Home FamilyChapter 36

Chapter 36

by Siragugal Novels
17 views

மாயா கொடுத்த கவரில் இருந்த புகைப்படங்களை பார்த்து சஞ்சு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். மேன்ஷனில் அவளும், ஆர்யனும் இருந்த நெருக்கமான தருணங்களை போட்டோவில் பார்த்து அதிர்ச்சியானாள். கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல், சுனித மேன்ஷனுக்கு வந்த நாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை என்று சஞ்சு நன்கு அறிந்து கொண்டாள்.    

சஞ்சுவின் எதிர்வினையை பார்த்து மாயா தன் கூந்தலை சிலுப்பினாள். அவளது புன்னகை திருப்தியால் ஆழமானது. ஆனால் சஞ்சுவின் அதிர்ச்சி வந்த வேகத்திலேயே கரைந்து போனது. அவள் தன் கண்களைச் சுருக்கி, அமைதியான நளினத்துடன் மீண்டும் உட்கார்ந்து, கால் மேல் கால் போட்டு, மாயாவை பார்த்து ஏளனமான புன்னகையை உதிர்த்தாள்.

” நீ எதிர்பார்த்த மாதிரி நான் அதிர்ச்சியா ரியாக்ட் பண்ணேனா மாயா ? சரி என் நடிப்பு எப்படி இருந்துச்சு சொல்லு “ என்று கூலாக கேட்டபடி சஞ்சு அந்த படங்களை கையில் ஏந்தி மாயாவை பார்த்தாள்.

“ஏய், இதோ பாரு, உனக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு, அத நான் உனக்கு தரேன். பணத்த வாங்கிட்டு ஒழுங்கா இங்க இருந்து, ஆர்யன விட்டு போ இல்லனா, இந்த போட்டோ எல்லாமே சோசியல் மீடியாவுல போடுவேன். நீ அசிங்கப்படுவ, வெளிய தல காட்ட முடியாதபடி செஞ்சிடுவேன். புத்திசாலித்தனமா இருந்து நான் சொல்ற மாதிரி பணத்த வாங்கிட்டு போற வழிய பாரு “ என்று மாயா மிரட்டியதும்,  சஞ்சு வறண்ட சிரிப்பை உதிர்த்தாள்.

” ஸ்டாப் இட் மாயா. என்ன பத்தி நீ என்ன நெனச்ச ? நீ கொடுக்குற பணத்த வாங்கிட்டு உனக்கு நான் சல்யுட் போடுவேன்னு நெனச்சியா ? நீ இப்போ என் வீட்ல் இருக்க, அதனால பேசுற வார்த்தைய பார்த்து பேசு “ என்று சொன்ன சஞ்சுவின் குரல் கூர்மையாக இருந்தது.

சற்று இடைவெளிவிட்ட சஞ்சுவின் கண்கள் மீண்டும் அந்த புகைப்படங்களை ஆராய்ந்தன. ” சரி இப்போ விஷயத்துக்கு வருவோம், இந்த போட்டோ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு, இத கொண்டு வந்து கொடுத்ததுக்கு நன்றி. இத நானே வெச்சுக்குறேன், எப்படியும் உன் கிட்ட இதோட ஒரிஜினல் இருக்கும், அதுல இருந்து நிறைய நகல் எடுத்துக்கோ “ என்று சொன்ன சஞ்சு பின்னர் அவளை ஏளனமாக பார்த்து, “ அப்புறம், நீ இதையெல்லாம் எந்த சோசியல் மீடியாவுல வேணும்னாலும் போடு. எனக்கு அத பத்தி கொஞ்சம் கூட கவலை இல்ல. உண்மைய சொல்ல போனா, அப்படி பண்றதால நீ எனக்கு உதவி தான் செய்வ. எங்க உறவ பத்தி எல்லாருக்கும் தெரியப்படுத்த நீயே உதவி பண்ணதா நெனச்சுக்குறேன் “ என்று புன்னகையோடு சொன்னாள்.

“சஞ்சனா, உன் நல்லதுக்காக தான் சொல்றேன், நீ உயிரோட இருக்க நெனச்சா, நான் சொல்றத கேளு “ என்று மாயா எச்சரித்தாள், அவள் குரல் அபாயகரமாக தாழ்ந்தது.  

” என் வாழ்க்கையே ஆர்யன் தான், தேவையில்லாம அவரோட கோவத்த சம்பாதிக்காத “ என்று உறுதியாகச் சொன்ன சஞ்சு சோபாவிலிருந்து எழுந்தாள்.

“ ஆர்யனுக்கு எந்த வகையில நீ பொருத்தமானவனு நினைக்குற ? உனக்கு என்ன தகுதி இருக்கு ? உன்னால என் பக்கத்துல கூட நிற்க முடியாது, நான் ஒரு கோட்டீஸ்வரி, உன்ன விட அழகானவ, நான் ஒரு தொழிலதிபர். ஆர்யனுக்கு எல்லா வகையிலையும் நான் தான் பொருத்தமானவ “ என்று மாயா கத்தி கூச்சலிட்டாள். ஆனால் அதை பற்றி சிறிதும் கவலை இல்லாமல், சஞ்சு அவளை பார்த்து புன்னகைத்தாள்.

” நான் அழகா இல்லாம இருக்கலாம், நான் பணக்காரியா இல்லாம இருக்கலாம், ஏன் நான் ஒரு தொழிலதிபர் கூட இல்ல ஆனா உன்கிட்ட இல்லாத ஒரு விஷயம் என்கிட்ட இருக்கு.” என்று சஞ்சு சொன்ன போது அவள் குரலில் ஒரு அமைதியான நம்பிக்கை இருந்தது.

” என் கிட்ட இல்லாதது அப்படி என்ன உன்கிட்ட இருக்கு ? “ என்று மாயா சீறினாள் அதற்கு சஞ்சு தன் பார்வையை விலக்காமல் அவள் அருகில் சென்று, ” ஆமா, இருக்கு மாயா. அவரோட லவ், அது உனக்கு சொந்தம் இல்ல. அவர் என்ன தான் லவ் பண்றாரு, நானும் அவர லவ் பண்றேன்.” என்று அமைதியாக சொன்னவள், “ இதோட நாம பேச வேண்டியது எல்லாம் முடிஞ்சுது, நீ இப்போ கிளம்பலாம்.” என்று உத்தரவிடுவது போல கூறினாள்.

மாயா கோவத்தில் நிற்க, சஞ்சு சற்று இடைவெளி விட்டு, ” இனிமே நீ அவர மிஸ்டர் சைதன்யா சொல்லி கூப்பிடுறது தான் நல்லது, ஏன்னா அவருக்கு என்ன தவிர வேற யாரும் ஆர்யன் சொல்லி கூப்பிடுறது புடிக்காது. நான் அவர பெயர் சொல்லி கூப்பிடும் போது செக்ஸியா இருக்கும்னு சொல்லுவாரு “ என்று சொல்லி கண்ணடித்தாள்.  

சஞ்சுவின் வார்த்தையை கேட்டதும் மாயாயின் முகம் இருண்டது. ” ரெடியா இரு மிஸ் சஞ்சனா. உன் வாழ்க்கையோட மோசமான கட்டம் இப்போ தொடங்க போகுது “ என்று சொன்னாள், அப்போது, “ சஞ்சனா “ என்று ஆர்யனின் குரல் மாடியிலிருந்து எதிரொலித்தது.

சஞ்சு மெல்ல திரும்பி, “ வரேன் ஆர்யன் “ என்று சொன்ன போது அவளுடைய புன்னகை இப்போது வெற்றிப் புன்னகையாக இருந்தது.

பிறகு மாயாவிடம் திரும்பி, ” பார்த்தியா? என்ன ஒரு அஞ்சு நிமிஷம் கூட தனியா விடமாட்டாரு அதனால நான் இப்போ கிளம்புறேன். நாம அப்புறம் பார்க்கலாம்.” என்று சொன்னவள் பின்னர் அருகில் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டிருந்த ரஞ்சித்தை பார்த்து, “ ரஞ்சித் அண்ணா, மாயாவ வழி அனுப்புங்க ” என்று சொன்னாள்.

மாயாவை மீண்டும் ஒரு பார்வை கூட பார்க்காமல் சஞ்சு தன் அறையை நோக்கி நடந்தாள்.

“ நீ என் வழியில குறுக்கிட்டு பெரிய தப்பு பண்ணிட்ட சஞ்சனா. இப்போ பேசுனது, நீ நடந்துகிட்டது எல்லாத்துக்கும் சேர்த்து நீ பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் “ என்று மனதில் யோசித்துக் கொண்டே மாயா திரும்பி ஆர்யன் மேன்ஷனை விட்டு வெளியேறினாள்.

முதல் மாடியில் இருந்த அவர்களின் அறைக்குள் சஞ்சு நுழைந்ததும் ஆர்யன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

” மேடம் ரொம்ப பிஸியா இருந்தீங்க போல “ என்று கேட்ட ஆர்யனின் முகத்தில் ஒரு வேடிக்கையான புன்னகை தவழ்ந்தது. “ உங்களுக்கு ஏற்கனவே பதில் தெரிஞ்சிருந்தா என்ன கேள்வி கேட்காதீங்க,” என்று சஞ்சு பதில் சொன்னபடி அறையின் கதவை மூடினாள்.

” நல்லா இருக்கு, என்னோட இந்த பயந்து நடுங்கிட்டு இருந்த வீட்டு பூனை இப்போ காட்டு பூனையா மாறி இருக்குறத பார்க்க “ என்று ஆர்யன் கிண்டல் செய்தான் அதற்கு சஞ்சு அவன் மீசையை முறுக்கி கொண்டே, ” ஏன் எனக்கு தைரியம் வராது ? என் பாஸ்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன் “ என்று சொல்லி கண்ணடித்தாள்.

” உன் பாஸ் உனக்கு நிறைய சொல்லிக் கொடுத்துருக்காரு, நல்ல விஷயம் தான் “ என்று கிண்டலடித்தவான், ” அவர் இன்னும் வேற என்ன கத்து கொடுத்தாரு ? ” என்று குறும்பு பார்வை மற்றும் புன்னகையுடன் கேட்டான்.

” அவர மாதிரியே குறும்பு செய்ற அளவுக்கு அவர் என்ன கெடுத்து வெச்சுருக்காரு ” என்று சொல்லி அவள் அவனை அணைத்துக் கொண்டதும், ஆர்யன் அவளை அரவணைத்து அணைத்துக் கொண்டான்.

“ ஸ்வீட் ஹார்ட், நம்ம ரெண்டு பேரையும் மட்டும் நம்பு, வேற எதையும் நெனச்சு வருத்தப்படாத, ஆர்யன் இருக்கான் உன் கூட “ என்று ஆர்யன் அவள் கூந்தளின் வாசத்தை முகர்ந்தபடி  கிசுகிசுத்தான், அதற்கு சஞ்சு “ஹ்ம்ம்… சரி” என்றாள் மென்மையாக.

ஆர்யன் அவள் கழுத்தில் மென்மையாக முத்தமிட்டு அவள் கழுத்து வளைவில் இருந்து வந்த வாசனையை முகர்ந்தான்.

” ஆர்யன், பார்ட்டிக்கான பிளான் என்ன?” என்று சஞ்சு கேட்டதும், அவன் அவள் முகத்தைப் பார்த்து, அவள் கன்னங்களைக் கடந்து, அவள் நெற்றியில் முத்தமிட்டான். பின் அவள் உதடுகளை முத்தமிட்டு, ” நீ என்ன செய்யணும்னு நினைக்குற ?” என்று கேட்டான்.

” நம்ம ஹோட்டல் ரூம்ல நான் என் காஸ்ட்யூம் வெச்சுருக்கேன் “ என்று சஞ்சு சொல்ல, ” அப்போ நீ வீட்ல இரு, ரஞ்சித் கிட்ட சொல்லி உன்ன ஹோட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்றேன். நீ அங்க இருந்தே ரெடியாகு, ரம்யா கிட்ட டைம் மட்டும் சொல்லிடு “ என்று ஆர்யன் கூறினான். அதற்கு சரி என்று சொன்ன சஞ்சு, “ அப்போ நீ எப்போ வருவ ?”என்று அவனிடம் கேட்டாள்.

” நீ உன்னோட காஸ்ட்யூம் எனக்கு சர்ப்ரைஸ் சொன்ன மாதிரி நானும் உன்ன சர்ப்ரைஸ் பண்ண முயற்சி செய்றேன் அதனால நீயும் என்ன பார்டியில பார்க்கலாம் “ என்று ஆர்யன் சொன்னதும், கண்களில் ஆச்சரியம் மற்றும் உற்சாகம் மின்ன சரி என்று கூறினாள் சஞ்சு.  

நேரம் வேகமாக கடந்து போனது, பார்ட்டி தினத்தன்று ஆர்யன் ரஞ்சித்துடன் அலுவலகம் கிளம்பினான்.

“ரஞ்சித், பார்ட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி செக்யூரிட்டி ஏற்பாடுகளை செக் பண்ணு” என்று ஆர்யன் சொன்னதும், “ கண்டிப்பா சார்.” என்றான் ரஞ்சித். 

” நீ சஞ்சுவ ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறதோட மட்டும் இல்லாம அவ பாதுகாப்பா இருக்குறத உறுதி செய். எந்நேரமும் ரூமுக்கு வெளிய கார்ட்ஸ் இருக்கணும் “ என்று ஆர்யன் கண்டிப்பான உத்தரவு போட்டான்.

ஆர்யனின் கவலையை புரிந்து கொண்ட ரஞ்சித், “சார், ரிலாக்ஸ். நான் பார்த்துக்குறேன் ” என்றான். அதற்கு ஆர்யன் அவனிடம், ” நீ எல்லாத்தையும் சரியா செய்வனு எனக்குத் தெரியும்.” என்று புன்னகையோடு சொன்னான்.

ஆர்யன் ஒரு சர்வதேச ப்ராஜெக்ட் தொடர்பான மீடிங்கில் பிஸியாக இருந்தான். ரஞ்சித்தும் சஞ்சுவும் ARC ஹோட்டலை அடைந்ததும், சஞ்சு அறைக்குள் நுழைந்தாள்.

” சஞ்சு, உள்ளேயே இரு, உனக்கு ஏதாவது தேவையா இருந்தா என்ன கூப்பிடு. வெளியே காலடி எடுத்து வைக்க வேணாம். நம்ம கார்ட்ஸ் எந்நேரமும் இங்க ரூமுக்கு வெளிய இருப்பாங்க ” என்றான் ரஞ்சித்.

சஞ்சனா சரி என்று சொல்ல, ” ரம்யா வந்ததும் நான் அவங்கள இங்க ரூமுக்கு கூட்டிட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டு பாதுகாப்பை மேற்பார்வையிட ரஞ்சித் புறப்பட்டுச் சென்றான்.

அலுவலகத்தில் வேலையை முடித்து மேன்ஷனுக்கு திரும்பிய ஆர்யன் களைப்புடனும் ஆவலுடனும் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் அவர்களின் அறைக்குள் நுழைந்தபோது, படுக்கையில் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த சாட்டின் ரிப்பனால் கட்டப்பட்ட இளஞ்சிவப்பு சுருட்டப்பட்ட காகிதத்தை கவனித்தான்.

ஆர்வம் மேலோங்க அவன் மெல்ல சென்று அதைப் பிரித்து படிக்கத் தொடங்கினான், அதில் இருந்த கையெழுத்தை பார்த்ததும் ஆர்யனின் முகத்தில் மெதுவாக ஒரு புன்னகை உருவானது.

” டார்லிங்,

 நான் உன்ன பார்த்து நாலு மணி நேரம் ஆகுது, உன்ன பார்க்க இன்னும் அஞ்சு மணி நேரம் காத்திருக்கணும்.

 என்ன செய்ற ஆர்யன் ? நீ இல்லாம கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாத அளவுக்கு நீ என்ன கெடுத்து வெச்சுருக்க. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டா. உன்ன சந்திக்க ஆவலா காத்துட்டு இருக்கேன். சீக்கிரம் வா பேபி

உன்னோட, ஸ்வீட்ஹார்ட்”

ஆர்யன் கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான், அவன் கண்கள் அன்பு மற்றும் காதலால் பளபளத்தன.

” சீக்கிரம் வரேன் ஸ்வீட் ஹார்ட், உனக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுக்க வரேன், தயாரா இரு ” என்று கிசுகிசுத்தவான் புத்துணர்ச்சி பெற்று பார்ட்டிக்கு தயாராகத் தொடங்கினான்.

இதற்கிடையில் ARC ஹோட்டலுக்கு ரம்யா தனது ஸ்டைலிஸ்ட்டுடன் வந்தார். ரஞ்சித் அவர்களை ஆர்யனின் அறைக்கு அழைத்துச் சென்றான், அங்கு சஞ்சு அவர்களை அன்பான புன்னகையுடன் வரவேற்றாள். ரம்யாவின் ஸ்டைலிஸ்ட், அன்று இரவு நடக்க போகும் பார்ட்டிக்கு சஞ்சுவை தயார் செய்ய தனது வேலையை தொடங்கினார்.

ARC ஹோட்டல்களின் பால்ரூம் அழகிய விளக்குகளின் வெளிச்சத்தில் பளபளத்தது, நேர்த்தியுடன் நுட்பமான செழுமையையும் கலந்த ஒரு உன்னதமான கருப்பொருளில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விருந்தினர்களுக்காக மேஜைகள் கச்சிதமாக ஏற்பாடு செய்யப்படிருந்தது. அந்த அறையின் மறுபுறம் ஆடம்பரமான சிற்றுண்டிகள், உணவுகள் அதோடு அந்த அறையில் ஒலித்த மென்மையான மெல்லிசைகள் காற்றை நிரப்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த இரவு வெறுமனே மற்றொரு கொண்டாட்டம் மட்டும் அல்ல, அது பல தொழிலதிபர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ள இருந்த ஒரு மேட்டுக்குடி விவகாரமாக இருந்தது அதனால் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தது.

ARC குழுமத்தின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் ஏற்கனவே வரத் தொடங்கி இருந்தனர். மனிதவளத் துறைத் மேனேஜர் வினய் முதலிலும் அவரை பின்தொடர்ந்து மானசியும் விரைந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, புதிய மார்க்கெட்டிங் மேனேஜர் கார்த்திக் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

மூவரும் அந்த பார்ட்டி பற்றி பேசிக் கொண்டிருந்த போது ஒரு பழக்கமான முகம் உள்ளே நுழைந்தது. பவித்ராவை கண்டதும்  மானசியின் புருவங்களை வியப்பில் உயர்ந்தன.

“பவித்ரா? நீ எப்படி இங்க ? மேனேஜர்ஸ் மட்டும் தான் இந்த பார்ட்டியில கலந்துக்க அழைப்பு வந்துச்சு அப்புறம் எப்படி நீ இங்க வந்த ?” என்று மானசி முகம் சுளித்து கேட்டாள். அதற்கு பவித்ரா அவளிடம், ” என்ன சஞ்சனா வர சொன்னா ” என்று அமைதியாக பதிலளித்தாள்.

” இது அதிகாரபூர்வமா நடக்குற பார்ட்டி, நீ அவளோட friend என்றதால சஞ்சனா உன்ன …” என்று மானசி சொல்லி முடிப்பதற்குள் ரஞ்சித் தன் நிதானமான பிரசன்னத்துடன் அவளை நிறுத்தி, ” ஆர்யன் சார் தான் பவித்ராவ வர சொல்ல சொன்னாரு. சஞ்சனா அவர் சொன்ன வேலைய செஞ்சா அவ்ளோ தான் “ என்று கூறினான்.

மானசி வலுக்கட்டாயமாக புன்னகையை உதிர்த்து, ” ரஞ்சித், நான் சும்மா பவித்ராவோட பேசிட்டு இருந்தேன்.” என்று சமாளிக்க நினைத்தாள். 

” எனக்குத் தெரியும் மிஸ் மானசி” என்று சமமாகப் பதிலளித்துவிட்டு, வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கத் சென்றான் ரஞ்சித்.

பிரமுகர்களும், தொழிலதிபர்களும் உள்ளே நுழைந்த போது, பாதுகாவலர்களிடம் இருந்து ஆர்யன் ARC ஹோட்டலை அடைந்து விட்டதாக ரஞ்சித்துக்கு ஒரு செய்தி வந்தது. அவன் உடனடியாக ஹோட்டல் நுழைவாயிலை நோக்கிச் சென்றான். ஒரு நேர்த்தியான கருப்பு நிற லம்போர்கினி கார் நுழைவாயில் முன் நின்று அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ரஞ்சித் முன்னால் சென்று  கதவைத் திறந்ததும், ஆர்யன் காரில் இருந்து இறங்கினான்.  

கருப்பு நிற கோட் சூட் அணிந்திருந்த அவனுடைய இருப்பு அதிகாரத்தையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தியது. ஒரு கையை சர்வசாதாரணமாக பாக்கெட்டில் சொருகிக்கொண்டு, உறுதியாகவும் நளினமாகவும் பார்ட்டி நடக்கும் அறைக்குள் நுழைந்தான். இருபுறமும் இருந்த ஊழியர்கள் வணக்கம் தெரிவிக்க, ஆர்யன் அமைதியான நிதானத்துடன் தலையசைத்தான். அவனது ஒவ்வொரு அசைவும், ஒரு வாழும் சக்ரவர்த்தி போல கம்பீரமாக தெரிந்தான். 

ஆர்யன் விருந்தினர்களுடன் பேசி சில இனிமையான பரிமாற்றங்களைப் பகிர்ந்து கொண்டான் அப்போது ரஞ்சித் அவனை அணுகி, ” சார், சந்திரசேகர் வந்திருக்காரு, அவர் கூட நரேனும், மாயாவும் வந்துருக்காங்க “ என்று மெல்ல அவன் காதில் கூறினான்.

**********************************

முன்னோட்டம்:

” உன் கண்ணுல என்ன இருக்கு ? அப்படியே காந்தம் மாதிரி என்ன இழுக்குது. உன் வாய் பேசாத ஆயிரம் வார்த்தைகள உன் கண்ணு பேசுதுடி. வாழ்க்க முழுக்க உன்னோட இந்த கண்கள் என்ன கட்டி போட்டு இருக்க நானா விரும்புறேன் “

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!