சஞ்சனா தன் மனைவி என்று ஆர்யன் அறிவித்ததும் அங்கிருந்த விருந்தினர்கள், ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வியந்து போனார்கள். அந்த இடம் முழுவதும் நிசப்தத்தில் ஆழ்ந்தது.
“ஐ லவ் யூ சஞ்சனா “ என்று ஆர்யன் உறுதியான மற்றும் உணர்ச்சி நிறைந்த குரலில் கூறியதும், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் கண்களை அகல விரித்தனர். சிலர் கண் சிமிட்டி, கனவு காண்கிறார்களா என்று கூட ஆச்சரியப்பட்டனர். ஆர்யனின் வார்த்தைகளை ஏற்க முடியாமல் மாயா அதிர்ச்சியானாள். சந்திரசேகர் அவளிடம் பேசிக் கொண்டிருந்தார் ஆனால் அவரது வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல் அவள் உறைந்து போய் அசையாமல் நின்றாள்.
இதற்கிடையில் பவியும், நரேனும் உற்சாகத்தில் கத்தினர். பவி சஞ்சுவின் அருகில் விரைந்து சென்று அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். ஆனால் சஞ்சுவின் கண்கள் ஆர்யன் மீது மட்டுமே நிலைத்திருந்தன, தங்கள் காதலை, திருமணத்தை உலகிற்கு அறிவித்த மனிதனால் ஈர்க்கப்பட்டு நின்றாள். ஆர்யன் கையை நீட்டியதும், சஞ்சு அவனை நோக்கி மெல்ல நடந்தாள். அவள் அவனை நெருங்கி அவன் கையைப் பிடித்ததும், ஆர்யன் மெதுவாக அவள் இடுப்பை பிடித்து இழுத்து அணைத்து அவள் நெற்றியில் அன்புடன் முத்தமிட்டான்.
திடீரென அவன் பகிரங்கமாக அன்பை வெளிப்படுத்தியதை கண்டு ஊடகங்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு, அந்த தம்பிதியை படம் பிடித்தனர். .
ஒரு நிருபர் முன்னால் வந்து, “வாழ்த்துக்கள், மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆர்யன்! சார், நீங்க ஏன் உங்க கல்யாணத்த பத்தி இதுவரை சொல்லாம மறச்சீங்கனு சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
சஞ்சுவின் கையை பிடித்துக் கொண்டு நின்ற ஆர்யன், “ நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம். என்னோட மாமனார் திரு.கிருஷ்ணன், போன வருஷம் இறந்துட்டாரு. அவரோட மறைவு எங்களுக்கு பெரிய இழப்பு, அந்த துக்கத்துல இருந்து நாங்க மீள முடியாம இருந்தோம் அதனால பிரமாண்டமான கல்யாணத்த நாங்க ரெண்டு பேரும் விரும்பல. ரொம்ப எளிமையா எங்க கல்யாணம் நடந்துச்சு, அப்புறம் உடனே சட்டப்படி பதிவு பண்ணிட்டோம். சம்பிரதாயப்படியும், சட்டரீதியாவும் சஞ்சனா என் மனைவி. என் மாமனார் எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய உத்வேகமா இருந்தாரு அதனால எங்களுக்கு அந்த இழப்புல இருந்து மீள நேரம் தேவைப்பட்டுச்சு “ என்று ஆர்யன் விளக்கமாக கூறினான்.
மற்றொரு நிருபர், “மிஸ்டர் பிரதீப் பத்தி சொல்ல முடியுமா? ஏன் அவர திடீர்னு தலைமை நிர்வாக அதிகாரியா நியமிச்சு இருக்கீங்க ?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆர்யன், “அவர் என் மனைவியோட, தாய் மாமனோட மகன். அவர் உண்மையிலேயே ஒரு அற்புதமான தொழிலதிபர். அவரோட திறமைய பார்த்து நான் எப்பவும் வியந்து பாராட்டி இருக்கேன். ரொம்ப மாசமா, எங்களோட காஸ்மெடிக் பிசினஸ் பிரிவ தனியா விரிவுப்படுத்த யோசிச்சிட்டு இருந்தேன். அதோட அத சிறப்பா வழிநடத்த ஒருத்தர் எனக்குத் தேவையா இருந்துச்சு. பிரதீப் என்னோட சிறந்த தேர்வா இருப்பாரு “ என்று சொன்னதும், ” ARC, DC குழுமமும் பார்ட்னர்ஷிப் வைக்க போறதா வதந்தி கேள்விப்பட்டோம். அது உண்மையா?” என்று ஒருவர் கேட்டார்.
ஆர்யன் அதற்கு பதில் சொல்வதற்குள், மாயா நம்பிக்கையுடன் முன்னால் வந்து, “ஆமா, அது உண்ம தான். இன்னைக்கு ARC, DC குழுமம் அதிகாரப்பூர்வமா கூட்டணி சேர போறோம். நான் மாயா சந்திரசேகர், DC குழுமத்தோட புது CEO “ என்று சொன்னாள் பின்னர் ஆர்யனை பார்த்து, “ இந்த பார்ட்னர்ஷிப்ல நான் ஒரு அங்கமா இருக்குறதுல சந்தோஷப்படுறேன், உங்களுக்கு ரொம்ப நன்றி மிஸ்டர் சைதன்யா.” என்று அவள் சொன்ன போது அவள் குரல் தெளிவாக இருந்தது.
சந்திரசேகரும் ஆர்யனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர், ஆனால் இருவருமே எந்த பதிலும் சொல்லாமல் வெறுமனே தலையசைத்தனர்.
மற்றொரு நிருபர் சஞ்சுவை நோக்கி, ” மிசஸ் ஆர்யன், நீங்க சில வார்த்தைகள் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
சஞ்சு புன்னகையுடன் அனைவரையும் பார்த்து, ” எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இன்னைக்கு இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி. ஆர்யன் என் கணவர்னு சொல்றத விட எனக்கு வேற ஒரு பெரிய சந்தோஷம் எதுவும் இல்ல. இன்னைக்கு எங்க வாழ்க்கையோட ரொம்ப முக்கியமான நாள். என் மேல நிறைய அக்கறை, அன்பு வெச்சுருக்க, என்ன அதிகம் லவ் பண்ற, அப்புறம் நிச்சயமா ரொம்ப அழகான கணவர் எனக்கு கெடச்சுதுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புறேன். அவர் என் வாழ்க்கையில கெடச்சுதுல நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி “ என்று சொன்னவள் ஆர்யன் பக்கம் திரும்பி அழகாக தலை சாய்த்து, “ ஐ லவ் யூ ஆர்யன், ஐ லவ் யூ, மிஸ்டர் ஹஸ்பண்ட்.” என்று சொன்னாள்.
அவளின் பேச்சை குறுக்கிட்ட சந்திரசேகர், “சரி, இப்போ பார்ட்னர்ஷிப் அக்ரீமன்ட்ல கையெழுத்துப் போடலாம்” என்று அறிவித்தார்.
அரங்கம் முழுவதும் கரவொலி எதிரொலிக்க, மாயாவும் பிரதீப்பும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் ஆர்யன் முன்னால் வந்து, “ உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இப்போ பார்ட்டிய என்ஜாய் பண்ணுங்க “ என்று கூறினான்.
கூட்டத்திலிருந்து விலகி, மாயா தன் தந்தையைத் தனியே இழுத்துச் சென்று, “அப்பா, அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று பற்களை கடித்துக் கேட்டாள்.
“ அவன் இன்னைக்கு அறிவிப்பான்னு நான் நினைக்கவே இல்ல. அவன் அப்படி செய்றதுக்கு முன்னாடி நான் எதையாவது செய்யலாம்னு நினைச்சேன்.” என்று சந்திரசேகர் பெருமூச்சு விட்டார். அவர் சொன்னதை கேட்ட மாயா, “போதும் பா, இனி இதுல இருந்து விலகி இருங்க. நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன் “ என்று சொல்லிவிட்டு, அத்துடன், மேன்ஷனை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஆர்யனையும் சஞ்சுவையும் இறுதியாக ஒரு பார்வை பார்த்தாள். கண்களில் கோபம் கொழுந்துவிட்டு எரிய அவள் அங்கிருந்து சென்றாள்.
சஞ்சு மற்றும் ஆர்யனிடம் சென்ற பவித்ரா, “ சஞ்சு, அடிப்பாவி ஒரு முழு பூசனிக்காய மறச்சிட்ட “ என்று கிண்டல் செய்தாள் அதற்கு சஞ்சு, “பவி, நிறைய பிரச்சன போய்ட்டு இருந்துச்சு அதனால நாங்க யார் கிட்டையும் சொல்ல முடியல, ஸாரி “ என்று கூறினாள். அதற்கு பவி, “ஏய், எனக்கு புரியுது, உங்க ரெண்டு பேருக்காகவும் நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். ரெண்டு பேருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் “ என்று சொன்னதும் ஆர்யனும், சஞ்சுவும் நன்றி சொன்னார்கள்.
பவி விலகி சென்றதும் சந்திரசேகர், ஆர்யனை நெருங்கி, “ ஸ்மார்ட் கேம் விளையாடிட்ட ஆர்யன்” என்று சொனனார், அவரின் முகபாவம் படிக்க முடியாததாக இருந்தது. அதற்கு மெல்ல புன்னகைத்த ஆர்யன், “இது கேம் இல்ல சார், நிஜம், நான் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்சேன், அவ சந்தோஷமா இருக்கணும்னு விரும்பினேன், அவ்ளோ தான் “ என்று அமைதியாக சொன்னான்.
சந்திரசேகர் லேசாகத் தலையசைத்து, “ ஹ்ம்ம், நான் கிளம்பறேன்.” என்று சொல்ல, “தேங்க்யூ சார்” என்றான் ஆர்யன் மரியாதையாக.
நரேன் அவர்களிடம் சென்று ஆர்யனுக்கு கைகுலுக்கி, “வாழ்த்துக்கள் ஆர்யன். நான் நாளைக்கு கனடா போறேன் “ என்று சொன்னான். பின்னர் கனிவான புன்னகையுடன் சஞ்சுவை நோக்கித் திரும்பி, “வாழ்த்துக்கள் சஞ்சு.” என்று சொல்லிவிட்டு தனது தந்தையுடன் புறப்பட்டு சென்றான்.
ARCயின் நிர்வாகிகள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களாக இருந்தனர்.
“நல்லவேளை நான் சஞ்சனா கிட்ட எதுவும் பிரச்சன பண்ணல “ என்று நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே வினய் கிசுகிசுத்தான்.
சிந்தனையில் ஆழ்ந்திருந்த மானசி, “ அடக்கடவுளே! அந்த ஆளு கத்திய சொருகும் போதே நான் யோசிச்சு இருக்கணும். இப்போ தான் காரணம் புரியுது “ என்று என்று நினைத்து பீதியில் இருந்தாள். அவள் நிலையை பார்த்த வினய், “என்ன யோசிக்குற மானசி?” என்று கேட்டான். அதற்கு, “ஒண்ணுமில்ல வினய்” என்றவள் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு சட்டென்று பதில் சொன்னாள்.
இதற்கிடையில், பிரதீப் தனது தந்தை சுரேந்தருடன் ஆர்யன் மற்றும் சஞ்சுவை அணுகி, “ஆர்யன், என் மேல நம்பிக்க வெச்சதுக்கு ரொம்ப நன்றி ” என்று உண்மையான நன்றியுடன் கூறினான்.
” எப்பவும் அடுத்தவங்கள கஷ்ட்டப்படுத்த நெனச்சு மாற ஒரு வாய்ப்பு கெடச்சும் மாறாம இருக்கவங்களுக்கு தான் நான் மோசமானவனா, இரக்கம் இல்லாதவனா இருப்பேன் ஆனா நீ பண்ண தப்ப உணர்ந்து அதுக்கு ஈடு செய்ய தயாரா இருந்த. நீ பண்ண தப்பு மண்ணிக்க முடியாத அளவுக்கு பெரிய தப்பு தான் ஆனா உன் அப்பாவுக்காக நான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கேன். அவர் சஞ்சு மேல உண்மையான அன்பு வெச்சுருக்காரு, அவ எப்பவும் சந்தோஷமா வாழணும்னு விரும்பினாரு. அத உனக்கு புரிய வைக்கவும் முடிஞ்சவர முயற்சி பண்ணாரு. இப்போ நீ புத்திசாலியா இருந்து உனக்கு கெடச்சு இருக்க வாய்ப்ப பயன்ப்படுத்துவனு நம்புறேன் “ என்று ஆர்யன் சொன்னான்.
” நிச்சயம் செய்வேன் ஆர்யன். நான் நிச்சயம் உன்னோட நம்பிக்கைக்குரிய ஆளா இருப்பேன். என்னால முடிஞ்ச எல்லாத்தையும் இந்த பிசினஸ்ல கொடுப்பேன் “ என்று உறுதியளித்தான் பிரதீப்.
ஆர்யன் இன்னும் அருகில் சென்று, “ நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, மாயா ஒரு பெரிய தடையா இருப்பா, அவ கிட்ட நீ ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும் “ என்று ஆர்யன் எச்சரித்தான் அதற்கு ப்ரதீப், ” கண்டிப்பா” என்று தலையசைத்தான், பிறகு சஞ்சனா பக்கம் திரும்பி, “சஞ்சனா, நான் உனக்கு கொடுத்த தொல்லை, பிரச்சன எல்லாதுக்கு ரொம்ப வருத்தப்படுறேன். உன்னால என்ன உடனே மண்ணிக்க முடியாதுனு எனக்கு தெரியும் ஆனா அந்த நாளுக்காக நான் வெயிட் பண்றேன். உங்க ரெண்டு பேருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் “ என்று சொன்னதும் சுரேந்தர் அவர்களை வாழ்த்தினார்.
” ரொம்ப நன்றி மாமா ” என்று சொல்லி சஞ்சு மென்மையாக புன்னகைத்தாள். “தேங்க்யூ சார்” என்றான் ஆர்யன்.
பிரதீப்பும், சுரேந்தரும் இரவு உணவை சாப்பிட சென்றதும் ரஞ்சித் கையில் பூங்கொத்துடன் தம்பதியை அணுகினான். அவனுக்குப் பின்னால், பாலாவும் கௌசல்யாவும் பரிசுகளுடன் பின்தொடர்ந்தனர்.
” திருமண நாள் வாழ்த்துக்கள் பாஸ், பாஸ் மேடம்” என்று சொல்லி ரஞ்சித் சிரித்தான். அதற்கு ஆர்யன், “ நன்றி ரஞ்சித் “ என்றான் ஆனால் சஞ்சு, “ அண்ணா, என்ன சஞ்சு சொல்லி கூப்பிடுங்க “ என்றாள்.
“இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சஞ்சு.” என்று அவன் மீண்டும் சொன்னதும், “தேங்க்யூ அண்ணா “ என்று சிரித்தவள், பின் உதட்டை சுளித்து, “ஆனா இன்னைக்கு நாள் முழுக்க எனக்கு வாழ்த்து சொல்லாம என்ன கஷ்ட்டப்படுத்திட்டீங்க, நான் கோவமா இருக்கேன் ” என்று சொன்னாள்.
“இதெல்லாம் சார் ப்ளான் பண்ணின சர்ப்ரைஸ் சஞ்சு. உனக்கு புடிச்சுது தானே ? “ என்று ரஞ்சித் கேட்க சஞ்சு ஆம் என்றாள். பின்னர் அவனை தொடர்ந்து பாலாவும், கௌசல்யாவும் அவர்களை வாழ்த்தி பரிசு கொடுத்தனர்..
ஆர்யனும் சஞ்சுவும் இறுதியாக இரவு உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்தனர்.
“ஆர்யன், சீரியஸா நீ என்ன நாள் முழுக்க வெயிட் பண்ண வெச்சுட்ட, எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா ? நீ பிஸியா இருந்ததால மறந்துட்டனு நெனச்சேன் “என்று சொல்லி கண்களை சுருக்கி அவனை பார்த்தாள் சஞ்சு. அதற்கு ஆர்யன், “ இந்த நாள மறக்க எனக்கு பைத்தியமா? உன்னை சர்ப்ரைஸ் பண்ணனும், அதே சமயம் என்னோட பிளான் சந்திரசேகருக்கு தெரியாம இருக்கணும்னு நெனச்சேன், அது தான் காரணம். சரி இப்போ சொல்லுடி பொண்டாட்டி, என்னோட சர்ப்ரைஸ் புடிச்சுதா ? “ என்று கேட்டு சிரித்தான்.
” புடிச்சுது, எனக்கு ரொம்ப சந்தோஷம் கூட. உன் மேல கோவமா இருந்தேன் ஆனா இப்போ இல்ல “ என்று சொன்ன சஞ்சு பின்னர் அவனிடம், “ சரி, அது என்ன புதுசா பொண்டாட்டி சொல்லி கூப்பிடுற ? “ என்று ஆச்சரியமாக கேட்டாள்.
” உண்மைய சொல்லனும்னா எனக்கு ரொம்ப நாளாவே உன்ன பொண்டாட்டி சொல்லி கூப்பிடனும்னு ஆசை ஆனா நீ என் மனைவினு எல்லாருக்கும் சொல்றவர கூப்பிட கூடாதுனு முடிவோட இருந்தேன். இப்போ எல்லாருக்கும் நம்ம ரெண்டு பேர பத்தி தெரியும் அதனால இப்போ உன்ன பொண்டாட்டி சொல்லி கூப்பிட எனக்கு உரிமை இருக்கு “ என்று ஆர்யன் சொன்னதும், ” ஒஹ்ஹ்ஹ சரி தான் என்னோட ஆச புருஷா ” என்று சஞ்சு கிண்டலடித்தாள்.
அவள் வார்த்தையை கேட்ட ஆர்யன், “நீ இப்படி சொல்லும் போது செக்ஸியா இருக்கு” என்று ஹஸ்கி குரலில் சொல்லி கண்ணடித்தான்.
” ஆனா பிரதீப் விஷயம் தான் நான் எதிர்பார்க்கவே இல்ல “ என்று சஞ்சு சொல்ல, “ அவன் இப்போ பழைய பிரதீப் இல்ல அதனால அவன் மேல காழ்ப்புணர்ச்சி இருக்குறதுல நமக்கு எந்த நல்லதும் இல்ல. ஒருத்தர் நல்லவங்களா மாறினா, மண்ணிக்கனும்னு நானா நம்புறேன். உன் கிட்ட கேட்காம இந்த முடிவு எடுத்ததுல உனக்கு எந்த வருத்தமும் இருக்காதுனு நம்புறேன் “ என்று ஆர்யன் சொன்னான்.
“அவன் மாறி இருக்குறதுல எனக்கு சந்தோஷம் தான். நிச்சயமா நீ சொல்றது சரி தான். ஒருத்தர் மாறும் போது அவங்களுக்கு நாம ஒரு வாய்ப்பு தரனும் “ என்று சஞ்சுவும் சொன்னாள். அதற்கு தலை அசைத்த ஆர்யன், “அது மட்டுமில்லாம மாயாவ சமாளிக்க அவன் சரியா இருப்பான்.” என்று கூறினான்.
“ அவ பயங்கர கோவத்தோட கிளம்பி போனா “ என்று சஞ்சு சொன்னதை கேட்டு, “எதுவா இருந்தாலும், அத பத்தி இப்போ பேச வேணாம்” என்று சொல்லி எழுந்து நின்ற ஆர்யன். “நம்ம பர்சனல் கொண்டாட்டத்துக்குப் போகலாமா?” என்று அவளிடம் கேட்டான்.
விருந்தினர்களை கவனித்துக் கொள்ளுமாறு ரஞ்சித்திடம் தெரிவித்துவிட்டு சஞ்சுவின் கையைப் பிடித்து மேன்ஷனுக்கு அழைத்துச் சென்றான் ஆர்யன். அவர்கள் உள்ளே நுழைவதற்கு முன் கௌசல்யா அவர்களைத் தடுத்து, திர்ஷ்டி எடுத்து, எப்போதும் அன்புடனும், பாதுகாப்புடனும் இருக்க இருவரையும் ஆசீர்வதித்து உள்ளே அனுமதித்தார்.
சஞ்சுவும், ஆர்யனும் கைகோர்த்து தங்கள் அறைக்குள் நுழைந்தனர். சஞ்சு கதவருகே நின்று ஆர்யனை முதலில் உள்ளே நுழைய அனுமதித்தாள்.
கதவைத் திறந்ததும் ஆர்யன் திகைத்துப் போனான். சஞ்சு கதவை மூடிவிட்டு அவன் பின்னால் நின்று அவன் இடுப்பைச் சுற்றி தன் கைகளைக் கட்டிக்கொண்டு, “ சர்ப்ரைஸ் புடிச்சு இருக்கா என் ஆச புருஷா ? “ என்று கிசுகிசுத்தாள்.
*************************
முன்னோட்டம்:
” இது என்னோட ரொம்ப நாள் ஆசை, உன்னோட இந்த அழகான இடுப்ப பார்க்குற அப்போலாம் ஒரு செயின் போட்டு பார்க்க ஆச. இது உன் இடுப்ப இன்னும் கவர்ச்சியா காட்டுது. என்னோட கல்யாண நாள் பரிசு புடிச்சுருக்கா ? “

1 comment
[…] Chapter 51 […]