DC இல்லத்தை அடைந்த ரஞ்சித் பெரிய வரவேற்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். சந்திரசேகரை சந்திப்பதற்காக அங்கு அவன் பொறுமையாக காத்திருந்தான். அந்த இடம், வீடு முழுவதும் ஆர்யன் மேன்ஷனுக்கு இணையாக செல்வ செழுமையை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்திற்குப் பிறகு சந்திரசேகர் வழக்கம் போல அமைதியாகவும் நேர்த்தியாகவும் லிவிங் அறையை அடைந்து, “ரஞ்சித்!” என்று உற்சாகமாக ரணிஜ்த்தை கூப்பிட்டார். மரியாதை நிமித்தமாக ரஞ்சித் உடனடியாக இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.
“எப்படி இருக்க ரஞ்சித் ? ஆர்யன் எப்படி இருக்கான்?” என்று அவர் கேட்டதும், ரஞ்சித் தலையசைத்து, ” சார், பாஸ் நல்லா இருக்காரு, நானும் நல்லா இருக்கேன்.” என்று பணிவுடன் கூறினான்.
சந்திரசேகர் அவனை உட்காரும்படி சைகை செய்த பின் ரஞ்சித் இருக்கையில் அமர்ந்தான்.
” அப்புறம் என்ன விஷயம் திடீர்னு வந்துருக்க ? “ என்று சந்திரசேகர் கேட்டதும், ” ஆர்யன் சார், உங்களுக்கு இன்விடேஷன் அனுப்பி இருக்காரு சார். ” என்று சொல்லி ஒரு கவரை கொடுத்தான் ரஞ்சித். ” இப்போ சமீபத்துல அறிமுகப்படுத்துன காஸ்மெடிக் பெரிய வெற்றி அடைஞ்சு இருக்கு அதோட அவர் முடிச்ச அரசாங்க கட்டுமானத் ப்ராஜெக்ட் சக்சஸ் பார்ட்டிக்கு நீங்க வரணும்னு பாஸ் விரும்புறாரு “ என்று ரஞ்சித் கூறினான்.
சந்திரசேகர் உண்மையான பெருமிதத்துடன் அழைப்பிதழை பார்த்துவிட்டு புன்னகைத்தார். ” ஆர்யன் எப்பவும் நெனச்சத சாதிக்குறதுல ரொம்ப திறமைசாலி, புத்திசாலி. அவனுக்காக நான் உண்மையிலேயே சந்தோஷப்படுறேன். நான் கண்டிப்பா வரேன்னு சொல்லு.” என்று சொன்னார்.
ரஞ்சித் சிறு வணக்கம் செலுத்தி ” ரொம்ப நன்றி சார், அப்புறம் நரேனுக்கு இன்விடேஷன் கொண்டு வந்துருக்கேன். நான் அவர சந்திக்கலாமா ? “ என்று மெல்லிய குரலில் கேட்டான். அதற்கு சந்திரசேகர் உடனே, ” நிச்சயமா ” என்று சொல்லி எழுந்து நின்று, ” நீ இங்க வெயிட் பண்ணு, நான் அவன கூப்பிடச் சொல்றேன்.” என்றார்.
ரஞ்சித் சரி என்று சொல்ல, அவர் ஒரு பணிப்பெண்ணிடம் நரேனை கூப்பிடும்படி கட்டளையிடப்பட்டார். சில நொடிகளில் எப்போதும் போல உற்சாகமாக, சுறுசுறுப்பாக நரேன் படிக்கட்டுகளில் இறங்கினான்.
“ரஞ்சித்! என்ன ஒரு சர்ப்ரைஸ் ? எப்படி இருக்க ?” என்று சிரித்த முகத்துடன் நரேன் கேட்டதும், “ நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க ? “ என்று கேட்டான் ரஞ்சித்.
“ நான் சூப்பரா இருக்கேன். மாப்ள எப்படி இருக்கான் ? “ என்று நரேன் உற்சாகத்துடன் கேட்க, “ ஆர்யன் சார் நல்லா இருக்காரு. அடுத்த வாரம் சக்ஸஸ் பார்ட்டி இருக்கு, உன்ன பார்ட்டிக்கு வர சொல்லி இருக்காரு ” என்று ரஞ்சித் அவனிடம் கூறியாதும், அதற்கு நரேன் உடனே, “ கண்டிப்பா வரேன் “ என்றான்.
” உங்க சார் என்ன கூப்பிட மாட்டாரா ரஞ்சித்?” என்று முதல் மாடியிலிருந்து ஒரு குரல் எதிரொலித்து அவர்களின் உரையாடலைக் கலைத்தது.
நேர்த்தியுடனும், தைரியமான அணுகுமுறையுடனும் படிகளில் இறங்கி வந்த சந்திரசேகரின் மகள் மாயா காவைப் பார்க்க இருவரின் தலைகளும் திரும்பின. அவளுடைய குரலில் பெருமிதமும், சவாலும் கலந்த கச்சிதமான கலவை இருந்தது.
ரஞ்சித் சற்றே நிமிர்ந்து, “மேடம், கண்டிப்பா நீங்களும் வரலாம் “ என்று சொன்னான். அதற்கு மாயா கா அவனிடம், “ ஆர்யனோட பார்ட்டிக்கு வர எனக்கு எந்த இன்விடேஷனும் தேவையில்ல “ என்று திமிருடன் கூறினாள்.
ரஞ்சித் ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றான். அப்போது நரேன் ரஞ்சித்தின் முதுகில் தட்டிக் கொடுத்து, ” சரி, நீ இப்ப கிளம்பு. நாளைக்கு மதியம் நான் ஆர்யன சந்திக்குறேன்னு சொல்லு. லஞ்ச் ஏற்பாடு எல்லாம் நீயே பண்ணிடு “ என்று கூறினான்.
“ கண்டிப்பா சொல்றேன், இப்போ நான் கிளம்புறேன் “ என்று சொல்லு ரஞ்சித் அங்கிருந்து புறப்பட்டான். அவன் வெளியேறி தனது காரில் ஏறியபோது, ஆர்யனின் குரல் இணைக்கப்பட்ட ஏர்பாட்களில் ரீங்காரமிட்டது.
“ரஞ்சித் அவள விடாம follow பண்ண ஆளுங்கள ஏற்பாடு பண்ணு. அவளோட ஒவ்வொரு அசைவையும் எனக்கு தெரியப்படுத்து “ என்று ஆர்யன் சொன்னதும், ” புரியுது சார். நான் பாத்துக்குறேன் ” என்றான் ரஞ்சித்.
” நாளைக்கு லஞ்சுக்கு ஏற்பாடு பண்ணு ” என்று ஆர்யன் சொல்ல, ” நரேன் கூட அவளும் வந்தா என்ன செய்றது ? “ என்று கேட்டான் ரஞ்சித். “ அவ நிச்சயம் வருவா ரஞ்சித், அவள விடு, நான் பார்த்துக்குறேன் “ என்றான் ஆர்யன்.
” சரி சார் ” என்று சொல்லி ரஞ்சித் அழைப்பை துண்டித்தான்.
ரஞ்சித் சென்ற பிறகு, உள்ளே சென்ற நரேன், தன் தங்கை மாயா பக்கம் திரும்பி, “ மாயா, தயவு செஞ்சு ஆர்யன் கிட்ட இருந்து விலகி இரு.” என்று எச்சரித்தான் ஆனால் மாயா கா பதில் சொல்லாமல் ஒரு கூர்மையான பார்வையை வீசிவிட்டு விலகிச் சென்றாள், அவளுடைய மௌனம் வார்த்தைகளை விட சத்தமாக பேசியது.
ஆர்யன் மேன்ஷனில் ஆர்யனும் சஞ்சுவும் படுக்கையில், போர்வைக்குள் அரவணைத்து கொண்டிருந்தார்கள். அவளுடைய தலை அவன் மார்பில் சாய்ந்திருந்தது, அவனது விரல்கள் அவளது முதுகில் வட்டங்களை வரைந்தன.
“சஞ்சு…” என்று ஆர்யன் முணுமுணுத்ததும், அவள் தூக்கக் கலக்கத்துடன் “ஹ்ம்ம்?” என்று முனகினாள்.
” நாளைக்கு நாம லஞ்சுக்கு வெளியே போறோம். என் friend ஒருத்தன சந்திக்க போறேன், நீயும் என் கூட வா “ என்று ஆர்யன் சொன்னதும் அவள் ஆர்வத்துடன் தலையை லேசாக நிமிர்த்தி “யாருப்பா அது?” என்று கேட்டாள்.
” நாளைக்கு நீயே சந்திப்ப அப்போ தெரியும் “ என்று மெதுவாக கூறியவன், “நான் எப்பவும் உன்கிட்ட சொல்ற ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ… என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அவங்க வார்த்தை எதுவும் உன்ன பாதிக்க அனுமதிக்காத. நம்ம மேல மட்டும் நம்பிக்க வை போதும் “ என்று ஆர்யன் கூறினான்.
சஞ்சு மெல்ல முகம் சுளித்து, ” நீ ஏன் இப்படி அடிக்கடி சொல்றனு தெரியல… ஆனா இப்படி சொல்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். அப்புறம் ஆபீஸ் போயிட்டு அங்க இருந்து போறோமா ? “ என்று கேட்டாள்.
அதற்கு, ” இல்ல ” என்றவன் அவள் தலைமுடியை கோதியபடி “ நாளைக்கு நாம ஆபீஸ் போகல. மதியம் வீட்ல இருந்து போறோம். லஞ்ச் முடிச்ச அப்புறம் வீட்டுக்கு வந்துடலாம் “ என்று கூறினான்.
” சரி ஓகே, நான் என்ன டிரஸ் போட்டு வரட்டும் ? “ என்று சஞ்சு கேட்க, “ நீ என்ன டிரஸ் போட்டாலும் அழகா இருப்ப ஸ்வீட் ஹார்ட்….. இல்ல …..” என்று மெல்ல இழுத்து ஆர்யன் சிரித்தான், அவன் குரல் கிண்டலாக இருந்தது. சஞ்சு சந்தேகத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து, ” இல்லனா என்ன ? ” என்று கேட்டாள்.
ஆர்யன் உதட்டை கடித்து சிரிப்பை அடக்க முயன்றான், அவன் கண்களில் குறும்பு மின்னியது. ” எதுவும் போடாம கூட நீ அழகா இருப்ப “ என்று அவன் சொல்ல, சஞ்சு “ ஆர்யன் !!” என்று அதிர்ச்சியில் மூச்சிரைக்க அவன் மார்பில் லேசாக அடித்தாள். ஆர்யன் அவள் கைகளை பிடித்துக் கொண்டு புருவத்தை உயர்த்தி, ” ஏய் என்னடி ? நீ தானே கேட்ட ” என்றான்.
“உனக்கு எப்படித் தெரியும்?” என்று சஞ்சு கேட்ட போது அவள் குரல் தாழ்ந்தது.
” மறந்துட்டியா ? நான் ரெண்டு முறை உனக்கு டிரஸ் மாத்தி இருக்கேன் ஞாபகம் இருக்கா ? அப்போ நீ ரொம்ப பலவீனமா இருந்த அதனால அந்த நேரம் எனக்கு தப்பான எண்ணம் எதுவும் தோணல ஆனா இப்போ யோசிச்சு பார்த்தா…….” என்று ஆர்யன் சொல்ல ஆரம்பித்ததும், “ வேணாம் .. வேணாம் … அத பத்தி நினைக்காதடா கெட்ட பையா “ என்று சொல்லி சட்டென்று தன் கையால் அவன் வாயை மூடினாள் சஞ்சு.
அவள் கையை விலக்கிய ஆர்யன், “ என்ன சொன்ன ? நான் கெட்டப் பையனா ? “ என்று கேட்டான் அதற்கு சஞ்சு உடனே, “ ஆமா ரொம்ப ரொம்ப கெட்டப் பையன் நீ “ என்றாள்.
ஆர்யன் அவளை இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, ” அப்போ மேடம் நீங்க எப்படி ? “ என்று கேட்டான். அதற்கு சஞ்சு தன் உதட்டைப் பிதுக்கி, ” நான் ஒரு அப்பாவி, பச்ச மண்ணு “ என்று கூறினாள்.
ஆர்யன் அவளை பார்த்து சிரித்து, ” நீ அப்பாவியா? பச்ச மண்ணா ? இந்த அப்பாவி பச்ச மண்ணு என்ன பண்ணும்னு தான் எனக்கு தெரியுமே. நீ என்ன புடிக்குற வேகத்துலேயே உன்ன பத்தி எல்லாம் எனக்கு தெரியும் “ என்று சொன்னான். அவன் வார்த்தையை கேட்டு அவள் வெட்கத்தில் முகம் சிவந்து மீண்டும் அவன் வாயை கையால் பொத்தி, ” இதெல்லாம் யாராவது பேசுவாங்களா ஆர்யன் ? உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்ல “ என்று மெல்லிய குரலில் வெட்கத்தோடு கூறினாள்.
அவள் கையை மெல்ல இழுத்து தன் கழுத்தில் வளைத்து கொண்ட ஆர்யன், “ ஏய் உன் கிட்ட பேச நான் ஏன் வெட்கப்படனும் ? நான் என்ன வேணும்னாலும் சொல்ல முடியும் உன்கிட்ட “ என்று சொன்னான். சஞ்சு பெருமூச்சுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, ” நான் தூங்கப் போறேன். குட் நைட்!” என்று சொன்னதும், “ சரிடி இனிமே பேசல போதுமா ? “ என்று சொல்லி ஆர்யன் புன்னகையுடன் அவள் முகத்தை மீண்டும் திருப்பி அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான், அவன் கைகள் இன்னும் அவளைச் சுற்றி இருந்தன.
” ஹ்ம்ம். இது நல்ல புள்ளைக்கு அழகு “ என்று சஞ்சு கிசுகிசுத்தாள், அவளுடைய உதடுகள் தூக்கக் கலக்கத்தில் புன்னகைத்தன.
“நல்லா தூங்கு” என்று முணுமுணுத்தவன், அவள் உதட்டில் சட்டென்று ஒரு முத்தம் கொடுத்தான், காதலும் நம்பிக்கையின் கதகதப்பும் போர்த்தப்பட்டு, இருவரும் மெதுவாக அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
அடுத்த நாள் ஆர்யன் தோட்டத்தில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது சஞ்சு அங்கு வந்து இரண்டு கப் காபியுடன் அவன் அருகில் அமர்ந்தாள். அவன் முகத்தில் இருந்த வெறுமையை மற்றும் அவன் யோசனையில் இருப்பதையும் அவள் கவனித்தாள், அது அவனது வழக்கமான அமைதியான சுயம் அல்ல என்பதால், “ ஆர்யன் “ என்று அவனை மெல்லக் கூப்பிட்டாள்.
” ஹ்ம்ம் சொல்லு மா ” என்றவன் அவளைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான் ஆனால் சஞ்சு அவனிடம், “ என்ன ஆச்சு ஆர்யன் ? நீ நார்மலா இல்ல, என்ன பிரச்சன சொல்லு ?” என்று பொறுமையாக கேட்டாள்.
செய்தித்தாளை மடித்து ஓரமாக வைத்துவிட்டு அவளைப் பார்த்த ஆர்யன், “ ஒண்ணுமில்ல ஸ்வீட் ஹார்ட், பிசினஸ் பத்தி தான் கொஞ்சம் யோசிச்சிட்டு இருந்தேன் “ என்று சொன்னான்.
சில நொடிகள் அவனை பார்த்த சஞ்சு, “ அப்படியா ? “ என்று கேட்டாள். ” ஆமா “ என்று உறுதியாக சொன்ன ஆர்யன், “ சரி இப்போ அது போகட்டும், இன்னிக்கு நீ என்ன காஸ்ட்யூம் என்ன போட போற முடிவு பண்ணிட்டியா ?” என்று அவளிடம் கேட்டான்.
” இன்னும் இல்ல பா, எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. என்ன டிரஸ் செலக்ட் பண்றது தெரியல “ என்று சொல்லி உதட்டை சுளித்தாள். அவள் சொன்னதை கேட்டு சிரித்த ஆர்யன், “ சரி நான் உனக்கு உதவி செய்யட்டுமா ? “ என்று கேட்டான். உடனே சஞ்சு உற்சாகத்தோடு சரி என்று சொன்னாள்.
” நான் உனக்காக ஒரு டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். அது உன்னோட அலமாரியில தான் இருக்கு, அத போட்டுக்கோ “ என்று ஆர்யன் மெல்லிய புன்னகையுடன் சொன்னதும், “ ஆர்யன் நிஜமாவா ? எப்போ வாங்கிட்டு வந்த ? என்று வியப்புடன் கேட்டாள்.
ஆர்யன் மேலும் கனிவுடன் புன்னகைத்து, ” அது உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் சொல்லாம இருந்தேன் ஆனா ரொம்ப நாள் முன்னாடியே வாங்கிட்டேன் “ என்று ஆர்யன் அமைதியான குரலில் சொன்னான். அதை கேட்டு, “ஓ அப்படியா… சரி இப்ப உங்க ஃப்ரெண்டைப் பத்தி சொல்லுங்க ?” என்று கேட்டாள் சஞ்சு.
” உண்மைய சொல்லனும்னா அவன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். நான் எப்பவும் என் வாழ்க்கையில ஜெயிக்கணும்னு தான் விரும்புவான், என் வாழ்க்கையில எனக்கு எல்லாமே நல்லது மட்டும் தான் நடக்கணும், கிடைக்கனும்னு விரும்புவான். எனக்கு சப்போர்ட் பண்ண யார வேணும்னாலும் எதிர்க்க தயங்கவே மாட்டான். ரொம்ப வருஷமா என் வாழ்க்கையில எனக்கு ஆதரவா இருந்துருக்கான் “ என்று ஆர்யன் தன் நண்பனை பற்றி சொல்லி கேட்டதும், ” ஒஹ், அப்போ அவர் நிச்சயமா ஒரு முக்கியமான ஆளு தான் “ என்றாள் சஞ்சு.
” ஹ்ம்ம், ஆமா. அவன் என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானவன் ” என்று ஆர்யன் புன்னகையோடு சொன்னான்.
அதே நேரம் DC இல்லத்தில் நரேனும் மாயா எதிரெதிரே அமர்ந்து மௌனமாக காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக நரேன் பேசாமல் இருந்தான், மாயாவால் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல், “ அண்ணா “ என்று அவனை அழைத்தாள்.
” சொல்லு மாயா ” என்று நரேன் கேட்டதும், “ இன்னைக்கு எங்க போறீங்க ? என்று மாயா கேட்டாள். ஆர்யனை சந்திக்க போவதை பற்றி அவளிடம் பேச விரும்பாமல், ” எங்கேயும் இல்லை, சும்மா வெளிய போறேன் அவ்ளோ தான் “ என்று சொல்லி சமாளிக்க நினைத்தான் நரேன் ஆனால் மாயா உடனே அவனிடம், “சரி, நானும் உன் கூட வறேன். ரொம்ப நாளாச்சு. கடந்த மூணு வருஷமா நானும் இங்க இந்தியாவுல ஊர் சுத்தி பார்க்கல ” என்று கூறினாள்.
அவளை தன்னுடன் அழைத்து செல்ல விருப்பம் இல்லாமல், ” இல்ல மாயா , இன்னைக்கு வேணாம், இன்னொரு நாள் கூட்டிட்டு போறேன்.” என்று சொன்னான்.
” அண்ணா, ஆர்யன் கூட லஞ்ச் சாப்பிட ஏற்பாடு செய்ய சொல்லி நீ ரஞ்சித் கிட்ட சொல்லும் போது நானும் கூட தான் இருந்தேன்னு மறந்து போச்சா ? “ என்று சொல்லி மாயா சிரித்த போது அவள் முகத்தில் பல உணர்ச்சிகள் தெரிந்தன. அவளை பற்றி தெரிந்தும் அவள் முன்னால் ரஞ்சித்திடம் ஆர்யனை சந்திக்க ஏற்பாடு செய்ய சொன்னதை நினைத்து நரேன் மனதளவில் தன்னைத்தானே சபித்துக் கொண்டான். பின்னர் வருத்தமான முகத்துடன் அவளை பார்த்து, ” மாயா , தயவு செஞ்சு புரிஞ்சிக்க முயற்சி செய் .. “ என்று பேச ஆரம்பித்தான் ஆனால் மாயா அவனை முடிக்க விடாமல், “ நானும் உன் கூட வரேன் “ என்று உறுதியாக சொன்னாள்.
” மாயா , ப்ளீஸ் நான் சொல்றத கேளு, ரொம்ப வருஷம் அப்புறம் நான் அவன பார்க்க போறேன். நாங்க பேச நிறைய இருக்கும், எங்களுக்கு கொஞ்சம் தனிம வேணும் அதனால நீ என் கூட வர வேணாம் “ என்று நரேன் அவளிடம் சொன்னான், அதற்கு மாயா அவனை பார்த்து, ” நீ என்ன வர வேணாம்னு சொல்ற காரணம் எனக்கு தெரியும் ஆனா சத்தியமா சொல்றேன், இந்த முற நீ என்ன தடுக்க கூடாது, அது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. நீ என்ன ஏமாத்த மாட்டனு நம்புறேன். நான் உன் கூட வரேன், இது தான் இறுதியான முடிவு ” என்று எரிச்சலுடன் சொன்னாள்.
” மாயா , நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற ? எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழ ஏன் யோசிக்க மாட்டேங்குற ?“ என்று நரேன் கோவத்துடன் கேட்டதும், “அது இந்த ஜென்மத்தில் நடக்காது. நீ எவ்ளோ வருஷமா ஆர்யன சந்திக்காம இருந்தியோ அத்தன வருஷம் நானும் அவர பார்க்கல அதனால எனக்கு அவர சந்திக்கணும். என்ன நம்பு, இந்த முறை எதுவும் பழைய மாதிரி இருக்காது “ என்று உள்ளர்த்தம் வைத்து சொன்னாள்.
” ஆர்யன் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் ஒரு முறை முடிவு பண்ணிட்டா அதுக்கு அப்புறம் அதுல இருந்து ஒரு நாளும் மாற மாட்டான் “ என்று நரேன் சொன்னதை கேட்டு சிரித்த மாயா, ” அப்போ என்ன பத்தியும் உனக்குத் தெரியும். நான் அவர விட பிடிவாதமும் உறுதியும் இருக்கவ “ என்று ஏளனமாய் சொன்னாள்.
நரேன் பொறுமை இழந்து கொண்டிருந்தான். ” நீ எப்பவும் நல்ல வாழ்க்கை வாழனும்னு தான் விரும்புறேன். நான் சொல்றத ஏன் நீ ஒரு முறை கேட்க கூடாது ? “ என்று மீண்டும் அவளிடம் கேட்டான் நரேன். அவனை சில நொடிகள் பார்த்த மாயா, “ உனக்கு உண்மையிலேயே நான் நல்லா வாழணும்னு ஆச இருந்தா அப்போ ஆர்யன் கிட்ட பேசு. அது தான் நல்லது “ என்று பிடிவாதமாக சொன்னாள்.
அவள் பிடிவாதத்தை பார்த்த நரேன் பெருமூச்சு விட்டான், எப்பொழுதும் போல, ஆர்யன் என்ற தலைப்பு வரும்போதெல்லாம் அவன் தோற்றுபோவதாக உணர்ந்தான். உண்மையில் சோர்வடைந்த நிலையில் அங்கிருந்து வெளியேற அவன் எழுந்து நின்றான். அதை பார்த்த மாயா, ” எனக்கு டைம் தெரியும். நான் ரெடியாகி உனக்காக வெயிட் பண்றேன் “ என்று சொன்னாள்.
மாயாவின் வார்த்தையை கேட்டதும் சட்டென நின்று அவளை முறைத்த நரேன், ” ம்ஹூம், அப்போ சரி. நீ சந்திக்க் போற எந்த விளைவுகளுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்.” என்று கடுமையாக சொன்னான்.
” ஒரு தடவையாவது உன் தங்கச்சி பக்கம் சப்போர்ட் பண்ண மாட்டியா ?” என்று மாயா கேட்க, ” கண்டிப்பா பண்ணி இருப்பேன் ஒருவேள நீ கேட்குற விஷயம் பரஸ்பரமா இருந்திருந்தா “ என்று நரேன் சொல்லிவிட்டு நரேன் வேகமாக அங்கிருந்து சென்றான்.
மூன்று நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஆர்யனைச் சந்திக்கப் போகிறாள் என்ற எண்ணத்தில் மாயாவின் முகம் உற்சாகத்தில் பிரகாசித்தது.
அவள் தன் அறைக்கு சென்று அலமாரிக்கு நகர்ந்து தனது ஆடைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள். இரண்டு மணி நேரம் கழிந்தது, அவள் ஒன்றன் பின் ஒன்றாக முயற்சித்த போது அவளுடைய படுக்கையில் ஆடைகள் மலை போல் குவிந்தன. இறுதியாக, அவள் முழங்கால் உயர பிளவு கொண்ட தங்க ஸ்லீவ்லெஸ் கவுனை தேர்வு செய்தாள். அந்த ஆடைக்கு ஒரு வைர நெக்லஸ் மற்றும் அதற்கு மேட்சிங் காதணியும் தேர்ந்தெடுத்தாள். தங்க நிற ஹீல்ஸ் அவளது உயரத்தை அதிகரித்தன, மேலும் அவள் அணிந்திருந்த ஆடை அவளது வளைவுகளை முழுமையாக பூர்த்தி செய்தது. அவள் செய்த மேக்கப் அவளது அம்சங்களை இன்னும் மேம்படுத்தியது, அவளுடைய உதடுகள் ஆழ்ந்த சிவப்பு வண்ண லிப்ஸ்டிக் பூசப்பட்டிருந்தன.
“ஆர்யன், உன்ன பார்க்க காத்திருக்கேன் பேபி. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” என்று அவள் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
முழுவதுமாக தயாராகி லிவிங் அறையை அடைந்து நரேனுக்காகக் காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து, சாதாரண உடையில் தயாராகி கீழே வந்த நரேன் தனது சகோதரி ஏற்கனவே தயாராக இருப்பதைக் கண்டான். அவனை பார்த்ததும், “போகலாமா?” என்று உற்சாகமாக கேட்டாள் மாயா.
” வேணாம்னு சொன்னா மட்டும் கேட்க போறியா என்ன ? “ என்று கேட்டு நரேன் கண்களை உருட்டினான். அதற்கு மாயா உடனே, “ உனக்கு தெரியுதுல அப்புறம் என்ன ? வா போகலாம் “ என்று கூறினாள்.
இருவரும் ஒரே காரில் வீட்டை விட்டு வெளியேறி ஆர்யனை சந்திக்க ARC ஹோட்டல் நோக்கி சென்றனர்.
**************************************
முன்னோட்டம்:
” உன்ன இப்படி பார்த்த அப்புறம் எனக்கு இப்போ போக மனசே இல்ல பேபி. நான் வேணும்னா பிளான் கேன்சல் பண்ணட்டுமா ஸ்வீட் ஹார்ட் ? “

1 comment
[…] Chapter 32 […]