Home Family89. என்கிட்ட இருந்து விலகி இரு

89. என்கிட்ட இருந்து விலகி இரு

by Siragugal Novels
9 views

ஒரு மாதம் கழிந்து போனது. மைராவும் கேஷவும் ஒருவருக்கொருவர் விலகி இருந்ததால் இருவருக்கும் ஒரு மாதம் நரகமாக இருந்தது. கேஷவ் எல்லா வார இறுதிகளிலும் வருகை தந்தான், அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்டனர், ஆனாலும்   இருவரும் ஒருவரை ஒருவர் இழந்து தவித்தனர். அவர்களின் அழைப்புகள் காலை வரை நீண்டன, சில நாட்கள் அவர்கள் தங்கள் வீடியோ அழைப்புடன் தூங்கி காலையில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். கேஷவ் மைராவுக்கு பூக்களை அனுப்பினான், அவள் வார இறுதி நாட்களை கேஷவுக்கு சிறப்பானதாக மாற்றுவதை உறுதி செய்தாள்.

இப்போது மைரா மாதவிடாய் நேரத்தில் இருந்தாள், வலியால் ஏற்கனவே குழப்பத்தில் இருந்த அவள் மனம் மேலும் குழம்பி தவித்தாள். கேஷவ் இல்லாமல். அவள் அறையிலேயே இருந்து கொண்டு சாப்பிடவும் கூட மறுத்துவிட்டாள். நைனா அகாடமியை கவனித்துக்கொள்ள சென்றதும், மைரா தூங்கிக் கொண்டிருந்த போது அவளது மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. அவள் அழைப்புக்கு பதில் சொன்னதும், அவள் முகம் மிகவும் மந்தமாகவும் வலியுடனும் இருப்பதை கேஷவ் கண்டான்.

“ இன்னைக்கு காலையில உனக்கு பீரியட்ஸ் வந்துடுச்சா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், வெறுமனே, “ ஹ்ம்ம்ம் “ என்று பதில் சொன்னாள் மைரா.

“ சாப்பிட்டாச்சா? “ என்று கேஷவ் கேட்க, மைரா இல்லை என்று தலையை அசைத்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ நான் நல்லா இருக்கேன் கெட்சப், உங்களுக்கு ஒரு மீட்டிங்  இருக்கு சொன்னீங்க, போய் அத பாருங்க. மீட்டிங் முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணுங்க “ என்று மைரா சொல்ல, “ நான் உனக்கு சீக்கிரம் போன் பண்றேன் அம்மு “ என்று கேஷவ் சொன்னதும் மைரா புன்னகைக்க, கேஷவ் அழைப்பை துண்டித்தான்.

முழங்கால்களை அடிவயிற்றுக்கு இழுத்து சுருண்டு கண்களை மூடி மைரா உறங்க முயன்றாள். ஒரு மணி நேரம் கழித்து கதவு திறந்து அர்ச்சனா ஒரு பார்சலுடன் உள்ளே நுழைந்தார்.

“ மயூ, கேஷவ் உனக்கு ஒரு பார்சல் அனுப்பியிருக்கான். இத செக் பண்ணு. நான் போய் ஹாட் வாட்டர் பேக் கொண்டு வரேன் “ என்று சொல்லிவிட்டு அர்ச்சனா சென்றதும் மைரா அந்த பார்சலை திறந்து சாக்லேட்டுகள், பழங்கள், மக்ரோன்கள் மற்றும் அவளுக்குப் பிடித்த ஆப்பிள் பை ஆகியவற்றைக் கண்டாள். அவள் புன்னகைத்தபடி அவற்றையெல்லாம் தொட்டாள், அதே நேரத்தில் அவளுடைய மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. கேஷவை வீடியோ காலில் பார்த்தவள் உடனடியாக பதிலளித்தாள்.

“ கெட்சப், நீங்க இப்போ மீட்டிங் போக வேண்டிய நேரம் “ என்று மைரா சொல்ல, “ ஒரு 10 நிமிஷம் லேட்டா இடைவெளி சொல்லி இருக்கேன். இப்போ ஒரு நல்ல பொண்ணா ஆப்பிள் பை, ஒரு சாக்லேட் சாப்பிடு. அப்புறம் அதுல ஜூஸ் இருக்கு அதையும் குடி. நீ அதையெல்லாம் முடிச்ச அப்புறம் நான் மீட்டிங் போறேன் “ என்றான் கேஷவ்.

“ நான் சாப்பிடறேன், இப்ப நீங்க போய் உன் வேலைய பாருங்க “ என்று மைரா சொன்னாள் ஆனால் கேஷவ் அவளிடம், “ ப்ளீஸ் மைரா, நீ வலியில பட்டினியா இருக்கனு தெரிஞ்சு நான் நிம்மதியாக இருக்க மாட்டேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, மைரா பாதி ஆப்பிள் பை மற்றும் தர்பூசணி ஜூசை விரைவாக முடித்துவிட்டு, ஒரு துண்டு சாக்லேட்டை வாயில் திணிப்பதைப் கேஷவ் பார்த்தான்.

“ நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன், இப்போ உங்க மீட்டிங் போய் பாருங்க “ என்று மைரா புன்னகையுடன் சொல்ல, “ ஐ லவ் யூ அம்மு “ என்று சொல்லி அழைப்பை துண்டித்து மீண்டும் மீட்டிங்கை தொடர்ந்தான். அறைக்குள் நுழைந்த அர்ச்சனா வெந்நீர் பேக்கை மைராவிடம் கொடுத்துவிட்டு அவள் தூங்கும் வரை காத்திருந்தார்.

இரவு 8 மணிக்கு, கேஷவ் மைராவை அழைத்து ஏற்கனவே படுக்கையில் இருப்பதைப் பார்த்தான்.

“ சீக்கிரம் தூங்க வந்துட்டியா ? நீ நல்லா இருக்கியா இல்ல இன்னும் வலி இருக்கா ? “ என்று கேஷவ் கேட்டான்.

“ சோர்வா, கொஞ்சம் வலியா இருக்கு ஆனா நான் காலையில நல்லா இருப்பேன். நான் நாள் முழுக்க தூங்கிட்டு தான் இருந்தேன் அதனால நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு நைட்டு பேச எனக்கு போன் பண்ற வர டிவி பார்த்துட்டு இருக்கேன் “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ சரி, இப்ப மணி 7.30. எனக்கு திடீர்னு ஒரு மீட்டிங் வந்துடுச்சு  நான் பிஸியா இருப்பேன். நான் மீட்டிங் முடிஞ்சதும் உனக்கு போன் பண்றேன். நீ கண் முழிச்சி இருந்தா பதில் சொல்லு இல்லனா காலையில உனக்கு போன் பண்றேன். அது உனக்கு சம்மதமா ? “ என்று கேஷவ் கேட்க, “ ஒரு பிரச்சனையும் இல்ல கெட்சப். மீட்டிங் போறதுக்கு முன்னாடி டின்னர் சாப்பிடுங்க “ என்றாள் மைரா.

கேஷவ் சரி என்று முணுமுணுக்க, மைரா அழைப்பை துண்டித்தாள். டிவியை ஆன் செய்து சாக்லேட் பாக்ஸை மடியில் வைத்து தண்ணீர் பாட்டிலை அருகில் வைத்தாள். அவ்வப்போது கேஷவின் அழைப்புக்காக கடிகாரத்தையும் மொபைலையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது, கேஷவ் தன் வேலையில் மும்முரமாக இருக்கிறான் என்று தெரிந்தும் கன்னங்களில் வழிந்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அவள் திகைத்துப் போனாள்.

“ இந்த நேரத்துல யார் வந்துருப்பாங்க ? நான் தூங்கிட்டேனானு  பார்க்க அச்சு அம்மாவா இருக்கலாம்.” என்று யோசித்தபடி கதவைத் திறந்தவள், சுவரில் சாய்ந்திருந்த கேஷவைப் பார்த்து கண்ணீர் விட்டாள். அவன் அவளைத் தன் கைகளில் அள்ளி கட்டிலுக்கு அழைத்துச் சென்றான்.

“ நீங்க எனக்காக வந்தீங்களா கெட்சப் ? “ என்று மைரா கேட்க, “ ஆமா அம்மு. நீ இங்க கஷ்டப்படும் போது நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்? எல்லா சந்தோஷத்தையும் நாம பகிர்ந்துக்குறோம் அப்போ வலியையும் பகிர்ந்துக்குவோம் “ என்றான் கேஷவ்.

“ ஆனா இன்னைக்கு புதன்கிழமை தான் “ என்று மைரா சொல்ல, “  நான் காலையில கிளம்பிடுவேன், சனிக்கிழமையும் கண்டிப்பா வருவேன். இப்போ நான் உன்ன கட்டிப்பிடிக்க வந்துருக்கேன் அதனால இப்போ தூங்குவோம் “ என்று கேஷவ் சொன்னதும், “ டின்னர் சாப்பிட்டீங்களா? கொஞ்சம் இருங்க, உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன். நான் அதிக நேரம் எடுக்க மாட்டேன், சீக்கிரம் வந்துடுவேன் “ என்று மைரா கூறினாள்.

“ மைரா, நான் ஏர்போர்ட்ல டின்னர் சாப்பிட்டேன். காலையில ஏழு மணிக்கு flight “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ எப்படி வந்தீங்க ? ஏற்கனவே பிளான் பண்ணி இருந்தீங்களா ? “ என்று மைரா கேட்டாள்.

“ இல்ல மா, உன் முகத்த பார்த்த உடனே நீ அதிக வலியில இருக்கனு எனக்கு புரிஞ்சிடுச்சு. இப்போ உன் கூட இருக்க விரும்பினேன், அதனால் flight இருக்கானு பார்த்தேன், அதிர்ஷ்டவசமா ஒன்னு இருந்துச்சு. நான் உடனே டிக்கெட் புக் பண்ணி இப்போ உன் கூட இருக்கேன் “ என்று சொல்லி கேஷவ் அவள் முகத்தை பற்ற மென்மையாக முத்தமிட்டான். சட்டையையும் அவளது டாப்ஸையும் தூக்கி எறிந்துவிட்டு மைராவை மார்போடு சேர்த்து இழுத்தபடி கட்டிலில் படுத்தான். மைராவின் மனம் மகிழ்ச்சியாலும் பெருமிதத்தாலும் பொங்கி வழிந்தது. கேஷவ் அவள் அடிவயிற்றை வருட ஆரம்பித்ததும் இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

அதிகாலையில் எழுந்த மைரா கேஷ்வை எழுப்பி தயாரானாள். சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு காபி தயாரித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

“ இவ்ளோ காலையில நீங்க சாப்பிட மாட்டீங்க அதனால காபி கொண்டு வந்தேன் கெட்சப் “ என்று மைரா சொன்னதும், கேஷவ் அவள் நெற்றியில் முத்தமிட்டு காபி குடித்தான். கேஷவ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தனது பெற்றோரை சந்தித்தான். அர்ச்சனா மைராவின் கன்னத்தை கிள்ளி கிண்டல் செய்தார்.

“ அவன உன் சுண்டு விரலுல கட்டி போட்டு வெச்சுருக்க “ என்று அர்ச்சனா சொல்ல, “ அவர இப்படிப் பார்க்க உங்களுக்கு ஆசை இல்லையா? “ என்று மைரா கேட்டாள்.

“ ஆமா, அவன் மனசு ஆளுற பொண்ணு நீ தான்னு எனக்கு இருக்க சந்தோஷத்த வார்த்தையால சொல்ல முடியாது, எப்பவும் சந்தோஷமா இருங்க மைரா “ என்று அர்ச்சனா சொல்ல, “ எங்கள இப்படிப் பார்த்தா எல்லாருக்கும் பொறாமையா இருக்கும். ஒரு முறையாச்சும் வழக்கமான மாமியார் மாதிரி நடந்துக்கோங்க “ என்றாள் மைரா.

“ நீ சொல்றது சரி தான், இப்ப என் நடிப்ப பாரு. ஏய் மைரா, என் மகன ஆட்டி படைக்குறியா ? அவன உன் இஷ்டத்துக்கு ஆட வைக்குரியா ? உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ? “ என்று அர்ச்சனா கேட்க, “ அதுக்கு நான் என்ன செய்யட்டும் ? அவருக்கு அழகான பொண்டாட்டி கெடச்சது என் தப்பு இல்ல அதனால அவர் என் பேச்சு கேட்டு ஆடுறாரு “ என்றாள் மைரா.

“ அடுத்த தடவ அவன் வீட்டுக்கு வரட்டும், என்ன எதிர்த்து பேசுனதா சொல்லி உன்ன அடிக்க சொல்றேன் “ என்று அர்ச்சனா மீண்டும் சொன்னார்.

அர்ச்சனா மற்றும் மைராவின் உரத்த சத்தம் கேட்டு அனைவரும் தங்கள் அறையை விட்டு வெளியேறினர். நைனா அதிர்ச்சியடைந்தாள், ஆனால் க்ரிஷும், மதனும் சோபாவில் நிதானமாக அமர்ந்து டிவியை ஆன் செய்தனர்.

“ நைனா, எனக்கு ஒரு காபி கொண்டு வரியா ? “ என்று க்ரிஷ் கேட்க, “ இங்க என்ன நடக்குதுன்னு பார்க்காம உனக்கு காபி வேணுமா ? மடையா “ என்றாள் நைனா.

“ அம்மா, நைனா பயப்படுறா. ப்ளீஸ் உங்க நடிப்ப நிறுத்துங்க “ என்று க்ரிஷ் சொன்னதும், கண்களை அகல விரித்து வைத்திருந்த நைனாவைப் பார்த்தார் அர்ச்சனா. மைரா சத்தமாக சிரித்து அர்ச்சனாவை கட்டிப்பிடித்தாள், அர்ச்சனா நைனாவை கட்டிப்பிடிக்க அழைத்தார்.

“ அடுத்த முறை நீ இப்படி ஏதாவது பார்த்தா பயப்பட வேணாம்.  அவங்க எப்போவாச்சும் இப்படி செய்வாங்க. காரணம் கேட்டா ரொம்ப வேடிக்கையா இருக்கும். இப்படி பண்ணா திர்ஷ்டி போயிடுமாம் “ என்று க்ரிஷ் விளக்கம் சொன்னதும் நைனா அவர்களை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“ நீங்க ரெண்டு பேரும் நிச்சயமா பைத்தியம் தான். முன்னாடியெல்லாம் மைரா நடந்துக்குற விதத்துக்கு காரணம் வசு அம்மா மட்டும் தான்னு நெனச்சேன் ஆனா நான் தப்பா நெனச்சு இருக்கேன். அவ பின்னால ஒரு முழு குடும்பமும் இருக்கு “ என்று நைனா சொன்னதும், “ இப்போ நாங்க எல்லாரும் உனக்கு பின்னால இருக்கோம் “ என்று சொல்லி மைரா நைனாவின் கன்னத்தை கிள்ளினாள். இருவரும் அணைப்பிலிருந்து பின்வாங்கி குதித்து கூச்சலிடத் தொடங்கினர்.

“ உன் உற்சாகத்துக்கு வேற என்ன காரணம் மிஸஸ் ஹங்க் ? “ என்று நைனா கேட்டாள்.

“ என் ஹங்க் நேத்து ராத்திரி இங்க இருந்துட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கிளம்பி போனாரு “ என்று மைரா சொல்ல, நைனா அவளை கிண்டல் செய்தபடி அவர்கள் அகாடமிக்கு தயாராகினர்.

மருத்துவமனையில் ரோஷினி, அஜய்யுடன் ஓரளவுக்கு நெருக்கமாக இருந்தாள். ஒவ்வொரு முறையும் அவன் ஷிப்டில் இருக்கும் போது அவர்கள் சிறிது நேரம் அரட்டை அடிப்பார்கள், ஆனால் இன்னும் ரோஷினி அவனிடம் சில தயக்கங்களை கவனித்தாள். ஐந்து வாரங்களில் யாருடைய நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினம் என்று அவளுக்குத் தெரியும், எனவே அவள் பொறுமையாகக் காத்திருந்தாள்.

முந்தைய நாள் அவன் விடுப்பில் இருந்தான் அதனால் அவன் பகல் நேர வேலைக்கு வருவான் என்று அவளுக்குத் தெரியும். அவள் தன் தலை முடியை கொண்டையாக கட்டி அவனுக்காக காத்திருந்தாள். காலடிச் சத்தம் கேட்டு உடனே அவனுக்காக அடுத்த திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமானாள்.

“ சாப்பிட்டியா ரோஷினி? “ என்று அஜய் கேட்டதும், “ இல்ல அஜய், எனக்கு இன்னைக்கு சாப்பாடு வேணாம். ப்ளீஸ் என்ன வற்புறுத்தாத “ என்று மெல்லிய குரலில் சொன்னாள் ரோஷினி.

“ ஏன் திடீர்னு ? இத்தன நாளா சரியான நேரத்துக்கு சாப்பாடு, மாத்திரை எல்லாமே சாப்பிட்டு தானே இருந்த அப்போ இன்னைக்கு என்ன ஆச்சு ? “ என்று அஜய் கேட்டதும், “ முந்தின நாள் நீ வேலையில இருந்து கிளம்பும் போது தேதி சொன்னதும் ஞாபகம் இல்லையா ? இன்னைக்கு என் பிறந்த நாள் அஜய். இந்த நாள் என் அப்பா, அம்மா எனக்கு நிறைய பரிசு கொடுப்பாங்க, நாங்க ஒன்னா  கோவிலுக்கு போவோம், மதிய லஞ்ச், படம் பார்ப்போம். இந்த நாள் மறக்கமுடியாததா மாத்த அவங்க எல்லாமே செய்வாங்க. கடந்த ரெண்டு வருஷமா க்ரிஷ் ஒரு பார்ட்டி கொடுத்தான், அதுக்கு என் அப்பா, அம்மாவ வர சொன்னான். அவன் எனக்கு ஒரு பிளாட்டினம் செயின், அழகான புடவையும் பரிசா கொடுத்தான். போன வருஷம் அவன் என்ன ப்ரொபோஸ் பண்ண அப்போ நான் அந்த புடவைய கட்டினேன் “ என்று ரோஷினி மெல்ல கூறினாள்.

“ ஸாரி ரோஷினி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “ என்று அஜய் அவளை வாழ்த்தினான்.

“ அவங்க எனக்கு கொடுக்குற மருந்து எல்லாம் சாப்பிட்ட அப்புறம் அடுத்த வருஷம் இந்த நாள பார்க்க நான் உயிரோட இருப்பேனா எனக்குத் தெரியல. அப்படி இருக்கும் போது எனக்கு ஏன் வாழ்த்து சொல்ற ? “ என்று ரோஷினி விரக்தியுடன் கேட்டாள்.

“ இங்க இருக்க டாக்டர் ரொம்ப நல்லவரு ரோஷினி. மனசாட்சிக்கு விரோதமா எதையும் செய்ய மாட்டாரு “ என்று அஜய் சொன்னான் ஆனால் ரோஷினி சிரித்தாள்.

“ பணம், அதிகாரம் இருக்க ஒருத்தர் மிரட்டும் போது யார் தான் அவங்க கொள்கைக்கு எதிரா போக மாட்டாங்க ? உனக்கு என் மேல நம்பிக்க இல்லனா பரவாயில்ல “ என்று ரோஷினி வருத்தமாக சொல்ல, “ இன்னைக்கு உனக்காக ஏதாவது ஸ்பெஷலா செய்ய முடியுமானு நான் பார்க்குறேன் “ என்று அஜய் கூறினான்.

அவனது வார்த்தைகளைக் கேட்டு ரோஷினி பயந்து போய் உடனே தடுத்து நிறுத்தினாள்.

“ இல்ல அஜய், தயவு செஞ்சு நம்ம ரெண்டு பேரும் பிரச்சனையில சிக்குற மாதிரி எதுவும் பண்ணாத. அவங்களுக்குத் தெரிஞ்சா உனக்கு வேலை போனா கூட ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல. நான் எல்லாத்தையும் சொல்ல நீ மட்டும் தான் இருக்க அப்புறம் உன்னையும் என்னால இழக்க முடியாது. அதனால ப்ளீஸ் ஏற்கனவே சீரழிஞ்சு இருக்க என் வாழ்க்கையில எந்த கொண்டாட்டத்தையும் நான் விரும்பல “ என்றாள் ரோஷினி.

“ எல்லாம் ஒரு நாள் உனக்கு நல்லபடியா முடிவடையும்னு நான் நம்புறேன் “ என்று அஜய் சொல்ல, “ நான் நம்பிக்கையை இழந்துட்டேன். நான் என் அப்பா, அம்மாவ ரொம்ப மிஸ் பண்றேன்.  நான் இல்லாம, என்ன நெனச்சு அவநக அழுதுட்டு இருப்பாங்க. குறிப்பா இன்னைக்கு என்ன ரொம்ப மிஸ் பண்ணுவாங்க “ என்று சொல்லி அழுதாள்.

அஜய் புருவத்தை சொறிந்து கொண்டு ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தான், பிறகு பாக்கெட்டில் கையை விட்டு கேட்டில் சாய்ந்தான்.

“ ரோஷினி, இந்தா என் மொபைல எடுத்துட்டு அவங்க கிட்ட பேசு. ஒரு 5 நிமிஷத்துல நான் உன் மருந்தோட வரேன் அப்போ நீ என்னோட மொபைல திருப்பிக் கொடுத்துடு “ என்று அஜய் சொன்னதும், ரோஷினி அவனை நோக்கி விரைந்து சென்று மொபைலை வாங்கிக் கொண்டாள். அவன் விலகிச் சென்றான், ஆனால் அவளிடமிருந்து மறைந்து சுவரில் சாய்ந்து நின்று அவளது உரையாடலைக் கேட்க நின்றான். ஆனால் ரோஷினி அவனது நிழலைக் கவனிக்க முடியாத அளவுக்கு முட்டாள் இல்லை என்று அவன் அறியவில்லை.

அம்மாவின் நம்பருக்கு போன் செய்தவள், அவரிடம் அழுதாள். ஒரு நிமிடம் கழித்து அஜய் விலகிச் செல்ல, ரோஷினி மெல்லிய குரலில் சிரித்தாள். நிழலைக் கண்டதும் அவள் மீண்டும் அழத் தொடங்கினாள்.

“ அம்மா, ப்ளீஸ் அவங்க கூட சண்ட போடாதீங்க, அதனால எந்த பலனும் இல்ல. உங்களையும் அப்பாவையும் மட்டும் கவனிச்சுக்கோங்க. என்ன பத்தி கவலை பட வேண்டாம். என் விதிப்படி கேஷவ் என்ன எழுதியிருக்கானோ அத நான் சகிச்சுக்குறேன். அஜய் இங்க இருக்கான், அவன் ரொம்ப நல்லவன். அவன் மட்டும் தான் என்ன பார்த்துக்குறான் இல்லனா நான் எப்போவோ தற்கொலை பண்ணி இருப்பேன் “ என்று ரோஷினி சொல்லும் போது அஜய் தொண்டையைக் கனைத்துக் கொள்ள, ரோஷினி அழைப்பை துண்டித்து மொபைலை அவனிடம் திருப்பித் கொடுத்தாள்.

“ இப்போ சந்தோஷமா இருக்கியா ? “ என்று அஜய் கேட்க, “  ஆமா, ரொம்ப நன்றி அஜய். அவங்க கேட்குற கேள்விக்கு என்கிட்ட பதில் எதுவும் இல்ல. நான் இருக்க இடத்த அவங்க தெரிஞ்சிக்க கேட்டாங்க ஆனா இந்த இடத்த பத்தி எனக்கே எதுவும் தெரியாது அப்புறம் அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் “ என்றாள் ரோஷினி.

“ இது கன்னியாகுமரி. டாக்டர் உன்ன போக அனுமதிக்காம இந்த இடத்த விட்டுப் போறது சாத்தியமில்ல. இப்போ சாப்பாடு சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு “ என்று அஜய் அவளிடம் கூறினான்.

“ சாப்பிடுறது, தூங்குறது, அழறத தவிர நான் வேற எதுவும் செய்றது இல்ல. நாளைக்கு சூரிய உதயத்த நான் பார்க்க முடியாம போனா நல்லா இருக்கும் “ என்று சொல்லி ரோஷினி விம்மி விம்மி அழுவதை பார்த்துவிட்டு அஜய் விலகிச் சென்றான். மறைந்து கொண்டிருந்த காலடிச் சத்தம் கேட்டதும், ரோஷினி கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து போலி கண்ணீரைத் துடைத்தபடி புன்னகைத்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து கேட் திறந்து டாக்டர் உள்ளே நுழைய, வருண் அவரை பின்தொடர்ந்தான்.

“ நீ, நீயா ? நீ இங்க என்ன செய்ற? உன் பாஸ் இன்னும் திருப்தி அடையலையா? இங்க இருந்து வெளிய போ “ என்று ரோஷினி கத்தினாள்.

“ வாயை மூடு, என்ன ? இப்ப பாதிக்கப்பட்ட மாதிரி நடிக்கிறியா ? “ என்று வருண் பதிலுக்கு கத்தினான்.

“ ரோஷினி, நீங்க அமைதியா இருங்க. நான் உங்க கூட பேச வந்துருக்கேன் “ என்று சொன்ன டாக்டர், வருண் மற்றும் மற்றவர்களை அறையை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவர் ரோஷினியுடன் ஒரு மணி நேரம் பேசினார். பின்னர் மேற்கொண்டு பேச வெளியே சென்று வருணை தன் கேபினுக்கு அழைத்தார்.

“ இப்ப எப்படி இருக்கா ? “ என்று வருண் கேட்டதும், “ அவங்க என்கிட்டையும், இங்க இருக்க ஊழியர்கள் கிட்டயும் ரொம்ப கண்ணியமா நடந்துக்குறாங்க. அவங்க உங்க கிட்ட மட்டும் தான் இப்படி முரட்டுத்தனமா நடந்துக்குறாங்க “ என்றார் டாக்டர்.

“ நீங்க இதுவர கொடுத்த ட்ரீட்மென்ட் அப்புறம் அவளோட நிலைம எப்படி இருக்குனு விவரமா சொல்லுங்க. நான் என் பாஸ் கிட்ட சொல்லணும் “ என்று வருண் கேட்டுக்கொண்டான்.

“ இந்த மாதிரி நோயாளி நாட்கள் இல்ல கொஞ்ச மாசத்துல குணமடைய மாட்டாங்க. இந்த கோளாரோட நிலையில ஒன்னு –  நோயாளி அவங்கள சுத்தி இருக்கவங்க கிட்ட ரொம்ப சாதாரணமா நடந்துக்க முயற்சி செய்வாங்க, அவங்கள சுத்தி இருக்கவங்களோட நம்பிக்கைய ஜெயிக்க முயற்சி செய்வாங்க. தான் நல்லா இருக்குறதா மத்தவங்க நம்புற மாதிரி இருப்பாங்க “ என்று டாக்டர் கூறினார்.

“ அப்போ அவ இங்கேயே இருக்கணுமா? “ என்று வருண் கேட்டதும், “ ஆமாம், இன்னும் சில மாசம் இருக்கணும் “ என்றார் டாக்டர்.

“ நான் இந்த தகவல என் பாஸ் கிட்ட சொல்றேன். தேவைப்பட்டா அவர் உங்க கூட பேசுவாரு. இங்க வேலை செய்றவங்க யாரும் அவ வலையில விழாம பார்த்துக்கோங்க. நோயாளி இல்லனாலும் ஒருத்தர கவர்ந்து வலையில விழ வைக்குறதுல அவ ரொம்ப  திறமையானவ. தேவைப்பட்டா வேலை செய்றவங்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் நடத்தி அவள பத்தி சொல்லுங்க “ என்று வருண் கூறினான்.

டாக்டர் சரி என்று சொன்னதும், வருண் அங்கிருந்து கிளம்பினான். சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து ரோஷினியின் கோளாறு குறித்த முழு தகவலையும் மருத்துவர் கூறினார். அஜய் குழப்பமடைந்தான், தனது மொபைலை அவளிடம் கொடுத்ததற்காக வருத்தப்பட்டான்.

அவன் அவளது செல்லின் அருகே நிற்க, ரோஷினி அவனைப் பார்த்து சிரித்தாள். அஜய் அவளை முறைத்தான், ஆனால் ரோஷினி அழ ஆரம்பித்தாள்.

“ என்ன நம்பக்கூடாதுனு உங்க டாக்டர் சொன்னாரா ? என்ன இருந்தாலும் வருண் நான் கஷ்டப்படுறத பார்த்துக்கத் தான் வந்திருக்கான் “ என்று ரோஷினி சொன்னதும், “ வருண் யார்? “ என்று அஜய் கேட்டான்.

“ அவன் கேஷவோட அசிஸ்டன்ட், அவனோட பாஸ் சொல்ற எல்லா வேலையும் செய்வான். கேஷவுக்கு சட்டப்படி கூலிக்கு வேலை செய்ற அடியாள் அவன். உனக்கு பயமா இருந்தா இல்ல உனக்கு என் மேல நம்பிக்க இல்லனா தயவு செஞ்சு என் கிட்ட இருந்து விலகி இரு. என் நாட்கள எண்ணிக்கிட்டே என்னால தனியா இருக்க முடியும். “ என்றாள் ரோஷினி.

“ நான் அவங்கள நம்புறேன்னு சொல்லவே இல்லையே “ என்று சொல்லிவிட்டு அஜய் விலகிச் செல்ல, ரோஷினி தன் தோளைத் தட்டிகொடுத்து தனக்குதானே வாழ்த்து சொல்லிக் கொண்டாள்.

********************

முன்னோட்டம்:

“ ஐ லவ் யூ மைரா, எனக்கு டயர்டா இருக்கு, நான் தூங்கறதுக்காக பாட்டு பாடுறியா ?

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!