Home FamilyChapter 78

Chapter 78

by Siragugal Novels
10 views

சஞ்சு ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து, ஆர்யனின் போட்டோ பிரேமை மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்தாள். காலைச் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் ஜன்னல் கண்ணாடியில் இருந்த சிறு பனித்துளிகளில் பிரதிபலித்தன. மெல்ல ஜன்னலைத் திறந்ததும், தோட்டத்தில் இருந்த ரோஜாக்களின் இதழ்களிலும், செடியின் இலைகளிலும் பளபளக்கும் பனித்துளிகள், மென்மையான ஒளியில் குளித்தது. ஆர்யனுடன் இருந்த வேறு எந்த நாளாக இருந்தாலும், அவள் பார்த்த காட்சி அவள் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பியிருக்கும். ஆனால் இன்று அவள் தனிமையில் இருக்கும் போது எந்த ஒரு காட்சியும் அவள் மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரவில்லை. அவள் ஒரு காலத்தில் ஏங்கிய கனவு இல்லம், ஒவ்வொரு விவரமும் அவளது ரசனைக்கேற்ப கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது ஆனால் ஆர்யன் இல்லாமல் எந்த அரவணைப்பும் இல்லை, வாழ்க்கையும் இல்லை.

ஆர்யன் அவள் ஸ்வாசித்த மூச்சு கற்று போல இருந்தான் அதனால்  அவன் இல்லாத வாழ்க்கை, இதயத் துடிப்பு இல்லாத உடலைப் போல உணர்ந்தது. பழிவாங்கும் வெறியில் சந்திரசேகர் புத்தி கெட்டுப் போயிருப்பார் என்று அவள் உறுதியாக நம்பினாள். ஒவ்வொரு நொடியும் பயம் அவளைப் பற்றிக் கொண்டது. ஆர்யன் எவ்வளவு புத்திசாலி என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவன் ஆபத்தில் இருக்கிறான் என்பதை நினைத்து அவளுடைய பலவீனமான இதயம் நடுங்கியது. அவளுடைய உதடுகள் பிரார்த்தனையில் மௌனமாக அசைந்தன, அவளால் நினைவுகூர முடிந்த ஒவ்வொரு கடவுளின் பெயரையும் அழைத்து அவனை  காப்பாற்றுமாறு அழைத்தாள்.

திடீரென்று, தீபாவின் வார்த்தைகள் அவள் மனதில் எதிரொலித்தன, தன்னால் அவனுடன் பேச முடியாவிட்டாலும், பாலாவின் அழைப்புகள் மூலம் ஆர்யனை பார்க்க முடியும் என்பதை நினைவுகூர்ந்தாள். உடனே நேரத்தை வீணாக்காமல், அவள் சில காகிதங்களை எடுத்து ஆர்யனிடம் சொல்ல விரும்பிய அனைத்தையும் எழுதத் தொடங்கினாள். ஒவ்வொரு வார்த்தையிலும் ஏக்கமும் அன்பும் நிறைந்திருந்தன. கல்யாணம் ஆனதிலிருந்து அவன் குரலைக் கேட்காமல், ஒரு நாள் கூட அவன் இல்லாமல் அவள்  இருந்ததில்லை. இந்தப் பிரிவு அவன் மீதான அவளது காதலை மேலும் மேலும் வலுப்படுத்தியது.

எங்கே பாலாவின் அழைப்பைத் தவற விட்டுவிடுவோமோ என்ற பயத்தில் காலை வேலைகளையும் குளியலையும் அவசர அவசரமாக முடித்தாள். வேகமாக ஹாலுக்கு சென்றவள், தீபா காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

“தீபா மா, பாலா அண்ணா உங்களுக்கு போன் பண்ணாரா ?” என்று சஞ்சு கவலையுடன் கேட்டாள். அதற்கு தீபா அவளிடம், “ இன்னும் இல்ல கண்ணா. இப்ப நீ வந்து சாப்பிடு” என்று பதிலளித்தார்.

அப்போது தயாராகி வந்த டாக்டர் பானு சஞ்சுவை புன்னகையுடன் பார்த்து, “ குட் மார்னிங் சஞ்சு “ என்று சொல்ல, சஞ்சுவும், “ குட் மார்னிங் டாக்டர் “ என்று பதில் சொன்னாள். உடனே பானு அவளிடம், “ டாக்டர் சொல்ல வேண்டாம், என்ன பானு சொல்லி கூப்பிடுங்க போதும் “ என்று கூறினார்.

சஞ்சு சரி என்று சொன்னதும் தீபா இருவருக்கும் உணவை பரிமாறினார். சஞ்சு சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே தீபாவின் மொபைல் ஒலித்தது.

சஞ்சு தான்  முதலில் வேகமாக துள்ளி எழுந்து மொபைலை எடுக்க, தீபா மெதுவாக அவளை தடுத்தார்.

” இரு சஞ்சு மா, முதல்ல நான் பேசுறேன், எதுவும் பிரச்சன இல்லனா உன்கிட்ட தரேன் “ என்று கூறினார். உடனே சஞ்சு அவரிடம், “ சரி சீக்கிரம் அழைப்புக்கு பதில் சொல்லுங்க ” என்றாள் சஞ்சு ஆவலை அடக்க முடியாமல்.

அழைப்[புக்கு பதில் சொன்ன தீபா, திரையில் பாலாவைப் பார்த்தார்  ஆனால் அருகில் ஆர்யனும் நின்று கொண்டிருப்பதை பார்த்து உடனே சஞ்சுவை அருகில் அழைத்தார். ஆர்யன் உடனடியாக சஞ்சுவை அமைதியாக இருக்கும்படி சமிக்ஞை செய்ய, அவள் சரி என்று தலையசைத்தாள், அவள் கண்களில் ஏற்கனவே கண்ணீர் பெருகியது.

” அம்மா எப்படி இருக்கீங்க?” என்று பாலா கேட்டான். அப்போது ஆர்யன் மௌனமாக தாடையை உயர்த்தி சஞ்சுவிடம் அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன் பாலா” என்று தீபா சொல்ல, சஞ்சு பேச முடியாமல் நன்றாக இருப்பதாக லேசாக ஆர்யனுக்கு தலையசைத்தாள்.

“நேரத்துக்கு சாப்பாடு சாப்பிடுறீங்களா ?” என்று பாலா கேட்டான்.

ஆர்யன் அந்தக் கேள்வியை கைகளால் சைகை செய்ய, அவன் முகத்தில் கவலை பதிந்திருந்தது.

“இல்ல பா, என்னால சரியா சாப்பிட முடியல” என்று தீபா மறைமுகமாக சஞ்சுவை பற்றி கூறினார். சஞ்சுவும் மௌனமாக ஆர்யனைப் பார்த்தாள்.

“அம்மா நீங்க நல்லா சாப்பிட்டா தானே நான் சந்தோஷப்படுவேன்” என்றான் பாலா மென்மையான உறுதியுடன். ஆர்யன் கண்களால் கெஞ்சி அவளை சாப்பிடும்படி சைகை செய்தான்.

“சரி நேரத்துக்கு சாப்பாடு போடுறேன்” என்று தீபா சத்தியம் செய்தார். சஞ்சுவும் ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.

“டாக்டர் என்ன சொன்னாரு ?” என்று பாலா கேட்க, “நான் நல்லா இருக்கேன் பாலா. கவலைப்பட ஒண்ணுமில்ல ” என்றார் தீபா. அப்போது பானு பின்னாலிருந்து தோன்றி ஆர்யனுக்கு கட்டைவிரலை உயர்த்தினார்.

“அம்மா, நான் சீக்கிரம் வருவேன் சரியா, அதனால கவலைப்பட வேண்டாம்” என்று பாலா உறுதியளித்தான்.

ஆர்யன் ஒரு பேப்பரை சஞ்சுவுக்கு காட்டினான். அதில், “ சந்தோஷமா இரு, உன்ன பார்க்க சீக்கிரம் வருவேன் “ என்று எழுதி இருந்தது.

“சரிடா கவலைப்படாத ” என்று தீபா சொன்ன போது, சஞ்சு உடனடியாக அவள் எழுதிய காகிதங்களை ஆர்யனுக்கு காட்டினாள். அதில், “தயவு செஞ்சு என்னையும் உன் கூட கூட்டிட்டு போ. நீ ஆபத்துல இருக்கும் போது என்னால பயம் இல்லாம நிம்மதியா இருக்க முடியாது “ என்று எழுதி இருந்தாள்.

“மா, இங்க நிறைய வேலை இருக்கு. அது எல்லாம் முடியட்டும் நான் சீக்கிரம் வரேன் “ என்று பாலா உண்மையான சூழலை கூறியதும், ஆர்யன் இன்னொரு செய்தியை உயர்த்திப் பிடித்தான்: “உன் ஆர்யனால எல்லாத்தையும் சமாளிக்க முடியும். இன்னும் கொஞ்ச நாள் தான், அப்புறம் நான் உன்ன என் கூட கூட்டிட்டு வரேன் “ என்று எழுதி இருந்தது.

“ நீ சொன்னா சரியா தான் பா இருக்கும் “ என்று தீபா பதில் சொல்ல, சஞ்சு, கண்ணீரை அடக்கிக்கொண்டு, கடைசியாக, “நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் ஆர்யன், ஐ லவ் யூ “ என்று எழுதி இருந்த ஒரு காகிதத்தைக் காட்டினாள்.

“சரி மா, நாளைக்கு கூப்பிடறேன்” என்றான் பாலா. ஆர்யன் மீண்டும் அவளுக்கு “ஐ லவ் யூ” என்று சைகை செய்தான்.

தீபா சரி என்று சொல்ல, சஞ்சுவின் முகத்தில் கண்ணீர் வழிந்தது. ஆர்யன் அவற்றைத் துடைக்கும்படி சைகை செய்து, கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் புன்னகை வடிவில் கொண்டு வந்து, மௌனமாக அவளை புன்னகைக்கச் சொன்னான்.

சஞ்சு மெல்லிய புன்னகையை உதிர்த்ததும், அழைப்பை துண்டித்த தீபா உடனடியாக சஞ்சுவை அணைத்துக் கொண்டார், பானுவும் அவளை அனைத்துக் கொண்டு இருவரும் அவளை ஆறுதல்படுத்த முயன்று, அழ வேண்டாம் என்று வலியுறுத்தினர். அவளுடைய உணர்ச்சிகள் குழந்தையை பாதிக்கக்கூடும் என்பதை இருவரும் அவளுக்கு நினைவூட்டினர்.

இதற்கிடையில், பேசி முடிக்கும் வரை கண்ணீரை அடக்கிக் கொண்டிருந்த ஆர்யனால் அதற்கு மேல் வலி தாங்க முடியவில்லை. தனது அறைக்கு விரைந்து சென்று கதவை சாத்திவிட்டு உடைந்து போனான்.

“நான் எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணனும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் என் சஞ்சுவ திரும்ப கூட்டிட்டு வரணும் “ என்று அவன் மனம் அவள் பிரிவில் தவித்தது.

முகத்தைத் துடைத்துக் கொண்டு, தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, லிவிங் அறைக்கு சென்றவன் உடனே ரஞ்சித்தை அழைத்தான்.

“ரஞ்சித், விவான் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா ?” என்று ஆர்யன் கேட்டதும், “ சார், அவன கண்டுபிடிச்சுட்டோம். அவன நம்ம தனி விமானத்துல இந்தியா கூட்டிட்டு வர எல்லா ஏற்பாடு பண்ணிட்டேன் ” என்று ரஞ்சித் பதில் சொன்னாள்.

ரஞ்சித் சொன்னதை கேட்டு, “நல்லது. அவன நம்ம செல்லுக்கு கூட்டிட்டு போ. கடுமையா தண்டிக்க வேணாம். அப்புறம் நரேன் கிட்ட பசி என்ன சந்திக்க சொல்லு. ஏதாவது ஒரு தனி இடம் செலெக்ட் பண்ணு “ என்று ஆர்யன் வலியுறுத்தினான்.

“சரி சார். நான் செய்றேன் “ என்று ரஞ்சித் உறுதி கூறினான்.

அந்த நாளின் பிற்பகுதியில், ஆர்யனும் ரஞ்சித்தும் நரேனை சந்திக்க ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்த ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்றனர்.

ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்த ஒரு தனியார் இடத்தில் நரேனை ஆர்யன் சந்தித்தான். இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்ததால் காற்றில் சொல்ல முடியாத பதற்றம் அடர்த்தியாக இருந்தது.

“எப்படி இருக்க நரேன்?” என்று ஆர்யன் அமைதியான குரலில் கேட்டான். அதற்கு நரேன், “ஹ்ம்ம்…நல்லா இருக்கேன், நீயும், சஞ்சுவும் எப்படி இருக்கீங்க?” என்று பெருமூச்சுடன் பதில் சொன்னான்.

“நாங்க நல்லா இருக்கோம். இப்போ மாயா இருக்க நிலைமைக்கும்   எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எல்லாத்துக்கும் காரணம் அவளும், உன் அப்பாவும் தான்” என்று தொடங்கிய ஆர்யனின் குரல் உறுதியாக இருந்தது. ” உண்மைய சொல்லனும்னா, நான் பார்ட்னர்ஷிப் ரத்து பண்ணி, அவரோட மொத்த முதலீட்டு பணத்தையும் கூட திருப்பி கொடுத்துட்டேன். மேற்கொண்டு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுனு தான் மாயாவ நிரந்தரமா இந்தியாவ விட்டு அனுப்பி வைக்கச் சொன்னேன். ஆனா ஒரே நாள்ல எல்லாமே மாறிடுச்சு ” என்று விரக்தியோடு கூறினான்.

“உனக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு எனக்குத் தெரியும். எனக்கு அவள தான் நெனச்சு கவலையா இருக்கு “ என்றான் நரேன் குனிந்து பார்த்தபடி. சில நொடிகள் மௌனம் நீடித்தது. பின்னர் ஆர்யன் மெதுவாக, “அவ கர்ப்பமா இருந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

ஆர்யனின் வார்த்தையை கேட்டதும், “ என்ன?” என்று அதிர்ச்சியில் கேட்ட நரேனின் கண்கள் விரிந்தன.

” ஹ்ம்ம்…ஆமா, அவ கர்ப்பமா இருந்தா ஆனா ஆக்ஸிடென்ட் ஆனதுல கருச்சிதைவு ஆயிடுச்சு. அந்த குழந்தைக்கு அப்பா யாருனு எனக்கு தெரியும். மாயாவோட முன்னாள் லவர் விவான். கொஞ்ச நாளா அவன தவிர வேறு யாரும் அவ கூட இல்ல. இப்போ அவன்  லண்டன்ல இருக்கான். ரஞ்சித் அவன என்னோட தனியார் ஜெட் மூலமா மறுபடியும் இந்தியாவுக்கு கூட்டிட்டு வர ஏற்பாடு பண்ணி இருக்கான் “ என்று ஆர்யன் சொன்னதும், “  நீ ஏன் இதெல்லாம் செய்ற ? அவன் இங்க வந்த உடனே என்கிட்ட ஒப்படைச்சிடு, அவன நான் பார்த்துக்குறேன் “ என்று உறுதியாகச் சொன்னான் நரேன்.

ஆனால் ஆர்யன் மறுத்து தலை அசைத்து, “இல்ல நரேன், என்கிட்ட இருந்து சஞ்சுவ பறிச்சு என் சந்தோஷத்த அழிக்குறதுல உன் அப்பா  உறுதியாக இருக்காரு. அவள காப்பாத்த என்கிட்ட இருந்து தூரமா அனுப்பி இருக்கேன் “ என்று வேதனையோடு கூறினான்.

“இதுக்கும் சஞ்சுவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டு நரேன் குழப்பத்தில் புருவத்தை சுருக்கினான். அதற்கு ஆர்யன் உடனே, “இத நீ உன் அப்பா கிட்ட தான் கேட்கனும். அவரோட ஆளுங்க என்ன கண்காநிச்சிட்டே இருக்காங்க. சஞ்சுவ கண்டுபுடிச்சு அவரோட கஸ்டடியில கொண்டுவர நினைக்குறாரு “ என்று சொன்னான்.

தன் தந்தை செய்வதை எல்லாம் அறிந்து, “என்ன மன்னிச்சிடு” என்றான் நரேன் வருத்தமாக.

“விவான் இங்க வந்ததும், நாம அவன ஒன்னா சந்திக்கலாம்.   அப்போ நீ என்கூட இருக்கனும்னு நான் விரும்புறேன்.” என்று ஆர்யன் சொன்னதும், “ அவன் வந்ததும் சொல்லு, நான் வரேன் “ என்று நரேன் தலையசைத்தான்.

“என்ன புரிஞ்சிகிட்டதுக்கு ரொம்ப நன்றி. நீ சம்மதிச்சா மாயாவுக்கு ட்ரீட்மென்ட் செய்ய நான் ஒரு டாக்டரை ஏற்பாடு செய்றேன்.” என்று ஆர்யன் யோசனை சொல்ல, “ இப்போ ட்ரீட்மென்ட் கொடுக்குற டாக்டர் கிட்ட நான் பேசுறேன். அதுக்கு அப்புறம் உனக்கு போன் பண்றேன்” என்றான் நரேன்.

இருவரும் கிளம்பும் முன் ஆர்யன் எழுந்து நின்று நரேனை இறுக அணைத்துக் கொண்டான்.

பின்னர், ஆர்யன் ஏ.ஆர்.சி டவர்ஸுக்குத் சென்று தனது அறைக்குள் இருந்த போது பவித்ராவும் கீர்த்தியும் அவனை சந்தித்தனர்.

” அண்ணா, சஞ்சு எப்படி இருக்கா? நீங்க அவகிட்ட பேசினீங்களா ? “ என்று பவித்ரா ஆவலுடன் கேட்டாள். அதற்கு ஆர்யன், “இல்ல பவித்ரா. நான் அவகிட்ட இன்னும் பேசல ஆனா அவ நல்லா இருப்பா “ என்று அவளுக்கு உறுதியளிக்க முயன்றான்.

” ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்னு நான் நம்புறேன்” என்றாள் கீர்த்தி மென்மையாக.

“ஹ்ம்ம். இந்த பிரச்சன எல்லாம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரனும்னு தான் நானும் விரும்புறேன். நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க, நான் பாத்துக்கறேன்” என்று ஆர்யன் அவர்களுக்கு உறுதியளித்தான்.

அவர்கள் சென்ற பிறகு, ஆர்யனை சந்திக்க ரஞ்சித் அறைக்குள் நுழைந்தான்.

“சார், நம்ம அடுத்த திட்டம் என்ன?” என்று ரஞ்சித் கேட்டதும், “ சந்திரசேகரோட ரகசிய இடத்த பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா ?” என்று கேட்டான் ஆர்யன்.

“நம்ம ஆளுங்கள வெச்சு அவரோட எல்லா இடத்தையும் தேடி முடிச்சிட்டோம் ஆனா இதுவரை, எந்த தகவலும் இல்ல. அவரோட  வீடு அப்புறம் ஆபீஸ் மட்டும் தான் மிச்சம் இருக்கு. அந்த ரெண்டு இடைமும் எப்பவும் ஆளுங்க கண்காணிப்புல இருக்கு “ என்று ரஞ்சித் அனைத்து தகவலையும் கூறினான்.

” அப்போ நரேன் மட்டும் தான் நமக்கு இப்போ உதவ முடியும். அடுத்த முறை அவன சந்திக்கும் போது அவன் கிட்ட இத பத்தி பேசுறேன்” என்றான் ஆர்யன் யோசனையுடன்.

“சந்திரசேகர எப்படிக் கையாள்றது ?” என்று ரஞ்சித் கேட்க, “மாயா சீக்கிரம் கண் முழிக்கணும், விவான் சந்திரசேகர் கிட்ட எல்லா உண்மையும் சொல்லி சரணடையனும். விவான் விஷயத்த சுலபமா கையாள முடியும் ஆனா மாயை கண் முழிக்குறது தான்  இப்போ இருக்க முக்கியமான பிரச்சினை.” என்றான் ஆர்யன் தலை முடியை கோதியபடி. அதற்கு ரஞ்சித் உடனே, “அது உடனடியா நடக்க வாய்ப்பு இல்ல சார் “ என்று சொன்னான்.

“ஹ்ம்ம். சந்திரசேகர நம்ம வழியில இருந்து விலக்க நாம அவருக்கு  ஒரு ட்ராப் கண்டுபுடிக்கணும் “ என்று ஆர்யன் சொல்ல, “ இதுவர, அவர பதத்தின எல்லா தகவலும் நம்ம கிட்ட இருக்கு ஆனா அது எதையும் நாம ஒரு பொறியா பயன்படுத்த முடியாது.” என்று ரஞ்சித் கூறினான்.

“அவரோட ரகசிய இடத்த தவிர, வேற எந்த இடமும் நமக்கு இப்போ உதவி செய்யாது அதனால நரேன் நமக்கு உதவி செய்ய சம்மதிக்குற வர நாம வெயிட் பண்ணனும் “ என்று ஆர்யன் பெருமூச்சு விட்டான்.

“அவர் நமக்கு உதவி செய்ய சம்மதிப்பார்னு நான் நம்புறேன்” என்று ரஞ்சித் உறுதியுடன் கூறினான்.

“ சந்திரசேகர் வீட்டுக்குள்ள நுழையுறது அவ்ளோ சுலபம் இல்ல ரஞ்சித். அவரோட கட்டுப்பாட்டுல இருக்க ரகசியமான இடங்கள பத்தி எதுவும் நரேனுக்குத் தெரியாம கூட இருக்கலாம்.” என்றான் ஆர்யன். உடனே ரஞ்சித் அவனிடம், “ அப்போ நாம ராஜேஷ் மூலமா முயற்சி பண்ணா என்ன ? “ என்று சட்டென கேட்டான்.

அதை கேட்டு சிரித்த ஆர்யன், “அவனும் உன்ன மாதிரி தான் ரஞ்சித். நமக்கு உதவி செய்ய அவ்ளோ சுலபமா முன்வர மாட்டான். நீ வேணும்னா உன் வழியில முயற்சி பண்ணி பாரு “ என்று கூறினான்.

” ரொம்ப நன்றி, சார். நான் முயற்சி செய்றேன் ” என்றான் ரஞ்சித்.

“விவான் எப்போ இங்க இறங்குவான்?” என்று ஆர்யன் கேட்டதும், ” நாளைக்கு வந்துடுவான் சார்.” என்று ரஞ்சித் பதில் சொன்னான்.

” சரி அவன நேரா நம்ம செல்லுக்கு கூட்டிட்டு போ” என்று ஆர்யன் கட்டளையிட்டான்.

இதற்கிடையில், பாதுகாப்பான இல்லத்தில், சஞ்சு படுக்கையில் படுத்து ஆர்யனின் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். டாக்டர் பானு அறைக்குள் நுழைந்து மெல்லிய புன்னகையுடன் அவள் தலைமுடியை மெல்ல வருடினார்.

“சஞ்சு, தோட்டத்த சுத்தி ஒரு வாக்கிங் போகலாமா ? “ என்று பானு கேட்டதும், “ சரி பானு “ என்றான் சஞ்சு மென்மையாக.

அவர்கள் அமைதியான தோட்டத்திற்கு நடந்து சென்றனர். பானு அவளை ஊஞ்சலுக்கு அழைத்துச் சென்று, சஞ்சு அதில் உட்கார அதை மெதுவாக தள்ளினார். குளிர்ந்த காற்று அவள் முகத்தில் வீசி, அமைதியான உணர்வைக் கொடுத்தது. பூக்களின் வாசனை காற்றை நிரப்பியது, அவளுடைய நினைவுகள் அவர்களின் கடற்கரை வீட்டிற்கு திரும்பிச் சென்றன. ஒவ்வொரு பூவையும் தான் ரசிப்பதை அவள் நினைவு கூர்ந்தாள், அதே நேரத்தில் ஆர்யன் அவற்றை வைத்திருக்கும் புகைப்படங்களை கிளிக் செய்தான், எப்போதும் அவற்றின் அழகை செடியிலேயே ரசிக்க வேண்டும் என்று அவள் நம்பியதால் அவற்றைப் பறிக்க மறுத்தாள்.

பானு பேசிய போது அவளது பகல் கனவு கலைந்தது.

“சஞ்சு, இப்போ குழந்தையால நீங்க பேசுற எல்லாத்தையும் கேட்க முடியும், உங்க உணர்ச்சிகளையும் உணர முடியும்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்க அழுதா குழந்தையும் அழும். நீங்க சந்தோஷமா இருந்தா, அது குழந்தைய சந்தோஷமாக்கும் “ என்று டாக்டர் பானு கூறினார்.

அவர் சொன்னதை கேட்டு, “அப்படியா?” என்று சஞ்சு ஆச்சரியத்தோடு கேட்டாள், அவள் சோர்வடைந்த கண்களில் ஒரு ஆர்வம் ஒளிர்ந்தது.

“ஆமா, நீங்க உங்க குழந்தையோட பேசனும், அப்புறம் உங்க மனசுல எந்த டென்ஷனும் இல்லாம இருக்கணும். உங்க குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே நிறைய விஷயங்கள கத்துக்க ஆரம்பிக்கும் “ என்று பானு சொன்னதும், ” ரொம்ப நன்றி பானு,   நீங்க சொன்னத கண்டிப்பா நான் follow பண்றேன். எங்க குழந்தைக்கு அப்பாவோடு அன்பு பத்தி தெரியனும். எங்கள அவர் எவ்ளோ மிஸ் பண்றாருனு தெரியனும் “ என்று கிசுகிசுத்த சஞ்சு மெதுவாக அவளது வயிற்றை மெதுவாக வருடினாள்.

பானு புன்னகைத்தபடி சஞ்சுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர். பானுவின் முன்னிலையில், சஞ்சு ஒரு ஆறுதலான சகோதரியின் பிணைப்பை உணர்ந்தாள்.

*******************

முன்னோட்டம்:

” அடப்பாவி, இவ்ளோ சாதாரண விஷயத்துல நீ சிக்குவனு நான் நினைக்கவே இல்லடா, சிறப்ப செஞ்சுடுறேண்டா மாப்ள “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!