Home FamilyChapter 19

Chapter 19

by Siragugal Novels
30 views

டேனியல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கண் விழித்தான் ஆனாலும்  அவனது புலன்கள் இன்னும் சோர்வால் அவனை வாட்டியது. சில நிமிடங்கள் கழித்து அவனது பார்வை தெளிவடைந்த பின்னர், அவனுக்கு அருகில் அந்த பெண் மயக்கமடைந்து கிடப்பதைக் கவனித்தான். அவள் அருகே சென்று அவன் மண்டியிட்டு அவள் முகத்தை பார்த்ததும் டேனியலின்  முகத்தில் கவலையின் ஒளிக்கீற்று படர்ந்தது.

” ஏய்… எழுந்திரு” என்று முணுமுணுத்தபடி அவள் தோளை மெல்ல அசைத்தான் ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

முகத்தைச் சுளித்தபடி ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் சில துளிகளைத் தெளித்தான், அப்போதும் அவள் அசையவில்லை. பயம் நெஞ்சில் ஊடுருவி சட்டென அவனது மொபைலை தேடி எடுத்து உடனே அந்த முகம் தெரியாத நபரை டேனியல் அழைத்தான். எப்போதும் போல அவன் அழைப்புக்கு அந்த நபர் உடனே பதில் அளித்து, “ சொல்லு டேனி, இப்போ எதுக்கு போன் பண்ண ?” என்று மறுமுனையிலிருந்து குரல் வந்தது.

” நீங்க அனுப்புன பொண்ணு மயக்கத்துல இருக்கா. நான் அவளை எழுப்ப முயற்சி பண்ணேன் ஆனா அவ எழுந்துக்க மாட்டேங்குறா “ என்று டேனியல் சொன்ன போது அவனது  குரலில் கவலை தொனித்தது.

” அவ மூச்சுவிடுகிறாளானு பாரு ” என்று அந்த நபர் சொன்னதும் டேனியல் அந்த பெண் அருகே குனிந்து தன் விரலை அவள் மூக்குக்கு அருகில் வட்டமிட்டான். அவளுடைய மூச்சு வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது, அவனால் அரிதாகவே உணர முடிந்தது.

” அவ சுவாசிக்கிறா, ஆனா அது ரொம்ப குறைவா இருக்கு ” என்று டேனியல் பயந்து போய் கூறியதும், “ கவலைப்படாத, நான் பார்த்துக்குறேன். சீக்கிரம் அவள அங்க இருந்து கூட்டிட்டு போக ஆள் வருவாங்க “ என்று அந்த நபர் சொன்னதும் டேனியல் பெருமூச்சு விட்டபடி தன் தலைமுடியை ஒரு கையால் கோதிவிட்டான். ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன், ” சரி. அடுத்து நான் என்ன செய்யணும்?” என்று கேட்டான்.

” இனி நீ இங்க இருக்க வேணாம். உனக்கு விமான டிக்கெட்டு அனுப்பி வைக்குறேன். கொஞ்ச நாள் யார் கண்ணுலையும் படாம இரு. அதுக்கு அப்புறம் என்ன செய்யணும்னு நான் சொல்றேன் “ என்று அந்த நபர் சொல்ல, “ சரி போறேன் ஆனா நான் எங்க போகணும் ? “ என்று டேனியல் குழப்பத்துடன் கேட்டான்.

” நீ மாலத்தீவுக்கு போக போற “ என்று அவர் சொன்னதை கேட்டு, “ மாலத்தீவுக்கா ? எப்போ போகணும் ?” என்று டேனியல் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ நாளைக்கே கிளம்பனும் “ என்று பதில் வந்ததும் டேனியல் பெருமூச்சு விட்டான், ஆனால் தனக்குத்தானே தலையசைத்துக் கொண்டான். ” சரி. நான் ரெடியா இருக்கேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

சிறிது நேரத்தில், மாஸ்க் அணிந்த ஆட்கள் சிலர் அவனது வீட்டிற்கு வந்தனர். டேனியளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை அவர்கள் தூக்கிச் சென்றனர், அதோடு வெளியே செல்லும் முன் அவர்களில் ஒருவன் ஒரு உறையை டேனியளிடம் கொடுத்தான்.

அவர்கள் சென்ற பிறகு டேனியல் அந்த உறையை திறந்து பார்த்த போது விமான டிக்கெட்டும் ஒரு பெரிய தொகையும் அதில் இருந்தது. அவன் உதடுகளில் ஒரு குறும்புச் சிரிப்பு தவழ்ந்தது. அப்படி ஒரு பெரிய தொகையுடன், சில நாட்கள் ஒரு தீவில் மறைந்து வாழ்வது அவனுக்கு  அவ்வளவு மோசமான ஒப்பந்தமாகத் தெரியவில்லை. சந்தோஷத்தில் புத்துணர்ச்சி பெற்று, அடுத்த பயணத்திற்கு தனது ஆடைகள் மற்றும் தேவையான பொருட்களை பேக் செய்யும் ஆர்வத்துடன் அவன் தனது படுக்கை அறைக்குச் சென்றான்.

மாலைச் சூரியன் அடிவானத்திற்குக் கீழே இறங்கியதும், ஆர்யனும் சஞ்சுவும் மேன்ஷனுக்கு திரும்பினர். இந்த முறை அவர்களுக்கு இடையே ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தனர். அவர்களுக்கிடையில் ஒரு இனிமையான கதகதப்பு நீடித்தது, இருவராலும் புறக்கணிக்க முடியாத, ஒரு சொல்லப்படாத ஆற்றல் அவர்களை இணைப்பது போல இருந்தது. சஞ்சுவின் கன்னங்களில் அவர்கள் ஒன்றாக இருந்த நாட்களின் நினைவுகளாக ஒரு வெட்கம் படர்ந்து, அவர்களின் முத்தம் அவள் மனதில் விளையாடியது.

” வாங்க வாங்க. சஞ்சு எப்படி இருந்துச்சு நாள் இன்னைக்கு ? சந்தோஷாம என்ஜாய் பண்ணியா ? “ என்று கேட்டபடி கௌசல்யா புன்னகையுடன் அவர்களை வரவேற்றார்.

சஞ்சுவின் உதடுகள் மெல்லிய புன்னகையில் வளைந்தன. ” ஆமா மா, ரொம்ப நல்லா இருந்துச்சு “ என்று பதில் சொன்னாள். அந்த வார்த்தைகள் அவள் வாயை விட்டு வெளியேறிய நொடியில், ஆர்யனின் உதடுகள் அவளை உரிமை கொண்டாடிய விதத்தை அவள் மனம் காட்டிக்கொடுத்தது. அவள் முகத்தில் வெப்பம் பாய்ந்தது, அவள் சட்டென்று பார்வையைத் தவிர்த்தாள்.

கௌசல்யாவின் கூர்மையான கண்கள் அவள் முகபாவத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டுகொண்டன. ” ஏன் இப்படி வெட்கப்படுற சஞ்சு?” என்று அவர் கேட்டதும், “ என்ன? இல்லை-இல்லை! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல!” என்று சஞ்சு தடுமாறினாள். ஒருவரையும் பார்க்க முடியாமல், ” நான் இப்போ என் ரூமுக்கு போறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.

லிவிங் அறையில் அமர்ந்திருந்த ஆர்யன் தன் மொபைலை ஸ்க்ரோல் செய்து கொண்டு அவளை கவனிக்காதது போல நடித்தான். ஆனால் மாடிப்படிகளில் அவள் ஏறும் போது அவனது கண்கள் சஞ்சுவை நோக்கிச் சென்றன.

அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவளுக்குள் ஒரு பதட்டமான உற்சாகத்தை அனுப்பியது. எல்லாவற்றிற்கும் பிறகு இப்போது ஆர்யனுடன் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்வதை வித்தியாசமாக உணர்ந்தாள். அதை நினைக்கும் போதே அவள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.

இதற்கிடையில், ஆர்யன் சோபாவில் பின்னால் சாய்ந்து அவன் பார்வையில் இருந்து சஞ்சு மறைவதை கண்டான். “  இப்போ ஒரே ரூம்ல அவ கூட எப்படி இருக்க போற ஆர்யன் ? உன் கட்டுப்பாட்டுக்கு ஒரு பெரிய சோதன வந்துடுச்சு. அவ வேற இப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவானு தெரியலயே. அதுக்கு மேல இப்போ அவ எந்த உணர்வுல  இருக்க்கானு கூட தெரியலையே. என்னடா பண்றது இப்போ ? “ என்று மனதில் நினைத்துபடி அமர்ந்திருந்தான்.   

சஞ்சு குளித்து முடித்து தனது சாதாரண உடை அணிந்து பால்கனியில் அமர்ந்து குளிர்ந்த காற்று அவள் முகத்தில் முத்தமிட அனுமதித்தாள். எவ்வளவு தான் தன் கவனத்தை திசை திருப்ப அவள் முயன்றாலும், அவளது எண்ணங்கள் அவனிடம், அவனது உதடுகள் அவளது உதடுகளின் மீது அசைந்ததைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைவுப்படுத்தி கொண்டிருந்தன.

அன்றிரவு சஞ்சு தயங்கித் தயங்கி இரவு உணவை முடித்துக் கொண்டு மாடிக்குச் செல்ல, ஆர்யன் மௌனமாக சில அடிகள் அவளுக்கு பின்னால் நடந்து சென்றான். அவர்களுடைய அறைக்குள் நுழைந்ததும், கதவருகே நின்ற சஞ்சு இன்னும் அவன் முகத்தை பார்க்காமல் நின்றாள் ஆனால் தனக்குப் பின்னால் அவனுடைய இருப்பை அவளால் உணர முடிந்தது. அவனுடைய அருகாமையின் கதகதப்பு அவளுடைய முதுகெலும்பில் இனம் புரியாத நடுக்கத்தை அனுப்பியது.

இருவரும் நீண்ட நேரம் பேசாமல் தங்கள் எண்ணங்களுடன் ஒரு பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர், அவர்களின் இதயங்கள் ஒத்திசைவில் துடித்தன. கடைசியில் ஆர்யன் மௌனத்தைக் கலைக்க முடிவு செய்து, “ சஞ்சு…” என்று மெல்ல அழைத்தான்.

சஞ்சு அவனை திரும்பி பார்க்காமல், “ ஹ்ம்ம் “ என்று பதிலுக்கு மெல்ல முனகினாள். அவள் அவனை பார்க்காமல் இருப்பதை பார்த்து குழப்பமடைந்த ஆர்யன், “  உனக்கு என் மேல கோபமா?” என்று அவனது மென்மையான குரலில் கேட்டான். உடனே சஞ்சு அதற்கு “ இல்ல… இல்ல ” என்று வேகமாக தலையை ஆட்டினாள்.

சற்று ஆறுதலாக உணர்ந்த ஆர்யன், “அப்புறம் ஏன் வித்தியாசமா இருக்க ?” என்று கேட்டான். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல… நான் நான் … இயல்பா தான் இருக்கேன்” என்று அவள் மென்று விழுங்கினாள்.

அவள் பதிலை கேட்டு லேசாகச் சிரித்தான் ஆர்யன். ” இல்ல, நீ இயல்பா இல்லனு எனக்குத் தெரியும். நான் சொல்றத கொஞ்சம் கேளு சஞ்சு, உனக்கு அசௌகரியத்த கொடுக்குற மாதிரி நான் எதையும் ஒரு நாளும் செய்ய மாட்டேன். நான் செய்ற ஏதாவது உனக்கு எப்போவாச்சும் தொந்தரவா இருந்தா இல்ல புடிக்கலனா தயவு செஞ்சு என் கிட்ட சொல்லு. நான் உன்ன தொந்தரவு செய்ய விரும்பல” என்று அவன் சொன்னதும் சஞ்சு தலையை லேசாகத் திருப்பினாள், அவனது வார்த்தைகளில் அவள் இதயம் படபடத்தது. ” நான் அப்படி எதையும் சொல்லவே இல்லையே ” என்று அவள் மென்மையான குரலில் கூறினாள்.

சஞ்சுவின் பதிலை கேட்டு ஆர்யன் ஒரு அடி அவளிடம் நெருங்கினான். ” அப்போ… உனக்குப் பிடிச்சிருக்குன்னு நான் எடுத்துக்கட்டுமா ?” என்று ஹஸ்கி குரலில் கேட்டான். 

சஞ்சுவுக்கு மூச்சு வாங்கியது, அவள் பதில் சொல்வதற்குள், அவன் மார்பு அவள் முதுகில் உரசியபடி அவன் இன்னும் நெருங்கி நின்றான். சஞ்சு வெறுமனே ஆம் என்று தலையசைத்து பதில் சொன்னாள்.

உடனே மெல்லிய சிரிப்பு அவன் உதடுகளில் இருந்து வெளிப்பட்டது. அவனது விரல்கள் அவளது விரல்களை தொட்டு வருட ஆரம்பித்து அவள் கைகளில் கடந்து அவளது தோள்களில் நின்றது. சஞ்சுவின் உடல் சிலிர்த்தது. ஆர்யன் மெல்ல குனிந்து அவளது கழுத்து வளைவில் அவள் வாசனையை முகர்ந்தான். அவனது சூடான மூச்சு காற்று அவளது வெற்று தோளை தழுவியதும் சஞ்சு கண்களை மூடிக்கொண்டாள், அவளுக்குள் ஒரு சூடான அலை பரவியது.

“இதெல்லாம் புதுசா இருக்குன்னு எனக்குத் தெரியும், ஆனா நாம பொறுமையா டைம் எடுத்துக்குவோம் ” என்று ஆர்யன் அவள் காதில்  முணுமுணுத்ததும் அவள் பதிலுக்கு ஒரு சிறிய தலையசைப்பைக் கொடுத்தாள். அவள் கழுத்தும், காதும் சிவந்து இருப்பதை பார்த்து அவள் அவனது தாக்கத்தை கண்டு ஆர்யன் பெருமிதம் கொண்டான். 

ஆர்யன் மெதுவாக அவள் தலைமுடியை ஒரு பக்கமாக கோதிவிட்டு அவள் கழுத்தின் பின்புறத்தில் ஒரு நீண்ட முத்தம் வைத்து, “ தூங்கலாமா?” என்று கிசுகிசுத்தான்.

அந்த நொடியில் அவன் வசம் தொலைந்து போயிருந்த சஞ்சுவால் தலையை மட்டுமே அசைக்க முடிந்தது.

திருப்தியான புன்னகையுடன் ஆர்யன் நகர்ந்து உடை மாற்றுவதற்காக அலமாரியை நோக்கி நடந்தான். சஞ்சு ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, சிவந்த கன்னங்களில் கைகளை வைத்து அழுத்தி, படுக்கைக்கு விரைந்தாள். இன்னும் வெட்கத்தில் இருந்தவள் போர்வையை கன்னம் வரை இழுத்துப் போர்த்தி கொண்டாள். 

சில நொடிகள் கழித்து ஆர்யன் திரும்பி வந்து அவளருகில் படுக்கையில் சாய்ந்தான். இருவர் மீதும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு மெல்ல குனிந்து எப்போது போல அவள் தலையின் பக்கவாட்டில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான்.

“குட் நைட் சஞ்சு” என்று ஆர்யன் சொல்ல, “குட் நைட் ஆர்யன்.” என்று சொல்லி தலையணையில் சாய்ந்து புன்னகைத்தாள் சஞ்சு.

காலையில் பொழுது விடிந்து, திரைச்சீலைகளிள் இடையே ஊடுருவிய பொன்னிறக் கதிர்கள் அறை முழுவதும் பாய்ந்தது. ஆர்யன் முதலில் கண் விழித்தான், அவன் பார்வை உடனடியாக சஞ்சுவின் மீது விழுந்தது. தூக்கத்தில் அவனை நெருங்கியவளின் விரல்கள் அவனது டி-ஷர்ட்டை இறுகப் பற்றியிருந்தன. அதை பார்த்ததும் அவன் உதடுகளில் சிறு புன்னகை தவழ்ந்தது. அவள் முகத்தில் தலைமுடியின் சில இழைகளை மெதுவாக கோதிவிட்டுவிட்டு அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டான். மெல்ல அவள் விரல்களை தன் சட்டையிலிருந்து விலக்கிவிட்டு அவளை எழுப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக படுக்கையிலிருந்து நழுவினான்.

ஆர்யன் தயாரான பிறகு, கீழே லிவிங் அறைக்கு சென்றான், அங்கு ஏற்கனவே ரஞ்சித் அவனுக்காக காத்திருந்தான்.

“குட் மார்னிங் சார்” என்று ரஞ்சித் சொன்னதும், ” குட் மார்னிங், எதாவது தகவல் இருக்கா ? ” என்று கேட்டான் ஆர்யன். அதற்கு ஆம் என்று தலை சித்த ரஞ்சித், “ டேனியல் இன்னைக்கு நைட்டு மாலத்தீவு போக போறான் சார் ” என்று சொன்னான்.

அதை கேட்டதும் ஆர்யனின் தாடை இறுகியது. ” யார் அவனுக்கு அந்த ஏற்பாடு பண்ணது ? “ என்று ஆர்யன் கேட்க, “ எல்லா ஏற்பாடும் அவனோட பெயர்ல தான் சார் இருக்கு ஆனா அவன் அதையெல்லாம் செய்ய சாத்தியம் இல்ல அதனால எனக்கு தெரிஞ்சு அவளா தான் இருக்கும் சார் “ என்று ரஞ்சித் சொன்னதும் ஆர்யனின் உதடுகளில் ஒரு குறும்புச் சிரிப்பு தவழ்ந்தது.

” நல்லது ரஞ்சித்… ஒரு வழியா அவ இப்போ ஆட்டத்த ஆரம்பிச்சிட்டா போல. சரி அவள இப்போ வெளிய வரவைக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு, நாம அத செய்வோம் “ என்று சொன்ன போது ஆர்யனின்  கண்கள் இருண்டன.

ரஞ்சித் தலையசைத்து, ” அடுத்து இப்போ நாம என்ன செய்யணும் சார் ? “ என்று கேட்டான்.

” நம்ம புது காஸ்மெடிக் வெற்றிய கொண்டாட பத்து நாள்ல் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய். முக்கியமான பிசினஸ்மேன் எல்லாரையும் வர சொல்லி அழைப்பு அனுப்பு அதுல முக்கிய விருந்தாளிங்க ரெண்டு பேரு, மிஸ்டர் சந்திரசேகர் அப்புறம் நரேன் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டு ரஞ்சித் உடனே, “ புரியுது சார், எல்லா ஏற்பாடும் பண்ணிடுறேன் “ என்று பதில் சொன்னான்.

” அது மட்டும் இல்ல ரஞ்சித், சஞ்சுவோட பாதுகாப்புக்கு கார்ட்ஸ் நியமனம் பண்ணு ஆனா அவளுக்கு அது தெரியாம இருக்க மாதிரி பாத்துக்க “ என்று ஆர்யன் கூறியதை கேட்டு சரி என்று சொல்லி சம்மதித்து விடை பெற்றான் ரஞ்சித்.

அப்போது, சஞ்சு மாடிப்படியின் உச்சியில் நின்றாள், அவளது இருப்பு உடனடியாக ஆர்யனின் கவனத்தை ஈர்த்தது. அவர்களின் கண்கள் சந்தித்ததும் ஒரு கணம், அவர்களைச் சுற்றியுள்ள உலகம் மறைந்தது போல இருந்தது.

“குட் மார்னிங் ஆர்யன்” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கினாள் சஞ்சு. அவளிடம் இருந்து தன் பார்வையை விளக்காமல், “குட் மார்னிங் சஞ்சு” என்றான் ஆர்யன் வழக்கத்தை விட மென்மையான குரலில். ” நான் இன்னைக்கு ஆபீஸ் போக வேண்டி இருக்கு, ஒரு அவசர வேல, அத முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடறேன்.” என்று ஆர்யன் சொன்னதும் அவள் சரி என்று தலையசைத்தாள்.

” கொஞ்சம் ரெஸ்ட் எடு ” என்று அவன் சொல்ல, “ஹ்ம்ம்… சரி.” என்று சஞ்சு லேசாக புன்னகைத்தாள்.

இருவரும் காலை உணவுக்காக ஒன்றாக அமர்ந்தனர், உணவை சாப்பிடும் போது இடையில் திருட்டுத்தனமான பார்வைகளைப் பகிர்ந்து கொண்டனர். கடைசியில் ஆர்யன் கிளம்ப எத்தனிக்கையில், கடைசியாக ஒரு முறை திரும்பிப் பார்த்து, “ சீக்கிரம் வந்து உன்ன பாக்குறேன் “ என்று கூறிவிட்டு புறப்பட்டான்.

ஆர்யனும், ரஞ்சித்தும் டேனியலின் வீட்டிற்கு சென்றதும், அவர்கள் நேரத்தை வீணாக்காமல் வேகமாக உதைத்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அவசர அவசரமாக தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த டேனியல் அவர்களை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனான். ஆர்யன் தன் முன் நிற்பதைக் கண்டதும் அவன் முகம் வெளிறிப் போனது, ஆர்யனின்  முகபாவம் படிக்க முடியாததாக இருந்தாலும் மரணகரமானதாக இருந்தது.

” ஆர்யன் சார்… தயவு செஞ்சு… என்னை விட்டுடுங்க ” என்று பயத்தில் பின்வாங்கினான் டேனியல். ” நான் இங்க இருந்து கிளம்பறேன். சத்தியமா நான் இங்க இருந்து ரொம்ப தூரம் போயிடுவேன், உங்க வழியில குறுக்க வரவே மாட்டேன் ” என்றெல்லாம் சொல்லி கெஞ்சினான்.

ஆர்யன் உதடுகளில் ஒரு குறும்புச் சிரிப்பு விளையாடியது. ” எங்க போற டேனியல் ? மாலத்தீவுக்கா ?” என்று ஆர்யன் கேட்டதும், டேனியல் அதிர்ச்சியில் மூச்சிரத்தான். “ இவருக்கு எப்படித் தெரியும்?” என்று மனதில் நினைத்து அவன் கண்கள் பயத்தில் விரிந்தன. 

” சார் ப்ளீஸ்…” என்று டேனியல் மீண்டும் கெஞ்சினான்.

மறுவார்த்தை பேசாமல் ஆர்யன் முன்னால் பாய்ந்து டேனியலின் காலரைப் பிடித்தான். ஒரு வேகமான நகர்வுடன், ஆர்யன் அவனை  மண்டியிட வைத்தான். டேனியல் எதுவும் எதிர்வினையாற்றுவதற்குள்  ஆர்யன் அவனது நெற்றியில் துப்பாக்கியை அழுத்தினான். டேனியல் அதிர்ந்தான், ஆர்யனின் மரணப் பார்வையில் அவன் உடல் முழுவதும் நடுங்கியது.

” அஞ்சு செகண்ட் தான் உனக்கு டைம். நான் தெரிஞ்சிக்க வேண்டியத நீ சொல்லணும் இல்லனா அடுத்த செகண்ட் உன் தலை வெடிச்சு சிதறும் “ என்று ஆர்யன் அலட்சியமாக சொன்னதும் டேனியலின் தொண்டை வறண்டு போனது. ” சார், ப்ளீஸ் ” என்று அவன் கெஞ்சினான் ஆனால் ஆர்யன், “ நாலு “ என்று சொல்லி நேரத்தை எண்ண ஆரம்பித்தான்.

” நான் சத்தியமா தான் சொல்றேன் சார் , எனக்கு அதிகம் தெரியாது ” என்று டேனியல் சொன்னதும், ஆர்யன் “ மூணு “ என்றான். 

அதற்கு மேல் ஆர்யனிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து, “மானசி ” என்று டேனியல் சொன்னான். அதை கேட்டதும் ஆர்யன் புன்னகைத்தான். அவன் துப்பாக்கியை மேலும் அழுத்தினான். டேனியல் பயந்து, “ மானசி என் கிட்ட ஒரு நம்பர் கொடுத்து ஒரு பொண்ணு கிட்ட பேச சொன்னா. அந்த பொண்ணு தான் எனக்கு நிறைய பணம், அதிக சம்பளத்தோட வேலையும் ஏற்பாடு செய்றத சொன்னா “ என்று உண்மையை கூறினான்.

அதை கேட்டதும் ஆர்யனின் தாடை இறுகியது. ” அந்த நம்பர் சொல்லு ” என்று கேட்டதும், டேனியல் தனது மொபைலை எடுத்து அந்த எண்ணை படித்த போது அவன் கைகள் நடுங்கின.

உடனே ரஞ்சித் முகம் சுளித்து, “ சார், இது கனடா நம்பர்.” என்று சொன்னான் அதை கேட்டதும் ஆர்யனின் சிரிப்பு ஆழமானது. ” பதில் கெடச்சுடுச்சா ? “ என்று ஆர்யன் கேட்க, “ ஆமாம் சார்” என்றான் ரஞ்சித்.

” சார், எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிட்டேன். இப்போவாச்சும் தயவு செஞ்சு என்ன போக விடுங்க ” என்று கேட்டு டேனியல் மூச்சிரைத்து கெஞ்சினான் அதற்கு ஆர்யன் லேசாக குனிந்து டேனியலின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். ” கவலைப்படாத, நான் உன்ன நிச்சயம் போக விடுறேன் “ என்று ஆர்யன் கூறினான், அவனது குரல் பயமுறுத்தும் அமைதியாக இருந்தது ஆனாலும் டேனியலின் கண்களில் நம்பிக்கையின் ஒரு மினுமினுப்பு பளிச்சிட்டது, அடுத்த நொடி ஆர்யன் ட்ரிக்கரை இழுத்த போது தோட்டாக்கள் டேனியலின் தலை சிதறடித்து.

வீடு முழுவதும் துப்பாக்கி சுடும் சத்தம் எதிரொலித்தது. டேனியலின் உயிரற்ற உடல் தரையில் சரிந்தது, ஆர்யன் முகம் உணர்ச்சியற்று இருந்தது. பின்னர் எழுந்து நின்று தன் சூட்டை தூசி தட்டி, ” ரஞ்சித், தடயம் இல்லாம இவன அப்புறபடுத்து “ என்று உத்தரவிட்டான்.

சரி என்று சொன்ன ரஞ்சித், உடலை அப்புறப்படுத்துமாறு அவர்களுடன் வந்த காவலர்களுக்கு சைகை காட்டினான்.

ஆழ்ந்த பெருமூச்சுடன் ஆர்யன் திரும்பி வெளியே நடந்தான். அவனது கோபத்தின் அலை சிறிது தணிந்தது ஆனால் அவனது மனம் ஏற்கனவே வேறு எங்கோ சென்றது. அவனது எண்ணங்களை வேட்டையாடிய சஞ்சுவின் கள்ளங்கபடமற்ற கண்களை நோக்கி அவன் எண்ணங்கள் சுழன்றது.

*********************************

முன்னோட்டம் :

“ இப்படி எங்க பாத்தாலும் நீங்களே தெரிஞ்சா நான் என்ன பண்றது ? போற இடம் எல்லாம் நீ தான்டா தெரியுற. எதுக்கு இப்போ நே ஆபீஸ் போன, என்கூட வீட்லயே உருக்க வேண்டியது தானே ? இப்போ பாரு நா லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்கேன் ஆனா நீ மறஞ்சு போயிடுவ” என்று சொல்லி சஞ்சு ஏக்கத்துடன் அவனை பார்த்தாள்

 

அடுத்த அத்தியாயம்

1 comment

Leave a Comment

You may also like

error: Content is protected !!
notification icon

We want to send you notifications for the newest news and updates.