மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ஆர்யன் வெறிப்பிடித்தவன் போல காரை ஓட்டினான். அவன் மனம் சஞ்சுவின் கண்கள் மற்றும் அவளது வார்த்தைகளில் நிலைத்திருந்தது.
“மிஸ்டர் சைதன்யா… நான் தனியா இருக்க விரும்புறேன்.” அந்த வார்த்தைகள் அவனை அலைக்கழித்தன.
ஆர்யன் வீட்டை அடைந்து நேராக அவர்களின் அறைக்குச் சென்றான். அந்த அறை முழுவதும் அவளது வாசனை நீடித்தது. அவளுடைய துப்பட்டா இன்னும் சோபாவில் இருந்தது, அவளுடைய கொலுசுகள் டிரஸ்ஸரில் இருந்தன. பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரை ஆன் செய்த போது அவன் கைகள் நடுங்கின. குளிர்ந்த நீர் அவன் உடலெங்கும் ஓடினாலும் கண்ணீரின் வெப்பத்தை அதனால் துடைக்க முடியவில்லை.
வேதனையின் கணம் தாங்காமல் அவன் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு மண்டியிட்டு அமர்ந்தான். உடைந்த விம்மல் தொண்டையிலிருந்து வெளியேறியது. வெளியேற வழியில்லாத வலியால் அவன் நெஞ்சு கனத்தது.
நீண்ட நேரம் கழித்து, அவன் வெளியே வந்து, புதிய ஆடைகளை மாற்றி, சோபாவில் அமர்ந்தான். அவன் கண்கள் அவளது சால்வையை நோக்கிச் சென்றன. அவன் அதை எடுத்து இறுக்கி அணைத்து அவள் என நினைத்து முத்தமிட்டான்.
” நீ ஏன் என்ன நம்பல சஞ்சு?” என்று மௌனத்தில் கிசுகிசுத்தான். “நீ எப்பவும் என் கூட இருப்பனு தானே சொன்ன ? உன்ன பார்க்காம என்னால இருக்க முடியாது… ஆனா என் பக்கத்துல இருக்கறது உனக்கு வலிக்குதுன்னா நான் காணாம போயிடுவேன். நீ நல்லா இரு, சந்தோஷமா சிரிசிட்டே இரு எப்பவும் “ என்று சொல்லிக் கொண்டு வெறுமனே சுவரையே வெறித்துப் பார்த்துவிட்டு போனை எடுத்தான். அவன் கேலரியைத் திறந்ததும், அவளது குரல், சிரிப்பு, பாடல்கள், அவளது அசட்டுத்தனமான பாவனைகள் ஒவ்வொன்றாக ஒலித்தன.
வீடியோவில் அவள் குரல் ஒலித்த போது அவன் உதடுகளில் ஒரு பலவீனமான புன்னகை உருவானது.
“ஆர்யன்! என்ன ரெகார்ட் பண்றத நிறுத்துங்க, இல்ல உங்க மொபைல தூக்கி எறிஞ்சுடுவேன் “ என்று அவள் குரல் வீடியோவில் ஒலிக்க ஆர்யன் கண்ணீரின் ஊடே மெல்லச் சிரித்தான்.
“நான் கற்பன கூட பண்ணவே இல்ல சஞ்சு… யாராவது எனக்கு இவ்ளோ முக்கியமானவங்களா இருப்பாங்கனு. நீ இனி என் வாழ்க்கையோட ஒரு பகுதி மட்டும் இல்ல… நீ தான் என் வாழ்க்கை.” என்று அவளை பார்த்து முணுமுணுத்தான்.
நேரம் ஆக ஆக அவனை களைப்பு ஆட்கொண்டது. வலி, அழுகை, தூக்கமில்லாத இரவு—இவை அனைத்தும் அவனைப் பற்றிக்கொண்டதால் அவளுடைய சால்வையை பிடித்துக் கொண்டு அவன் சோபாவில் தூங்கிவிட்டான்.
மேஜையில் இருந்த உணவு தொடப்படாமல் இருந்தது. அவள் இல்லாததால் அவனது பசியும் காணாமல் போயிருந்தது. தூக்கத்தில் கூட அவள் அவனிடம் வந்தாள், அவள் முகம், குரல், ஸ்பரிசம் என் அவள் நினைவில் தத்தளித்தான். தன் கண் முன்னே அவள் மறைந்து போவதை அப்போது தான் பார்த்தவன் போல மூச்சிரைக்க விழித்துக்கொண்டான். சட்டென மொபைலை எடுத்து நேரத்தை பார்த்த போது தான் அவன் மூன்று மணி நேரத்துக்கு மேலாக உறங்கிவிட்டான் என்று உணர்ந்தான். மீண்டும் பதற்றம் தலைக்கேறியதும் அவன் ரஞ்சித்துக்கு போன் செய்தான்.
“சார்” என்று முதல் ரிங்கில் எடுத்தான் ரஞ்சித்.
“ரஞ்சித்… சஞ்சு எப்படி இருக்கா?” ஆர்யன் அவசரமாகக் கேட்டான்.
“இப்பதான் எழுந்தா சார். ஆனாலும் ரொம்ப களைச்சு போயிருக்கா ” என்று ரஞ்சித் சொன்னதும், “ டாக்டர் கிட்ட சொல்லி அவள தொடர்ந்து கண்காணிக்கச் சொன்னியா ?” என்று ஆர்யன் கேட்டான்.
ஆர்யனின் கவலையை புரிந்து கொண்ட ரஞ்சித், “ஆமா சார். டாக்டர் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தாரு. சஞ்சு நல்லா இருக்கா, நிறைய ரெஸ்ட் வேணும்னு சொன்னாரு “ என்று கூறினான்.
” சரி… எல்லாத்தையும் கவனிச்சுக்க அப்புறம் ” என்று ஆர்யன் இழுக்க, “ சொல்லுங்க சார் “ என்றான் ரஞ்சித்.
” ரஞ்சித்… அவ .. என்ன பத்தி கேட்டாளா ?” என்று ஆர்யன் தணிந்த குரலில் கேட்க ரஞ்சித்தால் பொய் சொல்ல முடியவில்லை. சற்று இடைவெளி விட்டு மெல்லிய குரலில், “இல்லங்க சார். ” என்றான்.
ஆர்யனின் இதயம் நொறுங்கியது. “சரி. நீ அவ கூடவே இரு. ஏதாவது மாற்றம் இருந்தா என்ன கூப்பிடு ” என்று சொல்லி ஆர்யன் அழைப்பை துண்டித்தான்.
அழைப்பு முடிந்ததும், கட்டிலில் படுத்திருந்த சஞ்சு, ரஞ்சித்தை ஒரு பார்வை பார்த்தாள். அழைப்பின் போது அவள் அவன் முகத்தைப் கவனிக்க தவறவில்லை, அவனது முகபாவம் மிகவும் கவலையாக இருந்தது. சஞ்சு ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அவர்களுக்கிடையேயான மௌனம் பலமாக இருந்தது.
கௌசல்யா அறையின் மறுபுறம் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதுவும் கேட்கவில்லை, ஆனால் அவர் கண்கள் ரஞ்சித்தின் கண்களை சந்தித்தன. ஆர்யனுக்கும் சஞ்சுவுக்கும் இடையிலான பிணைப்பில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்றும், அது மேலும் விரிசல் அடைவதற்குள் ஏதேனும் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டார்.
ஆரியனின் மனம் புயலாக இருந்தது. உண்ணவோ தூங்கவோ முடியாமல், அமைதியற்ற ஆத்மாவைப் போல அவன் மேன்ஷனை சுற்றி நடந்து கொண்டிருந்தான். உடல் ரீதியாக காயமடைந்து, மனதளவில் காயமடைந்த சஞ்சுவைப் பற்றிய எண்ணம் அவன் மனதை ஒரு கத்தி போல கிழித்தது. அவள் அனுபவித்த வேதனைக்காக அவனால் தன்னைத்தானே மன்னிக்க முடியாமல் அவளுடைய வலியின் பிம்பம் அவன் எண்ணங்களில் சுழன்று விளையாடியது.
இதற்கிடையில், மருத்துவமனையில் மாலை சூரியன் ஜன்னல் வழியாக சாய்ந்த நேரம் கௌசல்யா, சஞ்சுவை படுக்கையில் உட்கார மெதுவாக உதவினார்.
” இந்தா கண்ணா, கொஞ்சம் குடி அப்போ தான் உனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் ” என்று சொல்லி ஆவி பறக்கும் காபி கோப்பையை கையில் நீட்டியபடி சஞ்சுவை பார்த்து புன்னகைத்தார். சஞ்சு பலவீனமாக தலையசைத்து , கோப்பையை நடுங்கும் கைகளில் வாங்கிய போது கதவு திறந்து, பவி கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தாள்.
“ஏய் சஞ்சு! உனக்கு என்ன ஆச்சு ? இது எப்படி நடந்துச்சு ?” என்று வியந்து கொண்டே அவளருகில் ஓடி வந்தாள்.
சஞ்சு மெல்லிய புன்னகையை, “அதெல்லாம் ஒண்ணுமில்ல பவி. நான் அலட்சியமா இருந்துட்டேன்.. ரோடு கிராஸ் பண்ணும் போது கார் வந்தத பார்க்கல “ என்று சொல்லி சமாளித்துக் கொண்டாள். ஆனால் அதை கேட்ட பவியின் கண்கள் விரிந்தன. ” ரொம்ப சாதாரணமா சொல்ற! இது எவ்ளோ பயங்கரமானதுனு உனக்கு புரியுதா ? “ என்று கேட்டாள்.
சஞ்சு பெருமூச்சு விட்டு, ” அத விடு, நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும் ? “ என்று கேட்டாள். அதற்கு பவி உடனே, “ உன் நம்பருக்கு கால் பண்ணினேன்” ஆனா ரஞ்சித் சார் பதில் சொன்னாரு. அப்போ தான் அவர் சொன்னாரு. நான் ஆபீஸ்ல இருந்தேன் அதனால என்னால வர முடியல அதான் இப்போ இப்போ வந்தேன் “ என்று பவி விளக்கமாக கூறினாள்.
சஞ்சு சரி என்று தலையசைத்ததும் கௌசல்யா புன்னகையுடன் எழுந்து நின்று, “சஞ்சு, நான் வெளியில இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க “ என்று கூறினார். அப்போது தான் அவரை பார்த்த பவி குழப்பத்துடன்,” நீங்க யாரு, ஆண்டி ? ” என்று கேட்டாள்.
சஞ்சுவின் இதயம் ஒரு துடிப்பை நிறுத்தியது. பவியின் கேள்வி அவளை பதட்டப்படுத்தியது. ஆனால் அவள் பதில் சொல்வதற்குள் கௌசல்யா, “ நான் ஆர்யன் சார் வீட்ல ரொம்ப வருஷமாவ் வேலை செய்றேன். சஞ்சு எனக்கு பொண்ணு மாதிரி “ என்று அமைதியான கண்ணியத்துடன் பேசினார்.
கௌசல்யா சொல்லி முடித்ததும் சஞ்சு அதிர்சியில் கண்களை மூடிக் கொண்டாள். அது அவள் பகிர்ந்து கொள்ள திட்டமிட்ட விஷயமல்ல. குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த கலவையுடன் அவளைப் பார்த்த பவியைப் பார்த்தாள்.
” இருங்க… என்ன சொல்றாங்க ?இவங்க ஆர்யன் சார் வீட்ல வேலை செய்றாங்களா ? அப்புறம் நீ இவங்க பொண்ணு மாதிரி சொல்றாங்க ? எனக்கு ஒண்ணுமே புரியல. சஞ்சு, தயவு செஞ்சு என்ன நடக்குதுனு சொல்லு “ என்று பவி கேட்க, சஞ்சு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீழே பார்த்தாள். ” பவி… எல்லாத்தையும் சொல்றேன், ஆனா ப்ளீஸ்… அதுக்கு அப்புறம் நீ எந்த கேள்வியும் கேட்க கூடாது. நான் இப்போ எந்த கேள்விக்கும் பதில் சொல்ற நிலையில இல்ல “ என்றாள் சஞ்சு.
பவி முகம் சுளித்தாலும், மனம் தளர்ந்து ” சரி, சொல்லு எனக்கு டென்ஷன் ஆகுது “ என்று கூறினாள்.
சஞ்சு ஆழமாக மூச்சை இழுத்தாள், அதன் பின்னர் பவியை பார்த்து, “ ARCயில வேலைக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்கு ஆர்யன தெரியும். நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல தான் இருக்கோம் “ என்று சஞ்சு சொன்னதும், “ என்னது ? “ என்று கேட்டு பவி அதிர்ச்சியில் கண்களை சிமிட்டினாள்.
பவி அதிர்ச்சியில் இருக்கையில் இருந்து எழுந்து நின்று, “ சஞ்சு, என்ன சொல்ற ? நீங்க ஒரே வீட்ல இருக்கீங்களா ? இதுக்கு என்ன அர்த்தம் ? “ என்று கேட்க, உடனே சஞ்சு அவளை பார்த்து, “ பவி, இப்ப எதுவும் கேட்க வேண்டாம்னு சொன்னேன்” என்று சஞ்சு குறுக்கிட்டாள்.
பவி கைகளை உயர்த்தி, ” சரி, சரி கேள்வி கேட்கல ஆனா நான் சொன்னது சரி தானே ? உனக்கு ஆர்யன் சார்கும் நடுவுல ஏதோ இருக்கு தானே ? ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் “ என்று மகிழ்ச்சியோடு சொன்னாள்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சஞ்சுவின் கண்களில் கண்ணீர் பெருகியது. வேதனையிலும் மௌனத்திலும் சிக்கித் தவிக்கும் ஒரு காதலுக்காக இன்னொருவர் சந்தோஷப்படுவதைக் கேட்பது விசித்திரமாக இருந்தது.
“ஏய், ஏன் அழற ? நான் ஏதாவது தப்பா சொல்லிவிட்டேனா ? ” என்று பவி அவள் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் கேட்டாள். அதற்கு சஞ்சு தலையை ஆட்டி, ” இல்ல… அப்படி எதுவும் இல்ல, சும்மா மனசு கொஞ்சம் சரி இல்ல, ஆனா பெருசா ஒண்ணுமில்ல “ என்று சொன்னாள்.
பவி மென்மையாகப் புன்னகைத்தாள். ” அது சரி, நீ இங்க இப்படி இருக்க, உன் ஆளு எங்க ? “ என்று கேட்டதும், “ அவர் ஆபீஸ் வரலையா ? “ என்று கேட்டு சஞ்சு முகம் சுளித்தாள்.
” உன்னோட அவரு ஆபீஸ் வரல, நீ என்கிட்ட கேட்குற ? ஏன் உனக்கு தெரியாதா ? எங்க அவரு ? “ என்று கிண்டலடித்தாள் பவி.
” ஒருவேளை அவர் வீட்டில் இருப்பாரு போல ” என்றாள் சஞ்சு அமைதியாக.
பவி விளையாட்டாக கண்களைச் சுருக்கி, ” பாவி மகளே, ஒண்ணுமே தெரியாத பொண்ணு மாதிரி இருந்துட்டு எவ்ளோ வேலை பாக்குற நீ. சரி, உன் கிட்ட நான் நிறைய பேசணும். உனக்கு சீக்கிரம் சரி ஆகட்டும் அதுக்கு அப்புறம் உன் கிட்ட நிறைய கேள்வி கேட்குறேன் “ என்று சொல்ல, சஞ்சுவும் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, “எனக்கும் நிறைய கேள்விகள் இருக்கு…” என்று முனுமுனுத்தாள்.
” என்னடி தனியா பேசுற ?” என்று பவி கேட்க, ” ஒண்ணுமில்ல பவி. சரி நான் ஆபீஸ் வந்ததும் பேசலாம் “ என்றாள் சஞ்சு.
” சரி, நீ ஜாக்கிரதையா இரு, நான் நாளைக்கு வந்து உன்ன பாக்குறேன் “ என்று பவி சொல்ல, “ நீ ஏன் இப்படி கஷ்ட்டபடுற பவி. நான் சீக்கிரம் வந்து உன்ன பாக்குறேன் “ என்றாள் சஞ்சு.
பவி சென்ற பிறகு, சஞ்சு தலையணையில் சாய்ந்தாள், அவள் மனதில் ஆர்யன் பற்றிய நினைவுகள் மற்றும் வலி நிரம்பி வழிந்தன.
“ஆர்யன்… உனக்கு என் மேல நம்பிக்க இல்லையா ? அந்தப் பொண்ண பத்தி நீ என் கிட்ட சொல்லி இருந்தா எனக்குப் புரியாதுனு நெனச்சீங்களா ? நீங்க என்ன நம்பாம என்ன காயப்படுத்திட்டீங்க. . ஒருவேள நீங்க என் கிட்ட சொல்லி இருந்தா அவ உங்கள என் முன்னாடியே கட்டிபுடிக்கும் போது நான் காயப்பட்டு இருக்க மாட்டேன். உங்கள கட்டிப்புடிக்குற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்குனு நெனச்சேன் ஆனா அவ உங்கள கட்டிப்புடிச்சதும் என் மனசு உடைஞ்சு போச்சு. என்ன மன்னிச்சிடுங்க ஆர்யன். நான் உங்கள புறக்கணிச்சது உங்கள காயப்படுத்தி இருக்கும்னு எனக்குத் தெரியும் ஆனா என்னால கோபத்த அடக்க முடியல. நீங்க என்ன நம்பாம இருந்தத என்னால தாங்க முடியல ” என்று மனதில் நினைத்துக் கொண்டே கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தாள்.
அறைக்கு வெளியே மேன்ஷனில் இருந்து பாலாவுடன் ரஞ்சித் பேசிக் கொண்டிருந்தான்.
” சொல்லு பாலா என்ன விஷயம் ?” என்று ரஞ்சித் கேட்டதும், ” சார், ஆர்யன் சார் ஒண்ணுமே சாப்பிடல. அவருக்காக கொண்டு போன சாப்பாடு எல்லாம் தொடாம அப்படியே இருக்கு.அவர் தண்ணி கூட குடிக்கல ” என்று பாலா கவலை கலந்த குரலில் கூறினார்.
பாலாவின் வார்த்தையை கேட்ட ரஞ்சித் பெருமூச்சு விட்டான். ” இருக்கட்டும் பாலா. அவரை தொந்தரவு செய்யாத. நான் பார்த்துக்குறேன் ” என்றான்.
பாலாவின் அழைப்பை முடித்துவிட்டு ரஞ்சித் கௌசல்யா மா பக்கம் திரும்பி அவரிடம் பாலா சொன்னதை பற்றி கூறினான்.
” இதை இப்படியே விடக் கூடாது ரஞ்சித், இது சரி வராது ” என்று கௌசல்யா சொல்ல, “ நீங்க சொல்றது சரி தான். நான் சஞ்சு கிட்ட பேசறேன், நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க ” என்று சொல்லிவிட்டு ரஞ்சித் அறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்த போது, சஞ்சு யோசனையில் ஆழ்ந்தவளாக வெறுமையாக கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சஞ்சு…” என்று ரஞ்சித் அழைத்ததும், ” சொல்லுங்க அண்ணா ” என்றாள் சற்றே திடுக்கிட்டவள்.
” நாம கொஞ்சம் பேசலாமா?” என்று ரஞ்சித் கேட்க, “ உங்க சார் பத்தி இல்லனா, நாம பேசலாம் “ என்று சஞ்சு கூறினாள்.
” இது அவர பத்தி இல்ல ஆனா உங்க ரெண்டு பேர பத்தி சில விஷயம் சொல்லணும். உண்மைய சொல்லனும்னா சார் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காரு ஆனா இப்போ இருக்க நிலமைய பாத்துட்டு என்னால சொல்லாம இருக்க முடியல “ என்று சொல்லி ரஞ்சித் ஒரு நாற்காலியை அவள் கட்டிலில் அருகில் போட்டு அமர்ந்தான்.
சஞ்சுவுக்கு அவன் வார்த்தையை கேட்டு குழப்பமாக இருந்தது. ” என்ன சொல்ல வர்றீங்க?” என்று அவள் கேட்க, “ உனக்கு ஆர்யன் சார் எவ்ளோ நாளா தெரியும் ?” என்று ரஞ்சித் அமைதியாகக் கேட்டான்.
சஞ்சு இப்போது அவனை மேலும் குழப்பத்துடன் பார்த்து, ” இது என்ன கேள்வி ? நான் ஆர்யன் மேன்ஷன் வந்ததுல இருந்து தான் அவர தெரியும் “ என்று பதில் கூறினாள்.
ரஞ்சித் தலையசைத்து, ” நீ மேன்ஷன் வந்து ஏழு மாசம் ஆகுது ஆனா அவருக்கும் எனக்கும் உன்ன ஒரு வருஷத்துக்கு மேல தெரியும் “ என்று ரஞ்சித் சொல்ல,” என்ன ? என்ன சொல்றீங்க ? எப்படி ? ” என்று கேட்டு சஞ்சு அதிர்ச்சியுடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
ரஞ்சித் சோகமாகச் சிரித்தான். ” அவர் உன்ன முதல் முறை எமரால்டு ரிசார்ட்ல பார்த்தாரு. நீ அங்க உன்னோட friends கூட இருந்த “ என்று ரஞ்சித் சொன்னதும் அந்த நாளை நினைத்து பார்த்த சஞ்சு, “ ஆமா, நான் friend பிறந்த நாளுக்காக அங்க போய் இருந்தேன் “ என்று கூறினாள்.
“ அப்போ தான் நாங்க உன்ன முதல் முறை பார்த்தோம். அன்னைக்கு தான் ஆர்யன் சார் முதல் முறை சிரிச்சு நான் பார்த்தேன். அதுக்கு அப்புறம் உன்ன மறுபடியும் உன் friends கூட பீச்ல பார்த்தோம். நீ ஐஸ் கிரீம் சாப்டுட்டு இருந்த. அப்போ தான் சார் உன்ன பத்தி எல்லா தகவலும் கண்டு புடிக்க சொன்னாரு “ என்று ரஞ்சித் சொன்னதும் சஞ்சுவின் இதயம் ஒரு துடிப்பை நிறுத்தியது போல உணர்ந்தாள்.
“ நான் உன்ன பத்தி தகவல சொன்ன அப்புறம், அந்த நொடியில இருந்து, நாங்க உனக்கு தெரியாம ஆளுங்கள வெச்சு உன்ன பின் தொடர்ந்து, நீ பாதுக்காப்பா இருக்குறத உறதி பண்ணோம். ஆர்யன் சார் உன்ன பத்தி ஒவ்வொரு விஷயமும் தெரிஞ்சி வெச்சுருந்தாரு. சில சமயம் அவரே உன்ன தேடி வருவாரு, வந்து உன்னையே பாத்துட்டு இருப்பாரு. யாரும் அவர அடையாளம் கண்டுபுடிக்கமா இருக்க மாஸ்க் போட்டு உன் பின்னாடி வருவாரு. உனக்கு புடிச்சது, புடிக்காதது எல்லாமே தெரிஞ்சிக்கிட்டாரு. அது மட்டும் இல்ல உன்னோட friends, குடும்பத்த பத்தி கூட தெரிஞ்சி வெச்சுருந்தாரு. அந்த நாட்கள் அவர் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. அப்படியே ஒரு காலேஜ் பையன் மாதிரி வாழ்ந்துட்டு இருந்தாரு. நீ சிரிச்சா அவரும் சிரிப்பாரு, யாராவது உன்ன காயப்படுத்தினா அவங்கள கொஞ்சம் கூட இறக்கம் இல்லம் தண்டிச்சாரு “ என்று ரஞ்சித் சொன்னதையெல்லாம் கேட்டு சஞ்சுவின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தன.
“அப்புறம் உன் அப்பா…மிஸ்டர். கிருஷ்ணன்… அவர கூட நாங்க பாதுக்காப்பா இருக்குறத உறுதி பண்ணோம். ஆனா உன் அப்பா ரொம்ப புத்திசாலி, எங்கள கண்டுபுடிச்சு ஆர்யன் சார உங்க வீட்டுக்கு வர சொன்னாரு. அவங்க ரொம்ப நேரம் பேசினாங்க, உன் அப்பாவுக்கு ஆர்யன் சார ரொம்ப புடிச்சுது ஆனா ஆர்யன் சார், உன் அப்பா கிட்ட அவர பத்தி உன் கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு. நீ படிச்சு முடிக்குர வர வெயிட் பண்ண சொன்னாரு “ என்று ரஞ்சித் சொல்ல சஞ்சு மேலும் கண்ணீர் வடித்தாள்.
” அப்புறம் ஒரு நாள் உன் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அவர பின் தொடர்ந்த எங்க ஆளுங்க அவர உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க, எங்களுக்கும் தகவல் சொன்னாங்க. நாங்க உடனே ஹாஸ்பிடல் வந்தோம். உன் அப்பா, ஆர்யன் சார ICUவுல கூப்டுட்டு பேசினாரு. உன்ன கடைசி வரைக்கும் பாத்துக்க சொல்லி உன் அப்பா சார் கிட்ட சத்தியம் வாங்கினாரு. ஆர்யன் சார் கையில தான் உன் அப்பா கடைசி மூச்சு விட்டாரு “ என்று ரஞ்சித் சொன்னதும் சஞ்சுவின் உதடுகள் துடித்தன.
“நீ ஹாஸ்பிடல் வந்து உன் அப்பா பத்தி தெரிஞ்சதும் மயங்கி விழுந்துட்ட அப்போ ஆர்யன் சார் தான் தூக்கிட்டு போய் ரூம்ல படுக்க வெச்சாரு. உனக்கு சுயநினைவு வர்றதுக்கு முன்னாடி உன் friend கீர்த்திய வர சொல்லி உன்ன பாத்துக்க சொன்னாரு. அதுவும் இல்லாம உன்னோட மாமா பையன் பிரதீப் எந்த பிரச்சனையும் பண்ண கூடாதுனு அவன அர்ரெஸ்ட் பண்ண வெச்சாரு. உன் அப்பாவோட கடைசி காரியம் எல்லாத்தையும் என்ன ஏற்பாடு செய்ய சொன்னாரு. நீ வீட்ல இருந்த அப்போ கூட கீர்த்தி மூலமா நீ எப்படி இருக்கனு தெரிஞ்சிக்குவாரு. கீர்த்தியோட மொபைல் கேமரா வழியா உன்ன தினமும் பாத்துட்டு இருப்பாரு. எவ்ளோ முக்கியமான வேல இருந்தாலும் உன்ன பத்தி நெனச்சுட்டு இருப்பாரு . கீர்த்தி கிட்ட கூட அவர பத்தி சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு. பிரதீப் பிரச்சன பண்ண அப்போ கீர்த்திய அவ குடும்பத்தோட பாதுக்காப்பா வேற இடத்துக்கு அனுப்பி வெச்சாரு. அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே “ என்று ரஞ்சித் அனைத்தையும் சொல்லி முடித்தான்.
சஞ்சு உறைந்து போய் அமர்ந்திருந்தாள். ” இப்போ கூட நிறைய பேரு உன்ன காயப்படுத்த விரும்புறாங்க அதனால தான் உன்ன வெளிய போக விடாம பாதுக்காத்து வெச்சுருந்தாரு. அது மட்டும் இல்ல, அந்த பொண்ணு பேரு சுனிதா, அவள பத்தியும் எனக்கு தெரியும் ஆனா அத நீ அவர் கிட்ட இருந்து தெரிஞ்சிக்கணும்னு நான் நினைக்குறேன் . தயவு செஞ்சு அவருக்கு அந்த வாய்ப்பு கொடு. நேத்து உனக்கு ஆக்சிடென்ட் ஆன அப்போ அவர் உடைஞ்சு போய் அழுதாரு. அவர் அப்படி அழுது நான் பார்த்ததே இல்ல. இப்போ வர அவர் எதுவும் சாப்பிடல, தண்ணி கூட குடிக்கல. நேத்து நைட்டு முழுக்க உன் பக்கத்துல தான் இருந்தாரு. அவர மன்னிச்சு ஒரு வாய்ப்பு கொடு “ என்று ரஞ்சித் சொன்னதும் சஞ்சுவின் கண்களில் இருந்து கண்ணீர் தாராளமாக உருண்டோடியது.
**********************************************
முன்னோட்டம்:
“சஞ்சு… சஞ்சு, என்ன பாரு, இதோ நான் வந்துட்டேன் ஸ்வீட் ஹார்ட் “

1 comment
[…] Chapter 26 […]