ஏ.ஆர்.சி டவர்ஸ் வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் சலசலத்தது. ARC மற்றும் DC குழுமம் இணைந்து அதிகாரபூர்வமாக பிசினஸ் ஆரம்பித்தனர். வழக்கத்தை விட முன்னதாகவே ரஞ்சித் அலுவலகைத்த அடைந்த சிறிது நேரத்தில் பிரதீப்பும் அவனுடன் இணைந்தான்.
ஏ.ஆர்.சி.யில் பணிபுரிய போகும் டி.சி குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்களின் விரிவான பட்டியலை ரஞ்சித் ஏற்கனவே தொகுத்திருந்தான். அவர்களுக்கு தேவையான அனைத்து அணுகல் அட்டைகளும் ராஜேஷிடம் ஒப்படைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
காலை 9 மணியளவில், சரியான நேரத்தில் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிநிலையங்களுக்கு சென்றனர். மாயாவும், பிரதீப்பும் ஏற்கனவே தங்கள் அறைகளில் இருந்தனர், பிரதீப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பி.ஏ ஹரி, ஒரு சிறிய மீட்டிங் ஏற்பாடு செய்து ஊழியர்களை அதில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். மீடிங்கில் மாயா மற்றும் பிரதீப் உரையாற்றுவார்கள் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
ஆஷா என்ற இளமையான, வசீகரமான, புத்திசாலியான, நன்கு பேசக்கூடிய பெண்ணை மாயா தனக்கு PAவாக நியமித்து இருந்தாள்.
மீட்டிங் அறையில், மாயாவும் பிரதீப்பும் தங்கள் அணிக்கு முன்னால் நின்றனர், அவர்களின் முகபாவனைகள் நிதானமாகவும் தொழில்முறையாகவும் இருந்தது.
” இன்னைக்கு நாம அதிகாரப்பூர்வமா ஒரு புது அத்தியாயத்துல அடியெடுத்து வைக்குறோம்,” என்று தொடங்கிய மாயாவின் குரல் நம்பிக்கையுடன் இருந்தது. ” இந்த பார்ட்னர்ஷிப் ரெண்டு கம்பெனியோட வளர்ச்சிக்கும் ஒரு பெரிய மைல்கல்லா இருக்க நாம எல்லாரும் சேர்ந்து உறுதி செய்வோம்.” என்று சொன்னாள்.
அவளை தொடர்ந்து பேசிய பிரதீப், ” நாம இப்போ ஒன்னா வேலை செய்ய கையெழுத்து போட்டு இருக்கோம், குறிப்பா பாதுகாப்பு தொடர்பான ஏ.ஆர்.சி.யோட விதிகள எல்லாரும் கண்டிப்பாக பின்பற்றனும். இந்த டீல் மூலமா எல்லாருக்கும் நல்லதே நடக்கனும், நம்ம இலக்கை மையமாவும் வெச்சு வேலை செய்வோம் “ என்று கூறினான்.
மீட்டிங் முடிந்த பின்னர் அனைவரும் வேலைகளுக்கு திரும்பினர்.
ஹரியும், ரஞ்சித்தும் இணைந்து ஏற்கனவே ஏ.ஆர்.சி மற்றும் டி.சி ஊழியர்கள் பற்றிய முழு தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர். பிரதீப்பின் நெருங்கிய நண்பரும், அவன் ஆழமாக நம்பிய ஒருவருமான ஹரி, அனைத்து டிசி ஊழியர்களை பற்றிய பின்னணி சோதனையை முடித்திருந்தார்.
பின்னர் ஒரு தனிப்பட்ட உரையாடலில், ஹரி பிரதீப்பை அவனது அறையில் சந்தித்து, “ தினேஷ், ஆஷா இவங்க ரெண்டு பேரு தவிர எல்லா டிசி ஊழியர்களும் நேர்மையா வேலை செய்றவங்க தான் பிரதீப் “ என்று சொன்னார். அவர் வார்த்தையை கேட்டதும், “ “அவங்களுக்கு என்ன?” என்று கேட்டான் பிரதீப்.
“தினேஷ் ஹேக்கிங் செய்றதுல ரொம்ப ரொம்ப திறமைசாலி, அப்புறம் ஆஷா அவளோட வசீகரத்தால நெனச்ச வேலைய சாதிக்க கூடிய ஆளு “ என்று ஹரி சொன்னதும், “ நல்லது ஹரி. அவங்க ரெண்டு பேரோட நடவடிக்கைய கண்காணிக்க சொல்லி நம்ம செக்யூரிட்டி, ஹேக்கர் டீம் கிட்ட சொல்லிடு “ என்றான் பிரதீப்.
” சரி, ஆஷா கிட்ட மட்டும் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் “ என்று ஹரி சொல்ல, ” பவித்ரா, கீர்த்தி கிட்ட அவள பத்தி சொல்லிடு. இந்த விஷயத்துல அவங்க நமக்கு உதவி செய்வாங்க “ என்று கூறினான் பிரதீப்.
இதற்கிடையில், ஆர்யனும் சஞ்சுவும் தங்கள் தளத்த்தை அடைந்ததும் சஞ்சு தனது அறைக்கு சென்றாள். அந்த அறை இப்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, ஓய்வெடுக்கும் அறையுடன் முழுமையானதாக இருந்தது. அவள் இருக்கையில் அமர்ந்ததும் பிரதீப்பை அழைத்து முதல் நாள் நடவடிக்கை பற்றி விசாரித்தாள். எல்லாம் சீராக நடக்கிறது என்று பிரதீப் உறுதியளித்தவுடன், அவள் மற்ற வேலையில் கவனம் செலுத்தினாள். பின்னர் ஹரியை அழைத்து, “இன்னும் ஒரு மணி நேரத்துல பிரதீப்பையும் மாயாவையும் ஒரு மீட்டிங்குக்கு கூப்பிடுங்க” என்று சொன்னாள்.
ஹரி, ஆஷாவை அழைத்து மீட்டிங் பற்றி தெரிவித்ததும், “ நான் ஏன் அவளோட ஆர்டர் எடுத்து வேலை செய்யணும் ? கடவுளே! “ என்று நினைத்தபடி ஆஷாவின் மனம் எரிச்சலால் கொந்தளித்தது. இருப்பினும் மாயாவிடம் மீட்டிங் குறித்து தகவல் கொடுத்தாள்.
காலை 11 மணியளவில் சஞ்சு, பிரதீப், மாயா, ஹரி, ஆஷா ஆகியோர் மீட்டிங் அறையில் கூடினர்.
” இங்க வந்ததுக்கு நன்றி,” என்று தொடங்கிய சஞ்சுவின் குரல் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தது. ” நான் இந்த பிசினஸ்ஸ அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக விரும்புறேன் அதனால. விற்பனையை அதிகரிக்க மார்க்கெட்டிங் டீம் இத பத்தி பேசணும் அப்புறம் அதுக்கு ஏத்த மாதிரி உற்பத்தித்ய அதிகரிக்கணும். கஸ்டமரோட கருத்துக்கள கேட்டு, அவங்களுக்கு உண்மையில என்ன தேவைனு தெரிஞ்சிக்கிட்டு, தேவைப்பட்டா ஏற்கனவே இருக்க தயாரிப்புகள மாற்றுவோம் இல்ல புது காஸ்மெடிக் அறிமுகப்படுத்துவோம். இத முடிக்க ஒரு வாரம் போதுமானதா இருக்கும்னு நினைக்கிறேன். கடைசியா நீங்க முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி எனக்கு தெரியப்படுத்துங்க “ என்று சொன்னாள் சஞ்சு.
பிரதீப் தலையசைத்து, ” ரொம்ப நல்லா இருக்கு சஞ்சனா. நான் ஏற்கனவே மார்க்கெட்டிங் டீம் கிட்ட இத பேசி இருக்கேன், அப்புறம் நம்ம தயாரிப்பு பத்தி மதிப்பாய்வு சீக்கிரம் செஞ்சு முடிப்போம் “ என்று சொன்னான்.
சஞ்சு சரி என்று தலை அசைத்துவிட்டு மாயாவை பார்த்து, “மாயா, நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா ?” என்று கேட்டாள் ஆனால் மாயா இருக்கையில் பின்னால் சாய்ந்தபடி சஞ்சுவை பார்த்து, ” நான் யார் உத்தரவும் கேட்டு நடந்து பழக்கம் இல்ல, உத்தரவு கொடுத்து தான் எனக்கு பழக்கம் அதனால என்ன மிஞ்சி நடக்க முயற்சி பண்ணாம இருந்தா நல்லது.” என்று சொன்னாள்.
சஞ்சு அமைதியாக அவளை பார்த்து, “மாயா, நான் இங்க ப்ரொஃபஷனலா ( professional) இருக்கேன். எல்லோரும் ஒரே அதே மாதிரி இருக்கணும்னு நான் எதிர்பார்க்குறேன். நாம இங்க பிசினஸ் செய்ய தான் இருக்கோம், அதுல மட்டும் கவனம் இருந்தா நல்லா இருக்கும் “ என்று கூறினாள்.
உடனே மறுவார்த்தை பேசாமல் மாயா எழுந்து சட்டென்று அறையை விட்டு வெளியேறினாள். ஆஷாவும் அவளை நெருக்கமாகப் பின்தொடர்ந்தாள்.
பிரதீப் பெருமூச்சு விட்டு, ” அவ சீக்கிரம் இதுக்கெல்லாம் பழகிடுவா, அவள நெனச்சு நம்ம நிம்மதிய கெடுக்க வேணாம் “ என்று பிரதீப் சொல்ல, “ நீங்க சொல்றது சரி தான், வாங்க போகலாம் “ என்று சஞ்சு சொல்ல, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆர்யன் தனது அறையில் இருந்து கொண்டே மீட்டிங் அறையில் சஞ்சு நிலைமையை கையாளுவதைக் கேட்டதும் அவன் கண்களில் பெருமிதம் மின்னியது. தன் மேஜைக்கு திரும்பியவன், வரவிருக்கும் பொறியியல் கல்லூரி கட்டுமான டெண்டருக்காக சமர்ப்பிக்க வேண்டிய கொடேஷனை (quotation) மறுபரிசீலனை செய்வதில் கவனம் செலுத்தினான்.
அவன் ரஞ்சித்தை அழைத்து தேவையான விவரங்களை கொடுத்து, ” அடுத்த வாரம் கொட்டேஷன் அனுப்பனும், அதுக்கு தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணிடு “ என்று சொன்னான். ரஞ்சித் சரி என்று சொல்லி அறையை விட்டு வெளியேறினான்.
நாட்கள் கடந்தன. ஆஷா அவ்வப்போது ஹரியுடனும், பிரதீப்புடனும் நெருங்கி பழக கிடைத்த ஒவ்வொரு சிறிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டாள் ஆனால் கீர்த்தியும் பவியும் தங்கள் அறைகளில் இருந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்த கீர்த்தி, புதிய இலக்குகளை அடைவதில் தனது வேலையில் மூழ்கியிருந்தாள். அவளது கருத்துக்கள் கூர்மையாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்தன.
நேரம் பறந்தது, ஒரு வாரத்திற்குள், ஆர்யனின் டெண்டர் சமர்ப்பிக்க தயாராக இருந்தது. இதற்கிடையில், மாயா மற்றும் பிரதீப் ஆகியோர் விற்பனையை அதிகரிப்பது மற்றும் ஒரு புதிய தயாரிப்பை உருவாக்குவது குறித்த இறுதி அறிக்கையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அன்று மதியம் தினேஷ் மாயாவின் அறைக்குள் நுழைந்ததும், மாயா அவனை நிமிர்ந்து பார்த்து, “என்ன செய்தி தினேஷ்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “ஆர்யன் டெண்டருக்கு கொடேஷன் ரெடி பண்ணிட்டாரு மேடம், நாளைக்கு சமர்ப்பிக்க பிளான் பண்ணி இருக்காரு ” என்று கூறினான். அவன் சொன்னதை கேட்டதும், மாயாவின் உதடுகளில் ஒரு விஷமப் புன்னகை தவழ்ந்து, ” அப்ப அவரோட கொடேஷன் விவரங்கள எடுத்து என்கிட்ட கொடு.” என்று சொன்னாள்.
“நான் ஏற்கனவே அத எடுத்துட்டேன் மேடம், உங்க பர்சனல் மெயிலுக்கு அனுப்பிட்டேன்.” என்றான் தினேஷ் நம்பிக்கையுடன்.
“ரொம்ப நல்லது, நீ மத்த வேலைய பாரு, இத நான் பார்த்துக்குறேன் “ என்று மாயா சொன்னதும் தினேஷ் வெளியேறினான். அவன் சென்ற பிறகு, மாயா தனது மொபைலை எடுத்து ராஜேஷை அழைத்தாள்.
“நான் உனக்கு ஒரு மெயில் அனுப்புறேன். அதுல ஆர்யனோட கொடேஷன் இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி நம்ம கொடேஷன் மாத்திடு “ என்று சொன்னாள் மாயா. ராஜேஷும் எந்த கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்தான்.
அடுத்த நாள், ஆர்யன் மற்றும் சந்திரசேகர் இருவரிடமிருந்தும் மேற்கோள்கள் டெண்டர் எடுத்த வாடிக்கையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. வெற்றியாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு இறுதி கலந்துரையாடலுக்காக அனைத்து பில்டர்களும் அடுத்த இரண்டு நாட்களில் வாடிக்கையாளரை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாயா கண்களில் வெற்றிக் களிப்புடன் தன் அறையில் அமர்ந்திருந்தாள். நீண்ட காலத்திற்குப் பிறகு, ஆர்யன் இறுதியாக ஒரு டெண்டரை இழக்க போகிறான் என்ற மகிழ்ச்சியில் திளைத்தாள்.
மாயாவின் சூழ்ச்சி எதுவும் சந்திரசேகர் கவனிக்கவில்லை.
அடுத்த நாள் மற்ற நாட்களைப் போலவே விடிந்தது, ஏ.ஆர்.சி.யில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பணிகளில் ஆழ்ந்திருந்தனர். சஞ்சு, மாயா மற்றும் பிரதீப் ஆகியோர் மார்க்கெட்டிங் குழுவுடன் ஒரு மதிப்பாய்வு மீடிங்கில் இருந்தனர்.
கீர்த்தி நம்பிக்கையுடன் முன்வந்து புதிய விற்பனை உத்திகளை முன்வைக்கத் தொடங்கினாள். அவளது முன்மொழிவின் ஒரு பகுதி கிராமப்புறங்களிலிருந்து ஒரு புதிய பெண்ணை மாடலாக அறிமுகப்படுத்துவது சம்பந்தப்பட்டது – இது ஒரு ஆபத்தான முயற்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் அனைவரையும் கவர்ந்தது.
கீர்த்தி சொன்ன அனைத்தையும் கவனமாகக் கேட்ட பிறகு, சஞ்சு தலையசைத்து அந்த யோசனைக்கு சம்மதம் சொன்னாள். அதோடு விரைவாக புதிய விளம்பரத்தை திட்டமிட சொன்னாள்.
கீர்த்தி தனது சந்தைப்படுத்தல் விளக்கக்காட்சியை முடித்தபோது, ஆராய்ச்சித் துறையை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக அறைக்குள் நுழைந்தார்கள்.
சஞ்சு, ” கஸ்டமருக்கு அவங்க தோல் நிறம் மாறும்னு எந்த தவறாக வாக்குறிதியும் நாம கொடுக்க மாட்டோம். நம்ம காஸ்மெடிக் பயன்ப்படுத்துனா அவங் சருமம் இயற்கையாவே பளபளப்பா இருக்கும்னு தான் சொல்லுவோம். அது மட்டும் இல்ல நம்ம புதிய தயாரிப்பு எல்லாமே இயற்கை பொருள் மூலமா தான் செய்வோம் “ என்று திட்டவட்டமாக கூறினாள்.
“கிராம மக்கள் கிட்ட இருந்து அவங்களோட எதிர்பார்ப்பு அப்புறம் இயற்கையில இருந்து அவங்க பயன்படுத்துற பொருட்கள் பத்தி நாம தெரிஞ்சிக்கலாம் “ என்று பிரதீப் சொன்னதை கேட்டு, மாயாவும் சம்மதித்து, “ இத பத்தி எல்லா தகவலும் சேகரிக்க ஒரு குழுவ அனுப்புவோம். ஒரு சர்வே மாதிரி அவங்க இத செய்யட்டும் “ என்று கூறினாள்.
” ரொம்ப நல்ல யோசனை ” என்று சொல்லி, முன்னேற்றத்தில் திருப்தியுடன் சஞ்சு புன்னகைத்தாள்.
அடுத்தடுத்த மீட்டிங் நிறைந்த ஒரு நீண்ட நாளின் முடிவில், சஞ்சு ஆர்யனுக்கு முன்பே வீட்டை அடைந்து, முற்றிலும் சோர்வாக உடனே தூங்கிவிட்டாள். அவள் ஆழ்ந்த உறக்கத்தைக் கண்ட கௌசல்ய அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார்.
அன்று மாலை ஆர்யன் வீடு திரும்பியதும் தன் மனைவி நிம்மதியாக ஓய்வெடுப்பதைக் கண்டு அவளை தொந்தரவு செய்யாமல் அவன் அமைதியாக புத்துணர்ச்சி பெற்று அதன் பின்னர் அவளை மெதுவாக எழுப்பினான்.
“சஞ்சு, எழுந்திரு ஸ்வீட் ஹார்ட், வா டின்னர் சாப்பிடலாம்.” என்று கிசுகிசுத்தவன், அவள் தலைமுடியை மென்மையாக கோதிவிட்டான். சஞ்சு எழுந்து புத்துணர்ச்சி பெற்று கீழே சென்ற போது லிவிங் அறையில் ஆர்யன் மொபைலில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இருவரும் ஒன்றாக இரவு உணவிற்குப் பிறகு தங்கள் அறைக்குத் திரும்பினர்.
ஆர்யன் அவளை கட்டிப்பிடித்து இழுத்து கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டான்.
” பொண்டாட்டி, உனக்கு வேலையால டென்ஷன் ஆகுதா ?” என்று ஆர்யன் கவலையுடன் கேட்டதும், சஞ்சு அவன் மீது சாய்ந்து “இல்லை ஆர்யன், நான் நல்லா இருக்கேன்” என்றாள்.
“நான் ரெண்டு நாளா உன்ன பாத்துட்டு இருக்கேன். நீ ரொம்ப சோர்ந்து போய் இருக்க. வேணும்னா நான் பிரதீப் கிட்ட சொல்லி பிசினஸ் மொத்தமா அவன பாத்துக்க சொல்லட்டுமா ? நீ வீட்ல இருந்துட்டு ரெஸ்ட் எடுக்கலாம் “ என்று ஆர்யன் மென்மையாக சொன்னான் ஆனால் சஞ்சு மறுத்து தலை அசைத்து, “இல்ல ஆர்யன், நான் வேலை செய்றதுல சந்தோஷமா தான் இருக்கேன். கொஞ்சம் சோர்வா தான் இருக்கு ஆனா கவலைப்பட வேணாம், போக போக எல்லாம் சரியாகிடும். பிசினஸ் கொஞ்சம் நிலையான அப்புறம் வேலை குறைஞ்சிடும் “ என்று புன்னகையோடு சொன்னாள்.
” கண்டிப்பா தான் சொல்றியா ? நீ பிசினஸ் செய்றத பார்த்து எனக்கு பெருமையா தான் இருக்கு ஆனா நீ கவலைப்படுறதையோ இல்ல சோர்வா இருக்குறதையோ என்னால பொறுத்துக்க முடியாது.” என்று அவள் தலைமுடியை கோதியபடி சொன்னான் ஆர்யன்.
” நான் வேலை செய்றதுல ரொம்ப சந்தோஷமா இருக்கேன், வேலை எப்படி போகுதுனு என்கிட்ட கேட்க மாட்டியா ? “ என்று சஞ்சு சொல்ல “உன் திறமை எனக்குத் தெரியும். நான் உன்ன நம்புறேன் – பிரதீப்பையும் நம்புறேன். அதனால நம்ம காஸ்மெடிக் பிசினஸ் பத்தி இனி நான் கவலைப்படவே மாட்டேன்” என்று ஆர்யன் பெருமிதத்துடன் பதிலளித்தான்.
சஞ்சு அவன் பதில் கேட்டு சிரித்தபடி, “ சரி உங்க வேலை எப்படி போகுது?” என்று கேட்டாள். அதற்கு ஆர்யன், “ இன்ஜினியரிங் காலேஜ் கட்ட டெண்டர் கொடுத்துருக்கோம், அதோட முடிவு நாளைக்கு வரும் “ என்று சொன்னான்.
“சரி, போதும் இதுக்கு மேல் நம்ம ரூம்ல பிசினஸ் பேச வேணாம் “ என்று புன்னகையோடு சஞ்சு சொல்ல, “ நல்லது, வா தூங்கலாம், நீ ரொம்ப களைப்பா இருக்க “ என்று ஆர்யன் ஒரு விளையாட்டுப் புன்னகையுடன் அவளைத் தூக்கி படுக்கைக்கு அழைத்துச் சென்றான். அவள் தன் தலையை அவன் மார்பில் சாய்த்துக் கொண்டாள். அவன் அவளுடைய தலைமுடியை விரல்களால் கோதிவிட்டு, அவளை மென்மையாகத் தட்டி உறங்கச் செய்தான்.
மறுநாள் அதிகாலையில் எழுந்த ஆர்யன் தன் அருகில் இன்னும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சஞ்சுவைப் பார்த்தான். அவளை எழுப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன், வேலைக்குத் தயாரானான். கிளம்பும் முன் அவள் நெற்றியில் முத்தமிட்டு கட்டிலில் அவளருகில் ஒரு குறிப்பை எழுதி வைத்துவிட்டு கீழே சென்றான்.
கௌசல்யா காலை உணவை டேபிள் மேல் வைத்துக் கொண்டிருப்பதை பார்த்து, “ அம்மா, சஞ்சு இன்னும் தூங்கிட்டு இருக்கா, அவள எழுப்ப வேணாம், அவளே எழுந்த அப்புறம் ப்ரேக்பாஸ்ட் கொடுங்க “ என்று ஆர்யன் சொன்னதும், “கண்டிப்பா சார்” என்று தலையசைத்தார் கௌசல்யா.
“அவ ரொம்ப பலவீனமாவும் சோர்வா கூட இருக்கா அதனால கொஞ்சம் ஆரோக்கியமா இருக்க மாதிரி சூப் கொடுங்க. நான் சாயங்காலம் சீக்கிரம் வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு காலை உணவுக்கு பிறகு அலுவலகம் புறப்பட்டு சென்றான்.
சஞ்சு இறுதியாக 11 மணியளவில் எழுந்து மெல்ல கொட்டாவி விட்டாள். படுக்கையில் அவளுக்குப் பக்கத்தில் ஒரு குறிப்பு இருப்பதைக் கவனித்தாள். புன்னகையுடன் அதை எடுத்துப் படித்தாள்:
“ ஹாய் பொண்டாட்டி ,
ப்ளீஸ் இன்னைக்கு வீட்ல இரு. உனக்கு உடம்பு சரி இல்லாத மாதிரி இருக்கு. நீ வர மாட்டணு பிரதீப் கிட்ட சொல்லிடுறேன் அதனால நல்லா ரெஸ்ட் எடு, நாம சாயங்காலம் சந்திக்கலாம்.
ஆரோக்கியமா சாப்பாடு சாப்பிடு, கௌசல்யா அம்மா கிட்ட தயார் செய்யச் சொல்லியிருக்கேன்.
கண்டிப்பாக ஆபீஸ் போன் பேசக் கூடாது, நல்லா ரெஸ்ட் எடு இல்லனா தண்டனைக்குத் தயாரா இரு.
லவ் யூ
ஆர்யன்”
சஞ்சு அந்தக் குறிப்பைத் தன் இதயத்தோடு அணைத்துக் கொண்டாள்.
********************
முன்னோட்டம்:
நீங்க உங்க பொண்ணுக்கு இன்னும் நல்லா பிசினஸ் சொல்லிக் கொடுக்கணும்னு நினைக்குறேன். என் கம்பெனி நெட்வொர்க் ஹேக் பண்ணதுக்கு நான் DC குழுமத்துக்கு எதிரா சட்ட நடவடிக்க எடுக்க முடியும். DC குழுமம் பாதுகாப்பு விதிமுறைகள மீறி நடந்ததுக்கு காஸ்மெடிக் பிசினஸ் நிறுவனத் தலைவி சஞ்சனா ஆர்யனும் சட்ட நடவடிக்கை எடுக்க என்னால பரிந்துரைக்க முடியும்

1 comment
[…] Chapter 62 […]