இலக்கை அடைந்து விட்டதாக ஆர்யன் சொல்லி கார் நின்றதும். தலையை நிமிர்ந்து பார்த்த சஞ்சு கடற்கரையைப் பார்ப்பாள் என்று எதிர்பார்த்தாள், ஆனால் அதற்கு பதிலாக, ஒரு பெரிய இரும்பு கேட் அவர்களின் காருக்கு முன்னால் இருந்தது. ரஞ்சித் இறங்கி அந்த இரும்பு கேட் அருகே இருந்த கைரேகை சென்சாரில் அவனது கட்டை விரலை வைத்த போது கதவு நழுவி திறந்து மூச்சடைக்க வைக்கும் அளவிற்கு ஒரு அழகான வீடு வெளிப்படுத்தியது. வீட்டின் முன்னால் ஒரு பசுமையான தோட்டம், பல வண்ண மலர்களால் நிரம்பியது, அதன் மையத்தில் ஒரு நீரூற்று பார்க்கவே மனதை கொள்ளை கொண்டது. கார் உள்ளே சென்று நின்றதும், வண்ணமயமான பூக்களால் ஈர்க்கப்பட்ட சஞ்சு உடனே காரில் இருந்து இறங்கினாள்.
சஞ்சு தோட்டத்தை நோக்கி ஓடினாள், பூக்களை ரசித்தபடி ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு நகரும்போது அவளுடைய கண்கள் மகிழ்ச்சியில் பிரகாசித்தன. அவள் நீரூற்றை நெருங்கிய போது, தண்ணீர் அவள் முகத்தில் சாரலாக படிந்து அவளை சிரிக்க வைத்தது. அந்த நொடியில், அவள் கடற்கரையை முற்றிலுமாக மறந்து, அந்த இடத்தின் அழகில் தொலைந்து போனாள்.
ஆர்யன் காரில் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கவனத்தை ஈர்த்தது அங்கிருந்த பல நூறு வண்ணமயமான பூக்கள் அல்ல, அவளது புன்னகை ஒன்று மட்டுமே.
“ நீ இப்படி கவலையெல்லாம் மறந்து சிரிக்குறத பார்க்க எனக்கு எவ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா ? நீ இப்படி எப்பவும் சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கணும் சஞ்சு. அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கேன். நம்ம வாழ்க்கைல நாம எவ்ளோ கஷ்டமான சூழ்நிலையும் சந்திக்க வேண்டி வரலாம் ஆனா நான் உன் கூட எல்லா சூழ்நிலையிலையும் இருப்பேன், உன்ன எப்பவும் பாதுகாப்பேன், உன்ன ஒரு நாளும் கைவிட மாட்டேன், உன்ன விட்டு பிரியவும் மாட்டேன் “ என்று நினைத்த போது ஆர்யனின் உதடுகளில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.
சஞ்சு தன்னைச் சுற்றியுள்ள அனைத்து அழகையும் உள்வாங்கிக் கொண்ட பிறகு, இன்னும் அவளில் தொலைந்து போயிருந்த ஆர்யனிடம் திரும்பிச் சென்றாள்.
” ஆர்யன், இது என்ன இடம், யாரோட இடம் ? நாம ஏன் இங்க வந்துருக்கோம் ?” என்று கேட்ட சஞ்சுவின் குரலில் ஆர்வம் நிரம்பி வழிந்தது. அவள் குரல் கேட்டு நிஜ உலகுக்கு திரும்பிய ஆர்யன், “ நான் இந்த வீட ரொம்ப நாள் முன்னாடி வாங்கினேன். வாழ்க்கையில எப்போவாச்சும் ரொம்ப சோர்ந்து போய் இருக்கும் போது நிம்மதியா இருக்க இங்க தான் வருவேன்” என்றான் ஆர்யன்.
சஞ்சு மீண்டும் ஒரு முறை மெதுவாக அந்த இடத்தை வட்டமடித்து சுற்றுப்புறத்தை ரசித்தாள். ” எனக்கு இந்த இடம் ரொம்ப புடிச்சு இருக்கு, உண்மையிலேயே ரொம்ப அழகா இருக்கு “ என்று சஞ்சு சொன்னதை கேட்ட ஆர்யன் அவளிடம் தன் பார்வையை விளக்காமல், “ உன்ன விட அதிகம் அழகு இல்ல ஸ்வீட் ஹார்ட் ” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
” இந்த இடம் மனசுக்கு ஒரு சொல்ல முடியாத அமைதியா தருது “ என்று சஞ்சு மகிழ்ச்சி பெருமூச்சு விட்டதும், “ அப்போ…உனக்கு பீச் போக வேண்டாமா?” என்று கேட்டு ஆர்யன் சிரித்தான்.
ஆர்யன் சொன்னதை கேட்டு, “ பீச்சா ? ஆனா எப்படி ? “ என்று அதிர்ச்சியில் சஞ்சு கண்களை சிமிட்டினாள். ஆர்யன் பதில் சொல்வதற்குள் ரஞ்சித் முன்னால் வந்து, “சார், நான் இப்போ கிளம்புறேன், சாயங்காலம் திரும்பி வரேன் இல்ல அதுக்கு முன்னாடி வரணும்னா எனக்கு மெசேஜ் அனுப்புங்க நான் உடனே வருவேன் “ என்று கூறினான்.
” சரி நீ கிளம்பு ரஞ்சித். எனக்கு போன் எதுவும் வரக் கூடாது, நான் எந்த அழைப்புக்கும் பதில் சொல்ல மாட்டேன் “ என்று ஆர்யன் சொல்ல, உடனே அதை ஏற்று கொண்ட ரஞ்சித், “ சரிங்க சார், உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. வரேன் சஞ்சனா, நல்லா என்ஜாய் பண்ணு “ என்று கூறி அவளை நோக்கி கை அசைத்தான். சஞ்சுவும் பதிலுக்கு அவனுக்கு கை அசைத்து அவன் விடைபெறுவதை பார்த்தாள்.
ரஞ்சித் கிளம்பியதும் ஆர்யன் அவள் பக்கம் திரும்பினான். ” சரி இப்போ போகலாமா ?” என்று கேட்க, சஞ்சு ஆவலுடன் தலையசைத்தாள்.
அவள் உற்சாகத்தில் வேகமாக தலை அசைப்பதை பார்த்து புன்னகைத்த ஆர்யன் அவள் மணிக்கட்டைப் பிடித்து வீட்டின் பின்புறம் நோக்கி அவளை அழைத்துச் சென்றான். இருவரும் நடக்க நடக்க தூரத்தில் அலைகளின் ஓசை அதிகரித்தது. அவர்கள் பின்புற வாயிலை அடைந்த போது, அங்கிருந்த செக்யூரிட்டி ஆட்கள் கதவை திறந்ததும் கடற்கரைக்கு செல்லும் பாதை இருந்தது.
தனக்கு முன்னால் முடிவற்று விரிந்து கிடக்கும் கடலைக் கண்ட சஞ்சுவின் கண்கள் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் விரிந்தன. அலைகள் கரையில் மோதி, நுரை தடங்களை இடைவிடாது விட்டுச் சென்றன. உற்சாகமடைந்த சஞ்சு உடனே தன் காலணிகளைக் கழற்றி விட்டு மணலில் காலடி எடுத்து வைத்தாள், அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தன் காலடியில் அமிழ்வதை உணர்ந்தாள். அதில் அவள் முகத்தில் புன்னகை விரிந்தது.
அங்கு யாருமே இல்லாததை பார்த்து குழப்பத்தில் ” ஆர்யன் ” என்று அவள் பிரமிப்புடன் முணுமுணுத்த போது அவளது ரியாக்ஷனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், ” இது ஒரு பிரைவேட் பீச் ஸ்வீட் ஹார்ட், வேற யாரும் இங்கு வர முடியாது. நீ எவ்ளோ நேரம் வேணும்னாலும் இங்க இருக்கலாம் ” என்று சொன்னான்.
” நிஜமாவா ஆர்யன் ? எவ்ளோ நேரம் வேணும்னாலும் விளையாடலாமா ? அப்போ வாங்க போகலாம் ” என்று சொல்லி உற்சாகத்தோடு அவன் கையைப் பிடித்து முன்னால் இழுத்தாள் சஞ்சு. பின்னிப் பிணைந்த அவர்களின் கைகளைப் பார்த்தபடி ஆர்யன் நெஞ்சம் படபடக்க அவளைப் பின்தொடர்ந்தான்.
” ஆர்யன், சீக்கிரம் வாங்க ” என்று சஞ்சு அவனை அவசரப்படுத்த, “ வரேன் மா “ என்று சொல்லு புன்னகைத்துக் கொண்டே ஆவலுடன் நடந்தான் ஆர்யன்.
இருவரும் கரையை அடைந்ததும், சஞ்சு ஆழமாக மூச்சை இழுத்து, கைகளை அகலமாக விரித்து, அந்த கடற்கரை காற்றைத் தழுவினாள். காற்று அவள் கூந்தலுடன் விளையாடியது, அவள் முகத்தில் இருந்த அதீத ஆனந்தம் ஆர்யனின் இதயத்தை ம்ரிதுவாக்கியது. ஈர மணலில் மண்டியிட்டு அமர்ந்து அலைகள் தன் பாதங்களை முத்தமிட அனுமதித்த சில நொடிகளுக்கு பின்னர் நீருக்குள் விரைந்தாள். கடல் நீர் அவள் இடுப்பு வரை எட்டியதும் சஞ்சு நின்று மகிழ்ச்சியுடன் விளையாடினாள். பின்னர் மீண்டும் அவள் கரைக்குத் திரும்பி ஒரு மணல் கோட்டையைக் கட்டத் தொடங்கினாள், அவள் அதை கட்டி முடித்த போது அவளுடைய முகம் குழந்தையைப் போன்ற பெருமிதத்தால் பிரகாசித்தது.
வறண்ட மணலில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனை நோக்கித் திரும்பிய சஞ்சு, “ஆர்யன், உங்களுக்கு தண்ணியில விளையாட புடிக்காதா ? ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க ? “ என்று கேட்டாள்.
” இல்ல மா, நீ விளையாடு, நான் இங்கேயே வெயிட் பண்றேன்.” என்று ஆர்யன் சொன்னதும், அவன் வார்த்தையை கேட்டு சஞ்சு முகம் சுளித்தாள். ” என்ன மனுஷன் நீங்க ? பீச்சுக்கு வந்து யாராச்சும் தண்ணியில விளையாடாமா இருப்பாங்களா ? “ என்று கேட்டு அவனை முறைத்தாள் ஆனால் அவள் வார்த்தைகளைக் கேட்டு ஆர்யன் சிரித்தான்.
சஞ்சு உதட்டை சுளித்து அவனை ஒழுங்கெடுத்து விட்டு நாடகத்தனமாக பெருமூச்சு விட்டாள். ” நான் மட்டும் இங்க தனியா இருக்குறது ஒரு மாதிரி இருக்கு. யாராவது என் கூட விளையாட இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும் ? குறைந்த பட்சம் கௌசல்யா அம்மாவ நம்ம கூட கூட்டிட்டு வந்துருக்கலாம் இல்ல பவி இருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். நாங்க ஜாலியா விளையாடி இருப்போம் “ என்று சொல்லி குழந்தையை போல மீண்டும் முகம் சுளித்தாள். அவள் பேசுவதையும், செய்யும் சேட்டையும் பார்த்து ஆர்யன் உள்ளுக்குள் சிரித்தான் ஆனால், “ அவ என்ன முதல் முறை கூப்பிட்ட அப்போவே நான் போய் இருக்கணுமோ ? “ என்று மனதில் நினைத்தான்.
சஞ்சு மீண்டும் கெஞ்சும் கண்களுடன் அவனை நோக்கித் திரும்பினாள். ” ஆர்யன், எனக்கு இன்னும் கொஞ்ச தூரம் உள்ள போகணும்னு ஆசையா இருக்கு, தயவு செஞ்சு என் கூட வாங்க, ப்ளீஸ் “ என்று கெஞ்சினாள். அவள் மீண்டும் தன்னை அழைக்க காத்திருந்த ஆர்யன் உடனே தன் காலணிகளைக் கழற்றி விட்டு தண்ணீரில் இறங்கி அவள் கையை பிடித்துக் கொண்டான்.
இருவரும் ஆழமாக நடந்து செல்லும் போது சஞ்சு உற்சாகமாக அலற ஆரம்பித்தாள். அலைகள் அவள் மீது வேகமாக மோதி, அவளை சமநிலையை இழக்கச் செய்தன, ஆனால் ஆர்யன் எப்போதும் அவளை நிலைநிறுத்த அவள் கையை பிடித்துக் கொண்டு அருகிலேயே இருந்தான். அந்தக் கணத்தில் தோன்றிய மகிழ்ச்சியில் அவள் மிகவும் மூழ்கியிருந்தாள் அதனால் ஒரு சக்தி வாய்ந்த அலை நெருங்கி வருவதை அவள் கவனிக்கவில்லை. அது அவளை பலமாகத் தாக்கியதும், சஞ்சு முற்றிலும் நிலைத் தடுமாறினாள், ஆனால் அவள் நீரில் விழுவதற்குள், ஆர்யன் அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.
சஞ்சு பெருமூச்சு விட்டாள், அவள் கைகள் தானாகவே அவன் கழுத்தை சுற்றி வளைத்துப் பிடித்தன. ஏற்கெனவே அவள் கண்களில் தொலைந்து போய் இருந்த அவனது கரும்பழுப்பு நிறக் கண்களை அவள் பார்த்தாள். இருவரும் தங்களை மறந்து பார்த்துக் கொண்டிருந்த போது, அலைகளின் ஓசை, கடலின் குளிர்ந்த அரவணைப்பு, அவனது ஸ்பரிசத்தின் கதகதப்பு என அனைத்தும் அவளின் எண்ணங்களில் இருந்து மங்கிப் போயின. அந்த நொடி உலகில் வேறு எதுவும் இருப்பதாக அவர்கள் இருவருக்கும் தோன்றவில்லை.
ஆர்யன் முதலில் அந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டான், அவனது உதட்டில் ஒரு விளையாட்டுப் புன்னகை தவழ்ந்தது. இன்னும் அவனையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சுவை குறும்புப் பார்வையுடன் பார்த்து, “ சஞ்சு…” என்று அவன் மெல்ல முணுமுணுத்தான்.
தனது கனவு உலகில் மெய்மறந்து இருந்த சஞ்சு அதில் இருந்து மீள முடியாமல் வெறுமனே, “ ஹ்ம்ம் ” என்று பதில் சொன்னாள்.
” என்னை மன்னிச்சிடு ” என்று ஆர்யன் சொன்னதும் நிஜத்திற்கு திரும்பியவள், “ எதுக்கு மன்னிப்பு கேட்குறீங்க ? “ என்று புருவங்கள் லேசாக சுருங்க அவனிடம் கேட்டாள்.
அவள் அப்பாவியாக கேள்வி கேட்கபதை பார்த்து அவனது சிரிப்பு மேலும் அதிகரித்தது. ” இதுக்கு தான் மன்னிப்பு கேட்குறேன் ” என்று சொன்னவன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவளைத் தண்ணீரில் போட்டுவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து ஓடினான். அவள் எழுந்திருக்க முயன்று அவனை முறைத்தாள்.
” ஆர்யன் ! உங்கள நான் சும்மா விட மாட்டேன் …. மரியாதையா நில்லுங்க…. ஆர்யன் ஓடாதீங்க நில்லுங்க !” என்று கத்திக் கொண்டே அவனை விரட்டினாள் ஆனால் ஆர்யன், “ உன்னால முடிஞ்சா என்ன புடி ஸ்வீட் ஹார்ட் “ என்று கிண்டலடித்தவன், அவளது பிடியில் சிக்காமல் நிற்காமல் ஓடினான்.
ஆர்யனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சஞ்சு மூச்சிரைக்க நின்றாள் ஆனால் மற்றொரு அலை அவளை தாக்கியதும் அவள் தடுமாறி மீண்டும் தண்ணீரில் விழுந்தாள். அவள் போராடுவதைக் கண்ட ஆர்யன் சிரித்துக் கொண்டே அவளுக்கு உதவ திரும்பி நடந்தான். ஆர்யன் தன் கையை நீட்டியதும் சஞ்சு அதைப் பிடித்து அவனை தன்னுடன் தண்ணீருக்குள் இழுத்தாள்.
” புடிச்சிட்டேன்!” என்று அவள் வெற்றியை பெருமிதத்துடன் அறிவித்தாள். ஆர்யன் சிரித்தபடி தன் ஈரமான தலைமுடியை அசைத்தான், அலை அவர்களை தள்ளும் ஒவ்வொரு முறையும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு ” எனக்கு இப்போது ரொம்ப பசிக்குது ” என்று மூச்சு வாங்க சஞ்சு சிணுங்கினாள். அவள் விளையாடி சோர்ந்து போய் இருப்பதை பார்த்து, “ சரி அப்போ நாம கிளம்பலாமா?” என்று ஆர்யன் கேட்டான்.
சஞ்சு சரி என்று சொன்னதும் இருவரும் மீண்டும் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர். சஞ்சு மிக பொறுமையாக நடந்தாள், அவளது நனைந்த ஆடை, அதோடு சேர்ந்து மணலும், அவளது சோர்வும் அவளை நடக்க சிரமப்படுத்தியது.
அவளது மந்தமான நடையைக் கவனித்த ஆர்யன், ” என்ன ஆச்சு ? ” என்று கேட்டான். ” என்னால சரியாக நடக்க முடியல” என்று அவள் சொன்னதும் எந்தவித தயக்கமும் இன்றி ஆர்யன் அவளை தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். சஞ்சு கண்களை சிமிட்டியபடி அவனை பார்த்தாள், அவனுடைய ஈரமான தலைமுடி அவன் நெற்றியில் விழுந்து அவனை மேலும் வசீகரமாக காட்டியது. சஞ்சு தன் கையை நீட்டி அவன் நெற்றியில் இருந்த முடியை மெல்ல விலக்கினாள். அவள் அப்படி செய்ததை பார்த்து சந்தோஷத்தில் மிதந்த ஆர்யன் உடனே அவளை பார்த்து கண்ணடித்தான். சஞ்சு வெட்கத்தில் உதட்டை கடித்து புன்னகையை கட்டுபடுத்திக் கொண்டாள்.
பின்னர் அவன் பார்க்காத போது, “ அழகா இருக்க ஆர்யன், அப்படியே ஒரு சக்ரவர்த்தி மாதிரி “ என்று முனுமுனுத்தாள். “ எதாவது சொன்னியா பேபி “ என்று ஆர்யன் கேட்க அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள்.
அவர்கள் வீட்டை அடைந்ததும், அவளை இன்னும் நெருக்கமாக அணைத்தபடி ஆர்யன் அவளை நேராக லிவிங் அறைக்கு அழைத்துச் சென்றான். அவளுடைய முகம் அவனது முகத்திலிருந்து சில அங்குலங்கள் இடைவெளியில் மட்டுமே இருந்தது. அவனது கழுத்தை சுற்றி இருந்த அவளின் கையில் இருந்து அவன் தோளில் ஒரு ஆழமான கதகதப்பை கிளறிவிட்டது. அவளது மென்மைகள் அவன் மார்பில் மென்மையாக அழுத்தியதில் அவனுக்குள் இனம் புரியாத ஒரு உஷ்ணத்தை அனுப்பியது. வெட்கத்தில் சிவந்திருந்த அவளது கன்னமும், கழுத்தும் பார்த்து அவன் உடலில் ஹார்மோன்கள் கிளர்ச்சியை எழுப்பின. அதற்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியாமல் மெல்ல குனிந்து அவள் கன்னத்தில் லேசாக ஒரு முத்தம் பதித்தான். உடனே சஞ்சு கண்களை மூடிக்கொண்டாள், அவள் மூச்சிரைக்க அவள் நெஞ்சு விம்மியது.
சஞ்சு அவனை தடுக்காமல், வெட்கத்தில் மேலும் அவள் சிவந்து போவதை பார்த்த ஆர்யன் அவளது கண் இமைகளிலும், பிறகு மூக்கின் நுனியிலும் முத்தமிட்டான், பிறகு அவளது உதடுகளுக்கு அருகில் சென்றான். அவனது சூடான மூச்சுக்காற்று தன் உதட்டில் படர்வதை அவளால் உணர முடிந்தது.
” சஞ்சு…” என்று ஆர்யன் தனது ஹஸ்கி குரலில் அவளை அழைத்ததும், “ ஹ்ம்ம் ” என்றாள் சஞ்சு.
கழுத்தில் அவளது பிடி இறுகுவதை ஆர்யன் உணர்ந்தான். ” கண்ண திறந்து என்ன பாரு ” என்று அவன் சொன்னதும் சஞ்சு உடனே கண்களை திறந்து அவன் கண்களை பார்த்தாள். அவன் பார்வையில் ஒரு சொல்லப்படாத கேள்வி இருந்தது. அதை புரிந்து கொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல், அவள் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்து பதில் சொன்னாள்.
அவள் பதிலை பெற்றதும் ஆர்யன் மெல்ல அவள் உதடுகளின் மேல் தன் உதடுகளை பதித்து முத்தமிட்டான். அவர்களின் முதல் முத்தம் மெதுவாகவும், அவசரப்படாமலும், உணர்ச்சியால் நிரப்பப்பட்டதாகவும் இருந்தது. அந்த முதல் முத்தத்தில் உருகி இறுதியாக இருவரும் விலகிய போது, அவன் தனது நெற்றியை அவளுடைய நெற்றியோடு சில நொடிகள் அழுத்தினான் பின்னர் அவள் நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தை கொடுத்து, அவளை எப்போதும் பாதுகாப்பதாக தன் மனதில் அமைதியாக உறுதியளித்தான்.
” நீ போய் குளிச்சிட்டு வா, உன்னோட டிரஸ் எல்லாம் ஏற்கனவே அலமாரியில இருக்கு “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும் அவள் பேச முடியாத அளவுக்கு திகைத்த நிலையில் வெறுமனே தலை அசைத்தாள். ஆர்யன் அவளை கீழே இறக்கி விட்டதும் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிவிட்டு கண்ணாடி முன் ஓடினாள். அவள் முகம் முழுவதுமாய் சிவந்திருந்தது, உதடுகள் லேசாக வீங்கியிருந்தன. அவர்களுடைய முத்தத்தைப் பற்றிய எண்ணம் அவளுக்குள் ஒரு புதிய உணர்வை கொடுத்தது, அவள் நிலையை கண்டு இன்னும் அதிகமா வெட்கப்பட ஆரம்பித்தாள்.
“ இப்போ என்ன நடந்துச்சு சஞ்சு ? இனி நான் அவர் முன்னாடி எப்படி போவேன் ? “ என்று மனதுக்குள் கேட்குக் கொண்டே நின்றவள் பின்னர் குளிக்க சென்றாள்.
லிவிங் அறையில் ஆர்யன் சோபாவில் சாய்ந்து அமர்ந்தான், அவன் முகத்தில் ஒரு பரந்த புன்னகை தழுவியது.
“ ஆர்யன், அவ இப்போ திரும்பி வந்து எதாவது சொல்லிடுவாளோ ? அய்யோ இப்போ என்ன செய்றது ? கடவுளே நீ தான் பா என்ன காப்பாத்தணும். ஆனா நல்லா இருந்துச்சு. மறுபடியும் இந்த மாதிரி நடக்குமானு கூட தெரியல ஆனா இப்படியே போனா உன்ன எப்படி ஆர்யன் கண்ட்ரோல் பண்ண போற ?” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு குளிக்க மற்றொரு அறைக்கு சென்றான்.
சில நிமிடங்களுக்கு பிறகு குளித்து முடித்து அவளுக்காக ஆர்யன் காத்திருந்தான். இறுதியாக சஞ்சு லிவிங் அறைக்கு வந்த போது, அவளுடைய தயக்கத்தை அவன் உடனடியாக கவனித்தான். ஆழமாக மூச்சை இழுத்துவிட்டவள் அவனை நோக்கி நடந்து அவனுக்கு எதிரே அமர்ந்தாள். ஆர்யன் அவள் ரியாக்ஷனை பார்க்க பொறுமையாக காத்திருந்தான். சஞ்சு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஆர்யன்… எனக்குப் பசிக்குது ” என்று சொன்னாள்.
ஆர்யன் அவ்வளவு நேரம் அவனை அறியாமல் பிடித்திருந்த மூச்சை இழுத்து விட்டான். சற்று நிம்மதியாக உணர்ந்தான். இருப்பினும் முதல் முத்தத்தை பற்றி அவளது என்னத்தை அறிந்து கொள்ள, “ ஹ்ம்ம், சஞ்சு நீ நல்லா இருக்கியா ?” என்று மெல்லிய குரலில் கேட்டான். அதற்கு சஞ்சு மெல்ல ஆம் என்று தலை அசைத்தாள்.
அவள் பதிலை கேட்டு மேலும் நிம்மதியடைந்த ஆர்யன் இப்போது தைரியமாக அவளிடம், “ அப்போ உனக்கு ஓகேவா ? “ என்று கேட்டு கிண்டலாக சிரித்தான்.
சஞ்சு முகம் சிவந்து அவனிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அவளுடைய எதிர்வினை அவனுக்கு தேவையான நம்பிக்கையைக் கொடுத்தது.
” சரி வா, சாப்பிடலாம்.” என்று சொல்லி அவளை வெளியே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு அழகாக அமைக்கப்பட்ட டைனிங் டேபிள் அவர்களுக்காகக் காத்திருந்தது. பணிப்பெண்கள் உணவை அடுக்கிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களைப் பார்த்ததும் இருவரும் முத்தமிட்டதை அவர்கள் பார்த்திருப்பார்களோ என்று நினைத்து சஞ்சு உறைந்து போனாள். ஆர்யன் உடனடியாக அவளது சங்கடத்தை உணர்ந்தான்.
” கவலைப்படாத. வீடுக்குள்ள நாம மட்டும் தான் இருந்தோம். நாம உள்ள போறதுக்கு முன்னாடி வேலை செய்றவங்க எல்லாரும் வெளிய வந்துட்டாங்க “ என்று ஆர்யன் தெளிவுப்படுத்தியதும், “ நல்ல வேளை, ஒரு நொடி நான் பயந்துட்டேன் “ என்றாள் சஞ்சு.
அவள் சொன்னதை கேட்டு அவன் சிரித்தான். ” நம்ம தனியுரிமையை அவ்ளோ சுலபமா தொந்தரவு செய்ய நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன் பேபி, நீ தைரியமா இருக்கலாம் ” என்று சொல்லி ஆர்யன் தனது கையை நீட்டி பிடித்துக் கொள்ளும்படி மௌனமாக அவளை சொன்னான். சஞ்சு முதலில் அவனுடைய கண்களை பார்த்தாள் பின்னர் மெல்ல அவள் கையை அவன் பிடியில் கொடுத்தாள். ஆர்யன் அவள் கையை பிடித்துக் கொண்டு மேஜையை நோக்கி அவளை அழைத்து சென்று அவள் அமர ஒரு நாற்காலியை இழுத்தான்.
காளான் பிரியாணி, ப்ளூபெர்ரி பை, மாக்கரோன்கள் என அவளுக்குப் பிடித்த உணவுகள் அனைத்தும் தன் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
அவளது ரியாக்ஷனைப் பார்த்துக் கொண்டே, “ என்ன சந்தோஷமா ? “ என்று ஆர்யன் கேட்டான். சஞ்சு புன்னகைத்துக் கொண்டே, “ ரொம்ப ரொம்ப சந்தோஷம் “ என்று சொல்லி முகம் மலர்ந்தாள்.
இருவரும் ஒன்றாக சாப்பிட்டனர் அதன் பின்னர், ஆர்யன் அவளை வீட்டை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றான். அங்கிருந்த ஒவ்வொரு அறை, நீச்சல் குளம், விளையாட்டு அறை என அனைத்தையும் பார்வையிட்ட பிறகு இறுதியாக இருவரும் மொட்டை மாடியை அடைந்தனர். அங்கே இருவரும் அருகருகே நின்று, கீழே உள்ள கடற்கரையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
கடலை பார்த்துக் கொண்டே ஆர்யன் மெல்ல அவள் கையை பிடித்துக் கொண்டதும் சஞ்சு அவன் தோளில் தலை சாய்த்தாள். அந்த கடல் காற்று சுதந்திரத்தின் வாசனையை சுமந்து சென்றது, ஆனால் அவர்கள் இருவரும் அரவணைப்பை மட்டுமே உணர்தார்கள். அவர்கள் அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளும் முன்பே அவர்களின் ஆன்மா ஏற்கனவே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருந்தது.
*********************
முன்னோட்டம்:
“ இப்படி எங்க பாத்தாலும் நீங்களே தெரிஞ்சா நான் என்ன பண்றது ? போற இடம் எல்லாம் நீ தான்டா தெரியுற. எதுக்கு இப்போ நீ ஆபீஸ் போன, என்கூட வீட்லயே உருக்க வேண்டியது தானே ? இப்போ பாரு நா லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்கேன் ஆனா நீ மறஞ்சு போயிடுவ “

1 comment
[…] Chapter 18 […]