் இந்த கர்டைன்ஸ் திறந்தா என்ன ? ரொம்ப டார்ச்சர் பண்றாளே என்ன. இப்போ என்ன செய்றது ? பேசாம ரூமுக்கு வர சொல்லுவோம் ஆனா காரணம் கேட்பாளே அதுக்கு நான் என்ன சொல்லுவேன் ? சரி பாத்துக்கலாம் “ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்த ஆர்யன் சற்றும் யோசிக்காமல் போனை எடுத்து அவள் நம்பருக்கு டயல் செய்தான். அவள் பதில் சொன்னதும், ” சஞ்சு, என் ரூமுக்கு வா” என்று சொன்னான். அவளும் சரி என்று பதி அளித்து அவனுடைய அறைக்கு சென்றாள்.
சஞ்சு உள்ளே நுழைந்த போது ஆர்யன் தன்னுடைய லேப்டாப்பில் மூழ்கியிருப்பதைக் கண்டாள். அவளை நிமிர்ந்து கூட அவன் ஒரு பார்வை பார்க்கவில்லை.
“ பாருடா ! சார் ரொம்ப பிஸியா இருக்காரு போல “ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “ ஆர்யன்?” என்று கூப்பிட்டாள். அப்போதும் அவளை நிமிர்ந்து பார்க்காமல், ” ஹ்ம்ம் சஞ்சனா. இன்னிக்கு என் ஷெட்யூல் என்ன?” என்று கேட்டான்.
சஞ்சு தன் கையில் இருந்த ஐ-பேடை ஆன் செய்து, “ கன்ஸ்ட்ரக்ஷன் டிவிஷனுக்கு புது டீலர்களோட மதியம் 3 மணிக்கு ஒரே ஒரு மீட்டிங் இருக்கு. ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடுவாங்க ” என்று கூறினாள்.
அதை கேட்ட பிறகு நிமிர்ந்து பார்த்த ஆர்யன், “ ஹ்ம்ம். அப்போ காலைல எனக்கு மீட்டிங் எதுவும் இல்ல சரி தானே ? “ என்று கேட்க, அவன் குரலில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தவள் மெல்ல ஆம் என்று சொல்லி தலை அசைத்தாள்.
ஆர்யன் தன் இருக்கையில் பின்னால் சாய்ந்து, “ இப்போ எனக்கு எந்த வேலையும் இல்ல, நான் என்ன செய்றது ? “ என்று கேட்க அவன் எண்ணம் புரிந்து கொண்டு, சஞ்சு கண்களை உருட்டினாள். ” உங்களுக்கு மீட்டிங் இல்லன்னு தான் சொன்னேன் ஆனா நீங்க கையெழுத்து போட வேண்டிய file நிறைய இருக்கு, நீங்க சரி பார்க்க வேண்டிய file கூட இருக்கு “ என்று சொன்னாள்.
” அப்படியா ? சரி அந்த file கொடு நான் இப்போவே கையெழுத்து போடுறேன் “ என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு அவனிடம் ஆவணங்களைக் கொடுத்துவிட்டு அவன் கையெழுத்திடும் போது அவனது மேஜைக்கு அருகில் நின்றாள். ஒவ்வொரு ஆவணத்திலும் கையெழுத்து போடுவதற்கு முன்பு அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான், அது அவளுடைய இதயத் துடிப்பை அதிகப்படுத்தியது.
கடைசியில் ஆவணத்தில் அவன் கையெழுத்திட்டதும், “சரி, நான் கிளம்பறேன்” என்று சஞ்சு கூறினாள் அதற்கு ஆர்யன் முன்னால் சாய்ந்து, “ கண்டிப்பா போகனுமா ? “ என்று ஏக்கத்தோடு கேட்டான்.
சஞ்சு அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தியதும் அவனது எண்ணங்கள் காட்டுத்தனமாக ஓடின. “ நான் ஏற்கனவே இவ பின்னாடி லூசு மாதிரி சுத்திட்டு இருக்கேன் இதுல இவ இப்படியெல்லாம் பண்ணா அப்புறம் நான் எப்படி நல்ல பையனா இருக்க முடியும் “ என்று மனதில் நினைத்தான் ஆனால் அவளை பார்த்து புன்னகைத்து கொண்டே, “ இல்ல மா, கண்டிப்பா போகனுமானு கேட்டேன் ? இப்போ எனக்கும் எந்த வேலையும் இல்ல அதனால நாம ஏன் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசக் கூடாது ? “ என்று கேட்டான்.
“ நாம வீட்ல ஏற்கனவே நிறைய பேசுறோம் ஆர்யன் “ என்று சஞ்சு சொல்ல உடனே ஆர்யன் எழுந்து அவளை நோக்கி நகர்ந்தான். ” சரி, அப்போ பேச வேண்டாம். வேற ஏதாவது செய்வோம் “ என்று சொல்லி அவள் எதிர்வினையாற்றும் முன், அவன் அவளுடைய மணிக்கட்டைப் பிடித்து அவளை அருகில் இழுத்தான்.
“ஆர்யன், என்ன பண்றீங்க ? நாம ஆபீஸ்ல இருக்கோம் “ என்று அவசரமாக சஞ்சு முணுமுணுத்தாள். அதற்கு ஆர்யன் அவளிடம், “ ஆபீஸ் தான், யார் இல்லன்னு சொன்னது “ என்று சொல்லி அவள் முகத்தில் அலைந்து கொண்டிருந்த தலை முடியின் சில இழைகளை காதுக்குப் பின்னால் ஒதுக்கியபடி அவன் விரல்கள் அவளது காது மடலை உரசின.
அவன் தீண்டலில் மென்று விழுங்கியவள், ” ஆர் … ஆர்ய … ஆர்யன்…” என்று திக்கி பேச முடியாமல் தடுமாறினாள். இதை பார்த்து, “ ஏன் இப்படி டைப் அடிக்குற “ என்று கேட்டு ஆர்யன் அவளை கிண்டல் செய்தான்.
” யாராவது உள்ளே வந்துட போறாங்க ஆர்யன், என்ன விடுங்க “ என்று சொல்லி சஞ்சு கெஞ்சினாள் ஆனால் எதை பற்றியும் கவலையில்லாமல், “ என் அனுமதி இல்லாம என் ரூமுக்கு யாரும் வர மாட்டாங்க “ என்று ஆர்யன் புன்னகையுடன் கூறினான்.
அவன் பிடிவாதமாக இருப்பதை பார்த்து, “ அந்த தைரியம் தானே உங்களுக்கு “ என்று சொல்லி சஞ்சு தோல்வியில் பெருமூச்சு விட்டு, ” சரி. என்ன விடுங்க ” என்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், “எனக்கு ஏதாவது கொடு அப்போ உன்ன போக விடுறேன் “ என்று சொன்னான். அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்சு, “ என்ன சொல்றீங்க ? அதெல்லாம் முடியாது ” என்று பதில் சொன்னாள்.
” அப்போ நானும் உன்ன விட மாட்டேன், இங்க இப்படியே நிக்கலாம் “ என்று சொல்லி அவளை விடாமல் பிடித்திருந்தான். “ ஆர்யன் சொன்னா கேளுங்க “ என்று சஞ்சு மீண்டும் சொல்ல, “ விட முடியாது ஸ்வீட் ஹார்ட், ஒன்னு நீயே கொடு இல்ல நானே எடுத்துக்குவேன் “ என்று சொன்னவன் அவள் மறுப்பு தெரிவிப்பதற்குள், அவளை இழுத்து அணைத்து அவள் கழுத்தில் மென்மையாக ஒரு முத்தமிட்டான்.
சஞ்சு கண்களை இறுக மூடிக்கொண்டு மூச்சிரைத்தாள். அதை பார்த்து, “ ஏய், கண்ண திற, நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் ” என்று சொல்லி ஆர்யன் புன்னகைத்தான். தயக்கத்துடன், சஞ்சு மெல்ல கண்களை திறந்த போது அவன் ஒரு குறும்புத்தனமான சிரிப்புடன் அவளை உற்றுப் பார்ப்பதைக் கண்டாள்.
” நீ வெட்கப்படும் போது உன் கன்னம் உடனே சிவந்துடுது, இந்த கலர் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு அதனால … “ என்று சொல்லி இழுத்தவன் அவள் கன்னத்தில்அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்.
” இப்போ போ, லஞ்ச் சாப்பிட சந்திப்போம் “ என்று சொல்லி ஆர்யன் அவளை விடுவித்ததும் சஞ்சு ஒரு அடி பின்வாங்கி “இல்ல, நான் பவிய சந்திக்கணும். அவ என்ன நெனச்சு ரொம்ப கவலையா இருக்கா அதனால நான் அவ கூட மதியம் லஞ்ச் சாப்பிட போவேன் “ என்று கூறினாள். அதை கேட்டதும், “ கண்டிப்பா என் கூட சாப்பிட வர முடியாதா ? “ என்று ஆர்யன் கண்களைச் சுருக்கி கெஞ்சினான் ஆனால் சஞ்சு, “கண்டிப்பா முடியாது “ என்று உறுதியாக கூறினள்.
ஆர்யன் சட்டென்று பெருமூச்சு விட்டு, “ சரி தாராளமா போ ஆனா இன்னைக்கு நைட்டு எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் டின்னர் வேணும் “ என்று சொல்லி கண்ணடித்தான். உடனே சஞ்சு அவனை முறைத்து, “ நீங்க ரொம்ப பேசுறீங்க ஆர்யன் அதனால இன்னைக்கு உங்களுக்கு டின்னர் கிடையாது “ என்று சொல்லி சிரித்தாள்.
“அதையும் பார்க்கலாம் ஸ்வீட் ஹார்ட் ” என்று சொன்னவன் அவள் செல்லப் புன்னகையுடன் அறையை விட்டு செல்வதைப் பார்த்தான்.
சஞ்சு வெளியே சென்ற பிறகு ரஞ்சித் உள்ளே நுழைந்து, “சார், மானசி திரும்ப ஆபீஸ் வந்துட்டா. இப்போ அவ உங்கள சந்திக்க விரும்புறா ” என்று கூறினான். அதுவரை காதல் மயக்கத்தில் புன்னகைத்து கொண்டிருந்த ஆர்யனின் முகபாவம் கோவத்தில் இருண்டது. அவள் பெயரைக் கேட்டவுடனேயே அவனுக்குக் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. டேனியல் சொன்ன வார்த்தைகள் இன்னும் அவன் மனதில் புதியதாக இருந்தது. அவன் மனதின் ஒரு பகுதி அவளை அப்போதே அங்கேயே கொன்றுவிட வேண்டும் என்று விரும்பியது ஆனால் இப்போதைக்கு அவன் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.
“அவள உள்ள அனுப்பு.” என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் வெளியே சென்றான். சில கணங்களுக்குப் பிறகு, மானசி உள்ளே நுழைந்தாள், அவளுடைய முகபாவம் வருத்தத்தில் இருப்பது போல தோன்றியது.
“குட் மார்னிங் சார்.” என்று அவள் சொன்னதும் ஆர்யன் ஒரு முணுமுணுப்புடன் அவளை அங்கீகரித்தான்.
மானசி பேசுவதற்கு முன் தயங்கினாள், அவள் குரல் நடுங்கியது. ” சார், என்ன மன்னிச்சிடுங்க. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க. நான் இவ்ளோ தரம் தாழ்ந்திருக்கக் கூடாது. எனக்கு உங்க மேல இருந்த காதல்-” என்று மானசி சொல்லும் போது ஆர்யன் அவளை முறைத்து, “ நிறுத்து “ என்று கத்தினான்.
“ உன் முட்டாள்தனத்தை பத்தி எல்லாம் நான் கேட்க விரும்பல. போய் வேலைய பாரு. இந்த முறை கத்தி எடுத்த நான், அடுத்த முறை துப்பாக்கியில் கை வைக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டேன், அது நல்லா ஞாபகத்துல இருக்கட்டும் “ என்று ஆர்யன் எச்சரித்ததும் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது, ஆனால் அது எல்லாம் வெறும் முதலைக் கண்ணீர் என்று ஆர்யன் நன்கு அறிந்திருந்தான்.
” என்ன மன்னிச்சிடுங்க சார். நான் உங்களுக்கு விசுவாசமா இருப்பேன்” என்று மானசி சொல்ல, ஆர்யன் பதில் எதுவும் சொல்லாமல், “ வெளியே போ “ என்று சொன்னான்.
மானசி வெளியே சென்றதும் மீண்டும் உள்ளே நுழைந்தான் ரஞ்சித்.
” அவளைக் கூர்ந்து கவனி ரஞ்சித், அவளோட ஒவ்வொரு அசைவும் கவனத்துல இருக்கணும் ” என்று ஆர்யன் சொன்ன போது அவன் குரல் கூர்மையாக இருந்தது. ரஞ்சித் சரி என்று சொல்லி விடைபெற்றான்.
*********************************************
முன்னோட்டம் :
” உனக்கு சொன்னா புரியாது பேபி. எனக்கு எப்பவும் உன் கூடவே இருக்கணும் போல இருக்கு “

1 comment
[…] Chapter 20 […]