சந்திரசேகரின் வருகையை பற்றி ரஞ்சித் கூறியதும் ஆர்யன் சரி என்று தலையசைத்து அறையின் வாயிலை நோக்கி நடந்தான். அங்கே சந்திரசேகர் எப்பொழுதும் போல் கம்பீரமாக நிற்க, நரேனும் மாயாவும் அவருடன் நின்றிருந்தனர்.
ஆர்யன் புன்னகையுடன் முன்னால் சென்று, ” ஹலோ சார், நீங்க இன்னைக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி “ என்று சொல்லி அவரை மரியாதையுடன் அணைத்துக் கொண்டான்.
சந்திரசேகர் பதிலுக்கு அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து, “வாழ்த்துக்கள் ஆர்யன், எப்பவும் சந்தோஷமா இரு “ என்று அவனை வாழ்த்தினார்.
” நீங்க இங்க வந்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சார்” என்று ஆர்யன் சொன்ன போது, “ நானும் இங்க இருக்கேன்டா “ என்று சொல்லி நரேன் கிண்டலாக முறைத்தான்.
” டேய் வாடா ” என்று சொல்லி சிரித்த ஆர்யன் அவனை அணைத்துக் கொண்டு, தன் பார்வையை சந்திரசேகரின் அருகில் நின்று கொண்டிருந்த மாயாவை நோக்கி நகர்த்தினான், அவள் பளபளக்கும் நீல நிற பாவாடையும் வெள்ளை நிற மேலாடையும் அணிந்து வைரங்களால் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவள் நேர்த்தியாக இருந்த போதிலும், ஆர்யனின் குளிர்ந்த அலட்சியம் அவளை கடுமையாக தாக்கியது.
” வெல்கம் மிஸ் மாயா” என்று ஆர்யன் சம்பிரதாயமாக சொல்ல, மாயாவின் முகம் இறுகியது. ” நிஜமாவே இப்படி வேண்டாதவங்க கிட்ட பேசுற மாதிரி தான் பேசணுமா ?” என்று மாயா அவனை கேட்டாள்.
“ ஆர்யன் பத்தி எல்லாருக்குமே தெரியும், அதனால அவன் உன்கிட்ட இப்படி பேசுறதுல ஒன்னும் ஆச்சரியம் இல்லையே “ என்று நரேன் சொன்னதும் ஆர்யன் அவனை பார்த்து புன்னகைத்தான்.
ஆர்யனும், ரஞ்சித்தும் அவர்களை உள்ளே அழைத்து சென்று அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேஜையை காட்டி அமர சொன்னார்கள்.
“ சார், நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உங்கள சந்திக்குறேன் “ என்று ஆர்யன் சொல்ல, “ போய் எல்லாரையும் பாரு ஆர்யன், நான் இங்க தான் இருப்பேன் “ என்றார் சந்திரசேகர்.
ஆர்யன் மற்ற விருந்தினர்களை சந்திக்க சென்ற போது நரேனும் அவனுடன் சென்றான்.
நரேனுக்கு ஒரு அழைப்பு வந்த போது அதற்கு பதில் சொல்ல விலகி செல்ல திரும்பிய போது அவன் எதிர்பாராத விதமாக யாருடனோ மோதினான். ” ஸாரி.. நான் கவனிக்கல “ என்று கூறினான் ஆனால் அவன் வார்த்தைகள் எல்லாம் அந்த நபரை பார்த்ததும் நின்று போனது.
அவன் கண்கள் அவளைச் சந்தித்த கணத்தில் அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் மறந்து போகும் அளவுக்கு அவள் பிரமிக்க வைத்தாள்.
மென்மையான வெளிர் நிற புடவை அவளது உடலை நேர்த்தியுடன் தழுவ, பவித்ரா அவர் முன் நின்றாள், அவளுடைய கண்கள் ஆச்சரியத்துடனும் நளினத்துடனும் விரிந்தன. அப்போது நரேனின் பக்கத்தில் வந்த ரஞ்சித், நண்பனின் தளர்ந்த முகபாவத்தைக் கண்டு சிரித்தான்.
“என்ன ஆச்சு நரேன்?” என்று ரஞ்சித் கேட்டான், ஆனால் நரேன் உடனடியாக பதில் சொல்லவில்லை. அவன் பார்வை அசையவில்லை. ” யார் இவங்க ?” என்று வழக்கத்தை விட தாழ்ந்த குரலில், ஆர்வத்துடன் கேட்டான்.
” இவங்க மிஸ் பவித்ரா. நம்ம ஆபீஸ்ல தான் நிதி துறையில வேலை செய்றாங்க “ என்று ரஞ்சித் அவளை அறிமுகப்படுத்தினான்.
“பவித்ரா…” என்று அவள் பெயரை ரசித்து நரேன் மெல்லச் சொன்னான். ” என்ன ஒரு அழகான பெயர்.” என்று சொல்லி அவன் தன் கையை நீட்டி, ” ஹாய், நான் நரேன்.” என்று சொன்ன போது பவித்ராவும் கை கொடுத்து நரேனிடம் இருந்து ஒரு பணிவான குலுக்கலை எதிர்பார்த்தாள் ஆனால் அதற்கு பதிலாக, நரேன் அவள் கையை பிடித்து நடன அசைவில் மெதுவாக சுழற்றினான். அது அவளை முற்றிலும் கவர்ந்தது. எதிர்பாராத அந்த தருணம், அவள் மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள்,.
” டேய் நரேன், பார்ட்டியில இருக்கடா, எல்லாரும் உன்ன பாக்குறாங்க டா “ என்று ரஞ்சித் முணுமுணுத்தான். அவன் வார்த்தையை கேட்டதும் யதார்த்தத்திற்கு திரும்பிய நரேன் மெல்ல பவித்ராவின் கையை விடுவித்து புன்னகையுடன் அவளை நிலைப்படுத்திக் கொண்டான்.
” நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க பவித்ரா ” என்று நரேன் கூறிய பொது அவன் வார்த்தையில் இருந்த நேர்மை, அவனது விளையாட்டுத்தனமான தொனியை மென்மையாக்கியது.
பவித்ரா லேசாக முகம் சிவந்து, “ ரொம்ப நன்றி, நீங்களும் பார்க்க அழகா இருக்கீங்க.” என்று சொன்னாள்.
” ஒஹ் ரொம்ப நன்றி ” என்று சொல்லி நரேன் புன்னகைத்தான். அவனது மொபைல் மீண்டும் ஒலித்ததும், “ சீக்கிரம் உன்ன சந்திக்குறேன் பேபி “ என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்து விட்டு விலகிச் செல்ல, பவித்ரா புன்னகையுடனும் சற்றே படபடப்புடனும் இருந்தாள்.
நரேன் சென்றதும் அவள் ரஞ்சித்தின் பக்கம் திரும்பி, ” ரஞ்சித், சஞ்சு எப்போ வருவா ?” என்று கேட்டாள்.
” இப்ப கொஞ்ச நேரத்துல வருவா பவித்ரா. ஸ்டைலிஸ்ட் இப்போ தான் கிளம்பினாங்க. நான் போய் கூட்டிட்டு வரேன்” என்று ரஞ்சித் பதில் சொன்னதும், “சரி,” என்று அவள் தலையசைத்தாள்,
இதற்கிடையில், ஆர்யன் தனது விருந்தினர்களை தொடர்ந்து வரவேற்றான் ஆனால் அவனது கண்கள் அடிக்கடி நுழைவாயிலை நோக்கி அலைந்து சஞ்சுவின் வருகைக்காக காத்திருந்தன. அவனது இதயம் எதிர்பார்ப்பில் துடித்து கொண்டிருந்தது. தான் கனவு கண்டுகொண்டிருந்த தருணத்துக்காகக் காத்திருந்தான். பின்னர் அறையின் கதவு திறந்து ரஞ்சித் உள்ளே நுழைந்தான். அவன் அருகில் சஞ்சு மெதுவாக நடந்தாள். அவளுடைய கண்கள் கூட்டத்தில் ஆர்யனை தேடியது. இறுதியாக அவள் பார்வை அவன் அவர் மீது விழுந்தன. ஆர்யனால் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து நகர முடியாமல் அவள் அழகில் மூச்சடைத்து நின்றான்.
இளஞ்சிவப்பு நிறத்தில், பர்மிய தாமரை பட்டு இழைகளால் வடிவமைக்கப்பட்ட கவுனை சஞ்சு அணிந்திருந்தாள், அது மென்மையான தங்க மலர் எம்பிராய்டரியுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவளுடைய இடுப்புக்கு மேலே இருந்த ரவிக்கை உலகின் மிகவும் அரிய விகுனா துணியால் வடிவமைக்கப்பட்டிருந்தது, தங்கக் கற்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது உடை அறையில் இருந்த சரவிளக்கின் வெளிச்சத்தில் பளபளத்தன. அவள் ஒரு சக்ரவர்த்தியின் ராணியை போல தோற்றமளித்தாள்.
அவளுடைய தலைமுடி தளர்வான சுருட்டைகளாக அவளது தோளில் இருந்தது, ஒரு வைர ப்ரூச் அவள் கூந்தலில் மின்னியது. அவள் அணிந்திருந்த உடைக்கு பொருத்தமாக வைரம் மற்றும் ரூபி பதிக்கப்பட்ட நெக்லஸ் அவள் கழுத்தை அலங்கரித்தது, அதற்கு ஏற்ற பொருத்தமான காதணியும், அவளுடைய மணிக்கட்டில் ஒரு பிரேஸ்லெட் கண்ணை கொள்ளைகொண்டது.
சஞ்சுவின் அழகான மையிட்ட கண்கள் ஆர்யனின் ஆன்மாவை அவளிடம் இழுக்கும் காந்த ஈர்ப்பை வெளிப்படுத்தின.
அவள் பிரமிக்க வைத்தாள் என்ற வார்த்தை மிகவும் சாதாரணமாக இருந்தது, அவள் முற்றிலும் வேறு ஒரு உலகத்தில் இருந்து கீழிறங்கி வந்த ஒரு தேவதை போல இருந்தாள். அந்த அறையில் இருந்த அனைவருமே அவள் அழகை கண்டு உறைந்து, வியந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். சஞ்சுவின் உடையை கண்ட மாயாவின் கண்கள் பொறாமையால் இருண்டன.
ஆர்யனின் கால்கள் காந்தம் போல அவளை நோக்கி இழுக்கப்பட்டு தானாகவே நகர்ந்தன. அவனை போலவே சஞ்சுவின் பார்வையும் அவனை விட்டு அகலவே இல்லை. அவளும் அவனை நோக்கி மந்திரத்துக்கு உட்பட்டவள் போல அதே வேகத்தில் நடந்தாள். ஒரு உரத்த, பழக்கமான குரல் இருவரின் மந்திரத்தை உடைக்கும் வரை உலகின் பிற பகுதிகள் அவர்களுக்கு மறந்து போனது.
” பவித்ரா, என் தங்கச்சி எவ்ளோ அழகா இருக்கா பாருங்க !” என்று நரேன் சொல்ல, “ நீங்க சொல்லவே வேணாம், என் friend அழகுன்னு எனக்கு நல்லாவே தெரியும் “ என்று சொல்லி புன்னகைத்த பவித்ரா, சஞ்சுவிடம், “ ஏய் சஞ்சு, நீ செம்ம அழகா இருக்க “ என்று கூறினாள். அதற்கு சஞ்சு உடனே அவளிடம், ” பவி, போதும் நிறுத்து ப்ளீஸ் ” என்றாள் வெட்கத்துடன்.
” சரி சரி, நான் ஒன்னும் சொல்லல ஆனா உன் ஆள பாரு. ரொம்ப பாவம் அவரு, இப்படி கொல்ற அவர. எப்படி இருக்காரு பாரு, கிட்ட போய் மூச்சு விடுறாரா பாரு “ என்று பவித்ரா, சஞ்சுவின் அருகில் சென்று குனிந்து அவள் காதில் கிசுகிசுத்தாள்.
சஞ்சு சிரித்தபடி ஆர்யனைப் பார்த்து புருவத்தை உயர்த்தி ‘நான் எப்படி இருக்கேன்? என்று மௌனமாக கேட்டாள்
ஆர்யன் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, கழுத்தின் பின்புறத்தைத் தேய்த்து, அவளை பார்த்து கண்ணடித்தான்.
பவித்ரா தொண்டையைக் கனைத்துக் கொண்டு சிரித்தபடி சஞ்சுவுடன் அவர்களின் மேஜைக்கு நடந்தாள்.
“ஆர்யன்!” என்று நரேன் கூப்பிட்டதும், அவன் குரல் ஆர்யனின் மயக்கத்தை ஊடுருவிச் சென்றது, ஆனாலும் அவன் கண்கள் இன்னும் சஞ்சுவின் மீதே நிலைத்திருந்தன. ” சொல்லுடா “ என்று ஆர்யன் கேட்க, “ வாய துடை டா, “ என்று சொல்லி நரேன் சிரித்தான்.
ஆர்யன் குழப்பத்துடன் முகம் சுளித்து, ” என்னடா ?” என்று கேட்டதும், “ ரொம்ப வழியுதுடா “ என்று சொல்லி நரேன் கிண்டலடித்தான்.
” வாய மூடிட்டு வாடா ” என்று முணுமுணுத்த ஆர்யன் இறுதியாக நரேனின் தோளில் விளையாட்டாக ஒரு தட்டு கொடுக்க, இருவரும் சிரித்தனர்.
சிறிது நேரத்தில் ஆர்யனும், ரஞ்சித்தும் மேடை ஏறினர். ஆர்யன் மைக்கை எடுத்த போது அரங்கம் அமைதியானது.
” எல்லாருக்கும் வணக்கம், இந்தக் கொண்டாட்டத்துக்கு உங்க எல்லாரையும் வரவேற்க்குறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். ARC குழுமம் சமீபத்திய கொஞ்ச வருஷத்துல மிகப்பெரிய வெற்றியை அடைஞ்சு இருக்கு. இப்போ புதுசா அறிமுகம் பண்ண காஸ்மெடிக் பெரிய வரவேற்ப அடைஞ்சு இருக்கு. இப்போ மார்க்கெட் தரவரிசையில முதலிடத்துல இருக்கு “ என்று பேசத் தொடங்கிய ஆர்யனின் குரல் உறுதியாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அவனது வார்த்தைகளை கேட்டு கைதட்டல் எழுந்ததும் அவன் பேச்சை நிறுத்தினான்.
” நம்ம நாட்டோட மிகப்பெரிய அரசாங்க உட்கட்டமைப்பு ப்ராஜெக்ட் ARC குழுமம் வெற்றிகரமா செஞ்சு முடிஞ்சு இருக்கு. இதன் மூலமா நம்ம கட்டுமானப் பிசினஸ் ஒரு பெரிய மைல்கல்லை எட்டி இருக்கு. இது நமக்கு மிகப்பெரிய சாதனை” என்று சொன்ன போது ஆர்யனின் கண்களில் பெருமிதம் மின்னியது.
அவன் உண்மையான நன்றியுடன் அறையைச் சுற்றிப் பார்த்தான்.
” இந்த பயணத்துல ARC குழுமத்தோட ஒவ்வொரு ஊழியர், பங்குதாரர் மற்றும் டீலருக்கு நன்றி சொல்ல விரும்புறேன். உங்க முயற்சியால தான் இது சாத்தியமாகி இருக்கு. என்னோட வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த திரு.சந்திரசேகர் அவர்களுக்கு என்னோட ஸ்பெஷல் நன்றி. இந்த வெற்றியை உங்க கூட பகிர்ந்துக்குறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். எல்லாரும் இன்னைக்கு பார்ட்டிய நல்லா சந்தோஷமா கொண்டாடுங்க. நன்றி “ என்று சொல்லி ஆர்யன் முடித்ததும், விருந்தினர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
பலர் ஆர்யனுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்க முன்வந்தனர்.
அருகில் இருந்த மேஜையில், பவித்ரா சஞ்சுவின் காதருகே குனிந்து, ” சஞ்சு, அவர் கிட்ட எப்போ ப்ரபோஸ் பண்ண போற ? “ என்று ரகசியமாக கேட்டாள். அதற்கு சஞ்சு உடனே, “ இன்னைக்கு பண்ண போறேன் “ என்று சொல்லி மென்மையான புன்னகையை உதிர்த்தாள், அவள் குரல் அமைதியாக ஆனால் உறுதியாக இருந்தது.
பவித்ரா திகைத்துப் போய் கண் சிமிட்டி, ” உண்மையா தான் சொல்றியா ?” என்று கேட்க, “உங்க சார் பண்ற மாதிரி தெரியல அதனால நானே பண்றேன் “ என்று சஞ்சு கூறினாள்.
“ஏய்! ரொம்ப சலிச்சுக்காத, எங்க சார் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவரு “ என்று பவித்ரா சொன்னதும், சஞ்சு சிரித்தபடி ” ஆமா ஆமா ரொம்ப கூச்ச சுபாவம் தான் “என்று முணுமுணுத்தாள்.
” நீ ஏதாவது சொன்னியா ?” என்று பவித்ரா கண்களைச் சுருக்கியபடி கேட்டதும், ” ஒண்ணுமில்ல மா, உங்க சார் உண்மையிலேயே கூச்ச சுபாவம் இருக்கவரு தான், ஒத்துக்குறேன் “ என்றாள் சஞ்சு.
சில நிமிடங்கள் கழித்து, ஆர்யன் சஞ்சுவிடம் சென்றதும், அவள் எழுந்து நின்றாள், அவள் முகத்தில் ஒரு மென்மையான புன்னகை தவழ்ந்தது. அந்த அறையில் அவள் மட்டுமே இருப்பது போல அவளைப் பார்த்தான் ஆர்யன்.
” நான் அப்படியே தொலஞ்சு போன மாதிரி இருக்கு, அப்படியே மந்திரம் போட்டு என்ன மயக்கி வெச்சுருக்க “ என்று ஆர்யன் கிசுகிசுத்தான். அதற்கு சஞ்சு அவனிடம், ” நானும் அப்படி தான் இருக்கேன் ” என்றாள்.
” உன் கூட தனியா இருக்க இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு ஆனா என்னவோ ரெண்டு வருஷம் வெயிட் பண்ண வேண்டிய மாதிரி தோணுது ” என்றான் ஆர்யன் பெருமூச்சுடன்.
” எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க “ என்று சஞ்சு அவனுக்கு மென்மையாக நினைவூட்டினாள். ஆனால் ஆர்யன் அதை காதில் வாங்காமால், ” உன் கண்ணுல என்ன இருக்கு ? அப்படியே காந்தம் மாதிரி என்ன இழுக்குது. உன் வாய் பேசாத ஆயிரம் வார்த்தைகள உன் கண்ணு பேசுதுடி. வாழ்க்க முழுக்க உன்னோட இந்த கண்கள் என்ன கட்டி போட்டு இருக்க நானா விரும்புறேன் “ என்று கூறினான்.
அவன் வார்த்தையை கேட்டு, ” போதும், போய் உங்க கெஸ்ட் எல்லாரையும் பாருங்க ” என்றாள் சஞ்சு வெட்கத்துடன்.
ஆர்யன் புன்னகைத்தபடி, ” சரி , நான் கொஞ்ச நேரம் சந்திரசேகர் சார் கிட்ட பேசிட்டு இருக்கேன் ” என்று சொல்லிவிட்டு விலகி சென்றான்.
சந்திரசேகர் அமர்ந்திருந்த மேஜையை அணுகிய ஆர்யன் மரியாதையுடன் அவர் அருகில் அமர்ந்தான்.
“ வாழ்த்துக்கள் ஆர்யன், உன்னோட உங்க வளர்ச்சியும் வெற்றியும் என்ன ரொம்ப கவர்ந்திருக்கு, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ” என்று சந்திரசேகர் சொல்ல, அதற்கு ஆர்யன் அவரை பார்த்து, ” உங்க ஆசிர்வாதமும், நீங்க எனக்கு காட்டுன வழியும் தான் எல்லாத்துக்கும் காரணம் சார் ” என்று சொன்னான்.
” இல்ல ஆர்யன், இது நீ சாதிச்சு இருக்க, இதுல என்னோட பங்கு எதுவும் இல்ல. எல்லாமே உன் கடின உழைப்பு “ என்று சந்திரசேகர் சொன்னதும், “ ரொம்ப நன்றி சார் “ என்றான் ஆர்யன்.
“ உன்னோட இந்த வெற்றிக்குப் பின்னால இருக்க டீம் ஆளுங்கள நான் சந்திக்கலாமா ?” என்று சந்திரசேகர் கேட்டதும், “கண்டிப்பா சார்.” என்று சொன்ன ஆர்யன் திரும்பிப் பார்த்து, ” ரஞ்சித், நம்ம டீமைக் கூப்பிடு.” என்றான்.
ரஞ்சித். விரைந்து செயல்பட்டு, ARCயின் பிசினஸ் பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிர்வாக அதிகாரிகளுடன் வினய், மானசி, கார்த்திக், சஞ்சனா ஆகியோரை அழைத்து சந்திரசேகரின் மேஜையை நோக்கி அழைத்துச் சென்றான்.
வினய், மானசி, கார்த்திக் மற்றும் ஏ.ஆர்.சி.யின் முக்கிய அதிகாரிகளை சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்தினான் ஆர்யன். அறிமுகங்கள் முடிந்ததும் சஞ்சு பக்கம் திரும்பினான்.
“சஞ்சு, இங்கே வா” என்று அவளை அறிமுகப்படுத்தத் தயாரானான். சஞ்சு விழுங்கியபடி ஆர்யனின் அருகில் சென்றாள்.
****************************************
முன்னோட்டம்:
” இப்படியே அமைதியா வா இல்ல யார பத்தியும் கவலைப்பட மாட்டேன், எல்லார் முன்னாடியும் கிஸ் பண்ணுவேன் “

1 comment
[…] Chapter 37 […]