Home FamilyChapter 81

Chapter 81

by Siragugal Novels
8 views

ஆர்யன் சஞ்சுவை வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றான். இருவரும் அமைதியான, நெருக்கமான நேரத்தை ஒன்றாக செலவிட்ட போது சூரிய ஒளியில் தண்ணீர் பளபளத்தது. பானு மற்றும் தீபா அவர்களுக்கு முழுமையான தனியுரிமையை கொடுத்து தொந்தரவு செய்யாமல் வீட்டுக்குள் மட்டுமே இருந்து அவர்கள் அந்த தருணத்தை அனுபவிக்க விலகி இருந்தனர்.

நீச்சல் குளத்தில் இருந்து திரும்பிய பிறகு இருவரும் குளித்து தயாரானார்கள். ஆர்யன் மதிய உணவை தானே தயாரிக்க வலியுறுத்தினான். தீபாவும் அதற்கு சம்மதித்து வெறும் உதவி மேடுமே செய்தார். ஆர்யன் சமைத்து முடித்ததும் அவளுக்கு அன்புடன் ஊட்டிவிட்டு அவனும் அவளோடு சேர்ந்து சாப்பிட்டான். இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்ததும், “ இப்ப போய் ஒரு குட்டித் தூக்கம் போடு” என்று ஆர்யன் மென்மையாக சொன்னான் ஆனால் சஞ்சு மறுத்து தலையை ஆட்டி, “இல்ல, எனக்கு தூக்கம் வராது. நீ இங்க இருக்கும் போது ஒவ்வொரு நொடியும் உன் கூட இருக்க விரும்புறேன் “ என்று கூறினாள்.

மெல்லிய புன்னகையுடன், ஆர்யன் அவளிடம், “சரி. ஆனா நீ ரிலாக்ஸ் ஆக நான் ஹெல்ப் பண்றேன்.” என்று சொல்லி அவன்  அவள் கால்களை மசாஜ் செய்தான். அதைத் தொடர்ந்து அவள் தலையை மசாஜ் செய்து தலைமுடியை விரல்களால் கோதினான். அவனது இதமான ஸ்பரிசத்திற்கு அவள் உடல் இணங்குவதை சஞ்சு மெதுவாக உணர்ந்தாள். அவள் தசைகள் தளர்ந்தன, அதை அறியாமலேயே அவள் தூங்கிவிட்டாள். ஆர்யன் அவளை கவனமாக படுக்கையில் படுக்க வைத்து அவள் அருகில் அமர்ந்தான், தூங்கும் அவளது முகத்தின் ஒவ்வொரு விவரத்தையும் அமைதியாக உள்வாங்கி, அவள் இருப்பை நினைவில் வைத்தான்.

மாலையில், ஆர்யன் ஒரு கப் ஹாட் சாக்லேட் கொண்டு வந்து மெதுவாக அவளை எழுப்பினான்.

சஞ்சு அசைந்து முகம் சுளித்து, “என்னை ஏன் தூங்க விட்ட?” என்று கேட்டாள். 

“நீ இங்க வந்ததுல இருந்து சரியா தூங்கலனு எனக்குத் தெரியும் அதனால நீ நிம்மதியா அசந்து தூங்கும் போது எழுப்ப மனசு வரல மா, அதனால தான் தொந்தரவு செய்யாம தூங்க விட்டேன் “ என்று ஆர்யன் புன்னகையுடன் சொல்ல, “ஆனா நான் உன்கூட இருக்க விரும்பினேன்…” என்று வருத்ததோடு சொன்னாள் சஞ்சு.

அவள் தலைமுடியை கோதியபடி புன்னகைத்த ஆர்யன், “நீ என்கூட தான் இருந்த மா. முழு நேரமும் நான் உன் பக்கத்துலையே தான் உட்கார்ந்துட்டு இருந்தேன். இப்போ உனக்காக இந்த ஹாட் சாக்லேட் கொண்ட வர கொஞ்ச நேரம் தான் வெளிய போனேன். இப்போ இத குடி “ என்று சொல்லி அவளிடம் அதை கொடுத்தான்.

சஞ்சு அமைதியாக அதைக் குடித்தாள். பின்னர், ஆர்யன் அவளை நடைபயிற்சிக்கு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். இருவரும்  அறைக்குத் திரும்பும் வரை தோட்டத்தில் கைகோர்த்தபடி நடந்து சென்றனர்.

“ஏன் நீ இங்க இருக்கு மத்த ரூம் எதையும் பார்க்கல “ என்று சஞ்சு ஆர்வத்துடன் கேட்டாள். அதற்கு ஆர்யன் மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்து, “இந்த முறை வேணாம். ஒரு சந்தோஷமான தருனத்துல நாம இங்க திரும்பி வரும் போது ரெண்டு பேரும் சேர்ந்து வீடு முழுக்க சுத்தி பார்க்கலாம்.” என்று சொன்னவன் அவள் கையை இறுகப்பிடித்து, “ இப்போ நீ நல்லா சாப்பிட்டு, நல்ல தூங்குவனு எனக்கு சத்தியம் பண்ணு “ என்று கேட்டான்.

“நான் செய்றேன் ” என்று அவள் உறுதியளித்ததும், ஆர்யன்  பெருமூச்சு விட்டான். ” இப்போ நான் கிளம்ப வேண்டிய நேரம் ஆயிடுச்சு ” என்று மெல்லிய குரலில் சொன்னான்.

சஞ்சு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். ஆர்யன் அவளது தலைமுடியில் தனது விரல்களை கோதி அவள் உதடுகளில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ” என்றான்.

“லவ் யூ டூ…” என்று சஞ்சு கிசுகிசுத்தாள், அவளுடைய குரல் அவனது முத்தத்தில் கரைந்தது.

இருவரும் ஹாலுக்கு வந்த போது தீபாவும் பானுவும் அவர்களுக்காக காத்திருந்தனர்.

ஆர்யன் அவர்களை நோக்கித் திரும்பி, “ தீபா மா, பானு உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி, சஞ்சுவ நல்லா பார்த்துக்கோங்க.. நான் இப்ப போகணும்.” என்று கூறியதும், பானு தலையசைத்து, ” நீங்க தைரியமா கிளபுங்க, சஞ்சுவ பத்தி கவலைப்பட வேணாம் ” என்று சொன்னார்.

” சஞ்சுவ நாங்க பாத்துக்கறோம் சார், நீங்க கவலையில்லாம போயிட்டு வாங்க சார் ” என்று தீபாவும் உறுதியளித்தார்.

ஆர்யன் சஞ்சு பக்கம் திரும்பினான். ” ஜாக்கிரதையா இரு சஞ்சு மா, என்னால அடிக்கடி போன் பண்ண முடியாம போகலாம், அதனால நான் போன் பண்ணுவன்னு வெயிட் பண்ணாத. சரியா ? அது உன்ன தேவையிலாத பிரச்சனையில சிக்க வைக்கும் “ என்று மீண்டும் அவளுக்கு நிலமையை புரிய வைத்தான்.

சஞ்சு மௌனமாகத் தலையசைத்து அவள் கண்களின் ஓரத்தில் அழுத்திக் கொண்டிருந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள். ஆர்யன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு கிளம்பினான். அவன் வெளியே சென்ற மறுகணமே பானு சஞ்சுவை அணைத்துக் கொண்டார். சஞ்சு  அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் தாராளமாக வழிந்தோட ஆரம்பித்தது. தீபா மென்மையான வார்த்தைகளால் அவளைத் தேற்றினார்.

இதற்கிடையில், மேன்ஷனில், ரஞ்சித் டிரைவரை அழைத்து, விமான நிலையத்தில் இருந்து ஆர்யனை வரவேற்க காரை தயார் செய்யுமாறு கூறிவிட்டு வெளியே சென்றான். ரஞ்சித்தின் உரையாடலை கேட்ட ராஜேஷ் உடனே விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றான்.

விமான நிலையத்தில், ஆர்யனின் விமானம் தரையிறங்கியவுடன் பிரதீப் தனியார் ஜெட் மூலம் வந்தான். அவர்களின் திட்டப்படி, இருவரும் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொண்டு விமான நிலையத்தை விட்டு புறப்பட்டனர்.

ஆர்யன், சஞ்சுவை அவனுடன் அழைத்து வந்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் ராஜேஷ் ஆர்யனை பின் தொடர்ந்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பின் அவன் வழிமறிக்கப்பட்டான். உடனடியாக அவன் ரஞ்சித்தின் ஆட்களால் பிடிக்கப்பட்டு ஆர்யனின் பாதாள ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.

மேன்ஷனை அடைந்த ஆர்யன், அமைதியாக தோட்டத்திற்கு சென்று, பாலாவை அங்கு வர சொல்லி உடனே அவனை கட்டிப்பிடித்துக் கொண்டான்.

ஆர்யனின் திடீர் அணைப்பை பார்த்து திகைத்து போன பாலா, “சார், என்ன ஆச்சு ?” என்று கேட்டான்.

ஆர்யனின் கண்கள் கலங்கின. “பாலா, ரொம்ப தேங்க்ஸ். உன்  அம்மா சஞ்சுவை அவ்ளோ நல்லா பார்த்துக்கிட்டு இருக்காங்க. உங்க ரெண்டு பேருக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன் “ என்று ஆர்யன் சொல்ல, ” சார், நீங்க எங்களுக்கு செஞ்சத விட இது ஒண்ணுமே இல்ல. நீங்களும், சஞ்சுவும் சந்தோஷமா இருக்கணும் அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் சார்.  அது மட்டும் இல்ல சஞ்சு மனசார என்ன அண்ணானு கூப்பிடுவாங்க, அவங்க எனக்கு தங்கச்சி. ப்ளீஸ் நன்றி எல்லாம் சொல்லாதீங்க “ என்று பாலா கூறினான்.

அவன் வார்த்தையை கேட்டு ஆர்யன் புன்னகைத்தான். “சரி, இனி நான் நன்றி சொல்ல மாட்டேன்.” என்று சொல்லி மீண்டும் பாலாவை கட்டிப்பிடித்து விட்டு தன் அறைக்கு சென்றான்.

பாதாள ரகசிய இடத்தில் ஒரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஜேஷுக்கு மெல்ல நினைவு திரும்பியது. உடனே அங்கிருந்த காவலர்கள் ரஞ்சித்துக்கு தகவல் தெரிவிக்க, அவன் சிறிது நேரத்தில் அறைக்குள் நுழைந்தான்.

“என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த ?” என்று ராஜேஷ் முனகினான். அதற்கு ரஞ்சித் உடனே, “ ஹ்ம்ம், உனக்கு விருந்து வைக்கலாம்னு தான் “ என்று கிண்டல் செய்தான்.  

“என் கிட்ட பிரச்சன பண்ணாத ரஞ்சித், என்ன போக விடு “ என்று ராஜேஷ் பல்லை கடித்து சொன்னான். ஆனால் ரஞ்சித் அமைதியாக, “ போலாம் போலாம், என்ன அவசரம் ? எனக்கு ஒரு தகவல் வேணும், நீ அத சொன்ன அப்புறம் இங்க இருந்து போகலாம் “ என்று சொன்னான்.

” என்கிட்ட இருந்து உனக்கு எந்த தகவலும் கிடைக்காது “ என்று ராஜேஷ் சொன்னதும், ரஞ்சித் விரல்களைச் சொடுக்க, காவலர்கள் ராஜேஷை அடிக்கத் தொடங்கினர், ஆனால் ராஜேஷ் அப்போதும் எந்த தகவலும் சொல்ல மறுத்துவிட்டான். அமைதியாக துப்பாக்கியை எடுத்து ராஜேஷின் தலையில் வைத்தான் ரஞ்சித்.

“நான் சாக கூட தயார். என்ன சுடு, ஆனா அப்போ கூட நான் எதையும் சொல்ல மாட்டேன் “ என்றான் ராஜேஷ் அலட்சியமாக.

“உன்ன சுட்டு கொல்றது ரொம்ப சாதரணாமா இருக்கும் அதனால உனக்கு நான் வேற ட்ரீட்மெண்ட் ஏற்பாடு பண்ணி இருக்கேன் ” என்று சொன்ன ரஞ்சித் தன் ஆட்களை பார்த்து, “ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணுங்க” என்று கூறினான்.

காவலர்கள் பாத்திரங்கள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் பிற உலோகக் கருவிகள் கொண்டு வந்தனர். அதை பார்த்து ராஜேஷ், “என்ன செய்யப் போறீங்க?” என்று கத்தினான்.

“என்ன டா பார்க்குற மிஸ்டர் மிஸோஃபோனியா?” என்று சொல்லி ரஞ்சித் சிரித்தான். அதை கேட்டதும் ராஜேஷ் உறைந்து போனான். “எப்படி… அது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டு திக்கி திணறினான். 

” ஏன்டா உனக்கே மூளை இந்த அளவுக்கு வேலை செய்யும் போது எங்களுக்கு எவ்ளோ வேலை செய்யும் ? “ என்று சொன்ன ரஞ்சித் ” ஆரம்பிங்க பா “ என்று தன் ஆட்களிடம் அலட்சியமாக சொன்னான்.

அவனின் ஆட்கள் உடனே, பாத்திரங்களை கரண்டி மற்றும் முட்கரண்டி கொண்டு கீறத் தொடங்கிய போது, அதில் இருந்து வந்த சத்தம் அறையை நிரப்பியது. அதை கேட்டு ராஜேஷ் எரிச்சலில் பற்களைக் கடித்தான். காவலர்கள் சத்தத்தை அதிகப்படுத்த, ராஜேஷ் நடுங்கினான்.

” நிறுத்துங்க, அப்படி பண்ணாதீங்க ” என்று ராஜேஷ் கெஞ்சினான் அதற்கு ரஞ்சித் உடனே தன் ஆட்களை பார்த்து, ” நான் இன்னும் நிறைய எதிர்பார்க்குறேன் பாய்ஸ்” என்று சொன்னான்.

காவலர்கள் அந்த சத்தத்தை ராஜேஷின் காதுகளுக்கு அருகில் கொண்டு சென்றதும், அவன் பீதியடையத் தொடங்கி, அவனை கட்டியிருந்த கயிற்றில் இருந்து விடுபட முயன்றான் ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியாமல், “ யாரவது என் காதை மூடுங்க ப்ளீஸ்!” என்று கெஞ்சி கதறினான். ஆனால் ரஞ்சித் அதை மேலும் அதிகப்படுத்த சொன்னான்.

“ ரஞ்சித், ப்ளீஸ் நிறுத்த சொல்லு “ என்று ராஜேஷ் மீண்டும் மீண்டும் கெஞ்ச, “ டேய், உன்ன சுட்டா நீ உடனே செத்து போயிடுவ ஆனா இப்போ நான் இத பார்த்து ரசிக்குறேன். நான் சொன்னத கேட்டு எனக்கு தேவையான தகவல் சொல்ல நீ தயாரா இருக்க வர இத சந்தோஷமா அனுபவி “என்று கிண்டலடித்தான் ரஞ்சித்.

“ப்ளீஸ் ரஞ்சித்! நிறுத்து!” என்று ராஜேஷ் கண்ணீர் சிந்தினான், அவன் தலை வெடிப்பது போல இருந்தது. 

” என் பசங்க எவ்ளோ பெரிய சம்பவம் பண்றவங்க தெரியுமா ? அவ்ளோ திறமையானவங்க ஆனா இன்னைக்கு உன்னால என்ன பண்ணிட்டு இருக்காங்க பாரு. ஏதோ சின்ன பசங்களுக்கு விளையாட்டு காட்டுற மாதிரி விளையாடிட்டு இருக்காங்க. எனக்கு அவமானமா இருக்கு “ என்று சிரித்தபடி சொன்னான் ரஞ்சித்.

அதற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாமல், “உனக்கு இப்போ என்ன தெரியனும் ?” என்று கேட்டு கடைசியில் ராஜேஷ் உடைந்து போனான்.

“ அப்படி வா வழிக்கு, சரி, சந்திரசேகரோட ரகசிய இடம் எங்க  இருக்கு ? “ என்று ரஞ்சித் கேட்டதும், “ எனக்கு தெரியாது “ என்று உடனே சொன்னான் ராஜேஷ்.

“ சரி ஓகே, பாய்ஸ் உங்க வேலைய ஸ்டார்ட் பண்ணுங்க “ என்று ரஞ்சித் சொன்னதும், உடனே ராஜேஷ், “ இல்ல இல்ல, ப்ளீஸ் வேணாம் நான் சொல்றேன் “ என்று கூறினான்.        

“ கொஞ்சம் பொறு “ என்று சொன்ன ரஞ்சித், நரேன் மற்றும் ஆர்யனுக்கு அழைத்து, “ ராஜேஷ் உண்மைய சொல்ல தயாரா இருக்கான், ரெண்டு பேரும் கேளுங்க “ என்று கூறிவிட்டு ராஜேஷை பார்த்து, “ இப்போ சொல்லு, ரகசிய இடம் எங்க இருக்கு ? “ என்று கேட்டான்.

“நீச்சல் குளத்துக்கு கீழ தான் ரகசிய இடம் இருக்கு “ என்று ராஜேஷ் சொன்னதும், ” லூசு பயலே ஒழுங்கா தெளிவா சொல்லு ” என்று ரஞ்சித் அவனை மிரட்டினான்.

” நீச்சல் குளத்துல இருக்க தண்ணிய வடிச்ச அப்புறம் அதோட  வலது பக்கம் மூலையில ஒரு சுவிட்ச் இருக்கும் அத அழுத்துனா ரகசிய இடத்துக்கு கதவு திறக்கும் “ என்று ராஜேஷ் சொன்னதும், ” அது சுலபமா திறக்குமா ? ஏதாவது செக்யூரிட்டி அலாரம் இருக்கா?” என்று கேட்டான் ரஞ்சித்.

“ சுவிட்ச் அழுத்தினா உடனே சந்திரசேகர் சார் மொபைலுக்கு  தகவல் போகும். யாரோ அந்த இடத்துக்கு போறாங்கனு அவருக்கு தெரிஞ்சிடும் ” என்று ராஜேஷ் சொன்னதை கேட்டு ரஞ்சித் தலையசைத்தான். “ஹ்ம்ம்… சரி. நாங்க அந்த இடத்துக்கு போற வர  நீ இங்கேயே இரு ” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி ஆர்யன் மற்றும் நரேனுடன் அழைப்பைத் தொடர்ந்தான்.

“நரேன், முதல்ல நீ ஹாஸ்பிடல் போய் உன் அப்பாவோட மொபைல அவருக்கு தெரியாம எடு “ என்று ரஞ்சித் அவசரமாக கூறினான்.

“ஹ்ம்ம் சரி ஆனா அவர் ரொம்ப எச்சரிக்கையா இருப்பாரு “ என்று நரேன் சொல்ல, ” அப்போ ஹாஸ்பிடல்ல தங்கி அவர எப்படியாச்சும் சமாளி. நான் என் ஆளுங்க கூட உன் வீட்டுக்கு போறேன் ” என்று ரஞ்சித் சொன்னான். “ ஆனா அங்க செக்யூரிட்டி ஆளுங்க நிறைய பேரு இருப்பாங்க “ என்று நரேன் கவலையுடன் சொல்ல, ” நான் அவங்க எல்லாரையும் கொஞ்ச நேரத்துல அடிச்சு போட்டுடுவேன் அதனால கவலைப்பட வேணாம். நான் அங்க போனதும் கூப்பிடறேன், நான் என் வேலையை முடிக்கிற வரைக்கும் நீ உன் அப்பாவ சமாளி. அப்புறம் உன் அப்பா நிச்சயமா ராஜேஷ் பத்தி கேட்பாரு “ என்று ரஞ்சித் சொன்னதும், “அதை நான் பார்த்துக்குறேன் ” என்று நரேன் உறுதியளித்தான்.

“ரஞ்சித், நீ வேலை முடிச்சதும் எனக்கு போன் பண்ணு.” என்று ஆர்யன் சொல்ல, “ஓகே சார்” என்று சொல்லி ரஞ்சித் அழைப்பைத் துண்டித்தான்.

மருத்துவமனையில், யோசித்தபடியே சந்திரசேகரின் அறைக்குள் வேகமாக நுழைந்தான் நரேன்.

“மாயாகிட்ட தொடர்ந்து பேசி அவளுக்கு நம்பிக்க தரணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு, அதனால நீங்க இப்போ அவ ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் அவ கிட்ட பேசுங்க. நீங்க அவ மேல ரொம்ப பாசமா, அவளுக்கு அதிக செல்லம் கொடுத்தீங்க அதனால நீங்க பேசுனா நல்லா இருக்கும்னு நான் நினைக்குறேன் “ என்று நரேன் சாதாரணமாகச் சொன்னான்.   

சந்திரசேகர் வெறுமனே தலையாட்டி, எந்தக் கேள்வியும் கேட்காமல் மாயாவின் அறையை நோக்கி நடந்தார். அவர் சென்றவுடன் நரேன் வேகமாக தன் அப்பாவின் மொபைலை எடுத்து அதை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மாயாவின் அறைக்கு சென்றான்.

உள்ளே இருந்த சந்திரசேகர், “ராஜேஷ் எங்கே?” என்று கேட்டார்.

“டாக்டர் கிட்ட ரிப்போர்ட் வாங்க நான் தான் அனுப்பி இருக்கேன். வேற ஒரு டாக்டர் கிட்ட மாயா பத்தி கேட்கலாம்னு இருக்கேன் “என்றான் நரேன் நிதானமாக. சந்திரசேகர் அவனது விளக்கத்தை கேட்டு சரி என்று தலையசைத்தார்.

இதற்கிடையில் ரஞ்சித்தும் அவனது ஆட்களும் டி.சி. இல்லத்தை அடைந்து, நரேனிடம் சொன்னபடியே சில நிமிடங்களில் அங்கிருந்த அனைத்து காவலர்களை வீழ்த்திவிட்டு நீச்சல் குளத்தை நோக்கிச் சென்றான். நேரத்தை வீணாக்காமல், தண்ணீரை வெளியேற்றத் தொடங்கி, அது தெளிவானதும், ரஞ்சித் தனது போனை எடுத்து சுவிட்ச் அழுத்த போவதாக நரேனுக்கு மெசேஜ் அனுப்பினான்.

சாதகமான பதிலைப் பெற்றுக்கொண்ட பின் அவன் தனது ஆட்களில் ஒருவரை நோக்கித் திரும்பி, “சுவிட்சை அழுத்து ” என்று கூறினான்.

அந்த காவலர் சுவிட்சை அழுத்தியதும் தரையின் ஒரு பகுதி நகர்ந்தது, அது ஒரு மறைக்கப்பட்ட படிக்கட்டு காட்டியது. படிகள் கீழ்நோக்கி இட்டுச் சென்றன, அந்த பாதை முழுவதும் மங்கலான வெளிச்சம் இருந்தது, ஆனால் மேலே செல்ல பார்வைக்கு போதுமானதாக இருந்தது. அவர்கள் கீழே இறங்கியபோது, காவலர்களில் ஒருவர் லைட் பேனலைக் கண்டுபிடித்து சுவிட்சை ஆன் செய்தார்.

அடித்தளம் மெல்ல ஒளிர்ந்தது. வரிசையாக இருந்த அறைகளைக் கடந்து அவர்கள் நடந்தார்கள். ஒவ்வொன்றும் காலியாக இருந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நிசப்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக கடைசி அறையை அடைந்தனர்.

ரஞ்சித் அதன் முன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். அவன் கண்ட காட்சி அவன் உடலை உலுக்கியது, மூச்சடைத்து, அவன் தடுமாறி பின்னோக்கி விழுந்து மண்டியிட்டு தலையைக் கைகளால் பிடித்துக்கொண்டான். ஒரு நொடியும் தாமதிக்காமல் பதறிப்போய் ஆர்யனுக்கு போன் செய்தான்.

” சொல்லு ரஞ்சித், ஏதாவது கண்டுபிடிச்சியா ?” என்று ஆர்யன் கேட்டதும், “சார்…” என்று அழைத்த ரஞ்சித்தின் குரல் உடைந்தது. ” சீக்கிரம் இங்க வாங்க ” என்று பதறினான்.

“என்ன ஆச்சு ?” என்று ஆர்யன் கேட்க, “சார் தயவு செஞ்சு சீக்கிரம் வாங்க” என்று சொன்ன ரஞ்சித்தின் குரல் நடுங்கியது.

நிலைமை மோசமாக இருந்தால் ஒழிய அவன் ஒருபோதும் பீதியடைய மாட்டான் என்று ஆர்யன் ரஞ்சித்தை நன்கு அறிவான் அதனால் ஒரு நொடியையும் வீணாக்காமல் ஆர்யன் தன் காரில் ஏறி நேராக டிசி இல்லத்துக்கு காரை ஓட்டிச் சென்றான்.

ஏற்கெனவே வாசலில் காத்திருந்த அவனது ஆட்களில் ஒருவன் மௌனமாக ஆர்யனை உள்ளே அழைத்துச் சென்றான். ஆர்யன் வேகமாக நகர்ந்தான், அவன் இதயம் வேகமாக துடித்தது. அடித்தள வராந்தாவை அடைந்து, “ரஞ்சித் எங்க?” என்று கேட்டான்.

காவலர்கள் கடைசி அறையை சுட்டிக்காட்டினர்.

ஆர்யன் விரைந்து சென்று உள்ளே நுழைந்தான். அவனுக்கு முன்னால் கண்ட காட்சி அவனை உறைய வைத்தது.

அவனுடைய முழங்கால்கள் தளர்ந்து அவன் தரையில் சரிந்தான். அவன் கண்கள் அவநம்பிக்கையால் விரிந்தன, மூச்சு இழுத்தது. அவன் தொண்டை வார்த்தைகளை உருவாக்க மறுத்தது. இன்னும் மண்டியிட்டு உட்கார்ந்திருந்த ரஞ்சித், ஆர்யனின் தோளில் கை வைத்தான்.

ஆர்யனின் மௌனம் ஒரு கணம் கலைந்து, அவன் உடைந்து கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

***********************************

முன்னோட்டம்:

” அந்த சந்திரசேகருக்கு நான் தான் எமனா இருப்பேன், மாயாவோட ஆபரேஷன இந்த வாரமே செய்ய ஏற்பாடு பண்ணி, நரேன் கிட்ட தகவல் சொல்லிடு “

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!