மருந்தின் விளைவுகளால் எட்டு மணி நேர மயக்கத்திற்குப் பிறகு, மாயா மெதுவாக கண்களைத் திறந்தாள். அவளை பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நர்ஸ் உடனடியாக மருத்துவருக்கு தகவல் கொடுத்தார். டாக்டர் சில நிமிடங்களில் ஐ.சி.யுவுக்கு வந்தார். மாயாவுக்கு நினைவு திரும்பும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் அறைக்கு வெளியே காத்திருந்தவர்களுக்கும் நர்ஸ் தகவல் கொடுத்தார். அந்த செய்தியை கேட்டதும் நிம்மதியாக இருந்தாலும், எல்லோரும் பதட்டமாக உணர்ந்தனர். மாயா என்ன நினைவில் வைத்திருப்பாள், அவள் எப்படி எதிர்வினையாற்றுவாள் என்ற நிச்சயமற்ற நிலையில் அனைவரும் உச்சக்கட்ட பதற்றத்தில் இருந்தனர்.
ஐ.சி.யு.வில் நுழைந்த டாக்டர் அவளது முக்கிய உறுப்புகளை பரிசோதித்தார். எல்லாம் நிலையானதாகத் தோன்றியதும், அவள் படுக்கைக்கு அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து மெதுவாக அவளிடம் பேச ஆரம்பித்தார்.
“ஹலோ மிஸ் மாயா. நான் பேசுறது கேட்குதா?” என்று டாக்டர் மெல்ல கேட்டதும், மாயா மெல்லிய தலையசைப்புடன் ஆம் என்று தலையசைத்தாள்.
” ரொம்ப நல்லது மாயா, இப்போ எப்படி உணர்றீங்க ?” என்று அவர் மீண்டும் கேட்டதும், “ நல்லா இருக்கேன் “ என்று மாயா மெல்ல கிசுகிசுத்தாள். அதை கேட்டதும் சரி என்று தலையசைத்த டாக்டர், “சரி, இப்போ நீ யார சந்திக்க விரும்புறீங்க மாயா?” என்று கேட்டார்.
“வி… வி… விவா… விவான்” என்றவளின் குரல் மென்மையாகவும் பலவீனமாகவும் வெளிவந்தது. அவள் பதிலை கேட்டதும், “ விவான் உங்களுக்கு யாரு ?” என்று முன்னால் குனிந்து கேட்டார் டாக்டர்.
” லவ்… லவர் ” என்று மாயா பதிலுக்கு முணுமுணுத்தாள்.
” சரி, வேற யார் ஞாபகம் இருக்காங்க ?” என்று டாக்டர் கேட்க, ” அப்பா… அண்ணா ” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள்.
” நான் விவான வர சொல்றேன் ஆனா நீங்க அதிகமா கஷ்டப்படுத்திக்க கூடாது. உங்களுக்கு நிறைய ரெஸ்ட் வேணும் அதனால அவர் உங்கள பார்த்துட்டு சீக்கிரம் போயிடுவாரு. சரியா ? “ என்று டாக்டர் சொல்ல, “சரி…” என்று மாயா மெல்ல தலையசைத்தாள்.
டாக்டர் வெளியே சென்றதும், எல்லோரும் அவரை நோக்கி விரைந்தனர்.
” மாயா எப்படி இருக்கா டாக்டர்?” என்று நரேன் ஆவலுடன் கேட்டான். அதற்கு டாக்டர் அவனிடம், ” அவங்க நல்லா இருக்காங்க சார். அது மட்டும் இல்ல, அவங்களுக்கு அப்பா, அண்ணன் அப்புறம் விவான் தான் நினைவுல இருக்காங்க “ என்று விளக்கமாக சொன்னார்.
டாக்டர் சொன்னதை கேட்டதும், ஆர்யனும் நரேனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
” அவங்க இப்போ விவான சந்திக்க விரும்புறாங்க “ என்று டாக்டர் மேலும் கூறியதை கேட்டதும் விவான் உடனே முன்னால் சென்று, ” நான் அவள சந்திக்குறேன், ப்ளீஸ் ” என்று கூறியதும் அனைவரும் சம்மதம் சொன்னார்கள்.
“ஞாபகம் இருக்கட்டும் விவான், அவங்க கிட்ட நிறைய தகவல் இப்போ சொல்லாதீங்க. கொஞ்சம் ஆறுதலா மட்டும் ஏதாவது பேசிட்டு வெளிய வந்துடுங்க. அவங்களுக்கு நிறைய ரெஸ்ட் வேணும் “ என்று டாக்டர் சொன்னதும், ” நிச்சயமா டாக்டர் ” என்று விவான் தலையசைத்தான்.
ஆர்யனும், நரேனும் அவன் தோளைத் தட்டி, ” எந்த தகவலும் அவசரப்பட்டு சொல்லாத “ என்று மீண்டும் ஒருமுறை அவனை எச்சரித்தனர்.
விவான் சரி என்று சொல்லி, சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் மாயாவின் கண்களில் கண்ணீர் பெருகியது. விவான் அவள் அருகில் அமர்ந்து அவள் கையை மென்மையாகப் பிடித்து அவள் விரல்களில் முத்தமிட்டான்.
” ஐ லவ் யூ மாயா, எப்படி இருக்க?” என்று விவான் மெதுவாகக் கேட்டான். அதற்கு அவள், ” நல்லா இருக்கேன் விவான். எனக்கு என்ன ஆச்சு ?” என்று கேட்டு மாயா அவனை பார்த்து வலியில் கண் சிமிட்டினாள்.
” ஒன்னும் சீரியஸா இல்ல, ஒரு ஆக்ஸிடென்ட் ஆச்சு ஆனா இப்போ உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம என்கிட்ட திரும்பி வந்துட்ட, இனி கவலைப்படாத “ என்று விவான் கண்ணீரை துடைத்துக் கொண்டு சொன்னதும், “லவ் யூ…” என்று மாயா முணுமுணுத்தாள்.
மாயா சொன்னதை கேட்டு விவானின் கண்கள் கலங்கின. அந்த வார்த்தைகளைக் பல வருடங்களுக்கு பிறகு கேட்டதும் அவனால் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதான்.
” உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காம இரு. எதுக்கும் கவலைப்படாத, நான் வெளியில தான் இருப்பேன். நீ இப்போ நிறைய ரெஸ்ட் எடுக்கணும் “ என்று விவான் சொன்னதும், ” என் கூடவே இரு விவான் ” என்று மாயா அவனிடம் கெஞ்சினாள்.
அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்த விவான், ” உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன் மாயா. இங்க வெளியில தான் நான் இருப்பேன். ரொம்ப நேரம் இருக்க கூடாதுனு டாக்டர் சொல்லி இருக்காரு. ஆனா நான் அடிக்கடி உள்ள வந்து உன்ன பார்க்குறேன் “ என்று விவான் அவளுக்கு உறுதியளித்தான்.
மெல்ல இருக்கையில் இருந்து எழுந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினான். அவன் வெளியே சென்றதும் நரேனை கட்டிப்பிடித்து அழுதான்.
“அவ என்ன லவ் பண்றதா சொன்னா “ என்று விவான் திகைப்புடன் கூறினான். அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தனர்.
நரேன் மற்றவர்களை நோக்கித் திரும்பி, “நீங்க எல்லாரும் ரொம்ப நேரம் இங்கேயே இருக்கீங்க. எப்படியும் டாகடர் மாயாவ பார்க்க அனுமதிக்க மாட்டாரு அதனால எல்லாரும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க.” என்று கூறினான்.
எல்லோரும் சம்மதித்து அங்கிருந்து புறப்பட்டனர். பவித்ரா மட்டும் நரேனுடன் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி அவனுடன் தங்கினாள். அவர்களோடு விவானும் அங்கேயே இருக்க முடிவு செய்தான்.
அன்று இரவு, ஆர்யன் வீடு திரும்பிய போது சஞ்சு ஏற்கனவே உறங்கி கொண்டிருந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக பாத்ரூமுக்கு சென்று புத்துணர்ச்சி பெற்று அதன் பின்னர் சிறிது உணவை சாப்பிட கீழே சென்றான். சாப்பிட்டு முடித்து பெட்ரூமுக்கு திரும்பியவன், சஞ்சுவின் அருகில் படுத்து அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான். அவன் அருகில் இருப்பதை உணர்ந்தவள் லேசாக அசைந்து கண் விழித்தாள்.
“டின்னர் சாப்பிட்டீங்களா?” என்று தூக்கக் கலக்கத்துடன் சஞ்சு கேட்க, “ஹ்ம்ம் சாப்பிட்டேன், லேட்டா வந்ததுக்கு ஸாரி “ என்று அவன் பதிலளித்தான்.
” அது இருக்கட்டும் பரவாயில்ல. மாயா எப்படி இருக்கா ?” என்று சஞ்சு கேட்டதும், “அவ நல்லா இருக்கா. அவளுக்கு நரேன், அவளோட அப்பா அப்புறம் காலேஜ் லவர் விவான் தான் ஞாபகம் இருக்காங்க “ என்று ஆர்யன் பதில் சொன்னதும், “அவளுக்கு உன்ன ஞாபகம் இல்லையா ?” என்று அதிர்ச்யோடு கேட்டாள் சஞ்சு.
“இல்ல, அவ விவான் கிட்ட அவன லவ் பண்றதா சொல்லி இருக்கா. ஆபரேஷனுக்கு முன்னாடியே விவான் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டான். மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி நாங்க எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டோம் ” என்று ஆர்யன் சொன்னான்.
அவன் வார்த்தைகளை கேட்டு யோசித்த சஞ்சு, “ இப்படி செய்றதால நாம அவகிட்ட கொடூரமா நடந்துகுரோமா ? “ என்று கவலையுடன் கேட்டாள். அவளின் தலைமுடியை கோதிய ஆர்யன், “ நிச்சயமா இல்ல, உண்மைய சொல்லனும்னா, நாம அவளுக்கு நல்ல வாழ்க்கைய தான் கொடுக்குறோம். அவ இனி அந்த வெறிபிடிச்ச மாயாவா இருக்க மாட்டா. ஒரு வகையில நாம அவளுக்கு உதவி செய்றோம் “ என்று சொல்லி புரியவைத்தான்.
“ஹ்ம்ம்… அப்போ நம்ம வாழ்க்கையில எல்லாப் பிரச்னையும் முடிஞ்சிடுச்சா ?” என்று சஞ்சு ஆர்வமுடன் கேட்க, “ஆமா மா, எல்லாமே சரி ஆயிடுச்சு. இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் மாயாவும் முழுசா குணமாகி இயல்பு நிலைக்கு மாறிடுவா “ என்று ஆர்யன் புன்னகையோடு கூறினான்.
அவன் சொன்னதை கேட்டு, “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஆர்யன்.” என்று சொல்லி சஞ்சு அவனை கட்டிப்பிடிக்க திரும்பினாள், ஆனால் அவளது வளர்ந்திருந்த வயிறு அவர்கள் கட்டியணைக்க முடியாமல் தடுத்தது. உடனே சஞ்சு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“இப்போ என்னால உன்னை கட்டிப்பிடிக்க கூட முடியலடி “ என்று ஆர்யன் முணுமுணுத்ததும் சஞ்சு சிரிக்க ஆரம்பித்தாள். உடனே ஆர்யன் அவள் கழுத்தின் பின்புறம் ஈரமான முத்தங்களை பதித்தான்.
“ஆர்யன், நிறுத்து. நான் தூங்கணும்.” என்று சஞ்சு சொல்ல, “சரி, நான் உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன்.” என்று சொல்லி அவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, இருவரும் உறங்கினார்கள்.
மறுநாள் காலை, இருவரும் தயாராகிக் கொண்டிருந்த போது, ஆர்யனுக்கு அவனது பெற்றோரின் உடல்நிலை குறித்து அவனது மருத்துவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசி முடித்த பின்னர் அவன் சஞ்சுவை பார்த்து, “சஞ்சு, நாம இப்போ சாப்பிட்டு முடிச்ச அப்புறம் கொஞ்சம் வெளிய போக போறோம் “ என்று கூறினான்.
“எங்க போறோம் ?” என்று சஞ்சு கேட்க, ” நாம அந்த இடத்துக்கு போன அப்புறம் உனக்கே தெரியும் “ என்று அவன் மர்மமாக பதிலளித்தான்.
காலை உணவுக்குப் பிறகு, இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். சஞ்சு அவனை குழப்பத்துடன் பார்த்து, “ ஆர்யன் இன்னைக்கு என்னோட செக்-அப் இல்ல ” என்று கூறினாள். அதற்கு ஆர்யன் உடனே, ” எனக்குத் தெரியும் மா. நாம வே ஒரு விஷயமா இங்க வந்துருக்கோம்.” என்று பதில் சொன்னான்.
வி.ஐ.பி வார்டு இருக்கும் மாடிக்கு லிஃப்டில் செல்லும் போது ஆர்யன் அவளது கையைப் பிடித்துக் கொண்டான். ஒரு அறைக்கு முன்னால் நின்ற ஆர்யன் அவள் கையை அழுத்தி புன்னகைத்து விட்டு கதவை திறந்தான். உள்ளே, சஞ்சு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள், அவள் கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது.
“ஆர்யன்..?” என்று மூச்சிரைத்தாள்.
“வா அவங்க பக்கத்துல போகலாம் “ என்று ஆர்யன் கூறினான்.
தேவிகாவும், விஷ்ணுவும் கை, கால்களை அசைக்க முடிந்து விழித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்யனைப் பார்த்தார்கள், பிறகு சஞ்சுவைப் பார்த்தார்கள், அவர்களின் கண்களில் கேள்வியை ஆர்யன் புரிந்து கொண்டான்.
“அம்மா, அப்பா… இவ தான் சஞ்சனா. என் மனைவி. உங்க மருமக.” என்று ஆர்யன் கூறியதை கேட்டதும், தேவிகாவும் விஷ்ணுவும் அன்புடன் புன்னகைத்தனர். தேவிகா சஞ்சுவை அருகில் வருமாறு சைகை செய்தார். சஞ்சு அவர் அருகில் சென்றதும் தேவிகா அவள் தலையை தொட்டு பின் சஞ்சுவின் வயிற்றை தொட்டு பார்த்து எத்தனை மாதம் என்று கேட்பது போல தாடையை உயர்த்தினார்.
” இப்போ ஏழாவது மாசம் நடக்குது “ என்று சஞ்சு புன்னகையோடு பதில் சொல்லி அவர்கள் இருவரின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றாள். தேவிகா அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டார், அவளை விட மனமில்லாமல் அருகில் அமர வைத்தார்.
“நான் உங்கள அம்மா அப்பான்னு கூப்பிடுவேன்… சரியா?” என்று சஞ்சு சொன்னதும், இருவரும் மகிழ்ச்சியுடன் சரி என்று தலையசைத்தனர்.
“அம்மா, அப்பா, நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க பேச ஆரம்பிச்சுடுவீங்க.” என்று ஆர்யன் சொன்னதும் இருவரும் மகிழ்ச்சியில் புன்னகைத்தனர்.
ஆர்யனும், சஞ்சுவும் அவர்களுடன் இருந்தனர். சஞ்சு அவர்களுக்கு சாப்பிட கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி, கவனித்துக் கொண்டாள். அவர்களுக்கு மருந்து கொடுத்து இருவரும் தூங்கிய பிறகு, ஆர்யனும் சஞ்சுவும் வீடு திரும்பினர்.
“ஆர்யன், அம்மாவும், அப்பாவும் இத்தன நாள் எங்க இருந்தாங்க ?” என்று சஞ்சு கேட்டாள். அதற்கு ஆர்யன் அவளிடம், “ அவங்க ரெண்டு பேரையும் சந்திரசேகர் அவரோட ரகசிய இடத்துல அடச்சு வெச்சுருந்தாரு. அவங்க நடமாட்டம் இல்லாம இருக்க ஒரு போதை மருந்த அவங்களுக்கு கொடுத்து இருக்காரு. இப்போ நம்ம டாக்டர் அவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்குறாரு. ரெண்டு பேரும் சீக்கிரம் குணமாயிடுவாங்க “ என்று கனத்த குரலில் கூறினான்.
“அவர் ஏன் அம்மா, அப்பா கிட்ட இவ்ளோ கொடூரமா இருந்தாரு ? “ என்று சஞ்சு கவலையுடன் கேட்க, “எனக்கும் தெரியல மா. நான் அவர்கிட்ட இருந்து பதில் கண்டு புடிக்குறதுக்கு முன்னாடி ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாரு. இப்ப அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் அந்த காரணம் சொல்ல முடியும்.” என்று கூறினான்.
“அவர் பண்ண இவ்ளோ கொடுமைக்கு அப்புறம் இவ்ளோ சீக்கிரம், அதுவும் அவ்ளோ சுலபமா இறந்துருக்க கூடாது. அவர மாதிரி ஒரு மிருகத்த மனுஷ உருவத்துல நான் பார்த்ததே இல்ல” என்று சஞ்சு அருவருப்புடன் சொன்னாள்.
ஆர்யன் அவளை மெல்ல அணைத்துக் கொண்டான். “அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இத்தன வருஷமா அவங்களுக்கு கிடைக்காத அன்பை நாம கொடுக்கணும்.” என்று சஞ்சு கிசுகிசுத்ததும், “ கண்டிப்பா கொடுப்போம் “ என்று ஆர்யன் வாக்குறுதி அளித்தான். பின்னர் அவளிடம், “இப்போ எனக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்கு அதனால நான் உன்ன வீட்ல விட்டுட்டு நான் ஆபீஸ் கிளம்புறேன் “ என்று கூறினான். அதற்கு சஞ்சு உடனே சரி என்று தலையசைத்தாள்.
இதற்கிடையில், மாயா ஐ.சி.யுவில் இருந்து ஒரு வி.ஐ.பி அறைக்கு மாற்றப்பட்டாள். அவளது ஞாபக சக்தியை பரிசோதிக்க மருத்துவர் அவள் அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
“மாயா, நாம கொஞ்சம் பேசலாமா ?” என்று டாக்டர் மெல்ல கேட்டதும், “ ஹ்ம்ம் பேசலாம் டாக்டர்.” என்று மாயா பதில் அளித்தாள்.
“இதுவர உங்களுக்கு என்ன ஞாபகம் இருக்குனு எனக்கு சொல்ல முடியுமா?” என்று டாக்டர் கேட்டதும், “ நான் காலேஜ் முடிச்சிட்டு அப்பாவுக்கு பிசினஸ்ல உதவி பண்ணிட்டு இருந்தேன்.” என்று மாயா கூறினாள்.
” அப்போ விவான் ? அவர எங்க சந்திச்சீங்க ? “ என்று டாக்டர் கேட்க, ” நாங்க ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். கடந்த மூணு வருஷமா லவ் பண்றோம். விவானுக்கு என் மேல நிறைய அக்கறை, என்ன நிறைய லவ் பண்றான் “ என்று மாயா சொன்னாள்.
” நீங்க லவ் பண்றது உங்க அப்பாவுக்கு தெரியுமா ? சம்மதம் சொல்லி விவான ஏத்துகிட்டரா ? “ என்று டாக்டர் கேட்க, “ இல்ல, நான் இன்னும் அப்பா கிட்ட இத பத்தி பேசல.” என்றாள் மாயா.
” உங்களுக்கும், விவானுக்கும் கல்யாணம் ஆன மாதிரி ஏதாவது ஞாபகம் இருக்கா ? “ என்று டாக்டர் மெல்ல கேட்டார். ஆனால் அதற்கு மாயா உடனே, “ இல்லை.” என்று சொன்னாள்.
“மாயா, நான் சொல்ல போறத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. டென்ஷன் ஆக வேணாம். உங்களுக்கும், விவானுக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது. மூணு வருஷத்துக்கு முன்னாடி உங்க அப்பா அவர மருமகனா ஏத்துக்க விரும்பல, அதனால நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி அத ரகசியா வச்சிருந்தீங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உங்க அப்பா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டாரு ஆனா அது நடக்குறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. அதுல கடந்த மூணு வருஷம் உங்க வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் நீங்க மறந்துட்டீங்க “ என்று டாக்டர் சொன்னதையெல்லாம் கேட்டதும் மாயா கலங்கினாள்.
” எனக்கு.. கல்யாணம் ஆயிடுச்சா ?” என்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட கேட்டாள் மாயா.
அப்போது அறைக்குள் நுழைந்த விவான், அவள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தாலி செயினை வெளியே எடுத்து அவளிடம் காட்டினான். அதை பார்த்ததும் மாயாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
“விவான், என்ன மன்னிச்சிடு. நம்ம கல்யாணம் கூட எனக்கு ஞாபகம் இல்ல” என்று சொல்லி மாயா அழுதாள்.
“பரவாயில்ல மாயா. நம்ம லவ் உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. எனக்கு அதுவே போதும்.” என்று சொல்லி விவான் அவளை சமாதானம் செய்தான்.
அவள் அமைதியடைந்த பின்னர் விவான் டாக்டரிடம் சைகை கொடுத்தான்.
“ இது தான் நான் உங்க கிட்ட சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம். இன்னும் நிறைய இருக்கு ஆனா நாங்க அதை எல்லாம் மெதுவா உங்களுக்கு சொல்றோம் “ என்று டாக்டர் கூறினார். ஆனால் மாயா அவரிடம், ” ப்ளீஸ் அது என்னனு சொல்லுங்க டாக்டர். நான் இப்போ தெரிஞ்சிக்க விரும்புறேன், ப்ளீஸ் “ என்று கெஞ்சினாள் மாயா.
“நீங்க தைரியமா இருக்கணும். உங்க வாழ்க்கையோட ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில நீங்க இருக்கீங்க. ஆனா பயப்பட வேணாம் “ என்று டாக்டர் சொன்னதும், “ சரி, நான் தைரியமா இருக்கேன். நீங்க சொல்லுங்க “ என்றாள் மாயா.
” நடந்த ஆக்ஸிடென்ட்ல உங்க அப்பா அப்புறம் உங்க குழந்த ரெண்டு பேரையும் நீங்க இழந்துட்டீங்க. ஆக்ஸிடென்ட் ஆன அப்போ நீங்க கர்ப்பமா இருந்தீங்க மாயா “ என்று டாக்டர் முழு உண்மையையும் வெளிப்படுத்தினார். அனைத்தையும் கேட்டு, மாயா விம்மி விம்மி அழுதாள். விவான் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“மாயா, ப்ளீஸ் அழாத. இது இப்போ உன்னோட ஆரோக்கியத்த பாதிக்கலாம். வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவுல நடந்த பெரிய போராட்டத்துல இருந்து நான் உன்ன மீட்டெடுத்து இருக்கேன். ப்ளீஸ் அழாத.” என்று விவான் அவளை சமாதானம் செய்தான்.
அவள் மேலும் மனம் அழுத்தம் கொள்ளாமல் இருக்க, அவள் தூங்குவதற்கு உதவும் வகையில் டாக்டர் ஒரு மயக்க மருந்தைக் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார். ஆர்யனையும் நரேனையும் அழைத்து அவர்களின் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டதைத் தெரிவித்தார். அந்தச் செய்தி அவர்களுக்கு உடனடி நிம்மதியைத் தந்தது.
விவான் மாயாவின் அருகில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன். எதுவா இருந்தாலும் சரி, கடைசி வர உன்ன விட்டு பிரிய மாட்டேன்” என்று கிசுகிசுத்தான்.
எல்லாவற்றையும் கேட்ட நரேனுக்கு தன் இதயத்திலிருந்து ஒரு பாரம் இறங்கியது போல இருந்தது. இறுதியாக, தனது சகோதரிக்கு வாழ்க்கையிலும், காதலிலும் இரண்டாவது வாய்ப்பு கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியடைந்தான்.
***********************************
முன்னோட்டம்:
” யார் எங்கள கடத்தினாங்கன்னு ரொம்ப நாளா எங்களுக்கு தெரியாம தான் இருந்துச்சு. அப்புறம் ஒரு நாள் சந்திரசேகர் வந்தான். அவனோட பழிவாங்குற எண்ணத்த வெளிப்படையா எங்க கிட்ட சொன்னான். நாங்கள் செத்துட்டோம்னு உலகத்துக்கு சொல்லிட்டு அவன் எங்கள சித்திரவத பண்ணான். சொத்து எல்லாத்தையும் கேட்டு கொடுமை பண்ணான் ஆனா நான் பணியவே இல்ல. அதுக்கு அப்புறம் எங்க உடம்பு சோர்வடை ஏதோ ஊசி போட ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல எங்க உடம்பு மொத்தமா இயங்குறது நின்னுடுச்சு “

1 comment
[…] Chapter 85 […]