மருத்துவர்கள் சஞ்சனாவைப் பரிசோதித்த போது, பவியும் கீர்த்தியும் சிகிச்சை அறைக்கு வெளியே காத்திருந்தனர், இருவரின் விரல்கள் பதற்றத்துடன் படபடத்தன. தங்கள் தோழியுடன் சிரித்து, விளையாடி ஒரு முழு நாள் பொழுதுக்கு பிறகு, அவர்கள் அமைதியாக இருந்திருக்க வேண்டும், ஆனால் சஞ்சுவின் திடீர் உடல் நிலை அவர்களை கவலையில் ஆழ்த்தியது. குற்றவுணர்ச்சி அவர்களுடைய இதயங்களை அரித்தது. அவள் உண்மையிலேயே அந்த நாளை அனுபவித்தாளா அல்லது அமைதியாக மன அழுத்தத்துடன் போராடினாளா ? அவர்கள் அறிகுறிகளைத் தவறவிட்டார்களா என்று யோசிக்க வைத்தது.
அப்போது, ரஞ்சித்தின் கார் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்தது. அவன் முழுவதுமாக பிரேக் பிடிக்கும் முன்னரே ஆர்யன் வெளியே குதித்து புயல் போல உள்ளே ஓடினான். அவனது அசைவுகளின் அவசரத்தைக் கண்டு மருத்துவமனை ஊழியர்கள் திடுக்கிட்டனர். பவியையும் கீர்த்தியையும் பதட்டமான மயக்கத்திலிருந்து எழுப்பிய அவனது குரல் தாழ்வாரம் முழுவதும் எதிரொலித்தது.
“பவி! சஞ்சு எங்க ? எப்படி இருக்கா?” என்று ஆர்யன் பீதியில் இறுகிய குரலில் கேட்டான்.
” அண்ணா, டாக்டர் அவளுக்கு ட்ரீட்மென்ட் பண்றாங்க” என்று சிகிச்சை அறையை சுட்டிக்காட்டி பதிலளித்தாள் பவி.
“டாக்டர் ஏதாவது சொன்னாரா?” என்று ஆர்யன் மீண்டும் கேட்க, “இல்ல, ஆனா அவளுக்கு ஒன்னும் ஆகாது, அவ நல்லா இருப்பா “ என்று சொல்லி பவி தைரியமாக இருக்க கடுமையாக முயற்சித்தாள்.
” என்ன நடந்துச்சுனு சரியா சொல்லுங்க ” என்று ஆர்யன் கேட்டான், அதற்கு கீர்த்தி அவனிடம், “ அண்ணா, அவ நல்லா இருந்தா. நாங்க ரொம்ப சந்தோஷமா நாள் முழுக்க இருந்தோம், தண்ணியில கூட விளையாடினோம். அதுக்கு அப்புறம் குளிச்சி ரெடி காபி குடிக்க தோட்டத்துல இருந்தோம். உள்ள இருந்து மொபைல் எடுக்க எழுந்தா அப்போ திடீர்னு மயங்கி விழுந்துட்டா. நாங்க அவள எழுப்ப முயற்சி பண்ணோம் ஆனா அவ எழுந்துக்கல “ என்று விளக்கமாக கூறினாள்.
“அவளுக்கு மன அழுத்தம் வந்திருக்குமோ?” என்று கேட்டாள் பவி. அதற்கு ஆர்யன், “இல்ல, அவ மன அழுத்தத்துல இல்ல,” என்று உறுதியாக பதிலளித்தான்.
அப்போது, சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் ஆர்யனின் பெயரைக் கூப்பிட்டார்.
“டாக்டர், சஞ்சு எப்படி இருக்கா ? அவளுக்கு டென்ஷன் காரணமா இப்படி ஆச்சா ? “ என்று ஆர்யன் உடனே கேட்டான். அதற்கு டாக்டர் அவனிடம், “ரிலாக்ஸ் ஆர்யன். அவங்க நல்லா இருக்காங்க “ என்று அவனுக்கு உறுதியளித்தார்.
“அவளுக்கு என்ன ஆச்சு ?” என்று ஆர்யன் மீண்டும் கேட்க, “அவங்க இப்போ கண் விழிச்சு இருக்காங்க. முதல்ல போய் அவங்கள பாருங்க, அப்புறம் பேசலாம்.” என்று டாக்டர் சொன்னதும், மறுவார்த்தை பேசாமல் ஆர்யன் அறைக்குள் விரைந்தான். சஞ்சனா கட்டிலில் முகம் வெளிறி விழித்திருந்தாள். அவளிடம் ஓடிச்சென்று அவள் கன்னங்களை பற்றி, கண்களில் கண்ணீருடன் அவள் நெற்றியில் முத்தமிட்டபோது அவனுக்குள் நிம்மதி பொங்கியது.
“சஞ்சு, என்ன நடந்துச்சு, பேபி ? உன்னை பார்க்குற வரை எனக்கு உயிரே போன மாதிரி இருந்துச்சுடி “ என்று ஆர்யன் சொல்ல, “ நான் நல்லா இருக்கேன் ஆர்யன்” என்று மென்மையாக சொல்லி அவன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து ஒரு முத்தம் பதித்தாள் சஞ்சு.
“இப்ப எப்படி இருக்க ? சொல்லு என்ன நடந்துச்சு ?” என்று ஆர்யன் மீண்டும் கேட்டதும், “ஆர்யன், என்ன பாரு” என்று சொல்லி அவன் கையை எடுத்து தன் அடிவயிற்றுக்கு கொண்டு சென்றாள்.
அவன் கண்கள் குழப்பத்துடன் அவளது சைகையைப் பின்தொடர்ந்தன.
“என்ன ஆச்சு மா ?” என்று ஆர்யன் கேட்க, “ஷ்ஷ்ஷ், அமைதியா இரு, உன் பையன் பிறக்கறதுக்கு முன்னாடியே உன்ன எப்படி பயமுறுத்தி இருக்கான் பாரு” என்று சஞ்சு கிசுகிசுத்தாள், அவள் உதடுகளில் ஒரு மென்மையான புன்னகை விளையாடியது.
அவளது வார்த்தைகளில் அவன் புரியாமல் கண்கள் சிமிட்டினான். அவன் கை எங்கே இருக்கிறது என்று பார்த்த பிறகே புரிதல் ஏற்பட்டு அவள் முகத்தைப் பார்த்தான். இப்போது அவள் வெட்கத்தில் சிவந்து இருந்தது. அவனது கண்கள் விரிந்து, யதார்த்தத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. உறுதிப்படுத்தக் கேட்பது போல மெதுவாகத் தலையசைத்தவன், பிறகு ஒரு மென்மையான மலரைத் தொடுவதைப் போல பயபக்தியுடன் அவள் அடிவயிற்றை மென்மையாகத் தடவினான்.
“சஞ்சு… ஸ்வீட் ஹார்ட், ஐ லவ் யூ, ஐ லவ் யூ சோ மச்” என்று கிசுகிசுத்தவன், அவளை இழுத்து மென்மையாக அணைத்து அவள் தலை முடியில் முத்தமிட்டான்.
” ஐ லவ் யூ ” என்று சொன்ன சஞ்சுவின் குரல் உணர்ச்சியால் நடுங்கியது.
“என் வாழ்நாள் முழுக்க நான் தனியா இருப்பேன்னு நெனச்சேன் ஆனா நீ வந்து என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து இருக்க. இப்போ, நம்ம காதலுக்கு ஒரு உயிர் கிடைச்சு இருக்கு. இந்த உலகத்துலயே இப்போ நான் தான் ரொம்ப சந்தோஷமான மனுஷன். நீயும், நம்ம குழந்தையும் தான் எனக்கு எல்லாமே.” என்று ஆர்யன் உணர்வுப்பூர்வமாக சொல்லி அணைப்பில் இருந்து பின்வாங்கி அவள் உதட்டை முத்தமிட்டு, “என் வாழ்க்கையில வந்தததுக்கு நன்றி. நம்ம குழந்தைக்காக நன்றி ” என்று கூறினான்.
” நன்றி சொல்லாத, முட்டாள்,” என்று சஞ்சு விளையாட்டாகத் திட்டினாள். ” நாம ஒன்னா இருக்க பிறந்தவங்க. ஸாரி, நன்றி நமக்குள்ள சொல்ல தேவையில்லை, நாம நிறைய லவ் மட்டும் பண்ணுவோம் “ என்று சொன்னாள்.
” ஐ லவ் யூ மம்மீ “ என்று ஆர்யன் கிண்டலாக சொல்ல, ” ஐ லவ் யூ டாடி” என்று சஞ்சு சிரித்தாள்.
கண்கள் மகிழ்ச்சியில் பொங்க இருவரும் சிரித்தனர். அப்போது ஆர்யன், “வெளியில எல்லோரும் பயத்துல இருப்பாங்க. முதல்ல அவங்கள அமைதிப்படுத்துவோம்.” என்று சொன்னான். அதற்கு சஞ்சு, “அவங்கள உள்ள கூப்பிடு” என்று கூறினாள்.
ஆர்யன் கதவைத் திறந்தான். “நீங்க இப்போ உள்ள வரலாம்.” என்று சொன்னதும், ரஞ்சித், பவி, கீர்த்தி மூவரும் உள்ளே விரைந்தனர், நெருக்கமாக நின்ற தம்பதிகளின் வெட்கப்படுவதைக் கண்டதும் அவர்கள் முகத்தில் இருந்த பயம் விரைவில் குழப்பமாக மாறியது.
“சஞ்சு, என்ன நடந்துச்சு ? எப்படி இருக்க?” என்று கேட்டபடி பவி அவளை நோக்கி விரைந்தாள். “நான் பயத்துல செத்து போய் இருப்பேன் “ என கீர்த்தி கண்ணீருடன் கூறினாள்.
“பவி, கீர்த்தி, ரஞ்சித் அண்ணா, நான் நல்லா இருக்கேன், ப்ளீஸ் அமைதியா இருங்க “என்று சஞ்சு அவர்களுக்கு உறுதியளித்தாள் ஆனால் ரஞ்சித் அவளிடம், “ சஞ்சு மா, ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் வர எவ்ளோ வேகமா கார் ஒட்டிட்டு வந்தோம் தெரியுமா ? இப்போ சொல்லு என்ன ஆச்சு ? “ என்று கேட்டான்.
சஞ்சு ஆர்யனிடம் திரும்பி, மௌனமாக உதவி கேட்டாள். அதை கவனித்த கீர்த்தி, “ஏன் அண்ணாவ பார்க்குற ? பதில் சொல்லுடி ” என்று கேட்டாள்.
ஆர்யன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவர்களின் கவனத்தை ஈர்த்தான்.
“ஹ்ம்ம்… நாங்க அப்பா, அம்மா ஆக போறோம் “ என்று ஆர்யன் அறிவித்ததும், மூவரும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர், பின்னர் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். பவியும், கீர்த்தியும் சஞ்சுவை கட்டிப்பிடிக்க, ரஞ்சித் ஆர்யனின் முதுகில் தட்டி, அவனை இழுத்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தான்.
” கடவுளே ! சஞ்சு! என்ன இவ்ளோ சீக்கிரம் சித்தி ஆக்கிட்ட “ என்றாள் பவி மகிழ்ச்சியோடு.
“கள்ளி, நீயே குழந்த மாதிரி இருந்த, இப்போ உனக்கு ஒரு குழந்த வர போகுது “ என்று கீர்த்தி சொன்னாள். அவர்களின் வார்த்தையை கேட்டு, சஞ்சு வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள்.
” நான் டாக்டர பார்க்க போறேன் ” என்று ஆர்யன் கிளம்பத் தயாரானான் அப்போது, “ “நானும் வரேன்” என்று சஞ்சு எழுந்தாள். உடனே ஆர்யன் அவளை தடுத்து, “இல்ல இறங்காத. நீ ரெஸ்ட் எடு, நான் சீக்கிரம் வந்துடறேன் ” என்றான் உறுதியாக.
அப்போது டாக்டர் மீண்டும் அறைக்குள் நுழைந்து, “தேவை இல்ல, நானே வந்துட்டேன். வாழ்த்துக்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆர்யன் “ என்று அவர்களை வாழ்த்தினார்.
“ரொம்ப நன்றி டாக்டர்” என்று இருவரும் ஒருமித்த குரலில் பதில் சொன்னார்கள்.
“டாக்டர், இப்போ சஞ்சு எப்படி இருக்கா ?” என்று ஆர்யன் கேட்க, “அவங்க ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்காங்க, இதுவர எந்த அறிகுறியும் கவனிக்காம எப்படி இருந்தீங்க ?” என்றார் டாக்டர்.
” கொஞ்ச நாளா சோர்வா இருந்தா ஆனா கர்ப்பமா இருப்பானு நாங்க யோசிக்கவே இல்ல “ என்று ஆர்யன் பதில் சொன்னான்.
“பரவாயில்ல, அவங்க கொஞ்சம் பலவீனமா இருக்காங்க அதனால கண்டிப்பா ரெஸ்ட் வேணும். நான் வைட்டமின் மாத்திரை எழுதுறேன், தினமும் சாப்பிட சொல்லுங்க “ என்று டாக்டர் சொன்னதும், “கண்டிப்பா டாக்டர். ரொம்ப தேங்க்ஸ்.” என்றான் ஆர்யன்.
“அடுத்த மாசம், நீங்க மகப்பேறு டாக்டர் கிட்ட செக்கப் வாங்க. இப்போதைக்கு, அவங்க குறைஞ்சது ஒரு மாசம் ஆச்சும் ரெஸ்ட் எடுக்கணும். இது குழந்தையோட பாதுகாப்புக்கு ரொம்ப முக்கியம் “ என்று டாக்டர் சொல்ல, “ எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் “ என்று ஆர்யன் வாக்குறுதி அளித்தான்.
“நீங்க இப்போ அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் “ என்று சொல்லிவிட்டு டாக்டர் விடைபெற்று சென்றார்.
சஞ்சு படுக்கையிலிருந்து கீழே இறங்க முயன்று நகர ஆரம்பித்தாள். ஆனால் அவள் கால்கள் தரையைத் தொடுவதற்குள் ஆர்யன் அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.
“ஆர்யன்! நீ என்ன செய்ற ? என்ன கீழ விடு ” என்று திடுக்கிட்டுச் சிரித்தாள். ஆனால் ஆர்யன், “ அமைதியா வா, வீட்டுக்குப் போகலாம்” என்று அவளை அணைத்துக் கொண்டான்.
ஆச்சரியத்தில் மூழ்கிய மற்ற மூவரும் மருத்துவமனை அறையில் இருந்து விரைவாக அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
“பவி, கீர்த்தி, நீங்க எங்களோட வீட்டுக்கு வரீங்களா ?” என்று அவர்கள் வெளியேறும் வழியை நோக்கி நடந்தபோது ஆர்யன் கேட்டான். ஆனால், “இல்ல அண்ணா, நாங்க வீட்டுக்கு போறோம் “ என்று பவி புன்னகையுடன் சொன்னாள்.
” ரஞ்சித், கார்ட்ஸ் கிட்ட சொல்லி அவங்கள பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லு “ என்று ஆர்யன் உத்தரவிட்டான்.
ரஞ்சித் அதை ஆமோதிப்பது போல் முணுமுணுத்தபடி காரை மருத்துவமனை வாசலுக்கு ஒட்டி வர விரைந்தான். ஆர்யன் இன்னும் சஞ்சுவை தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவளை மெல்ல பின் சீட்டில் அமர வைத்து, அவளருகில் அமர்ந்தான். திரும்பி செல்லும் வழி முழுவதும், அவன் அவள் கையைப் பிடித்து, மௌனமாக அவளது விரல்களை மென்மையாக வருடினான்.
அவர்கள் வீட்டை அடைந்ததும், கௌசல்யா அவர்களை ஆரத்தியுடன் வரவேற்க காத்திருந்தார். நல்ல செய்தியை ரஞ்சித் ஏற்கனவே அவரிடம் தெரிவித்திருந்தான், அதனால் அவர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். வீட்டுப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் புன்னகையுடனும் அன்பான வாழ்த்துக்களுடனும் தங்கள் எஜமானரையும் அவரது மனைவியையும் வாழ்த்தத் தயாராக நுழைவாயிலுக்கு அருகில் கூடியிருந்தனர்.
ஆர்யன் சஞ்சுவை காரில் இருந்து இறங்க உதவினான். கௌசல்யா இருவருக்கும் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்த பின்னர் உள்ளே அனுமதித்தார்.
அனைவரிடமிருந்தும் மனமார்ந்த வாழ்த்துக்களைப் பெற்ற பிறகு, அவர்கள் லிவிங் அறையில் அமர்ந்தனர். கௌசல்யா ஒரு நொடியும் தாமதிக்காமல், ஒரு கிளாஸ் ஜூஸ் கொண்டு வந்து சஞ்சுவிடம் கொடுத்தார்.
“அம்மா, இப்போ எதுக்கு ? எனக்குப் பசிக்கல” என்று சஞ்சு மறுத்தாள் ஆனால் கௌசல்யா, “ அப்படிச் சொல்ல கூடாது, இனிமே பசிக்கலனு சொல்ல கூடாது. ஒழுங்கா நான் கொடுக்குறத எல்லாம் சாப்பிடனும் “ என்று உறுதியாக சொன்னார்.
“ப்ளீஸ் மா” என்று மென்மையாக கெஞ்சினாள் சஞ்சு ஆனால் கௌசல்யா, “ முடியாது, கண்டிப்பா குடிச்சே ஆகணும் “ என்று தீர்மானமாக சொன்னார்.
சஞ்சு மீது கௌசல்யா அக்கறை காட்டுவதை பார்த்த ஆர்யன் உணர்ச்சிவசப்பட்டான்.
“கௌசல்யா மா, சஞ்சுவ கவனிச்சுக்குறதுக்கு ரொம்ப நன்றி.” என்று ஆர்யன் சொன்ன போது அவனது குரல் உணர்ச்சியால் தடிமனானது.
” என்ன சார், சஞ்சு என் பொண்ணு மாதிரி, அவளுக்கு நான் செய்யாம வேற யார் செய்வா ? “ என்று கௌசல்யா சொன்னதும், சஞ்சு எழுந்து நின்று அவரை இறுக அணைத்துக் கொண்டாள், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
உணர்ச்சிகரமான தருணம் தீர்ந்தவுடன், ஆர்யன் சஞ்சுவிடம் திரும்பி, ” டாக்டர் உன்ன ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு அதனால இனி ஆபீஸ் போக வேணாம், வீட்ல இருந்து ரெஸ்ட் மட்டும் எடுத்தா போதும் “ என்று கூறினான்.
அவன் வார்த்தையை கேட்டதும், “ஆர்யன், ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு. நாம ஆபீஸ் போவோம், நான் நல்லா இருப்பேன் ” என்று மென்மையாக வாதிட்டாள் சஞ்சு. அதற்கு ஆர்யன் உடனே, “ நீ ஆபீஸ்ஸுக்கு தனியா போக போறியா ? “ என்று குழப்பமாக கேட்டான்.
“ஏன்? நீ போக மாட்டியா ?” என்று சஞ்சு அவனிடம் கேட்டதும், “இல்ல, நான் என் பொண்டாட்டி கூட ஒரு மாசம் வீட்ல இருக்க போறேன் “ என்று அமைதியாக பதிலளித்தான்.
“விளையாடுறியா ?” என்று அவள் நம்பமுடியாமல் கேட்க, “நான் சீரியஸா சொல்றேன். உன்னை விட வேறு எதுவும் முக்கியமில்ல. அது எனக்கு கோடிக்கணக்கான இழப்புகளை ஏற்படுத்தப் போறதா இருந்தா கூட எனக்கு கவல இல்ல. இப்போ என்ன நம்பு, நான் வீட்ல இருந்தே பிசினஸ் கவனிக்க முடியும், பிரதீப் உன் வேலைய பார்த்துக்குவான் “ என்று சொல்லி நம்பிக்கை அளித்தான் ஆர்யன்.
” நீ ரொம்ப மோசம்,” என்று சஞ்சு விளையாட்டாக உதட்டைப் பிதுக்கினாள். அதற்கு ஆர்யன், “ இருக்கட்டும், இப்ப வா, உனக்கு ரெஸ்ட் வேணும்” என்று சொல்லி அவளை மீண்டும் தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
“ஆர்யன், என்ன இப்படி எல்லா இடத்துக்கும் தூக்கிட்டு போக போறியா ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் சஞ்சு.
“ஆமா, நிச்சயமா, நீ கீழ இறங்கவும் கூடாது, படி ஏறவும் கூடாது, புரியுதா ? “ என்று கண்டிப்புடன் சொன்னான்.
சஞ்சு சிரித்தபடி சரி என்று சொல்லி அவன் கன்னத்தை கிள்ளி வேகமாக முத்தமிட்டாள். ஆர்யன் அவளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்து அவள் மேலாடையை அவிழ்த்தான்.
” என்ன செய்ற?” என்று சஞ்சு கேட்க, “ஒண்ணுமில்ல பேபி, கொஞ்சம் அமைதியா இரு” என்று சொல்லிவிட்டு அவளருகில் அமர்ந்து குனிந்து அவள் அடிவயிற்றில் மென்மையாக முத்தமிட்டான். பிறகு உள்ளே வளர்ந்து கொண்டிருந்த சின்னஞ்சிறு உயிரிடம் பேச ஆரம்பித்தான்.
” ஹாய் பாப்பா, நான் அப்பா பேசுறேன். எங்க வாழ்க்கையில வந்ததுக்கு நன்றி. நான் உன்ன நிறைய லவ் பண்ணுவேன், உன்ன என்னோட கையில தூக்கி கொஞ்ச காத்துட்டு இருக்கேன் “ என்று சொன்னான். அப்போது திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. கண்களை இடுக்கிக் கொண்டு சஞ்சுவை நிமிர்ந்து பார்த்து, “ நம்ம குழந்தை ஆண் குழந்தையா இருக்கும்னு எப்படி சொன்ன?” என்று கேட்டான்.
“எனக்கு உன்னை மாதிரி ஒரு பையன் வேணும்னு சொன்னேன்” என்றாள் சஞ்சு சிரித்தபடி. அதற்கு ஆர்யன், “ அதெல்லாம் முடியாது, எனக்கு உன்ன மாதிரி ஒரு பொண்ணு வேணும். என் இளவரசி” என்றான் போலிப் பிடிவாதத்துடன்.
” முடியாது போடா, அவன் அம்மா பையனா இருப்பான்” என்று சஞ்சு விளையாட்டாக பதிலளித்தாள்.
” சரி, பையனோ இல்ல பொண்ணோ, நம்ம குழந்த நல்லா ஆரோக்கியமா பிறக்கும் ஆனாலும் நான் பொண்ணு தான் வேணும்னு ஆசைப்படுறேன் “ என்றான் ஆர்யன். அதற்கு சஞ்சு, “ பார்க்கலாம், அதுக்கு இன்னும் நிறைய மாசம் இருக்கு “ என்று சொன்னாள்.
ஆர்யன் குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். “என் சந்தோஷத்த சொல்ல வார்த்தையே இல்ல பேபி, நான் அவ்ளோ சந்தோஷமா இருக்கேன் “ என்று சொன்னான்.
சிரிப்பும், அன்பும், வளர்ந்து வரும் குடும்பத்தின் அமைதியான வாக்குறுதியும் நிறைந்த அந்த தருணம் அவர்கள் இருவரின் இதயத்திலும் முக்கிய நாளாக பதிந்தது.
**************
முன்னோட்டம்:
“ ஒய் பொண்டாட்டி, கர்ப்பமா இருக்கும் போது ஹனிமூன் போன முதல் ஜோடி நாம தான்னு நினைக்குறேன், வேற யாரும் போய் இருக்க மாட்டாங்க “

1 comment
[…] Chapter 65 […]